30 செப்டம்பர் 2017

தியான் சுவா - சிறையில் பகவத் கீதை




தியான் சுவா என்பவர் பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். பி.கே.ஆ.ர் கட்சியின் உதவித் தலைவர். பற்பல போராட்டங்களில் கலந்து கொண்டு கைதாகித் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர். பற்பல விசாரணைகளுக்கு உள்ளானவர். இருந்தாலும் இப்போதுதான் முதன் முறையாக ஒரு மாத சிறைவாசம் பெற்றார்.

காஜாங் சிறையில் அவர் தனது அடுத்த ஒரு மாத காலத்தைக் கழிக்கும் போது அங்கே பகவத் கீதையையும், சமஸ்கிருத மொழியையும் படிக்கப் போவதாகச் சொல்கிறார். பகவத் கீதையின் வழி இந்து மதம் குறித்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றார்.


அவருக்கு அந்தப் புத்தகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அவற்றை அவர் சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதி கோரி இருக்கிறார். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. 

ஏப்ரல் 2012-ஆம் ஆண்டு பெர்சே - 3 பேரணியின் போது போலீஸ் பயிற்சி மையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறும்படி போலீசார் உத்தரவிட்டதை தியான் சுவா ஏற்க மறுத்தார். அதனால்  கைது செய்யப் பட்டார். 


அவர் மீது வழக்கு தொடுக்கப் பட்டது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவருக்கு 1000 ரிங்கிட் அபராதமும் 1 மாத சிறைத் தண்டனையும் வழங்கியது.


அந்தத் தீர்ப்புக்கு எதிராக தியான் சுவா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார். நேற்று வெள்ளிக்கிழமை அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தியான் சுவா தன் மேல்முறையீட்டை மீட்டுக் கொண்டார். அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் ஒரு மாத சிறைவாசத்தையும் அனுபவிக்கத் தயார் ஆனார்.


தனது சிறைவாசக் காலத்தின் போது பகவத் கீதை, சமஸ்கிருதம், லத்தீன் மொழி, பைபிள் படிப்பதற்கும் அவர் ஆர்வமாக இருக்கிறார் என்று அவரின்  வழக்கறிஞரும் பி.கே.ஆர். கட்சியின் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார்.

27 செப்டம்பர் 2017

ஹலோ எப்படி வந்தது

தொலைப்பேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் (Alexander Graham Bell) அவரின் முதல் தொலைப்பேசி சொற்கள். "Mr. Watson--come here--I want to see you." 1876 மார்ச் 10-ஆம் தேதி பேசப் பட்டது.



பின்னர் ஆஹோய் (Ahoy) எனும் சொல்லைப் பயன்படுத்தினார். அதற்கு மாறாக தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Edison) அவர்கள் தான் ஹுல்லோ (Hullo) எனும் சொல்லை அதிகம் பயன்படுத்தினார். 

ஆஹோய் எனும் சொல் தான் ஹுல்லோ என்று புதுவடிவம் எடுத்தது. அதுவே ஹலோ (Hello) என்று இப்போது பரவலாகிப் போனது.

இத்தாலியைச் சேர்ந்த அன்டொனியோ மியூசியோ (Antonio Meucci) என்பவரே முதன் முதலாக தொலைபேசியைக் கண்டுபிடித்தவர். 1860-ஆம் ஆண்டில் மியூசியோ அந்த முதலாவது தொலைத் தொடர்பு சாதனத்தைக் கண்டுபிடித்தவர்.

அது கிரஹாம் பெல் 1876-ஆம் ஆண்டு கண்டுபிடித்த தொலைபேசியை விட 16 ஆண்டுகளுக்கு முந்தையது. மியூசியோவின் கண்டுபிடிப்பை அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 2002ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தார்கள். அதனால் அதுவே முதல் தொலைபேசி என்று இன்றும் சொல்லப்படுகிறது.



Bell placing the first New York to Chicago telephone call in 1892

எனினும் உலகம் மக்கள் முழுமைக்கும் இன்று வரை தொலை பேசி என்றாலே கிரஹாம் பெல் என்றே பதிந்து விட்டது. அது தப்பு. 1871-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாழ்ந்த இத்தாலிய நிபுணர் அண்டோனியோ மியூசியோ தான் தொலைப்பேசியை முதன்முதலில் கண்டுபிடித்தவர்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஸ்காட்லாண்டில் பிறந்து அமெரிக்கரான அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்; அடுத்து அமெரிக்கர் எலிஸா கிரே (Elisha Gray). 


இருந்தாலும்  வாய்ப் பேச்சை அனுப்பவும், காதில் கேட்கவும் பழக்கத்திற்குப் பயன்படும் ஒரு சரியான தொலைப்பேசிச் சாதனத்தை முதலில் ஆக்கிப் பதிவு செய்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். அந்தப் பெருமை அவருக்கே.


Johann Philipp Reis (1834–1874) publicly demonstrated the Reis telephone

எலிஸா கிரேயின் தொலைப்பேசி சாதனமும் அதே சமயத்தில் தயாரானது. சிறப்பாக வேலை செய்தது. இருந்தாலும் யார் முதலில் உரிமை படைத்தவர் என்ற வழக்கு நடந்தது. அதில் கிரஹாம் பெல் வெற்றி பெற்றார். அவரே தொலைபேசியின் முதல் படைப்பாளர் என்றும் கருதப் படுகிறார்.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தனது புதிய கருவியை வர்த்தகத் தொழிற்துறை உற்பத்திக்குப் பயன் படுத்துவதற்கு பதிவு உரிமை பெற்றார். அதுவே அவரைத் தொலைபேசியின் தந்தை என்று புகழாரம் செய்து உள்ளது.


Source: 1. Bruce, Robert V. (1990). Bell: Alexander Graham Bell and the Conquest of Solitude. Cornell University Press.

2. Casson, Herbert Newton. (1910) The history of the telephone online.

நெருப்பு இல்லாமல் புகை வராது

ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பொருந்தி வராத கட்டத்தில் அந்தக் கருத்து ஒரு தப்பான கருத்து என்று ஒரு சிலர் முடிவு செய்கிறார்கள். அதே கருத்து அவருக்குப் பொருந்தி வரும் கட்டத்தில் அதுவே நல்ல கருத்தாக மாற்றம் பெறுகிறது. 

ஒருவரின் கருத்தைத் தவறாக எடுத்துக் கொள்வதும் அல்லது நல்லதாக எடுத்துக் கொள்வதும் அவரவர் மனநிலை, தெளிவாகச் சிந்திக்கும் நிலையைப் பொருத்த விசயங்கள்.

தப்பான கருத்து என்று முடிவு செய்வதற்கு முன்னர் ஏன் அந்தக் கருத்து நல்லதாக இருக்கக் கூடாது என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அதில் உள்ள எதார்த்த உண்மைகள் தெரிய வரும். அதே அந்தத் தப்பான கருத்து நல்ல கருத்தாகத் தெரிய வரலாம்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நம்மிடம் குறை இல்லாமல் எப்போதுமே யாருமே நம் மீது வீணாகக் குறை சொல்ல மாட்டார்கள். ஏதோ ஒரு குறை இருக்க வேண்டும். அதை மறந்துவிட வேண்டாம்.

நம்முடைய செயல்பாடுகளில் நடைமுறைக் கோளாறுகள் இருந்தால் மட்டுமே மற்றவர்கள் கருத்துகள் சொல்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றன. அதை மறக்க வேண்டாம். நெருப்பு இல்லாமல் புகை வராது.

தொலை பேசியா - தொலைப்பேசியா

தொலைப்பேசி என்பதே சரியான சொல். தொலை + பேசி = தொலைப்பேசி. இங்கே வலி மிகும். 


தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று மட்டும் ஏன் பிழையாகச் சொல்கிறோம். புரியவில்லை. தொலை பேசி என்றால் பேசியைத் தொலைத்துவிடு என்று அல்லவா பொருள் படுகிறது.

தொலைவில் இருந்து காணக் கூடியது தொலைக்காட்சி. அப்படி என்றால் தொலைவில் இருந்து பேசக் கூடியது தொலைப்பேசி தானே? பின்னர் ஏன் பலர் தொலைபேசி எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

25 செப்டம்பர் 2017

பூஜாங் நடராஜா



 மலேசியாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஒன்று சேர்ந்து நன்றி சொல்ல வேண்டிய ஒரு மனிதர் மலேசியாவில் இருக்கிறார் என்றால் அவர்தான் டத்தோ வீ. நடராஜன். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைப் பூஜாங் பள்ளத்தாக்கின் இந்திய வரலாற்றை மீட்டு எடுப்பதில் அர்ப்பணம் செய்தவர். செய்தும் வருபவர்.

அவரின் ஆய்வுப் பணிகளின் பெருமைகள் ஒட்டு மொத்த மலேசியத் தமிழர்களுக்கும் போய்ச் சேர்கின்றது. அதையும் தாண்டிய நிலையில் ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களையும் சார்கின்றது. தமிழர், தெலுங்கர், மலையாளிகள் அனைவருக்கும் அந்தப் பெருமை போய்ச் சேர்கின்றது. 



மலேசிய இந்தியர்களின் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் பாரம்பரியப் பாதுகாப்புக் கழகத்திற்கு கடிதம் மேல் கடிதம் எழுதியவர். 


ஐக்கிய நாட்டுச் சபையின் வரலாற்று ஆய்வாளர்களைக் கெடா மாநிலத்திற்குக் கொண்டு வந்தவரும் இவர் தான். கெடா மாநில அரசாங்கத்தைக் கையெழுத்துப் போட வைத்தவரும் இவர் தான். அவருடைய இந்த வரலாற்றுப் போராட்டத்தினால் அரசாங்கத்தின் கசப்பான பார்வைகளையும் எதிர்நோக்க வேண்டி வந்துள்ளது.

பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாற்றை மீட்டு எடுப்பது என்பது அவரைப் பொருத்த வரையில் அது ஒரு தனிமனித வரலாற்றுப் போராட்டம் அல்ல. அது அவரின் வாழ்நாள் வேட்கையின் வேங்கைத்தனம். சீறும் சிங்கத்தனம்.


அந்த ஆய்வின் முடிவே *சோழன் வென்ற கடாரம்* எனும் வரலாற்று ஆய்வு நூல். 20 ஆண்டுகள் ஆய்வுகள் செய்து எழுதி இருக்கிறார். மலேசியத் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வரலாற்றுச் சுவடி. கைகூப்புகிறேன் டத்தோ நடராஜன் அவர்களே.

(சான்று:http://www.thestar.com.my/news/nation/2013/12/10/candi-lembah-bujang-destroying-history/ - Datuk V. Nadarajan, chairman of the Bujang Valley Study Circle non-governmental organisation.)

அவருடைய அந்த ஆய்வு நூல் பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு, அகழ்வாய்வியல் பற்றிய ஓர் ஆழமான பார்வை. மலேசியாவின் தேசியப் பாரம்பரியச் சொத்தான புராதன கெடாவின் வரலாற்றை இந்த நூல் விவரிக்கிறது. மலேசியாவில் வாழும் அனைத்துத் தமிழர்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் களஞ்சியம்.


டத்தோ வீ. நடராஜன் என்பவர் மலாயா வரலாற்றில் ஒரு வல்லுநர்.  மலாயாப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்று தேர்ச்சி பெற்றவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றியவர்.

கெடா சுங்கைப் பட்டாணி நகரில் பிறந்து வளர்ந்தவர். ஒரு சாமானிய மனிதராகவே காலத்தைக் கழிக்கின்றார். வஞ்சகம் இல்லாத மனசு.

மலேசியா இந்தியர்கள் கண்டு எடுத்த ஒரு மந்திரப் புன்னகைகளில் ஒருவர் பூஜாங் நடராஜா. இவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். நிறைய வரலாற்று ஆய்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலேசிய இந்தியர்களின் வரலாறுகளை மீட்டு எடுக்க வேண்டும். 


இவரின் ஆய்வுப் பணிகளுக்கு மலேசிய இந்தியர்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மலேசிய இந்தியர்கள் அனைவரும் இவருக்குக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிப்பு செய்ய வேண்டும். நம் நாட்டு இந்தியத் தலைவர்கள் முன்னெடுத்துச் செய்ய வேண்டும் செய்வார்களா. இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக அமைந்துவிடக் கூடாது.