26 செப்டம்பர் 2019

இராஜேந்திர சோழன் படையெடுப்பு - கடாரம்

(இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுப்பு - வரலாற்று ஆய்வு நூல் - பக்: 9 - 14)

10-ஆம் நூற்றாண்டுகளில்  உலகத்திலேயே மாபெரும் கடல் படையைக் கொண்ட வல்லரசு நாடாகச் சோழப் பேரரசு விளங்கியது. உண்மை. பல நாடுகளைத் தங்களின் வலிமை மிக்க கடல் படையினால் இறுக்கிப் பிடித்து தன்னகப் படுத்தியது. உண்மை. அப்போதைக்கு சோழர்களுக்கு இணையாக எவரும் இல்லை என்று வரலாறு பேசியது. அதுவும் உண்மை.

ஆனால் தென்கிழக்காசிய நாடுகள் மீது அந்தப் படையெடுப்பு நிகழாமல் இருந்து இருக்குமானால் வரலாறு வேறு மாதிரியாகப் பயணித்து இருக்கலாம். கடாரத்தில் ஒருக்கால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

மீண்டும் சொல்கிறேன். இந்தியர்களின் ஆளுமையைச் சற்றே நீண்ட காலத்திற்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம். அல்லது அந்த ஆளுமையில் இந்தியர்களுக்குச் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

மலேசியாவில் பேராக் மாநிலத்தில் புருவாஸ் கங்கா நகரம் என்பது ஒரு பெரிய வரலாற்றைக் கொண்டது. இந்த அரசு இன்னும் சில பல காலத்திற்கு நீடித்து இருக்கலாம்.

மற்றோர் அரசு ஜொகூர் மாநிலத்தில் இருக்கும் கோத்தா கெலாங்கி எனும் மாயிருண்டகம் பேரரசு. இந்த அரசும் இன்னும் நீண்ட காலத்திற்கு நிலைத்து நீடித்து இருக்கலாம்.

அந்தப் பக்கம் இந்தோனேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு அந்த அளவிற்கு மிக மோசமாக உருக்குலைந்து போய் இருக்காது. பல ஆண்டுகள் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு பலம் குன்றிப் போய் இருக்காது. அந்த அரசும் மேலும் சற்று நீண்ட காலம் பேர் போட்டு இருக்கலாம்.

தென்கிழக்காசியாவில் இந்தியர்களின் ஆளுமை சில நூற்றாண்டுகளுக்கு மேலும் நீடித்து இருக்கலாம் எனும் ஒரு வியூகத்திலும் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இத்தனை அரசுகள் சிதைந்து போனதற்கு இராஜேந்திர சோழன் என்பவர் மட்டும் காரணம் என்று சொல்ல இயலாது. அவர் மீது ஒட்டு மொத்தப் பழியைச் சுமத்த முடியாது. அது மிகவும் தப்பு.

அந்தப் படையெடுப்பு நடந்ததற்கு மூல காரணமாக இருந்ததே ஸ்ரீ விஜய பேரரசு தான்.

சோழப் பேரரசிற்கும் சீனப் பேரரசிற்கும் நீண்ட காலமாக நல்ல மாதிரியாக  நட்புறவு இருந்து வந்தது. அதற்குத் தடைக் கல்லாக அமைந்தது ஸ்ரீ விஜய பேரரசு. அதனால் தான் சோழப் பேரரசு சினம் அடைந்தது. சில பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்து ஸ்ரீ விஜய பேரரசின் மீது தாக்குதல் நடத்தியது. அதன் தொடர் விளைவாகப் பற்பல பேரரசுகளும் பற்பல சிற்றரசுகளும் சிதைந்து போயின.

அந்த அரசுகள் அழிந்து போயின என்று சொல்ல முடியாது. சிதைந்து போயின என்றுதான் சொல்ல முடியும். அந்த அரசுகள் அழிக்கப்படவில்லை. அடித்து நொறுக்கப் பட்டதால் சிதைந்து போயின. மீண்டும் எழுந்து வருவதற்கு நீண்ட காலம் பிடித்தது.

சோழப் படைகள் தாயகத்திற்குத் திரும்பிச் சென்ற பின்னர் பாதிப்புற்ற அந்த அரசுகள் மீட்சி பெற்றன. சில அரசுகள் சில ஆண்டுகளிலேயே பழைய வழக்க நிலைக்குத் திரும்பின. சில அரசுகளுக்கு நீண்ட காலம் பிடித்தது. ஒரு சில அரசுகள் மறுபடியும் எழுந்து நிற்கவே முடியாமல் அப்படியே கரைந்து போய் விட்டன.

தென்கிழக்கு ஆசியாவிற்குப் படை எடுத்து வந்த சோழர்கள் எந்த நாட்டையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை. அதாவது ஆட்சி செய்யவில்லை. வந்தார்கள்; வென்றார்கள்; சென்றார்கள்.

நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் சோழர்கள் வரவில்லை. தங்களின் வாணிகத்திற்கு இடையூறாக இருந்தவர்களுக்குப் புத்தி புகட்டுவதே அவர்களின் தலையாய நோக்கமாக இருந்து இருக்கிறது. சோழர்களின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அந்த உண்மை தெரிய வரும்.

இராஜேந்திர சோழனின் படையெடுப்பை நாம் பெருமையாக நினைத்துக் கொள்ளலாம். தப்பு இல்லை. ஆனால் அதே சமயத்தில் மலாயாவில் சில பல இந்தியர்களின் அரசுகள் அழிந்து போனதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அழிக்கப்பட்ட இந்தியர்கள் அரசுகள் பெரிதாகத் தெரிகிறனவா அல்லது இராஜேந்திர சோழனின் படையெடுப்பு மட்டும் நமக்குப் பெருமையாகத் தெரிகின்றதா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியப் பேரரசுகளில் மிகவும் புகழ் பெற்றது சைலேந்திரா பேரரசு. ஜாவா தீவில் கோலோச்சிய அந்தப் பேரரசை தரநீந்தரன் எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார்.

அவருடைய காலத்தில் ஒரு பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இது கி.பி. 775-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அந்தக் கட்டத்தில் சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு. ஜாவாவில் சைலேந்திரா பேரரசு. இந்த இரண்டு பேரரசுகளும் ஒன்றாக இணைந்தன. ஒரே பேரரசாக மாறி ஒன்றாக ஆட்சி செய்தன. ஸ்ரீ விஜய பேரரசு எனும் பெயரில் அந்த ஆட்சி நடைபெற்றது.

அப்படி கூட்டாக இணைந்த ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் தான் கடாரம் எனும் பூஜாங் சமவெளியின் ஆட்சியும் நடைபெற்றது.

கடாரத்தைக் ஆகக் கடைசியாக ஆட்சி செய்தவர் ராஜா லிங்கயோகன். இவருக்கு ராஜா லிங்கி ஷா ஜோகான் எனும் மற்றொரு பெயரும் உண்டு. செஜாரா மெலாயு எனும் மலாய் வரலாற்று இலக்கியத்தில் ராஜா லிங்கி ஷா ஜோகான் எனும் பெயரே முன்னிலைப் படுத்தப்படுகிறது.

ஸ்ரீ விஜய பேரரசை ஆட்சி செய்த சங்கராமா விஜயதுங்கவர்மன் என்பவரின் பிரதிநிதி தான் ராஜா லிங்கயோகன். இவர் இந்தோனேசியாவில் இருந்து கடாரத்திற்கு வந்தவர்.

ராஜா லிங்கயோகன் கடாரத்தை மட்டும் ஆட்சி செய்யவில்லை. சம காலத்தில் கங்கா நகரத்தையும் ஆட்சி செய்து இருக்கிறார். கங்கா நகரத்தின் தலைநகரம் ஒரு குன்றின் உச்சியில் இருந்து இருக்கிறது. அந்த நகரின் தற்காப்புக்காக ஒரு பெரிய கோட்டை கம்பீரமாய் நின்றது.

அந்தக் கோட்டை ஒரு குட்டி மலை போல காட்சி அளித்தது. அந்தக் கோட்டை பேராக் ஆற்று ஓரத்தில் இருந்தது. (அந்த இடம் இப்போது டிண்டிங்ஸ் என்று அழைக்கப் படுகிறது)

ராஜா லிங்கயோகன் ஒரு ஸ்ரீ விஜய அரசர். இவர்தான் கடார மண்ணில் கடைசி கடைசியாகக் கால் பதித்து ஆட்சி செய்தவர். சுங்கை மெர்போக் ஆற்றில் கப்பல் ஓட்டியவர். மலாக்கா நீரிணையில் நீந்தி விளையாடியவர்.

சுங்கை மெர்போக் ஆறு என்பதைச் சின்ன ஆறாக நினைத்துவிட வேண்டாம். மலாக்கா நீரிணையில் மெர்போக் ஆறு இணையும் இடத்தில் அந்த ஆற்றின் அகலம் நான்கு கிலோ மீட்டர்கள். அவ்வளவு பெரிய ஆறு. தொடுவானத்தில் கடலும் ஆறும் ஒன்றாகக் கலந்து நிற்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.

மெர்போக் ஆற்றில் மூன்று முறை படகு பயணம் செய்த அனுபவம் உள்ளது. பயணம் செய்யும் போது கடாரத்து அரசர்களும் இராஜேந்திர சோழனும் நினைவில் வருவார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் பயணம் செய்த அதே ஆற்றில் நாமும் பயணம் செய்கிறோம் எனும் பெருமையும் ஏற்படும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுப்பை நடத்தியது இராஜாராஜ சோழன் அல்ல. அவருடைய மகன் இராஜேந்திர சோழன். அந்தப் படையெடுப்பிற்குக் கட்டளை போட்டது இராஜாராஜ சோழன். படையெடுப்பை நடத்திக் காட்டியது அவருடைய மகன் இராஜேந்திர சோழன்.

தென்கிழக்கு ஆசியாவில் சோழப் பரம்பரைக்குப் போட்டியாக இருந்த அத்தனை அரசுகளையும்; அந்த அரசுகளுக்குக் கீழ் இருந்த சிற்றரசுகளையும் அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள். அந்தப் படையெடுப்பு ஓராண்டு காலமாக நடந்து இருக்கிறது. காயங்கள் இன்னும் ஆறவில்லை.

அந்த அவலத்தின் கோலங்களில் பல பேரரசுகள் சின்னா பின்னமாகிப் போயின. பல சிற்றரசுகள் நார் நாராய்க் கிழிந்து சின்னா பின்னமாகிப் போயின. இந்தியர்களின் அரசுகள் மட்டும் மாட்டிக் கொள்ளவில்லை. ஜாவானியப் பூர்வீக அரசுகளும்; போர்னியோ பூர்வீக அரசுகளும் மாட்டிக் கொண்டன.

தாய்லாந்திலும் பர்மாவிலும் சில அரசுகள் மாட்டிக் கொண்டன. அதைப் பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன்.

சைலேந்திரா பரம்பரையினரின் வழி வந்தது ஸ்ரீவிஜய பேரரசு. அந்த அரசு இழந்து போன தன் முகவரியை இன்று வரையிலும் தேடிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் சொல்ல வேண்டி வருகிறது.

ஆசிய வரலாற்றில் அந்தப் படையெடுப்பு ஒரு பெரிய கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால் அந்தப் படையெடுப்பினால் பல இலட்சம் பேர் பலியானார்கள். கடார மண்ணில் மட்டும் பல்லாயிரம் பேர் இறந்து போய் இருக்கிறார்கள்.

சண்டை போட்டு மறைந்து போன வீரர்களின் பட்டியல் ஒரு புறம் இருக்கட்டும். அமைதியாய் ஆனந்தமாய் அப்பாவித் தனமாய் வாழ்ந்த ஆயிரம் ஆயிரம் பொதுமக்கள் அநியாயமாக இறந்து போய் இருக்கிறார்களே. அந்தப் பட்டியலை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம். சொல்லுங்கள்.

சோழ வரலாற்றை முழுமையாகப் படித்துப் பாருங்கள். ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு ராஜா ராஜ சோழன் வரலாற்றையே படித்து விட்டதாக நினைக்கக் கூடாது.

பூஜாங் பள்ளத்தாக்கில் ஸ்ரீ விஜய பேரரசின் அரசர் ராஜா லிங்கயோகன் நடை பயின்ற இடங்கள் எல்லாம் இப்போது காடு மேடுகளாய்க் காட்சி அளிக்கின்றன. ஓர் ஆயிரம் ஆண்டுகளாகப் புழுதிப் படலங்கள் நிறைந்து உயர்ந்து மலை போல் நிற்கின்றன.

கடாரத்தின் வரலாற்றில் உச்சம் பார்த்த மலைகளில் வானுயர்ந்து நிற்கும் வானகத்து நெடு மரங்கள் தெரிகின்றன. நெடும் காலமாய்க் கதிரொளியைக் காணாமல் கலங்கி நிற்கும் சின்னச் சின்னச் செடி கொடிகள் தெரிகின்றன. அந்தப் பச்சைத் தாவரங்களுக்கு அடியில் ஓராயிரம் கடாரத்து மர்மங்கள் விசும்புவதும் கேட்கின்றன.

அந்த மர்மக் குவியல்களைப் பற்றி முறையான ஆய்வுகள் செய்யப் படுவதற்கு தடங்கலாகப் பல வரலாற்றுச் சித்தர்களும் இங்கேயும் இருக்கிறார்கள். எங்கேயும் இருக்கிறார்கள்.

இதற்கு இடையில் கடாரத்து வரலாற்றை மீட்டு எடுப்போம் என்று கங்கணம் கட்டும் இந்தியப் பெருமக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

கோத்தா கெலாங்கி வரலாற்றை மீட்டு எடுப்பதற்கு அரிய முயற்சிகள் மேற்கொண்டு வரும் ஜொகூர் வரலாற்று ஆய்வாளர் கணேசன் அவர்களை மலேசிய இந்தியர்கள் நினைத்துப் போற்ற வேண்டும். சரி.

கடாரத்துக் காட்டு விரிப்புகளில் கறை படிந்த ஒரு வரலாறு நன்றாகவே ஒப்பாரி வைத்து அழுது கொண்டு இருக்கிறது. அந்த அழுகுரலை நிறுத்துவதற்கு போதுமான முயற்சிகள் செய்யப் படவில்லை.

அந்த அழுகுரல் கேட்கா விட்டாலும் பரவாயில்லை. இருக்கிற கடாரத்து உண்மைகளைத் திரித்துக் கூறாமல், அழித்துப் போடாமல் இருந்தால் அதுவே மனசிற்கு ரொம்பவும் நிம்மதி.

ஒரு முறை அல்ல. பல முறை ஆய்வுப் பணிகளுக்கு செமிலிங் காட்டிற்குள் போய் இருக்கிறேன். லெம்பா பூஜாங் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு அருகாமையில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி. காய்ந்து போய் கற்பாறையாய் ஓங்கி நின்றது.

நீர்வீழ்ச்சியின் உச்சியில் நான்கைந்து கரும் பாறைகள். பக்கத்தில் பாழடைந்து போன ஒரு பலகை வீடு.

அதைப் பேய்வீடு என்று சொல்ல மனசு வரவில்லை. அந்த வீட்டைச் சுற்றிலும் மீனாச் செடிப் புதர்கள். அசைந்தாடும் லாலான் புற்கள். காற்று வாடை இல்லாமலேயே ஆடிப் பாடும் செடி கொடிகள்

கற்பாறைகளில் கண் அயர்ந்து கற்பனை செய்து பார்த்தால் கண்கள் கலங்கும். கண்களைத் திறந்து பார்த்தால் காட்டு மரங்களின் பட்டைகளில் நீர்க் கசிவுகள் தெரியும். காட்டுச் செடிகளின் கவின்தகு மலர்களில் இரத்தச் சுவடுகள் மறைந்து இருப்பதும் தெரியும்.

கடாரம் கொண்ட மாவீரர்களினால் எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்கள் இங்கே பலியாகி இருக்கலாம். கடார மண் சொல்லும் சோகக் கதைகளைக் கேட்க நமக்கும் தெம்பு இல்லை.

அந்த உயிர்களின் ஆவிகள் நிச்சயம் இன்னும் அங்கு நடமாடிக் கொண்டு தான் இருக்கும். சமயங்களில் தனிமையில் அமர்ந்து அந்தக் கானகத்துக் காற்றைச் சுவாசிக்கும் போது ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது. சத்தியமாகச் சொல்கிறேன்.

ஓர் உண்மை நிகழ்ச்சி. ஒரு நாள் மதிய நேரம். மணி பன்னிரண்டு இருக்கும். நீர்வீழ்ச்சியின் உச்சத்தில் இருந்த பாறையில் அமர்ந்து இருந்தேன். அப்போது யாரோ எனக்குப் பின்னால் வந்து மூச்சு விடுவது போல இருந்தது.

ஒரு மாதிரியான வெப்பக் காற்று. திரும்பிப் பார்த்தால் யாரும் இல்லை. ஒரு தடவை அல்ல. இரண்டு மூன்று தடவைகள். பயம் வந்துவிட்டது.

அது ஒரு மாதிரியான மர்மச் சாயல்களின் மாய உணர்வுகள். அப்புறம் என்ன. திரும்பிப் பார்க்காமல் கீழே வந்து சேர்ந்தேன். லெம்பா பூஜாங் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இருந்த அதிகாரிகளிடம் நடந்ததைச் சொன்னேன்.

கெட்ட ஆவிகள் உலவுகின்ற நேரத்தில் நீங்கள் போய் இருக்கிறீர்கள் என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்கள். அந்த நிகழ்ச்சி இன்று வரை என் நெஞ்சத்தை உரசிப் பார்த்து உதறலைக் கொடுக்கும்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுப்பு வரலாற்று நூல் இரு மொழிகளில் வெளியிடப் படுகிறது. விரைவில்....




இராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்திகள் - மாயிருண்டகம்

இராஜா ராஜா சோழன்; இராஜேந்திர சோழன்; இவர்களின் மெய்க்கீர்த்திகள் மட்டும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். மலேசியத் தமிழர்களின் வரலாற்றை எப்போதோ பொட்டலம் கட்டி போத்தல் கடையில் விற்று இருப்பார்கள். நிதர்சனமான உண்மை அல்ல. நியாயமான உண்மை.
 
தமிழ் மலர் - 06.05.2019

ஒன்றும் வாசிக்க முடியாது. ஒன்றுமே பேச முடியாத அளவிற்கு வாயைக் கட்டிப் பொத்தி வைத்து இருப்பார்கள். நல்ல வேளை. தப்பித்தோம். சரி.

இராஜேந்திர சோழனின் படைகள் பலேம்பாங்கை விட்டு வெளியாகும் போது ஸ்ரீ விஜய கடல் படைகள் பலத்த எதிர்ப்புகளைக் கொடுத்தன. சோழப் படைகளுக்கு ஏற்கனவே பலத்த சேதங்கள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டன.
 

ஒரு கட்டத்தில் சுந்தா நீரிணையில் பயங்கரமான மோதல். இராஜேந்திர சோழன் படைகள் பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடைய படைகளில் பாதி பேர் பலியானதாக வரலாற்று ஆசிரியர் ஜார்ஜ் ஸ்பென்சர் சொல்கிறார்.

இராஜேந்திர சோழன் கைப்பற்றிய அரசுகளைத் தக்க வைத்து இருக்க வேண்டும். அரசுப் பிரதிநிதிகளை நியமித்துவிட்டுப் போனது தவறு. தடி எடுத்தவன் தண்டல் ஆவான் என்று சொல்வார்களே அந்த மாதிரிதான் தீபகற்ப மலேசியாவிலும் நடந்து விட்டது.

இராஜேந்திர சோழன் நம்பிக்கையோடு விட்டுச் சென்ற சிற்றரசுகளும் பேரரசுகளும் காலப் போக்கில் மாறிப் போயின. மதமாற்றங்கள் ஒரு காரணம். வரலாறும் மாறிப் போய்க் கிடக்கிறது.
 

Chola invasion ultimately failed to install direct administration over Srivijaya. Since the invasion was short and only meant to plunder. This invasion gravely weakened the Srivijayan hegemony and enabled the formation of regional kingdoms like Kahuripan, Kediri in Java.

Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. p. 163.

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் வருகின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். தமிழகக் கோயில்களில் இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் நிறையவே கிடைத்து உள்ளன.

மெய்க்கீர்த்திகள் என்றால் கல்வெட்டுகளில் ஓர் அரசரைப் பற்றி செதுக்கப் பட்ட பெருமைச் செய்திகள்.

அதாவது ஓர் அரசரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய புகழ்ச் செயல்களையும் புகழ்ச் சாதனைகளையும் கூறும் கல்வெட்டுகளைத் தான் மெய்க்கீர்த்திகள் என்று அழைக்கிறார்கள். அவற்றைப் புகழ்மாலைகள் என்றுகூட சொல்லலாம்.
 

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் நூல் வடிவில் கோர்த்துத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த நூல் கோர்வையின் பெயர் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்திகள். அந்தக் கோர்வையின் முதல் தொகுப்பு எண்: 66, பக்கம்: 98-இல் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இராஜேந்திர சோழன் நடந்து வந்த பாதையில் தென்பட்ட அத்தனை நகரங்களும் அவனுடைய காலடியில் வீழ்ந்தன. கங்கா நகரம் எனும் நகரத்திற்கு வரும் போது அந்த நகரை ராஜா லிங்கயோகன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். இவருக்கு ராஜா லிங்கி ஷா ஜோகான் எனும் மற்றொரு பெயரும் உண்டு.

ஒரு குன்றின் உச்சியில் கங்கா நகரம் இருந்தது. அந்த நகருக்கு தற்காப்புக்காக ஒரு பெரிய கோட்டை கம்பீரமாய் நின்றது. ஒரு குட்டி மலை போல காட்சி அளித்தது. அந்தக் கோட்டை பேராக் ஆற்று ஓரத்தில் இருந்தது. (அந்த இடம் டிண்டிங்ஸ் என்று இப்போது அழைக்கப் படுகிறது)

இராஜேந்திர சோழன் வருவதை அறிந்த ராஜா லிங்கயோகன் தன்னுடைய படைகளை ஒன்று கூட்டினார். கோட்டையின் வாசல் கதவை மூடச் சொன்னார். கோட்டையைச் சுற்றி உள்ள கால்வாய்களில் நீரை நிரப்பச் சொன்னார். அதற்குள்  இராஜேந்திர சோழனின் படையினர் கோட்டையை முற்றுகை செய்தார்கள்.

ராஜா லிங்கயோகனின் கோட்டை மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்து இருக்கிறது. எளிதாகத் தகர்த்து உள்ளே நுழைய முடியவில்லை. சோழப் படை வீரர்கள் தீவிரமாகத் தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதல்களுக்கு இராஜேந்திர சோழனே முன் நின்றார். ஒரு யானையின் மீது ஏறி தாக்குதல்களை நடத்தினார்.
 

அவற்றை எதிர்த்த கங்கா நகரத்தின் ராஜா லிங்கயோகனின் படையினர் இராஜேந்திர சோழனின் படைகளைச் சரமாரியாகத் தாக்கினார்கள். ஈட்டிகளாலும் அம்புகளாலும் தொடர் எய்தல்களைத் தொடுத்தார்கள்.

ஒரு கட்டத்தில் இராஜேந்திர சோழன் கோட்டையின் கதவுகளை இராட்சச இரும்புக் குண்டுகளால் அடித்துத் தகர்க்க ஆரம்பித்தார். தொடர் தாக்குதல்களினால் கோட்டையின் கதவுகள் சன்னம் சன்னமாய்த் தகர்ந்தன. இராஜேந்திர சோழனின் தளபதிகளும் வீரர்களும் விறுவிறுவென்று கோட்டைக்குள் நுழைந்தார்கள்.

அங்கே ராஜா லிங்கயோகன் சோழப் படைகளை எதிர்த்துச் சண்டை போட தயாராக இருந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு படையே பக்கபலமாக நின்றது. இராஜேந்திர சோழன் தன்னை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட ராஜா லிங்கயோகன் அவர் மீது நச்சு கலந்த அம்புகளை எய்தினார்.

அதில் ஓர் அம்பு இராஜேந்திர சோழனின் மீது படாமல் அவர் ஏறி வந்த யானையின் தும்பிக்கையைத் தைத்துச் சென்றது. நச்சுக் கலவையைத் தாங்க முடியாமல் யானையும் சரிந்து விழுந்தது.

இராஜேந்திர சோழன் சட்டென்று கீழே குதித்தார். தன் வாளை உருவிய அவர் ராஜா லிங்கயோகனைத் தாக்கினார். ஒரு வாள் வீச்சு ராஜா லிங்கயோகனின் கழுத்தில் பட்டது. ராஜா லிங்கயோகனின் தலை துண்டாகிப் போனது. ராஜா லிங்கயோகனின் அங்கேயே இறந்து போனார்.

அதைப் பார்த்த ராஜா லிங்கயோகனின் படையினர் மூலைக்கு மூலை சிதறி ஓடினார்கள். அவ்வளவு தான். பின்னர் கங்கா நகரம் சூறையாடப் பட்டது.
 

அதன் பின்னர் இராஜேந்திர சோழனின் கடல் படையின்ர் நேரடியாகக் கடாரத்தில் போய் தரை தட்டவில்லை. எல்லோரும் அப்படித் தான் நினைக்கிறார்கள். பேராக் ஆற்றின் முகத்துவாரத்தில் கரை இறங்கி இருக்கிறார்கள். அங்கு இருந்து தான் கங்கா நகரத்திற்குப் படைகள் போய் இருக்கின்றன.

அப்போது கடாரத்தின் ஆட்சியாளராக இருந்தவர் லிங்கயோகன். சற்றுமுன் தெரிந்து கொண்டீர்கள். ஆனால் ஒட்டு மொத்த ஸ்ரீ விஜய பேரரசின் அரசராக சங்கர ராமா விஜயதுங்க வர்மன் மட்டுமே இருந்து இருக்கிறார். இவரின் வசிப்பிடம் பலேம்பாங்.

ஸ்ரீ விஜய பேரரசின் துணைச் சிற்றரசுகளுக்கு அரசுப் பிரதிநிதிகளை நியமித்து இருக்கிறார். அந்தப் பிரதிநிதிகளைச் சிற்றரசர்கள் என்று அழைத்து இருக்கிறார்கள்.

அதே போல கடாரத்திற்கும் ஓர் ஆட்சியாளரை நியமித்து இருக்கிறார். அந்த ஆட்சியாளரே கடாரத்தின் சிற்றரசராகவும் சேவை செய்து இருக்கிறார். அவர் தான் லிங்கயோகன்.

கங்கா நகரமும் கடாரமும் தோற்கடிக்கப்பட்ட பின்னர் லிங்கயோகனின் மகள் புத்திரி கங்காவை இராஜேந்திர சோழன் மணம் செய்து கொண்டார்.

Inscription of Virarajendra Chola at Bahawathi Amman shrine at Agatheseswarem temple in Kanyakumari district, Tamil Nadu, India - Travancore Archeological Series vol 111, Part 1, No 41

கங்கா நகரம் எப்படி இராஜேந்திர சோழன் கரங்களில் வீழந்தன. அதைப் பற்றியும் கல்வெட்டுகளில் கிடைத்த விளக்கத்தையும் பார்த்தீர்கள்.

கங்கா நகரத் தாக்குதல் என்பது மறக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதைப் பற்றி இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளின் வழியாகத் தெரிந்து கொண்டோம்.
 

இன்னும் ஒரு விசயம். கடாரம் எங்கே இருக்கிறது புருவாஸ் டிண்டிங்ஸ் எங்கே இருக்கிறது. அதைக் கவனித்தீர்களா. எப்படியும் 150 மைல்கள் இடைவெளி இருக்கும். இல்லீங்களா. அதைப் பார்க்கும் போது உண்மையிலேயே மலைப்பு ஏற்படுகிறது.

இருப்பினும் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளைச் சான்றாக வைத்து தான் வரலாற்றைப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்த வகையில்  கடாரத்தின் எல்லை கெடாவில் மட்டும் தனித்துப் போகவில்லை. பேராக் மாநிலத்திலும் பரவி இருந்து இருக்கிறது. பேராக் தைப்பிங் வரையிலும் விழுதுகள் விட்டுப் போய் இருக்கிறது.

நம்ப முடிகிறதா. என்னைக் கேட்டால் கங்கா நகரமும் கடாரமும் ஒன்றாக இருந்து இருக்க வேண்டும். இல்லை என்றால் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளில் எப்படி பேராக் ஆற்றைப் பற்றிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு இருக்க முடியும். சொல்லுங்கள்.

இதைப் பற்றி மேலும் ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன். அதனால் இதோடு இதை நிறுத்திக் கொள்வோம்.

கடாரத்தை வென்ற பின்னர் இராஜேந்திர சோழனின் படைகள் மலாயா தென் பகுதிக்குப் பயணித்து இருக்கின்றன. அங்கே தான் மாயிருண்டகம் எனும் பேரரசு இருந்தது. இந்த மாயிருண்டகம் தான் கோத்தா கெலாங்கி. புரியுதுங்களா.

இந்தக் கட்டுரைத் தொடரில் 08.12.2018 சனிக்கிழமை வெளியான கட்டுரையில் மாயிருடிங்கம் என்று பதிவு செய்து இருக்கிறேன். எழுத்துப் பிழைகள் ஏற்பட்டு உள்ளன. படித்து இருப்பீர்கள். கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆங்கில வரலாற்றுப் பதிவுகளிலும் சரி; செஜாரா மெலாயு பதிவுகளிலும் சரி; மாயிருடிங்கம் என்றே பதிவு செய்து இருக்கிறார்கள். ஆக மாயிருடிங்கம் என்பதையே நானும் அப்படியே பதிவு செய்து விட்டேன். ஆனால் மாயிருடிங்கம் என்பதை மாயிருண்டகம் என்று தான் அழைக்க வேண்டும். சரிங்களா.

மாயிருண்டகம் எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். மா + இருண்டகம் என இரு சொற்கள் பிரிந்து வருவதைப் பார்க்கலாம். ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். ’இருண்டகம்’ என்றால் ’இருண்டு கிடக்கும் இடம்’ என்று பொருள்.
 

அந்தக் காலக் கட்டத்தில் மாயிருண்டகத்தில் மாபெரும் கோட்டை இருந்து இருக்கிறது. கரும் கற்பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டை. தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் போது கருமையாகக் காட்சி அளித்து இருக்கின்றது. அதை வைத்துத் தான் அந்த இடத்திற்கு மாயிருண்டகம் எனும் பெயர் வந்து இருக்கலாம்.

கோத்தா கெலாங்கியை லெங்குய் என்று சீன நாட்டவர் அழைத்து இருக்கிறார்கள். இராஜேந்திர சோழன் காலத்திற்கு முன்னரே; பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சீன நாட்டு வணிகர்கள் தென்னிந்தியாவில் வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள்.

அப்படிப் போகும் வழியில் கோத்தா கெலாங்கியைப் பார்த்து லெங்குய் என பெயர் வைத்து இருக்கிறார்கள். இப்போது அங்கே லிங்கி எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தான் லெங்குய் என்று மருவி உள்ளது.

லெங்குய் எனும் பெயர்தான் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளிலும் இடம் பெற்று உள்ளன. சீன நாட்டவர் பயன்படுத்திய அதே செங்குய் எனும் பெயரையே மெய்க்கீர்த்திகளிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Maayirudingam a big city in South Malaya with a fortress of blackstone (granite) known as 'Glang Gui' (Lenggui in corrupted form). The kingdom of Maayirudingam at that time was ruled by the king Chulaamanivarman.

மாயிருண்டகத்தைப் பற்றி மெய்க்கீர்த்திகள் என்ன சொல்கின்றன. அதையும் பார்ப்போம். ஒரு செருகல்.

இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகள் மட்டும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். மலேசிய இந்தியர்களின் வரலாற்றை எப்போதோ பொட்டலம் கட்டி போத்தல் கடையில் விற்று இருப்பார்கள். தெரியுதுங்களா. நாம் ஒன்றும் வாசிக்க முடியாது. ஒன்றுமே பேச முடியாத அளவிற்கு வாயைக் கட்டிப் போட்டு இருப்பார்கள். நல்ல வேளை. தப்பித்தோம். சரி. விசயத்திற்கு வருகிறேன்.

மாயிருண்டக அரசு. அதைச் சுற்றிலும் ஆழ்க் கடல்கள். நூற்றுக் கணக்கான வணிகக் கப்பல்கள். பச்சைக் காடுகள் மேவிய தீபகற்பத்தின் தென் பகுதியில் மாயிருண்டக அரசு மையம் கொண்டு இருந்தது.
 

மாயிருண்டகத்தின் தலைநகரம் லெங்குய். கருங்கற்களால் ஆன பெரிய ஒரு கோட்டை தலைநகரத்தைப் பாதுகாத்தது. அந்த நகரத்தின் வலது புறத்தில் ஒரு பெரிய ஆறு.

சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசிற்கு மாயிருண்டக அரசு அடிபணிந்து சேவை செய்து வந்தது. சூளாமணி வர்மன் என்பவர் அந்த அரசின் பேரரசராக இருந்தார்.

மறுபடியும் சொல்கிறேன். அந்த நகருக்கு கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை பாதுகாப்பு அரணாக வலிமை சேர்த்து இருக்கிறது. மாயிருண்டகப் பேரரசை ஆகக் கடைசியாக சூளாமணி வர்மன் என்பவர் ஆட்சி செய்து இருக்கிறார்.

இராஜேந்திர சோழனின் படைகள் வருவதை அறிந்த சூளாமணி வர்மன் தன்னுடைய படைகளை எல்லாம் ஒன்று திரட்டினார். இராஜேந்திர சோழன் வரும் பாதையை நோக்கி முன்னேறிச் சென்று இருக்கிறார். இருபது மைல்கள் கடந்ததும் இராஜேந்திர சோழனின் படைகளை எதிர்கொண்டார்.

யானையின் மீது ஏறி வந்த சூளாமணி வர்மன் சோழப் படைகளின் மீது தாக்குதல் நடத்தினார். இராஜேந்திர சோழனும் தன்னுடைய யானை மீது அமர்ந்தவாறு எதிர்த் தாக்குதல் செய்தார். இரு தரப்பிலும் நூற்றுக் கணக்கான பேர் இறந்து போனார்கள்.

அது ஒரு கசப்பான போர். இராஜேந்திர சோழன் கூர் அம்புகளால் சூளாமணி வர்மனைத் தாக்கினார். அதில் ஓர் அம்பு சூளாமணி வர்மன் மீது பாய்ந்தது. அவர் உடனடியாக இறந்து போனார். தலைவரை இழந்த மாயிருண்டகப் படைகள் மூலைக்கு ஒன்றாய்ச் சிதறி ஓடின.

அதன் பின்னர் சோழப் படைகள் தங்கு தடை இல்லாமல் கெலாங்கி கோட்டைக்குள் நுழைந்தன. கோட்டைக்குள் இருந்த அரண்மனைக் கதவுகளை உடைத்து உள்ளே சென்றன. மாயிருண்டகப் பேரரசின் செல்வங்களை எல்லாம் சூறையாடின. குவிந்து கிடந்த பொன்னும் மணியும்; பவளமும் வைரமும்; மாணிக்கமும் மரகதமும் சுத்தமாக வழித்து எடுக்கப் பட்டன.

(சான்று: இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி; கோர்வையின் முதல் தொகுப்பு; எண்: 66, பக்கம்: 98.)

பின்னர் மாயிருண்டகத்தின் அரசர் சூளாமணி வர்மனின் மகள் இளவரசி ஒனாங்கி (ஓனாங் கியூ) என்பவரை இராஜேந்திர சோழன் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இராஜேந்திர சோழனின் படைகள் கடல் வழியாகக் கடாரத்திற்குச் சென்றன.

(தொடரும்)

சான்றுகள்

1. Copper Plates of Rajendra Chola - 1 of Thiribhuwanamadevi Chathurvedimangalam in Thanjavur, Tamil Nadu. Tamil Polil - Vol 33 (1957)

2. Inscription of Rajendra Chola - 1 in the inner sanctum of Koneriswarer Temple at Agatheeswarem in Kanyakumari district, Tamil Nadu, India. Kanyakumari Inscriptions - edited by Nadana Kasinathan, Part 1, No 1968/120

3. Inscription of Rajathiraja Chola - 1 at Thiruvenkadu temple in Thanjavur district, Tamil Nadu.
Annual Report in Epigraphy (Madra) b- 1918, No.450

4. Kalingaththu Parani - by Jeyamkondaar, edited by Puliyuur Kesikan, chapter 8, page 104.

5. Inscription of Airlangga from Kamalaggan in East- Java - Oud-Javaansche Ookonden - Nagelaten Transscripties, van wijlen Dr. J.L.Brandes, Uitgegeven door Dr. N.J.Krom - page 120.

6. The Nagapattinam and other Buddhist Bronzes in the Madras Museum - by T.N. Ramachandran, Joint Director-General of Archaeology, India, Page 124 & 92 - Bulletin of the Madras Government Museum, Vol VII,

இன்றைய சிந்தனை 26.09.2019 - நிதர்சனமான சத்தியங்கள்

பூமத்திய ரேகைக்கு வடக்கே கடக ரேகை. தெற்கே மகர ரேகை. இரண்டு ரேகைக்கும் இடையில் ஒரு மழைக் காட்டு ரேகை. அதுதான் மலேசியா எனும் அழகிய பச்சைக் காட்டு வாகை. 


அங்கே பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து கிடக்கும் பசும் காடுகள். சரிகை போன்று சறுக்கி விழுந்து சலசலத்து ஓடும் நதிகள். மயில் இறகு போன்று நீராடும் நீர்நிலைக் காடுகள். நீல நயனங்களில் நிதர்சனமான சத்தியங்கள்.

இன்னும் சொன்னால் அத்தனையும் நயன விழிகளின் நயனதாராக்கள். ஒரு நிமிடம்... இஞ்சி இடுப்பழகி நயன்தாராக்கள் அல்ல. இளஞ்சிவப்பு நயனதாராக்கள். அதாவது நித்தியக் கல்யாணிகள். அதாவது நித்தியக் கல்யாணிக்கு இன்னொரு பெயர் நயனதாரா.

அழகிய அந்தப் பசுமைக் காட்டில் அழகு அழகான தாவரங்கள்; அரிதிலும் அரிதான பூச்சிப் புழுக்கள். அற்புதமான விலங்கு இனங்கள்; அதிசயமான பறவை இனங்கள்; அபூர்வமான  பச்சைப் பயிர்கள். இயற்கை அன்னையே ஆசைப்படும் ரம்மியமான பாரிஜாதக் கோலங்கள். சரி.

முன்பு காலத்தில் மலேசியாவில் இரண்டே இரண்டு பருவ காலங்கள் தான். ஒன்று மழைக் காலம். இன்னொன்று கோடைக் காலம். அப்படி இருந்த பூமியில் இப்போது எல்லாம் அப்படி இல்லீங்க. நான்கு பருவ காலங்களாகி விட்டன.

1. மழைக்காலம்

2. டெங்கி காலம்

3. புகைக் காலம்

4. டுரியான் காலம்.

இப்போது  அப்படித் தான் போய் கொண்டு இருக்கிறது. வேறு எப்படி சொல்வதாம். சமூக ஊடகங்களில் கிண்டல் அடிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது.

நாம் என்ன செய்யலாம். எங்கேயாவது எப்படியாவது ஒரு மரத்தை நட்டு வைக்கலாமே... கிண்டல் கேலி செய்வதை விட்டுவிட்டு... அட் லீஸ்ட்... ஒரு செடியையாவது நட்டு வைத்து அழகு பார்க்கலாமே... கொஞ்சம் புண்ணியம் சேர்க்கலாமே...


பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்



Sathya Raman: "நீல நயனங்களில் நிதர்சனமான சத்தியங்கள்" சிறுகதை, தொடர் கதைக்கு மிகப் பொருத்தமான தலைப்பு சார். இயற்கையைப் பற்றி ஒரு கவிஞன் கணக்காய் வர்ணித்த விதம் அட, அட, அட...  அருமை, அருமை சார். மனிதர்கள் இந்த இயற்கைக்கு எதிராகச் செய்யும் சேட்டைகள் அது திரும்ப மானிடனுக்கே கேடாய் வந்து சேரும் என்பதைப் பல சமயம் மறந்து வருகிறோம்.

மேகங்கள் கடுமையாக மூடிக் கொண்டிருக்கும் போது சூரியனே பிரகாசிக்க முடியாது. இயற்கைக்கே இந்த கதி என்றால் மனிதர்களால் ஏற்படுத்தப் படும் மாசுக்கு எத்தகைய வீரியம் இருக்கும்.

எனவே செடி வளர்ப்போம், மரங்களையும், நமது அற்பதமான காடுகளையும் காப்போம். காடுகளை அழிவதிலிருந்து காப்பதை ஒவ்வொரு மானுடனும் தன் மானம் காப்பதை போல் சற்று கவனமாகக் கையாளுவானால் இயற்கை பேரழிவிலிருந்து கொஞ்சமாவது தப்பும் என்று நம்புவோம்.


Muthukrishnan Ipoh: நீல நயனங்கள் எனும் சொல் தொடர் எனக்கும் மிகவும் பிடித்தது. முதன்முதலில் 1976-இல் நீல நயனங்கள் எனும் தலைப்பில் ஒரு நாவல் எழுதினேன். அதில் ஒரு நூல்கூட என்னிடம் இப்போது இல்லை. தேடிக் கொண்டு இருக்கிறேன். விடுங்கள்.

இயற்கைக் கட்சிகள்... மன்னிக்கவும் காட்சிகள்... எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் பச்சை நிறங்கள்... நான் நிறைய சுவர் ஓவியங்கள் வரைந்து இருக்கிறேன். அவற்றில் பச்சை மரக்காடுகள் நிறையவே இருக்கும்...

இயற்கையை நேசிப்போம்... இயற்கையோடு இணைவோம்... இயற்கையோடு வாழ்வோம்...


Muthukrishnan Ipoh: உங்கள் பதிவை என் வலைத் தளத்தில் இணைத்துக் கொள்கிறேன் சகோதரி...

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: வணக்கம் சார். நிறங்களில் முதலில் பார்போரை ஈர்க்கும் நிறமே இந்த பச்சை நிறம்தான். இது இயற்கையைச் சார்ந்து இருப்பதாலோ அல்லது வண்ணங்களின் இயல்பினாலோவோ இருக்கலாம்.

எழுத்தாளர் பணியையும் தாண்டி ஓவியராகவும் இருந்து உள்ளீர்கள். மகிழ்ச்சி சார். பிடித்த நிறம் பச்சை என்கிறீர்கள். இந்தப் பச்சை நிறத்தில் 460-க்கு மேல் ரகங்கள் இருக்கின்றன. இந்தத் தகவலை ஒரு புடவைக் கடையின் உரிமையாளர் என்னிடம் சொன்னது சார். இயற்கையை நம் சுவாசமாய் எண்ணிக் காத்து போற்றுவோம்.




25 செப்டம்பர் 2019

கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள்

(கோத்தா கெலாங்கி பற்றி வெளிவந்த முதல் தமிழ்க் கட்டுரை)
தினத்தந்தி - 25.01.2014

மலாயா தீபகற்பகத்தின் தென்கோடியில் ஜொகூர் மாநிலம். அங்கே கோத்தா திங்கி என்பது ஒரு புறநகர்ப் பகுதி. அதற்கு அப்பால் அடர்ந்த ஒரு மழைக் காடு. அந்தக் காட்டின் நட்ட நடு மையத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் அரச மரங்கள். அந்த மரங்களுக்கு எத்தனை மாமாங்க வயது என்பது யாருக்கும் தெரியாது.

Chola Inscription at Linggui River Bed
Photograph: Courtesy of Ganesan, Kota Gelanggi Researcher, Johor Baru


அந்த மரங்களைச் சுற்றிலும் பாழடைந்த கோட்டைச் சுவர்கள். ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி (Kota Gelanggi) என்கிற சாய்ந்த கோபுரங்கள். உலகப் புகழ் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைந்து போன வரலாற்றுச் சின்னங்கள்.

இப்படி ஓர் இந்திய சாம்ராஜ்யக் கோட்டைகள் அங்கே இருக்கின்றன என்பது மலேசியர்கள் பலருக்குத் தெரியாது. ஆனால் அந்தக் காட்டுப் பகுதியில் வாழ்ந்த ஓராங் அஸ்லி பூர்வீகக் குடிமக்களுக்குத் தெரியும். வேட்டைக்குப் போன அவர்களில் சிலருக்குக் கற்சிலைகள் கிடைத்து இருக்கின்றன.

அவற்றை எடுத்து வந்து விளையாட்டுப் பொருட்களாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அந்தப் பொருட்கள் எல்லாம் மாபெரும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைப் பொருட்கள். அது அவர்களுக்குத் தெரியவே தெரியாது.




2005-ஆம் ஆண்டில் தான் இந்த அதிசயம் வெளி உலகத்திற்கே தெரிய வந்தது. மலேசியாவின் ‘தி ஸ்டார்’ நாளிதழ் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட்டு உலகத்தையே பிரமிக்க வைத்தது.

கோத்தா கெலாங்கி என்பது ஸ்ரீ விஜய பேரரசின் புரதானத் தலைநகரம் ஆகும். ஸ்ரீ விஜய என்பது இந்தோனேசியா, சுமத்திராவில் கி.பி. 650-இல் இருந்து கி.பி. 1377 வரை செல்வச் செழிப்புடன் களை கட்டிய மாபெரும் சாம்ராஜ்யம்.

வியாபாரம் செய்ய சீனா நாட்டு வணிகர்கள் அங்கே போய் இருக்கிறார்கள். நீண்ட காலமாக அராபிய வணிகர்களும் தொடர்புகளை வைத்து இருக்கிறார்கள். உள்நாட்டு வணிகர்களும் பண்டமாற்று வியாபாரம் செய்து இருக்கிறார்கள். பூகிஸ் மக்களும் வணிகம் செய்து இருக்கிறார்கள்.

ஸ்ரீ விஜய பேரரசு என்பது அந்தக் காலத்தில் சுமத்திராவை ஆட்சி செய்த ஒரு மாபெரும் பேரரசு ஆகும். இந்த ஸ்ரீ விஜய பேரரசின் கிளை அரசாங்கங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் கோலோச்சி உச்சம் பார்த்தவை.



கோத்தா கெலிங்கி கோட்டை புதைந்து இருக்கும் குன்றுப் பகுதி

பேராக் புருவாஸ், பீடோர் பகுதிகளில் கங்கா நகரம் (Gangga Negara); கெடாவில் கடாரப் பள்ளத்தாக்கு (Bujang Valley); கோத்தா கெலாங்கி புரதான நகரம்; பகாங் சமவெளி நகரம். இப்படி நிறைய நகரங்கள் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்து இருக்கின்றன.

மறுபடியும் சொல்கிறேன். கோத்தா கெலாங்கியைச் சுற்றிலும் அடர்ந்த காடுகள். இங்கே தான் லிங்கியூ நீர்த்தேக்கம் இருக்கிறது (Linggiu Reservoir by the Public Utilities Board (PUB) of Singapore).

அருகில் சுங்கை மாடேக், சுங்கை லிங்கியூ ஆறுகள் ஓடுகின்றன. சிங்கப்பூருக்குத் தேவையான குடிநீர் இங்கே இருந்துதான் அந்தக் குடியரசிற்குப் போகிறது.

*ரேய்மி செ ரோஸ்*

கோத்தா கெலாங்கி நிலப் பகுதிகள் ஜொகூர் மாநிலத்திற்குச் சொந்தமானவை. 140 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இருப்பினும் அந்த நீர்த் தேக்கத்தையும் அதைச் சுற்றி உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் தான் இன்று வரை பரமாரித்து வருகின்றது. பராமரிப்பிற்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது.



Raimy pointing to an unusual square earthern platform 
which was discovered along the pathway leading 
into the reported site of the lost city of Kota Gelanggi.
(Source: https://www.thestar.com.my/news/nation/2005/02/03/manuscript-leads-to-lost-city,)
(Thursday, 03 Feb 2005)

சிங்கப்பூர் அரசு ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால் ஜொகூர் அரசுடன் ஒரு குடிநீர் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஜொகூர் மாநில அரசாங்கத்தின் அனுமதியுடன் தன் பாதுகாப்பிற்காகச் சின்ன ஒரு சிங்கப்பூர் பிரதேச இராணுவத்தையும் அந்த லிங்கியூ காட்டுக்குள் தயார் நிலையில் வைத்து இருக்கிறது.

இன்னும் ஒரு தகவல். சிங்கப்பூர் பிரதேச இராணுவத்தின் ஒரு குழு மலேசிய மண்ணில் இருப்பது பலருக்கும் தெரியாத தகவல் ஆகும். இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

ரேய்மி செ ரோஸ் (Raimy Che-Ross) என்பவர் ஒரு மலேசிய வரலாற்று ஆய்வாளர். பன்னிரண்டு ஆண்டுகள் உலகம் பூராவும் சுற்றி கோத்தா கெலாங்கியைப் பற்றிய ஆதாரங்களைத் திரட்டினார். விமானத்தின் மூலமாக வான்படங்களையும் கிடைக்கப் பெற்றார். விண்வெளிப் படங்களும் கிடைத்தன.




(The Lost city of Kota Gelanggi was detected by satelite maps which confirms the existence of these structures and visible on site. "MACRES" or Malaysian Centre for Remote Sensing revealed this. This structure apparently matches with the aerial photographs taken by a Canberra based independent researcher, Raimy Che Ross. The satelite image proves that these structures are even larger than earlier presumed. Raimy believes he has found the lost city of Kota Gelanggi.)

(Source: http://mystiquearth.blogspot.my/2009/06/lost-city-of-kota-gelanggi.html)



The Star newspaper reported that a lost city of the Sri Vijaya Empire was found by a local researcher Raimy Che-Ross. Raimy’s findings were published in the Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 2004.

மெக்ரெஸ் (MACRES) என்பது ஒரு தொழிநுட்ப அமைப்பு. அந்த அமைப்பை மலேசிய தொலைத் தொடர் உணர்வு மையம் என்று சொல்வார்கள். (Malaysian Centre for Remote Sensing). இந்த மையத்தின் மூலமாகவும் விண்வெளிப் படங்கள் கிடைத்து உள்ளன.

கடைசியில் ரேய்மி செ ரோஸ் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். கோத்தா கெலாங்கி என்பது ஓர் இந்திய சாம்ராஜ்யம். காலத்தால் மறைந்து போன சாம்ராஜ்யம். ஸ்ரீ விஜய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த சாம்ராஜ்யம்.

அந்த சாம்ராஜ்யத்தைப் பற்றி வெளியுலகத்திற்குத் தெரியப் படுத்த வேண்டும் என்றார். எல்லா மலேசிய நாளிதழ்களுக்கும் தெரிய படுத்தினார். நாளிதழ்கள் பக்கம் பக்கமாய் செய்திகளை வெளியிட்டன.

*கோத்தா கெலாங்கி இரகசியங்கள்*


மலேசிய அரசாங்கத்திடமும் கோத்தா கெலாங்கி தொடர்பான சான்றுகளை முன்வைத்தார். சீரமைப்புப் பணிகளுக்கு நிறைய செலவாகும். ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மேல் தரப்பில் சொல்லப் பட்டது.

Kota Gelanggi is an archaeological site reported in 2005 as potentially the first capital of the ancient Empire of Srivijaya and dating to around 650–900 and one of the oldest Kingdoms on South East Asia's Malay Peninsula.

Conclusive Finding?

On April 28th 2006, the Malaysian National News Service (Bernama) reported that the "Lost City does not exist".

Khalid Syed Ali, the Curator of Archaeology in the Department's Research and Development Division, said a team of government appointed researchers carried out a study over a month in July last year [2005] but found no trace of the "Lost City".

However, Khalid later added that 'the Heritage Department (Jabatan Warisan) does not categorically deny that it exists, only that research carried out until now [over the month of July] has not shown any proof that can verify the existence of the ancient city of Linggiu [sic]' (Azahari Ibrahim, 'Kota Purba Linggiu: Antara Realiti dan Ilusi', Sejarah Malaysia, July-August 2006, p.37).

When pressed for details, he revealed that Che-Ross was not involved in the museum's search team for the lost city.

சொல்லிப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இன்னும்தான் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள். சோறு இன்னும் வேகவில்லையாம். செத்துப் போன எலியின் நாற்றம் அடிக்கிறது.

கோத்தா கெலாங்கி விவகாரத்தை ஏன் இப்படி ஆறப் போட்டு ஊறப் போட்டு காயப் போட்டு கிடப்பில் போடுகிறார்களோ… யாம் அறியேன் பராபரமே! இறைவா!!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)







இன்றைய சிந்தனை 25.09.2019 - வீரத் தமிழ்ப் பெண்கள்

இன்றையக் காலக் கட்டத்தில் பெண்களில் முன்னேற்றம் இமயம் பார்க்கின்றது. அந்த வகையில் பெண்ணின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு நாடு தான், இப்போதைக்கு இந்த உலகில் உயர்ந்து உச்சம் பார்க்கிறது.

ஆண்களுக்குச் சமமாக... மன்னிக்கவும்... ஆண்களை விட அதிகமாகவே முன்னேறியும் வருகின்றார்கள். அது மட்டும் அல்ல. பெண்களைப் பார்த்து ஆண்களே பொறாமைப் படும் அளவிற்கு ஒரு நவீன மயத்தில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் பொறாமை தான். மன்னிக்கவும். ரொம்பவும் இல்லை.


புராண காலத்தில் காரைக்கால் அம்மையார், நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகள். இவர்களை மறக்க முடியுமா.

சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி... இவர்களை மறக்க முடியுமா.

சங்க காலத்தில் ஒளவையார், காவல் பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக் குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கை பாடினியார், நச்செள்ளையார்... இவர்களை மறக்க முடியுமா.

போர்க்களத்து வீர மங்கையர்கள்... இராணி மங்கம்மாள்; ஜான்சிராணி; சிவகங்கை வேலு நாச்சியார்; ராணி சென்னம்மா; தில்லையாடி வள்ளியம்மை; சரோஜினி நாயுடு; கோதை நாயகி அம்மாள்; கேப்டன் லெட்சுமி; டத்தின் ஆதி நாகப்பன்; சிபில் கார்த்திகேசு; இவர்களை மறக்க முடியுமா?

பெண்கள் பல்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். கொடி கட்டிப் பறக்கின்றார்கள். பெருமையாக உள்ளது. பெண்களால் நாட்டிற்கும் பெருமை; வீட்டிற்கும் பெருமை.

நாட்டை ஆட்சி செய்வதற்கு ஓர் அரசர் வேண்டும். அதைப் போல ஒரு வீட்டை ஆட்சி செய்வதற்கு ஒரு பெண் வேண்டும். இதை எவராலும் மறுக்க முடியாது.

பெண்கள் இல்லாமல் இந்தக் காலத்து ஆண்களுக்கு ரொம்பவும் சிரமம்... ரொம்பவும் சிக்கல். இதையும் ஆண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆக... பெண் உரிமையைக் காப்போம். பெண்ணியத்தைக் காப்போம். பெண் இனத்தைப் போற்றுவோம்.

ஓர் ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மறக்காமல் இருந்தால் சரி. அதே சமயத்தில் பெண்களை ரொம்பவும் புகழ்ந்து விட்டதாக ஆண்கள் என்னிடம் சண்டைக்கு வராமல் இருந்தாலும் சரி. இன்னும் ஒரு விசயம்.

பெண்களைப் புகழ்ந்தால் தான் ஆண்கள் காரியத்தைச் சாதிக்க முடியும். ஆண்களே அதை நினைவில் கொள்ளுங்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சரிங்களா.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.09.2019