தமிழ் மலர் - 17.11.2020
மொரீஷியஸ் தீவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். மொரீஷியஸ் பணத்தாள்களில் இரண்டாம் நிலையைக் கொடுத்தார்கள். தமிழர்களுக்கு அழகாய்ச் சிறப்பு செய்துவிட்டுப் போனார்கள். ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழி அடுத்த நிலையில் இருந்தது. இரண்டாவது இடத்தில் மரியாதை செய்யப் பட்டது.
1968-ஆம் ஆண்டு மொரீஷியஸ் தீவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. அப்போது தமிழர்களின் மக்கள் தொகை 56,747. அடுத்து தெலுங்கர் மக்கள் 24,233. அடுத்து சீனர்கள் 20,608. அதற்கும் அடுத்து மராட்டியர்கள் 16,553. இவர்களில் ஒட்டு மொத்த வட இந்தியர்கள் 71.668. ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தமிழர்கள் மட்டும் தனித்து அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அதனால் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் 2004 அக்டோபர் 30-ஆம் தேதி மொரீஷியஸ் மத்திய வங்கி வெளியிட்ட புதிய பணத்தாள்களில் தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப் பட்டது.
தமிழர்கள் கொதித்துப் போனார்கள். அரசாங்கத்திற்கு நேரடியாக எச்சரிக்கை செய்தார்கள். சட்டம் மூலமாகப் போராட்டம் செய்வோம் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இங்கே இந்தப் பக்கம் நாம் எப்படிப் போராடுகிறோம். அதே போலத்தான் அங்கேயும் மொரீஷியஸ் தமிழர்கள் போராடி இருக்கிறார்கள்.
2004 நவம்பர் 5-ஆம் தேதி தமிழ்த் தலைவர்கள் பத்து பேர் மொரீஷியஸ் குடியரசு தலைவரைச் சந்தித்தார்கள். துணைக் குடியரசு தலைவரையும் போய்ப் பார்த்து முறையிட்டார்கள். அப்போது பிரதமராக நவீன் ராம்குலாம் பதவியில் இருந்தார். இந்த மனிதர் ஒரு மிதவாதி. உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.
பணத்தாள்களை மறுபடியும் அச்சடிக்குமாறு வங்கி ஆளுநருக்குக் கட்டளை போட்டார். அதாவது தமிழை இரண்டாவது இடத்தில் வைத்து புதிய பணத்தாள்களை அச்சடிக்கச் சொல்லிக் கட்டளை.
இறுதியில் அப்படி இப்படி என்று மொரீஷியஸ் தமிழர்களின் தமிழ்ப் போராட்டம் வெற்றி பெற்றது. மறுபடியும் வெளியிடப்பட்ட பணத்தாள்களில் தமிழ் இரண்டாம் நிலையில் இடம் பெற்றது. மொரீஷியஸ் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
தாய்மொழி தமிழைத் தற்காக்க மொரீஷியஸ் தமிழர்கள் செய்த போராட்டம் உலகத் தமிழர்களின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு காலச் சுவடு. போற்றப்பட வேண்டிய உணர்வுச் சுவடி.
ஆனால் ஒன்று. தமிழர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்ந்தாலும் அவர்களின் உரிமைகளைப் போராடித் தான் இதுவரையிலும் பெற்று வருகிறார்கள். அதனால்தானோ என்னவோ தெரியவில்லை தமிழர்களுக்குப் போராட்டக் குணம் மிகுந்து வருகிறது.
உலகத் தமிழர்களுக்கு அப்படி ஒரு நிலைமை. வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று சொல்வார்கள். அதற்கு மொரீஷியஸ் தமிழர்கள் நல்ல ஓர் எடுத்துக்காட்டு.
மொரீஷியஸ் தீவில் ‘மொரிசியத் தமிழ் பேசுவோர் ஒன்றியம்’ (The Mauritius Tamil Speaking Union) எனும் ஒரு சங்கம் உள்ளது. இதன் தலைவர் டாக்டர் ரகுநாதன்.
மொரீஷியஸ் தமிழர்களைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் தயாரித்து வருகிறேன். அங்கு புழக்கத்தில் உள்ள பணத் தாள்களின் படங்களை அனுப்பி வையுங்கள் என்று கேட்டு இருந்தேன். அனுப்பி வைத்தார். அத்துடன் அங்கு நிகழ்ந்த பணத்தாள்கள் போராட்டம் பற்றிய செய்தியையும் அனுப்பி வைத்தார்.
தவிர மொரீஷியத் தமிழ் பேசுவோர் ஒன்றியத்தின் விருந்தினராக வருகை தரும்படி அழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். மொரீஷியஸ் தமிழர்களைப் பற்றி ஒரு வரலாற்று நூல் தயாரிக்கும்படி அன்பான வேண்டுகோள். நன்றி சொல்லிக் கொள்கிறேன். விரைவில் மொரீஷியஸ் செல்வேன். சரி. மொரீஷியஸ் தமிழர்கள் வரலாற்றுக்கு வருவோம்.
1810-ஆம் ஆண்டு மொரீஷியஸ் தீவில் ஆங்கிலோ பிரெஞ்சுப் போர். அந்தப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றார்கள். அவர்கள் வெற்றி பெற்றதில் தமிழர்களுக்கும் பெரிய பங்கு உண்டு. தமிழர்களின் ஆதரவு இல்லாமல் ஆங்கிலேயர்கள் அதிகாரத்திற்கு வந்து இருக்க முடியாது. அதன் பின்னர் மொரீஷியஸ் தீவில் ஆங்கிலேயர்களின் 158 ஆண்டுகள் ஆட்சி.
ஆங்கிலேய ஆட்சியின் போது 1829-ஆம் ஆண்டு தொடங்கி 1830-ஆம் ஆண்டு வரை ஆயிரக் கணக்கான தமிழர்கள் சென்னையில் இருந்து மொரீஷியஸ் தீவிற்குக் குடியேற்றப் பட்டார்கள். 1830-ஆம் ஆண்டு வரையில் முதல் கட்டக் குடியேற்றம் என்று சொல்வார்கள். இந்தியாவின் பீகார், பஞ்சாப் மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரம் பேர் குடியேறி இருக்கிறார்கள்.
மொரீஷியஸ் தீவின் தலைநகரம் போர்ட் லூயி. அங்கே ஒரு மத்தியச் சந்தை. அந்தச் சந்தையின் கட்டுமானத்தை உருவாக்குவதற்குச் சென்னையில் இருந்து தமிழர்கள் கொண்டு போகப் பட்டார்கள். அந்தச் சந்தையைக் கட்டி முடிக்க சில ஆண்டுகள் பிடித்தன. 1845-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. வருடத்தைக் கவனியுங்கள்.
ஏராளமான தமிழ் வணிகர்கள் வாணிகம் செய்ய வந்தார்கள். அவர்கள் பயணம் செய்த கப்பலகள்:
1853-ஆம் ஆண்டு காப்ரீசி
1855-ஆம் ஆண்டு ஆர்லிகென்
அது மட்டும் அல்ல. 1862-ஆம் ஆண்டில் இருந்து 1866-ஆம் ஆண்டு வரை 749 தமிழ் வணிகர்கள் மொரீஷியஸ் தீவிற்கு வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள். அவர்களில் சிலரின் பெயர்கள் சென்னைப் பழம்சுவடிக் காப்பகத்தில் இருந்து மீட்க முடிந்தது.
எம். கைலாசம் பிள்ளை;
நல்லசாமி மருதை படையாச்சி;
ஏ. சிவராமன்;
பரிமணம்;
ஜி.பொன்னுசாமி;
டி. வேலாயுதம் பிள்ளை
இன்னும் ஒரு கூடுதலான செய்தி. 1860-ஆம் ஆண்டில் மொரீஷியஸ் தீவில் இருந்து இந்தியத் தொழிலாளர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கும் குடிபெயர்ந்து இருக்கிறார்கள். அவர்களுடன் தமிழ் வணிகர்கள் பலரும் குடிபெயர்ந்து உள்ளனர்.
வணிக நிறுவனங்கள்:
ஏ.எஸ்.அய்யாசாமி,
ஏ.ஆர். நல்லதம்பி அண்ட் கோ;
எம். பொன்னுசாமி அண்ட் கோ;
ஆறுமுகம் செட்டி அண்ட் கோ;
வையாபுரி செட்டி கம்பெனி;
ஐ.வேலாயுதன் அண்ட் கோ;
இருளப் பிள்ளை அண்ட் கோ
இவர்களில் சிலர் ரீயூனியன் தீவுகள், மடகாஸ்கர் போன்ற இடங்களுக்கும் சென்று உள்ளனர். அவர்களைப் பற்றி பின்னர் தெரிந்து கொள்வோம்.
மொரீஷியஸ் தமிழர்கள் தங்களின் தாய் மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து விட்டனர். உண்மையை ஏற்றுக் கொள்வோம். இருப்பினும் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் மட்டும் என்றும் மறப்பது இல்லை.
மொரீஷியஸ் முழுவதும் ஏறக்குறைய 128 ஆலயங்கள் இருக்கின்றன. முருகன், சிவன், விநாயகர், மாரியம்மன், கிருஷ்ணன், துர்க்கை அம்மன், இராமன், வீரமாகாளி அம்மன், முனீஸ்வரர், மதுரை வீரன் போன்ற தெய்வங்களை வழிபடுகின்றனர். கடல் கடந்து போன தமிழர்கள் ஆலயப் பண்பாடுகளையும் கொண்டு சென்று இருக்கிறார்கள்.
தலைநகர் போர்ட் லூயி. அங்கே மீனாட்சி அம்மன் ஆலயம். அது தான் அங்கே பெரிய ஆலயம். தைப்பூசம் மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. தைப்பூச நாள் பொது விடுமுறை நாளாகும். பொதுவாகவே பெண்கள் மஞ்சள் ஆடை அணிகின்றார்கள். ஆண்களும் மஞ்சள் நிற ஆடைகள் அணிகின்றார்கள். மஞ்சள் நிறத்தைத் தமிழ் மக்களின் பாரம்பரிய நிறமாகக் கருதுகிறார்கள்.
1865-ஆம் ஆண்டில் மொரீஷியஸ் தீவில் 26 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. அந்தப் பள்ளிகளுக்குத் தமிழ் நூல்கள் தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப் பட்டன. மொரீஷியஸ் சுதந்திரம் பெற்ற பின்னர் தேசியக் கல்வித் திட்டத்தில் தமிழ் இடம் பெற்றது.
தமிழைப் படிக்க விரும்பிய பிள்ளைகளுக்கு தமிழாசிரியர்கள் தமிழ் நாட்டில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள். மொரீஷியஸ் நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழ்ப் பாடநூல்களும் எழுதப் பட்டன.
இருந்தாலும் பெரிய ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. 1865-ஆம் ஆண்டில் 26 தமிழ்ப் பள்ளிகளில் 1400 மாணவர்களுக்கு மேல் தமிழ் படித்தார்கள். ஆனால் பாருங்கள். 1910-இல் அந்த எண்ணிக்கை 1120-ஆக குறைந்து விட்டது.
பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்துவதற்குப் பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தினார்கள். அது ஓர் அவசியமாகவும் இருந்தது. பிரெஞ்சு மொழியும் ஆப்பிரிக்க மொழியும் கலந்த கிரியோல் மொழி தமிழர்களிடம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி தான் ஆட்சி மொழி. அதனால் ஆங்கில மொழியுடன் தமிழ் மொழி போட்டி போட வேண்டி வந்தது. தவிர தமிழர்கள் அதிக அளவில் தோட்டத் தொழிலாளிகளாக இருந்தார்கள். அதனால் கல்வி கற்கும் சூழலும் சிறப்பாக அமையவில்லை.
1865-ஆம் ஆண்டில் தமிழ் தெரிந்தவர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப் பட்டன. பின்னர் தமிழாசிரியர்கள் தமிழ் நாட்டில் இருந்து வரவழைக்கப் பட்டனர். சொல்லி இருக்கிறேன்.
சில புள்ளிவிவரங்கள்:
1966-ஆம் ஆண்டு முறையான தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப் பட்டன.
1967-ஆண்டில் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை 60. மாணவர்கள் 5,000.
1968-ஆம் ஆண்டு மார்சு 12 ஆம் தேதி மொரீஷியஸ் நாடு சுதந்திரம் அடைந்தது. அதன் பின்னர் தமிழ் மொழியின் போதான முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
2019-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மொரீஷியஸ் தீவில் 13,000 மாணவர்கள் தமிழ் மொழி கற்று வருகிறார்கள். அங்கே 200 தொடக்கநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி சொல்லித் தரப்படுகிறது.
பள்ளிப் பாடத் திட்டத்தில் மட்டும் அல்ல. மாலை நேரங்களிலும் சில இடங்களில் தமிழ் வகுப்புகள் நடத்தப் படுகின்றன. மகாத்மா காந்தி நிறுவனம் எனும் ஒரு தன்னார்வ நிறுவனம் இருக்கிறது. அந்த நிறுவனம் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் நாற்பது மாணவர்கள் தமிழ்க் கல்விச் சான்றிதழ் பெற்று வருகின்ரார்கள்.
மொரீஷியஸ் கல்விக் கழகம்; மொரீசியஸ் வானொலி தொலைக்காட்சி நிறுவனம்; இந்த இரு அமைப்புகளும் தமிழ்மொழிப் பாடங்களை நடத்தி வருகின்றன. தமிழ் மொழியைத் தற்காக்க எப்படி எப்படி எல்லாம் போராட வேண்டி இருக்கிறது. அங்கே மொரீஷியஸ் தமிழர்கள் போராடுகிறார்கள். இங்கே மலாயா தமிழர்கள் போராடுகிறார்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.11.2020
சான்றுகள்:
Moree, Perry J. (1998). A Concise History of Dutch Mauritius, 1598–1710: A Fruitful and Healthy Land. Routledge.
Vink, Markus (2003). "'The World's Oldest Trade': Dutch Slavery and Slave Trade in the Indian Ocean in the Seventeenth Century". Journal of World History. 14 (2): 131–177.
Bahadur, Gaiutra (2014). Coolie Woman: The Odyssey of Indenture. The University of Chicago. ISBN 978-0-226-21138-1.
Macdonald, Fiona; et al. "Mauritius". Peoples of Africa. pp. 340–341.