15 நவம்பர் 2019

ஆலயங்களில் அரசியல் வேண்டாம் - சிவநேசன்

தமிழ் மலர் - 15.11.2019

ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தினர் அண்மையில்  காவடிச் சிந்து இசைக் கச்சேரி நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சி ஈப்போ, ஜாலான் தம்பூனில் உள்ள பேராக் மாநிலக் கலை கலாசார அரங்கத்தில், இசைச் செல்வர் ஐதராபாத் பா.சிவா அவர்களின் இசைத் தலைமையில் நடைபெற்றது. மிகச் சிறப்பான இசை நிகழ்ச்சி. முன்னூறுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.




அதற்குத் தலைமை தாங்கிய பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன், ஆலயங்களில் அரசியல் வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில் ’என் தொகுதியில் ஒரு கோயிலின் தலைவர் ஓர் அரசியல் கட்சியின் தலைவர். இவர் ஒவ்வொரு நாளும் அந்த ஆலயத்திற்குப் போகிறார். தெய்வத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார். பின்னர் அதே ஆலயத்தில் அரசியல் கூட்டம் நடத்துகிறார். இப்படிப்பட்ட இவருக்கு அரசாங்கம் மானியம் கொடுக்க வேண்டுமா? கொடுக்கா விட்டால் தவறா? இதற்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.




ஆலயத்தில் வழிபாடுகள் மட்டுமே நடக்க வேண்டும் என்று மாண்புமிகு சிவநேசன் வலியுறுத்தினார்.

காவடிச் சிந்து இசைக் கச்சேரி நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து சிறப்பித்தனர். பெர்காசோ தலைமை அதிகாரி வாசு; ஈப்போ பாராட் ஜ.செ.க. கிளைத் தலைவர் சேகரன்; பேராசிரியர் டாக்டர் முனியாண்டி; சாய் கிருஷ்ணன் போன்றோர் கலந்து கொண்டனர். மலேசிய மேடை புகழ் விக்னேஸ்வரி நிகழ்ச்சியை இனிய தமிழில் இனிதாய் நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்தியக் கலாசார நடனம் கலைமிகு நாட்டியமாக அமைந்தது. மிகச் சிறப்பான கலா நடனம். அந்த இசை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது. 




மகப்பேறு மருத்துவரும்; சமயப் பற்றாளருமான டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். காவடி என்பதற்கான அவரின் சொல் விளக்கம் அரங்கத்தில் கூடிய பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.

கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. காவடி என்பது முருக பக்தர்கள், முருகப் பெருமானுக்கு செலுத்தும் நேர்த்திக் கடன் என்று காவடிக்குச் சிறப்பாக விளக்கம் அளித்தார்.





பிரபாகரன் - தியான் சுவா சதுரங்க நாடகம்

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு சதுரங்க நாடகம் அரங்கேற்றம் காண்கிறது. ஓர் இந்தியர் ஓரங்கட்டப் படுவதற்கான நாடக ஒத்திகைகள் தொடங்கி இருப்பதற்கான அறிகுறிகள் தெரிய வருகின்றன. 



பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரபாகரன், பதவி விலக வேண்டும் என்று 14 அரசு சாரா இயக்கங்கள் அண்மையில் கோரிக்கை வைத்து உள்ளன. அந்தக் கோரிக்கையில் இருந்து தான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

முன்னாள் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்கு பிராபகரன் அவர்கள் வழிவிட்டுப் பதவி விலக வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. தியான் சுவா மீண்டும் போட்டியிடுவதற்கு வழி வகுக்கும் வகையில் அந்தக் கோரிக்கை அமைகின்றது.




இருந்தாலும் இந்தக் கோரிக்கை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என தியான் சுவா கூறி இருக்கிறார். பத்திரிகைச் செய்திகள் வழியாகத் தான் நான் இதனைத் தெரிந்து கொண்டேன். இந்த விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என பி.கே.ஆர். உதவித் தலைவருமான தியான் சுவா சொல்லி இருக்கிறார்.

என்னைக் கேட்டால் நெருப்பு இல்லாமல் புகை வராது. ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறேன்.

அப்படியே இருந்தாலும் அந்த 14 அரசு சாரா இயக்கங்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஓர் அரசியல் நாடக ஒத்திகையில் குட்டையைப் குழப்பும் காட்சி வருவது போல தெரிகிறது.




பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப் பட்டவர் பிரபாகரன். ஒரு தமிழர், ஓர் இளைஞர். அவர் 2018-அம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ஒரு சுயேட்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அவருடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், பி.கே.ஆர்.  கட்சி அவரைத் தன் பக்கம் ஈர்த்தது. தேர்தலில் வெற்றி பெற்றார். மலேசிய வரலாற்றில் மிக இளமையான நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பெருமையையும் பெற்றார். இதை முதலில் நினைவில் கொள்வோம்.

நடந்து முடிந்த அந்த 14-வது பொதுத் தேர்தலில் மலேசிய அரசியல் அதுவரையில் சந்திக்காத ஓர் அதிசயம் நடந்தது. 




பத்து நாடாளுமன்றத் தொகுதி எப்போதுமே எதிர்க் கட்சிகளின் கோட்டையாக விளங்கி வந்த இடம். அந்தத் தொகுதியை 2008 ஆண்டு முதல் பி.கே.ஆர். கட்சியின் தியான் சுவா தான் கச்சிதமாகத் தற்காத்து வந்து இருக்கிறார். 

ஆனால் கடந்த 14-ஆவது பொதுத் தேர்தல் (2018) சமயத்தில் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டது. அவர் மீது இருந்த வழக்கு ஒன்றில் விதிக்கப்பட்ட 2000 ரிங்கிட் அபராதம் காரணமாக வேட்புமனு நிராகரிப்பு.

தேசிய முன்னணியின் சார்பில் டொமினிக் லாவ் போட்டியிட்டார். இவர் வெற்றி பெற்று விடுவார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.

அதனால் நம்பிக்கைக் கூட்டணியின் பார்வை சுயேச்சை வேட்பாளர்களின் பக்கம் திரும்பியது. சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவராகப் பிரபாகரன் வேட்பு மனுத் தாக்கல் செய்து இருந்தார். சொல்லி இருக்கிறேன்.




அப்போது அவருக்கு வயது 23. செந்தூல் வட்டாரத்து மண்ணின் மைந்தன். அவருடன் தியான் சுவா பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின்னர் நம்பிக்கைக் கூட்டணி அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கியது.

இதில் இன்னும் ஒரு பெரிய விசயம் என்ன தெரியுங்களா. ஒரு கூட்டத்தில் துன் மகாதீர் அவர்களே மேடையில் பிரபாகரனை அறிமுகப் படுத்தினார். நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவைத் தெரிவித்தார். அதன் விளைவு மலேசியர்களே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.

பத்து தொகுதி பல்லின கலப்பு வாக்காளர்களைக் கொண்ட தொகுதி.  சுயேச்சை வேட்பாளராக நின்ற பிரபாகரன் 38,125 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். தேசிய முன்னணியின் கெராக்கான் டோமினிக் லாவ் என்பவரைவிட 24,438 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி.

ஆக அவரை எதிர்த்து நின்ற கெராக்கான், பாஸ் கட்சிகள் இரண்டும் சேர்ந்தே 24,297 வாக்குகள் தான் பெற்றன. மலேசிய அரசியல் வரலாறு இதுவரை காணாத ஓர் அதிசயம். அதன் பின்னர் பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக பி.கே.ஆர். கட்சியில் இணைந்தார். 




இன்றைய இளைஞர்களில் பிரபாகரன் வயதைச் சேர்ந்த பெரும்பாலோர் கைப்பேசியும் கையுமாகக் காதலியுடன் கைகோர்த்து ஊர்க்கோலம் போய்க் கொண்டு இருக்கும் இளமைக் காலப் பருவத்தில் பிரபாகரன்…

ஆனால் இவரோ ஒரு மாண்புமிகு இளைஞராக நாடாளுமன்றத்தில் வீரவசனம் பேசிக் கொண்டு இருக்கிறார்.

பிரபாகரன், செந்தூல் ஸ்ரீதண்டாயுதபாணி பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பின்னர் மேக்ஸ்வெல் இடைநிலைப் பள்ளியில் தன் மேல்படிப்பை மேற்கொண்டார். சரி.

அரசியல் என்பது வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் அல்ல. இளைஞர்களுக்கும் தான் என்று மலேசியர்களை மலைக்கச் செய்தவர் இந்தப் பிரபாகரன். அந்த இளைஞரின் துணிச்சலையும் துடிப்பையும் நாம் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். போற்ற வேண்டும். புகழ வேண்டும்.




அப்படி வரலாறு படைத்த ஓர் இளைஞரின் அரசியல் இப்போது வேறு மாதிரியான ஒரு கோணத்தில் பயணிக்கும் போது மலேசிய மக்களிடம் ஆதங்கம் ஏற்பட்டு உள்ளது. நியாயமான ஆதங்கம்.

இப்போது அதே அந்த பிராபகரன் அவர்கள், தியான் சுவாவிற்கு வழிவிட்டு பதவி விலக வேண்டும் என்பது மலேசிய இந்தியர்களுக்கு நியாயமாகத் தெரியவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஓர் அரசியல் நாடக ஒத்திகை போல தெரிகிறது.

தியான் சுவா மீண்டும் போட்டியிடுவதற்கு வழி வகுக்கும் வகையில் பிரபாகரன் பதவி விலக வேண்டும் என்று 14 அரசு சாரா இயக்கங்கள் அண்மையில் கோரிக்கை வைத்து உள்ளன. 




அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, பொது மக்கள் உண்மையிலேயே வியர்த்து விக்கித்துப் போகிறார்கள். அரசியலில் என்ன என்னவோ நடக்கும் என்பார்கள். ஆட்டைக் கடித்து ஆட்டை போடுவது நடக்கும். மாட்டைக் கட்டித்து மல்லுக்கு நிற்பது நடக்கும். அந்த வகையில் பற்பல தில்லாலங்கடிகள் நிறைந்த கூடாரம் தான் அரசியல்.

ஆனால் இப்போது இங்கே ஓர் இந்திய இளைஞர் ஒரம் கட்டப் படுகிறார். அவரை ஓர் அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை. மலேசிய இந்தியச் சமூகத்தின் பிரதிநிதிகளில் ஒருவராகத் தான் பார்க்கிறேன்.

இன்றைய பத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரபாகரன் அன்றைய தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகத் தான் களம் இறங்கினார். அதை நாம் மறந்து விடக்கூடாது.

அதனால் தான் சொல்கிறேன். இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பிரபாகரனைப் பதவி விலகச் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத; ஜீரணிக்க முடியாத விசயம். 




தியான் சுவாவிற்கு வழி விடுவதே உத்தமம் என்று ஒரு காரணம் சொல்லி பிரபாகரனைப் போகச் சொல்கிறார்கள்.

இப்படியே ஒவ்வொரு தமிழரையும்; மலேசியாவில் உள்ள ஒவ்வோர் இந்தியரையும் நாமே வீழ்த்த நினைத்தோம் என்றால் எதிர்காலத்தில் நமது பிரதிநிதித்துவம் அரசாங்கத்திலும் இருக்காது. எதிர்க் கட்சியிலும் இருக்காது. கடைசியில் நமக்கு அடையாளம் இல்லாமலேயே போய் விடலாம். நடக்க்க கூடிய எதார்த்தமான உண்மை.

பிரபாகரனைப் பதவி விலகச் சொல்கிறார்கள். சரி. அப்படியே தேசிய முன்னணி வெற்றி பெற்று இருந்தால் என்ன செய்வார்களாம்.

இடைத் தேர்தல் வேறு எங்கு வந்தாலும் தியான் சுவா அங்கே போய் போட்டியிடலாமே. இவர் ஆளும் கட்சியில் உள்ளவர். அவர் விரும்பினால் அவர் சேவை செய்ய ஆயிரம் ஆயிரம் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

ரொம்ப வேண்டாம். இன்னும் மூன்று ஆண்டுகள் பொறுத்துக் கொள்ளலாமே. அதற்குள் அப்படி என்ன ரொம்ப அவசரம். அதுவும் ஓர் இந்தியரை வலுக்கட்டாயமாக வெளியாக்கிவிட்டு அந்த இடத்தில் தான் இவர் போய் போட்டிப் போட வேண்டுமா. 




ஓர் இந்திய இளைஞரை இழப்பதை நாம் விரும்பவில்லை. தற்சமயம் நாட்டில் நிலவி வரும் அரசியல் நிலையற்றத் தன்மைகளைப் பார்க்கும் போது எதிர்கால அரசியலில் இந்தியர்களின் நிலைமை கேள்விக் குறியாகி அந்தரத்தில் தொங்கத் தொடங்கி விட்டது. இப்போதே இந்தியர்கள் ஓரங்கட்டப் படுவது போல ஒரு சந்தேகமும் ஏற்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற, சட்டமன்ற இந்தியர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து வருவதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது.

கேமரன் மலை தொகுதியில் டத்தோ சிவராஜ் பதவி இழக்க நேர்ந்தது. இடைத் தேர்தலில் போட்டியிட ம.இ.கா.விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் ஜொகூர் தங்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற ம.சீ.ச. வேட்பாளருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.




நெகிரி செம்பிலானில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கெஅடிலான் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தன் கட்சித் தலைவருக்காகத் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுத்தார். தெரியும் தானே.

இன்று பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அரசு சாரா இயக்கங்கள் குரல் எழுப்பி உள்ளன.

தியான் சுவாவின் சேவை அவசரமாகத் தேவை என்றால் அதற்கும் வழி இருக்கிறது. தியான் சுவாவிற்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி வழங்கலாம். அவருடைய சேவைகளைப் அந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளலாமே.


இப்போது பதவியில் இருக்கும் ஒருவரை அதுவும் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட மலேசிய இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை விலகச் சொல்வது நியாயமும் அல்ல. அரசியல் சாணக்கியமும் அல்ல.

இதற்கு இடையில் சாய் ராஜேந்திரன் எனும் அன்பர் சொல்கிறார்: பிரபாகரனுக்கு விழுந்த ஓட்டுகள் அவருக்காகப் போடப் பட்டவை அல்ல. பி.கே.ஆர். கட்சிக்காக போடப்பட்ட ஓட்டுகள். பிரபாகரன் விட்டுக் கொடுத்துத் தான் ஆக வேண்டும். அரசியல் தெளிவு எதுவும் இல்லாமல் தியான் சுவாவைக் குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என்கிறார்.

என்னைக் கேட்டால் வேறு மாதிரி சொல்வேன். தப்பாக நினைக்க வேண்டாம். ஒரு மயிலைக் கொன்று தான் அதன் இறகுகளைப் பிடுங்க வேண்டுமா.

மற்ற இனத்தவர்கள் பெரும்பான்மை கொண்ட இடங்கள் எத்தனையோ உள்ளன. அந்த இடங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லையா.

அப்படியே அந்த இடங்கள் கிடைக்காது என்றால் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா. ரொம்ப அவசரம் என்றால் தியான் சுவாவை ஒரு செனட்டராக்க வேண்டியது தானே. ஓர் இந்தியரின் சோற்றுத் தட்டைப் பிடுங்கித் தான் மற்றவருக்குக் கொடுக்க வேண்டுமா.

பேஸ்புக் ஊடகத்தில் அன்பர்கள் பலர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து உள்ளனர். அவர்களின் கருத்துகளையும் பதிவு செய்கிறேன்.

தென்னரசு சின்னையா: நம்மை சீண்டுவதே வேலையாகி விட்டது. மக்களின் தீர்ப்பு இது. எவருடைய சுயநலத்திற்காகவும் விட்டுக் கொடுக்க இயலாது. இது தனிமனிதனுக்கான பதவியோ மதிப்போ இல்லை. இந்த நாட்டு தமிழர்களின் தன்மானம்... மரியாதை.

செல்வமணி: பலிகடா என்றால் இளிச்சவாயன் தமிழனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

வருசை ஒமார்: என்ன செய்வது தம்பி. சில சமயங்களில் பணத்தின் குரல் ஓங்கி ஒலிக்குதே! கொள்கையாவது புடலங்காயாவது! தமிழன் தான் இளிச்சவாயன். முன்பு நெகிரி செம்பிலானில் ஒரு தமிழர் எம்.பி.யைப் பலி கொடுத்தோம். இப்போது பத்து எம்.பி. பிரபாகரனா?

லெட்சுமணன் நடேசன்: மாண்புமிகு பிரபாகரன் மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர். அவரைப் பதவித் துறக்கச் சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை. இது மக்களின் தீர்ப்பு.

அம்மணி அய்யாவு: அந்த அரசு சாரா இயக்கங்கள் யாவை? விபரம் தேவை.

கோடீஸ்வரன்: இது நடக்காது என்பது நமக்குத் தெரியும். தியான் சுவா அந்த அளவுக்கு மனிதர் அல்ல. இதன் பின்னால் எவரோ ஒருவர் ஒளிந்து கொண்டு இருக்கிறார்!

அரசி ரவி பரமசிவம்: பிரபாகரன் எதற்கு அடிபணிந்து போக வேண்டும்?

கோபிநாதன் குப்பன்: அப்போது பிரபாகரனைத் தேடிப் போனது இந்தக் கூட்டம். இப்போது வேண்டாமோ? அருமையான ஒரு நாடகம்பா இது...

சிந்திப்போம் சற்று சிந்திப்போம். ஒரு காலக் கட்டத்தில் மலேசியாவில் இந்தியர்களை எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது கிள்ளுக்கீரையாகக் கிள்ளி எடுக்கும் காலத்திற்குள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

கொட்டக் கொட்ட குனிபவரும் மடையர்; குனியக் குனியக் கொட்டுபவரும் மடையர்.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Thennarasu Sinniah: நம்மைச் சீண்டுவதே வேலையாகி விட்டது... மக்களின் தீர்ப்பு இது. எவருடைய சுயநலத்திற்காகவும் விட்டுக் கொடுக்க இயலாது. இது தனிமனிதனுக்கான பதவியோ மதிப்போ இல்லை. இந்த நாட்டுத் தமிழர்களின் தன்மானம். மரியாதை.


Dorairaj Karupiah >>> Thennarasu Sinniah: நண்பரே உங்கள் கருத்து அருமை...  ஆம். இது தனி மனிதனுக்கான பதவி இல்லை... தமிழர்களின் தன்மானம்... மரியாதை... உரிமையும் கூட...


Murugan Sivam: பிரபா தன் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்... பணம் பேசினால் ஒன்றும் பண்ண முடியாது... ஆனால் PH சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்கள் தோற்பது திண்ணம்...Tg. Piai இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் என்று எதிர்பார்போம்... நாளை 16.11.2019... 8 pm முடிவு தெரிய வரும்...


Varusai Omar: முத்து, எனது நேற்றைய F.B பதிவைக் காணுங்கள் நண்பா!PKR/PH அரசியல்வாதிகளுக்குத் தமிழன் தான் இளிச்சவாயன். முன்பு ஒரு தமிழ் MPயை பலி கொடுத்தானுங்க! இப்போது பத்து MP பிரபாகரனா? நேற்றைய பதிவில் மிக கடும் சொற்களைப் பதிவிட்டேன். இன்று? இன்னும் சுடு சொற்கள் வேண்டாம் நண்பா!


Siva Thangarasu Praba: இந்தப் பதவி இன்னும் 3 வருடம் தான். எதைச் செய்தால் அரசியலில் தொடர்ந்து இருக்க முடியும். வாய்ப்பு உள்ள பொழுதே பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இங்கே வெட்டியாகச் சிலர் பேசிக் கொண்டு இருப்பார்கள். இவர்களிடம் தொகுதி மக்களுக்கு உதவி செய்ய 500 வெள்ளி கேட்டுப் பாருங்கள். காணாமல் போய் விடுவார்கள். அதிர்ஷ்டம் ஓரு முறை தான் கதவைத் தட்டும்.


Letchumanan Nadason மாண்புமிகு பிரபாகரன் மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர். அவரைப் பதவித் துறக்கச் சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை. இது மக்களின் தீர்ப்பு.


Pushpalata Ramasamy: அந்த அரசு இயக்கங்களின் விபரங்களைப் பதிவிடுக


Muthukrishnan Ipoh: நியாயமான கோரிக்கை...


Muthukrishnan Ipoh: கருத்துகள் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி...


Ramala Pillai: ஆபத்து நேரத்தில் வந்து உதவியவருக்கு தியான் சுவா நன்றி உணர்வு உள்ளவராக இருப்பார் என்று நம்புகிறோம். ஒரு தவணை என்பது ஐந்து ஆண்டுகள். ஒரு தவணை பூர்த்தி ஆனவுடன் அந்தத் தொகுதி மக்களுக்கு தான் முழுமையான சேவை செய்த மன நிறைவுடன் பிரபாகரனே ஒதுங்கி கொள்ளப் போகிறார்.

அப்படி “PKR” கட்சி அவரின் சேவையின் அடிப்படையில் அவருக்கு வேறொரு தொகுதி வழங்குமேயானால் கட்சிக்கு மேலும் பெருமை சேர்ப்பதோடு அல்லாமல் இந்தியர்களின் ஆதரவும் இன்னும் கூடுதல் வலு சேர்க்கும் என்பதைக் கட்சி வட்டாரம் அறிந்தே வைத்து இருக்கும்.

”PPBM” கட்சி சிறுபான்மையான பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் வைத்துக் கொண்டு நம்பிக்கை கூட்டணியின் மற்ற தோழமை கட்சிகளுக்கே மிரட்டலாக விளங்கும் இந்த இக்கட்டான நேரத்தில்... “PKR” கட்சி வீணே தன்மூப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு... பல்லினக் கட்சி எனும் தம் தோற்றத்தையும் நம்பகத் தன்மையையும் இழந்து விடுவதற்கு தயாராக இல்லை என்பதை மறுப்பதற்கு இல்லை. தியான் சுவாவிற்கு செனட் சபையில் இடம் கொடுக்கலாமே!


Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றிங்க... 🙏 நீண்ட பதிவு... அருமையான தகவல்...


Varusai Omar: என்ன செய்வது தம்பி. சில சமயங்களில் பணத்தின் குரல் ஓங்கி ஒலிக்குதே! கொள்கையாவது புடலங் காயாவது!


Narinasamy Karpaya: தியான் சுவா வேறு வழிகளில் சேவை செய்யலாமே! பிரபாகரன் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர் தானே! இன்றைய அரசியல் நிலையில் இத்தகைய பிரச்னைகளை ஏற்படுத்துவது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது!


Muthukrishnan Ipoh: பொறுத்து இருந்து பார்ப்போம் ஐயா...

M R Tanasegaran Rengasamy: மக்களின் வரிப் பணத்தைக் கண்டபடி செலவு செய்வதை அரசு நிறுத்த வேண்டும். இன்னும் மூன்றாண்டுகளே எஞ்சி இருக்கும் வேளையில் அடுத்தப் பொதுத் தேர்தல் வரை காத்திருக்க இயலாதா என்ன? உடனே அங்கு ஓர் இடைத் தேர்தல் நடத்த அவசியம் என்ன? ஆளும் கூட்டணி மூன்றில் இரு பெரும்பான்மையைப் பெற்று விடுமா?

வீணாக மக்களின் எரிச்சலுக்கு வழிவகுக்கும் செயலாக இது அமையும். நாடு கடனில் உழன்று கிடக்கிறது எனக் கூப்பாடு வேளையில் இந்தத் இடைத் தேர்தல் தேவையா... அப்படி நடந்தால் ஜ.செ.க. நிச்சயம் இந்தியர்களின் வாக்குகளை இழக்கும்.

வரலாறு காணாத வண்ணம் அங்கு எதிர்க்கட்சி வாகை சூடும். அப்பொழுது உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா எனப் போக வேண்டியது தான். பாரிசான் அரசாங்கத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம் பெற்றது இல்லை என்றே கருதுகிறேன். நம்பிக்கை கூட்டணியில் இது அடிக்கடி நிகழ்கிறது. தவறான அரசியல் முன்னெடுப்பு.


Muthukrishnan Ipoh:
நீண்ட பதிவு.... நல்ல அருமையான கருத்துகள்... கருத்துகளுக்கு நன்றிங்க... 🙏


Ammini Ayavoo: அந்த அரசு சாரா இயக்கங்கள் யாவை?? விபரம் தேவை..


Varusai Omar >>> Ammini Ayavoo: ஒரு 10/30 பேரை சேர்த்துக்கிட்டு, தமிழ் நெஞ்சர் சங்கம் அப்படின்னு பெயர் வச்சுக்கிட்டு அங்கே இங்கே சில்லறை தேற்றிக்கிட்டு பதிவு பண்ணிட்டா? அம்புடுத்தான். அது ஓர் அரசு சாரா சங்கம் இயக்கம். என்ன... கொஞ்சம் கவனமாய் இருந்தால் சில்லறையைத் தேற்றிக் கொள்ளலாம்.


Kodis Varan: இது நடக்காது என்பது நமக்குத் தெரியும்! தியான் சுவா அந்த அளவுக்குத் தரம் கெட்ட மனிதர் அல்ல. இதன் பின்னால் எவனோ ஒரு திராவிடன் ஒளிந்து கொண்டிருப்பான்!


Varusai Omar >>> Kodis Varan: ஏம்பா... இங்கே எங்கே வந்தான் ஒங்க திராவிடனும் பிராமணனும்?


Selva Mani: பலிகடா என்றால் இளிச்சவாயன் தமிழனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ?


Arasi Ravi Paramasivan: பிரபாகரன் எதற்கு அடிபணிந்து போகணும்??


Velaydam Kannan: என்று திருந்தும் இந்த மட சாம்பிராணிக் கூட்டம்...


Dorairaj Karupiah: தம்பி பிரபாகரன் அவர்களே... உங்கள் பதவியை நிறைவு செய்யுங்கள். யாருக்காகவும்... விட்டுக் கொடுக்க வேண்டாம்... படை பல வந்தாலும் தடை சில நேர்ந்தாலும் தொடரட்டும்... உங்களது மக்கள் சேவை


Vijikrish Krishnasamy: சிரித்துக் கொண்டே முதுகில் குத்துவது இவர்களுடைய வழக்கம்.


Gobinathan Kuppan: பிரபாகரனைத் தேடிப் போனது இந்தக் கூட்டம். இப்போது வேண்டாமோ. அருமையான ஒரு நாடகம்பா இது...


Kannan Kannan: நாடகமே இந்தா உலகம்...






சுகம் வந்தால் துக்கம் - இன்றைய சிந்தனை - 15.11.2019

ஒரு விவசாயி. வயதானவர். வயலில் கஷ்டப்பட்டு உழைத்து வந்தார். சொற்ப வருமானம். ஒரு நாள் அவருடைய குதிரை காணாமல் போய் விடுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருகிறார்கள். ’என்ன ஒரு துரதிர்ஷடம்’ என்று பரிதாபப் படுகிறார்கள்.


அனைவரிடமும் ’வருவது வரட்டும்’ என்று ஒரு வார்த்தையில் நன்றி சொல்லி முடித்துக் கொள்கிறார். ஆனால் ஓர் அதிசயம் நடந்தது.

தொலைந்து போன குதிரை இரண்டு நாட்கள் கழித்து வீடு தேடி வந்தது. வரும் போது கூடவே மூன்று குதிரைகளையும் கூட்டி வந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு வியப்பு.

’நீ ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. இப்போது உனக்கு  நாலு குதிரை... சந்தோஷம் தானே’ என்றனர்.

விவசாயி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் ’வருவது வரட்டும்’ என்று அதே அந்தப் பழைய வார்த்தையில் முடித்துக் கொண்டார்.

சில நாட்களுக்குப் பின்னர் விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச் சென்றான். தவறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்கிறான்.

’என்னங்க இது... ஒரு நல்லது நடந்தால்  அடுத்து ஒரு கெட்டது நடக்குது. ரொம்ப கஷ்டமான நிலைமை’ என்று கூறி வருத்தப் பட்டனர். விவசாயி அதையும் பெரிது படுத்தவில்லை. ’வருவது வரட்டும்’ என்று மீண்டும் அமைதியாக அதே பதில்.

மறு வாரத்தில் நாட்டில் போர் வந்து விட்டது. எல்லா இளைஞர்களும் போரில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசரின் கட்டளை. வீடு வீடாக இராணுவத்தினர் போகின்றனர். இளைஞர்களை அழைத்துச் செல்கின்றனர்.

அந்த ஏழை விவசாயின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைப் பார்த்த ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைப் புகழ்ந்தனர். இதற்கும் அந்த விவசாயி ’வருவது வரட்டும்’ என்று பதில் கூறினார்.

ஏன் எல்லாச் சூழ்நிலைகளிலும் அந்த விவசாயி ஒரே மாதிரியான ஒரே சீரான மனநிலையில் ’வருவது வரட்டும்’ என்று இருந்தார்.

உண்மையில்... அந்த விவசாயி வாழ்க்கையின் அனைத்து இயல்புகளையும் தெரிந்து புரிந்து கொண்ட மனிதராக இருந்து இருக்கிறார்.

நாள்களில் நல்ல நாள்... கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. எல்லா நாள்களும் ஒரே மாதிரியான நாள்களே. அந்த எல்லா நாள்களும் மறைமுகமாக ஏதோ ஒரு பாடத்தை ஏதோ ஒரு வகையில் நமக்குச் சொல்லித் தருகின்றன.

நாணயத்திற்கு இரு பக்கங்கள். தெரியும் தானே. அது போல வாழ்க்கையிலும் நல்லது என்றும் கெட்டது என்றும் இரு பக்கங்கள் உள்ளன.

கஷ்டம் வந்தால்... அந்தக் கஷ்டம் நிரந்தரம் அல்ல... நாளை என்று ஒன்று இருக்கிறது. வந்த கஷ்டம் மறுநாளே கடந்து போகலாம். அதை மறக்க வேண்டாம்.

அந்த விவசாயின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளும் ஒரு முக்கியமான விசயம். சந்தோஷமான நேரத்தில் தலை கால் தெரியாமல் ஆடக் கூடாது. அதே சமயத்தில் கஷ்டமான நேரத்தில் மனம் உடைந்து போய்விடவும் கூடாது.

யாருக்கு எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம் - துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை. ஒன்று போனால் ஒன்று.

சுகம் வந்தால் துக்கம் தயாராக நிற்கிறது என்று அர்த்தம். ஆக இந்த வாழ்வியல் கூற்றை அந்த விவசாயி நன்றாகவே உணர்ந்து இருக்கிறார். அதனால் ஒரே மாதிரியான ஒரே சீரான மனநிலையில் அவர் வாழ்க்கையைக் கடந்து போய்  இருக்கிறார்.

நமக்கும் அதுவே... சந்தோஷமான நேரத்தில் மனம் கலங்கக் கூடாது. கஷ்டமான நேரத்தில் மனம் உடைந்து போகவும் கூடாது.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
15.11.2019


14 நவம்பர் 2019

மலேசிய இசை உலகில் எலிகேட்ஸ்

1970-ஆம் ஆண்டுகளில் மலேசிய இசை உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள். மலேசியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பூபாளம் பாடியவர்கள். அவர்களின் பாடல்கள் அனைத்துமே மலேசிய மண்ணில் சாகாவரம் பெற்றவை. ஊழியூழி காலத்திற்கும் உன்னதம் பேசும் உணர்ச்சிமிக்க பாடல்கள்.



Andainya Aku Pergi Dulu Sebelum Mu எனும் பாடலை உங்களால் மறக்க முடியுமா. Sampaikan Salam எனும் இந்தப் பாடலை உங்களால் மறக்க முடியுமா. அல்லது Sekuntum Mawar Merah எனும் பாடலையாவது மறக்க முடியுமா. மறக்க முடியாத பாடல்கள்.

மறக்கத் தான் மனம் வருமா. முடியவே முடியாதுங்க. நெஞ்சைப் பிழிந்து எடுக்கும் வரிகள். கண்களில் கண்ணீர் வர வழைக்கும் வரிகள். அந்தப் பாடல்களைப் பாடியவர் எலிகேட்ஸ் லோகா.

நம் மலேசிய மைந்தர்களை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டுவோம். எதிர்காலச் சந்ததியினர் இவர்களை எல்லாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.




எலிகேட்ஸ் (Alleycats) 1969-ஆம் ஆண்டில் பினாங்கில் உருவான இசைக்குழு. 1970-ஆம் ஆண்டில் பிரபலமானது. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்த இசைக்குழு. இருந்தாலும் ஹாங்காங் நகரில் தான் இவர்களின் புகழ் உச்சம் பார்த்தது.

இசைக்குழு உறுப்பினர்களில் மூத்தவர் டேவிட் ஆறுமுகம். இவரின் தம்பி லோகநாதன் ஆறுமுகம். மற்றொரு தம்பி சண்முகம் ஆறுமுகம். இவர் கித்தார் கலைஞர். தவிர செஸ்டர் அந்தோனி பாசரெல்லா என்பவர் சாக்ஸபோன் கலைஞர். டான் சின் ஹாக் என்பவர் மேளம் வாசித்தார். எலிகேட்ஸின் பெரும்பாலான பாடல்களை எழுதியவர் மலேசியப் புகழ் கவிஞர் எம்.நாசிர்.

இவர்களின் முதல் இசைத்தட்டு ’தெரிமா காசே’ (Terima Kasih). சிங்கப்பூரில் வெளியானது. மொத்தம் 29 இசைத் தட்டுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அவற்றில் பல தங்கப் பரிசுகள் பெற்றவை. மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற பாடல்கள்.




மலேசிய இசைத் துறையின் வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு அளப்பரியது. இன்றும் சரி இனி என்றும் சரி; மலேசிய பாப் இசைக் குழுக்களில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக எலிகேட்ஸ் புகழ்பெற்று விளங்கும். இந்த இசைக்குழு பல விருதுகளையும் வென்று உள்ளது.

பேஸ்புக் ஊடகத்தில் எலிகேட்ஸ் இசைக் கலைஞர்களைப் பற்றி பலரும் கருத்துகள் தெரிவித்து உள்ளனர். அன்பர் தனசேகரன் ரெங்கசாமி சொல்கிறார்: ஒரு காலக் கட்டத்தில் மலாய்ப் பாடல் உலகத்தைத் தங்கள் கைவசம் வைத்து இருந்தனர்.

பெரும் மலாய் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இசைக் குழுவாகத் திகழ்ந்தனர். அந்த நாளில் லோகா அவர்கள் பாடிய "பசிக்கு சோறுமில்லை படுக்க பாயுமில்லை" எனும் தமிழ்ப் பாடலும் மிகவும் பிரசித்தம். எலிபூனை இசைக் குழுவினரின் புகழ் உச்சம் தொட்ட காலம் அது என்று சொல்கிறார்.

மலேசியாவில் எல்லா இனத்தவரும் விரும்பிய இசை. நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல் வரிகள். எலிகேட்ஸ் இசைக் கலைஞர்கள் தனித்துவம் பெற்று விளங்கினார்கள். ஒரு புதிய மலேசியத்தை தந்தவர்கள். யார்தான் அவர்களை மறக்க முடியும் என்கிறார் அன்பர் பெரியசாமி ராமசாமி.

மலேசிய வானொலி பிரிவில் பணியாற்றயவர் வரிசை ஒமார். அந்தக் காலத்து வானொலிப் பிரபலம். கணீர் குரல். அவர் எலிகேட்ஸ் பற்றி தன் அனுபவங்களைச் சொல்கிறார். நீங்களும் கேளுங்கள்.




என் பால்ய தோழன் எலிகேட்ஸ் டேவிட். அவரைப் பற்றிய பழைய நினைவுகள்.

1968-ஆம் ஆண்டு மலேசிய வானொலி பினாங்கு பிரிவில் இணைந்து பணியாற்றிய நேரம். அந்தக் கால கட்டத்தில் எலிகேட்ஸ் (சந்துப்பூனைகள்) இசைக்குழு மிகவும் புகழ் பெற்றது.  ஆறுமுகம் - மீனாம்பாள் அம்மையாரின் மூன்று குமாரர்களான டேவிட், லோகா மற்றும் இளவலுடன் இன்னும் இருவர்.

இவர்களின் தாயார் மீனாம்பாள் ஆறுமுகம் பினாங்கு ம.இ.கா. மாதர் பகுதி தலைவியாக இருந்தவர். கர்நாடகப் பாடல்களில் புலமை பெற்றவர். இவர்களின் தந்தையார் கெலாவி ம.இ.கா. கிளையின் தலைவராக இருந்தவர்.

எலிகேட்ஸ் ஐவர் கொண்ட குழு. நீண்ட காலம் இசையுலகில் கொடி கட்டிப் பறந்தது.

இவர்களை நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறுதியாகச் சந்தித்தது பினாங்கு புக்கிட் மேராவில். அங்கே ஒரு விடுதியில் எலிகேட்ஸ் டேவிட் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள்.

ஒரு நிகழ்ச்சியின் இடைவேளையில் என்னைக் கண்டதும் வந்து கட்டித் தழுவிக் கொண்டார் டேவிட்! இவரின் அடையாளமே ஆப்பிரிக்க முடிதான் (Afro Hair). பரந்த... விரிந்த முடி... மறக்க முடியுமா.

பினாங்கில் ஒருமுறை டேவிட் தலைமையில் நடந்த ஒரு நிகழ்வில் அறிவிப்பாளனாகப் பணியாற்றிய போது தான் எனக்கு டேவிட் ஆறுமுகம் அறிமுகமானார்.




அதன் பிறகு பல ஊர்களில் பற்பல நிகழ்வுகளில் சந்தித்துக் கொள்வோம். ஓர் இந்தியர் சார்ந்த ஆங்கில/ மலாய்/ தமிழ் இசைக்குழு தென்கிழக்காசியா முழுதும் புகழ் பெற்றது என்றால் அது எலிகேட்ஸ் மட்டுமே!

மற்றும் ஓர் இசைக்குழு ராஜாமோனி. (Rajamony Island Rythemics). இவர்களின் ஹவாய் கித்தார் இசை வட மலாயாவில் புகழ் பெற்று விளங்கியது. ஆனாலும் அவர்களால் எலிகேஸின் உயரத்தை எட்ட இயலவில்லை.

டேவிட் ஆறுமுகம் பற்றிய மற்றும் ஒரு சுவைத் தகவல். அவர் பாடி முடித்ததும் அவரது நன்றி சொல்லும் பாணியே அலாதியானது. ’தெரிமா காஸ்ஸ்ஸ்ஸே’ என்று அழுத்தத்துடன், சற்றே இழுத்து உயர்த் தொனியில் சொல்லுவார். அது அவரது தனித்துவமாகும். இவர்கள் எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாதவர்கள் என்று சொல்கிறார் வரிசை ஒமார்.

இவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப் படுத்த வேண்டும். அந்த வரிசையில் இன்னும் நம் தமிழ் பிள்ளைகள் சிலரின் சாதனைகளை பட்டியலிடலாம்.

அந்த வரிசையில்:

பூப்பந்து... பஞ்ச் குணாளன் என்ற பஞ்சாட்சரம் குணாளன்.

ஹாக்கி: ஷண்முகநாதன்.

பெருநடை: சுப்ரமணியம்.

ஓட்டம்: வி. அங்கம்மா.

ஸ்குவாஷ்: நிக்கோல் டேவிட்; சிவ சங்கரி.

காற்பந்து: ஸ்பைடர் மேன் ஆறுமுகம்.

சைக்கிளிங்: குமரேசன்.

கலப்பு தற்காப்பு கலை: தானி.

பாடகர்களில் நமது நாட்டில் இசை தட்டில் பாடிய முதல் ஆண் பாடகர் டி.எம். ராமையா. (போகும் பாதை பொல்லாத பாதை). அடுத்து ரெ.ச. என்கிற ரெ. சண்முகம். இவர் ஒரு பாடகர், ஓர் இசையமைப்பாளர். ஒரு பாடலாசிரியர். ஒரு நடிகர்.

அடுத்து இசைத் தென்றல் என். மாரியப்பன். அவரின் மகன் துருவன். அடுத்து சந்திரா சண்முகம் (கதீஜா). அடுத்து வி. சாரங்கபாணி.

நமது தமிழ் பாடகர்களில் மலாய் இசை உலகில் புகழ் பெற்றவர்கள் வி. சாரங்கபாணி, மற்றும் டி.ஜே. டேவ் (டத்தோ). முன்னாள் தபால்காரரான இவர் மலாய் ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்திக் கொண்டவர்.

அது போலவே மலாய் பாடகிகளில் தமிழில் பாடி புகழ் பெற்றவர் குமாரி ஜைத்தூன். இவர் நம் தமிழ் பாடகர்களுடன் இணைந்து இரு குரலிசையும் பாடி இருப்பது சிறப்பு.

நமது உள் நாட்டு பாடகர்களில் சகல கலா வல்லவர் அண்ணன் ரெ.ச. இவரின் புகழ் பெற்ற பாடல் "செந்தாழம் பூவாய் செவ்வாழை மெருகாய்... வந்தாடும் பாவை எதிர் நின்றாள்!

கருத்துகளுக்கு நன்றிங்க வரிசை ஒமார்.




உண்மையிலேயே எலிகேட்ஸ் மலேசிய இசை உலகில் அனைவரையும் கவர்ந்தவர்கள். ஒரு வகையான காந்தர்வ இசையாற்றல் அவர்களிடம் இருந்தது. அவர்களின் பாடல்களை முணுமுணுக்காத வாய்களே இல்லை என்று சொல்லலாம்.  பல்லாயிரம் மலேசிய நெஞங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மற்றும் ஓர் அன்பர் நாராயணன் கிருஷ்ணன். அவர் தன் அனுபவத்தைச் சொல்கிறார்.

2001 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஷா ஆலாம் ஹோலிடெ வில்லா எனு தங்கும் விடுதியில் கல்வி அமைச்சின் பணி நிமித்தம் ஒரு வார காலம் தங்கி இருந்தேன். ஒரு மாலைப் பொழுது. வெளியே அடைமழை.

நான் சென்று கொண்டு இருந்த லிப்டில் லோகா குடையுடன் நுழைந்தார். ’ஹாய்’ என்று என் கையைப் பிடித்துக் குலுக்கினார். அவ்வளவு மென்மையான கரங்களை இதுவரை நான் பார்த்தது கிடையாது. பூவிலும் மென்மையான கரங்கள்.

புகைப்படங்களில் நான் கண்ட எலிகேட்ஸ்சை விட உருவத்தில் அவர் சராசரியைவிட குள்ளமாகவே இருந்தார். ஒரு வேளை அவரின் ஆப்பிரிக்க முடி நமக்கு பெரிதாகக் காட்டி இருக்கலாம். விடுதியில் நாங்கள் தான் இசை வாசிக்கிறோம். அவசியம் வாருங்கள் என்றார்.

என்ன நடக்கிறது என்று பிடிபடுவதற்குள் அவரது தளத்தில் இறங்கி விட்டார். எங்களுக்கு இரவிலும் பயிற்சி இருந்ததால் இசை விடுதிக்குச் செல்ல இயலவில்லை. அன்னார் மரித்த பின் வந்த செய்திகள் அவரை இன்னும் பிருமாண்டமாகக் காண்பித்தன.




நான் ஏதும் பேசியதாக நினைவு இல்லை. அதிகப் பட்சம் ஒரு புன்னகை தான். ஒரு மின்னலைப் போல் அந்தத் தருணம் கடந்து போனது. ஆனால் ஓர் உலகத் தரம் வாய்ந்த ரோக் ஸ்டார் என் முன் தோன்றி மறைந்த உணர்வே ஏற்பட்டது. நன்றிங்க நாராயணன் கிருஷ்ணன்.

அடுத்து மேலும் ஓர் அன்பர் ராஜேந்திரன் அண்ணாமலை. ஓர் அரிய தகவலையும் கூறி இருக்கிறார். சுவாரா கெகாசே (Suara Kakasih) எனும் மலாய் பாடல் மலேசிய இசை உலகைத் திருப்பிப் போட்ட ஒரு பாடல். அந்த நாளில் இந்தப் பாடலைப் பாடிய அலிகேட்ஸ் குழுவினர் ஆசிய பாட்டு உலகின் சிகரத்தைத் தொட்டனர்.

மலாய் ரசிகர்கள் மனதை இசையால் வென்று எடுத்த பாடல். ஆனால் இந்தப் பாடலை எழுதி இசை அமைத்தவர் பதினாறு வயது நிரம்பாத ஓர் இந்திய சிறுவன் துளசி ஜெயராமன் என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.

கித்தார் கருவியில் வரும் இசையை மீட்டிக் கொண்டு இரவு முழுதும் கனவுகளில் மிதந்த வண்ணம் இருந்தார் அந்தச் சிறுவன். பள்ளிப் பாடத்தில் அவருக்கு ஆர்வம் குறைந்து போனது. தினமும் பள்ளி விட்டதும் கிதாரும் கையுமாக திரங்கானு, டுங்குன் கடற்கரையில் வீசும் காற்றுடன் கைகோர்த்து நடந்து கொண்டு இருந்தார்.

அச்சிறுவனின் கற்பனையில் கருத்தரித்த வரிகள் தான் சுவாரா கெகாசே.

ஓர் இசை நிறுவனத்தின் தொடர்பு அந்தச் சிறுவனுக்குக் கிடைத்தது. பாட்டு வரிகள் அழகாய் இருந்தது. மெட்டும் சூப்பராய் இருந்தது. இசை நிறுவனம் இந்தப் பாடலை வாங்கிக் கொள்ள சம்மதித்தது. ஒரு பத்திரத்தில் கையெழுத்துப் போடச் சொன்னது.

சின்னப் பையனுக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு வீடு திரும்பினான். சில மாதங்களில் அலிகேட்ஸ் குரலில் அப்பாடல் மலாய் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று இருந்தது. அந்த ஆண்டு தென்கிழக்காசியாவின் சிறந்த பாடலாகவும் தேர்வு செய்யப் பட்டது.

பாடலில் பையனின் பெயர் வந்து விட்டது. ஆனால் கைக்குப் பணம் வரவில்லையே. இசை நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டான். பத்திரத்தைக் காட்டினார்கள். இரண்டு வெள்ளி சன்மானத்திற்கு டுங்குன், துளசி ஜெயராமன் தன் பாடலை இசை நிறுவன உபயோகத்திற்கு விற்று விட்டார் என்று சின்ன எழுத்தில் எழுதப் பட்டு இருப்பதைக் கோடிட்டுக் காட்டினார்கள்.

ஒரே ஓர் ஒற்றை வரியில் அந்தச் சிறுவனுக்குச் சேர வேண்டிய புகழ், எதிர்காலம் அனைத்தும் சூறையாடப்பட்டு விட்டது. சின்னப் பையன். விபரம் அறியாத வயது. பெற்றோர் ஆதரவு வேறு இல்லை. பாவம் துளசி ஜெயராமன் என்று வேதனைப் படுகிறார் ராஜேந்திரன் அண்ணாமலை. எனக்கும் பெரிய வேதனைங்க.

எலிகேட்ஸின் மூத்த பாடகர் லோகநாதன் ஆறுமுகம். லோகா என்று அன்பாக அழைக்கப் பட்டவர். 2007 ஜூன் 4-ஆம் தேதி, பினாங்கு மவுண்ட் மிரியம் மருத்துவமனையில், தன் 53-ஆவது வயதில் காலமானார். நுரையீரல் புற்றுநோய். அதிகமாகச் சிகரெட் பிடித்தது ஒரு காரணம் என்று சொல்லப் படுகிறது.

ஆரம்ப காலங்களில் லோகாவிற்குத் தொடர்ந்தால் போல இருமல். சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். பின்னர் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை செய்தார்கள். நிறைய செலவு செய்தார்கள். எட்டு மாதங்கள் போராட்டம். காப்பாற்ற முடியவில்லை.

மலேசிய இசை உலகிற்கு லோகா ஆற்றிய சேவைகளுக்காக, 2008-ஆம் ஆண்டு பகாங் சுல்தான் அவருக்கு டத்தோ விருது (Darjah Indera Mahkota Pahang (DIMP) வழங்கி சிறப்பு செய்தார். அந்த விருதை அவருடைய மனைவி சூசன் லோவி (Susan Lovie Boudville) பெற்றுக் கொண்டார்.

லோகாவிற்கு இரு பிள்ளைகள். மூத்தவர் மகன் விக்னேஸ்வரன். இளையவர் மகள் பிரியாதர்சினி.

ஒரு வேதனையான செய்தி. 2012-ஆம் ஆண்டில் பினாங்கு தஞ்சோங் பூஙாவில் இருந்த எலிகேட்ஸ் லோகாவின் இல்லம் தீப்பற்றி எரிந்து போனது. லோகாவின் பரிசுப் பொருட்கள் நிறையவே எரிந்து போயின.

எலிகேட்ஸ் லோகா பிறப்பு; 15 ஜுன் 1953. இறப்பு: 4 ஜுன் 2007

மலேசிய மண்ணில் மறக்க முடியாத மைந்தர்களில் ஒருவர் எலிகெட்ஸ் லோகா. நான் இவருடைய தீவிர ரசிகன். வாழ்க அவர் புகழ். வாழ்க அவர் பெருமை.








இவன் என்ன நினைப்பான் - இன்றைய சிந்தனை - 14.11.2019

இவன் என்ன நினைப்பான்... அவன் என்ன நினைப்பான் எனும் நினைப்பிலேயே பலரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எவன் என்ன நினைத்தால் என்னங்க. அவனா உங்களைத் தேடி வந்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சோறு போடப் போகிறான். 


உண்மையில் ஒரு பயலும் உங்களைப் பற்றி நினைக்கிறதே இல்லை. அவன் அவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள்.

பொதுவாகவே எவன் ஒருவனால் தன்னுடைய பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லையோ... அப்போது தான் அடுத்தவன் மீது அதிகமாகக் குறை காண ஆரம்பிக்கிறான். புரியுதுங்களா. இதுதான் உண்மை.

தன்னுடைய பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக அடுத்தவர் மீது அடிக்கடி குறை காண்பான். அதைப் பூதக் கண்ணாடி வைத்து பெரிதாக்கி உலகம் பூராவும் விளம்பரம் செய்வான்.

உண்மையில் யார் ஒருவர் அடுத்தவர்களின் மீது சதா குறை காண்கிறார்களோ அவர்களிடம் தான் அதிகமாகக் குறைகள் இருக்கும்.

தங்களுடைய குறைகளையும் தவறுகளையும் மறைப்பதற்காகத் தான் மற்றவர்கள் மீது அடிக்கடி குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது ஒரு வகையான நோய்.

ஆக அப்படிப்பட்ட மனநோய் பிடித்தவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். நீங்கள் பாட்டிற்கு உங்கள் வேலையைச் செய்யுங்கள். வேலை வெட்டி இல்லாமல் குரைக்கும் நாய்கள் கடிப்பது இல்லை. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
14.11.2019