23 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: கோலா குராவ் ஜின் ஹெங் தோட்டம் 1935

1900-ஆம் ஆண்டுகளில் பேராக், கோலா குராவ் பகுதியில் நிறையவே ரப்பர் தோட்டங்கள். அதற்கு முன்னர் 1870-ஆம் ஆண்டுகளில் அங்கே பெரும்பாலும் காபி கரும்புத் தோட்டங்கள். இந்தக் காபி கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.

1895-ஆம் ஆண்டுகளில் அனைத்துலக அளவில் காபியின் விலை குறைந்தது. காபிச் செடிகளுக்கும் அடுத்தடுத்து நோய்கள். அதனால் கப்பி தோட்ட முதலாளிகள் ரப்பர் பயிர் செய்வதில் தீவிரம் காட்டினர்.

காபி கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய வந்த மலாயா தமிழர்கள் ரப்பர் தோட்டங்களுக்குள் புலம் பெயர்ந்தனர்.

அந்த வகையில் கோலா குராவ் வட்டாரத்தில் பல ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. அப்போது உருவானது தான் கோலா குராவ், ஜின் ஹெங் தோட்டம் (Jin Heng Estate, Kuala Kurau, Perak). இந்தத் தோட்டம் பினாங்கில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ளது. நீராவிக் கப்பல்கள் பயன்படுத்தப் பட்டன. ஐந்து மணி நேரப் பயணம்.

Jin Heng estate, owned solely by Mr. Heah Swee Lee, member of the State Council, Perak, is situated on the right bank of the Kurau river, in the Krian district of the State of Perak, Federated Malay States.

It is distant about 40 miles from Pinang, with which there is daily communication by steam launch, the passage each way taking about five hours.

இந்தத் தோட்டம் நீர் நிலைகள் நிறைந்த பகுதியில் இருந்த தோட்டம். அதனால் அங்கே பல வகையான பறவைகள். குறிப்பாக உள்ளான் குருவிகள். அந்தக் குருவிகளைச் சுட்டுப் பார்ப்பது வெள்ளைக்காரர்களுக்கு நல்ல ஒரு பொழுது போக்கு.

ஆளாளுக்குத் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு நூற்றுக் கணக்கில்; ஆயிரக் கணக்கில் உள்ளான் குருவிகளைச் சுட்டுத் தள்ளி இருக்கிறார்கள். மகிழ்ச்சி.

அவர்களின் பறவை சேட்டைகளுக்கு... மன்னிக்கவும் வேட்டைகளுக்கு உதவியாக இருந்தவர்கள் நம்முடைய தமிழ்ப் பையன்கள் தான். தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு நன்றாகவே ‘போஸ்’ கொடுத்து இருக்கிறார்கள். 1935-ஆம் ஆண்டு எடுத்த படம். மலாயா வரலாற்றில் இதுவும் ஒரு காலச் சுவடு.

சிங்கப்பூர் வரலாற்று ஆய்வாளர் ஜெயமலர் கதிர்தம்பி (Jeyamalar Kathirithamby) எழுதி இருக்கும் Nature and Nation: Forests and Development in Peninsular Malaysia எனும் நூலில் பக்கம்: 195-இல் அந்தப் பக்கம் இடம்பெற்று உள்ளது.

சான்றுகள்:

1. Nature and Nation: Forests and Development in Peninsular Malaysia Pag: 195
By Jeyamalar Kathirithamby-Wells

2. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 423

22 செப்டம்பர் 2020

வியட்நாம்: 2000 ஆண்டு சம்பா பூர்வீக இந்து மக்கள்

இந்த உலகில் இந்தியர் அல்லாத பூர்வீக இந்து மக்கள் இரண்டே இடங்களில் தான் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பழைமை வாய்ந்த இந்தியக் கலாச்சாரத்துடன் 2,000 ஆண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றியும் வருகின்றார்கள்.

Cham people visit this one of the oldest Hindu temples in Vietnam

இந்தோனேசியா பாலி தீவில் ஒரு பிரிவினர். இவர்கள் பாலினிய இந்துக்கள் (Balinese Hinduism). அடுத்த பிரிவினர் வியட்நாம் நின் துன் மாநிலத்தில் (Ninh Thuan Province) பலமான் சாம் (Balamon Cham) எனும் பூர்வீக இந்து மக்கள். இவர்கள் சாம் இந்துக்கள் (Cham Hindus) என்று அழைக்கப் படுகிறார்கள்.[#1]

[#1]. Balamon Cham, one of only two surviving non-Indic indigenous Hindu peoples in the world, with a culture dating back thousands of years.

[#1]. Parker, Vrndavan Brannon (April–June 2014). "Cultures: Vietnam's Champa Kingdom Marches on". Hinduism Today.

Cham women performing a traditional dance in Nha Trang, Vietnam

சம்பா அல்லது சியோம்பா அரசு (Champa or Tsiompa) என்பது முன்பு காலத்தில் வியட்நாமில் இருந்த சின்னச் சின்ன அரசுகளின் ஒரு கூட்டு அரசாகும். பாண்டியர்கள் அமைத்த அரசு. அதுவே பின்னாட்களில் பல்லவர்களின் ஒரு பெரிய பேரரசாக மாறியது. சம்பா பேரரசு (Kingdom of Champa: கி.பி. 192 – கி.பி. 1832). சம்பா என்றால் சமஸ்கிருத மொழியில் சண்பகம் (campaka).[#2]

[#2]. Champa, Sanskrit Dictionary for Spoken Sanskrit". spokensanskrit.org.

சம்பா அரசைத் தோற்றுவித்தவர் பத்திரவர்மன் (Bhadravarman). இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 349 - கி.பி. 361. இவர்தான் சிம்மபுரம் (Simhapura - Lion City) எனும் நகரத்தை உருவாக்கியவர். இப்போது இந்த நகரம் Tra Kieu என்று அழைக்கப் படுகிறது. பத்திரவர்மன் தன் கடைசி காலத்தில் இந்தியாவிற்குச் சென்று கங்கை நதிக்கரையில் வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது.[#2.1]

[#2.1] Badravarman built a number of temples, conquered his rivals, ruled well and in his final years abdicated his throne and spent his last days in India on the banks of the Ganges River.

Onam celebration in Saigon fetes Indian diversity

சண்பக மண் என்று பெயர் வைத்து இருக்கலாம். இன்னும் ஒரு விசயம். இவருக்கு முன்னதாகவே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அவர்களில் முதலாவதாக ஆட்சி செய்தவர் திருமாறன் பாண்டியன் என்று வியட்நாமிய வோ-கான் கல்வெட்டு (Vo Canh inscription) சொல்கிறது.[#3]

[#3]. The oldest Sanksrit inscription discovered in Vietnam mentions the name of Sri Maran. The inscription is known as the Vo-Canh inscription.

தென்கிழக்கு ஆசியாவில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான சமஸ்கிருத கல்வெட்டு. Vo Canh கல்வெட்டு ஆகும். 1885-ஆம் ஆண்டில் வியட்நாமின் நா திராங் (Nha Trang) நகரில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள வோ-கான் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[#4]

[#4]. The Vo-Canh inscription is the oldest Sanskrit inscription ever found in Southeast Asia, discovered in 1885 in the village of Vo-Canh, about 4 km from the city of Nha Trang, Vietnam

Celebrating the rainy season’s three-day Kait Festival

அந்தக் கல்வெட்டில் இப்படி ஒரு வாசகம் வருகிறது.
"the ornament... by that which is the joy of the family of the daughter of the grandson of King Sri Mara... has been ordained"

இதன் பொருள்: ஆபரணம் ... ஸ்ரீ மாறனின் பேரன் மகளின் குடும்பத்தின் மகிழ்ச்சி... இதன் மூலம் உறுதி செய்யப் படுகிறது. இந்தக் கல்வெட்டைப் பற்றி, பின்னர் பத்திரிகையில் விளக்கமாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

இந்தோனேசியாவின் மஜபாகித்; ஸ்ரீ விஜயம்; சிங்காசாரி; மத்தாரம் போன்று சம்பா பேரரசும் அந்தக் காலக் கட்டத்தில் பெரிய ஓர் அரசு. இந்தியாவும் சீனாவும் இதனிடம் பிரச்சினை பண்ணாமல் சற்றே ஒதுங்கி இருக்கின்றன.  

இன்றைய மத்திய வியட்நாம்; தெற்கு வியட்நாம் கடற்கரை முழுவதும் கி.பி 2-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டு வரையில் சம்பா பேரரசு வியாபித்து இருந்து உள்ளது.

1. சம்பா பேரரசு முதலாவது தலைநகரம் சிம்மபூரம் (Simhapura - 4th century to the 8th century CE)

2. சம்பா பேரரசு இரண்டாவது தலைநகரம் இந்திரபுரம் (Indrapura கி.பி 875 – கி.பி 978)

3. சம்பா பேரரசு மூன்றாவது தலைநகரம் அமராவதி விஜயா (Amaravat Vijaya கி.பி 978 – கி.பி 1485)

4. சம்பா பேரரசு (கௌதாரம் சிற்றரசு - Kauthara Polity) நான்காவது தலைநகரம் கௌதாரம் (Kauthara கி.பி 757 - கி.பி 1653)

5. சம்பா பேரரசு (பாண்டுரங்கா சிற்றரசு - Panduranga Polity) ஐந்தாவது தலைநகரம் பாண்டுரங்கா (Panduranga கி.பி 757 - கி.பி 1832)

1832-ஆம் ஆண்டு சம்பா பேரரசு இப்போதைய வியட்நாமிய அரசாங்கத்துடன் இணைக்கப் பட்டது. இந்து மதம் எப்படி இங்கே வந்தது.

கி.பி 4-ஆம் நூற்றாண்டில் அண்டை நாடான பூனான் (Funan) அரசு சம்பா மீது தாக்குதல் நடத்தி சம்பாவைக் கைப்பற்றியது. அதன் பின்னர் இந்து மதம் சம்பாவில் அரசாங்க மதமானது. பல நூற்றாண்டுகளாகச் சம்பா சாம்ராச்சியத்தின் கலை, கலாசாரங்களில் இந்தியச் சாரங்கள் பரிணாமம் பெற்று உள்ளன. சம்பா இந்துக்கள் சிவனை வழிபடும் சைவ சமயத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.

கி.பி 4-ஆம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே சம்பா அரசு இருந்து உள்ளது. அப்போது அதன் துறைமுக நகரம் காதிகரம் (Kattigara).[#5]

[#5]. (Champa was a formidible Hindu kingdom, renowned for its immense wealth and sophisticated culture. Its major port was Kattigara.)

பல இந்துக் கோயில்கள்; பல சிவப்புச் செங்கல் கோயில்கள் சம்பா நிலங்களில் கட்டப்பட்டன. முன்பு காலத்தில் மை சான் (My Son) எனும் நகரம் முக்கிய இந்து மத மையமாக விளங்கி உள்ளது. இங்கே நிறைய இந்துக் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. அதற்கு அருகாமையில் ஹோய் ஆன் (Hoi An) எனும் ஒரு துறைமுக நகரம். இப்போது இந்த இரு இடங்களுமே உலக பாரம்பரியத் தளங்களாக (UNESCO World Heritage Sites) அறிவிக்கப்பட்டு உள்ளன.[#6]

[#6]. Champa legacy is the red-brick temples, or Cham towers, the oldest found dating to the seventh and eighth centuries. The temple city of My Son, near Hoi An, preserved as a UNESCO World Heritage site, has nearly 70 individual structures.

Nearly 2,000 years ago, Claudius Ptolemy wrote of Cattigara and outlined it on his map of the world. Modern scholarship has confirmed Cattigara as the forerunner of Saigon (modern day Ho Chi Minh City.

மீகோங் ஆறு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் வரும் கோங் எனும் கடைச் சொல் கங்கை நதியைக் குறிக்கின்றது.[#7]

[#7]. Cattigara was the main port at the mouth of the Mekong River, a name derived from Mae Nam Khong, the Mother Water Ganga.

10-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் பரவியது. அதன் பின்னர் பிரஞ்சுக்காரர்களின் கிறிஸ்துவ மதம் வந்தது. இருந்தாலும் அங்கு வாழ்ந்த பலர் தங்களின் பழைய இந்து நம்பிக்கைகள், இந்து சடங்குகள் மற்றும் இந்து பண்டிகைகளைக் கைவிடவில்லை. இன்னும் தக்க வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.

வியட்நாமில் இப்போது 60,000 பூர்வீக இந்துக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் திருமணம்; காதணி விழா; திருவிழாக்கள் எல்லாம் இந்து மதம் சார்ந்தவையாக உள்ளன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.09.2020
© 2020 https://ksmuthukrishnan.blogspot.com. All rights reserved

சான்றுகள்:

1. Thurgood, Graham (1999). From Ancient Cham to Modern Dialects.

2. Ralph Bernard Smith (1979). Early South East Asia: essays in archaeology, history, and historical geography. Oxford University Press. p. 447.

3. Chatterji, B. (1939). JAYAVARMAN VII (1181-1201 A.D.) (The last of the great monarchs of Cambodia). Proceedings of the Indian History Congress. - www.jstor.org/stable/44252387

4. Hindus of Vietnam - Hindu Human Rights Online News Magazine". www.hinduhumanrights.info.

5. India's interaction with Southeast Asia, Volume 1, Part 3 By Govind Chandra Pande, Project of History of Indian Science, Philosophy, and Culture, Centre for Studies in Civilizations (Delhi, India).

6. https://en.wikipedia.org/wiki/Võ Cạnh inscription

 

 

 

21 செப்டம்பர் 2020

இந்தோனேசியா கிலிங்கல் பெண்கள் - 1895

இந்தோனேசியாவின் மொலுக்கஸ் தீவுக் கூட்டத்தில் தன்னந்தனியாக ஒரு தீவு. அம்போன் தீவு. அங்கே பல நூறு ஆண்டு காலமாக ஒரு வகையான பூர்வீக மக்கள் வாழ்கிறார்கள். அவர்களைக் கிலிங்கல் மக்கள் (Klingkel) என்று அழைக்கிறார்கள். இவர்களை கிங்கல் அல்லது லும்மல் (Kinkel, Lummel) என்றும் அழைப்பது உண்டு. டச்சுக்காரர்கள் இவர்களை அல்போர் (Alfoer) என்று அழைத்தார்கள்.

Klingel Women 1895

இங்கே கெலிங் என்று சொன்னால் எப்படி நமக்குக் கோபம் வருகிறதோ; அதே போல அந்தக் கிலிங்கல் மக்களைக் கிங்கல் என்று அழைத்தால் அவர்களும் கோபம் அடைகிறார்கள். கிங்கல் எனும் சொல் அவர்களின் இனத்தை அவமதிக்கும் சொல்லாகக் கருதுகிறார்கள்.

அல்போர் என்ற சொல் வெள்ளைக்காரர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்தோனேசிய மொழியில் 'கிங்கல்' அல்லது 'லம்மல்' என்பது நாகரிகமற்ற சொல் ஆகும். அந்தச் சொல்லைத் தவிர்த்து வருகிறார்கள்.

(The word Alfoer is only used by white people. In the national language it is a term of abuse such as kinkel or lummel, an uncivilized person in short. It is a coastal population designation for inland residents.)

Ambonese women performing a dance on Queens Day 31 August 1929

இந்தக் கிங்கல் மக்கள் எங்கே இருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எப்படி வந்தார்கள் எனும் விவரங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்தோனேசியாவைக் கலிங்கா அரசு ஆட்சி செய்த போது அங்கே இருந்து அம்போன் தீவிற்குக் குடிபெயர்ந்து இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. உறுதியாகத் தெரியவில்லை.

கலிங்கா அரசு 6-ஆம் - 8-ஆம் நூற்றாண்டுகளில் ஜாவா தீவை 200 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்த அரசாகும்.

Klingel Girls

கிலிங்கல் மக்கள் ஒரு தனிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 16 - 18 ஆம் நூற்றாண்டுகளில் அம்போன் தீவு பழங்குடி மக்களுடன் கலந்ததன் விளைவாக கிலிங்கல் இனம் உருவாகி இருக்கலாம் என்றும் மனிதவியலாலர்கள் சொல்கிறார்கள். இந்தக் கலிங்கல் மக்கள் கடற்கரைப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.

மற்ற மற்ற பூர்வீக மக்களுடன் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம். எதிரிகளின் தலைகளைக் கொய்து வருவதும் இவர்களின் போர் முறை வழக்கம்.

Klingkels were formed in the 16th to 18th century as a result of the mixing of the indigenous population of Ambon Island.

Klingel youths

இங்கேதான் இந்தோனேசியாவின் மிகப் பிரபலமான வனவிலங்கு பூங்கா உள்ளது. அதன் பெயர் மனுசீலா தேசியப் பூங்கா (Manusela National Park). பெயரைப் பாருங்கள். மனுசீலம். பெரும்பாலான கிலிங்கல் மக்கள் இந்த மனுசீலா பூங்காவில் தான் வாழ்கிறார்கள்.

1895-ஆம் ஆண்டு அம்போன் தீவுக்குச் சென்ற நஜோன் (Najoan, P.) எனும் டச்சு நாட்டுப் புகைப்படக்காரர் இந்தப் பெண்களைப் படம் எடுத்து இருக்கிறார். இந்தப் பெண்களின் ஆடைகள்; காலணிகள்; நகை ஆபரணங்கள்; அலங்காரத் துணிகள் எல்லாமே அசல் தமிழர்களின் சாயலைக் கொண்டவை.

இவர்களின் முகத் தோற்றமும்; இவர்களின் வழித்தோன்றல்களின் முகத் தோற்றமும் தமிழர்களின் முகத் தோற்றம் கொண்டவையாக உள்ளன. அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. இந்தக் கிலிங்கல் மக்கள் பாலினேசிய; மாலினேசிய ஆதிக்குடிகளின் வழித் தோன்றலாக இருக்கலாம்.

ஏன் என்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சார்ந்த ஆப்பிரிக்க மக்களும் (எதியோப்பியா); லுமேரியா எனும் குமரிக் கண்டத்தில் இருந்தும் தமிழர் சார்ந்த பரம்பரையினரும் கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் (Philippine Archipelago; Indonesian Archipelago) புலம் பெயர்ந்து இருக்கலாம்.

Ambon Island

இவர்கள் பலர் போர்னியோ; மொலுக்கஸ்; நியூகினி (Papua New Guinea); நுசந்தாரா (Nusantara) நிலப் பகுதிகளில் நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள். பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் இவர்கள் கட்டுமரங்கள் வழியாகப் போய் இருக்கிரார்கள். ஹவாய் தீவு மக்கலும் அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான்.

அவர்களில் சிலர் ஆஸ்திரேலியாவுக்குள் தஞ்சம் அடைந்தார்கள். அவர்கள் தான் இப்போதைய ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் (Aboriginal Australians).

(Humans are thought to have migrated to Northern Australia from Asia using primitive boats. A current theory holds that those early migrants themselves came out of Africa about 70,000 years ago, which would make Aboriginal Australians the oldest population of humans living outside Africa)

Ambon Girl

கிலிங்கல் மக்கள் அம்போய்னா தீவின் பூர்வீக மக்கள் என்று இந்தோனேசிய அரசாங்கம் வரையறுத்துச் சொல்கிறது. மொலுக்கஸ் தீவுக்கூட்டத்தில் பல நூறு பிரிவுகளைச் சார்ந்த பூர்வீகக் குடிமக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் கிலிங்கல் ஒரு பகுதியினர் என்றும் இந்தோனேசிய அரசாங்கம் சொல்கிறது.

ஆனால் இவர்களுக்கு எப்படி தமிழர்களின் உடல் அமைப்பு; முகச் சாயல் அமைந்து போயின என்பதுதான் பெரும் புதிராக உள்ளது.

இவர்களைப் பற்றிய மேல் விவரங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் பதிவு செய்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.09.2020

சான்றுகள்:

புகைப்படக்காரர்:  நஜோன், பி. (Najoan, P.)

படத்தின் தலைப்பு: அல்பர் பெண்கள், அம்பன், மொலுக்காஸ், இந்தோனேசியா (Alfoersche girls, Ambon, Moluccas, Indonesia 1895-1915)

1. Chang Chi-yun. Eastern Asia in the Sui and T'and Period. Historical Atlas of China. Vol. 1. Taipei: Chinese Culture University Press, 1980.

2. https://en.wikipedia.org/wiki/Manusela_National_Park

3. https://en.wikipedia.org/wiki/Maluku_Islands

4. https://youtu.be/PqjF0FIg0PI

5. Alfur, Ambon, Moluccas, Indonesia (1895-1915)

 

பத்தாங்காலி சுங்கை ரீமோ படுகொலை

தமிழ் மலர் - 15.05.2020

வியட்நாமில் ஒரு மை லாய் படுகொலை. அதே மாதிரி மலேசியாவில் பத்தாங்காலி படுகொலை. 24 நிராயுதபாணிச் சீனர்கள் அதிரடிக் கொலை. 1948 டிசம்பர் 12-ஆம் தேதி உலு சிலாங்கூர், பத்தாங் காலியில் பயங்கரமான படுகொலை. பத்தாங்காலி மக்கள் கண்ணீர்விட்டுக் கதறினார்கள். உலக மக்கள் விக்கித்துப் போனார்கள்.

மலாயா அவசரகாலத்தின் போது பிரிட்டிஷ் இராணுவம் செய்த ஓர் அட்டூழிய அட்டகாசம். மலேசியச் சீனர்ச் சமூகம் நீதி ஜெயிக்க வேண்டும் என்கிறது. இன்று வரைக்கும் போராடி வருகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. பற்பல சாக்கு போக்குகள். பற்பல சால்சாப்புகள். தட்டிக் கழித்துப் போய்க் கொண்டே இருக்கிறது.

மலேசியர்களும் விடுவதாக இல்லை. மலேசிய நாடாளுமன்றத்தில் மாண்புமிகு பான் இயூ தெங்கில் இருந்து குலசேகரன் வரை விவாதம் செய்து விட்டார்கள். முன்னாள் ஐ.ஜி.பி. ஹனீப் ஓமார் பக்க பலமாக நின்றார். ஆனால் லண்டன் அசைந்து கொடுப்பதாக இல்லை. சாகடிக்கப் பட்டவர்களின் உறவினர்களுக்கு இன்று வரை நியாயமும் கிடைக்கவில்லை.

மை லாய் (My Lai Massacre) படுகொலையைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன். 1960-களில் வியட்நாம் நாடு இரண்டு நாடுகளாக இருந்தது. கம்யூனிசப் பிடியில் வட வியட்நாம். மக்களாட்சிப் பிடியில் தென் வியட்நாம். வடக்கே இருந்து வியட்கோங் (Vietcong) போராளிகள் தென் வியட்நாமிற்குள் ஊடுருவிக் கொண்டு இருந்தனர். உலகப் போலீஸ்காரர் அமெரிக்கா சும்மா விடுவாரா.

‘நண்பேண்டா…’ என்று உதவிக்குப் போனார். ஆனால், என்ன ஆனது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுதான் மிச்சம். அது ஒரு வியட்நாமிய காப்பியம். ஒரு மாமாங்கத்திற்கு எழுதினாலும் எழுதி முடிக்க முடியாது. இப்போதைக்கு வேண்டாம்.

வியட்கோங்குகள் ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். போர் உச்சக் கட்டத்தில் இருந்த நேரம். 1968 மார்ச் 16-ஆம் தேதி. அமெரிக்க வீரர்கள் மை லாய் கிராமத்திற்குள் நுழைந்தனர்.

அங்கே கண்ணில் பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிசுக்கள் என்று 504 பேரைப் பாரபட்சம் இல்லாமல் வெட்டிக் கொன்றார்கள். ஒரு பூ புழுவைக்கூட விட்டு வைக்கவில்லை. கண்ணில் பட்டவை எல்லாம் அழித்து ஒழிக்கப் பட்டன. வீடு காடுகள் என்று ஒட்டு மொத்தமாகய்த் தீயிட்டு கொளுத்தப் பட்டன. இளம் பெண்கள் பலர் கற்பழிக்கப் பட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் வெட்டி வீசப் பட்டன.

வியட்கோங் போராளிகளுக்கு கிராம மக்கள் அடைக்கலம் கொடுத்ததாகக் குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்டது. விசயம் தெரிந்த உலக மக்கள் கொதித்து எழுந்தனர். ஐ.நாவில் விவாதிக்கிற அளவுக்கு விசயம் முற்றிப் போனது. அந்த மை லாய் படுகொலையைப் பற்றி வரலாறு இன்றும் பேசுகிறது. இனி என்றும் பேசிக் கொண்டுதான் இருக்கும். அது நிச்சயம். அப்பேர்ப்பட்ட ஒரு வரலாற்றுக் கொடுமை.

அதே அந்த மை லாய் படுகொலையைப் போல மலேசியாவிலும் ஒரு படுகொலை (Batang Kali Massacre). சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பத்தாங் காலியில் நடந்தது.

1948 டிசம்பர் 11-ஆம் தேதி மாலை மணி ஐந்து. பிரிட்டிஷ் இராணுவத்தின் 7-வது பிலாட்டூன் ‘ஜி’ கம்பனியைச் சேர்ந்த (7th Platoon, G Company, 2nd Scots Guards) இராணுவ வீரர்கள், பத்தாங் காலி சுங்கை ரீமோ (Sungai Rimoh) ரப்பர் தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கு இருந்த சீனத் தொழிலாளர்கள் அனைவரையும் ஓர் ஒதுக்குப் புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஆண்கள் மட்டும் தனியாகத் தனித்து வைக்கப் பட்டார்கள்.

இன்னொரு பிரிவில் பெண்களும் குழந்தைகளும் தனியாக நின்றார்கள். அன்றைய தினம் நடுநிசி வரைக்கும் விசாரணைகள். அதற்கு முன்னதாக மாலை மணி ஆறு வாக்கில், லூ குவேய் நாம் என்பவர் சுட்டுக் கொல்லப் பட்டார். அவரிடம் பப்பாளிப் பழங்களை விற்றதற்கான ஒரு ரசீது இருந்தது. அந்த ரசீது போலியானது என்று குற்றம் சாட்டப் பட்டது. அடுத்த விநாடி அவருடைய நெற்றியில் தோட்டா துளைத்தது.

இரவு ஏழு மணிக்கு கிராம மக்கள் அனைவரும் நான்கு ஐந்து கொங்சி வீடுகளில் அடைத்து வைக்கப் பட்டார்கள். விசாரணை செய்யப் போவதாகச் சொல்லி ஆண்களை மட்டும் தனியாகப் பிரித்து ஒதுக்கி வைத்தார்கள்.

ஆண்களுடன் தாங்களும் சேர்ந்து இருக்கப் போவதாகப் பெண்கள் மன்றாடி இருக்கிறார்கள். ஆண்களுக்கு வரப் போகும் ஆபத்தைப் பெண்கள் உணர்ந்து இருக்கலாம். ஆண்களைக் காப்பாற்றுவதற்குப் பெண்கள் எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார்கள். எதுவும் எடுபடவில்லை. துப்பாக்கி முனையில் பலவந்தம் நடந்ததுதான் மிச்சம்.

பெண்களும் குழந்தைகளும் தனித் தனியாக அடைத்து வைக்கப் பட்டார்கள். மறுநாள் காலையில் ஒரு லாரி வந்தது. அதில் பெண்களும் குழந்தைகளும் ஏற்றப் பட்டார்கள். பெண்கள் சிலர் ஏற மறுத்தார்கள். அவர்களைக் குண்டுக் கட்டாய்த் தூக்கி லாரிக்குள் வீசினார்கள். லாரி நகர்ந்தது.

அந்தச் சமயத்தில் சீனர்கள் வாழ்ந்த கொங்சி வீடுகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள். நெட்ட நெடுமரமாய் ஆற்றங் கரையில் ஆண்கள் சாய்ந்து விழுகின்றார்கள். லாரியில் இருந்த பெண்களும் குழந்தைகளும் கத்திக் கதறுகின்றார்கள்.

அவர்கள் வாழ்ந்த வீடுகள் எல்லாம் தீப்பற்றி எரிகின்றது. ஆனால் ஒரு லாரி மட்டும் செம்மண் சாலையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு மறைந்து போகின்றது.

இரண்டு நாட்கள் சென்று வந்து பார்க்கும் போது, ஆண்கள் சிலரின் தலைகள் தனியாக வெட்டப் பட்டு கிடந்தன. அவர்களின் ஆண் விதைகள் நசுக்கப் பட்டு கிடந்தன. உயிர்நாடிகள் அறுக்கப் பட்டுத் தொங்கின. மனிதச் சித்ரவதையின் உச்சக்கட்ட அலங்கோலக் காட்சிகள்.

அந்த நிகழ்ச்சியில் தப்பித்தவர் ஒரே ஒருவர். பெயர் சோங் ஹோங் (Chong Hong). படுகொலையை நேரடியாகப் பார்த்தவர். 2004-ஆம் ஆண்டு பி.பி.சி. வானொலிக்குப் பேட்டி கொடுத்தார்.

‘எங்களை வரிசையாக நிற்க வைத்தார்கள். நான் நடுவில் இருந்தேன். இந்தப் பக்கம் பத்து பேர். அந்தப் பக்கம் பத்து பேர். இரண்டு பக்கத்திலும் ஒரே சமயத்தில் ஒவ்வொருவராகச் சுட்டுக் கொண்டு வந்தார்கள். எல்லாம் நான்கு ஐந்து நிமிடங்களில் முடிந்து விட்டது.

எனக்குப் பக்கத்தில் இருந்தவரைச் சுடும் போது, நான் மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டேன். பக்கத்தில் இருந்தவர் சாயும் போது நானும் அவரோடு சேர்ந்து சாய்ந்து விட்டேன். மயக்கம் தெளிந்து பார்க்கும் போது, என் நண்பர்கள் எல்லோரும் பிணமாகக் கிடந்தார்கள். மனித நடமாட்டம் இல்லை. நான் மெதுவாக எழுந்து காட்டுக்குள் ஓடி விட்டேன்.

ராத்திரி பூராவும் அங்கேயே இருந்தேன். அவர்கள் மறுபடியும் வந்து விடுவார்களோ எனும் பயம். யாரும் வரவில்லை. இரண்டு நாள் கழித்து பெண்களும் பிள்ளைகளும் வந்தார்கள். எல்லாரும் அழுதார்கள்.

கொலை நடந்த இடத்தில் இதுவரையில் யாரும் வீடு கட்டவில்லை. ஆவிகள் உலாவுவதாக்ச் சொல்கிறார்கள்’ என்றார். வயது எழுபதுக்கும் மேல் ஆகிய நிலையில் அண்மையில் இறந்து போனார்.

ஒரு கிராமத்தின் ஆண்கள் எல்லோரும் ஏன் ஒட்டு மொத்தமாகக் கொலை செய்யப் பட்டனர். இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. முதலாவது காரணம்.

அவர்கள் பத்தாங் காலி காடுகளில் வாழ்ந்த கம்யூனிஸ்டுகளின் அனுதாபிகள். கம்யூனிஸ்டுப் போராளிகளுக்கு உணவு உடைகள வழங்கி ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளின் நண்பர்கள் என்பதால் அவர்கள் ஆங்கிலேயர்களின் எதிரிகள் ஆனார்கள்.  

அடுத்து இரண்டாவது காரணம். 1948 ஜூன் 16-ஆம் தேதி, பேராக் சுங்கை சிப்புட்டில் மூன்று பிரிட்டிஷ் தோட்ட நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப் பட்டதின் எதிர்வினை.

சுங்கை சிப்புட், எல்பில் (Elphil Estate) தோட்டத்தின் நிர்வாகி ஏ.இ.வால்கர் (A.E. Walker) என்பவர் அவருடைய அலுவலக அறையில் சுட்டுக் கொல்லப் பட்டார். முப்பது நிமிடங்கள் கழித்து இன்னும் இரு கொலைகள். சுங்கை சிப்புட்டில் இருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் பின் சூன் (Phin Soon Estate) தோட்ட நிர்வாகி ஜே.எம்.எலிசன் (John Alison) என்பவரும், அவருடைய துணை நிர்வாகி இயான் கிறிஸ்டியன் (Ian Christian) என்பவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இந்தச் சம்பவங்கள் மலாயாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை ஆத்திரத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது. அதன் பின்னர்தான் மலாயாவில் அவசர காலம் பிரகடனம் செய்யப் பட்டது.

மலாயாச் சீனர்கள் மீது ஆங்கிலேயர்களுக்கு இருந்த வெறுப்பு உணர்வு திசை திரும்பியது. வாய்ப்பு கிடைத்தால் பழி வாங்கும் படலமும் கட்டு அவிழ்க்கப் பட்டது. இந்தியர்கள் நிலைமை ஓரளவுக்குப் பரவாயில்லை. அப்போது பெரும்பாலான இந்தியர்கள் தோட்டப் புறங்களிலேயே அடைபட்டு கிடந்தனர். அந்தத் தோட்டங்களை வெள்ளைக்காரர்கள் நிர்வாகம் செய்தார்கள்.

அதனால், அவர்களிடம் ஆதிக்கப் பிடிமானம் இருந்தது. சலாம் போட்டுச் சமாளித்துக் கொண்டார்கள். காலா காலத்திற்கும் இந்தியர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக் குறியாகவே இருந்து வந்தது.

அதன் பிறகு ஜப்பானியர்கள் வந்தனர். காந்தி நேதாஜி போன்ற பெயர்கள் அவர்களைக் கொஞ்சம் காப்பாற்றி விட்டன. இருந்தாலும் ஆயிரக் கணக்கானத் தமிழர்கள் சயாம் பர்மா காடுகளில் அனாதையாகச் செத்துப் போனார்கள். அதை நாம் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது.

மலேசியாவில் வாழும் அத்தனை இந்தியக் குடும்பங்களிலும், யாராவது ஒருவர் சயாம் பர்மா மரண இரயில் பாதையில் சம்பந்தப் பட்டு இருக்கலாம். அது மறைக்க முடியாத ஒரு வரலாற்று உண்மை. இந்த விசயம் உங்களுக்கே தெரியாமல்கூட இருக்கலாம்.

பத்தாங் காலி படுகொலை சம்பந்தமாக விசாரண நடத்த வேண்டும் என்று லண்டன் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. அப்போது மலாயாவின் தலைமை அரசு வழக்கறிஞராக சர் ஸ்டாபோர்ட் போஸ்டர் என்பவர் இருந்தார். விசாரணை என்ற பேரில் ஒரு கண் துடைப்பு. போதுமான சான்றுகள் இல்லை என்று விசாரணை கைவிடப் பட்டது.

அதன் பின்னர் 1970-இல் மறுபடி ஒரு விசாரணை. அதுவும் பிசுபிசுத்துப் போனது. 1992-ஆம் ஆண்டு பி.பி.சி. வானொலி நிலையம் ஓர் ஆவணப் படத்தைத் தயாரித்தது. உலகம் பூராவும் ஒளிபரப்பு செய்தது.  

அந்தக் கட்டத்தில் மலேசியாவின் தலைமை போலீஸ் அதிகாரியாக ஐ.ஜி.பி. டான்ஸ்ரீ ஹனீப் ஒமார் இருந்தார். அவர் அந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் போலீஸில் புகார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பூ மோய், தாம் யோங் (Tham Yong), சோங் பூங் என மூன்று பேர் புகார் செய்தார்கள். ஓர் உயர்மட்டப் போலீஸ் விசாரணைக் குழு அமைக்கப் பட்டது.

பிரிட்டிஷ் தூதரகத்திடம் ஒரு புகார் விண்ணப்பம் வழங்கப் பட்டது. அந்த விண்ணப்பத்தின் நகல் எலிசபெத் மகாராணியாருக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அவ்வளவுதான். 45 வருடங்களுக்கு மேல் ஆகிறது. விண்ணப்பம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

2004-ஆம் ஆண்டு, ஜனநாயகச் செயல் கட்சி, இந்தப் பிரச்சினையை மலேசிய  நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றது. மாண்புமிகு குலசேகரன் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். விவாதம் செய்தார்கள். அவ்வளவுதான்.  பாதிக்கப் பட்டவர்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பணம் காசு எதையும் கேட்கவில்லை. நஷ்டயீடு எதையும் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது எல்லாம் நேர்மையான நியாயம் தான். சுடப்பட்டவர்கள் என்ன தப்பு செய்தார்கள். அவர்கள் செய்த அந்தக் குற்றத்தைச் சொன்னால் போதும். ஆக, பிரச்சினை தொடர்கிறது.

எப்போது நியாயம் கிடைக்கும் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அதுவரையில், பத்தாங் காலி படுகொலையில் பாதிக்கப் பட்டவர்களுக்காக அனுதாபப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.

சான்றுகள்:

1. Hale, Christopher (1 October 2013). Massacre in Malaya: exposing Britain's My Lai. Stroud: The History Press.

2. Bowcott, Owen (26 January 2012). "Batang Kali relatives edge closer to the truth about 'Britain's My Lai massacre'". The Guardian. London

3. "Malayan 'massacre' families seek UK inquiry". BBC NEWS. 7 May 2012

4.  "British court rules in favour of Batang Kali kin". The Star. 9 September 2011.



20 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: நெகிரி செம்பிலான், லின்சம் தோட்டம் - 1878

1870-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான், ரந்தாவ் (Rantau), லின்சம் தோட்டம் (Linsum Estate); அந்த மாநிலத்தின் மிகப் பழமையான தோட்டமாக விளங்கியது. மலாயாவின் முன்னோடித் தோட்டங்களில் ஒன்றாகும்.

மலாயா தமிழர்கள்: நெகிரி செம்பிலான், லின்சம் தோட்டம்  - 1878


அது மட்டும் அல்ல. கூட்டாட்சி மலாய் மாநிலங்களில் (Federated Malay States) இருந்த காபி ரப்பர் தோட்டங்களில் மிகவும் பிரபலமான தோட்டமாகவும் விளங்கியது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முதன்முதலில் இந்தத் தோட்டத்தில் தான் காபி பயிர் செய்யப் பட்டது.

The Linsum estate, at Rantau, is the oldest estate in Negri Sambilan, and is famous throughout the Federated Malay States because it contains some of the oldest and largest Para trees in the district. Originally it was planted with coffee, but, as that product became unprofitable, the proprietors turned their attention to rubber.

Source: Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Page: 101

Camping and Tramping in Malaya:
Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Page: 84

1876-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களைக் கொண்டு வருவதற்கு  இந்தியாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும்; மலாயாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டன. இரண்டு ஆண்டுகள் கழித்து 1878-ஆம் ஆண்டில் தமிழர்கள் மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்ய வந்தனர்.

In 1876 the Secretaries of State for India and the Colonies had both agreed to the principle of allowing natives of India to be employed in the Malayan States, and in 1878 the then Governor of the Straits Settlements requested permission for their direct importation to the native states from India.

இதே காலக் கட்டத்தில் நெகிரி செம்பிலான் லுக்குட் லிங்கி தோட்டம்; பேராக் கோலாகங்சார்; பாடாங் செராய்; புரோவின்ஸ் வெல்லஸ்லி நிபோங் திபால்; மலாக்கோப் தோட்டம் பினாங்கு; போன்ற இடங்களிலும் காபி பயிர் செய்யப் பட்டது. அங்கேயும் தமிழர்கள் போய் இருக்கிறார்கள்.

Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Author: Rathborne, Ambrose B. Place of Publication: London (England). Date of Publication: 1898. Publisher: Swan Sonnenschein.

ஆனால், 1878-ஆம் ஆண்டில், நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் காபி தோட்டத்திற்குத் தான் தமிழர்கள் முதன் முதலில் கொண்டு வரப்பட்டார்கள் என்று தெரிய வருகிறது. அந்தத் தோட்டத்தில் காபி உற்பத்தி லாபகரமானதாக அமையவில்லை. அதனால் தோட்ட உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை ரப்பர் பயிரிடுவதில் கவனம் செலுத்தினார்கள்.

ராத்போர்ன் அம்ப்ரோஸ் (Rathborne, Ambrose) எனும் ஆங்கிலேயர் எழுதி இருக்கும் ’மலாயா தீபகற்பத்தின் மாநிலங்களில் பதினைந்து ஆண்டுகள்’ (Camping and Tramping in Malaya: fifteen years' pioneering in the native states of the Malay peninsula) எனும் நூலில் பக்கம்: 85-இல் இந்தப் படங்கள் உள்ளன. 1898-ஆம் ஆண்டில் தான் அந்தப் புத்தககத்தில் பதிவு செய்யப்பட்டது.

Jungle clearing works at Rantau, Negeri Sembilan 1878

இந்தப் படங்கள் ரந்தாவ் லிங்கி தோட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனும் ஒரு கருத்து உள்ளது. எனினும் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்வதற்காகக் காடுகள் அழிக்கப்படும் படமும் கிடைத்து உள்ளது. ஆகவே இந்தப் படம் லின்சம் தோட்டத்தில் தான் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் ரந்தாவ், லின்சம் தோட்டமும்; ரந்தாவ் லிங்கி தோட்டமும் மிக அருகாமையில் இருக்கும் தோட்டங்கள். ஆக மலாயா தமிழர்கள், 1878-ஆம் ஆண்டில், அந்தப் பகுதியில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிய வருகிறது.

Jungle Clearing at Rantau Negeri Sembilan in 1878. Source: Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Page: 47

ஆக 142 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாவுக்கு வந்த தமிழர்கள்; மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி ஆகின்றது.

இந்தக் காலக் கட்டத்திற்கு முன்பாகவே, 1840-ஆம் ஆண்டுகளில்; பினாங்கு, சிங்கப்பூர் தீவுகளில் காடுகளை அழிக்கவும்; சாலைகள் அமைக்கவும் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரியாத விசயமாக இருக்கலாம்.

இருந்தாலும் மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் மலாயாவிற்கு நேற்று முந்தா நாள் வந்தவர்கள் அல்ல. ஒன்றை நினைவில் கொள்வோம். மனுசர்கள் நுழைய முடியாத பாசா காடுகளின் கித்தா தோப்புகளில் வாழ்ந்தவர்கள் தான் மலாயா தமிழர்கள்.

மலைக் காடுகளை அழித்துத் திருத்திக் காபி, மிளகு, கொக்கோ, ரப்பர் தோட்டங்களைப் போட்டவர்கள். அவர்கள் உருவாக்கிக் கொடுத்த கட்டுமானத்தில் சொகுசு காண்பவர்கள் சிலரும் பலரும் இருக்கிறார்கள்.

மலாயா தமிழர்கள் நேற்று வந்த வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். என்ன சொல்வது? அவர்களை நன்றி கெட்டவர்கள் என்று சொல்ல மனசு வரவில்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.09.2020

1. Source: Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 480.

2. Source: Source: Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula.
Author(s): Rathborne, Ambrose B.
British Library shelfmark: Digital Store 010055.ee.10
Place of publication: London (England)
Date of publication: 1898
Publisher: Swan Sonnenschein