01 ஆகஸ்ட் 2020

இந்தியாவில் கொள்ளை போன பொன் குவியல்கள்

இந்தியாவின் அரிய பெரிய பொன் குவியல்கள் (பொக்கிஷங்கள்); புதையல்கள்; செல்வங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் கொள்ளை போய் இருக்கின்றன. இந்தியாவிற்கு வந்த கடலோடிகளும் சரி; நாடோடிகளும் சரி; நன்றாகவே கொள்ளை அடித்துக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

இந்தியாவின் தென் கோடியில் வராமல் வந்த வரப்பிரசாதங்கள். இவற்றையும் சும்மா சொல்லக் கூடாது. இன்றைய வரைக்கும் சுத்தமாகச் சுரண்டிக் கொண்டு இருக்கின்றன. மரியாதை கொடுக்கவில்லை. மன்னிக்கவும்.



அப்படி கொள்ளை அடிக்கப்பட்ட பொன் மணிகளில் *கோகினூர் வைரம்* முதன்மையானது. இந்த வைரம் ஒரு விசித்திரமான பின்னணியைக் கொண்டது.

இந்தியாவுக்குள் படை எடுத்து வந்த அந்நியர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட அரிய பெரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று.



தரியா நூர் வைரம் (Daria-i-Noor),

ஷா ஜகானின் மயிலாசன வைரம் (Akbar Shah),

ஹோப் வைரம் (Hope Diamond),

நிஜாம் வைரம் (Nizam Diamond) ,

மகா மொகலாய வைரம் (Great Mogul Diamond),

ஓர்லோவ் வைரம் (Orlov Diamond),

ஜேக்கப் வைரம் (Jacob Diamond),

ரீஜண்ட் வைரம் (Regent Diamond)


இவை ஒவ்வொன்றும் பல ஆயிரம் கோடி ரிங்கிட் மதிப்புள்ள கலைச் செல்வங்கள். எல்லாமே கொள்ளைப் போய் விட்டன.



அவை அனைத்தும் அரிதிலும் அரிதான புனிதமான வைரங்கள். இந்தியாவில் இருந்து கொள்ளை அடிக்கப் பட்ட அரிய வகை நவரத்தினமணிகள்.

இந்தியாவில் சில பல அரசியல்வாதிகள் ஆயிரம் கோடி அரசியல் பெருமைகள் பேசுகிறார்கள். பேசி என்னங்க இருக்கிறது. இந்திய மண்ணில் இருந்து பட்டப் பகலிலேயே கொள்ளை அடித்துக் கொண்டு போய் விட்டார்களே. என்னங்க பெருமை பேச வேண்டி இருக்கிறது.

அந்த வைரங்கள் எல்லாம் இப்போது வெளிநாட்டு அரும் பொருள் காட்சியகங்களில் இந்திய மண்ணின் சாட்சிப் பொருள்களாகக் காட்சி தருகின்றன.


இந்தியாவில் இருந்து கொள்ளை போன இந்திய வைரங்களை வைத்து ஹாலிவுட் சினிமாக்காரர்கள் *இந்தியானா ஜோன்ஸ் - டெம்பிள் ஆப் டூம்* (Indiana Jones and Temple of Doom) எனும் படத்தை எடுத்து கோடிக் கணக்கில் காசு  பார்த்து விட்டார்கள்.

கிறிஸ்துவர்களின் புனிதப் பாத்திரமான *ஹோலி கிரைல்* அட்சய பாத்திரம். கேல்விப்பட்டு இருப்பீர்கள். இன்றைய நாள் வரையிலும் அதைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். தேடிக் கொண்டும் வருகிறார்கள்.

அதைப் பற்றி படம் எடுத்து ஆவணங்களைத் தயாரிக்கிறார்கள். எப்பேர்ப்ட்ட புனிதமான செயல். தலைவணங்கும் உரிமைப் போராட்டங்கள்.



ஆனால் இந்தியா நாடு இழந்து போன வைரங்களைப் பற்றி பலரும் அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. தொப்பை நிறைந்தால் சரி என்கிற அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.

இந்தியாவின் பெருமைக்குரிய மயிலாசனம் எங்கே இருக்கிறது?

கோகினூர் வைரம் எப்படிக் கொள்ளை போனது?

ஷா வைரம் எப்படி ரஷ்யாவுக்குப் போனது?

தரியாநூர் வைரம் எப்படி ஈரானுக்கு கடத்தல் செய்யப் பட்டது?


இதைப் பற்றி கொஞ்சம்கூட தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது. இப்படி எழுதுவதற்காக என்னை மன்னியுங்கள்.



அண்மையில் பத்மநாபசாமி கோயிலின் காப்பறைகளில் கோடிக் கோடியாய் தங்கம் கிடைத்தது. தெரியும் தானே. ஆனால் அதைப் போல பல நூறு மடங்கு; பல ஆயிரம் மடங்கு தங்கம் இந்திய மண்ணில் இருந்து கொள்ளை போய் விட்டது. இந்த விசயம் எத்தனைப் பேருக்கும் தெரியும்.

முக்கால்வாசியை *உலகப் புகழ் சுரண்டல் மன்னன் இங்கிலாந்து* சுருட்டிக் கொண்டு போனது. இந்தியாவைக் கூறு போட்ட சாணக்கியத்திற்காக வருடம் தவறாமல் இங்கிலாந்து நாட்டுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். கொடுக்க வேண்டும். இது என்னுடைய சிபாரிசு.

இப்படிச் சொல்வதினால் இங்கிலாந்து இங்கே வந்து என் மீது வழக்கு ஒன்றும்  போட முடியாது. வழக்குப் போட்டாலும் ஜெயிக்கவும் முடியாது. விடுங்கள்.

மலாயாவில் வெள்ளைக்காரர்கள் விட்டுட்டு போன கித்தா பால் தோம்புகள் இருக்கவே இருக்கின்றன. அவை போதும். எனக்குப் பின்னால் வந்து பிரட்டுக் களம் போல வரிசை வரிசையாக நிற்கும்.

ஆஜர் ஆஜர் என்று சாட்சி சொல்லத் தயாராகவும் இருக்கும். அப்புறம் என்னங்க. அதனால் கவலையே இல்லை. மீண்டும் சந்திப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.08.2020

Pictures are taken from various sources for spreading knowledge. This is a non- commercial blog.



30 ஜூலை 2020

நீல வசீகரன்

நீல வசீகரன் (Junonia orithya) என்பது மலேசியாவில் காணப்படும் பட்டாம்பூச்சி. தென் ஆப்பிரிக்காவில் இதை *விழி வசீகரன்* என்று அழைக்கிறார்கள். உலகில் 20,000 பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன. தீபகற்ப மலேசியாவில் சுமார் 1,180 பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன.


பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி என்பது கண்ணைக் கவரும்; மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப் படுகின்றன.

பட்டாம் பூச்சிகள் 3000 கி.மீ. தூரம் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றவை. அதாவது கோலாலம்பூரில் இருந்து இந்தியா, பம்பாய் வரை நிற்காமல் பறந்து செல்லும் ஆற்றல் உள்ளவை.

(மலேசியம்)
30.07.2020



24 ஜூலை 2020

கோத்தா கெலாங்கி - காணாமல் போன நகரம் - 1

தமிழ் மலர் - 24.07.2020 - வெள்ளி

மலாயா தீபகற்பகத்தின் கீழ்க்கோடியில் ஜொகூர் மாநிலம். அங்கே கோத்தா திங்கி எனும் ஒரு புறநகர்ப் பகுதி. அதற்கு அப்பால் அடர்ந்த மழைக் காடுகள். அந்தக் காடுகளில் நட்ட நடு நாயகமாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் அரச மரங்கள். அந்த மரங்களுக்கு எத்தனை வயது என்று அந்த மரங்களுக்கே தெரியாது.


வரலாற்று ஆய்வுக் குழு தலைவர் கணேசன்; 
ஜொகூர் மாநிலக் காட்டு இலாகா அதிகாரிகள்

அந்த மரங்களைச் சுற்றிலும் பாழடைந்த கோட்டைக் கோபுரங்கள். 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி (Kota Gelanggi) என்கிற சாய்ந்த கோபுரங்கள். உலகப்புகழ் ஸ்ரீ விஜய பேரரசின் சிதைந்து போன வரலாற்றுச் சுமைகள்.

இப்படிப்பட்ட பழைமையான கோட்டைகள் அங்கே இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் அந்தக் காட்டுப் பகுதியில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களுக்குத் தெரியும். வேட்டைக்குப் போன குடிமக்களில் சிலருக்குப் பழைமையான கற்சிலைகள் கிடைத்து இருக்கின்றன.

அவற்றை எடுத்து வந்து விளையாட்டுப் பொருட்களாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பொருட்கள் எல்லாம் ஸ்ரீ விஜய பேரரசு காலத்தின் சிதைப் பொருட்கள் என்பது அந்த வெள்ளந்திகளுக்கும் தெரியாது.


தமிழ் மலர் - 24.07.2020

2005-ஆம் ஆண்டில்தான் இந்த அதிசயம் வெளி உலகத்திற்கே தெரிய வந்தது. மலேசியாவின் ‘தி ஸ்டார்’ நாளிதழ் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட்டு உலகத்தையே பிரமிக்க வைத்தது.

கோத்தா கெலாங்கி என்பது ஸ்ரீ விஜய பேரரசின் புரதானத் தலைநகரம் ஆகும். இந்தோனேசியா சுமத்திராவில் கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1377-ஆம் ஆண்டு வரை செல்வச் செழிப்புடன் களை கட்டி வாழ்ந்த மாபெரும் பேரரசு.

வியாபாரம் செய்ய சீனா நாட்டு வணிகர்கள் அங்கே போய் இருக்கிறார்கள். அராபிய வணிகர்களும் வணிகத் தொடர்புகளைக் கொண்டு இருக்கிறார்கள். உள்நாட்டு வணிகர்களும் பண்டமாற்று வியாபாரம் செய்து இருக்கிறார்கள். பூகிஸ் மக்களும் வணிகம் செய்து இருக்கிறார்கள்.


ஜொகூர் மாநிலக் காட்டு இலாகா அதிகாரிகள்

ஸ்ரீ விஜய பேரரசு என்பது அந்தக் காலத்தில் சுமத்திராவை ஆட்சி செய்த ஒரு மாபெரும் பேரரசு ஆகும். இந்த ஸ்ரீ விஜய பேரரசின் கிளை அரசாங்கங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் கோலோச்சி உள்ளன.

(சான்று: Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. பக்: 171)

பேராக் புருவாஸ், பீடோர் பகுதிகளில் கங்கா நகரம் (Gangga Negara); கெடாவில் கடாரப் பள்ளத்தாக்கு (Bujang Valley); கோத்தா கெலாங்கி புரதான நகரம்; பகாங் சமவெளி நகரம்; தாமரலிங்கா அரசு (Tambralinga); பான் பான் அரசு (Pan Pan). இப்படி நிறைய நகரங்கள் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்து உள்ளன.


சோழக் கல்வெட்டுகள்

கோத்தா கெலாங்கி அடர்ந்த காடுகளில் லிங்கியூ நீர்த் தேக்கம் இருக்கிறது (Linggiu Reservoir). அருகில் சுங்கை மாடேக், சுங்கை லிங்கியூ ஆறுகள் ஓடுகின்றன. சிங்கப்பூருக்குத் தேவையான குடிநீர் இங்கே இருந்துதான் அந்தக் குடியரசிற்குப் போகிறது.

கோத்தா கெலாங்கி நிலப் பகுதி ஜொகூர் மாநிலத்திற்குச் சொந்தமானது. 140 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இருப்பினும் அந்த நீர்த் தேக்கத்தையும், அதைச் சுற்றி உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் தான் இன்று வரை பரமாரித்து வருகின்றது. (Public Utilities Board (PUB) of Singapore)

ஒரு நூறு வருடங்களுக்கு முன்னாலேயே சிங்கப்பூர் அரசு ஜொகூர் அரசுடன் குடிநீர் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஜொகூர் மாநில அரசாங்கத்தின் அனுமதியுடன் சின்ன ஒரு சிங்கப்பூர் பிரதேச இராணுவமே அந்த லிங்கியூ காட்டுக்குள் இருக்கிறது.


கோத்தா கெலாங்கி கோட்டை இடிபாடுகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர், 2014-ஆம் ஆண்டில், ஜொகூர் உலு திராம் பகுதியில் மலாயாத் தமிழர் வரலாற்று மீட்பு எனும் ஒரு தன்னார்வ வரலாற்று ஆய்வுக் குழு தோற்றுவிக்கப்பட்டது.

அதன் பொறுப்பாளராக கணேசன் என்பவரும் அவருடைய தோழர்களும் மீட்புச் சேவைகளைச் செய்து வருகிறார்கள். கோத்தா கெலாங்கி வரலாற்றுத் தேடலில் தீவிரமாகக் களம் இறங்கி உள்ளார்கள்.

வரலாற்று ஆய்வுக் குழுவின் தலைவர் கணேசன் கோத்தா கெலாங்கி அடர்ந்த காடுகளுக்குள் சென்று பல முறை பூர்வீகக் குடிமக்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். நேரடியாகப் பார்த்த கோட்டைச் சுவடுகளை ஆவணப் படுத்தி வருகிறார்.


கோத்தா கெலாங்கி கோட்டை இடிபாடுகள்

அந்த வகையில் கணேசனின் அரிய முயற்சிகளினால் அங்கே அடர்ந்த காட்டிற்குள் புராதன கருங்கல் கோட்டை இருப்பதும் உறுதிப்படுத்தப் பட்டது.


உயரமான கருங்கற்களால் செதுக்கப்பட்ட பெரும் பெரும் தூண்கள்; சிதறிய சின்ன பெரிய கற்பாறைகள்; செங்குத்தான பாறைகள்; இராட்சச உயரமான பாறைகள் போன்றவற்றைக் கண்டு கணேசன் பிரமித்துப் போய் இருக்கிறார். படங்கள் எடுத்து இருக்கிறார்.

2012-ஆம் ஆண்டுகளில் கட்டுரையாளர் மலாக்கா முத்துக்கிருஷ்ணனும் அந்தப் பகுதிகளில் ஆய்வுகள் செய்து உள்ளார். பல நாட்கள் காட்டுக்குள் தங்கி சான்றுகளைச் சேகரித்து உள்ளார். அவர் எடுத்த படங்கள் டிஜிட்டல் முறையில் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.



இதற்கிடையில் ஆய்வாளர் கணேசன் அவரின் ஆய்வுகளை சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். பார்க்கிறோம் செய்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள். நேற்று பார்த்தார்கள். இன்றைய வரைக்கும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தன் சொந்தச் செலவிலேயே கணேசன் ஆய்வுகளைச் செய்தார். செய்தும் வருகிறார். மலேசியத் தமிழ் இனத்தின் மீது தனி அக்கறை கொண்ட நல்ல ஒரு சமூகவாதி.

இவரை மலேசியத் தமிழர்கள் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்; ஊக்குவிக்க வேண்டும். சொந்த முயசியில் இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்து வருகிறாரே. வாழ்த்துவதற்கு ஒரு மனசு வேண்டாமா.


கோத்தா கெலாங்கி சிதைந்த தூண்கள்

மேலும் ஒரு வேதனையான செய்தி. நிதியுதவி கிடைக்காததால் இவரும் தன் ஆய்வுகளை இப்போது அப்படியே நிறுத்தி வைத்து இருக்கிறார். சமுதாயம்; சமூகம்; இனம்; மொழி என்று சிலர் வாய் நிறைய பேசுகிறவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் உதவி என்று வரும் போது அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். வேதனையாக உள்ளது. நம் நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் இயன்ற வரை ஆய்வாளர் கணேசனுக்கு உதவிகள் செய்ய வேண்டும். இதுவே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

ரேய்மி செ ரோஸ் (Raimy Che-Ross) என்பவர் ஒரு மலேசிய வரலாற்று ஆய்வாளர். கோத்தா கெலாங்கியைப் பற்றிய சான்றுகளைத் திரட்டுவதற்கு பன்னிரண்டு ஆண்டுகள் ஆய்வு. உலகம் பூராவும் சுற்றி வந்து இருக்கிறார். கோட்டைக்கு மேலே விமானத்தின் வழி பறந்து வான்படங்களையும் எடுத்தார்.


கோத்தா கெலாங்கி சிதைந்த தூண்கள்

தவிர அவருக்கு விண்வெளிப் படங்களும் கிடைத்தன. மனிதர் மிகவும் சிரமப்பட்டு கோத்தா கெலாங்கியின் சுவடுகளைத் தேடி இருக்கிறார். 

(சான்று: http://www.southeastasianarchaeology.com/tag/raimy-che-ross/)

மெக்ரெஸ் (MACRES) என்பதை மலேசிய தொலைத் தொடர் உணர்வு மையம் என்று சொல்வார்கள். (Malaysian Centre for Remote Sensing). இந்த மையத்தின் மூலமாகவும் விண்வெளிப் படங்கள் கிடைத்தும் உள்ளன.

இவருக்கு ’செஜாரா மலாயு’ வரலாற்று ஆவணங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. தவிர கோத்தா கெலாங்கி காடுகளில் வாழ்ந்த ஓராங் அஸ்லி பூர்வீகக் குடிமக்களிடம் இருந்தும் நிறைய தகவல்களைத் திரட்டி இருக்கிறார்.


ஆயிரம் ஆண்டுகாலச் சுவர்கள்

அதைக் கொண்டு 2004-ஆம் ஆண்டில் ’கோத்தா கெலாங்கி காணாமல் போன நகரம்’ எனும் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார்.

ஆசிய ஆய்வுக் கழகம் Asia Research Institute (ARI), (https://ari.nus.edu.sg/)

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (National University of Singapore),

மலேசிய பாரம்பரியக் கழகம் (Malaysian Heritage Trust),

மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம் (Museums and Antiquities Department of Malaysia)

போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த வரலாற்று நிபுணர்களிடம் தன் ஆய்வுகளைச் சமர்ப்பித்து இருக்கிறார்.


தாமரை கற்படிவங்கள்

பத்திரிகைகளும் ’காணாமல் போன நகரம்’ எனும் தலைப்பில் விரிவான செய்திகளை வெளியிட்டன. 2004-ஆம் ஆண்டில நடந்தது. கடைசியில் ரேய்மி செ ரோஸ் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார்.

கோத்தா கெலாங்கி என்பது இந்திய மயமான பேரரசு என்பது தெரிய வந்தது. அனைத்து மலேசிய நாளிதழ்களுக்கும் தெரிய படுத்தினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 2006 ஏப்ரல் 28-ஆம் தேதி, மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா ஒரு செய்தியை வெளியிட்டது. ’காணாமல் போன நகரம்’ என்று எதுவுமே இல்லை என்பதுதான் அந்தச் செய்தி.

(http://www.malaysiakini.com/letters/55003 - A 1,000 year-old lost city may have been found in the jungles of southern Johor, a researcher claimed in a report published today.)



அப்போது மலேசிய தொல்பொருள் அருங்காட்சியகக் கழகத்தின் காப்பாளராக காலீட் செயட் அலி (Khalid Syed Ali, Curator of Archaeology in the Department's Research and Development Division) என்பவர் இருந்தார்.

அவர் சொன்னார்: நாங்கள் ஓராண்டு ஆய்வு செய்து பார்த்தோம். காணாமல் போன நகரம் என்று எந்த அடையாளமும் கிடைக்கவில்லை; எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சொன்னார்.

அதோடு கோத்தா கெலாங்கியின் அத்தியாயம் கிடப்பில் போடப் பட்டது. இனிமேல் தான் தூசு தட்டிப் பார்க்க வேண்டும். விடுங்கள். அரசியல் கூத்துகளைப் பார்க்கவே நமக்கு நேரம் போதவில்லை. இதில் கோத்தா கெலாங்கியாவது? கோத்தா திங்கியாவது?



ரேய்மி செ ரோஸ் விடவில்லை. மீண்டும் சான்றுகளை முன்வைத்தார். ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மீண்டும் சொல்லப் பட்டது. சொல்லி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும்தான் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

கோத்தா கெலாங்கி விவகாரம் ஊறப் போட்டு, காயப் போட்டு, ஆறப் போட்டு, தொங்கப் போடப் பட்டு உள்ளது. மகிழ்ச்சி. இங்கே இந்தச் சொல்லுக்கு வேறு என்ன சொல்லைப் பயன்படுத்துவது என்றும் எனக்குத் தெரியவில்லை. மண்டை காய்ந்து விட்டது.

1900-ஆம் ஆண்டுகளிலேயே கோத்தா கெலாங்கியைப் பற்றிய இரகசியங்கள் கசியத் தொடங்கி விட்டன. 1881-ஆம் ஆண்டு டட்லி பிரான்சிஸ் ஹார்வே (Dudley Francis Amelius Hervey 1849–1911) எனும் ஓர் ஆங்கிலேயர், நேரடியாகச் சென்று பார்த்து இருக்கிறார். அங்கே ஓர் அங்கோர் வாட் புதைந்து கிடக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார்.

(http://discovery.nationalarchives.gov.uk/details/c/F71139)



அதன் பின்னர் 1920-ஆம் ஆண்டில், சர் ரிச்சர்ட் வின்ஸ்டெட் (Sir Richard Olof Winstedt 1878–1966) என்பவரும் அதை உறுதி படுத்தி இருக்கிறார்.

(http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_1629_2010-01-30.html

அடுத்து 1960-ஆம் ஆண்டுகளில் ஜெரால்ட் கார்டனர் (Gerald Gardner 1884–1964) எனும் ஆய்வாளரும் அதை உறுதிபடுத்தி இருக்கிறார்.

(Gardner, Gerald (1933). "Notes on some Ancient Gold Coins, from the Johore River". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. XI (II) பக்: 171–176)

ஆக ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே கோத்தா கெலாங்கியைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். அதைப் பற்றி யாரும் அக்கறை பட்டதாகவும் தெரியவில்லை. உருப்படியான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.



சோற்றுக்குச் சுண்ணாம்பு பூசுவதிலேயே நேரத்தைக் கடத்தி விட்டார்கள். அதைப் பார்த்துத் தான் ஜப்பான் காலத்து அரிசியில் சுண்ணாம்புக் கலக்கும் வித்தை அறிமுகமானது போலும்.

கம்போடியாவில் இருக்கும் அங்கோர் வாட்; சுமத்திராவில் இருக்கும் போரோபுதூர் (Borobudur) ஆலயங்களைக் காட்டிலும் கோத்தா கெலாங்கி மிக மிகப் பழமை வாய்ந்தது என்று மலேசிய ஆய்வாளர் ரேய்மி செ ரோஸ் சொன்னார்.

அவர் ஆய்வுகள் செய்யும் போது, கோத்தா கெலாங்கியின் மதில் சுவர்கள் நிறையவே சேதம் அடைந்து காணப் பட்டன. இருந்தாலும் உள்ளே கட்டடங்கள்; சுவர்கள்; கல்லறைகள்; நிலவறைகள் இன்னும் புதைந்த நிலையில் கிடக்கின்றன என்றும் உறுதியாகச் சொன்னார்.

ஒரு காலத்தில் கோத்தா கெலாங்கி ஒரு வியாபார மையமாக இருந்து இருக்கிறது. தவிர புத்த மதக் கல்விக் கேள்விகளின் தலைமை மையமாகவும் விளங்கி இருக்கிறது.

(Tracking down Kota Gelanggi (PDF). The Star. May 26, 2011)

ஓராங் அஸ்லி பூர்வீக மக்களின் கிராமம்

செஜாரா மெலாயு (Sejarah Melayu) என்பது பழம் பெரும் நூல். இது 1500 ஆண்டு கால வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட ஒரு காப்பியம். அதில் கோத்தா கெலாங்கியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன.

ஜொகூர் ஆற்றின் வடக்கே மேல் பகுதியில், கோத்தா கெலாங்கியின் பிரதான கோட்டை இருந்து இருக்கிறது. அந்தக் கோட்டை கரும் கற்களால் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. கெலாங்கி எனும் சொல் ஒரு தாய்லாந்துச் சொல்லாகவும் இருக்கலாம் என்றும் செஜாரா மெலாயு குறிப்புகள் சொல்கின்றன.

அந்தப் பகுதியில் சில கல்வெட்டுகள் கிடைத்தன. அவை தமிழ் மொழியில் எழுதப் பட்டவை. 1025-ஆம் ஆண்டு இராஜேந்திர சோழன், இந்தக் கோத்தா கெலாங்கியின் மீது படையெடுத்தார் என்று ’செஜாரா மலாயு’ ஆவணங்கள் சொல்கின்றன.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.07.2020

Pictures are taken from various sources for spreading knowledge. This is a non- commercial blog.



23 ஜூலை 2020

திரினிடாட் தொபாகோ பிரதமர் கமலா பிரசாத்

தமிழ் மலர் - 23.07.2020 - வியாழன்

(பதவிக் காலம்: 26 மே 2010 - 9 செப்டம்பர் 2015)

திரினிடாட் தொபாகோ (Trinidad and Tobago) என்பது வட அமெரிக்கா கண்டத்தில் கரிபியன் கடல் பகுதியில் சின்னஞ்சிறிய இரு தீவுகள். வெனிசூலா நாட்டிற்கு வடகிழக்கே உள்ள மிக அழகான தீவுகள்.

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய திட்டுகள். பச்சைப் பசேல் மழைக் காடுகள். பனிவிழும் வெண் தாமரை கடல் கரைகள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அழகு அழகான இயற்கை வண்ணங்கள்.



1498-ஆம் ஆண்டில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் முதன்முதலாகல் காலடி எடுத்து வைத்தார். அந்தத் தீவுகளை ஸ்பெயின் நாட்டின் காலனியாக அறிவித்தார். அதற்கு முன்பு அங்கே பூர்வீக அமெரிக்க இந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் அடித்துப் பிடித்து அந்த நாட்டைக் கைப்பற்றினார்கள். நிலங்கள் திறந்து விடப்பட்டன. ஆப்பிரிக்க அடிமைகள் வேலையாட்களாகக் கட்டி இழுத்து வரப்பட்டார்கள்.

1838-ஆம் ஆண்டில் திரினிடாட் தொபாகோவில் 17,439 அடிமைகள் இருந்தார்கள். அதே ஆண்டில் அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்த அடிமைகள் விடுதலையானார்கள். இங்கே திரினிடாட் தொபாகோ அடிமைகளுக்கும் விடுதலை.



அதனால் திரினிடாட் தொபாகோ நாட்டில் வேலை செய்ய ஆட்கள் இல்லை. அதனால் இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக இந்தியர்கள் கொண்டு போகப் பட்டார்கள். அப்படி வந்த இந்தியர்களின் வாரிசுகளில் ஒருவர்தான் அதே அந்த நாட்டின் பிரதமர் ஆனார். அவருடைய பெயர் கமலா பிரசாத் (Kamla Persad).

இவர் திரினிடாட் தொபாகோ நாட்டின் ஆறாவது பிரதமர். அது மட்டும் அல்ல. அவர் அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர். முதல் அட்டர்னி ஜெனரல். முதல் எதிர்க் கட்சித் தலைவர். காமன்வெல்த் நாடுகளின் முதல் பெண் தலைவர்.

இந்தியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் பிரதமர். இப்போது வயது 70.



இவரின் முப்பாட்டனார்கள் ஒப்பந்தத் தொழிலாளர் முறையில் (Indian indenture system) இந்தியாவில் இருந்து, 175 ஆண்டுகளுக்கு முன்னர் திரினிடாட் நாட்டிற்குச் சென்றவர்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவரின் தாய்வழி முப்பாட்டனார்கள் சென்னையில் இருந்து கப்பல் ஏறியவர்கள்.

திரினிடாட் தொபாகோ நாட்டில் குடியேறிய இந்தியர்களில் அதிகமானோர் பீகார் மற்றும் கிழக்கு உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். தொடக்கத்தில் அதிகமான தமிழர்கள் குடியேறினார்கள். பின்நாட்களில் வட இந்தியர்களின் குடியேற்றம் அதிகமானது. அதனால் இப்போது தமிழர்கள் அங்கே ஒரு சிறு பான்மை மக்களாகி விட்டார்கள்.

திரினிடாட் தொபாகோ தீவுகளுக்கு வடக்கே பிரெஞ்சு காலனி தீவுகளாக குவாடிலோப் (Guadeloupe) தீவுகள் உள்ளன. இந்தத் தீவுகளில் குடியேறியவர்களில் 90 விழுக்காட்டினர் தமிழர்கள்.



அதே போல அங்கு இருக்கும் மற்றொரு தீவுக் கூட்டம் மார்த்தினிக் (Martinique). இந்தத் தீவுகளில் குடியேறிவர்களில் 50 விழுக்காட்டினர் தமிழர்கள். இவை எல்லாம் கரிபியக் கடல்கரைகள் சொல்லும் தமிழர்கள் வரலாறு. அதை மறந்துவிடக் கூடாது.

தொடக்கக் காலங்களில் கரிபியன் கடல் பகுதிகளில் தமிழர்களின் குடியேற்றம் அதிகமாக இருந்தது. ஏன் என்றால் பாண்டிச்சேரி என்பது தமிழ்நாட்டில் இருந்தது. அதனால் தமிழர்களைக் கொண்டு செல்வது ஆங்கிலேயர்களுக்கும்; பிரெஞ்சுக்காரர்களுக்கும் சிரமமாக அமையவில்லை.

காரைக்கால், மெட்ராஸ் (Madras Presidency), பாண்டிச்சேரி, கும்பகோணம் பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள், கரிபியன் நாடுகளுக்கு ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். இரண்டரை மாதம் கப்பல் பயணம். சரி.



1845 மே 30-ஆம் தேதி இந்தியாவில் இருந்து 225 ஒப்பந்த தொழிலாளர்கள் திரினிடாட் தொபாகோ தீவுகளுக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். பயணித்த முதல் கப்பல் பேடல் ரசாக் (Fatel Razack). வருடத்தைக் கவனியுங்கள். 175 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

இன்றைய திரினிடாட் தொபாகோ மக்கள் தொகையில் 42 விழுக்காட்டினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். கமலா பிரசாத்தின் மூதாதயைர் தோட்டத் தொழிலாளர்களாகக் குடியேறியவர்கள்.

1952 ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி, திரினிடாட் (Trinidad), சிபரியா (Siparia) எனும் இடத்தில் கமலா பிரசாத் பிறந்தார். தந்தையார் ராஜ் பிரசாத் (Raj Persad). தாயார் ரீதா (Rita).



கமலாவுக்கு பதினாறு வயதாக இருந்த போது, இங்கிலாந்துக்குப் போய் படிக்க விரும்பினார். ஆனால் அவரின் தந்தையார் மறுப்புத் தெரிவித்தார். உள்நாட்டிலேயே தங்கிப் படிக்க வேண்டும் என்பது தந்தையாரின் விருப்பம். இருப்பினும் அவரின் தாயார் தலையிட்டு, கமலாவை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார்.

லண்டனில் மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் (University of the West Indies)  மேற்படிப்பு படித்தார். வழக்கறிஞராக வாழக்கையைத் தொடங்கி திரினிடாட் தொபாகோ நாட்டின் அரசு சட்டத் துறையின் தலைவராகப் பொறுப்பு ஏற்றார் (Attorney General). சட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

அதன் பின்னர் அரசியலுக்குள் வந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 1995-ஆம் ஆண்டு முதல் சிபரியா (Siparia) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 2000-ஆம் ஆண்டில் திரினிடாட் தொபாகோ நாட்டின் கல்வியமைச்சராகப் பதவி வகித்தார்.



ஏப்ரல் 25, 2006-ஆம் தேதி அவர் வாழ்க்கையில் முக்கியமான நாள். நாட்டின் பெரும்பான்மை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். 

2010-ஆம் ஆண்டு அந்த நாட்டில் பொதுத் தேர்தல். அப்போது பாட்ரிக் மானிங் (Patrick Manning) என்பவர் பிரதமர். இவருடைய ஆளும் கட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து கமலா பிரசாத் எனும் இந்திய வம்சாவழிப் பெண்மணி, திரினிடாட் தொபாகோ நாட்டின் ஆறாவது பிரதமர் ஆனார்.

இவருடைய கணவர் கிரிகாரி பிஸிசர் (Gregory Bissessar). மருத்துவர். இவருக்கு ஒரே மகன். பெயர் கிருஷ்ணா (Krisna).



இன்று அவர் பிரதமர் பதவியில் இல்லை. 09.09.2015-ஆம் தேதி வரையில் பதவி வகித்தவர். என்றாலும் இன சமத்துவத்திற்காகப் போராடுபவர்களை ஊக்குவித்து ஆதரவு வழங்கி வருகிறார்.

இங்கிலாந்தில் நோர்வூட் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவியாக இருந்த போது இனவாதத்திற்கு எதிராகப் போராடியவர். ஆக இனவாதம் என்பது அவர் அரசியலுக்கு வந்த பின்னர் ஒரு புதிய கண்ணாம் மூச்சி ஆட்டம் அல்ல. பழகிப் போன பழைய காயா பழமா விளையாட்டு.

இங்கிலாந்தில் அவருக்கு நடந்த ஓர் இனவாத அச்சுறுதல் நிகழ்ச்சியைச் சொல்கிறார்.

“அப்போது எனக்கு பதினாறு வயது. நோர்வூட் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு நாள் பிற்பகல் நேரம். லண்டன் ஹைட் பூங்காவில் ஒரு வெள்ளைக்காரர் என்னை அவமானப் படுத்தி விட்டார்.



நடந்து கொண்டு இருந்த என்னை அவர் தடுத்து நிறுத்தினார். மோசமான, ஆபாசமான இனவெறிச் சொற்களில் ஏசினார். அதிர்ஷ்டவசமாக நான் தப்பித்தேன். அப்போது ஹைட் பூங்காவில் மக்கள் நிறைந்து இருந்தார்கள். 

ஆனால் யாரும் வந்து எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அப்போதும் இனவெறி பிடித்தவர்கள் இருக்கவே செய்தார்கள்.

இன்னொரு முறை இன்னொரு நிகழ்ச்சி. அதுவும் இனவெறி நிகழ்ச்சி தான். ஒரு வயதான வெள்ளை பெண்மணி நடந்து செல்கிறார். அப்போது கால் தடுமாறிதடுமாறி விழப் போகிறார். நான் விரைவாக அவர் கைகளைப் பிடித்து, அவர் விழுவதைத் தடுக்கிறேன். ஆனால் அவர் ஒரு நன்றி கூட சொல்லவில்லை. என்னை முறைத்துப் பார்த்து போய் விட்டார்.

மனிதர்களில் உயர்வு தாழ்வு எதுவும் இல்லை. எல்லோரும் சமம். ஒருவர் கறுப்பாக இருக்கிறார் என்பதற்காக அவரைப் புறக்கணிக்கக் கூடாது. அவரை கிண்டல் செய்யக் கூடாது. வெள்ளைக்காரர் என்பதற்காக அவர் உடலில் வெள்ளை இரத்தமா ஓடுகிறது’ என்கிறார் கமலா பிரசாத்.



1860-ஆம் ஆண்டுகளில் திரினிடாட் தொபாகோ தீவுகளில் இருந்த கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்திய மாநிலங்களில் வாழ்ந்த மக்களும் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களும் கொண்டு செல்லப் பட்டார்கள்.

சொகுசுக் கப்பலில் எல்லாம் அவர்கள் பயணம் போகவில்லை. கட்டுச் சோறு; புளியோதரை; வத்தல் மிளகாய்; பருப்பு சாம்பார் என கட்டிக் கொண்டு தான் போய் இருக்கிறார்கள். இரண்டு மூன்று மாதக் கடல் பயணம். செத்துப் பிழைத்துப் போய் இருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளைக் கொண்டு போனார்களே அந்த மாதிரி தான். இந்தியர்களை திரினிடாட் தொபாகோ தீவுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கிறார்கள். கப்பலில் இறந்தவர்களைக் கடலில் அப்படியே தூக்கி வீசி விடுவார்கள்.



தொடக்கக் காலங்களில் கரிபியன் தீவுகளுக்குச் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் திரும்பி வர முடியாத ஒரு நிலை உருவாக்கப்பட்டது.

இந்தியர்களின் பயணப் பத்திரங்களை எல்லாம் ஆங்கிலேய முதலாளிகள் எரித்து விட்டார்கள். இந்தியாவில் இருந்து போனவர்களில் பலர் ஆவணங்கள் இல்லாத அனாதையானார்கள். தங்களின் அடையாளங்களை இழந்தார்கள். திரும்பி வர முடியாமல் அங்கேயே மறைந்து போனார்கள்.

தமிழர்களை எடுத்துக் கொண்டால் அங்கே போன தமிழர்களில் பெரும்பாலோருக்குப் படிப்பு குறைவு. அதுவே அவர்களின் பெரிய பலகீனமாக இருந்து உள்ளது.


இருந்தாலும் பரவாயில்லை. அவர்களின் பிள்ளைகள்; பேரப் பிள்ளைகள் இப்போது நல்ல நல்ல பதவிகளை வகிக்கிறார்கள். மகிழ்ச்சி அடைவோம். தமிழர்களும் சரி தமிழர்களைச் சார்ந்தவர்களும் சரி எங்கே இருந்தாலும் நன்றாக வாழ வேண்டும்.

கமலா பிரசாத் 2012-ஆம் ஆண்டு, இந்தியாவிற்குத் தன் வேர்களைத் தேடிச் சென்றார். பாட்னா நகருக்கு அருகில் இருக்கும் பேஹல்பூர் (Bhelupur) எனும் மிகச் சிறிய கிராமம். 122 வீடுகள். 1000 பேர் வசிக்கும் கிராமம்.

அதுதான் தன் மூதாதையர்களின் ஊர் என்பதை அறிந்து அங்கு சென்றார். ஹெலிகாப்படரில் வந்து இறங்கிய அவரை முதலில் அந்தக் கிராம மக்கள் கண்டு கொள்ளவில்லை. டில்லியில் இருந்து யாரோ ஓர் ஆறம் கட்டை அரசியல்வாதி வருகிறார் என்று நினைத்துக் கொண்டார்கள்.



பேஹல்பூர் கிராமத் தலைவருக்கு விசயம் தெரிந்து ஓடோடிப் போய் கமலா பிரசாத் குழுவினரை வரவேற்று இருக்கிறார்.

கமலா பிரசாத்தின் கொள்ளு தாத்தா ராம் லக்கன் (Ram Lakhan). அவர் 1889-ஆம் ஆண்டில் திரினிடாட் நாட்டிற்குச் சென்றதைப் பற்றி கிராம மக்களிடம் கிராமத் தலைவர் சொன்னார்.

இப்போது கமலா பிரசாத் ஒரு நாட்டின் பிரதமர் என்று சொன்னதும் மக்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஒரே ஆரவாரம். கமலா பிரசாத்தின் சின்ன மாமா வழி தாத்தாவின் வீட்டை அடையாளம் காட்டினார்கள்.



கிராமத்தின் சந்து பொந்துகளில் நடந்து தாத்தாவின் வீட்டுக்குப் போனார் கமலா பிரசாத். தன் உறவினர்களை அடையாளம் கண்டு கண்ணீர் விட்டுக் கட்டிப் பிடித்து அழுது இருக்கிறார்.

அப்போது அவர் சொன்னார். ’இது என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாள். உலகில் நான் எங்கு இருந்தாலும் என் உடலில் ஓடுவது இந்தியர் இரத்தம் எனபதை நான் என்றைக்கும் மறக்க வில்லை’ என்றார்.

’இந்த மண்ணில் இருந்து என்னுடைய மூதாதையர்கள் திரினிடாட் நாட்டிற்கு வந்த போது தங்கம், வெள்ளி, பணம் எதையும் கொண்டு வரவில்லை. தங்கள் உழைப்பை மட்டுமே நம்பி வந்தார்கள். ஆனால் அப்படி வரும் போது இந்திய இரத்ததையும் இந்தியக் கலாசாரத்தையும் கொண்டு வந்தார்கள். அப்படியே எங்களுக்கு இந்திய நாட்டின் மாண்புகளையும் பண்புகளையும் சொல்லித் தந்தார்கள்.’


’ஒன்று மட்டும் சொல்வேன். உங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்க வையுங்கள். என் பெறோர்கள் எங்களைப் படிக்க வைத்தார்கள். அதனால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்’ என்று உணர்ச்சி ததும்பப் பேசினார். அதைக் கேட்டு மக்கள் நெகிழ்ந்து போனார்கள்.

ஊர் மக்கள் அனைவரும் ஹெலிகாப்டர் வரை வந்து கமலா பிரசாத்தை வழி அனுப்பி வைத்து இருக்கிறார்கள். போகும் போது தன் கொள்ளு தாத்தாவையும் திரினிடாட் தொபாகோ நாட்டிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்றதாகச் சொல்லப் படுகிறது.

திரினிடாட் தொபாகோ நாட்டில் இந்தியர்கள் சிறுபான்மை இனத்தவராக இருந்தாலும், அந்தச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருந்தார் என்பது பெருமைக்குரிய விசயம் தானே.



கமலா பிரசாத்தை இந்திய வம்சாவழியினர் எனும் பார்வையில் பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து அங்கு தொழிலாளர்களாகப் போன வாரிசுகளில் ஒருவர் பிரதமராகப் பொறுப்பு வகித்து இருக்கிறார். அதைத்தான் ஓர் உலக விசயமாகப் பார்க்கிறோம்.

எங்கு இருந்தாலும் இந்திய வம்சாவழியினர் கல்வியால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும் என்பதற்கு கமலா பிரசாத் நல்ல ஒரு சான்று.

2011-ஆம் ஆண்டில், உலகின் பதின்மூன்றாவது செல்வாக்கு மிக்க பெண் தலைவராக கமலா பிரசாத்தை டைம் பத்திரிக்கை தேர்வு செய்தது.

2012-ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பிரவாசி பாரதிய சம்மன் விருது (Pravasi Bharatiya Samman) வழங்கப் பட்டது.

உலகின் பல நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர்; குறிப்பாக தமிழர்கள் மற்றும் ஈழத்து வாரிசுகள்; அந்த அந்த நாடுகளின் அரசியல் பீடங்களில் கோலோச்ச ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பாவனை தொடர வேண்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.07.2020

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Kamla_Persad-Bissessar.

2. https://www.chuvadugal.com/2012/11/blog-post_10.html.

3. https://caricom.org/saluting-our-women-trinidad-and-tobago-pm-kamla-persad-bissessar/

4. http://caribbeanelections.com/knowledge/biography/bios/persad_bissessar_kamla.asp.

5. Kamla makes call for keener focus on women". The Trinidad Guardian Newspaper. 13 March 2011.






ஜாவா இஜோ திருமூர்த்தி கோயில்

தமிழ் மலர் - 22.07.2020 - புதன்

இயற்கை அள்ளித் தெளித்த பச்சைக் காட்டுக்குள் அமைதி கொள்ளும் அற்புதமான கோயில். ஒரு தடவை பார்த்தால் மறுபடியும் பார்க்கச் சொல்லும் சிருங்காரமான கோயில்.



கடந்த 1000 ஆண்டுகளாக இனிதான இனியக் கோயிலாய்க் காட்சி தரும் நளினமான கோயில். இந்தோனேசியாவின் கோயில்களில் மிகவும் அழகான கோயில். அதுதான் ஜாவா இஜோ கோயில்.

இந்தோனேசியாவில் ஆயிரக் கணக்கான கோயில்கள் உள்ளன. ஒரே வார்த்தையில் இப்படி சொல்லலாம்.

14-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் ஜாவா, சுமத்திரா தீவுகளில் நிறைய கோயில்களைக் கட்டி அழகு பார்த்து இருக்கிறார்கள். பல நூற்றண்டுகளாகக் கோயில் கட்டிடக் கலையில் மௌன ராகங்களைப் பாடி இருக்கிறார்கள்.



மஜபாகித் அரசு; மத்தாரம் அரசு; சிங்காசாரி அரசு; சைலேந்திரா அரசு; சுந்தா அரசு; ஸ்ரீ விஜய அரசு என்று பற்பல அரசுகள் இந்து கோயில்களையும் பௌத்த கோயில்களையும் கட்டிப் போட்டு, பல்லவர்களின் கலை கலாசாரத்திற்குப் பெருமை செய்து இருக்கிறார்கள்

இந்தோனேசியாவின் மிகப் பெரிய எரிமலை மெராப்பி (Mount Merapi). இந்த எரிமலைக்கு அருகாமையில்; 50 கி.மீ. வட்டாரத்திற்குள் நிறைய கோயில்களைக் கட்டி இருக்கிறார்கள்.

ஏன் என்றால் அப்பேர்ப்பட்ட மண் வளம். போட்டது எல்லாம் முளைக்கும்; நட்டது எல்லாம் விளையும் எனும் வரப்பிரசாதம். எரிமலைச் சாம்பல்கள் தான் அதற்குக் காரணம்.



இந்தோனேசியாவிலேயே மிகப் பெரிய இந்து ஆலயம் பிரம்பனான் திருமூர்த்தி ஆலயம். இந்த ஆலயம்கூட மெராப்பி எரிமலையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் தான் உள்ளது.

16-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு பெரிய பூகம்பத்தின் போது கோயிலின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகள் இன்றும்கூட சிதறிக் கிடக்கின்றன.

ஜாவா தீவில் அடிக்கடி எரிமலை வெடிப்புகள்; அடிக்கடி பூகம்பங்கள். அங்குள்ள மக்களும் அதற்கு ஏற்றவாறு தங்களின் வாழ்வியலைத் தக்க வைத்துக் கொண்டு விட்டார்கள். எரிமலை கொந்தளிப்பாக இருந்தால் என்ன; பூகம்பத்தின் குமுறலாக இருந்தால் என்ன; அவர்களின் அழகிய மண் வாசனையை மட்டும் விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள்.



மெராப்பி எரிமலை கடந்த 400,000 ஆண்டுகளாகக் குமுறிக் கொண்டு இருக்கிறது. ஒரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாபெரும் வெடிப்பு. பயங்கரமான சேதங்கள்.

ஒவ்வோர் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெராப்பி எரிமலை, சின்னதாய்த் தாலவட்டம் போடுகிறது. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிதாய் ஆலவட்டம் போடுகிறது.

சில வெடிப்புகள் பல நூறு உயிர்களைப் பலி கொண்டு உள்ளன. 1006, 1786, 1822, 1872, 1930-ஆம் ஆண்டுகளில் பெரிய பெரிய வெடிப்புகள். 1930-ஆம் ஆண்டு வெடிப்பில் 13 கிராமங்கள் அழிந்தன. 1,400 பேர் கொல்லப் பட்டனர்.



1006-ஆம் ஆண்டில் மிகப் பெரிய வெடிப்பு. மத்திய ஜாவா முழுவதும் எரிமலைச் சாம்பலால் மூடப்பட்டது. அந்த வெடிப்பு தான் மத்தாரம் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகவும் சொல்லப் படுகிறது.

ஜாவா தீவில் வாழும் ஜாவானிய மக்களில் பெரும்பாலோர் இந்தியப் பாரம்பரிய கலாசாரப் பின்னணியில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள். அங்கு உள்ள ஆயிரக் கணக்கான கோயில்களே அதற்குச் சான்று.

இஜோ கோயில் (Ijo Temple) இந்தோனேசியா, ஜாவா, யோக் ஜகர்த்தாவில் (Yogyakarta) இருந்து 18 கி.மீ. தொலைவில் ரத்து போகோ (Ratu Boko Palace) அரண்மனை வளாகத்தில் அமைந்து உள்ளது. 10-ஆம்; 11-ஆம் நூற்றாண்டுகளில் கட்டம் கட்டமாய்க் கட்டப்பட்ட கோயில்.



மத்தாரம் பேரரசை (Mataram Kingdom) பூமி மத்தாரம் (Bhumi Mataram) என்றும் அழைப்பார்கள். இந்தப் பேரரசை ஆட்சி செய்த அரசர்கள் தான் இஜோ கோயிலைக் கட்டினார்கள். இந்தக் கோயிலைக் கட்டுவதற்கு முன்னர் 8-ஆம்; 9-ஆம் நூற்றாண்டுகளில் இவர்கள் ஜாவாவில் நிறைய கோயில்களைக் கட்டி இருக்கிறார்கள்.

இவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் ஜாவானிய கலைக் கலாசாரம்; கட்டிடக் கலைகள் நன்கு மலர்ந்து உச்சம் கண்டன.

மத்தாரம் பேரரசின் மையப் பகுதியான கேது (Kedu); கெவு சமவெளிகளில் (Kewu Plain) நிறைய கோயில்கள். மிகவும் குறிப்பிடத் தக்கவை கலாசன் (Kalasan); சேவு (Sewu); போரோபுதூர் (Borobudur); பிரம்பனான் (Prambanan) கோயில்கள்.

இவை அனைத்தும் இன்றைய யோக் ஜகார்த்தா நகரத்திற்கு மிக அருகில் உள்ளன.


ஜாவாவில் மட்டும் அல்ல. சுமத்திரா, பாலி, தெற்கு தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் மத்தாரம் பேரரசு மேலாதிக்கம் செய்து உள்ளது. அதில் கம்போடியாவில் இருந்த கெமர் பேரரசும் அதன் மேலாதிக்க சாம்ராஜ்யமாக இருந்து உள்ளது.

பிற்காலத்தில் மத்தாரம் பேரரசு மதத்தின் அடிப்படையில் இரண்டு வம்சாவளி அரசுகளாகப் பிரிக்கப் பட்டன. ஒன்று பௌத்த மத அரசு. மற்றொன்று சிவ சமய (Shivaist) அரசு. ஒரு கட்டத்தில் அங்கே உள்நாட்டுப் போர்.

அதனால் மத்தாரம் பேரரசு இரண்டு சக்தி வாய்ந்த இராச்சியங்களாகப் பிரிக்கப் பட்டது. ஜாவாவில் ராக்காய் பிகாடன் (Rakai Pikatan) தலைமையில் மேடாங் அரசு (Medang kingdom). இது சிவ சமயத்தைப் பின்பற்றியது.


சுமத்திராவில் பாலபுத்ரதேவா (Balaputradewa) தலைமையில் ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya). இது புத்த மதத்தைப் பின்பற்றியது. இவர்களுக்கு இடையிலான பகைமை கி.பி.1006-ஆம் ஆண்டு வரை ஒரு முடிவிற்கு வரவில்லை.

அந்த ஆண்டில் மெராப்பி மலை பயங்கரமாக வெடித்தது. அதன் தாக்கத்தில் அவர்களும் கொஞ்ச நாட்களுக்கு அடங்கிப் போனார்கள். இரண்டு ஆண்டுகள் தான் அமைதி. அப்புறம் மறுபடியும் பிணக்குகள்.

அந்தக் காலக் கட்டத்தில் ஊராவரி (Wurawari) எனும் ஒரு சின்ன அரசு ஜாவாவில் இருந்தது. மேடாங் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அடிமை அரசு. இந்த ஊராவரி அரசை, மேடாங் அரசுக்கு எதிராக ஸ்ரீ விஜய அரசு தூண்டி விட்டது.



அதாவது மேடாங் அரசை எதிர்த்துக் கலகம் செய்யுமாறு தூண்டி விட்டது. அப்போது மேடாங் அரசின் தலைநகரம் வத்துகலூ (Watugaluh). கிழக்கு ஜாவில் இருந்தது. கலகம் தொடங்கியது. பற்பல சேதங்கள். அதில் வத்துகலூ நகரம் சூரையாடப் பட்டது. அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

அதன் பின்னர் ஸ்ரீ விஜய பேரரசிற்கு எல்லாமே ஏறுமுகம். இந்தோனேசியாவில் எதிர்ப்பு இல்லாத மாபெரும் சக்தியாகவும்; எதிர்க்க முடியாத மேல் ஆதிக்கமாகவும் உச்சத்தில் இமயம் பார்த்தது.

வத்துகலூ கலத்திற்குப் பின்னர் மேடாங் அரசின் சிவ சமய வம்சாவழியினர் தப்பிப் பிழைத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் 1019-ஆம் ஆண்டில் மேடாங் சிவ சமய வம்சாவழியினர் கிழக்கு ஜாவாவை மீட்டு எடுத்தனர்.



அதன் பின்னர் ககுரிபான் (Kahuripan kingdom) எனும் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். அந்தப் புதிய அரசாங்கம் உருவாக்கப் படுவதற்கு பாலி தீவை ஆட்சி புரிந்த உதயனா அரசரின் மகன் ஆர்லங்கா (Airlangga) பெரிதும் உதவி செய்தார்.

ஆர்லங்காவின் முழுப் பெயரைக் கேட்டால் வியப்பாக இருக்கும். ஸ்ரீ லோகேஸ்வர தர்ம வங்ச ஆர்லங்கா ஆனந்த விக்கிர முத்துங்க தேவா (Sri Lokeswara Dharma Wangsa Airlangga Ananta Wikra Mottungga Dewa). அப்போதைய அரசர்களின் பெயர்களில் அவர்களின் பரம்பரை பெயர்களும் சேர்ந்து வரும்.

இஜோ கோயில் மிகப் பழைமையான கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கோயிலின் வளாகம் யோக் ஜகார்த்தா, சிலேமான் (Sleman) மாநிலம், பிரம்பனான் (Prambanan) மாவட்டம், சம்பிரெஜோ (Sambirejo) கிராமம், குரோயோகன் (Groyokan) குக்கிராமத்தில் அமைந்து உள்ளது. அதுவே முழுமையான முகவரி.



இஜோ கோயிலுக்கு அருகில் ஒரு மலை. அதன் பெயர் குமுக் இஜோ (Gumuk Ijo) மலை. அந்த மலையின் பெயரில் இருந்து தான் கோயிலுக்கும் பெயர் வந்தது.

கோயிலின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 410 மீட்டர். கோயிலைச் சுற்றிலும் நெல் வயல்கள். அருகாமையில் அடிசுசிப்தோ அனைத்துலக விமான நிலையம் (Adisucipto International Airport) உள்ளது.

இந்தக் கோயில் இருப்பதால் தான் விமான நிலையத்தைப் பெரிதாக்க முடியாமல் தயங்கி நிற்கிறார்கள். ஆக கோயிலைப் பாதுகாக்கும் பொருட்டு விமான நிலையத்தையே வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள்.

கோயில் வளாகம் பல படிவரிசைகளைக் கொண்டு உள்ளது. மேற்கு பகுதியில் சில கோயில் இடிபாடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இன்றும் தோண்டப்பட்டு வருகின்றன.



இந்தப் படிவரிசைகளில் 10-க்கும் மேற்பட்ட சிறிய கோயில்களின் இடிபாடுகள் இன்னும் புதைபட்ட நிலையில் உள்ளன. இவற்றுக்குப் பெரும்வரம் (Perwara) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

பெரும்வரம் கோயில்களில் ஒரு சில கோயில்கள் நல்ல நிலையில் உள்ளன. அவை தான் இப்போதைக்கு இஜோ கோயில்களின் தலையாய கோயில்களாகும்.

இந்து மதத்தின் மிக உயர்ந்த மூன்று தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் திரிமூர்த்திகளைப் பெருமை படுத்துவதற்காக மூன்று பெரும்வரம் கோயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மூன்று கோயில்களிலும் உள் அறைகள் உள்ளன. சாய்சதுர வடிவத்தில் துளையிடப்பட்ட ஜன்னல்கள் உள்ளன. இரத்தினமாலை வடிவத்தில் கூரைகள் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. பிரதான கோயில் சதுர வடிவத்தில் உள்ளது.


கோயிலின் மேலே ஒன்பதாவது அடுக்கில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. மர்மத்தைக் கொண்ட எழுத்துகளின் வடிவங்கள். மந்திர எழுத்துக்கள் என்று சொல்கிறார்கள். 16 முறை எழுதப்பட்டு உள்ளன. அந்த எழுத்துகளில் "ஓம் சர்வ வினாசா... சர்வ வினாசா" எனும் வாசகங்கள்.

இஜோ கோயிலில் நுழைவுக் கட்டணம் இல்லை. கார், மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கிறார்கள். சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்கு அருமையான இடம். கண்கொள்ளா காட்சி. மாலை ஐந்து மணிக்குள் அங்கே இருக்க வேண்டும்.

இஜோ கோயில் மற்ற மற்ற சுற்றுலா இடங்களுக்கு அருகில் உள்ளது. இதற்கு அருகில் பிரம்பனான் கோயில்; பிலாசான் கோயில் (PLAOSAN TEMPLE); அபாங் கோயில் (ABANG TEMPLE); பிந்தாங் மலை, பழைமையான லங்கேரான் எரிமலை (NGLANGGERAN ANCIENT VOLCANO) போன்றவை உள்ளன.

இஜோ கோயில் கடல் மட்டத்தில் இருந்து 410 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த உயரத்தின் காரணமாக கீழே உள்ள விவசாய நிலங்களின் அழகுக் காட்சிகள்; இயற்கைக் காட்சிகளை நன்கு ரசிக்க முடியும்.

ஒரு கோயிலைக் காப்பாற்றுவதற்காக ஒரு விமான நிலையத்தையே வேறு ஓர் இடத்திற்கு மாற்றுவதற்கு திட்டம் வகுத்து இருக்கிறார்கள் என்றால்… வேறு என்னங்க சொல்வது. இந்தோனேசிய வரலாறு இதிகாசங்களை மறைக்காத வரலாறு. இந்தியக் கலாசாரங்களைப் போற்றுகின்ற வரலாறு. கைகூப்புகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.07.2020

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Ijo_Temple

2.https://web.archive.org/web/20130215110217/http://candi.pnri.go.id/jawa_tengah_yogyakarta/index.htm

3. https://www.yogyes.com/en/yogyakarta-tourism-object/candi/ijo/

4. http://mitos-cerita-legenda.blogspot.com/2017/01/kerajaan-wura-wuri.html