தமிழ் மலர் - 17.07.2021
இந்த உலகில் இந்தியர் அல்லாத இந்து மக்கள், இரண்டே இடங்களில் தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியக் கலாசாரப் பின்னணியில் 1,600 ஆண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றி வருகின்றார்கள். இந்து மதத்தை ஏன் பின்பற்றி வருகிறோம் என்று அவர்களுக்கே தெரியாமல் இந்து மத வழிபாடுகளையும் பின்பற்றி வருகிறார்கள். (Two surviving non-Indic indigenous Hindu peoples in the world)
Balamon Cham Hindus
இந்தோனேசியா பாலி தீவில் ஒரு பிரிவினர். பாலினிய இந்துக்கள் (Balinese Hinduism).
அடுத்த பிரிவினர் வியட்நாம் நின் துன் மாநிலத்தில் (Ninh Thuan Province) பலமான் சாம் (Balamon Cham) எனும் பூர்வீக இந்து மக்கள். இவர்களைச் சாம் இந்துக்கள் (Balamon Cham Hindus) என்று அழைக்கிறார்கள். இவர்களின் பெண்கள், நெற்றியில் பொட்டு வைக்கும் பாரம்பரிய பழக்கம் இன்றும் சில இடங்களில் உள்ளன.
சம்பா அல்லது சியோம்பா அரசு (Champa or Tsiompa) என்பது முன்பு காலத்தில் வியட்நாமில் இருந்த பேரரசு. ஆனாலும் சின்னச் சின்ன அரசுகளின் ஒரு கூட்டு அரசாகும். சம்பா அரசு பாண்டியர்கள் அமைத்த முதல் மூத்த அரசு. அதுவே பின்னாட்களில் பல்லவர்களின் பெரிய பேரரசாக மாறியது.
மறுபடியும் சொல்கிறேன். சம்பா அரசு என்பது பாண்டியர்கள், வியட்நாமில் அமைத்த முதல் அரசு. அதுதான் சம்பா பேரரசு (Kingdom of Champa: கி.பி. 192 – கி.பி. 1832). சம்பா என்றால் சமஸ்கிருத மொழியில் சண்பகம் (campaka) என்று பொருள். முதன்முதலாக அசல் சம்பாவைத் தோற்றுவித்தவர் ஸ்ரீ மாறன் (Sri Mara was the founder of the kingdom of Champa). வியட்நாமிய பெயர் கூ லியன் (Khu Lien). தமிழகப் பதிவுகள் திருமாறன் பாண்டியன் என்று சொல்கின்றன.
கி.பி. 100-ஆம் ஆண்டுகளில், சம்பா நிலப் பகுதிகளைச் சீனாவின் ஹான் வம்சாவழியினர் (Han Dynasty) ஆளுமை அதிகாரம் செய்து வந்தனர். சம்பா மக்களுக்கு வரி வட்டி நெருக்கடிகள். அதனால் ஒரு கட்டத்தில் சீனாவை எதிர்த்து ஸ்ரீ மாறன் போர் செய்தார். வெற்றி பெற்று சம்பாவைக் கைப்பற்றினார். ஸ்ரீ மாறன் தான் சம்பா பேரரசைத் தோற்றுவித்த முதல் பாண்டிய மன்னர்.
அதன் பின்னர் சம்பா அரசு உடைந்து போனது. உடைந்து போன அரசை ஒரு கூட்டு அரசாகத் தோற்றுவித்தவர் பத்திரவர்மன் (Bhadravarman). இவருடைய வீயட்நாமிய பெயர் பாம் ஹோ டாட் (Pham Ho Dat). பட்டப் பெயர் தர்மமகாராஜா பத்திரவர்மன் (Dharmamaharaja Sri Bhadravarman I).
இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 349 - கி.பி. 361. இவர்தான் சிம்மபுரம் (Simhapura - Lion City) எனும் நகரத்தை உருவாக்கியவர். இப்போது இந்த நகரம் திரா கியூ (Tra Kieu) என்று அழைக்கப் படுகிறது.
பத்திரவர்மன் தன் கடைசி காலத்தில் இந்தியாவிற்குச் சென்று கங்கை நதிக் கரையில் வாழ்ந்ததாகவும் வியட்நாமிய வரலாறு சொல்கிறது.
சம்பா அரசிற்கு முன்பு காலத்தில் செண்பகா என்று பெயர் இருந்து இருக்கலாம். செண்பகம் எனும் சொல் சம்பா என்று மாற்றம் கண்டு இருக்கலாம். வரலாற்று ஆசிரியர்கள் கீழ்க்காணும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.
சம்பா எனும் பெயர் சம்பகா எனும் சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. செண்பகா என்பது செண்பக மலரைக் குறிக்கிறது. மணம் வீசும் மலர்களால் அறியப்படும் ஒரு பூக்கும் தாவரம். பூவின் பெயரைச் சொல்லும் போதே நெஞ்சத்தில் நறுமணத்தை நிறைக்கும் தன்மை இந்த மலருக்கு உண்டு.
ஆங்கிலப் பெயர் (champaca); தமிழ்ப் பெயர் செண்பகம். இரண்டுமே ஜம்பகா என்ற வடமொழிச் சொல்லில் இருந்து உருவானவை தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
மக்னோலியா குடும்பத்தைச் சார்ந்த இதன் பழைய அறிவியல் பெயர் Michelia champaca. புதிய பெயர் Magnolia champaca. செம்பகம் என்ற பெயரில் ஒரு குயில் இனம் உள்ளது. பிலிப்பைன்ஸ்; தமிழீழம்; ஆகியவற்றின் தேசியப் பறவை செண்பகம் ஆகும். சரி.
சம்பா அரசைத் தோற்றுவித்த பத்திரவர்மனுக்கு முன்னதாகவே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.
அவர்களில் முதலாவதாக ஆட்சி செய்தவர் திருமாறன் பாண்டியன் என்று வியட்நாமிய வோ - கான் கல்வெட்டு (Vo Canh inscription) சொல்கிறது. (The oldest Sanksrit inscription discovered in Vietnam mentions the name of Sri Maran. The inscription is known as the Vo-Canh inscription.) ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
தென்கிழக்கு ஆசியாவில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான சமஸ்கிருதக் கல்வெட்டு. வோ-கான் கல்வெட்டு ஆகும்.
1885-ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் நா திராங் (Nha Trang) நகரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள வோ - கான் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் கல்வெட்டில் இப்படி ஒரு வாசகம் வருகிறது. ”ஆபரணம் ... ஸ்ரீ மாறனின் பேரன் மகளின் குடும்பத்தின் மகிழ்ச்சி... இதன் மூலம் உறுதி செய்யப் படுகிறது.”
இந்தோனேசியாவின் மஜபாகித்; ஸ்ரீ விஜயம்; சிங்காசாரி; மத்தாரம் போன்று சம்பா பேரரசும் அந்தக் காலக் கட்டத்தில் பெரிய ஓர் அரசு.
இந்தியாவும் சீனாவும் இதனிடம் பிரச்சினை பண்ணாமல் சற்றே ஒதுங்கி இருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.
இன்றைய மத்திய வியட்நாம்; தெற்கு வியட்நாம் கடற்கரை முழுவதும் கி.பி 2-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டு வரையில் சம்பா பேரரசின் அதிகாரம். படர்ந்து விரிந்து ஆளுமை செய்து இருக்கிறது.
1. சம்பா பேரரசு: முதலாவது தலைநகரம் சிம்மபூரம் (Simhapura - 4th century to the 8th century CE)
2. சம்பா பேரரசு: இரண்டாவது தலைநகரம் இந்திரபுரம் (Indrapura கி.பி 875 – கி.பி 978)
3. சம்பா பேரரசு: மூன்றாவது தலைநகரம் அமராவதி விஜயா (Amaravat Vijaya கி.பி 978 – கி.பி 1485)
4. சம்பா பேரரசு: (கௌதாரம் சிற்றரசு - Kauthara Polity) நான்காவது தலைநகரம் கௌதாரம் (Kauthara கி.பி 757 - கி.பி 1653)
5. சம்பா பேரரசு: (பாண்டுரங்கா சிற்றரசு - Panduranga Polity) ஐந்தாவது தலைநகரம் பாண்டுரங்கா (Panduranga கி.பி 757 - கி.பி 1832)
1832-ஆம் ஆண்டு சம்பா பேரரசு இப்போதைய வியட்நாமிய அரசாங்கத்துடன் இணைக்கப் பட்டது. சுருக்கமாக மீண்டும் சொல்கிறேன்.
சம்பா அல்லது சியோம்பா அரசு கி.பி 1832-ஆம் ஆண்டில் வியட்நாமிய பேரரசர் மின் மங் என்பவரால் இணைக்கப்பட்ட வியட்நாமிய தெற்குப் பகுதி ஆகும்.
வியட்நாமுடன் இணைக்கப் படுவதற்கு முன்பு சம்பா அரசு தனியாக இயங்கி வந்தது., கி.பி. 2-ஆம் நூற்றாண்டு தொடங்கி 1832-ஆம் ஆண்டு வரை, மத்திய வியட்நாம்; தெற்கு வியட்நாம் கடற்கரை முழுவதும் பரவி இருந்தது. சின்னச் சின்ன சாம் அரசுகளின் தொகுப்பு தான் சம்பா அரசு ஆகும்.
இந்தச் சம்பா அரசை, சமஸ்கிருத மொழியில் நகாரா சாம்பா என்றும் கெமர் மொழியில் சாமிக் என்றும் அழைத்தார்கள். வியட்நாமில் சில இடங்களில் இன்னும் அப்படித்தான் அழைக்கப் படுகிறது.
கம்போடிய கல்வெட்டுகளில், சாம் பா என்றும்; வியட்நாமிய மொழியில் சியாம் தான் (Chiêm Thanh) என்றும்; சீனப் பதிவுகளில் 'ஜாஞ்சாங்' என்றும்; குறிப்பிடப்பட்டு உள்ளது.
இப்போதைய நவீன வியட்நாம் மக்களும்; கம்போடியாவின் சாம் மக்களும் இந்த முன்னாள் சம்பா அரசின் எச்சங்கள் ஆவார்கள். அவர்கள் சாமிக் மொழியைப்ப் பேசுகிறார்கள். சரி. இந்து மதம் எப்படி இங்கே வேர் ஊன்றியது. அதையும் பார்ப்போம்.
முன்பு காலத்தில் சம்பா அரசிற்கும் கம்போடியாவிற்கும் இடையில் அடிக்கடி போர்கள். இருந்தாலும், இரு நாடுகளும் வர்த்தகத்தில் சுமுகமாய் ஈடுபட்டு வந்தன. அதனால் கலாசார தாக்கங்கள் இரு திசைகளில் இருந்தும் சுமுகமாய் நகர்ந்தன. இரு நாடுகளின் அரச குடும்பங்களும் அடிக்கடி திருமண உறவுகளைப் பரிமாறிக் கொண்டன.
ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு போன்றவை அந்தக் காலத்தில் சக்தி வாய்ந்த கடல் பேரரசுகள். அவற்றுடன் சம்பா அரசும் நெருக்கமான வர்த்தக, கலாசார உறவுகளைக் கொண்டு இருந்தது.
கி.பி 4-ஆம் நூற்றாண்டில் அண்டை நாடான பூனான் (Funan) அரசு; சம்பா அரசின் மீது தாக்குதல் நடத்தி சம்பாவைக் கைப்பற்றியது. அதன் பின்னர் இந்து மதம், குறிப்பாக சைவம், அரசு மதமாக மாறியது.
Courtesy of Fine Art America
கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல், வியட்நாம் பகுதியில் அரபு கடல் வர்த்தகம் அதிகரித்தது. அதன் காரணமாக இஸ்லாமிய கலாசார மதத் தாக்கங்கள் கொண்டு வரப் பட்டன. அந்த வகையில் இஸ்லாம் அங்கே பரவியது.
பல நூற்றாண்டுகளாகச் சம்பா பேரரசின் கலை, கலாசாரங்களில் இந்தியச் சாரங்கள் பரிணாமம் பெற்று உள்ளன. சம்பா இந்துக்கள் சிவனை வழிபடும் சைவ சமயத்தைப் பின்பற்றி வந்தார்கள்.
சம்பா அரசின் துறைமுக நகரம் காதிகரம். அங்கு இருந்த சம்பா நிலங்களில் பல இந்துக் கோயில்கள்; பல சிவப்புச் செங்கல் கோயில்கள் கட்டப்பட்டன.
முன்பு காலத்தில் வியட்நாமில், மை சான் (My Son) எனும் நகரம் முக்கிய இந்து மத மையமாக விளங்கி உள்ளது. அங்கே நிறைய இந்துக் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன.
Ganesh Tempele Po Nagar Nha Trang
அதற்கு அருகாமையில் ஹோய் ஆன் (Hoi An) எனும் ஒரு துறைமுக நகரம். இப்போது இந்த இரு இடங்களுமே உலகப் பாரம்பரியத் தளங்களாக (UNESCO World Heritage Sites) அறிவிக்கப்பட்டு உள்ளன.
மீகோங் ஆறு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் வரும் கோங் எனும் கடைச் சொல் கங்கை நதியைக் குறிக்கின்றது. அது தெரியுமா உங்களுக்கு? நான் சொல்லவில்லை. வரலாற்று நூல்கள் சொல்கின்றன.
10-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் பரவியது. அதன் பின்னர் பிரெஞ்சுக்காரர்களின் கிறிஸ்துவ மதம் வந்தது. இருந்தாலும் அங்கு வாழ்ந்த பலர் தங்களின் பழைய இந்து நம்பிக்கைகள், இந்து சடங்குகள், இந்து பண்டிகைகளைக் கைவிடவில்லை. இன்னும் தக்க வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.
வியட்நாம் நாட்டில் இருக்கும் இந்து மதம்; இந்தியா, மலேசியாவில் இருக்கும் இந்து மதத்தில் இருந்து சற்றே மாறுபட்டு உள்ளது. இருப்பினும் சில அடிப்படை வழிபாடுகள் அழிபடாமல் உள்ளன.
கற்சிலைகளை வணங்குகிறார்கள். கல்லில் செய்யப்பட்ட லிங்க வடிவங்களை வழிபடுகிறார்கள். பெரும்பாலும் சிவ பக்தர்கள். இங்குள்ள கோயில்களும் சிவாலயங்களாகவே உள்ளன.
வியட்நாம் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உள்ளூர் சமுதாயமான 'சம்' பரம்பரையின் ஆட்சி நடைபெற்றது. ’சம்’ சமுதாயத்தில் இந்து மக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.
ஆனால் பிறகு அவர்களில் பலர் பெளத்தம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறி விட்டனர். இன்று இந்து சமூகம் இங்கே ஒரு சிறுபான்மைச் சமூகமாகக் குறுகி விட்டது.
சம்பா நிலப் பகுதியில் இப்போது நான்கு கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் இரண்டு கோயில்களில் மட்டும் இந்துமத வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்து மதம் முற்றிலுமாக அழிந்துவிடும் நிலையில் உள்ளது.
வியட்நாமில் இப்போது 60,000 பூர்வீக இந்துக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் திருமணம்; காதணி விழா; திருவிழாக்கள் எல்லாம் இந்து மதம் சார்ந்தவையாக உள்ளன.
சம்பா சமூகம் இன்னும் நிலைத்து இருக்கிறது. ஆனால் அதற்கும் முந்தைய இந்து மதம் இங்கே அழிவின் விளிம்பில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு காலத்தில் வியட்நாம் நாடு, இந்து மதத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தது. அந்த வகையில் இன்றும் சில பாரம்பரியங்கள் அங்கே பராமரிக்கப் படுகின்றன. எச்சம் மிச்சங்களைக் காண முடிகிறது.
சில பாரம்பரியங்கள் இன்று வரை தொடர்ந்தாலும், சில பல மாறுதல்களையும் காண முடிகிறது. அதே சமயத்தில் பல பண்பாடுகள் கால வெள்ளத்தில் தொலைந்து விட்டன.
’பண்டைய காலத்தில், இந்தோசீனாவின் சம்பா அரசு; இந்து மதத்தின் கோட்டையாகத் திகழ்ந்தது. சம்பாவின் புராதன கோயில்களே அதற்கான சாட்சியங்களாக அமைகின்றன. வேறு சில கோயில்கள் இடிபாடுகளாகவும் எஞ்சி நிற்கின்றன.
ஆனாலும் அந்தச் சம்பா அரசு அண்மைய காலத்து வரலாற்றில் இருந்து சன்னம் சன்னமாய் மறைந்து வருகிறது. வேதனை.
ஒருகாலத்தில் தென்கிழக்கு ஆசியாவையே பல்லவர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பாண்டியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். தமிழர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.
அவர்களுக்குக் கீழ் கைகட்டி வாய் பொத்தி பேர் போட்ட ’ஐலசா ஐலசா’ மீன்பிடி இனங்கள் எல்லாம்; இன்றைய காலத்தில் பக்காவாக தெனாவெட்டு பேசிக் கொண்டு திரிகின்றன. செல்பி எடுத்து பிரேக் டான்ஸ் ஆடுகின்றன. காலத்தின் கோலம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.07.2021
சான்றுகள்:
1. Thurgood, Graham (1999). From Ancient Cham to Modern Dialects.
2. Ralph Bernard Smith (1979). Early South East Asia: essays in archaeology, history, and historical geography. Oxford University Press. p. 447.
3. Chatterji, B. (1939). JAYAVARMAN VII (1181-1201 A.D.) (The last of the great monarchs of Cambodia). Proceedings of the Indian History Congress. - www.jstor.org/stable/44252387
4. Hindus of Vietnam - Hindu Human Rights Online News Magazine". www.hinduhumanrights.info.
5. India's interaction with Southeast Asia, Volume 1, Part 3 By Govind Chandra Pande, Project of History of Indian Science, Philosophy, and Culture, Centre for Studies in Civilizations (Delhi, India).
6. https://en.wikipedia.org/wiki/Võ Cạnh inscription