26 ஜனவரி 2021

2000 ஆண்டுகள் பழைமையான கெடா தமிழர்களின் வரலாறு

தமிழ் மலர்  - 26.01.2021

உலகத் தமிழர்களின் நாகரிக வரலாறு மிக மிகப் பழைமையானது. மிக மிகத் தொன்மையானது. எகிப்தியம்; ‎கிரேக்கம்‎; சிந்துவெளி;‎ மாயா; ‎பாபிலோனியம்; பாரசீகம்; ‎இன்கா‎; அசுரெக்; மெசொப்பொத்தேமியா; ‎சுமேரியா; வைக்கிங்; உம்மா; ஈலாம்;  அஸ்டெக்; இவற்றுடன் தோள் கொடுத்துப் போகும் நாகரிக வரலாறுகளில் கெடா வரலாறும் ஒன்றாகும்.

அந்த வரலாற்று நாகரிகங்களில் ஒன்றாகக் கெடா வரலாறும் தனித்துவம் பெறுகின்றது. மறுபடியும் சொல்கிறேன். கெடா வரலாறு தனித்துவம் பெற்றது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது கதை அல்ல. உண்மை. இது புகழாரம் அல்ல. உண்மை.


உண்மையில் பார்க்கப் போனால் மாறன் மகாவம்சன் மலையூர் மலாயாவில் கால் பதித்த காலத்தில் இருந்து கெடா வரலாறு தொடங்குகிறது. கெடா தமிழர்களின் வரலாறும் தடம் பதிக்கின்றது. அதற்கு முன்னர் தமிழர்கள் யார்? அவர்கள் எங்கே இருந்து வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

தமிழர்களின் தோற்றம் பற்றி நான்கு கருதுகோள்கள் உள்ளன. கருதுகோள் என்றால் ஆங்கிலத்தில் ஹைப்போதீசிஸ் (hypothesis).


முதலாவது: தமிழர்கள் குமரிக் கண்டத்தில் இருந்து வந்தார்கள் எனும் கருதுகோள்.

இரண்டாவது: பழந்தமிழர்கள் தென் இந்தியாவின் பழங்குடிகள் எனும் கருதுகோள்.

மூன்றாவது: ஆப்பிரிக்கா எதியோப்பியாவில் இருந்து அரேபியா கடல் வழியாகத் தென்னிந்தியாவிற்கு வந்தவர்களின் வழித்தோன்றல்கள் எனும் கருதுகோள்.

நான்காவது: மத்திய ஆசியா, வட இந்தியா போன்ற நிலப்பரப்புகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். காலப் போக்கில் அங்கே இருந்து தென் இந்தியாவிற்குள் வந்தார்கள் எனும் கருதுகோள்.


இந்த நான்கு கருதுகோள்களில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரே ஒரு வரலாற்று உண்மை தெரிய வரும். அதாவது தமிழினம் தொன்மை வாய்ந்த இனங்களில் ஓர் இனம் எனும் உண்மை.

தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆய்வுகள் செய்து இருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிட்டுச் சொன்னால் ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி. அங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்பாண்டங்கள் கி.மு. 1000-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தவையாகும்.

அந்தக் கலைப் பொருட்கள், தமிழர்கள் அங்கு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றுகளாக அமைகின்றன. அந்தப் புதைப் பொருட்களில் உள்ள குறிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

அதற்குக் காரணம் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளுடன் அந்த ஆதிச்ச நல்லூர் குறிப்புகளும் ஒத்துப் போகின்றன.

அப்போதைய காலக் கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை அது உறுதி செய்கிறது. அங்கு கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் கி.மு. 500-ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகும்.

இதையும் சங்கத்தமிழ் இலக்கியச் சான்றுகளுடன் ஒப்பீடு செய்து, தமிழர்கள் குமரிக் கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப் படுத்துகின்றார்கள். சரி. கெடா வரலாற்றுக்கு வருவோம்.

கெடாவின் வரலாறு மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த மாறன் மகாவம்சனைத் தான் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals) சான்று கூறுகின்றன.

மாறன் மகாவம்சன் என்பவர் பாரசீகத்தில் இருந்து தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்தவர். அங்கே இருந்து கெடாவிற்கு வந்து இருக்கிறார். அப்படியே கெடா மன்னராட்சியையும்  (Kedah kingdom - Kadaram) உருவாக்கி இருக்கிறார்.

பூஜாங் சமவெளி எனும் பேரரசிற்கு அடிக்கல் நாட்டு விழா செய்த நாயகனும் இதே இந்த மாறன் மகாவம்சன் என்பவர் தான். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

கெடா மன்னராட்சியை உருவாக்கிய மாறன் மகாவம்சன் பாண்டியர்கள் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். கெடா பேரரசு தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் கெடா நிலப் பகுதி இலங்காசுகம் (Langkasuka) என்று அழைக்கப் பட்டது.

மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் கெடா மாநிலத்தை ஆட்சி செய்த இந்திய அரசர்களின் பட்டியல் வருகிறது. போதுமான சான்றுகளுடன் முன் வைக்கிறேன். இங்கே மிக முக்கியமான ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும்.

மாறன் மகாவம்சனின் சந்ததியினரைப் பற்றி இரு வேறுபாடான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஒரு பதிவு கெடா வரலாற்றுப் பதிவேடுகளில் இருந்து சொல்லப்படும் பதிவுகள் (Kedah Annals). மற்றொன்று சீனாவின் மிங் அரசக் கையேடுகளில் இருந்து சொல்லப்படும் பதிவுகள் (Chronicles of the Ming Dynasty).

இந்த இரு வரலாற்றுப் பதிவேடுகளும் ஒன்றுக்கு ஒன்று முரணான அரசப் பட்டியலைக் கொடுக்கின்றன. முதலில் கெடா வரலாற்றுப் பதிவேடுகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இது கெடா வரலாற்றுப் பதிவேட்டுப் பதிவுகள்.

மாறன் மகாவம்சனுக்கு நான்கு பிள்ளைகள்.

மூத்தவர் மாறன் மகா பூதிசன் (Merong Mahapudisat).

இரண்டாவது மகன் காஞ்சி சர்ஜுனன் (Ganjil Sarjuna).

மூன்றாவது மகன் ஸ்ரீ மகாவங்சன் (Seri Mahawangsa).

கடைசியாக ஒரே மகள். அவருடைய பெயர் ராஜா புத்திரி இந்திரவம்சன் (Raja Puteri Sri Indrawangsa)

மாறன் மகாவம்சனுக்குப் பிறகு அவருடைய மகன் மாறன் மகா பூதிசன் கெடாவின் அரசரானார். இவருக்குப் பிறகு இவரின் தம்பி காஞ்சி சர்ஜுனன் கெடாவின் அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

காஞ்சி சர்ஜுனன் தான் இலங்காசுகத்தைத் தோற்றுவித்தவர். கஞ்சில் சார்ஜுனா இறந்த பின்னர் அவரின் தம்பி ஸ்ரீ மகாவங்சன், இலங்காசுகத்தின் அரசரானார்.

ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் இவரின் தங்கை ராஜா புத்திரி இந்திரவம்சன் என்பவர் இலங்காசுகத்தின் அரசியானார்.

கெடாவிற்கும் தென் தாய்லாந்திற்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைப் பட்டாணி என்று அழைத்தார்கள். பட்டாணி எனும் பெயரில் இருந்து தான் சுங்கை பட்டாணி எனும் இப்போதைய நகரத்தின் பெயரும் உருவாகி இருக்கலாம்.

இந்தப் பட்டாணி நிலப் பகுதிக்கும் ராஜா புத்திரி இந்திரவம்சன் தான் அரசியாக இருந்தார். கெடா வரலாற்றில் இவர் தான் முதல் பெண் ஆட்சியாளர். முதல் அரசி.

அடுத்து வந்தவர் ஸ்ரீ மகா இந்திரவம்சன் (Seri Maha Inderawangsa). இவர் ஸ்ரீ மகாவங்சனின் மகனாகும். இவரைத் தான் கூர்ப் பல் அரசன் (Raja Bersiong) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. இவர் மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பவர் என்றும் சொல்லப் படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.

இவருடைய வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளினால் அரியணையில் இருந்து துரத்தப் பட்டார். இவர் ஜெராய் மலையில் (Gunung Jerai) அடைக்கலம் அடைந்தார். அங்கே வெகு காலம் தனிமையில் வாழ்ந்தார். இவர் ஒரு தாய்லாந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன். பெயர் பரா ஓங் மகா பூதிசன் (Phra Ong Mahapudisat).

பரா ஓங் மகா பூதிசன் ஓர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் அந்த விசயம் அவருக்குத் தெரியாமலேயே இருந்தது. இவர் ஜெராய் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் தன் தாயாருடன் வளர்ந்து வந்தார்.

இந்தக் கட்டத்தில் ஜெராய் மலையில் அடைக்கலம் போன ஸ்ரீ மகா இந்திரவம்சன் அங்கேயே காலமானார். மலையில் இருந்து கீழே இறங்கி வரவே இல்லை.

ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் ஓர் ஆண் வாரிசு கெடா அரியணைக்குத் தேவைப் பட்டார். ஜெராய் மலை அடிவாரத்தின் கிராமத்தில் இருந்த பரா ஓங் மகா பூதிசனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அவரைக் கொண்டு வந்து அவருக்கு கெடா பேரரசின் அரசப் பொறுப்பை வழங்கினார்கள்.

இந்த பரா ஓங் மகா பூதிசனுக்கும் ஒரே மகன். அவருடைய பெயர் பரா ஓங் மகாவம்சன் (Phra Ong Mahawangsa).  இவர் தான் மதம் மாறியவர். தன் பெயரை முஷபர் ஷா என்று மாற்றிக் கொண்டார் என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் சொல்கின்றன.

கெடா மாநில ஆட்சியாளர்கள்
(கெடா வரலாற்றுப் பதிவேடுகள்)

1. மாறன் மகா பூதிசன்
2. கஞ்சில் சார்ஜுனா
3. ஸ்ரீ மகாவங்சன்
4. ராஜா புத்திரி
5. ஸ்ரீ மகா இந்திரவம்சன்
6. பரா ஓங் மகா பூதிசன்
7. பரா ஓங் மகாவம்சன்

சீனாவின் மிங் அரசக் கையேடுகளின் பதிவுகளின்படி கெடா பேரரசின் கடைசி இந்து அரசரின் பெயர் தர்பார் ராஜா II (Durbar Raja II). இவர் தான் மதமாற்றம் செய்து கொண்டார்.

மதமாற்றம் நடந்த பின்னர் 800 ஆண்டுகால கெடா மாநிலத்தின் இந்து மதம் சார்ந்த ஓர் ஆளுமை ஒரு முடிவிற்கு வந்தது என்று மிங் அரசக் கையேடுகள் சொல்கின்றன.

மதமாற்றத்திற்குப் பின்னர் கெடா பேரரசு இந்து மதம் சார்ந்த பேரரசு; கெடா சுல்தானகமாக மாறியது. தர்பார் ராஜா II அரசரை, சயாமியர்கள் பரா ஓங் மகாவங்சா (Phra Ong Mahawangsa) என்று அழைத்து இருக்கிறார்கள். எப்படி மதமாற்றம் நடந்தது என்பதையும் கவனியுங்கள்.

கி.பி.1136-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த சமய போதகர் செயிக் அப்துல்லா குமானி (Sheikh Abdullah bin Ja'afar Quamiri) என்பவர் கெடாவிற்கு வந்தார். கெடா அரசின் கடைசி ராஜாவான தர்பார் ராஜா II என்பவரை மதம் மாற்றம் செய்தார். அந்த அரசருக்கு முஷபர் ஷா (Mudzaffar Shah I) என்று பெயர் மாற்றம் கண்டது.

அடுத்து சீனாவின் மிங் அரசக் கையேடுகள் கொடுக்கும் கெடா அரசர்களின் பட்டியல் உள்ளது. இதை அடுத்த கட்டுரையில் ஒப்பீடு செய்து பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.01.2021

சான்றுகள்:

1. Around 170 CE a group of native refugees of Hindu faith arrived at Kedah - https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100

2. The Hindu dynasty ended when the ninth king Durbaraja II, styled "Phra Ong Mahawangsa" by the Siamese, converted to Islam in 1136 - https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100  

3. https://web.archive.org/web/20060511194957/http://uqconnect.net/~zzhsoszy/states/malaysia/kedah.html

4. R. O. Winstedt (December 1938). "The Kedah Annals". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. 16 (2 (131)): 31–35. JSTOR 41559921.


 

21 ஜனவரி 2021

சோழர் காலத்து அந்தமான் தமிழர்களின் வியப்புமிகு வரலாறு

தமிழ்மலர் - 20.01.2021

இராஜேந்திர சோழன் 1024-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவின் மீது படை எடுக்கும் போது அந்தமான் தீவுகளில் ஏறக்குறைய 200 தமிழர்களைத் தங்க வைத்துவிட்டு இந்தோனேசியாவுக்குப் போய் இருக்கிறார்.

அந்தமான் தீவுகளைக் கைப்பற்றியதால் அந்தத் தீவில் ஒரு தற்காலிமான ஆளுமை வேண்டும் என்பதற்காகப் போர் வீரர்களை விட்டுச் சென்று இருக்கிறார்.

பொதுவாகவே முன்பு காலத்துச் சோழர்கள்; அவர்கள் கைப்பற்றிய இடங்களில் அவர்களின் போர் அதிகாரிகளை நிர்வாக அதிகாரிகளாக விட்டுச் செல்வது வழக்கம். தவிர அந்தமான தீவில் சோழர்களின் மரக் கலங்களில் சில சேதம் அடைந்து இருந்தன. பலமான புயல்காற்றினால் மரக் கலங்கள் சேதம் அடைவது வழக்கம்.

அவற்றைச் செப்பனிட வேண்டும். சற்றுத் தாமதம் ஆகலாம். அதனால் அவர்களின் கப்பல்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகப் போர் வீரர்கள் சிலரை அந்தமான் தீவுகளில் விட்டுச் சென்று இருக்கிறார்.


படையெடுப்பிற்குப் பின்னர் அவர் திரும்பிச் வரும் போது என்ன அவசரமோ; என்ன நெருக்கடியோ தெரியவில்லை. அந்தமான் தீவுகளில் விட்டுச் சென்ற தமிழர்களை மறந்த வாக்கில் சென்று விட்டார். இன்னும் ஒரு கருத்தும் உள்ளது.

அந்தமான் தீவுகளுக்கு இராஜேந்திர சோழன் மீண்டும் சென்ற போது முன்பு விட்டுச் சென்ற தமிழர் வீரர்கள் பலர் அங்கே இல்லை. ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்டவர்கள் காடுகளுக்குள் போய் ஷோம்பேன் பழங்குடி இனத்தாருடன் கலந்து விட்டதாக்ச் சொல்லப் படுகிறது.

அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சாதாரண விசயம் அல்ல. அந்தமான் காடுகள் அடர்ந்த அமேசான் காடுகளைப் போல அடர்த்தியான காடுகள். எந்தக் காட்டுக்குள்; எந்த குகைக்குள் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. தவிர பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் செல்வதும் ஆபத்து. விஷ அம்புகளால் கொன்று விடுவார்கள்.

அங்கு தற்காலிகமாகக் கட்டப்பட்ட கோட்டையில் ஒரு சிலர் மட்டுமே இருந்து உள்ளனர். அவர்களில் சிலர் அழைத்துச் செல்லப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது. இராஜேந்திர சோழன் விட்டுச் சென்ற போர் வீரர்களினால் ஒரு நல்லதும் நடந்து இருக்கிறது.

அந்தமான் தீவுகளில் அப்படி விடப்பட்ட தமிழர்களில் சிலர் தனியாக வாழ்ந்து தனி ஒரு சமூகத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அந்தத் தீவுகளில் ஏற்கனவே வாழ்ந்து வந்த ஷோம்பேன் பழங்குடி மக்களுடன் இணைந்து ஒரு புதிய கலப்பு தமிழர்ச் சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.

இன்றும் அந்தத் தமிழர்க் கலப்பு இன மக்கள் ஷோம்பேன் எனும் பழங்குடி இனத்தின் பார்வையில் வாழ்ந்து வருகிறார்கள். முகத்தைப் பார்த்தாலே தமிழர்களின் முகத் தோற்றங்கள் பளிச்சென தெரியும். வேறு விளக்கம்... வேறு சான்றுகள் தேவையே இல்லை.


முன்பு காலத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் முழுவதும் பற்பல பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள். அந்தப் பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டுமரங்களின் மூலமாகக் கடல் கடந்து வந்து அங்கே குடியேறி விட்டார்கள்.

பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் இருந்து வந்தவர்கள். ஆஸ்திரேலியா; பாபுவா நியூகினி; போர்னியோ போன்ற இடங்களில் இருந்து வந்து இருக்கலாம். மலாயாவில் இருந்து புலம்பெயர்ந்த பழங்குடி மக்களையும் அந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும்.


ஆனால் உலகின் ஒரு சில நாடுகளில் மண்ணின் மைந்தர்களை, அந்தக் கணக்கில் சேர்க்க இயலாது. மண்ணின் மைந்தர்கள் என்பது வேறு. அசல் மண்ணின் மைந்தர்கள் எனும் பழங்குடி மக்கள் வேறு.

அசல் மண்ணின் மைந்தர்களின் பெயரைச் சொல்லி பேர் போடுபவர்களை மனிதவியலாளர்கள் அந்தக் கணக்கில் சேர்க்க மாட்டார்கள்.

சோழர் காலத்து அந்தமான் தமிழர்களும்; சன்னம் சன்னமாய் நாகரிக வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். பெரும்பாலானவர் தங்களின் பிள்ளைகளைச் சென்னைக்கு மேல் படிப்பிற்காக அனுப்பி வைக்கிறார்கள். பிள்ளைகளும் நன்றாகப் படிக்கிறார்கள். அவர்களில் சிலர் நல்ல நல்ல பதவிகளிலும் சேவை செய்கிறார்கள்.

சோகமான வரலாற்றிலும் சுகமான சுவடுகள் சுந்தரமான ராகங்களைச் சுவாசிக்கின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.01.2021




 

17 ஜனவரி 2021

மலாக்கா தோட்டத்து மகராசா கதை

1950-ஆம் ஆண்டுகளில் மலாக்காவில் நிறையவே ரப்பர் தோட்டங்கள். அந்தி மந்தாரப் பூக்களாய் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாய் அவதானித்த அவசர அட்சய பாத்திரங்கள். ஆயிரக் கணக்கான தமிழர்களுக்குப் படி அளந்த பத்திரை மாத்துக் கித்தா தோப்புகள்.

அவற்றில் காடிங் தோட்டம் என்கிற ஒரு கித்தா காடு. டுரியான் துங்கல் காட்டுக்குள் மறைந்து இருந்தது. ஒரு இருபது முப்பது குடும்பங்கள். குண்டும் குழியுமாய் செம்மண் சடக்குச் சாலை. அதில் பன்னிரண்டாம் கட்டை பத்துமலை மேடு. உச்சி வெயிலில் மண்டை பிளக்கும் மகா மேடு.

அப்புறம் அந்தப் பன்னிரண்டாம் கட்டைப் பாதையில் ஒரு பாலைவன இறக்கம். அடுத்துவரும் அமேசான் அத்தாப்புகளின் பச்சைப் பாசா காடுகள். அதற்கு அடுத்து சின்னதாய் ஒரு ரத்து கோயில்.

தோட்டத்துக்குள் நுழைந்ததும் முதலில் தெரிவது ராமன் தோட்டம். கல்யாணம் ஆகாமலேயே கல்யாண ராமனாய் வாழ்ந்த மறைந்தவரின் தோட்டம். எங்கே இருந்து வந்தார். எப்படி வந்தார் என்று யாருக்கும் தெரியாது. தோட்டத்தில் போஸ்ட்மேன் வேலை.

காய்ந்து போன கருவாட்டைத் தொங்க விட்டு; அதைப் பார்த்துப் பார்த்தே பல பத்து ஏக்கர் நிலங்களை வாங்கி; அழகு பார்த்த மலாக்கா மாமனிதர்களின் பட்டியலில் இவரையும் சேர்ப்பார்கள். இவர் மறைந்த பிறகு இவருடைய தோட்டத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டதாகக் கேள்வி.

கொஞ்சம் தள்ளிப் போனால் ஆக்கேட் வங்சா கடை. அப்புறம் வரிசை வரிசையாய்த் தகரக் கொட்டாய்கள். மன்னிக்கவும். அந்தக் காலத்து பத்மினி சாவித்திரிகளும்; சிவாஜி ஜெமினி கணேசன்களும்; மன்மத ராசாக்களும் வாழ்ந்த அரண்மனை தகர டப்பா வீடுகள். அந்த மாதிரி வீடுகளில் தான் நாங்களும் வாழ்ந்து சரித்திரம் படைத்து விட்டோம்.

அப்பழுக்கற்ற வெள்ளந்திகள் கவடு சூது இல்லாமல் வாழ்ந்த காலக் கட்டம். அப்படி ஒரு தோட்டம். வாயில்லா விழுமியங்களின் மறுபக்கம் என்று வாய்விட்டுச் சொல்லலாம்.

காடிங் தோட்டத்தில் வாழ்ந்த பாட்டிமார்கள் ஒரு ராஜா கதை சொல்வார்கள். இன்றும் நினைவில் ஊஞ்சலாடும் கித்தா காட்டுக் கதை. தோட்டப்புறக் கூண்டுக்குள் அடைபட்டு வாழ்ந்த காலத்தில் ராஜா கதைகள் ரொம்பவும் பிரபலம்.

அவற்றில் இந்த ராஜா கதை இருக்கிறதே; இது மிக மிகப் பிரபலம். மகராசா பரமேசா எனும் கதைதான் அந்தப் பிரபலமான ராசா கதை.

ராஜா கதை என்றதும் பலருக்கு ராஜா தேசிங்கு கதை நினைவிற்கு வரலாம். ராஜா விக்கிரமாதித்தன் கதை நினைவிற்கு வரலாம். நளன் தமயந்தி கதை நினைவுக்கு வரலாம். கட்ட பொம்மன் கதையும் நினைவுக்கு வரலாம்.

ஆனால் மலாக்காவில் தனித்து ஒரு கதை தலைநிமிர்ந்து நின்றது. அதுதான் பரமேஸ்வரா கதை. இப்போது அந்தக் கதையை அசை போட்டுப் பார்க்கலாம். மற்றபடி அசலாகப் பார்க்க முடியவில்லை.

பொழுது சாய்ந்தால் போதும். பாட்டிமார்களைச் சுற்றி ஒரு பெரிய வாண்டுப் பட்டாளம் கூடி நிற்கும். ஒரு பக்கம் நண்டு சுண்டுகளுடன் ஒரு பாட்டி ஒரு கதை சொல்வார். இன்னொரு பக்கம் சேட்டை பண்ணும் சுட்டிகளுடன் இன்னொரு பாட்டி இன்னொரு கதை சொல்வார்.

குறைந்தது இரண்டு மூன்று பாட்டிமார்களின் கதா காலட்சேபம் ஒரே சமயத்தில் நடந்து கொண்டு இருக்கும். எந்தக் கதைப் பிடிக்குமோ அதில் போய் ஒட்டிக் கொள்ளலாம். ரொம்பவும் தாமதமாகப் போனால் கதை பிடிபடாது.

முன்பு காலத்தில் பத்தாங் மலாக்கா நகரில் புறப்பட்ட இரயில் தம்பின் நிலையத்தில் தான் போய் நிற்கும். இடையில் நிற்காது. அந்த மாதிரி தான் ஒரு பாட்டி ஒரு கதை சொன்னால் எங்கேயும் நிறுத்த மாட்டார்.

இன்னும் ஒரு விசயம். பரமேசுவரா கதையைக் கேட்க இரண்டு மூன்று பேர் தான் இருப்போம். அதனால் கதை சொல்லும் பாட்டி எங்களுக்குப் புரிகிற மாதிரி ரொம்பவும் நிதானித்துச் சொல்லுவார்.

ஒன் மினிட் பிளீஸ். பாட்டி மொழியில் கதையை எழுத முடியாது. நம்ப பாவனையிலேயே சொல்லி விடுகிறேன். அப்போதுதான் உங்களுக்கும் புரியும்.

ரொம்ப நாளைக்கு முன்னால் மலாக்கா பெர்த்தாம் நதிக் கரையோரத்தில் நடந்த ஒரு கதை. ஓர் ஒண்டிக் கட்டை காட்டுச் சருகு மான். அதை எதிர்த்து நாலைந்து வேட்டை நாய்கள். அங்கே ஒரு குட்டிச் சண்டை.

அதில் ஒரு நாய் மல்லாக்காக ஆற்றில் போய் விழுந்தது. சகுனம் நல்லா இருக்கிறது என்று சொல்லி அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வைத்தார் ஒரு ராஜா. அந்த ராஜா தான் பரமேசா என்கிற ராஜா. பரமேஸ்வரா தான் பரமேசா.

இந்தக் கதை முன்பு காலத்தில் ஆயாக் கொட்டகை பிள்ளைகளுக்குத் தெரிந்த விசயம். இப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கிற பிள்ளைகளுக்குத் தெரியுமா என்பது பில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் வரலாற்றுக் கோளாறுகள் தான்.

ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுவது பழைய கதை. இப்போது அப்படி எல்லாம் இல்லைங்க. ஆட்டைத் தூக்கி ஆற்றில் போட்டு; மாட்டைத் தூக்கிக் குளத்தில் போட்டு; மனுசனைத் தூக்கி எருமை மாட்டில் கட்டி மேய்க்கிற கதை தான்.

என்ன செய்வது. ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி, அதிரசத்தையும் அப்பம் பாலையும் அபேஸ் பண்ணிட்டாங்க. கோளாறு பட்டியல் கொஞ்ச நஞ்சம் அல்ல. கோலாலம்பூர் வரை நீண்டுக் கொண்டு போகும்.  

மல்லாக்கா என்ற சொல்லில் இருந்து மலாக்கா வந்ததா. அல்லது மலாக்காவில் இருந்து மல்லாக்கா வந்ததா தெரியவில்லை. அதை மல்லாக்கா படுத்துக் கொண்டு தான் ஆராய்ச்சி பண்ண வேண்டும். குப்புறப் படுத்துக் கொண்டு ஆராய்ச்சி பண்ணினால் அப்புறம் கிணற்றுத் தவளை மாதிரி தான் யோசிக்க வேண்டி வரும்.

அப்படித் தானே சிலர் யோசித்து வரலாற்றுப் பாடப் புத்தக்ங்களை எல்லாம் எழுதிச் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்கள். எங்கே என்று கேட்க வேண்டாம். அப்புறம் வில்லங்கம் விபரிதமாய் கதகளி ஆடிவிடும். வேண்டாமே.

சரி. மீண்டும் காடிங் தோட்டத்திற்கே போவோம். ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை. பரமேஸ்வராவைப் பற்றி கதை கதையாகச் சொல்வார்கள். பொழுது சாய்ந்தால் போதும். பாட்டிமார்களைச் சுற்றி பொடிப் பயல்களின் பட்டாளம் வரிசை கட்டி நிற்கும்.

மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைக்க ஓர் ஆள். பாட்டிகளுக்கு வெற்றிலைப் பாக்கை இடித்துக் கொடுக்க ஓர் ஆள். காலைப் பிடித்துவிட ஓர் ஆள். விரல்களில் முட்டி முறிக்க ஓர் ஆள். முதுகைச் சொறிந்துவிட ஓர் ஆள். நடுத்தர வயது பெண்களும் சேர்ந்து கொள்வார்கள்.

சமயங்களில் பாட்டிமார்களின் கதைகளில் சித்த மருத்துவப் பாடல்கள் சுதி சேர்ந்து, களை கட்டி நிற்கும். அப்போதைக்கு அது பாட்டிமார்களின் அல்லி தர்பார் என்றுகூட சொல்லலாம்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எவரும் தாத்தாமார்களைச் சீண்ட மாட்டார்கள். பாவம் தாத்தாமார்கள் என்று சொல்லலாம்.

அவர்களின் தாதா வேலைகள் அப்போதைக்கு கொஞ்சம்கூட எடுபடாது. எங்கேயாவது சுருண்டு போய்க் கிடப்பார்கள்.

ஒரு பாட்டி பரமேசா கதையை இப்படி ஆரம்பிப்பார்.

தண்ணி குடிக்க நாலு நாய் பாய்ந்து போச்சாம்

மானு குட்டி சேத்து ஆத்துல பயந்து போச்சாம்

விரட்டுனா மானு குட்டி கரை பக்கம் ஓடுச்சாம்

நவர முடியாம மொறைச்சு பார்த்துச்சாம்

சண்டை வந்து நாயி மல்லாக்கா விழுந்துச்சாம்

சகுனம் பார்த்தா நல்லா இருந்துச்சாம்

மலாக்கானு பரமேசா பேரு வச்சாராம்

இப்படித்தான் ஒரு சின்னப் பாடலாக பரமேசா கதை ஆரம்பமாகும். அப்புறம் அந்தக் கதை ஒரு மாதத்திற்கு இழுத்துக் கொண்டு போகும். தோட்டத்து மக்களும் அசர மாட்டார்கள். சாப்பிட்டச் சோறு செரிக்கும் வரையில் உட்கார்ந்து கதை கேட்பார்கள்.

இந்த மாதிரி கதையைக் கேட்டு நானும் எத்தனையோ நாட்கள் வாயைப் பிளந்து கொண்டு தூங்கிப் போய் இருக்கிறேன். இராத்திரி பத்து மணிக்கு கதையில் ஒரு பாகம் முடியும்.

அப்புறம் ’வாடா மாச்சாப்பு’ என்று என்னை இழுத்துக் கொண்டு போவார்கள். நினைத்துப் பார்க்கிறேன். தோட்டத்தில் என்னை மாச்சாப்பு என்று தான் அழைப்பார்கள்.

மாச்சாப்பு ஆண்டவருக்கு வேண்டிக் கொண்டு நான் பிறந்ததால் எனக்கு மாச்சாப்பு ஆண்டவரின் பெயரையே வைத்து இருக்கிறார்கள். பிறந்த சூராவில் முத்துக்கிருஷ்ணன். தாத்தாவின் பெரை வைத்து இருக்கிறார்கள்.

அந்தக் கதைக் காலம் எல்லாம் தோட்டத்து மக்கள் வெள்ளந்திகளாக; பிள்ளைப் பூச்சிகளாக வாழ்ந்த காலம். அதுவே கரைந்து போன ஒரு கனாக்காலம். அந்த மாதிரி தோட்டத்தில் தான் நானும் பிறந்து வளர்ந்தேன்.

ஆடு மேய்த்து கோழி மேய்த்து; ஆற்று மீனைச் சுட்டுத் தின்னு; மரவள்ளிக் கிழங்கில் வயிற்றை வளர்த்து; மண் சடக்கில் சுருண்டு விழுந்து; மழையில் நனைந்து வெயிலில் கரைந்து; தமிழ்ப்பள்ளி ஆங்கிலப் பள்ளி காலேஜ் கல்லூரி பல்கலைக்கழகம் என்று போய் எல்லாத்தையும் பார்த்தாச்சு. பேரன் பேத்திகளும் எடுத்தாச்சு.

அந்த மாதிரியான காலங்கள் மறுபடியும் வருமா? நோ சான்ஸ். வரவே வராதுங்க. நெஞ்சு லேசாக அடைக்கிற மாதிரி இருக்கிறது. கற்பனை செய்தே காலத்தை ஓட்ட வேண்டியது தான். வேறு என்ன செய்வது. சும்மா ’பீளிங்’கிலேயே வாழ வேண்டியது தான்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.01.2021

 

 

15 ஜனவரி 2021

மலாக்கா பலேமிசுலாவின் மல்லாக்கா கதை

ரொம்ப நாளைக்கு முன்னால் மலாக்கா பெர்த்தாம் நதிக் கரையோரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஓர் ஒண்டிக் கட்டை காட்டுச் சருகு மான். அதை எதிர்த்து நாலைந்து வேட்டை நாய்கள். அங்கே ஒரு குட்டிச் சண்டை. அதில் ஒரு நாய் மல்லாக்காக ஆற்றில் விழுந்தது. சகுனம் நல்லா இருக்கிறது என்று சொல்லி அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வைத்தார் ஒரு ராஜா.

அந்த ராஜா தான் பரமேஸ்வரா என்கிற ராஜா. முன்பு காலத்தில் ஆயாக் கொட்டகை பிள்ளைகளுக்குத் தெரிந்த விசயம். இப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கிற பிள்ளைகளுக்குத் தெரியுமா என்பது பில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் வரலாற்றுக் கோளாறுகள் தான்.

ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுவது பழைய கதை. இப்போது அப்படி எல்லாம் இல்லை. ஆட்டைத் தூக்கி ஆற்றில் போட்டு; மாட்டைத் தூக்கிக் குளத்தில் போட்டு; மனுசனைத் தூக்கி எருமை மாட்டில் கட்டி மேய்க்கிற கதை தான். என்ன செய்வது. ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி அதிசரத்தையும் அபேஸ் பண்ணிட்டாங்க. கோல்மால் பட்டியல் நீண்டு போகும்.  

மல்லாக்கா என்ற சொல்லில் இருந்து மலாக்கா வந்ததா. அல்லது மலாக்காவில் இருந்து மல்லாக்கா வந்ததா தெரியவில்லை. அதை மல்லாக்கா படுத்துக் கொண்டு தான் ஆராய்ச்சி பண்ண வேண்டும். குப்புறப் படுத்துக் கொண்டு யோசித்தால் கிணற்றுத் தவளை மாதிரி யோசிக்க வேண்டி வரும்.

அப்படித் தானே சிலர் யோசித்து வரலாற்றுப் பாடப் புத்தக்ங்களை எல்லாம் எழுதிச் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்கள். எங்கே என்று கேட்க வேண்டாம். அப்புறம் வில்லங்கம் விபரிதமாய் கதகளி ஆடிவிடும்.

பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சிப் புரிந்த காலத்தில் அவரைப் பலமேசுலா என்றே சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். அழைத்தும் வந்தார்கள். இப்போதும்கூட மலேசியச் சீனர்கள் பலேமிசுலா… பலேமிசுலா… என்றுதான் அழைக்கிறார்கள். நமக்கும் வாய் தவறி பலேமிசுலா என்று வந்துவிடுகிறது.

சரி விடுங்கள். அவரைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. பலமேசுலா என்றுதான் அழைத்து இருக்கிறார்கள்.

(சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1487 - 1489)

இந்திய நாட்டவர்கள் பரம ஈஸ்வரா அழைத்து இருக்கிறார்கள். அராபிய நாட்டு வணிகர்கள் பரமோ ஈஸ்வரா என்று அழைத்து இருக்கிறார்கள். பின்னர் வந்த சீன வணிகர்கள் பல மோஸ் லா என்று அழைத்து இருக்கிறார்கள். ரகரம் ஒரு லகரமாக மாறுவதைக் கவனியுங்கள். அங்கே தான் சரித்திரம் அழகாக வீணை வாசிக்கின்றது.

சரி. மறுபடியும் சீன நாட்டின் மிங் அரச குறிப்பேடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.  மலாக்கா நாட்டின் அரசர் பலேமிசுலா (Bai-li-mi-su-la, the king of the country of Melaka) என்றுதான் சீனப் பழஞ்சுவடிகள் சொல்கின்றன. ஆக மலாக்கா வரலாற்றின் கதாநாயகன் பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா.

அவர் இறக்கும் போது பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். சுல்கார்னாயின் என்பவர் எங்கே இருந்து வந்தார். தெரியவில்லை. பரமேஸ்வராவின் பெயரைத் தங்கள் வசதிக்கு மாற்றிக் கொண்டார்கள். போதுங்களா. எங்கே வருகிறேன். புரிந்து கொள்ளுங்கள்.

இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா. மகா அலெக்ஸாந்தரின் பெயர் தான் சுல்கார்னாயின். இவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். அவர் லங்காவி தீவிற்கு வந்து அங்குள்ள ஒரு சுதேசிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாராம். தலை சுற்றுகிறது

இந்தியாவிற்கு வந்த மகா அலெக்ஸாந்தர் கி.மு. 326-ஆம் ஆண்டு போரஸ் மன்னனோடு சண்டைப் போட்டார். அதன் பின்னர் அப்படியே சிந்து நதி வழியாகப் பாரசீகம் போய்ச் சேர்ந்தார். அவர் இங்கு மலையூர் பக்கம் தலையைக் காட்டவே இல்லை.

ஆனால் மகா அலெக்ஸாந்தர் லங்காவிக்கு வந்தாராம். அங்குள்ள பெண்ணைக் கல்யாணம் பண்ணினாராம். பிள்ளைகள் பெற்றுக் கொண்டாராம். அவரின் வாரிசுதான் பரமேஸ்வராவாம். என்னங்க இது. ரீல் விடுவதற்கும் ஓர் எல்லை வேண்டாமா?

1400-ஆம் ஆண்டில் அதாவது மகா அலெக்ஸாண்டருக்குப் பின்னர் 1730 ஆண்டுக்குன் பிறகு தான் பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவித்தார். உச்சந்தலைக்கும் உச்சங்காலுக்கும் முடிச்சு போடுவதிலும் நியாயம் வேண்டாமா?

பரமேஸ்வரா சமய மாற்றம் செய்து கொண்டாரா இல்லையா என்பது இப்போதைக்கு நம்முடைய வாதம் அல்ல. இருந்தாலும் அவர் இறக்கும் போது அவருடைய பெயர் என்ன என்பதே இப்போதைக்கு நம்முடைய வாதம்.

அதைப் பற்றித்தான் சில மலேசிய வரலாற்றுக் கத்துக்குட்டிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. மல்லுக்கு நின்றாலும் பரவாயில்லை. மீசையில் மண் ஒட்டிக் கொண்டதையும் கண்டு கொள்ளவில்லை. அதான் வேதனையாக இருக்கிறது.

பரமேஸ்வரா இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பரமேஸ்வரா என்றே அழைக்கப்பட்டு இருக்கிறார். வேறு எந்தப் பெயரிலும் அவர் அழைக்கப் படவில்லை. அதைச் சீன வரலாற்றுக் குறிப்புகள் உறுதி படுத்துகின்றன. வலுவான ஆதாரங்களும் உள்ளன. இப்போது தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.

1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் மலையின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தான் தோற்றுவித்தார். இருப்பினும் அண்மைய காலங்களில் அவருடைய பெயர் வரலாற்றில் இருந்து இரட்டடிப்புச் செய்யப் படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய் வருகிறார். உண்மை மறைக்கப்படக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.01.2021


 

08 ஜனவரி 2021

மலாயா கிளந்தான் தமிழர்கள்

மலாயாவின் வரலாறு பரமேஸ்வரா காலத்தில் தொடங்கி முற்றுப் பெறவில்லை. மன்சூர் ஷா காலத்தில் தொடங்கி முகமட் ஷா காலத்தில் முற்றுப் பெறவில்லை.

சீனத்து இளவரசி ஹங் லீ போ காலத்தில் தொடங்கி இளவரசி புத்திரி குனோங் லேடாங் காலத்தில் முற்றுப் பெறவில்லை. மலையூர் காலத்தில் தொடங்கி மஜபாகித் காலத்திலும் முற்றுப் பெறவில்லை.

மாறாக மாமாங்கங்கள் பல தாண்டிப் போய் மலாயா மைந்தர்களின் கதைகளில் முடிகின்றது. அந்தக் கதைகளில் ஒன்றுதான் பான் பான் (Pan Pan) தமிழர்களின் கதை. 1700 ஆண்டுகளுக்கு முன்னால் மலாயாவில் தமிழர்கள் அரசாட்சி செய்த கதை.

கி.பி. 300-ஆம் ஆண்டுகளில் மலாயா, தாய்லாந்துப் பெருநிலங்களை ஆட்சி செய்த ஓர் அரசின் கதை. இது சினிமாக் கதை அல்ல. உண்மையான கதை. உண்மையாக நடந்த கதை. ஒரு வரலாற்றுக் கதை.

முன்பு காலத்தில் அதாவது கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை பான் பான் எனும் பேரரசு மலாயாவின் கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை ஆட்சி செய்த ஓர் அரசாகும்.

மலாயா தாய்லாந்து நாடுகளில் புத்த மதம் தடம் பதிப்பதற்கு முன்பாகவே இந்து மதம் சார்ந்த தமிழர்களின் அரசுகள் கோலோச்சி உள்ளன. தென்கிழக்காசியாவில் ஆழமாய்த் தடம் பதித்து ஆலாபனைகள் செய்தும் உள்ளன.

பான் பான் எனும் சொல்லில் இருந்து தான் பான் தான் நீ (Pan tan i); பட்டாணி (Pattani) எனும் பெயர்கள் தோன்றின. வரலாற்று ஆசிரியர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.

கிளாந்தான், திராங்கானு மாநிலங்களைத் தவிர தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு மாநிலங்களையும் பான் பான் பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

வருடத்தைக் கவனியுங்கள். கி.பி. 300-ஆம் ஆண்டுகள். ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

அதுவே மலாயாவில் தமிழர்கள் அரசாட்சி செய்து இருக்கும் ஒரு வரலாற்றுச் சாசனம். உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும்.

ஏன் தெரியுங்களா. வரலாறு பொய் சொல்லாது. தெரியும் தானே. அதுதான் விசயம். ஆக அந்த வரலாற்றில் இருந்து மறைந்து போன தமிழர்களின் இரகசியங்களை மீட்டு எடுக்கும் போது சில உண்மைகள் கசக்கவே செய்யும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா. சொல்லுங்கள்.

பான் பான் பேரரசின் தலைநகரம் சையா (Chaiya). இந்த நகரம் இன்னும் தாய்லாந்தில் இருக்கிறது. கிரா குறுக்குநிலம் (Kra Isthmus) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாய்லாந்தையும் மலாயாவையும் பிரிக்கும் ஒரு குறுக்குநிலம்.

அங்குதான் கிழக்குக் கரை பக்கமாக இந்தச் சையா நகரம் இருக்கிறது. இந்த நகரம் தான் முன்பு காலத்தில் பான் பான் பேரரசின் தலைநகரமாகவும் விளங்கி இருக்கிறது.

1920-ஆம் ஆண்டில் இந்த நகரத்தில் அகழாய்வு செய்தார்கள். மண்ணுக்குள் பல மீட்டர்கள் ஆழத்தில் கட்டடச் சிதைவுகள்; கருங்கல் சிலைச் சிதைவுகள்; கரும்பாறைச் சிதைவுகள்; சிலை பீடங்கள்; கோயில் கருவறைத் தூண்கள் என்று நிறையவே பழம் பொருட்கள் கிடைத்தன.

அந்தச் சிதைவுகள் மூலமாகத் தான் பான் பான் என்கிற ஓர் அரசு இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. அப்படித்தான் தமிழர்கள் சார்ந்த ஓர் அரசு இருந்தது எனும் செய்தியும் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

மலாயா வரலாற்றை அலசி ஆராய்ந்து பார்க்கும் போது மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லுக்கு மிகச் சரியானவர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரிய வரும்.

அந்த வரலாற்றுப் பார்வையில் மலாயாவுக்கு வந்த தமிழர்களின் அடிச்சுவடிகளும் அழகாய்த் தெரிகின்றன. இது உண்மையிலும் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது.

தாய்லாந்தில் இருக்கும் நாக்கோன் சி தாமராட் மாவட்டத்தில் சிச்சோன் (Sichon), தா சாலா (Tha Sala) எனும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தொல் பொருள் சிதைவு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

அதாவது பான் பான் காலத்துச் சிதைவுகள். பெரும்பாலானவை இந்து சமயம் சார்ந்த சரணாலயங்கள். இந்தச் சரணாலயங்களில் காணப்பட்ட சிலைகள் அனைத்துமே சிவபெருமான் சிலைகளின் சிதைவுகள் ஆகும்.

கி.பி. 424; கி.பி. 453-ஆம் ஆண்டுகளின் இடைவெளிக் காலத்தில் பான் பான் அரசு, சீனாவிற்குத் தூதுக் குழுக்களை அனுப்பி வைத்து இருக்கிறது. அப்போது பான் பான் அரசை கவுந்தய்யா II (Kaundinya II) எனும் அரசர் ஆட்சி செய்து இருக்கிறார்.

இந்த அரசர் தான் பூனான் சாம்ராஜ்யத்தில் இந்து மதத்தைப் பரப்புவதற்கு முயற்சிகள் செய்து இருக்கிறார். பூனான் சாம்ராஜ்யம் என்பது கம்போடியாவைச் சார்ந்த ஒரு பேரரசாகும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.01.2021

சான்றுகள்:

1. Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. ISBN 0-7591-0279-1.

2. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. pp. 130–131. ISBN 981-4155-67-5.

3. https://southeastasiankingdoms.wordpress.com/tag/panpan-kingdom/ - Vestiges of former Hindu sanctuaries, mostly Shivaite, built from the fifth to the seventh centuries.

4. Hall, D.G.E. (1981). A History of South-East Asia, Fourth Edition. Hong Kong: Macmillan Education Ltd. p. 38. ISBN 0-333-24163-0.