15 பிப்ரவரி 2021

உலகின் மூத்தக் குடிமக்களின் உண்மையான வரலாறு

தமிழ் மலர் - 12.02.2021

உலகின் முதலாவது மூத்தக் குடிமக்கள் என்று எவரும் இல்லை. இரண்டாவது மூத்தக் குடிமக்கள் என்று எவரும் இல்லை. மூன்றாவது மூத்தக் குடிமக்கள் என்று எவரும் இல்லை. ஒரே ஒரு மனித இனம் தான் ஒரே ஒரு சமயத்தில் தோன்றி இருக்கிறது.

அதுவும் குரங்கில் இருந்து தான் தோன்றி இருக்கிறது. அதுவும் ஆப்பிரிக்கா நாடான கென்யாவின் ரிப்ட் பள்ளத்தாக்கில் தோன்றி இருக்கிறது.

அந்த இனம் அங்கிருந்து புறப்பட்டு உலகம் பூராவும் பரவி இருக்கிறது. அப்படிப் பரவிச் செல்லும் போது எந்த எந்த இடங்களில் அந்த மூத்தக் குடிமக்கள் தங்கினார்களோ அங்கே அவர்களின் வாழ்வியல் தடங்களை விட்டுச் சென்று உள்ளார்கள்.

அவர்களின் உடல் எலும்புத் தடங்களை விட்டுச் சென்று உள்ளார்கள். அவர்களின் கலைக் கலாசாரத் தடயங்களையும் விட்டுச் சென்று உள்ளார்கள். ஒரு செருகல்.

வரலாற்றை ஆழமாகப் படிக்க வேண்டும். அறிஞர்களின் ஆய்வுகளை ஆழ்ந்துப் படிக்க வேண்டும். அவர்களின் கள ஆய்வுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்புறம் தான் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர வேண்டும்.

எங்கள் இனம் தான் உலகில் இரண்டாவது மூத்த இனம் என்று சொல்வதற்கு முன்னால் மனிதவியல் வரலாற்றை ஆழமாகத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இனத்தின் மீது உள்ள அதீத அன்பினால்; அதீதப் பற்றினால் தவறான கருத்துகளைப் புகுத்தி விடக் கூடாது.

மற்ற இனத்தவர்கள் முகம் சுழிக்கிற மாதிரி நடந்து கொள்ளவும் கூடாது. இனப்பற்று வேண்டும் தான். அதற்காக வரலாற்றுப் பிறழ்வுகள் ஏற்பட்டு விடக் கூடாது.

நுனிப் புல்லை மேய்ந்து விட்டு அதே நுனிப் புல்லில் கயிறு திரித்து நூறு கதைகள் சொல்லும் மனிதர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


காடுகளிலும்; குகைகளிலும்; மரக் கிளைகளிலும்; வாழ்ந்து வந்த மனித இனத்தின் கடந்த காலப் பாதை உண்மையிலேயே அதிசயமானது. அற்புதமானது. வியக்கத் தக்கது.

ஒரு காலக் கட்டத்தில் மனிதன், குரங்குகள், ஓராங் ஊத்தான், கொரிலாக்கள் எல்லாமே ஆஸ்திராலோபித்தகஸ் (Australopithecus) எனும் ஒரே வகை பூர்வாங்க மனித இனமாகத்தான் இருந்தன.

60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாலில்லாக் குரங்கு இனம் தோன்றி உள்ளது. அந்த இனத்தில் இருந்து ‘ஹோமோ’ எனும் ஒரு துணை இனமாக ஓர் இனம் பிரிந்தது. அதில் இருந்துதான் இன்றைய மனித இனம் பரிணமித்தது. 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை.

அப்போது தோன்றிய மனித இனம் வாலில்லாக் குரங்கு இனத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பூமியில் ஆறு விதமான மனித இனங்கள் தோன்றின. அவை எல்லாமே இன்றைய மனிதர்களுடன் பல வகைகளில் ஒற்றுப் படுகின்றன.

ஆனாலும் அந்த இனங்களுக்குள் உருவத்திலும் மதிநுட்பத்திலும் வேறுபாடுகள் இருந்தன. அந்த இனங்களில் ‘நிமிர்நிலை’ (Homo Erectus) மனித இனம் மட்டுமே இன்று வரை 20 லட்சம் ஆண்டுகளாகத் தப்பிப் பிழைத்து இருக்கிறது.

மற்ற மனித இனங்கள் யாவும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முற்றாக அழிந்து விட்டன. அவை ஏன் அழிந்தன; என்ன காரணம் என்பதை இன்று வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இதற்கும் காரணங்களைச் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மனிதவியல் ஆய்வாளர் கே.என்.ராமசந்திரன், இந்து தமிழ்த் திசை எனும் இணையத் தளத்தில் இப்படிச் சொல்கிறார். அவருடைய கருத்தைப் பதிவு செய்கிறேன்.

பூமியின் கால நிலையிலும் மேற்பரப்பிலும் ஏற்பட்ட மாற்றங்கள்; சூழ்நிலைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல், மனித இனங்கள் அழிந்து இருக்கலாம்.

அல்லது மனித இனங்கள் தங்களுக்குள் சண்டை போட்டு அழிந்து இருக்கலாம். அந்தக் காலத்தில் குழுச் சண்டைகள் அதிகம். நூற்றுக் கணக்கான மனிதர்கள் மட்டுமே பங்கு கொண்ட சண்டைகள். அமெரிக்கா சிவப்பு இந்தியர்களிடம் இத்தகைய குழுச் சண்டைகள் அமெரிக்க வரலாறு முழுமைக்கும் பரவி நின்றன.

ஆண், பெண், குழந்தைகள் என்று எல்லாருமே குழுச் சண்டைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெற்றி பெற்ற குழுவினர் தோற்ற குழுவில் இருந்த ஆண்கள் எல்லாரையும் கொன்று விடுவார்கள். பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் தங்களுடன் கொண்டு சென்று விடுவார்கள்.

அதனால் அந்தக் காலக் கட்டங்களில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து உள்ளது. ஓர் ஆணுக்குப் பல பெண்கள் மனைவிகளாய் இருந்து உள்ளார்கள். அத்துடன் இனக் கலப்பும் பரவலாக ஏற்பட்டு இருக்கலாம். சரி.

60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டங்கள் பிரிந்தன. மனித இனங்களும் பிரிந்தன. இதில் ஹோமோ எரெக்டஸ் (Homo Erectus) எனும் ஓராங் ஊத்தான் இனம் மட்டும் தனித்துப் போனது.

மிக அண்மையில் அதாவது இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஹோமோ செப்பியன்ஸ் (Homo Sapiens) எனும் மதிநிறை மனித இனம் தனித்துப் போனது. அதில் இருந்த கொரிலாக்களும் குரங்குகளும் தனித்துப் போயின.

60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதனும் சரி; போர்னியோ ஓராங் ஊத்தான் சகலபாடியும் சரி; ஒரே இனமாகத்தான் இருந்தன. பிரிந்து செல்லும் கட்டத்தில் மனிதன் ஆப்பிரிக்காவைப் புகலிடமாகக் கொண்டான். அப்போது அவன் மனித உருவத்தைக் பெற்று இருக்கவில்லை. நினைவு படுத்துகிறேன். குரங்கு நிலையில்தான் இருந்தான்.

இந்த மூலக் குரங்கு இனத்தில் தப்பித்த ஒரு பகுதி குரங்குகள் மறுபடியும் ஆப்பிரிக்காவை நோக்கி நகர்ந்தன. அதில் ஒரு பகுதி குரங்குகள் ஆஸ்திரேலியாவிலேயே அடைக்கலம் அடைந்தன.

அவற்றில் சில போர்னியோவை நோக்கி நகர்ந்தன. வேறு சில குரங்குகள் இந்தியா, ஐரோப்பாவை நோக்கி நகர்ந்தன. கடைசி கடைசியாகச் சில குரங்குகள் சீனாவை நோக்கி நகர்ந்தன. சீனாவுக்குப் போன குரங்குகளின் வாரிசுகள் எவையும் இப்போது இல்லை. ஏதோ ஒரு காரணத்தினால் எல்லாமே அழிந்து விட்டன.

இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் இருந்த குரங்கு இனம் ஆஸ்திராலோபித்தகஸ் (Australopithecus) மட்டும் தப்பித்துக் கொண்டது. 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. இவை மீண்டும் ஆப்பிரிக்காவிற்கு வந்து இருக்கின்றன.

ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய அந்த ஆஸ்திராலோபித்தகஸ் குரங்கு இனம்தான் இப்போதைய மனித இனத்தின் ஜீவநாடி. இந்த இனம் பல்வேறு உடல் மாற்றங்களைப் பெற்று முழுமையான மனிதச் சாயலைப் பெற்று உள்ளது.

பின்னர் இந்த குரங்கினம் ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்குத் தொகுதி தொகுதிகளாகப் பிரிந்து சென்றது. பின்னர் உலகம் முழுமையும் பரவிச் சென்றது. இது ஓர் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. இதன் கடைசிக் கட்டத்தில் தான் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்தன.

1. நீக்ராய்டுகள் (Negroids) எனும் ஆப்பிரிக்க மனிதர்கள்.

2. காகசாய்டுகள் (Caucasoids) எனும் ஆசிய ஐரோப்பிய மனிதர்கள்.

3. மங்கோலாய்டுகள் (Mongoloids) எனும் மங்கோலிய மனிதர்கள்.

சார்ல்ஸ் டார்வீன் எனும் அறிஞர் தியரி ஆப் இவலுஷன் (Theory of Evolution) என்கிற பரிணாமக் கொள்கையை உருவாக்கினார். இதற்கு மேலும் என்னால் சுருக்கிச் சொல்ல முடியவில்லை.

இந்தியாவில் சிவாலிக் குன்றுகள் உள்ளன. அங்கு பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் கிடைத்து உள்ளன. அதே போல வடமேற்கு கென்யா நாட்டிலும் கிடைத்து உள்ளன.

ஜாவா தீவில் உள்ள சோலோ (Solo) நதிக் கரையில் சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனத்தின் சான்றுகள் கிடைத்து உள்ளன.

ஏறக்குறைய மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ருடால்ப் மனிதன் (Rudolph man) என்பவன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் (Transval) நாட்டில் கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனத்தின் சான்றுகள் கிடைத்து உள்ளன.

இந்தோனேசியா ஜாவா தீவில் நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் (Homoerectus) எனும் மனித இனச் சான்றுகள் கிடைத்து உள்ளன.

ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நியான்டர்தால் (Neanderthal) மனிதனின் பழுதடைந்த உடல் பாகங்கள் கிடைத்து உள்ளன.

அந்த வகையில் நியான்டர்தால் மனித இனம் குகைகளில் வாழ்ந்து உள்ளது. தோல் ஆடைகளை உடுத்தி உள்ளது. நெருப்பு மூட்டிச் சமைக்கத் தெரிந்து இருக்கிறது.

நியான்டர்தால் மனித இனம் அழிந்த பின் தோன்றிய இனம் தான் இன்றைய மனிதனின் மூதாதையர்கள். இவர்களை குரோமன்யான் மனிதன் என்று அழைக்கிறார்கள்.

கல்லால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்திய குரோமன்யான் மனிதன் தான் கற்கால மனிதன் ஆவான். வேட்டையாடக் கற்றுக் கொண்டவன்.

குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றியவனே புதிய கற்கால (Neolithic) மனிதன். மனித நாகரிகத்தின் தொடக்கம் எனக் கருதப் படுகிறவன்.

ஐரோப்பாவில் செக்கோஸ்லேவாகியா நாடு. அங்கே லார்ச் எனும் நகரம். இந்த நகருக்கு அருகில் உள்ள ஒரு குகையில் 35,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இன்றைய மனிதத் தோற்றத்தைக் கொண்ட மனித எலும்புக் கூட்டைக் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.

ஆக இதில் இருந்து நாம் ஒரு முடிவிற்கு வரலாம். ஏறக்குறைய 40,000 ஆண்டுகளுக்கு முன் முழுமையான நாகரிகம் அடைந்த மனிதன் பூமியில் தோன்றி வாழ்ந்து இருக்கிறான் எனும் முடிவு. மறுபடியும் சொல்கிறேன். 40,000 ஆண்டுகள்.

உண்மை இப்படி இருக்கும் போது உலகின் இரண்டாவது மூத்த இனம் 72,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியதாகச் சொல்லுவது எல்லாம் சுத்தமான அபத்தம். கேப்பையில் நெய் வடிகிற கப்சா கதையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

சார்ல்ஸ் டார்வீன் எனும் அறிஞர் தியரி ஆப் இவலுஷன் (Theory of Evolution) என்கிற பரிணாமக் கொள்கையை உருவாக்கினார். ஆனால் மூத்த இனம் இரண்டாவது இனம் என்று எதையும் சொல்லவில்லை. அவர் அசல் ஆய்வாளர்.

ஏறக்குறைய 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் முழுமையான நாகரிகம் அடைந்த மனிதன் பூமியில் தோன்றி வாழ்ந்து இருக்கிறான் என்று உலகில் உள்ள எல்லா மனிதவியல் அறிஞர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா. இல்லை என்றால் பரவாயில்லை. புதிதாக ஒரு கொள்கையை உருவாக்குங்கள். மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ பிரச்னையே இல்லை.

அதற்கு உலகின் மூன்றாவது குடி இனம் என்று பெயரை வைத்துக் கொள்ளுங்கள். வீடியோ தயாரித்து பார்ப்பவர்கள் எல்லோரும் இளிச்சவாயர்கள் என்று நினைத்துக் கொண்டு கப்சா விடுங்கள். காசா பணமா. அள்ளி விடுங்கள்.

உருப்படியாக ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதத் தெரியாத சங்கி மங்கிகள் எல்லாம் முனைவர்கள் பேராசிரியர்கள். சில நூறு வெள்ளிக்கு டாக்டர் பட்டங்களை வாங்கிப் போட்டுக் கொண்டு ஊர்க்கோலம் போகின்றார்கள். எங்க இனம் ஒசத்தி உங்க இனம் பிறத்தி என்று கப்சா விட்டுக் கொண்டு கல்லா கட்டி அழகு பார்க்கின்றார்கள்.

சில இடங்களில் நூறு வெள்ளிக்கு டாக்டர் பட்டம் தயாரித்துக் கொடுக்கிறார்கள். ஆயிரம் வெள்ளி கொடுத்தால் போதும். பத்து பேரை அழைத்து ஒரு விருந்து வைத்து உங்களுக்கும் ஒரு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து விடுவார்கள். நீங்களும் விசிட்டிங் கார்ட் அடித்து பேரானந்தம் அடையலாம். அட்ரஸ் வேண்டும் என்றால் சொல்லுங்கள். இலவசம்.

இனவாதம், மதவாதம் என்கிற பேராண்மைகளின் வெறித்தனங்கள் மேலோங்கி இல்லாத ஆட்டங்கள் ஆடுகின்றன. அதற்கு அரைகுறை அரை வேக்காடுகள் எங்க இனம்தான் உலகத்திலேயே ஒசத்தியான இனம் என்று பக்க வாத்தியம் வாசிக்கின்றன.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் இளையச் சமுதாயத்தினர் இலக்குத் தெரியாமல் தவிக்கின்றனர். அரைகுறைக் குடுக்கைகளின் அரை வேக்காட்டு அறிவினால் எதிர்காலத்து அறிவார்ந்த சிந்தனைகள் மங்கி மழுங்கிப் போகின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.02.2021

சான்றுகள்:


1. http://en.wikipedia.org/wiki/Race_and_genetics

2. http://www.britannica.com/EBchecked/topic/44115/Australopithecus

3. Boyd, Robert; Silk, Joan B. (2003). How Humans Evolved (3rd ed.). New York: W.W. Norton & Company.

4. Johanson, Donald; Edey, Maitland (1981). Lucy, the Beginnings of Humankind. St Albans: Granada.
 

12 பிப்ரவரி 2021

உலகின் மூத்தக் குடிமக்களின் புதிய வரலாறு

தமிழ் மலர் - 11.02.2021

அண்மையில் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உலகின் இரண்டாவது மூத்தக் குடிமக்கள் என்று சொல்லப்படும் மக்களைப் பற்றிய காணொலி. அதில் சகாரா சுலைமான் எனும் அகழ்வாய்வு ஆராய்ச்சி வல்லுநர் கருத்துரை வழங்குகிறார். அதன் தலைப்பு உலகின் இரண்டாவது பழமையான இனம். (Bangsa Kedua Tertua Dunia).

ஆப்பிரிக்க இனக் குழுவுக்கு அடுத்த படியாக; உலகின் இரண்டாவது பழமையான மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ மரபணுக்கள் அமைப்பை (Mitochondrial DNA) இரண்டாவது மூத்தக் குடிமக்கள் இனக்குழு கொண்டுள்ளது என்று கூறுகிறார்.

அந்த மூத்தக் குடிமக்களின் மரபணுக்கள் (DNA); (Mitochondrial DNA) அல்லது மரபியல் அணுக் கூறுகள் உலகத்திலேயே இரண்டாவது பழைமை வாய்ந்தது என்றும் தம் கருத்தை முன்வைக்கிறார்.

The ethnic group has the second oldest mitochondrial DNA group (mtDNA) in the world after the African ethnic group.

உலகின் முதல் இனம் ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி (Djibouti) நாட்டில் 150,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியதாகச் சொல்கிறார். அதே வேளையில் உலகின் இரண்டாவது இனம் 72,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சுந்தாலாந்து (Sundaland) தீவுக் கூட்டத்தில் தோன்றியதாகவும் சொல்கிறார்.

About 60,000 to 75,000 years ago, there was a migration of people from Africa to the Sundanese platform, now known as Southeast Asia.

Kira-kira 60,000 ke 75,000 tahun lalu, berlaku penghijrahan orang rendah dari Afrika ke pelantar Sunda, kini dikenali Asia Tenggara.

சுந்தாலாந்து என்பது தென்கிழக்கு ஆசியாவின் ஒரு புவியியல் பகுதி. 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டங்கள் குறைவாக இருந்த காலங்களில் அது ஒரு பெரிய நிலப்பரப்பாக இருந்தது. உலகம் பனிக்காலத்தில் இருந்து மீட்சி பெற்ற காலத்தில் உருவானது.

இந்தச் சுந்தாலாந்து நிலப்பரப்பில் மலாய் தீபகற்பம்; போர்னியோ; ஜாவா; சுமத்திரா போன்ற பெரிய தீவுகளையும்; அவற்றைச் சுற்றியுள்ள சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. சரி.

உலகின் இரண்டாவது இனத்தின் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ மரபணுக்கள் அமைப்பு (Mitochondrial DNA) 63,000 ஆண்டுகள் பழமையானது என்றும், சீனர்களின் டி.என்.ஏ மரபணுக்கள் அமைப்பு 43,000 ஆண்டுகள் பழமையானயது என்றும் அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன. அவர் கூறுகிறார்.

Zaharah berkata bukti sains juga menunjukkan Melayu memiliki mtDNA berusia 63,000 tahun, manakala etnik Cina hanya 43,000 tahun.

Source: https://www.projekmm.com/news/berita/2018/08/02/sejarahwan-bukan-pendatang-baka-melayu-kedua-tertua-di-dunia/1658567

கிரேக்க மக்கள் வியட்நாம் சம்பா பகுதியில் இருந்து தோன்றினார்கள். ஆனால் அவர்கள் மலாய்க்காரர்கள் அல்ல.

“Asal-usul orang Greek juga datang dari Champa tetapi mereka tidaklah menjadi Melayu pula,” jelasnya lagi.

செமாங் மற்றும் செனாய் மக்கள் வியட்நாம், கம்போடியா நாடுகளில் உள்ள சம்பா பகுதியில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்கிறார்.

Semang dan Senoi, berhijrah dari Champa yang kini terletak di bahagian Vietnam dan Kemboja.

மலாய் மொழி எனும் ரெஜாங் மொழி சமஸ்கிருத மொழியின் கிளை மொழி. அந்த மொழி சுந்தாலாந்தைப் பூர்வீகமாகக் கொண்டது. சமஸ்கிருத மொழி இந்திய துணைக் கண்டத்திற்கு கொண்டு போகப் படுவதற்கு முன்பு அந்த மொழி சுந்தாலாந்தில் தான் முதலில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்கிறார்.

Beliau juga menyatakan bahasa Melayu, atau Rejang, satu cabang Sanskrit yang berasal dari pelantar Sunda sebelum dibawa ke benua India.

"இந்தியர்கள் பலர் சமஸ்கிருதத்தைப் படிப்பதால் அந்த மொழி இந்தியாவில் இருந்து வந்தது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் மலாய் மொழியில் இருந்துதான் சமஸ்கிருத மொழிக்குள் பல சொற்கள் கடன் வாங்கப்பட்டு உள்ளன.

“Kerana warga India banyak belajar Sanskrit, ramai terfikir bahasa itu berasal dari sana dan Melayu meminjam banyak kata Sanskrit.

"எதிர் செயல்முறை நடந்து இருக்கிறது. சமஸ்கிருதம் சுந்தாலாந்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தது," என்று அவர் கூறினார்.

“Saya percaya proses sebaliknya yang berlaku. Sanskrit masuk ke pelantar Sunda dulu sebelum ia tersebar ke India,” katanya.

இவருடைய காணொலிப் பதிவின் முதல் நிமிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள் அவரின் கருத்துகளைப் பற்றிய முரண்பாடுகளை மட்டுமே முன்வைக்கிறேன். அடுத்த கட்டுரையில் அடுத்தடுத்த முரண்பாடுகளும் அதற்கான சரியான விளக்கங்களும் வழங்கப்படும்.

இந்தோனேசியாவில் 70,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெராப்பி எரிமலை வெடித்தது. அந்த வெடிப்பின் விளைவினால் எரிமலையின் உச்சியில் தோபா ஏரி உண்டானது. இந்த எரிமலை வெடிப்பிற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் குறிப்பிடும் அந்த இனம் தீபகற்ப மலேசியாவில் தோன்றி விட்டதாகச் சொல்கிறார்.

இதற்கு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் ஓபன்ஹெய்மர் (Stephen Oppenheimer) எழுதிய Out of Sundaland எனும் நூலைச் சான்று பகிர்கிறார். இந்த நூலின் மற்றொரு பெயர் கிழக்கில் ஓர் ஏடன் (Eden in the East: the Drowned Continent of Southeast Asia (Phoenix paperback, London 1999 (1998).

அவருடைய காணொலிப் பதிவில் இந்தியர் இனம், தமிழர் இனம், சீனர் இனம், ஆங்கிலேயர் இனம், ஆப்பிரிக்கர் இனம், ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் இனம் எல்லாமே அவர்களுக்குப் பின்னர்; அந்த இனத்திற்குப் பின்னர் வந்த இனங்கள் என்று மறைமுகமாகச் சொல்லப் படுகிறது.

அந்தக் காணொலியின் கருத்துகளுக்கு எதிர்வாதம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அதில் காணப்படும் கருத்துப் பிறழ்வுகளைப் பற்றி சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என கருதுகிறேன். ஒருவர் தம்முடைய கருத்துகளைச் சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் அந்தக் கருத்துகளில் தவறு இருக்கக் கூடாது. தவறு இருந்தால் சுட்டிக் காட்ட வேண்டியது நம் பொறுப்பு. சரி.

“Kajian Pertubuhan Genom Manusia (Hugo) yang diterbitkan pada 2013 menunjukkan moyang Melayu, yakni Semang dan Senoi, berhijrah dari Champa yang kini terletak di bahagian Vietnam dan Kemboja.

“Nenek moyang mereka asalnya suku kaum Afrika yang pertama berhijrah ke kawasan darat sekitar Arab Saudi dan Timur Tengah.

“Suku Semang dan Senoi berkembang menjadi suku-suku kaum lain termasuk orang peribumi seperti Orang Asli, Iban, Dayak dan banyak lagi.

“Malah, nenek moyang dekat suku Jakun. Jadi ahli politik, tanpa mengira parti, yang mendakwa Melayu itu pendatang, kenyataan itu tidak betul,” katanya.

1. உலகின் முதல் இனம் ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி (Djibouti) நாட்டில் 150,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியதாகச் சொல்கிறார்.

இது தவறான கருத்து. உலகின் முதல் இனம் ஹோமோ செப்பியன்ஸ் (Homo Sapiens)  ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டின் ரிப்ட் பள்ளத்தாக்கில் (Kenya Rift Valley) 300,000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது.

(Chorowicz, Jean (10 November 2005). "The East African Rift System". Journal of African Earth Sciences. 43 (1–3): 379–410.)

2. ஜிபூட்டி (Djibouti) நாட்டில் கோபாட் (Gobaad) எனும் கிராமத்தில் 100,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மனித எலும்புக் கூடுகளைக் கண்டு எடுத்து இருக்கிறார்கள். அவர் சொல்வதைப் போல 150,000 ஆயிரம் ஆண்டுகள் அல்ல.
 
(Walter Raunig, Steffen Wenig (2005). Afrikas Horn. Otto Harrassowitz Verlag. p. 439.)

3. உலகின் இரண்டாவது இனம் 72,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியதாகச் சொல்கிறார்.

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊர் இருக்கிறது. 1938-ஆம் ஆண்டில் அங்கே ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டு எடுத்தார்கள். அதற்கு பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைத்தார்கள்.

பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் அதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக் கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.

ஆக பேராக் மனிதனுக்கு முன்னால் 61,000 ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த இனம் வாழ்ந்ததாகச் சொன்னால் மனித எலும்புக்கூடுகள் எங்கே? மண்பானைகள் எங்கே? வேட்டையாடப் பயன்படுத்திய உலோகப் பொருட்கள் எங்கே? குகை ஓவியங்கள் எங்கே?

கோபம் வரவில்லை. வேதனை. ஏன் என்றால் கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு எனும் சொல் தொடர் நினைவிற்கு வந்தது.

அந்தக் காலக் கட்டத்தில் இந்த நாட்டில் முதன்முதலில் குடிபுகுந்த பூர்வக் குடியினர்களுக்கும் தமிழர்களுக்கும் மரபணுக்கள் (DNA) எல்லாம் ஒன்றுதான் என்று ஒரு முஸ்லிம் பேராசிரியர் தெரிவித்து உள்ளார். ஆக ஒரு படித்த கல்விமானே அப்படிச் சொல்லும் போது நாம் சற்று சிந்திக்க வேண்டியதாகவும் உள்ளது.

உலகின் இரண்டாவது மூத்தக் குடிமக்கள் எனும் காணொலியில் கருத்துப் பிறழ்வுகளுக்கான விளக்கங்கள் நாளையும் தொடரும்.

இன்று பல்லவர்கள் தமிழர்களா என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.

இந்தோனேசியாவை பல்லவர்கள் ஆட்சி செய்யும் போது அவர்களுக்குள் பற்பல தகராறுகள். பலர் தீபகற்ப மலேசியாவுக்கு வந்து உள்ளார்கள். கீழ்க்காணும் அரசுகள் அனைத்தும் பல்லவர் அரசுகள். அதாவது தமிழர்களின் அரசுகள். ஏற்கனவே பல்லவர்கள் என்பவர்கள் தமிழர்கள் என்று சொல்லி இருக்கிறேன். இந்தோனேசியாவை கீழ்க்காணும் அரசுகள் ஆட்சி செய்யும் போது அங்கே இருந்து பல்லவத் தமிழர்கள் தீபகற்ப மலேசியாவுக்குள் குடிபெயர்ந்து உள்ளார்கள்.

1. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா - கி.பி. 358 - 669

2. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா - கி.பி. 500 – 600
 
3. ஜாம்பி பேரரசு - சுமத்திரா - கி.பி. 600

4. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா - கி.பி. 650 - 1377
 
5. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா - கி.பி. 650 - 1025

6. காலோ பேரரசு - மேற்கு ஜாவா - கி.பி. 669 – 1482

7. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா - கி.பி. 669 – 1579

8. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா - கி.பி. 752 – 1006

9. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா - கி.பி. 1006 – 1045

இது 1500 ஆண்டு இடைவெளி. அவர்கள் வரும் போது ஜாவா சுமத்திரா பூர்வீக மக்களையும் அழைத்து வந்து இருக்கிறார்கள். அவர்களுக்குள் உறவுகள் ஏற்பட்டு மலாயாவில் ஒரு புதிய சமுதாயமே உருவாகி உள்ளது.

அவர்களில் இருந்து வந்தவர்கள் இன்றும் இந்த மலைநாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். உள்ளூர் மலாய்ச் சமூகத்தவருடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு புதிய சமுதாயத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்தத் தாக்கத்தினால் தான் மலாய்ச் சமூகத்தினர் சோறு சாப்பிடும் போது வலது கரத்தைப் பயன்படுத்துகிறார்கள். சரி.

தமிழ்நாட்டில் இருந்து பற்பல இனக் குழுக்கள் பற்பல காலக் கட்டங்களில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து உள்ளன. அப்படி புலம் பெயர்ந்த இனக் குழுக்களில் பல்லவர்கள் முக்கியமான ஒரு குழுவினர் ஆகும். அவர்களின் புலம் பெயர்வு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து உள்ளது.

பல்லவர்கள் ஜாவா; சுமத்திரா; மலாயா; போர்னியோ; பிலிப்பைன்ஸ்; தாய்லாந்து; மியன்மார், கம்போடியா; வியட்நாம்; கொரியா; லாவோஸ் போன்ற இடங்களில் பற்பல அரசாட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். ஏறக்குறைய 100-க்கும் குறைவு இல்லாத சிற்றரசுகள் பேரரசுகள்.

வணிக நோக்கத்தோடு போனவர்கள் தான். ’வணிகம் செய்வோம் வாரீர்’ என்று சொல்லக் கேள்வி. அந்த மாதிரி இவர்களும் ’வாரிசுகளை உண்டாக்குவோம் வாரீர்’ என்று சொல்லி போன இடங்களில் எல்லாம் வாரிசுகளை உருவாக்கி விட்டுச் சென்று விட்டார்கள்.  

அந்த வாரிசுகளைப் பற்றியும் சும்மா சொல்லக்கூடாது. நன்றாகவே ஒருவருக்கு ஒருவர் அடித்துப் பிடித்து ஆங்காங்கே சின்ன சின்ன அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். பெரிய பெரிய அட்டகாசம் அமர்க்களம் எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். கடைசியில் வரலாற்றைத் தலைகீழாக மாற்றிப் போட்டு விட்டுப் போயே சேர்ந்து விட்டார்கள்.

தொட்டுக்க துடைச்சிக்க ஏதாவது வச்சிட்டு போய் இருந்தால் பரவாயில்லை. இப்போது அஞ்சுக்கும் பத்துக்கும் கெஞ்ச வேண்டிய நிலைமை வந்து இருக்காது. நேற்று வந்த வந்தேறிகள் எல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்கிறார்கள்.

இதைத்தான் காலத்தின் கோலம் என்று சொல்வார்களோ. அல்லது காலத்தின் அலங்கோலம் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வார்களோ ஊர் பொல்லாப்பு வேண்டாங்க. நம்ப விசயத்திற்கு வருவோம்.

குத்து மதிப்பாகச் சொன்னால் ஒட்டுமொத்த இந்தோனேசியா; இந்தோசீனா இரு துணைக் கண்டங்களும் பல்லவர்களின் கைகளில் இருந்து உள்ளன. வரலாற்றுப் பாரம்பரிய வழக்கத்தில் சொன்னால் தமிழர்களின் கைகளில் இருந்து உள்ளன.

இருந்தாலும் என்ன. அவர்கள் பிடித்ததே முயல். அந்த முயலுக்கு மூனே முக்கால் கால்கள். அந்தப் பிடிவாதத்தில் முரட்டுவாதம் செய்தார்கள். இருந்தவை எல்லாம் அடிபட்டுப் போய் விட்டன.

கி.மு. 290-ஆம் ஆண்டு தொடங்கி 15-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியா நாடுகளில் இந்தியக் கலாசாரச் செல்வாக்குகள் மேலோங்கி இருந்தன. உள்ளூர் அரசியல் கலாசாரங்களில் அழகாய் இணைந்து உச்சம் பார்த்தன.

இந்திய துணைக் கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்த சின்னச் சின்ன அரசுகள் தென்கிழக்கு ஆசிய அரசுகளுடன் வர்த்தகம், கலாசாரம், அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. அதுவே இது தென்கிழக்கு ஆசியாவில் இந்திய மயமாக்கலுக்கு வழிவகுத்துக் கொடுத்தன (Indianisation within Indosphere) என்றும் சொல்லலாம்.

இந்திய துணைக் கண்டத்தில் இருந்த மற்ற மற்ற இந்து அரசுகளைப் போல் அல்லாமல்; இந்திய தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்த பல்லவ ஆளுமைகள் கடலைக் கடப்பதற்குக் கலாச்சார கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை.

தவிர இராஜேந்திர சோழரின் தென்கிழக்கு ஆசியா படையெடுப்பு சோழப் பேரரசின் ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்திச் சென்று உள்ளது. இதுவே தென்கிழக்கு ஆசியாவிற்கு கடல் வழிகள் வழியாக அதிகமான பரிமாற்றங்களையும் வழிவகுத்துக் கொடுத்தது.

தென்கிழக்கு ஆசியாவின் பூர்வீக மக்கள், கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தெற்கு சீனா பகுதியில் இருந்து குடிபெயர்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

உலகின் இரண்டாவது மூத்தக் குடிமக்கள் பற்றிய கூடுதல் விளக்கங்களை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.02.2021



11 பிப்ரவரி 2021

மலாயா தமிழர்கள் வரலாற்றில் பெண்டாத்தாங் சொல் வழக்கு

தமிழ் மலர் - 10.02.2021

மலாயா வரலாற்றில் மலாயா தமிழர்கள் எப்படி வருகிறார்கள். ஏன் வருகிறார்கள். எதற்காக வருகிறார்கள். கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டி உள்ளது. அப்போது தான் மலேசியாவில் தமிழர்கள் யார் என்பது தெரிய வரும்.

வந்தேறிகள் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே அந்த வந்தேறிகள் யார் என்பதும் தெரிய வரும். அத்துடன் மலாயா வரலாற்றைக் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்து கொண்டது மாதிரியும் அமையும்.

அண்மைய காலங்களில் பெண்டாத்தாங் எனும் ஒரு சொல் அதிகமாகவே புழக்கத்தில் உள்ளது. தெரியும் தானே. ஆச்சு பூச்சு என்றால் பெண்டாத்தாங். இசுக்கு பிசுக்கு என்றாலும்  பெண்டாத்தாங். ஈச்சங்காய் பீச்சங்காய் என்றாலும் பெண்டாத்தாங். அத்தைக்கு மீசை வைத்து அழகு பார்க்கும் ’லெவலே’ வேறு. சிலருக்கு வேலையே இல்லை போலும்.

யாராவது வெட்டிக்குச் சம்பளத்தைக் கொடுத்து சிறுபான்மை இனத்தவரைச் சீண்டச் சொல்லி உசுப்பி விடுவார்கள் போலும். நாளைக்கு எப்படி சீண்டலாம் என்று போர்வையைப் போர்த்திக் கொண்டே பிளேன் போடுவார்கள் போலும்.

1946-ஆம் ஆண்டில் மலாயன் யூனியன் உருவான காலத்தில், மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக வந்தேறி எனும் சொல்லை ஓன் பின் ஜாபார்  பயன்படுத்தினார். இப்போதைய அமைச்சர் ஹிசாமுடின் அவர்களின் தாத்தா. அதற்கு முன்னர் அந்தச் சொல் பயன்படுத்தப் படவில்லை. அப்போது மலாயாவில் இருந்த அத்தனைப் பேரும் சகலபாடிகள்.

அதன் பின்னர் அந்தச் சொல்லைத் துங்கு அப்துல் ரஹ்மான் பயன்படுத்தி இருக்கிறார். அவரும் பயன்படுத்தி இருக்கிறார் என்பதைச் சொல்லும் போது பலருக்கும் வேதனையாக இருக்கலாம். எனக்கு அது பழசாகி விட்டது. விடுங்கள்.

அந்த வக்கிரச் சொல்லைப் பயன்படுத்தாத ஒரே பிரதமர் உசேன் ஓன். அதன் பின்னர் மகாதீர் முகமது அவர்களுக்கு அந்தச் சொல் இத்தாலிய பிசா பெல்லி மாதிரி பழக்கத் தோசமாகி விட்டது.

வந்த இடத்தில் சிலர் வந்த இடம் மறந்து பாவம் தேடிக் கொள்வது வரலாறு பார்க்காத அதிசயமா. தனிநபர் யாரையும் சொல்லவில்லை. வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறேன்.

அந்தப் பெரிய தலைவருக்குப் பின்னர் அப்புறம் சொல்லவே வேண்டாம். மற்ற குட்டிக் குட்டித் தலைகள் எல்லாம் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஆட்டுக் கல்லில் பெண்டாத்தாங் மாவு அரைக்கிற வேலையைச் சூப்பராகச் செய்து வருகிறார்கள்.


ரொம்ப வேண்டாம். பசார் மாலாம் சந்தையில் கூட ஒரு கிலோ ஒரு வெள்ளிக்கு விற்கும் அளவுக்கு ரொம்பவும் மலிவாகி விட்டது.

இவர்கள் மட்டும் என்னவாம். அங்கே மட்டும் என்ன வாழுதாம். அந்தச் சொல்லைச் சொன்னவர்களும்; சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் வந்தேறிகள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு அள்ளிவிட்டு சர்க்கஸ் கோமாளிக் கூத்துகளை செய்து வருகிறார்கள்.

சொல்பவர்களும் வந்தேறிகள் என்பது பாலர் பள்ளியில் படிக்கும் பச்சைச் சிசுவுக்குகூட தெரியும். ரொம்ப வேண்டாம். இந்த மண்ணில் ஊர்ந்து போகிறதே புழு பூச்சிகள். அவற்றுக்கும் தெரியும்.

ஆனால் அவர்கள் என்னவோ ஆகாயத்தில் இருந்து குதித்து வந்த வான்கோழி மாதிரியும்; மண்ணுக்குள் இருந்து பொசுக் என்று பொங்கி வந்த முள்ளங்கி மாதிரியும் மற்றவர்களைப் பார்த்து திரும்பிப் போ என்கிறார்கள்.

இதில் எங்கிருந்தோ ஒரு ஓநாய் வந்தது. அது பாட்டுக்கு இந்த நாட்டுத் தமிழர்களைப் பார்த்து உங்க நாட்டுக்கே திரும்பிப் போங்க என்று சொல்லி பிரேக் டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறது. தமிழர்கள் வாங்கி வந்த வரம்.

முன்னாள் பிரதமர் நஜிப் சார் பகிரங்கமாகவே தாம் இந்தோனேசியா, சுலாவாசி தீவில் இருந்து வந்தவர் என்று தம் பூர்வீகத்தை ஒப்புக் கொண்டார். அப்படி நாடு விட்டு நாடு வந்த ஒருவர் தான் இந்த நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார்.

நல்ல மனிதராக இருந்தவர் தான். ரோசாப்பூ ரோசம்மாவின் பேச்சைக் கேட்டு இப்போது ரொம்பவுமே வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார். பாவம் அவர்.

என்ன செய்வது. அவர் நினைத்தது ஒன்று. எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரி எழுதிச் சென்று விட்டது. சரி. ஒரு முக்கியமான விசயத்திற்கு வருகிறோம். முதலில் இந்தோனேசியாவை ஆட்சி செய்த அரசுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு பட்டியல் வருகிறது. பாருங்கள்.

இதை அடிக்கடி சொல்ல வேண்டி உள்ளது. இல்லை என்றால் ஒரு சிலர் அந்த அரசுகளையும் அவர்களின் பூர்வீகச் சொத்து என்று சொன்னாலும் சொல்வார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நடக்கலாம்.

1. சாலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - கலிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600
 
5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377
 
7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669 – 1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669 – 1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752 – 1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914 – 1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006 – 1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045 – 1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya Kingdom) கி.பி. 1183 – 1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222 – 1292

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293 – 1500

இதில் ஸ்ரீ விஜய அரசு மலாயாவின் இலங்காசுகம், கெடா, கிளந்தான், திரங்கானு, பகாங் போன்ற இடங்களை ஆட்சி செய்து உள்ளது.

1200-ஆம் ஆண்டுகளில் மினாங்கபாவ் எனும் சுமத்திரா மலாய் அரசு மலாயாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சி செய்து உள்ளது. இவர்கள் மலாயாவில் இஸ்லாம் சமயத்தைக் கொண்டு வந்தார்கள்.

பலேம்பாங்கைச் சார்ந்த அரசப் பரம்பரையினர் கி.பி.1299–ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஒரு தனி அரசாங்கத்தை உருவாக்கி அதற்கு துமாசிக் என்றும் பெயர் சூட்டினார்கள். ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அந்த அரசாங்கத்தை 1398-ஆம் ஆண்டில் மஜாபாகித் அரசு தாக்கியது.

மலாயா தீபகற்பத்தை ஆள வேண்டும் எனும் எண்ணம் மஜாபாகித் மன்னருக்கு இல்லை. துமாசிக்கை அழிச்சாட்டியம் செய்து விட்டு அப்படியே போய் விட்டார். ஆனாலும் மஜாபாகித் ஆளுமையின் தாக்கத்தை இன்றும் மலாயாவின் கிளந்தான், தாய்லாந்தின் பட்டாணி மாநிலங்களில் காண முடிகிறது.

துமாசிக் என்று முன்பு அழைக்கப்பட்ட சிங்கப்பூர்; மஜாபாகித் அரசாங்கத்தால் தாக்கப் பட்டதும்; அதற்கு ஈடாக மலாக்கா நகரம் தோற்றுவிக்கப் பட்டது. மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேஸ்வரா.

மஜாபாகித்தின் அடுத்து வரும் தாக்குதலில் இருந்து பரமேஸ்வரா தப்பிக்க நினைத்தார். சிங்கப்பூரிலேயே இருந்தால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் உணர்ந்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து உடனடியாக வெளியேறினார்.

பரமேஸ்வரா தன்னுடன் சில நம்பிக்கையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலக் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது தான் மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாக அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார். அப்படி போய்க் கொண்டு இருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்த செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது.

இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.

அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம் ஆகும். இந்த இடத்தில் தான் ஒரு சருகுமான் ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.
நாய் மல்லாக்காக விழுந்து இருக்கலாம்.

பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயர் மலாக்கா. அதனால் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வந்தது. வரலாறு எங்கே போகிறது. நன்றாக ஊர்ந்து கவனித்து வாருங்கள்.

தொடக்கக் காலத்தில் பரமேஸ்வராவிற்குச் சயாம் நாட்டில் இருந்து அதிகமான எதிர்ப்புகள் வந்தன. தாய்லாந்து நாட்டின் பழைய பெயர் சயாம். எதிர்ப்புகளுக்குக் காரணம் உண்டு.

பரமேஸ்வராவின் முப்பாட்டனார் நீல உத்தமன். இவர் தான் சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் எனும் பெயரையே வைத்தவர். அவர் அடித்துப் பிடித்து சிங்கப்பூரைக் கைப்பற்றியதனால் அவர் சயாம் நாட்டின் எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொண்டார். அதோடு அவருடைய வாரிசுகள் அனைவருமே சயாம் நாட்டின் எதிரிகள் ஆனார்கள்.

ஆக சயாம் நாட்டில் அச்சுறுத்தலுக்குப் பயந்து உதவிகளைத் தேடி பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்றார். அவருக்குச் சீன அரசாங்கத்தின் பாதுகாப்பு கிடைத்தது. அதன் வழியாகப் பரமேஸ்வரா மலாக்காவின் அரசர் என பெருமை படுத்தப் பட்டார். அதுவே சயாம் நாட்டின் படையெடுப்புகளைத் தவிர்க்கவும் உதவியது.

15-ஆம் நூற்றாண்டுகளில் மலாக்கா மிகச் சிறப்பான வணிகத் தளமாக விளங்கியது. அரபு வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். வியாபாரமும் பெருகியது. சீனர்களின் வியாபாரமும் மலாக்காவின் வளப்பத்திற்குக் கை கொடுத்தது. இது மலாக்கா உருவான கதை. சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.

நாளைய கட்டுரையில் மலாயா எனும் பெயர் எப்படி தோன்றியது என்பதைத் தான் மிக ஆழமாகப் பார்க்கப் போகிறோம். வரலாற்றுச் சான்றுகள் நிறைய இருக்கின்றன. படிக்கத் தவறாதீர்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.02.2021

சான்றுகள்:

1. Heng, Derek (2005), "Continuities and Changes : Singapore as a Port-City over 700 Years", Biblioasia, National Library Board, 1

2. Heidhues, Mary Somers (2001), Southeast Asia: A Concise History, Hudson and Thames

3. Windstedt, Richard Olaf (1938), "The Malay Annals or Sejarah Melayu", Journal of the Malayan Branch of the Royal Asiatic Society, The Branch, XVI

4. Sinha, Prakash Chandra (2006), Encyclopedia of South East and East Asia, Anmol Publications Pvt Ltd,



 

10 பிப்ரவரி 2021

மலாயா வரலாற்றில் மலாயா தமிழர்கள்

தமிழ் மலர் - 09.02.2021

மலாக்காவை உருவாக்கியவர் பரமேஸ்வரா. அவருடைய காலத்தில் தீபகற்ப மலாயாவை மலாயா என்று அழைத்தார்கள். இது அண்மைய கால வரலாறு. இராஜா ராஜ சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது மலைநாடு மலாயா என்று அழைக்கப் பட்டது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு.

அடுத்து அந்த வரலாற்றில் மலாயா எனும் பெயர் எப்படி தோன்றி இருக்கலாம். மலாயா வரலாற்றுக்குள் மலாயா தமிழர்கள் எப்படி வருகிறார்கள். இவற்றை வரலாற்றுச் சான்றுகளுடன் பார்க்கப் போகிறோம். வரலாற்றுப் படிவங்களில் இருந்து சான்றுகள் தொகுக்கப் படுகின்றன.

(Pande, Govind Chandra (2005). India's Interaction with Southeast Asia: History of Science, Philosophy and Culture in Indian Civilization, Vol. 1, Part 3. Munshiram Manoharlal. p. 266.)

கம்போடியப் பேரரசை உருவாக்கிய ஜெயவர்மன் - சூரியவர்மன் காலத்திலும் மலாயாத் தீபகற்பம் மலாயா என்று தான் அழைக்கப் பட்டு உள்ளது. இது ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. சரி.

மலாயாவின் பண்டைய கால வரலாறு 200,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது. மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊர் இருக்கிறது. 1938-ஆம் ஆண்டில் அங்கே ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டு எடுத்தார்கள். அதற்கு பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைத்தார்கள்.

பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் அதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக் கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.

பேராக் மாநிலத்தில் தம்பூன் எனும் ஊர் இருக்கிறது. இந்த ஊர் ஈப்போ மாநகருக்கு மிக அருகில் இருக்கிறது. இங்கே ஒரு பழைமை வாய்ந்த குகை உள்ளது. இந்தக் குகையில் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப் பட்ட பழைமையான ஓவியங்களையும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

(Gua Tambun may have 3,000-year-old cave drawings of humans, it discovered in 1959 by a British soldier. http://www.ipoh-city.com/attraction/Gua_Tambun_Cave_Paintings/)

அந்தக் காலக் கட்டத்தில் இந்தோனேசியா, மேலனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த மனித இனம் மலாயாவைத் தங்கிச் செல்லும் ஓர் உறைவிடமாகப் பயன் படுத்தி உள்ளது. தொல்பொருள் ஆய்வுகளில் இருந்து அந்த உண்மை தெரிய வருகின்றது.

இப்படி இடம் பெயர்ந்தவர்கள் சீனாவின் யூனான் பகுதியில் இருந்து வந்தவர்கள். இந்தியாவின் பர்மா எல்லைகளில் இருந்து வந்தவர்கள். வியட்நாம் கம்போடியா பகுதிகளில் இருந்து வந்தவர்கள். இன்னும் ஒரு விசயம்.

மலாயாவில் முதன்முதலில் குடியேறிய ஆதிவாசிகளுக்கும் பாப்புவா நியூகினி நாட்டைச் சேர்ந்த ஆதிவாசிகளுக்கும் பல உடல் ஒற்றுமைகள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

அப்படி மலாயாவுக்குள் வந்த முதல் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்தார்கள். கற்களால் ஆயுதங்களைச் செய்தார்கள். மலாயாவில் முதன்முதலில் குடியேறியவர்கள் வேறு யாரும் அல்ல.

ஓராங் அஸ்லி என்று அழைக்கப்படும் பூர்வீகக் குடிமக்கள் தான். இவர்கள் தாம் மண்ணின் அசல் மைந்தர்கள். இதை எழுதுவதால் எதிர்க்குரல் வரலாம். பயம் இல்லை. ஏன் என்றால் வரலாறு உதவிக்கு வரும் என்று நமக்கும் தெரியும்.

இந்த ஆதிவாசிகளுக்கு முன்னர் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஒரு வகையான பூர்வீகக் குடிமக்களும் தென் மேற்குச் சீனாவில் இருந்து வந்து மலாயாவில் குடியேறி இருக்கிறார்கள்.

இந்தக் காலக் கட்டத்தைக் கற்காலம் என்று வரலாறு சொல்கின்றது. இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். வளர்ப்புப் பிராணிகளும் இவர்களிடம் இருந்து உள்ளன.

இவர்கள் மண்பாண்டங்கள் தயாரிப்பதிலும் ஆடை ஆபரணங்கள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். குகைகளில் ஓவியங்கள் வரைவதிலும் தங்கள் திறமைகளைக் காட்டி உள்ளனர்.

கி.மு. 200-ஆம் ஆண்டிற்குப் பின் வந்தது வெண்கலக் காலம். இந்த வெண்கலக் காலக் கலாசாரங்கள் மலாயாவிலும் காணப் படுகின்றன. இந்தக் கலாசாரத்தை டோங் சோன் கலாசாரம் என்றும் லாக் வியட் கலாசாரம் என்றும் அழைக்கின்றனர். (Dong Son அல்லது Lac Viet).

இந்தக் கலாசாரம் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்தும் இந்தோசீனாவின் வியட்நாமில் இருந்தும் வந்தது.

(Dongson culture is the name given to a loose confederation of societies who lived in northern Vietnam likely between 600 BC-AD 200. http://archaeology.about.com/od/dterms/g/dongson.htm)

இருந்தாலும் இந்த டோங் சோன் கலாசாரம் வியட்நாமில் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோன்றியதற்கான சான்றுகள் உள்ளன. இதை நாம் மறந்து விடக் கூடாது. சரி.

எப்படி இந்தக் கலாசாரம் இந்தோனேசியாவில் இருந்து மலாயாவிற்கு வந்தது என்பது தான் வரலாற்று அறிஞர்களுக்கு இன்றும் ஒரு புதிராகவே இருக்கிறது. டோங் சோன் கலாசாரம் என்றால் என்ன?

•    முறையாக நெல் சாகுபடி செய்தல்

•    நெல் பயிர் செய்ய எருமை மாடுகளை முறையாகப் பழக்குதல்

•    அதிகமான மாமிசம் தரும் விலங்குகளை வளர்த்தல்

•    வலைகளைப் பின்னி மீன் பிடித்தல்

•    பாய்மரங்களைக் கட்டிப் படகு விடுதல்

•    மரத்தைக் குடைந்து படகுகளைச் செய்தல்

அடுத்து வருவது இருப்புக் காலம். இரும்பு காலம் என்பதைத் தான் இருப்புக் காலம் என்கிறோம். கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வந்த கலாசாரம். இந்தக் காலக் கட்டத்தில் தான் பூஜாங் சமவெளியில் தமிழர்களின் ஆளுமைகள் தொடங்கி உள்ளன.

ஆனாலும் இருப்புக் காலத்திற்கு முன்னரே பூஜாங் கலாசாரம் தொடங்கி விட்டது. இதை எவராலும் மறுக்க முடியாது. கடாரத்தின் வரலாறு மிக மிகத் தொன்மை வாய்ந்தது. 2000 – 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாறு.

கெடா மாநிலத்தின் சுங்கை பத்து எனும் இடத்தில் கிடைக்கப் பெற்ற மண்பானை, மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆக கடாரத்தின் வரலாறு மிக மிகத் தொனமை வாய்ந்தது. அதே போல ஜொகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி எனும் இடத்திலும் வரலாற்றுப் புதையல்கள் உள்ளன. அந்த இடத்தில் கிரேக்க நாட்டு புராதன நகரமான ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப்பட்ட பாசி மணிகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

அந்தக் காலக் கட்டங்களில் ரோமாபுரியில் இருந்து வணிகர்கள் மலாயாவுக்கு வாணிகம் செய்ய வந்து உள்ளனர். பலர் அங்கே கோத்தா திங்கியிலேயே குடியேறியும் இருக்கிறார்கள்.

கோத்தா திங்கியில் இன்றும் அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ரோமாபுரி வணிகர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சான்றுகளும் சேகரிக்கப் பட்டு வருகின்றன.

(Star Newspaper - "The Lost Treasure of Johor" 12.12.2013)

கெடா எனப் படும் கடாரத்தில் 4-ஆம் - 12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் குடியேறி இருக்கிறார்கள். பேராக் மாநிலத்தில் கோலா செலின்சிங் எனும் இடத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சிப்பி ஆபரணங்கள் போன்றவை கண்டு எடுக்கப் பட்டுள்ளன.

கடாரத்து நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும் ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்; ஜாவாவில் உள்ள பொரோபுடுர் புராதன ஆலயங்களுக்கு முன்னரே கடார நாகரிகம் உருவாகி விட்டது என்று பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மொக்தார் சைடின் கூறுகிறார்.

(https://www.thesundaily.my/archive/sungai-batu-archaeological-certified-dating-back-582-bc-AUARCH561115)

மலாக்காவின் வரலாற்றையும், சிங்கப்பூர் வரலாற்றையும், சுமத்திரா ஜாவா வரலாற்றையும் பார்த்தால் கடாரத்து வரலாறு அவற்றை எங்கேயோ கொண்டு போய் ஒதுக்கித் தள்ளி விடுகிறது.

கடாரத்தைத் தோற்றுவித்தவர்கள் இந்தியர்கள் என்று பெரும்பாலான வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால் தமிழர்கள் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். ஏன் தெரியுங்களா.

அந்தக் காலக் கட்டங்களில் தமிழ்நாட்டில் நிறையவே துறைமுகங்கள். காவிரி பூம்பட்டினம்; கொற்கை துறைமுகம்; மருங்கூர்; அழகன்குளம்; காயல் பட்டினம், குலசேகரப் பட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்ற துறைமுகப் பட்டினங்களில் இருந்து தமிழர்கள் ஆயிரக் கணக்கில் பூஜாங் வெளிக்கு வந்து உள்ளார்கள்.

மேலே சொல்லப்பட்ட பட்டினங்கள் பெரும்பாலும் பாண்டியர் காலத்துத் துறைமுகங்கள் ஆகும்.

பாண்டியர் துறைமுகங்கள் சங்க காலம் தொட்டே முத்துக் குளித்தலுக்கும்; முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்று இருந்தன. அவற்றில் கொற்கை துறைமுகம் தனிச் சிறப்புப் பெற்றது.

அங்கு நடைபெற்ற முத்து வணிகத்தைப் பற்றி தாலமி, பெரிபல்ஸ், பிளைனி போன்ற வரலாற்றுப் பயணிகள் குறிப்புகளை விட்டுச் சென்று உள்ளனர். பாண்டியர்கள் காலத்தில் 25-க்கும் மேற்பட்ட துறைமுகப் பட்டினங்களே உருவாக்கப்பட்டு உள்ளன.  

1. (Encyclopedia of Prehistory: Volume 3: East Asia and Oceania edited by Peter N. Peregrine, Melvin Ember)

2. (https://yarl.com/forum3/topic/106076/)

இந்தத் தமிழர்கள் தான் அரேபியாவுக்குப் போய் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவிற்குப் போய் இருக்கிறார்கள். கடாரத்திற்குப் போய் இருக்கிறார்கள். கம்போடியாவிற்குப் போய் இருக்கிறார்கள். இந்தோனேசியாவிற்கும் போய் இருக்கிறார்கள்.

ஆனாலும் பாருங்கள். வரலாற்றில் ஒரு சொட்டு சான்றும் இல்லாமல் சிலர் புருடா விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். குமரிக் கண்டம் அவர்களுடையதாம். இராஜா சோழன் அவர்களின் வாரிசாம்; தோசை அப்பளம் அதிரசம் ரசம் மோர் பருப்பு சாம்பார் எல்லாமே அவர்களுடையதாம். ஒன்றுமே சொல்கிற மாதிரி இல்லைங்க.

முட்டிக் கொள்ள சுவரைத் தேடினால்; என் அறையில் இருந்த சுவர்கள் எல்லாம் முட்டின முட்டுகளால் ரொம்பவுமே மழுங்கிப் போய் விட்டன. மேலும் மோதினால் இடிந்து விழும். ரிப்பேர் பண்ண காசும் இல்லை. விடுங்கள்.

மலாக்கா நீரிணைக்கு அப்பால் இருக்கும் சுமத்திராவில் இருந்து வந்த மலாய் இனத்தவரின் ஆளுமை மலாயாவில் வேர் ஊன்றியுள்ளது. அங்கே தமிழர்களின் ஆதிக்கம் பெற்ற ஸ்ரீ விஜய அரசு இருந்து உள்ளது.

தமிழகத்தில் இருந்து வந்த பல்லவர்கள் தான் இந்தோனேசியாவில் பல அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பல்லவர்கள் தமிழ்நாட்டை 550 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தவர்கள். அந்த வகையில் பல்லவர்கள் என்பவர்கள் தமிழர்கள் தான்.

இல்லை என்று சிலர் போர்க் கொடி தூக்கலாம். தூக்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி சிலர் கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு எல்லாம் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியுமாம். ஒரு தமிழன் ஏதாவது சொன்னால் பொத்துக் கொண்டு வருமாம்.

அதிரசமும் அச்சு உருண்டையும் அவர்களுடையது என்றும் சொல்கிறார்கள். அதைத் தட்டிக் கேட்க திராணி இல்லை. இளிச்சவாயன் கிடைத்தால் போதும். லெப்ட் அண்ட் ரைட் பிச்சு பேன் பார்ப்பார்கள்.

ஆக அப்படி இருக்கும் போது பல்லவர்கள் என்பவர்கள் தமிழர் இனத்தின் ஒரு பிரிவினர் என்று சொன்னால் தப்பா? வலிக்கிறது என்றால் இரண்டு பெனடோல் அனுப்பி வைக்கலாம். சரி.

சத்தியமாகச் சொல்கிறேன். ஒரு காலத்தில் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியாவையே கட்டிப் போட்டுத் தங்கள் கைக்குள் அடக்கி வைத்து ஆட்சி செய்து இருக்கிறார்கள். அதை நினைக்கும் போது மனசு வெம்பிப் போகிறது.

நம் பழைய சுவடுகளைத் தெரிந்து கொள்வோம். இருக்கிற வரைக்கும் அவற்றை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வோம். அவ்வளவுதான். வேறு என்னங்க செய்ய முடியும்.

இனவாதமும் மதவாதமும் தலைவிரித்தாடும் போது இரண்டு காதுகளையும் இறுக மூடிக் கொள்வது சிறப்பு என்றால் இருக்கிற தமிழர்களின் வரலாற்றை ஆவணப் படுத்துவது அதிலும் சிறப்பு. நம் சந்ததிகளுக்கு அவற்றைச் சீதனமாக விட்டுச் செல்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.02.2021

சான்றுகள்:

1. 1. Singaravelu Sachithanantham (2004). The Ramayana Tradition in Southeast Asia. Kuala Lumpur: University of Malaya Press.

2. Sastri, Nilakanta (1 January 1939). Foreign Notices of South India: From Megasthenes to Ma Huan. University of Madras.

3. Malaysian Indians - https://www.wdl.org/en/item/555/

4. Definisi 'keling'" (in Indonesian). Arti Kata - http://artikata.com/arti-333898-keling.html

5. ‘Keling’ and proud of it - https://www.thestar.com.my/opinion/columnists/along-the-watchtower/2016/08/10/keling-and-proud-of-it-the-k-word-deemed-to-be-derogatory-and-offensive-to-the-indian-community-sinc/

 

08 பிப்ரவரி 2021

மலேசிய அரசியல் கலையில் அதிசய ராகங்கள்

தமிழ் மலர் - 08.02.2021

ஆளாளுக்கு ஒரு கதை. ஆளாளுக்கு ஒரு விமர்சனம். ஆளாளுக்கு ஒரு கண்டனம். ஆளாளுக்கு ஒரு வரலாறு. இந்த நாட்டின் அரசியலில் இப்படித்தான் ஆளாளுக்கு ஓர் அரசியல் இராமாயணத்தைப் பாடிக் கொண்டு போகிறார்கள். வருகிறார்கள். என்னதான் நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. யார்தான் தலைவர் தலைவர்; யார் தான் அமைச்சர் என்பதும் தெரியவும் இல்லை.

இன்றைக்கு இருக்கிற அமைச்சர் நாளைக்கு இருப்பாரா தெரியவில்லை. நாளைக்கு வரும் அமைச்சர் என்ன ஆவார் என்பதும் தெரியவில்லை. எல்லாமே மர்மம். நூறு கோடி மக்கள் கொண்ட ஒரு துணைக் கண்டத்திற்கு 32 அமைச்சர்கள். ஆனால் மூன்று கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டிற்கு 72 அமைச்சர்கள். அப்பாடா சாமி!

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது. பலருக்கும் தெரிந்த முதுமொழி. ஆனால் இப்போதைக்கு நாட்டைப் பொறுத்த வரையில் இது ஒரு பஞ்ச தந்திர அரசியல் கலை.

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுங்களா. நேற்றைக்கு கோழி முட்டை போட்டது. இன்றைக்கு வாத்து முட்டை போட்டது. நாளைக்கு கோழிக் குஞ்சு முட்டை போட்டது. என்னங்க இது. இந்த முட்டை விசயத்திலேயே ஆயிரத்து எட்டு கோளாறுகள். கோல்மால்கள். உருப்படியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். உருப்படியாக ஒரு முட்டை போட்டாலே பெரிய விசயம்.

நேற்று கோழி முட்டை போட்டது என்றால் அந்தக் கோழி முட்டையிலேயே அப்படியே நிற்க வேண்டும். இங்கே அப்படி இல்லையே. நாட்டு முட்டைக்குச் சாயம் அடித்து காட்டு முட்டையாக மாற்றுவதை ஒரு கலையாகப் பார்க்கிறார்கள். பேஷ் பேஷ்.

முன்னாள் மூத்த பிரதமர் ’பிரி மலேசியா டுடே’ (Free Malaysia Today) இணைய இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். இனக் கொள்கைகளுடன் மலாய்க்காரர் அல்லாதவர்களை விரட்ட வேண்டாம் (Don’t drive away non-Malays with racial policies) என்று ஒரு பேட்டி. அதாவது இனக் கொள்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்ல வருகிறார். இந்தப் பேட்டி பழசு அல்ல. நேற்று 2021 பிப்ரவரி 7-ஆம் தேதி பேட்டி.

இதைப் பார்த்ததும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அவரா சொன்னார் என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பத்து பட்டிக்கும் தண்டோரா போட்டு பதாகை கட்ட வேண்டும் போல தோன்றியது.

காலம் காலமாக இந்த நாட்டில் தமிழர் சிறுபான்மை இனத்தவர் ஒதுக்கப்பட்டு; ஓரம் கட்டப்பட்டு; மேலே வர முடியாமல் அமுக்கி அழுத்தி; நசுக்கிப் போடப் பட்டார்கள். பேராண்மை செழித்து வளர சூடம் சாம்பிராணி கொளுத்தி வைத்தார்கள். அந்தத் தலைவர் ஆட்சியில் இருந்த போது கெலிங்; பெண்டாத்தாங் என்று சொல்லிச் சொல்லியே தமிழர்களைச் சீண்டிப் பார்த்தார்.

சில வேளைகளில் திரைப்பட அறிமுகத்தில் ஒரே ஒருவர்தான் இயக்குநர்; தயாரிப்பாளர்; ஒளிப்பதிவாளர்; கதாசிரியர்; கதாநாயகர்; பாடலாசிரியர் எல்லாமே அவர்தான். அந்த மாதிரிதான் அந்தத் தலைவரும்.

முன்பு அதிகாரம் கையில் இருந்த காலத்தில் எல்லாமே அவர்தான். அதை நாம் தவறு என்று சொல்லவில்லை. திறமை இருந்தது. செய்தார். தப்பு இல்லை. பாராட்டுவோம்.

ஆனால் தமிழர் சிறுபான்மை இனத்தவர் நசுக்கப்பட்டு மேலே வர முடியாமல் செய்யப் பட்டார்கள். இதை எந்தக் கணக்கில் போய்ச் சேர்ப்பதாம்.

அந்தத் தலைவரின் பேட்டியைப் பார்ப்போம்.

1. மlலாய்க்காரர் அல்லாதவர்களை ஒதுக்கி வரும் நிலை தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறுகள் ஏற்படலாம்.

(The government risks driving away non-Malays and hampering the growth of the country if it continues to pursue a racial narrative)

2. மலேசியாவின் பன்முகத் தன்மையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும், மேலும் அதன் கொள்கைப் பயன்பாட்டில் அந்தத் தன்மை பிரதிபலிக்கப்பட வேண்டும்.

3. இனம் சார்ந்த நகர்வுகள் பின்பற்றப் பட்டால் நாடு நிலையற்ற நிலைமைக்கு தள்ளப்படும். மக்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

4. மலாய்க்காரர்கள் அல்லாதவர்களைப் பற்றி நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்களை அகற்றினால், இந்த நாட்டின் வளர்ச்சி தடை படலாம். அதுவே ஓர் எதிர்மறை விளைவாகவும் மாறலாம்.

6. மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். இருந்த போதிலும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களும் காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக, பொருளாதார ரீதியாக வெற்றி பெற முடிந்தது.

7. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இடைவெளி உருவாகி உள்ளது. மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கும்; மலாய்க்காரர்களுக்கும் இடையில் நாட்டின் செல்வத்தைச் சமப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஏன் என்றால், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வு இருந்தால் இறுதியில் வன்செயல்கள் ஏற்படலாம். அது அவருடைய கருத்து.

இப்போது என் கருத்து. காலம் கடந்து ஏன் இப்போது சொல்ல வேண்டும். இதை அப்போதே சொல்லி இருக்கலாமே. செய்து காட்டி இருக்கலாமே. பதவியில் இருந்த போது ஏன் அந்த ஞானம் வரவில்லை. பதவியில் இல்லாத போது மட்டும் ஏன் வர வேண்டும். இது உலக மகா நடிப்புடா சாமி என்று நான் சொல்லவில்லை. புந்தோங் பக்கிரிசாமி புலம்புகிறார்.

இது சாணக்கியம் பேசும் நகர்வா? சமாதானம் பேசும் நகர்வா? அல்லது சந்தர்ப்பவாதமா? அல்லது அடுத்து வரும் தேர்தலில் ஓட்டுக்கு அடிபோடும் அம்சவர்த்தனமா? தெரியவில்லை.

மலாயா தமிழர்களுக்குச் செய்யப்பட்ட துரோகங்களை அந்த இனம் நிலைக்கும் வரையில் மறக்கவே மறக்காது.

நல்லா வந்து கொண்டு இருந்த ஓர் இனம். நாலு காசு சம்பாதித்து கால் வயிற்றை அரை வயிறாக நிரப்பிக் கொண்டு வந்த இனம். அந்த இனத்தை நாசமாக்கிய கதையை அந்த இனத்தின் தலைமுறைகள் காலா காலத்திற்கும் மறக்க மாட்டார்கள். மறக்கவே மாட்டார்கள். நான் செத்தாலும் என் சாம்பல்கள்கூட என் இனத்துக்குச் செய்யப்பட்ட துரோகங்களை மன்னிக்காது.

அஞ்சுக்கும் பத்துக்கும் இப்போது அந்த இனம் அல்லாடிக் கொண்டு இருக்கிறது. அதற்கு அந்தத் தலைவரும் ஒரு காரணம் என்று நான் சொல்லவில்லை. பலரும் சொல்கிறார்கள். பசார் மாலாமில் ஒரு நடை போட்டுப் பாருங்கள். கதை கதையாக ’குட்டி’ கதைகள் சொல்வார்கள்.

இதை எல்லாம் பார்க்கும் போது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை நினைவுக்கு வருகிறது. ஆளாளுக்குக் கதை சொல்லும் போது நானும் ஓநாய் கதையைச் சொல்கிறேன். அம்புட்டுத்தான். இங்கே சின்ன ஓநாயும் இல்லை. பெரிய ஓநாயும் இல்லை. இது தெனாலி ராமன் கதை.

ஒன்று மட்டும் சொல்வேன். மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் மண்ணின் வளப்பத்திற்கு மந்திரச் சொற்களை வாசித்துக் காட்டியவர்கள். வாசித்த அந்த மந்திரச் சொற்களின் சாரலில் நனைந்து கரைந்து கடைசியில் காணாமல் போனவர்கள்.

மலாயா தமிழர்கள் வாசித்த அந்த மந்திரச் சொற்கள் காலத்தால் மறக்க முடியாத உண்மைகள். அந்த உண்மைகளுக்குள் இன்னும் ஓர் உண்மை மறைந்து உள்ளது. அந்தக் கித்தா தோப்பு ஜீவன்களே இந்த நாட்டின் மறக்க முடியாத ஜீவகாருண்யங்கள். அதுதான் மறைந்து கிடக்கும் உண்மை. உண்மையிலும் உண்மை.

வரலாறு தெரியாதவர்கள்; அல்லது வரலாறு படிக்காதவர்கள்; அல்லது அந்த வரலாற்றையே மறைப்பவர்களின் பார்வையில், வேண்டும் என்றால் அந்த வாயில்லா ஜீவன்களுக்குப் பெயர் வந்தேறிகளாக இருக்கலாம்.

ஆனால் வரலாறு தெரிந்தவர்களின் பார்வையில் அவர்கள் வந்தேறிகள் அல்ல. சத்தியமான தியாகச் சீலங்கள்.

உண்மையில் பார்க்கப் போனால் அந்தக் கித்தா தோப்பு ஜீவன்கள் தான் அச்சு அசலான மைந்தர்கள். அம்சமான மண்வாசனைகள். வாய் இருந்தும் வாய்விட்டுப் பேச முடியாத அந்த வாயில்லா பூச்சிகளினால் தான் மலைநாட்டு மண்வாசனையை இன்னமும் பலர் சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால் சிலருக்குக் கோபம் வரலாம். சண்டைக்கும் வரலாம். பிரச்சினை இல்லை. சபைக்கு உதவாத சோம்பேறிகளைப் பற்றி பேசுவதினால் யாருக்கும் எவருக்கும் எந்த நன்மையும் இல்லை.

கொட்டும் மழையிலும் கொக்கரிக்கும் வெயிலிலும் வெறும் வேட்டி முண்டாசு கட்டிக் கொண்டு மலாயாவின் கட்டுமானத்தில் முதுகெலும்பாய் வாழ்ந்து காட்டியவர்கள். அரசியல் கைதிகளாகவும் அற்றைக் கூலிகளாகவும் பரிணமிததவர்கள். இந்த நாட்டின் வளப்பத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர்கள். மலாயா தமிழர்களை மறுபடியும் முட்டாளாக்க நினைப்பது பெரிய தவறு.

எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள்களாக நினைக்கக் கூடாது. முட்டாள்களாக மாற்ற முயற்சி செய்யவும் கூடாது.
மலாயா தமிழர்களை முட்டாளாக்கியது போதும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.02.2021


சான்றுகள்:


1. Don’t drive away non-Malays with racial policies - https://www.freemalaysiatoday.com/category/nation/2021/02/07/dont-drive-away-non-malays-with-racial-policies-says-mahathir/

2. The contribution of ethnic groups to Malaysian scientific output, 1982–2014, and the effects of the new economic policy - https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5124039/

3. Challenges to the Rights of Malaysians of Indian Descent - https://www.e-ir.info/2013/02/06/challenges-to-the-rights-of-malaysians-of-indian-descent/

4. Income inequality among different ethnic groups: the case of Malaysia - https://blogs.lse.ac.uk/businessreview/2019/09/11/income-inequality-among-different-ethnic-groups-the-case-of-malaysia/