24 ஜூலை 2017

எண் கணித மேதை முத்தையா

வானொலி தொலைக்காட்சிப் புகழ் எண் கணித மேதை முத்தையா (Dr. Muthaya). இவரின் அசல் பெயர் தஜுடின் ஜமால் முகமட். (Thajhuteen Jamal Mohammad). வயது 58. 



தன்னுடைய எண் கணித ஆற்றலின் மூலமாகப் பலரின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும் என்று விளம்பரம் செய்தவர்.

தங்காக் நகரில் உள்ள ஒருவரிடம் 52,000 ரிங்கிட் ஏமாற்றி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 


கடந்த 20.07.2017-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டு தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். இவர் மீது மேலும் 13 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தன்னுடைய எதிர்காலத்தையே இவரால் நிர்ணயிக்க முடியவில்லையே. அப்படி இருக்கும் போது எப்படி இவர் மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும். வேதனையான விசயம்.

சான்று: 
https://m.utusan.com.my/berita/mahkamah/8216-tukang-tilik-8217-dituduh-salah-guna-rm52-000-1.505174

23 ஜூலை 2017

ஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு

இலண்டன், ஜூலை 22, 2017

பிரிட்டிஷ் மலாயாவில் தொடங்கி இன்றைய மலேசியாவிலும் தீர்க்கப் படாமல் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இந்தியர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் ‘ஒடுக்கப்பட்ட உரிமைக் குரல்’ என ஹிண்ட்ராப் வழக்கு தொடர்ந்துள்ளது என்று அதன் தலைவர் பொன். வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

மலேசிய இந்திய தோட்டப் பாட்டாளி வம்சாவளியினர் பல்வேறு மனித உரிமை மீறலுக்கு இன்றளவும் ஆளாவதற்கு பிரிட்டிஷ் ஆட்சிதான் காரணம் என்ற அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை 18-07-2017 அன்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றப் பதிவாளரிடம் முறையான வழக்கு மனு ஹிண்ட்ராப் கட்சி சார்பில் சார்வு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மனித உரிமை மாநாட்டின் 34-ஆவது விதிப்படி, மலாயா இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் வம்சாவளி சார்பில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

பிரிட்டீஷ் நீதிமன்றத்தில் ஹிண்ட்ராப் மேற்கொண்ட சட்ட நடைமுறை நீர்த்துவிட்ட நிலையில் இந்தப் புதியப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் துணை அமைச்சருமான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதன் தொடர்பில் இங்கிலாந்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை 1-04-2016இல் பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை விசாரித்த ஒற்றை நீதிபதியான ஹெண்டர்சன், பிரிட்டிஷ் மலாயாவில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் அடியோடு புறக்கணிக்கப் பட்டதற்கு பிரிட்டிஷ் மகாராணி தான் பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து மேல்முறையீட்டு நிதிமன்றத்தில் செய்த மனுவும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 19-ஆம் நாள் தள்ளுபடி செய்யப் பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான், இந்தப் பிரச்சினை ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

நூற்றுக் கணக்கான பக்கங்களை ஆவணங்களாகக் கொண்டு ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள இந்த வழக்கில், பிரிட்டிஷ் அரசால் ‘டிகிளாசிஃபைட்’ (declassified) செய்யப்பட்ட சட்ட ஆவணங்களும் இணைக்கப்பட்டு உள்ளன.

மலாயா அரசியல் சாசனத்தை பிரிட்டிஷ் அரசு ஒருங்கிணைத்த போது, இந்தியத் தோட்டத் தொழிலாளர் குறித்த நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாமல் அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தகவலும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்ற கட்ட அமைப்பை கடந்த 1953-இல் பிரிட்டீஷ் அரசு ஏற்றுக் கொண்டதுடன், அப்போது பிரிட்டீஷ் ஆதிக்கத்தில் இருந்த மலாயாவிற்கும் இது பொருந்தும் என்ற ஒப்பந்தமும் அப்போது ஏற்படுத்தப் பட்டது.

இதன் தொடர்பில் 1954-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசுக்கும் மலாயா பிரிட்டீஷ் உயர் ஆணையருக்கும் தகவல் பரிமாற்றமும் இடம்பெற்று உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளர்களின் தலைமுறையினருக்கு உரிய நீதியைப் பெறுவதில் ஓயப் போவதில்லை என்று இலண்டனில் பொன். முனியாண்டி தெரிவித்தார்.

2007-இல் தொடங்கிய இந்த சட்டப் போராட்டம் பத்து ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மலேசிய இந்தியர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் இருந்து ஹிண்ட்ராப்  கட்சி அயரப் போவதில்லை.

ஏறக்குறைய 150 ஆண்டுகளாக இந்த மலேசிய மண்ணில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டீஷ் அரசாங்கத்தின் இன்றைய நீதி பரிபாலனத்திலும் மலேசிய இந்தியர்களின் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது என்பதற்கான சான்றுதான் நீதிபதி ஹெண்டர்சன் விசாரணைக்கு ஏற்காமலேயே வழக்கை தள்ளுபடி செய்தது.

மொத்தத்தில் மலேசிய இந்தியர்களுக்கான உரிமை மீறலை இன்னமும் இங்கிலாந்து அரசு தொடர்கிறது.

இதன் தொடர்பில் இலண்டனில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இக்கண்
பொன்.வேதமூர்த்தி
தலைவர்
ஹிண்ட்ராப்.

கோலாலம்பூர்.

21-07-2017

19 ஜூலை 2017

எம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன்

தேங்காய் சீனிவாசன் நடித்த படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி நடிப்பார். ஆனால் எம்.ஜி.ஆரோடு அரசியலில் இருந்தாரா? தேங்காய் சீனிவாசனுக்கு எம்.ஜி.ஆர் உதவிகள் செய்தாரா?


எம்.ஜி.ஆரை வாத்தியாரே, அண்ணன், துரை, சாமி என்று தேங்காய் சீனிவாசன் சொல்லும் போது எல்லாம் ஒரு வெறித் தனமான ரசிகனின் குரல் புலப்படும். திரையில் மட்டும் அல்ல. நிஜத்திலும் எம்.ஜி.ஆரை நேசித்தவர். அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்த போது அதில் இணைந்தார். பிரசாரத்திலும் பங்கேற்றார்.

ஓர் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எம்.ஜி.ஆ.ர் சென்று இருந்தார். அதற்குப் பக்கத்து தளத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்துக் கொண்டு இருப்பதாகத் தகவல் சொல்லப் பட்டது. உடனே செட்டுக்குப் போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தார் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட நட்பு இருவருக்கும்.


தேங்காய் சீனிவாசன் தன் இறுதிக் காலத்தில் 'கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை எடுத்தார். நிதி நெருக்கடியால் அந்தப் படம் பாதியில் நின்று போனது. இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்ததும் தேங்காய் சீனிவாசனை வர வழைத்துப் பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.


தேங்காய் சீனிவாசன் இறந்த போது எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப் பட்டு இருந்தார். எம்.ஜி.ஆர். வருவாரா வர மாட்டாரா என்ற ஒரு சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர். வந்தார். வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் போகும் போது தேங்காய் சீனிவாசனின் மகளையும் ஏற்றிக் கொண்டு சென்றார்.

சற்று நேரத்தில் கார் நின்றது. சீனிவாசன் மகள் மட்டும் இறங்கி வந்தார். அவரிடம் எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

தேங்காய் சீனிவாசன் கலந்து கொண்ட கடைசி கூட்டம் மும்பையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா. அந்த அளவுக்கு இருவரும் இணை பிரியாதவர்களாக வாழ்ந்தவர்கள்.

போலி சாமியார்கள்

சாமியார்களை நம்புங்கள். ஆனால் கடவுளாக நினைக்க வேண்டாம்.

”கடவுள் இல்லை என்று சொல்கிறவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்கிறவனை நம்பலாம். ஆனால் நான்தான் கடவுள் என்று எவன் ஒருவன் சொல்கிறனோ அவனை நம்பவே கூடாது”. 

கமலஹாசன் சொன்ன ஒரு வசனம். 


கையை நீட்டச் சொல்லி நாலு வார்த்தையில் நம்பிக்கை வளர்த்த சாமியார்கள் எல்லாம் காணாமல் போகின்றார்கள். கிளியும் கையுமாகத் திரிந்த கிளிச் சாமியார்கள் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை.

அதையும் தாண்டி, சில நேர்மையான ஏழைச் சாமிகள் இருந்தார்கள். அவர்களும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்கள்.


ஆதி சங்கரர், அப்பைய தீட்சிதர், சட்டம்பி சுவாமிகள், இராமானுசர், ராகவேந்திர சுவாமிகள், ரமண மகரிஷி, பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கண்ணையா யோகி, ஞானானந்தகிரி சுவாமிகள், யோகி ராம் சுரத் குமார், சித்பவானந்தர் போன்றவர்கள் தமிழகம் கண்ட சுத்தமான ஆன்மீகவாதிகள்.

அந்த ஆன்றோர்களின் பெயர்களைச் சொல்லி வந்தவர்கள்தான் இந்த ரஜ்னீஷ், பிரேமானந்தா, சந்திராசாமி, ராமன்ஸ்வாமிஜி, சதுர்வேதி, காமந்தக சாமியார், நித்தியானந்தா, ஈசா போன்ற சாமியார்கள்.



சாமியார்களை நம்புங்கள். ஆனால், அவர்களைக் கடவுளாக நினைக்க வேண்டாம். கடவுளாக நினைத்து அவர்களின் கால்களில் விழ வேண்டாம். 

தயவு செய்து அப்பா அம்மா காலில் விழுங்கள். அது கடவுள் காலில் விழுந்ததற்குச் சமம். உங்களுக்கு ஏழேழு ஜென்மங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.

மூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல்

விரதம் இருந்து சாமி வேடம் போட்டு... பக்தர்களின் முதுகில் நடந்து வந்தால் அது பெரும் பாக்கியம். 



இது தமிழ்நாட்டு மேல்மலையனூரில் சிறப்பு. அவர்களின் பாதம் நம் மீது பட்டால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் போய்விடுமாம்... நல்ல ஒரு நம்பிக்கை... 


போங்க போங்க... போய் செஞ்ச பாவங்களை எல்லாம் தீர்த்துட்டு வாங்க... 



சொறி பிடித்த கால்களால் நல்லா மிதிபட்டு வாங்க... உங்க சாமி நம்பிக்கையில் ஒரு வரம்பு வேண்டாமா...