26 நவம்பர் 2020

தாகித்தி தீவில் தவித்த கன்னிகள் - 3

தமிழ் மலர் - 26.11.2020

தாகித்தி தீவில் தவித்த கன்னிகள் கட்டுரையின் இறுதிப் பாகம். கப்பல் சிப்பந்திகளில் சிலருக்கு மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்ல மனம் வரவில்லை. அத்துடன் கப்பல் தலைவர் ரொம்பவும் கெடுபிடியாக நடந்து கொண்டார். தொட்டதற்கு எல்லாம் சவுக்கடிகள் தண்டனை. அதனால் அவருக்குப் பல தொல்லைகள். ஓர் இரவு கப்பலின் நங்கூரக் கயிற்றைத் துண்டித்து விட்டார்கள். சரி செய்யப் பட்டது.


இருப்பினும் கப்பலின் தலைவர் மசியவில்லை. ஒவ்வொரு குளறுபடிக்கும் ஒவ்வொரு பாதுகாப்பான மழுப்பலைக் கைவசமாய் வைத்து இருந்தார். தாயகம் திரும்புவதற்கான நாளும் வந்தது. 1015 ஈரப் பலா கன்றுகளுடன் இரவோடு இரவாகக் கிளம்பினார்கள்.

என்னென்ன சாமான்கள் வேண்டுமோ அவற்றை எல்லாம் ஏற்றிக் கொண்டு கப்பல் கிளம்பியது. தாகித்தி மக்களுக்குத் தெரியாமல்தான் கிளம்பினார்கள். தெரிந்தால் அவர்கள் ஏதாவது கலாட்டா செய்து பயணத்தை நிறுத்தி விடலாம் இல்லையா.

அந்த மாதிரியான பயணத் தடைகள் ஏற்கனவே நடந்து உள்ளன. எல்லாவற்றையும் முன் எச்சரிக்கையுடன் செய்து இருக்கிறார்கள். கப்பல் கிளம்பி விட்டது. கப்பலில்  தோங்கா (Tonga) எனும் தீவிற்கு வரும்போது கப்பலில் கலவரம் தொடங்கியது.
கப்பலின் சேமிப்புக் கிடங்கில் இருந்த தேங்காய்கள் அடிக்கடி காணாமல் போயின. எரிச்சல் அடைந்த தளபதி தன்னுடைய துணைத் தளபதி பிளெட்சர் கிரிஸ்டியனை அழைத்து தாறுமாறாக ஏசி இருக்கிறார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார் துணைத் தளபதி. தனக்கு வேண்டிய ஆட்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டார். மற்றவர்களைக் கப்பலில் இருந்து இறங்கி கீழே மிதக்கும் படகில் ஏறச் சொன்னார்.

எல்லாம் வீச்சு அரிவாளுக்கு முன்னால் நடந்தது. பெரும் ஆழ்க்கடலில் ஒரு சின்னப் படகு. கொஞ்சம் உணவுப் பொருட்கள். குடிக்கக் கொஞ்சம் தண்ணீர். பாதுகாப்புக்கு இரண்டு கத்திகள். அவ்வளவுதான். படகில் 19 பேர். கப்பலில் 25 பேர். மறுபடியும் சொல்கிறேன். தனித்து விடப்பட்ட படகில் 19 பேர். கடத்தல்காரர்கள் புரட்சி செய்த கப்பலில் 26 பேர்.

படகில் இருப்பவர்கள் பிழைப்பார்களா இல்லையா என்று பிளெட்சர் கிரிஸ்டியன் கொஞ்சமும் கவலைப் படவில்லை. இது நடப்பது எல்லாம் பசிபிக் மாக்கடலில். அத்துடன் அங்கே ஒரு நிரந்தரமான பிரிவு. படகில் இருந்தவர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி மேற்கு திசையில் பயணமானார்கள்.


கப்பலில் இருந்த பிளெட்சர் கிரிஸ்டியன் குழுவினர் ஆஸ்திரல் (Austral) தீவை நோக்கி கிழக்குத் திசையில் பயணமானார்கள். ஆஸ்திரல் தீவு அண்டார்டிக்கா பனிக் கண்டத்திற்கு வடக்கே 5000 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆஸ்திரல் தீவுக்கு வந்த போது கடத்தல் குழுவினரில் இருவருக்கு காய்ச்சல். மருந்து மாத்திரை இல்லாமல் இறந்து போனார்கள். மிச்சம் 16 பேர். சில நாட்கள் ஆஸ்திரல் தீவிலேயேயே தங்கினார்கள். சில நாட்களில் மேலும் சிலர் இறந்து போனார்கள்.

அதன் பின்னர் மறுபடியும் தாகித்தி தீவிற்கே திரும்பி வந்தார்கள். குடியேறுவதற்கு அனுமதி கேட்டார்கள். சில நிபந்தனைகளின் பேரில் அனுமதி வழங்கப் பட்டது. சில வாரங்கள் தாகித்தி தீவில் தங்கினார்கள். அப்போதே ஒரு பெரிய திட்டம் போட்டு விட்டார்கள்.


கடத்தல்காரர்கள் தாகித்தி தீவில் இருந்து மறுபடியும் தப்பி ஓடும் கடைசி நிமிடம். கப்பலில் தாகித்தியர்கள் 30 பேர் இருந்தார்கள். அவர்களின் கைகள் கால்கள் கட்டப்பட்டு குண்டுகட்டாக அப்படியே கப்பலில் அடைத்துப்ப் போடப் பட்டார்கள். பற்றாக்குறைக்கு வேலைகள் செய்ய பூர்வீக ஆண்கள் ஐந்து ஆறு பேர்.

கண் காணாத இடம் என்று சொன்னேனே அந்த இடத்தின் பெயர்தான் பிட்காயின் தீவு. தாகித்தி தீவில் இருந்து ஏறக்குறைய 1350 மைல்களுக்கு அப்பால் பிட்காயின் தீவு உள்ளது.

முதலில் பதினைந்து பெண்கள். அதில் ஆறு பெண்கள் வயதானவர்கள். அவர்கள் மொரியா எனும் தீவில்  இறக்கிவிடப் பட்டார்கள். இளம் வயது பெண்கள் ஒன்பது பேர். புரட்சிக் கும்பலைச் சேர்ந்த ஆண்கள் ஒன்பது பேர். தாகித்திய ஆண்கள் ஐந்து பேர். ஆக மொத்தம் ஆண்கள் 14 பேர். பெண்கள் பத்து பேர் தான். பிரச்னை வருமா வராதா. கண்டிப்பாக வரும். தொடர்ந்து படியுங்கள்.


ஒரு நாள் இரவோடு இரவாக பிட்காயின் தீவிற்குக் கம்பி நீட்டினார்கள். இந்த நாடகம் தாகித்தி மக்களுக்குத் தெரியவே தெரியாது. தெரிந்து இருந்தால் என்ன. பத்து ஆடுகளுக்குப் பதிலாக பத்து வெள்ளைத் தோல்களைக் கூறு போட்டு இருப்பார்கள். பெரிய திருவிழா கொண்டாட்டமாக இருந்து இருக்கும்.

பிட்காயின் தீவிற்கு வந்தவுடன் துணைத் தளபதி பிளெட்சர் கிரிஸ்டியன் செய்த முதல் வேலை. என்ன தெரியுங்களா. தனக்குப் பிடித்தமான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவளுடைய பெயர் மவுத்துவா (Mauatua). எஞ்சிய பெண்கள் எட்டு பேர். இந்தப் பெண்களுக்கு எந்த ஆணைப் பிடிக்குமோ அந்த ஆணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அப்புறம் கப்பல் எரிக்கப் பட்டது.

மற்றபடி கல்யாணம் பண்ணிக் கொள்கிற விசயத்தில் எந்தப் பெண்ணையும் வற்புறுத்தக் கூடாது என்பது ஒரு கட்டளை. எப்படிப் பார்த்தாலும் ஐந்து ஆண்களுக்கு ஜோடி இல்லாமல் போனது. நாளடைவில் அதுவே பெரிய பிரச்னையாக மாறிப் போனது. ஆண்களுக்குள் அடிக்கடி சண்டை. சண்டையில் சிலர் இறந்தும் போனார்கள். இப்படியே காலம் ஓடியது. பிள்ளைகளும் பிறந்தார்கள்.


பெண்களுக்காகச் சண்டை நடந்து கொண்டு இருக்கும் போதே குடி இருப்பதற்குச் சின்ன சின்ன வீடுகளையும் கட்டிக் கொண்டார்கள். விவசாயம் செய்தார்கள். நண்டு மீன்கள் பிடித்தார்கள். நார்களைக் கொண்டு உடைகள் தைத்துக் கொண்டார்கள்.

பிட்காயின் ஒரு பெரிய தீவு என்று சொல்ல முடியாது. ஐந்து சதுர கி.மீ. பரப்பளவு. சுற்றிலும் கடல். எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட தீவு. பயிர் செய்வதற்குப் பக்குவமான மண். அப்படியே ஒரு புதிய சமுதாயம் உருவானது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 1808-இல் திமிங்கில வேட்டைக்குப் போன அமெரிக்கர்கள் பிட்காயின் தீவில் மனிதர்கள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள். விசாரித்துப் பார்த்ததில் பிளெட்சர் கிரிஸ்டியனின் குட்டு அம்பலமானது. அதுவரையில் வெளியுலகில் யாருக்குமே இந்த விசயம் தெரியாது. தெரிந்து இருந்தால் ஆங்கிலேயர்கள் அப்போதே வந்து அத்தனைப் பேரையும் தோலை உரித்துத் தொங்கப் போட்டு இருப்பார்கள்.


அமெரிக்கர்கள் அந்தத் தீவிற்கு வந்த போது பழைய கடத்தல்காரர்களில் ஒரே ஒருவர் மட்டுமே இருந்தார். அவர் பெயர் ஜான் அடாம்ஸ். மற்றவர்கள் எவரும் இல்லை. அவர்களுக்குள் சண்டை. பெண்கள் சண்டைதான். சிலர் இறந்து போனார்கள். கடத்தல்காரர்களின் வாரிசுகள் மட்டுமே இருந்தார்கள். பிளெட்சர் கிரிஸ்டியனும் இறந்து விட்டார்.  

அந்தத் தீவில் சிபிலிஸ் அல்லது காசநோய் வந்து இருக்கலாம். அதனால் அழிவு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. ஆனாலும் பிளெட்சர் கிரிஸ்டியன் அங்கிருந்து தப்பித்து இங்கிலாந்து சென்று வாழ்ந்ததாகவும் சொல்லப் படுகிறது. அது ஒரு கணிப்பு. உண்மை தெரியவில்லை.

1856-ஆம் ஆண்டில் இங்கிலாந்து விக்டோரியா மகாராணியார், பிட்காயின் தீவில் வாழ்ந்த மக்களுக்கு புதிதாக வேறு ஓர் இடம் கொடுத்தார். நியூசிலாந்துக்கு அருகில் இருந்த நார்போல்க் தீவில் குடியேறலாம் என்றார். 193 பேர் போய் சில ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.


அதில் ஆறு குடும்பங்கள் மறுபடியும் பிட்காயினுக்கே திரும்பி வந்து விட்டன. இந்தக் குடும்பங்கள்தான் இன்னமும் பிட்காயினுக்கு உயிர் கொடுத்து வருகின்றன. 1963-இல் அதன் மக்கள் தொகை 86. பின்னர் 1983-இல் 45 ஆக குறைந்தது. சென்ற 2019-ஆம் ஆண்டில் 52 பேர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு என்று ஒரு சின்னப் பள்ளிக்கூடம். ஒரு தேவாலயம். ஒரு சின்னத் தொலைபேசி சேவை. வெளியுலகத் தொடர்புகளுக்குக் கம்பியில்லா தந்தி. வெளிநாடுகளுக்குப் படிக்கப் போகும் பிள்ளைகள் வெளிநாடுகளிலேயே தங்கி விடுகிறார்கள். திரும்பி வருவது இல்லை. பெரும்பாலும் நியூஸிலாந்து நாட்டில் வாழ்கிறார்கள்.

மாதத்திற்கு ஒரு முறை நியூசிலாந்தில் இருந்து விமானம் வருகிறது. அதில் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வந்து சேர்கின்றன. வரலாற்றுப் பின்னணியைத் தவிர வேறு சிறப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. சுற்றுப் பயணம் போகலாம். ஓர் ஆளுக்குப் போய் வர முப்பது நாற்பதாயிரம் ரிங்கிட் பிடிக்கும். எப்படி உங்கள் வசதி!


சரி! நடுக்கடலில் விடப் பட்டார்களே அவர்கள் என்ன ஆனார்கள். பயங்கரமான உயிர்ப் போராட்டத்திற்குப் பின்னர் எலும்பும் தோலுமாக ஜாவாவில் உள்ள குப்பாங் எனும் இடத்தை அடைந்தார்கள். போகிற வழியில் மூன்று பேர் இறந்து போனார்கள்.

குப்பாங் கிராமத்தில் மூன்று மாதப் போராட்டம். அப்போது இந்தோனேசியாவை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களின் உதவியால் இங்கிலாந்து சென்று சேர்ந்தார்கள். விசயம் தெரிந்து இங்கிலாந்து நாடே கொதித்துப் போனது. மறுவருடம் ஒரு தனிப் படை பிளெட்சர் கிரிஸ்டியனைத் தேடிக் கொண்டு தாகித்தி தீவுக்கு வந்தது. அங்கே அவர் இருந்தால் தானே.

கப்பல் புரட்சியில் ஈடுபட்ட ஒரு சிலர் தாகித்தி தீவில் இருந்தார்கள். பழைய கில்லாடிகள். மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். அங்கே விசாரிக்கப்பட்டு மூன்று பேருக்கு தூக்குமேடைக்கு அனுப்பப் பட்டார்கள்.


பழைய தளபதி வில்லியம் பிளை சேவைகளுக்காகப் பாராட்டப் பட்டார். அதற்காக அவர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கவர்னராகவும் நியமிக்கப் பட்டார். இறுதியில் இங்கிலாந்திற்குப் போய் இறந்து போனார். சரி. நம்ப மன்மத ராசா என்ன ஆனார் என்று கேட்பது தெரிகிறது. கொஞ்சம் பொறுங்கள்.

மன்மத ராசா குந்தால். தன் மனைவியுடன் ஐந்து மாதங்கள் தாகித்தி தீவிலேயே வாழ்ந்தார். கப்பல் புறப்படும் தினத்தில், இங்கிலாந்துக்குத் திரும்பிப் போக மறுத்து விட்டார். வேறுவழி இல்லாமல் மன்மத ராசாவைக் கட்டிப் போட்டு கப்பலில் ஏற்றி இருக்கிறார்கள்.

இந்த விசயம் அவனுடைய மனைவிக்குத் தெரியாது. தெரிந்து இருந்தால் கத்திக் கதறி ஆர்ப்பாட்டம் பண்ணி புருசனைக் காப்பாற்றி இருப்பாள். கப்பல் புறப்பட்டு ஒரு நாளைக்குப் பிறகு மன்மத ராசா கடலில் குதித்துத் தப்பிக்க முயற்சி செய்து இருக்கிறார்.


நீந்திச் சென்று மனைவியிடம் சேர்ந்து விடலாம் எனும் உயிர்ப் போராட்டம் தான். தாகித்தி தீவில் இருந்து 50 மைல்களுக்கு அப்பால் ஆழ்க்கடலில் நடந்த துர்நிகழ்ச்சி.

நிச்சயமாக குந்தால் நீந்திப் போய் இருக்க முடியாது. ஏன் என்றால் கடல் சுறாக்கள் நிறைந்த இடம். இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய உடலை மீனவர்கள் மீட்டு எடுத்து இருக்கிறார்கள். உடல் சேதம் அடையவில்லை. 50 மைல்கள் தூரம். கடல் அலைகளை மன்மத ராசாவால் சமாளிக்க முடியவில்லை. நீந்த முடியாமல் இறந்து போய் இருக்கலாம்.

கணவனின் உடலைப் பார்த்து கதறிய மனைவி, வேதனை தாங்க முடியாமல் மறுநாள் அவளும் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டாள். அப்போது அவள் மூன்று மாதக் கர்ப்பிணி. பாவம். அநியாயமாக மூன்று உயிர்கள் அரிச்சுவடி இல்லாமல் அழிந்து போயின.

பிரான்ஸ் நாட்டில் நெப்போலியன் புரட்சி செய்யும் போது பசிபிக் மாக்கடலிலும் இப்படியும் மறக்க முடியாத ஒரு புரட்சி. நடுக்கடலில் நடந்த ஒரு நாடகத்தில் ஒரு சரித்திரமே உருவாகி விட்டது.

இப்போது சொல்லுங்கள். இந்தச் சரித்திரச் சுவடுகளை மறக்கலாமா. கானல் நீரான ஒரு காதல் காவியத்தை மறக்கலாமா. உங்களால் மறக்கத் தான் முடியுமா. பாவம் அந்த இளம் காதலர்கள். வாழ வேண்டிய வயசு. வாரிசுகளை உருவாக்க வேண்டிய வயசு. நினைத்தால் நெஞ்சம் வலிக்கிறது. அழுகையும் வருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.11.2020



தமிழ் மலர் நாளிதழுக்கு 1000-ஆவது கட்டுரை

தமிழ் மலர் நாளிதழுக்கு அடியேன் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதும் 1000-ஆவது கட்டுரை இன்று 2020 நவம்பர் 26-ஆம் தேதி வெளியீடு காண்கிறது. மூன்றரை ஆண்டு கால உழைப்பு. இரவு பகல் என்று பார்க்காமல் ஒவ்வொரு நாளும் 8 மணி நேர உழைப்பின் பிரதிபலிப்பு.

முதல் கட்டுரை 2016 ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி ’மலேசியப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம்’ எனும் தலைப்பில் வெளிவந்தது.

500-ஆவது கட்டுரை 2018 டிசம்பர் 17-ஆம் தேதி ‘அந்தோன் பாலசிங்கம்’ எனும் தலைப்பில் வெளிவந்தது. இன்றைய கட்டுரை ’தாகித்தி தீவில் தவித்த கன்னிகள் - மூன்றாம் பாகம்'. 1000-ஆவது கட்டுரை.

மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் ஒரு காலச்சுவடு. எல்லாப் புகழும் தமிழ் மலர் பத்திரிகைக்குச் சமர்ப்பணம். என் எழுத்துகளுக்கு உயிரூட்டி மெருகூட்டி வரும் தமிழ் மலர் நாளிதழின் ஆசிரியர்கள்; நிர்வாகத்தினர்; பணியாளர்கள்; அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய வாழ்த்துகள். இருகரம் கூப்பிச் சிரம் தாழ்த்துகிறேன்.

மலேசியத் தமிழ் நாளிதழ்கள் தினக்குரல்; தினத்தந்தி; புதிய பார்வை, மலேசிய நண்பன், தமிழ் நேசன் நாளிதழ்களுக்கும்; மயில் இதழ்; சுட்டி மயில்; தமிழ் ஓவியம்; விக்கிப்பீடியா, பேஸ்புக், புளோகர், இணைய ஊடகங்களுக்கும், 2,500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 3,500 கட்டுரைகள்.

நினைத்துப் பார்க்கும் போது மலைப்பு திகைப்பு வியப்பு. அன்பான வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றிகள். இறைவன் அருள். தொடர்ந்து பயணிப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.11.2020





மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கு வெறும் 3 கோடி ரிங்கிட்?

தமிழ் மலர் - 26.11.2020

பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம் தாக்கல் செய்துள்ள 202-1ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டில் உள்ள 527 தமிழ்ப் பள்ளிகளுக்கு வெறும் 3 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை அளிப்பதாக பத்துகாஜா ஜ.செ.க. நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், பெரிய அளவிலான பாதிப்பு இந்தியர்களுக்குத்தான் என்று பரவலாகப் பேசப்பட்ட நிலையில் இப்போது தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி பெரும் ஏமாற்றத்தை தருகிறது என்றார்.

நவம்பர் 6-ஆம் தேதி நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ரூல் 2021 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கல்வி அமைச்சர் டாக்டர் ரஸ்டி ஜிடின் நேற்று முன்தினம் மக்களவையில் எந்தெந்த பள்ளிகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிவித்து உள்ளார்.

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் உள்ள 527 தமிழ்ப்பள்ளிகளுக்கு 2 கோடியே 99 லட்சத்து 80,000 வெள்ளி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

2020-ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் சமர்ப்பித்த பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது.

ஆனால், 2021 பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியத்தில் 40 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது என்று கல்வியமைச்சர் அறிவித்து இருப்பது இந்தியச் சமுதாயத்திற்கு பெருத்த ஏமாற்றம் என்று சிவகுமார் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 527 தமிழ்ப்பள்ளிகளுக்கு சுமார் 3 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கு 29.98 மில்லியன் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.

கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கல்வி அமைச்சரின் புதிய வீயூக நடவடிக்கையால் 527 தமிழ்ப்பள்ளிக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது வேதனையான விசயம் என்றார்.

தமிழ்ப்பள்ளிக்கான ஒதுக்கீட்டில் இருந்து 2 கோடி வெள்ளி குறைக்கப்பட்டு இருப்பது இந்தியச் சமுதாயத்திற்கு பெரிய ஏமாற்றம். பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தின் நியாயமற்ற இத்தகைய முடிவை, ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சிவகுமார் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம் இந்தியர்களை ஒரங்கட்டுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும் என்று சிவகுமார் சுட்டிக் காட்டினார்.



 

25 நவம்பர் 2020

தாகித்தி தீவில் தவித்த கன்னிகள் - 2

தமிழ் மலர் - 25.11.2020

வட அட்லாண்டிக் பெரும் கடலில் மேற்கிந்தியத் தீவுகள். ஏறக்குறைய 50 தீவுகள். அவற்றில் ஒன்று ஜமாய்க்கா. இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தெளித்த அழகு அழகான பச்சைக் கானகங்கள்.

பாய்ந்து படியும் பச்சைக்காட்டு மடிகளில் நிறைந்து போகும் கரும்புத் தோட்டங்கள். அங்கே மனித உரிமை மீறல்களின் அடிவானத்தில் அடிமைக் கறுப்பர்கள். அவர்களைச் சுற்றிலும் மேய்ச்சல் பாய்ச்சல்களின் தொடுவானத்தில் வெள்ளைத் தோல் அவதாரங்கள்.

அடிமைக் கறுப்பர்களுக்குச் சாப்பாடு போடுவது என்பது அந்த வெள்ளைத் தோல் அவதாரங்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. கறுப்பர்களின் கடுமையான உடல் உழைப்பு. அதனால் ரொம்பவும் சாப்பிட்டார்கள்.

எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் கட்டுபடி ஆகவில்லை. முதலாளிகளுக்கும் திண்டாட்டம் தொழிலாளிகளுக்கும் திண்டாட்டம்.

அந்தச் சமயத்தில் ஜேம்ஸ் குக் எனும் கடலோடி. பசிபிக் தீவுகளில் ஈரப் பலாக்காய் இருப்பதாகச் சொன்னார். அந்த ஈரப் பலாக்காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்றும் பரிந்துரை செய்தார்.

இந்த ஈரப் பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், வில்லியம் பிளை (William Bligh) என்பவரைப் பசிபிக் கடலுக்கு அனுப்பி வைத்தது.

இந்த ஆய்வுப் பயணத்திற்குப் பவுண்டி (Bounty) எனும் பாய்மரக் கப்பல். 1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி அந்தக் கப்பல் பயணமானது. பசிபிக் மாக்கடலில் இருக்கும் தாகித்தி (Tahiti) தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழு. கடல் பயணம் 306 நாட்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வழியாகத் தாகித்தி தீவை அடைந்தார்கள். வந்தவர்களுக்கு அசத்தலான வரவேற்பு.

கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் பூர்வீக மக்களுடன் சந்தோசமாய்ப் பழகினார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். கப்பல் சிப்பந்திகளுக்கு ஒரு முக்கியமான நிபந்தனை.

'எங்கே வேண்டும் என்றாலும் போங்க வாங்க... என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. பழகுங்க. உருளுங்க. புரளுங்க. ஆனால். உள்ளூர்ப் பெண்களின் விசயத்தில் மட்டும் கொஞ்சமாய் அடக்கி வாசிங்கடா சாமி. அப்புறம் அது விவகாரமான விசயமா மாறிடும்.

அப்புறம் வெட்டுக் குத்துக் கொலையில் போய் முடியும். வேண்டாங்கடா சாமி' என்று கப்பல் தலைவர் அவர்களுக்குப் படித்துப் படித்துச் சொன்னார். கேட்டார்களா.

கேட்டார்கள். கேட்டார்கள். கேட்ட மாதிரி பதுவுசாகப் பக்குவமாகப் பழகினார்கள். சுருக்கமாகச் சொன்னால் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பழகினார்கள். பெண்களைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி போய்க் கொண்டே இருந்தார்கள்.

அதையும் மீறி பாருங்கள். ஒரு மன்மதக் குஞ்சு போய் கலாட்டா பண்ணி விட்டது. மன்மதக் குஞ்சு இல்லை. மசாலா குஞ்சு. சொன்னது எல்லாம் அதன் மர மண்டையில் ஏறவில்லை. ராசாவைச் சொல்லிக் குற்றம் இல்லை. இள ரத்தம். கொஞ்சமாய் சூடேறி ரொம்பவுமாய் கொதித்து விட்டது.

இளைய ராசாவுக்கு 18 வயசு. பக்கத்தில் பச்சை மேனி கன்னிப் பெண். சாமுத்திரிகா இலட்சணத்தில் பால் வடியும் பால்கோவா. 16 வயசு. நம்ப ராசா கலங்கிப் போய் கலகலத்துப் போய் அவள் காலிலேயே விழுந்து விட்டார் போலும். என்ன செய்வது. இரண்டுக்குமே வயசு கோளாறு.

தென்னை மரத்தில் இருந்து ’கள்’ வரும். எல்லோருக்கும் தெரியும். அங்கே தாகித்தி தீவில் அதுவே காலம் காலமாக வரலாறு. நிறையவே கள் தோப்புகள். பல நூறு ஆண்டுகளாக கள் இறக்கி கள் குடித்து இருக்கிறார்கள். இந்தக் கள் சமாசாரம் உலகம் முழுமைக்கும் பரவி இருக்கிறது. இது ஒரு நல்ல சான்று.

தப்பாக நினைக்க வேண்டாம். சமயங்களில் எனக்கும் லகர ளகரப் பிரச்சினைகள் வந்து போகும். 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மொழி தோன்றிவிட்டது' என்பார்கள். அது எந்தக் கல் என்பதுதான் இங்கே கொஞ்சம் இடிக்கிறது. ஓர் எழுத்து பண்ணுகின்ற வேலையைப் பாருங்கள். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சரி. பானமும் வெள்ளை. மன்மத ராசாவின் மனசும் வெள்ளை. ஆக அந்த வெள்ளைப் பானத்தை மொக்கை முடிச்சுத் தெரியாமல் குடித்து இருக்கிறான். அந்த நேரம் பார்த்து அந்த மேனகா மோனகா அந்தப் பக்கமாய் வந்து இருக்கிறாள். என்ன செய்வது.

நம்ப மன்மதக் குஞ்சு கொஞ்சம் கூடுதலாகக் குடித்து மப்பு மந்தாராமாகிப் போனான். இயற்கை பானம் வஞ்சகம் இல்லாமல் வேலை செய்து இருக்கிறது. ராசாவும் ஒரு மனுசன் தானே. பாவம் அந்தப் பதின்ம வயசு மன்மத ராசா.

பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள... அந்த நேரம் பார்த்து… சிவ பூசையில் கரடி நுழைஞ்சது மாதிரி பெண்ணின் சொந்தக்காரன் பார்க்க... பார்த்த விசயத்தை வெளியே போய் சொல்ல... ஊரே பற்றிக் கொண்டது.

கிராமத்து மக்கள் அரிவாளைத் தூக்கிக் கொண்டு மனமத ராசாவை விரட்டி இருக்கிறார்கள். இருவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எங்கே போவது என்று தெரியாமல் மன்மத ராசா திகைத்துப் போய் அப்படியே நின்று இருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு அந்த இடம் நன்றாக அத்துப்படி. அதனால் அங்குள்ள ஒரு குகைக்குள் அவனை இழுத்துக் கொண்டுப் போய் இருக்கிறாள். எங்கே ஒளிந்தால் எப்படியும் கண்டுபிடிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரிந்த விசயம்.

சுற்றிக் கிடந்த செடி கொடிகளைக் கொண்டு வந்து ஒரு மறைப்பு கட்டினாள். படுக்க ஒரு பச்சைப் பாய் தயார் செய்து கொடுத்தாள். இரண்டு பேருமே அன்றைக்கு இராத்திரி அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.

பொழுது விடிந்ததும் அவள் அந்தப் பக்கம் போக இவன் இந்தப் பக்கம் வர அவர்களின் மரத்தோன் ஓட்டம் ஒரு முடிவிற்கு வந்தது. பிறகு ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி சமாதானம் செய்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தப்பித்ததே பெரிய விசயம்.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்ன தெரியுமா. ஊர்ப் பஞ்சாயத்து சமாதானம் செய்கிற மாதிரி சமாதானம் செய்தது. ஆனால், உள்ளுக்குள் ஒரு பெரிய திட்டம். அதாவது மன்மதக் குஞ்சைத் தீர்த்துக் கட்டுவது. அதற்கு மூன்று ஆட்களையும் ரெடி பண்ணி விட்டார்கள்.

விசயம் எப்படியோ அந்த இளம் பெண்ணுக்குத் தெரிந்து விட்டது. தன் உயிரைப் பணயம் வைத்து, இரவோடு இரவாகக் கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். கப்பலின் கயிறுகளைப் பிடித்து ஏறி விசயத்தைச் சொல்லி இருக்கிறாள்.

சுறா மீன்கள் நிறைந்த கடல் பகுதி அது. தான் விரும்பியவனுக்காகத் தன் உயிரையே பணயம் வைத்து ஆழ்கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். தன் உயிரைக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை.

தான் விரும்பியவனின் உயிர்தான் அவளுக்கு அப்போது பெரிதாகத் தெரிந்து இருக்கிறது. பாருங்கள். யார் யாருக்கு எங்கே எங்கே எல்லாம் எழுதி வைத்து இருக்கிறது. பாருங்கள்.

அவளுடைய பிடிவாதம்; அவளுடைய துணிச்சலான முடிவு, உள்ளூர் மக்களையே அசர வைத்து விட்டது. கட்டினால் அவனைத் தான் கட்டுவேன் இல்லை என்றால் செத்துப் போவேன் என்று மிரட்டி இருக்கிறாள்.

உடனே அவளைப் பிடித்துக் கொண்டு போய் ஒரு வீட்டுக்குள் அடைத்துப் போட்டு வைத்து இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் அங்கு இருந்து தப்பித்து விட்டாள்.

எப்படி தப்பித்தாள் என்பது ஊர் பஞ்சாயத்திற்கே பெரிய ஆச்சரியம். அவளை அடைத்து வைத்து இருந்த கதவை வெளியே இருந்து தான் திறக்க முடியும். உள்ளே இருந்து திறக்க முடியாது.

அப்படி என்றால் யார் திறந்து விட்டு இருக்க முடியும். யாராக இருக்கும் என்று அப்போது அவர்களிடம் இருந்த ’இண்டர்போல் போலீஸ்’ ஆராய்ந்து பார்த்தது. கடைசியில் கண்டுபிடித்து விட்டார்கள். யார் தெரியுமா.

நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் தாயார் தான். ஏற்கனவே ஒரு முதியவருக்கு மூன்றாம் தாரமாக அந்தப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன. பெண்ணுக்கு வயது 16. முதியவருக்கு வயது 61. என்னே பொருத்தம். எண்களைத் திருப்பிப் போட்டுப் பார்த்து சந்தோஷப் படுங்கள்.

தாயாருக்கு அந்தக் கல்யாணம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் அடைபட்டு கிடந்த தன் மகளைத் திறந்து விட்டு கையில் கொஞ்சம் பொன் ஆபரணங்களையும் கொடுத்து ‘நீ ஆசைப் பட்டவன் கூடவே கண்காணாத இடத்திற்கு ஓடிப் போய் விடு’ என்று ஒரு படகையும் கொடுத்து இரவோடு இரவாக அனுப்பி வைத்து இருக்கிறாள்.

அந்தப் பெண் படகில் போய்க் கொண்டு இருக்கும் போது வழிமறிக்கப் பட்டாள். மீண்டும் கைதியானாள். அப்புறம் அதற்குள் நமப மன்மத ராசாவுக்கும் விசயம் எட்டி விட்டது. அவனும் சும்மா இல்லை.

தன் நண்பர்கள் இரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு தீவில் இறங்கி விட்டான். நூற்றுக் கணக்கான பூர்வீக மக்களின் ஆள்பலத்தை மூன்று பேர் எப்படிங்க சமாளிக்க முடியும். அதற்குள் கப்பலில் இருந்த சிலரும் களம் இறங்கி விட்டார்கள்.

வேறு வழி இல்லாமல், பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து இருவருக்கும் நல்லபடியாகக் கல்யாணத்தைச் செய்து வைத்தார்கள். இதுவும் ஆழ்கடலில் நடந்த ஓர் அதிசயம்தான்.

அந்த மன்மத ராசாவின் பெயர் குயிந்தால். கடத்தல் கும்பலில் ஆகச் சிறியவன். அப்போது அவனுக்கு வயது 18. இங்கிலாந்தில் புத்தகங்களைத் திருடியதற்காகச் சிறைக்குப் போனவன். அவனைப் பிடித்துக் கப்பல் பயணத்தில் அனுப்பி விட்டார்கள்.

நல்ல முக இலட்சணம். ஓரளவுக்குப் படித்தவன். போதாதா. அதுவே அவனுக்கு பிளஸ் பாய்ண்ட். அவன் காதலித்தப் பெண்ணுக்கு வயது 16. இருந்தாலும் கடைசியில் கணவன் மனைவியாக வாழ்ந்தார்களா?

இவர்களின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடியது என்பதைப் பிறகு சொல்கிறேன். முதலில் ஒரு பீடிகை போட்டு விடுகிறேன். நிச்சயமாக உங்கள் மனசு ஈரமாகும். நிச்சயம் அழுது விடுவீர்கள். இது உண்மையாக நடந்த கதைங்க. தொடர்ந்து படியுங்கள்.

தாகித்தி தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களில் பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைவன். அந்தத் தலைவன் ஒவ்வோர் ஆண்டும் தன் பெயரை மாற்றிக் கொள்வான். அதில் ஒருவன். பெயர் தீனா. மக்களுக்குத் தலைவன். இவனுடைய பழைய பெயர் ஊட்டு.

கப்பலுக்கு வந்த பூர்வீகத் தலைவன் தீனா, கூடவே தன் மனைவியையும் கூட்டி வந்தான். அவள் பெயர் இடாயா. கப்பலில் ஒரு கத்தரிக்கோலைப் பார்த்து விட்டான். அது தனக்கு வேண்டும் என்று ஒரேயடியாக அடம் பிடித்து இருக்கிறான்.

இருப்பதோ ஒன்றே ஒன்று. அதை வைத்துக் கொண்டு தான் எல்லாரும் தலைமுடியை வெட்டிக் கொள்ள வேண்டும். என்ன செய்வது. அவன் தொடர்ந்து அடம் பிடித்தான். இங்கே நம்ப பெண்கள் சமயங்களில் அடம் பிடித்துச் சிணுங்கிக் கொள்கிறார்களே. அந்த மாதிரி தான். மன்னிக்கவும் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

ஆக அவனுடைய ரௌசு தாங்க முடியாமல் ‘இன்னா சாமி படா பேஜாரா இருக்கே இந்தா எடுத்துக்கோ..’ என்று கத்தரிக்கோலைக் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னர் கப்பலிலேயே ஒரு பெரிய தடபுலனா விருந்து. பெரிய ஆட்டைப் பிடித்து வந்து பார்பர்கியூ செய்து இருக்கிறார்கள்.

தாகித்தி முறைப்படி ஆண்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பெண்கள் பக்கத்திலேயே நின்று பார்த்துக் கொண்டு காத்து இருக்க வேண்டுமாம். மிச்சம் மீதியைத் தான் பெண்கள் சாப்பிட வேண்டுமாம். அப்படி ஒரு வழக்கம் இருந்து இருக்கிறது.

இருந்தாலும் இப்போது எல்லா இடத்திலும் காலம் மாறி விட்டது. மிச்சம் மீதியைக் கணவன்மார்கள் தான் சாப்பிடுகிறார்களாம். பாவம் பாரிட் கள்ளுக்கடை கந்தசாமி. புலம்பிக் கொண்டு திரிகிறார். சந்தேகம் இருந்தால் அவரிடம் போய் கேட்டுப் பாருங்கள். சரி.

திடீரென்று ஒருநாள் கப்பல் சிப்பந்திகள் மூவர் காணாமல் போய் விட்டார்கள். தேடிப் பார்த்ததில் துப்பாக்கிகள், மருந்துகள் போன்றவற்றைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடிப் போனது தெரிய வந்தது.

மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லையாம். தாகித்தி ஒரு சொர்க்க லோகமாம். தடுக்கி விழுந்தாலும் சுகம் சுகமாய் இருக்கிறதாம். இருந்தாலும் சில நாட்களில் பிடிபட்டார்கள். ஆளாளுக்கு வக்கனையாகப் பத்துப் பதினைந்து கசையடிகள் கிடைத்தன.

அதில் மன்மத ராசா குயிந்தால் ஒருவர். ஆனால் தண்டனையில் இருந்து தப்பித்தான். எப்படி. இங்கே தான் அவனுடைய பூர்வீக மனைவி வருகிறாள். என் புருசன் என்னைப் பார்க்க வந்தார் என்று ஒரே சத்தம். ஒரே ஆர்ப்பாட்டம். ஊர் மக்கள் அடங்கிப் போனார்கள். இதன் தொடர்ச்சி நாளை இடம் பெறும்.

சொல்ல மறந்த செய்தி. இந்தக் கட்டுரை தமிழ் மலர் நாளிதழுக்கு மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதும் 999-ஆவது கட்டுரை. அடுத்து 1000-ஆவது கட்டுரை இடம் பெறுகிறது. மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் ஒரு காலச்சுவடு, அந்தப் பெருமை தமிழ் மலர் நாளிதழைச் சாரும். இருகரம் கூப்பிச் சிரம் தாழ்த்துகிறேன். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.11.2020





மலேசியர்கள் சிங்கப்பூரில் வீடுகள் இல்லாத நிலையில்

தமிழ் மலர் - 25.11.2020

அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, சிங்கப்பூரில் பணிபுரியும் சில மலேசியர்கள் வீடு அற்றவர்களாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்ற பத்திரிகை செய்தியைத் தொடர்ந்து, கிள்ளான் எம்.பி. சார்ல்ஸ் சாந்தியாகோ அரசாங்கத்தை விமர்சித்து உள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள தனது பொருளாதார அகதிகளை மலேசியா கவனித்துக் கொள்ள வேண்டும்.

தூதரகங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கும் எந்த ஒரு பதிலும் கிடைப்பது இல்லை என்று கேள்விப் பட்டேன் என்றார் அவர்.

இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் உசேனுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் முஹிடின் யாசினை சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.

சிங்கப்பூரில் பணிபுரியும், ஏறக்குறைய 100 மலேசியர்கள், ஓர் அறையை அல்லது படுக்கையை வாடகைக்கு எடுக்க முடியாமல், வீடு அற்றவர்களாக இருக்கின்றனர் என்று நேற்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கைக்கு சார்ல்ஸ் பதில் அளித்தார்.

சராசரி மாத வருமானம் 800 சிங்கப்பூர் டாலரில் இருந்து (2,441 மலேசிய வெள்ளி) 1,400 சிங்கப்பூர் டாலர் (4,271 மலேசிய வெள்ளி) வரையில் எனும் போது, மாதத்திற்கு 300 - 500 சிங்கப்பூர் டாலரில் ஒரு படுக்கை; அல்லது 700 - 1,200 சிங்கப்பூர் டாலரில் ஓர் அறையை வாடகைக்கு எடுப்பது பலரால் முடியாது என்று சிங்கப்பூரில் பணிபுரியும் ஷாருதீன் ஹேல் ஹெல்மி மொஹமட் நோ கூறினார்.

மலேசியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் காரணமாக சிங்கப்பூரில் சிக்கி உள்ளதாகவும், மலேசியாவுக்குத் திரும்புவதற்கான பயண ஏற்பாடு வசதிகள் (பி.சி.ஏ.) இருந்த போதிலும், சிங்கப்பூரில் தங்கும் படியான கட்டாய விதிமுறைகளை சில முதலாளிகள் வகுத்து உள்ளதாகத் தெரிகிறது.

குறுகிய விடுப்பு எடுக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மலேசியாவுக்குத் திரும்பும் போது 14 நாள் கட்டாயத் தனிமைப் படுத்தல் மற்றும் சிங்கப்பூருக்குத் திரும்பும் போது மற்றொரு சுற்று தனிமைப் படுத்தல் ஆகியவற்றால் அவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கும் என்ற பயத்தால் பலர் பல மாதங்களாக வீடு திரும்பாமல் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, சில மலேசியர்கள் சாலை ஓரத்திலோ பொது பெஞ்சுகளிலோ தூங்கி, பொதுக் கழிப்பறைகளில் குளிப்பதோடு, அன்றாட உணவுக்குக்கூட பெரும்பாலோர் தவித்து வருகின்றனர்.

ஆகவே இதற்கு மலேசிய அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.