தமிழ் மலர் - 12.11.2020
கரை ஒதுங்கும் சிப்பிகள். நுரை உமிழும் அலைகள். வானம் தொடும் நீலங்கள். அலை பாயும் நீர்க்குமிழிகள். அசத்தல் ஆழ்க்கடல் பிம்பங்கள். கவிதைகள் பாடி கரை சேரும் கடல் காவியங்கள். துள்ளித் தாவும் வெள்ளி மீன்களின் நீல நயனங்கள். அனைத்தும் அழகின் ஆராதனைகள். அனைத்தும் ஒளிர்ந்து வளைந்து நீரிதழ் ஒளிப் பிளந்து மறையும் நான்மணியின் நளினங்கள். அவற்றின் மறுபக்கமே மொரீஷியஸ் என்கிற பூலோகச் சொர்க்கம்.
அத்தனையும் இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த அழகுச் சீதனங்கள். அத்தனையும் ஏழ்கடல் தேவதைகளின் எழில்மிகுச் சொப்பனங்கள். மொரீஷியஸ் தீவைப் படைத்த ஆண்டவன் அதே வடிவத்தில் சொர்க்கத்தையும் படைத்தான் என்று பெருமையாகச் சொல்வார்கள். உண்மைதான்.
மொரீஷியஸ் எனும் நிலத் தேவதையைக் காணாத கண்களாய் என் நினைவுகளும் சிறை போகின்றன. போதும் என்று நினைக்கிறேன். மொரீஷியஸ் தீவின் தமிழர்கள் வரலாற்றுக்கு வருவோம்.
1810-ஆம் ஆண்டில் மொரீஷியஸ் தீவில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒரு பெரிய போர். நீயா நானா என்கிற போர். இந்தப் போரின் இரண்டு தரப்பிலும் தமிழர்கள் போர் வீரர்கள் சரி சமமாக நின்று போர் செய்தார்கள்.
இந்தப் போரில் ஒரு பெரிய அதிசயம் என்ன தெரியுங்களா. ஆங்கிலேயர்களின் படைகளுக்கு ஒரு தமிழர் தளபதியாக இருந்தார். பெயர் உச்சமுடி. அவர்தான் பிரிட்டிஷ் படைக்குத் தலைமையும் தாங்கினார். நம்ப முடியவில்லை தானே. என்னாலும் நம்ப முடியவில்லை. அதற்கு முன் பழைய வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.
1729-ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து தமிழர்கள் மொரீஷியஸ் தீவிற்கு முதன்முதலாகக் கொண்டு செல்லப் பட்டார்கள். நேற்றைய கட்டுரையில் பார்த்தோம். 1735-ஆம் ஆண்டு மறுபடியும் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு செல்லப் பட்டார்கள். சின்னச் சின்னக் கப்பல்கள் கட்டுவது; கட்டடங்கள் கட்டுவது; உள்கட்டமைப்புகள். அதற்காகத் தமிழர்கள் சென்றார்கள்.
அவர்கள் போர்ட் லூயி நகரப் பகுதியில் தங்க வைக்கப் பட்டார்கள். இருந்தாலும் அங்கே வாழ்ந்த ஆப்பிரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. கொஞ்சம் நஞ்சமாய் மனித உரிமைகள்; அவற்றில் மிச்சம் மீதியாய் மனிதநேயப் பார்வைகள். பெரிய விசயம்.
அதற்கு முன்னர் அங்கே அதிகமாகவே மனித உரிமை அத்துமீறல்கள். அங்கே இருந்த ஆப்பிரிக்க அடிமைகள் ஆடுமாடுகளைப் போல நசுக்கி நார் நாராய்க் கிழிக்கப் பட்டார்கள். அதையும் நினைவில் கொள்வோம்.
தமிழர்களை மட்டும் பேசிவிட்டு ஆப்பிரிக்கர்களை அப்படியே ஒதுக்கிவிட முடியாது. அவர்களும் வாயில்லா இரண்டு கால் ஜீவன்களாய் வாழ்ந்தவர்கள் தானே. அவர்களும் மனிதர்கள் தானே.
1735-ஆம் ஆண்டில் இருந்து 1746-ஆம் ஆண்டு வரை மாஹே டி லா போர்டோனாய்ஸ் (Mahé de La Bourdonnais) எனும் பிரெஞ்சுக்காரர் மொரீஷியஸ் தீவின் கவர்னராக இருந்தார்.
இவர் தான் காடு மேடாகக் கிடந்த மொரீஷியஸ் தீவை ஒரு நாடாக உருவாக்கிக் காட்டுவதில் முன்னணி வகித்தவர். இவருக்குத் தமிழர்கள் பெரும் உதவியாக இருந்து இருக்கிறார்கள்.
பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் போர்ட் லூயிஸ் நகரம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. கிழக்குப் பகுதியில் மலபாரிகள் கேம்ப் எனும் ஓர் இடம். அங்கே தான் தமிழர்கள் பெரும்பாலோர் வாழ்ந்து வந்தார்கள். அதற்குப் பிரெஞ்சு மொழியில் கேம்ப் டெஸ் மலபார்ஸ் (Camp des Malabars).
1810-ஆம் ஆண்டு மொரீஷியஸ் தீவில் ஆங்கிலோ பிரெஞ்சுப் போர். அதாவது பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த ஒரு போர். மொரீஷியஸ் தீவை ஆட்சி செய்த பிரெஞ்சு கவர்னர், அந்தப் பக்கமாய்ப் போய் வந்து கொண்டு இருந்த ஆங்கிலேயக் கப்பல்களைத் தாக்கினார். ஆங்கிலேயர்கள் சும்மா விடுவார்களா.
இதாண்டா சான்ஸ் என்று மொரீஷியஸ் தீவை அடித்துப் பிடித்துக் கொண்டார்கள். இந்தச் சமயத்தில் மேலே பிரான்ஸில் நெப்போலியனின் ஆட்சி. இதில் ஒரு பெரிய வேடிக்கை என்ன தெரியுங்களா. பிரெஞ்சுக்காரர்கள்; ஆங்கிலேயர்கள்; இந்த இரண்டு தரப்பிலும் தமிழர்கள் போர் வீரர்களாக இருந்தார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழர்களே தமிழர்களைச் சுட்டுக் கொண்டார்கள்.
வேறு வழியும் இல்லை. ஒரு பக்கம் ஆங்கிலேயப் போர் வீரர்கள். ஆங்கிலேயப் படைகளுக்கு உதவியாகத் தமிழர்ப் போர் வீரர்கள். இன்னொரு பக்கம் பிரெஞ்சுப் போர் வீரர்கள். பிரெஞ்சுப் படைகளுக்கு உதவியாகத் தமிழர்ப் போர் வீரர்கள். எந்தப் படையில் இருந்தாலும் விசுவாசம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா.
Mauritius Grand Port War
ஆங்கிலேயர்கள் தங்களின் படைக்கு உச்சமுடி எனும் ஒரு தமிழரைத் தளபதியாக்கி உச்சம் பார்த்தார்கள். அவர்தான் ஆங்கிலேயப் படையை வழிநடத்திச் சென்றார். பெரிய அதிசயம். அந்தப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது மற்றொரு வரலாறு.
இருந்தாலும் ஸ்ரீ உச்சமுடியின் பெயரை ஆங்கிலேயர்கள் மறைத்து விட்டார்கள். அதற்குப் பதிலாக அபேர்கோம்பி எனும் ஆங்கிலேயரின் பெயரை முன்வைத்து பெரிதுபடுத்தினார்கள். அப்போது மொரீஷியஸ் தீவில் 9000 இந்தியச் சிப்பாய்கள் இருந்தார்கள். பெரும்பாலோர் தமிழர்கள்.
1810-ஆம் ஆண்டில் இந்தியச் சிப்பாய்கள் இந்தியாவில் இருந்து மொரீஷியஸ் தீவிற்கு வந்தார்கள். அதில் தமிழர்களின் காலாட் படையும் இருந்தது. அந்தத் தமிழர்ப் படைக்கு ஸ்ரீ உச்சமுடி தளபதியாக இருந்தார். (Battle of Grand Port on 20–27 August 1810)
முதல் போரில் ஆங்கிலேயர்கள் தோல்வி அடைந்தாலும் அபேர்கோம்பியின் (Sir Albemarle Bertie) பெயரை நியாயப்படுத்த மொரீஷியஸில் ஒரு கிராமத்திற்கு அபேர்கோம்பி என்று பெயர் வைத்தார்கள். இரண்டாவது போரில் தான் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றார்கள் அந்தப் போருக்கு சாமுவேல் பைம் (Sir Samuel Pym) எனும் ஆங்கிலேயத் தளபதி தலைமை தாங்கினார்.
ஆனால் அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்கள் அபேர்கோம்பி எனும் பெயருக்கு மதிப்பு கொடுக்கவில்லை. அதனால் அபேர்கோம்பி எனும் கிராமத்தை உச்சிமுடி கிராமம் என்றும் லாபிரிக்கிரி கிராமம் என்றும் அழைத்தார்கள். இன்றும் லாபிரிக்கிரி என்றுதான் அழைக்கப் படுகிறது.
உண்மையில் தமிழர்ப் படை, வங்காளப் படை, பம்பாய் படை இல்லாமல் ஆங்கிலேயர்கள் அந்தப் போரில் ஜெயித்து இருக்க முடியாது.
தமிழர்கள் என்றால் விசுவாசத்தின் மறுபக்கம். கை நனைத்த இடத்தில் கை கொடுக்கும் வழக்கம். அது தமிழர்களின் பாரம்பரியப் பழக்கம். இருந்தாலும் அந்த நல்லதுக்கும் சமயங்களில் நல்ல பெயர் கிடைப்பது இல்லையே. என்ன சொல்ல வருகிறேன் என்றால் அப்படி விசுவாசமாக இருந்ததால் தான் இந்தப் பக்கம் வந்தேறிகள் எனும் பட்டயம் கிடைத்து இருக்கிறது. விடுங்கள்.
அதன் பின்னர் மொரீஷியஸ் தீவில் ஆங்கிலேயர் ஆட்சி. 1829 முதல் 1830 வரை நூற்றுக் கணக்கான இந்தியர்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து மொரிசியஸ் தீவிற்குக் குடியேற்றப் பட்டார்கள். 1830-ஆம் ஆண்டு வரையில் முதற்கட்டக் குடியேற்றம். ஒரு செருகல்.
தமிழர்களின் புலம் பெயர்வுகளை ஆய்வு செய்யும் போது மிகச் சரியாகவும் மிக நேர்த்தியாகவும் ஆய்வு செய்வது அவசியம். நம்முடைய எதிர்காலச் சந்ததியினருக்கு அவை சிறப்பான ஆவணமாகப் போய்ச் சேர வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் விட்டுச் செல்லும் காணிக்கையாக அமைய வேண்டும்.
மொரீஷியஸ் தீவில் தமிழர்களின் இரண்டாவது கட்டக் குடியேற்றம் 1835-ஆம் ஆண்டு தொடங்கியது. 1843-ஆம் ஆண்டு மட்டும் 14,634 தமிழர்கள் குடியேறி இருக்கிறார்கள். 1845-ஆம் ஆண்டு தொடங்கி 1849-ஆம் ஆண்டு வரை சென்னையில் இருந்து குடிபெயர்வு எதுவும் நடக்கவில்லை.
1843-ஆம் ஆண்டு தொடங்கி 1852-ஆம் ஆண்டு வரை 30,334 பேர் குடிபெயர்ந்தனர். ஒப்பந்த முறையில் குடியேறிய தமிழர்கள் அனைவரும் கரும்புத் தோட்டங்களில் கசக்கிப் பிழியப் பட்டார்கள். வருடத்தையும் கவனியுங்கள். முகவர்களின் ஆசை வார்த்தைகளில் பலர் ஏமாற்றப் பட்டார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பீகார், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் பேர் மொரீஷியஸ் தீவிற்கு குடியேறி இருக்கிறார்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொரீஷியஸ் தீவில் தமிழ் மக்கள் தங்களின் பழைய நிலையையும் பழைய செல்வாக்கையும் பழைய பண்புகளையும் ஓரளவிற்கு இழந்து விட்டார்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் மொரீஷியஸ் தீவில் நடந்த ஒரு நிகழ்ச்சி. தமிழ் எங்கள் உயிர் என்று உன்னதம் பேசிய ஒரு நிகழ்ச்சி. உலகத் தமிழர்களை எழுச்சி கொள்ளச் செய்த நிகழ்ச்சி.
2004 அக்டோபர் 30-ஆம் தேதி மொரீஷியஸ் மத்திய வங்கி புதிய பணத்தாள்களை வெளியிட்டது. ஈராயிரம், ஆயிரம், ஐந்நூறு, இருநூறு, நூறு, ஐம்பது, இருபத்தைந்து ரூபாய் என மதிப்பு கொண்ட பணத்தாள்களின் வெளியீடு.
அந்தத் தாள்களில் முறையே சிவசாகர் ராம் குலாம், ஜார்ல்ஸ் காய்தான் டூவால், விஷ்ணு தயாளு, அப்துல் ரசாக் முகமது, ரெங்கநாதன் சீனிவாசன், ஜோசப் மவுரிஸ் பட்டுராவ், ஜீன் ஆச்சூவான் ஆகிய பிரபலங்களின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.
முன்பு காலத்தில் மொரீஷியஸ் பணத் தாள்களில் ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழி அடுத்த நிலையில் அதாவது இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. அது ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய வழக்க முறைமை. முதன்முதலில் பணத் தாள்களை வெளியிடும் போது தமிழை இரண்டாவது இடத்தில் வைத்து வெளியீடு செய்தார்கள்.
மொரீஷியஸ் தீவில் தமிழர்களின் குடியேற்றம்; அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகள்; அவர்களின் ஒத்துழைப்புகள்; சேவை மனப்பான்மைகள் ஆகியவற்றுக்கு முன்னாள் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்த வகையில் பணத்தாள்களில் இரண்டாம் நிலையைக் கொடுத்து மொரீஷியஸ் தமிழர்களுக்குச் சிறப்பு செய்துவிட்டுப் போனார்கள்.
ஆனால் புதிதாக வெளியிடப்பட்ட பணத் தாள்களில் ஒரு வில்லங்கம். தமிழ் மொழி மூன்றாவது இடத்திற்குப் போனது. இரண்டாம் இடத்திற்கு இந்தி வந்தது. சும்மா விடுவார்களா தமிழர்கள். கொதித்துப் போனார்கள்,
”எங்களை என்ன இளிச்சவாயன்கள் என்றா நினைத்துக் கொண்டீர்கள். இந்த நாட்டின் ஆணி வேரே தமிழர்கள் தான். எங்களின் தாய்மொழிக்கு முறையாகக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுங்கள். இல்லையா நடக்கிறதே வேறு என்று ஆர்ப்பரித்தார்கள். அடுத்தக் கட்டமாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள்.
மொரீஷியஸ் மத்திய வங்கி தமிழுக்குத் தீங்கு செய்து விட்டது என்று சொல்லி மொரீஷியஸ் தமிழ்க் குழுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டன. ஆங்காங்கே எதிர்ப்புக் கூட்டங்கள். ஆங்காங்கே பேரணிகள்.
புதிய பணத் தாள்களில் இரண்டாவது இடத்தில் தமிழ் இருக்க வேண்டும். அந்த இடத்தில் இந்தி மொழி வந்து இருக்கிறது. தமிழ் மொழி மூன்றாவது இடத்திற்குப் போய் இருக்கிறது. நாங்கள் விட மாட்டோம். எங்கள் தமிழுக்கு கிடைத்து வந்த மரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மொரீஷியஸ் தமிழர்கள் உறுதியாக இருந்தார்கள்.
போர்ட் லூய் தலைநகரத்தில் உள்ள மீனாட்சியம்மன் ஆலயத்தில் தமிழர்களின் முதல் அவசரக் கூட்டம். அடுத்து மோக்கா நகரில் முதல் கண்டனக் கூட்டம். அதில் எண்ணாயிரம் தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.
அந்தக் கண்டனக் கூட்டத்திற்கு மொரீஷியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் சிதம்பரம் பிள்ளை தலைமை தாங்கினார். இரு தமிழர் அமைச்சர்கள்; எதிர்க்கட்சியில் இருந்த இரு தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
கோயிலில் கூடிய மக்களின் கூட்டம் பின்னர் ஒரு பெரிய பேரணியாக மாறியது. அந்தப் பேரணி மோக்கா நகரில் இருந்து பிளாஸா அரங்கத்திற்குச் சென்றது. பிளாஸா அரங்கில் தமிழர்க் குடியேற்றத்தின் அடையாளமாக ஒரு கற்சிலைச் சின்னம் உள்ளது. அதற்குச் *சிலம்புச் சிலை* என்று பெயர். அது தமிழர்களின் வரலாற்றுச் சின்னம்.
அங்கு சென்ற பேரணி மத்திய வங்கி ஆளுநர் மித்ராஜிட் தனேஸ்வர் மாராயின் உருவப் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தியது. பதின்மூன்று நாட்கள் கழித்து இரண்டாவது பேரணி. *தமிழ் மனசாட்சி* என்கிற குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் போர்ட் லூயி தலைநகரத்தில் ஒன்று கூடினார்கள்.
தமிழ்ப் பெண்மணி தியாகி அஞ்சலை குப்பன் சிலைக்குச் சென்றார்கள். மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்கள். அந்தப் பேரணியில் மற்ற இனக் குழுக்களின் தலைவர்களும் மற்ற இன மக்களும் கலந்து கொண்டார்கள். பின்னர் அந்தப் பேரணி மத்திய வங்கிக்குச் சென்றது. அங்கே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தது.
பின்னர் *மொரீஷியஸ் தமிழ்க் கழகம்* களம் இறங்கியது. ரோசில் நகரத்தில் ஒரு பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. மொரீஷியஸ் தீவின் பல்வேறு இடங்களில் இருந்து ஆண்களும் பெண்களுமாய்க் கூடினார்கள். கையில் மஞ்சள் கொடிகளை ஏந்தி அமைதிப் போராட்டம் செய்தார்கள். இந்தக் கதை நாளையும் பயணிக்கின்றது.
https://ksmuthukrishnan.blogspot.com/2020/11/blog-post_13.html
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.11.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக