19 மே 2016

நடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2

19.05.2016 ினத்ந்தி நாளிில் வெளியானட்.

மேற்கிந்தியத் தீவுகளில் ஏறக்குறைய 50 தீவுகள். அவற்றில் ஒன்று தான் ஜமாய்க்கா (Jamaica). இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அழகு அழகான பச்சைக் கானகங்கள். நிறையவே கரும்புத் தோட்டங்கள். கறுப்பர்கள் நிறைய பேர் அடிமைகள். கரும்புத் தோட்டங்களின் முதலாளிகள் அனைவரும் வெள்ளைக்காரர்கள்.

முதலாளிகளுக்கும் திண்டாட்டம்
தொழிலாளிகளுக்கும் திண்டாட்டம்

இந்த அடிமைகளுக்குச் சாப்பாடு போடுவது என்பது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. கடுமையான உடல் உழைப்பு. அதனால், அவர்கள் ரொம்பவும் சாப்பிட்டார்கள். அடிமைகளுக்கு எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் கட்டுபடி ஆகவில்லை. முதலாளிகளுக்கு திண்டாட்டம் தொழிலாளிகளுக்குத் திண்டாட்டம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அந்தச் சமயத்தில் ஜேம்ஸ் குக் எனும் கடலோடி ஒருவர் இருந்தார். இவர் உலகம் சுற்றி வந்த முதல் கடலோடி. கடல் பயணங்களின் முன்னோடி. பசிபிக் தீவுகளில் ஈரப் பலாக்காய் (Bread Fruit) இருப்பதாகச் சொன்னார். அந்த ஈரப் பலாக்காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்றும் பரிந்துரை செய்தார்.

இந்த ஈரப் பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், வில்லியம் பிளை (William Bligh) என்பவரைப் பசிபிக் கடலுக்கு அனுப்பியது.

இந்த ஆய்வுப் பயணத்திற்குப் பவுண்டி (Bounty) எனும் பாய்மரக் கப்பல் கட்டப் பட்டது. 1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கப்பல் பயணமானது. பசிபிக் மாக்கடலில் இருக்கும் தாகித்தி (Tahiti) தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழுவிற்கு வில்லியம் பிளை என்பவர் தலைமை வகித்தார்.

கடல் பயணம் 306 நாட்கள் பிடித்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வழியாகத் தாகித்தி தீவை அடைந்தனர். வந்தவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு.

பரிசுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் சந்தோசமாய் இருந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. 
 

'நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்க... வாங்க... என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்க... பழகுங்க... உருளுங்க... புரளுங்க... ஆனா... தயவு செஞ்சு... தயவு செஞ்சு... பெண்களின் பக்கம் மட்டும் தலை வச்சு படுத்துடாதீங்க... வேண்டாங்க சாமி... அது விவகாரமான விசயமா மாறி… அப்புறம் கொலையில் தான் போய் முடியும்... வேண்டாங்க சாமி...' என்று அவர்களுக்குப் படித்துப் படித்துப் புத்தி சொன்னார்கள். கேட்டார்களா. எல்லோரும் கேட்டார்கள். கேட்ட மாதிரி பதிவுசாகப் பக்குவமா… ஒன்னும் தெரியாத பாப்பா மதிரி பழகினார்கள். பெண்களைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி போய்க் கொண்டே இருந்தார்கள்.

இரவோடு இரவாக கடலில் நீந்திப் போய்

அதையும் மீறி பாருங்கள்... ஒரு மன்மதக் குஞ்சு போய் கலாட்டா பண்ணி விட்டது. படியுங்கள். மன்மதக் குஞ்சு இல்லை. மன்மதக் குஞ்சு ராசா. சொன்னது எல்லாம் அதன் மரமண்டையில் ஏறவில்லை. ராசாவைச் சொல்லிக் குற்றம் இல்லை. இள ரத்தம் கொஞ்சம் கொப்பளித்து விட்டது.
 

அந்த ராசாவுக்கு 18 வயசு. அங்கே இருந்த 16 வயசு கடைக்கண் கன்னிப் பெண்ணைத் தன் கம்பீரப் பார்வையால் வளைத்துப் போட்டது. இருவரும் நெருக்கமானார்கள்.

தென்னை மரத்தில் இருந்து ’கள்’ வரும் என்பது அங்கே ஊறிப் போன விஷயம். பல நூறு ஆண்டுகளாக கள் இறக்கப்பட்டு வந்து இருக்கிறது. இந்தக் கள் சமாசாரம் உலகம் முழுமையும் பரவி இருந்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.
 

தப்பாக நினைக்க வேண்டாம். நானும் ஒரு தமிழன்தான். சமயங்களில் லகர ளகரப் பிரச்சினைகள் வருவது உண்டு. 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' என்பார்கள். அது எந்தக் கல் என்பதுதான் இங்கே கொஞ்சம் பிரச்சினையாக இருக்கிறது. ஓர் எழுத்து பண்ணுகின்ற வேலையைப் பாருங்கள். பிரச்சினை இல்லை. பெரிதாக எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சரி. பானமும் வெள்ளை. மன்மதனின் மனசும் வெள்ளை. ஆக, அந்த வெள்ளை வேகத்தில் போய் மொக்கை முடிச்சுத் தெரியாமல் குடித்து இருக்கிறான். அந்த நேரம் பார்த்து ஒரு பதினைந்து வயது பெண் அந்தப் பக்கமாய் வந்து இருக்கிறாள். என்ன செய்வது. 
 

நம்ப மன்மதக் குஞ்சு கொஞ்சம் கூடுதலாகக் குடித்து அதற்கு மப்பு மந்தாராமாகிப் போனது. இயற்கை பானம் வஞ்சகம் இல்லாமல் வேலை செய்து இருக்கிறது. ராசாவும் ஒரு மனுசன் தானே. பாவம் அந்தப் பதின்ம வயசு மன்மத ராசா.

ஆக... நம்ப மன்மத ராசா அவளைப் பார்த்துச் சிரிக்க... அவள் இவனைப் பார்த்துச் சிரிக்க... இரண்டு காந்தப் புலன்களும் ஒன்றை ஒன்று இழுக்க...  அவளும் கிட்ட வர... ராசாவும் நெருங்கிப் போக... பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள... அந்த நேரம் பார்த்து… சிவ பூசையில் கரடி நுழைந்தது மாதிரி பெண்ணின் சொந்தக்காரன் பார்க்க... பார்த்த விசயத்தை வெளியே போய் சொல்ல... ஊரே பற்றிக் கொண்டது.
 

கிராமத்து மக்கள் அரிவாளைத் தூக்கிக் கொண்டு விரட்டி இருக்கிறார்கள். இருவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எங்கே போவது என்று தெரியாமல் மன்மத ராசா திகைத்துப் போய் நின்று இருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு அந்த இடம் நன்றாக அத்துப்படி. அதனால் அங்குள்ள ஒரு குகைக்குள் அவனை இழுத்துக் கொண்டுப் போய் இருக்கிறாள். எங்கே ஒளிந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரிந்த விசயம். சுற்றிக் கிடந்த செடி கொடிகளை கொண்டு வந்து ஒரு மறைப்பு கட்டி… படுக்க ஒரு பச்சைப் பாய் தயார் செய்து… இரண்டு பேருமே அன்றிரவு அங்கே தங்கி இருக்கிறார்கள். 
 

பொழுது விடிந்ததும் அவள் அந்தப் பக்கம் போக இவன் இந்தப் பக்கம் வர அவர்களின் மரத்தோன் ஓட்டம் ஒரு முடிவிற்கு வந்தது. பிறகு ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி சமாதானம் செய்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தப்பித்ததே பெரிய விசயம்.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்ன தெரியுமா. ஊர்ப் பஞ்சாயத்து சமாதானம் செய்கிற மாதிரி சமாதானம் செய்து உள்ளுக்குள் ஒரு பெரிய திட்டமே போட்டு வைத்து இருக்கிறது. அதாவது மன்மதக் குஞ்சைத் தீர்த்துக் கட்டுவது. அதற்கு மூன்று ஆட்களையும் ஏற்பாடு செய்து விட்டார்கள். 
 

விசயம் எப்படியோ அந்த இளம் பெண்ணுக்குத் தெரிந்து விட்டது. தன் உயிரைப் பணயம் வைத்து... இரவோடு இரவாகக் கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். கப்பலின் கயிறுகளைப் பிடித்து ஏறி விசயத்தைச் சொல்லி இருக்கிறாள்.

சுறா மீன்கள் நிறைந்த கடல் பகுதி அது. தான் விரும்பியவனுக்காகத் தன் உயிரையே பணயம் வைத்து ஆழ்கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். தன் உயிரைக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை. தான் விரும்பியவனின் உயிர்தான் அவளுக்கு அப்போது பெரிதாகத் தெரிந்து இருக்கிறது. பாருங்கள். யார் யாருக்கு எங்கே எங்கே எல்லாம் எழுதி வைத்து இருக்கிறது… பாருங்கள். 

அவளுடைய பிடிவாதம் அவளுடைய துணிகரமான முடிவு… உள்ளூர் சுதேசி மக்களையே அசர வைத்தது. கட்டினால் அவனைத் தான் கட்டுவேன் இல்லை என்றால் செத்துப் போவேன் என்று மிரட்டி இருக்கிறாள். உடனே அவளைப் பிடித்து ஒரு வீட்டுக்குள் அடைத்துப் போட்டு வைத்து இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் அங்கிருந்து தப்பித்து விட்டாள்.

எப்படி தப்பித்தாள் என்பது ஊர் பஞ்சாயத்திற்கே பெரிய ஓர் ஆச்சரியம். அவளை அடைத்து வைத்து இருந்த கதவை வெளியே இருந்து தான் திறக்க முடியும். உள்ளே இருந்து திறக்க முடியாது. அப்படி என்றால் யார் திறந்து விட்டு இருக்க முடியும். யாராக இருக்கும் என்று அப்போது அவர்களிடம் இருந்த ’இண்டர்போல் போலீஸ்’ ஆராய்ந்து பார்த்தது. கடைசியில் கண்டுபிடித்து விட்டார்கள். யார் தெரியுமா.
 

நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் தாயார் தான். ஏற்கனவே ஒரு முதியவருக்கு மூன்றாம் தாரமாக அந்தப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன. பெண்ணுக்கு வயது 16. முதியவருக்கு வயது 61. என்னே பொருத்தம். எண்களைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள்.

தாயாருக்கு அந்தக் கல்யாணம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் அடைக்கப் பட்டு இருந்த தன் மகளைத் திறந்து விட்டு கையில் கொஞ்சம் பொன் ஆபரணங்களையும் கொடுத்து ‘நீ ஆசைபட்டவன் கூடவே கண்காணாத இடத்திற்கு ஓடிப் போய் விடு’ என்று ஒரு படகையும் கொடுத்து இரவோடு இரவாக அனுப்பி இருக்கிறாள். அந்தப் பெண் படகில் போய்க் கொண்டு இருக்கும் போது வழிமறிக்கப் பட்டாள். மீண்டும் கைதியானாள்.

அப்புறம் அதற்குள் நமப மன்மத ராசாவுக்கும் விசயம் எட்டி விட்டது. அவனும் சும்மா இல்லை. தன் நண்பர்கள் இரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு தீவில் இறங்கி விட்டாரன். சுதேசி மக்களின் பெரிய ஆள்பலத்தை மூன்று பேர் எப்படி சமாளிக்க முடியும். அதற்குள் கப்பலில் இருந்த மற்றவர்களும் களம் இறங்கி விட்டார்கள். 
 

வேறு வழி இல்லாமல், பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து இருவருக்கும் நல்லபடியாகக் கல்யாணத்தைச் செய்து வைத்தார்கள். இதுவும் ஆழ்கடலில் நடந்த ஓர் அதிசயம்தான்.

அந்த மன்மத ராசாவின் பெயர் குயிந்தால். கடத்தல் கும்பலில் ஆகச் சிறியவன். அப்போது அவனுக்கு வயது 19. புத்தகங்களைத் திருடியதற்காக சிறைக்குப் போனவன். நல்ல முக இலட்சணம். ஓரளவுக்குப் படித்தவன். போதாதா. அதுவே அவனுக்கு பிளஸ் பாய்ண்ட். அவன் காதலித்தப் பெண்ணுக்கு வயது 16.
 

இருந்தாலும் கடைசியில் கணவன் மனைவியாக வாழ்ந்தார்களா... இவர்களின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடியது என்பதைப் பிறகு சொல்கிறேன். முதலில் ஒரு பீடிகை போட்டு விடுகிறேன். நிச்சயமாக உங்கள் மனசு ஈரமாகும். நிச்சயம் அழுது விடுவீர்கள். இது உண்மையாக நடந்த கதைங்க… தொடர்ந்து படியுங்கள்.

இந்தா சாமி எடுத்துக்கோ... ஆளை விடு

தாகித்தி தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களில் பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைவன். அந்தத் தலைவன் ஒவ்வோர் ஆண்டும் தன் பெயரை மாற்றிக் கொள்வான். அதில் ஒருவன் தான் தீனா எனும் தலைவன்.

அவனுடைய பழைய பெயர் ஊட்டு. கப்பலுக்கு வந்த பூர்வீகத் தலைவன் தீனா,  கூடவே தன் மனைவியையும் கூட்டி வந்தான். அவள் பெயர் இடாயா. கப்பலுக்கு வந்த தலைவன் அங்கிருந்த கத்தரிக்கோல் தான் தனக்கு வேண்டும் என்று ஒரேயடியாக அடம் பிடித்து இருக்கிறான்.

இருப்பதோ ஒன்றே ஒன்று. அதை வைத்து தான் எல்லாரும் தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டும். என்ன செய்வது. அவன் தொடர்ந்து அடம் பிடித்தான். இங்கே நம்ப பெண்கள் சமயங்களில் அடம் பிடித்துச் சிணுங்கிக் கொள்கிறார்களே... அந்த மாதிரி தான். மன்னிக்கவும் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 
 

ஆக, வேறு வழி இல்லாமல் ‘இந்தா சாமி எடுத்துக்கோ... ஆளை விடு’ என்று கத்தரிக்கோலைக் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னர் கப்பலிலேயே ஒரு பெரிய விருந்து.

தாகித்தி முறைப்படி ஆண்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பெண்கள் காத்திருக்க வேண்டுமாம். மிச்சம் மீதியைத் தான் பெண்கள் சாப்பிட வேண்டுமாம். அப்படி ஒரு வழக்கம் இருந்து இருக்கிறது. இருந்தாலும் இப்போது காலம் மாறி விட்டது. மிச்சம் மீதியைக் கணவன்மார்கள் தான் சாப்பிடுகிறார்களாம். கள்ளுக்கடை கந்தசாமி புலம்பிக் கொண்டு திரிகிறார். சந்தேகம் இருந்தால் அவரிடம் போய் கேட்கலாமே. சரி.

திடீரென்று ஒருநாள் கப்பல் சிப்பந்திகள் மூவர் காணாமல் போய் விட்டனர். தேடிப் பார்த்ததில் துப்பாக்கிகள் மருந்துகள் போன்றவற்றைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடிப் போனது தெரிய வந்தது.

மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லையாம். தாகித்தியின் இயற்கையான சொர்க்கத் தன்மை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இருந்தாலும் சில நாட்களில் பிடிபட்டனர்.  ஆளாளுக்கு வக்கனையாகப் பத்தொன்பது கசையடிகள். அதில் மன்மத ராசா குயிந்தாலும் ஒருவர்.

ஆனால் தண்டனையில் இருந்து தப்பித்தான். எப்படி. இங்கே தான் அவனுடைய பூர்வீக மனைவி வருகிறாள். என் புருசன் என்னைப் பார்க்க வந்தார் என்று ஒரே சத்தம் ஒரே ஆர்ப்பரிப்பு. ஊர் மக்கள் அடங்கிப் போயினர். இதன் தொடர்ச்சி நாளை இடம் பெறும்.

18 மே 2016

நடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1

ந்தக் கட்டுரையில் பாலினேசியப் பெண்கின் பத்ை அிகாகச் சேர்த்ுள்ளேன். அற்குக் காரம் அவர்கின் மையர் ி ிராவிடர் இனத்ைச் சேர்ந்தர்கள். அுவும் ஒரு வாறு. அைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விளக்காகச் சொல்கிறேன். 

கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகள். கரித்துக் கொட்டும் கிராமத்துச் சிலேடை. உங்களுக்கும் தெரியும். தெரியாவிட்டால் பரவாயில்லை. இனிமேல் தெரிந்து கொள்ளலாம். அந்தக் கதையில் வக்கிரப் பார்வை இருந்தாலும் சரி... இல்லை விவேகப் பார்வை இருந்தாலும் சரி... பிரச்சினை இல்லை. 
 

அந்தக் கரும்புக் கதையில் இந்தக் கதையையும் தூக்கிப் போட்டுச் சமாளித்துக் கொள்ளுங்கள். பரிதாபத்தின் கண்கள் பார்த்துக் கிரங்கிப் போன அதிபுத்திசாலிகளின் அரிச்சுவடிகள். 


நல்ல ஒரு வரலாற்று மர்மக் கதை. படித்த பிறகு உங்கள் மனசு சின்னதாய்க் கலகலக்கும். அப்படியே சன்னமாய்ச் சலசலக்கவும் செய்யும். பார்த்துக் கொள்ளுங்கள். சரிங்களா.

கன்னிப் பெண்களை வளைத்துப் பிடித்து

நீங்கள் எத்தனையோ விதமான வரலாற்றுக் கலகங்கள் புரட்சிகளைப் பற்றி படித்து இருப்பீர்கள். கேள்விப் பட்டும் இருப்பீர்கள். ஆனால், இப்போது படிக்கப் போகிற புரட்சி இருக்கிறதே... சும்மா சொல்லக் கூடாது.

ஒரு மாதிரியான புரட்சி. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. கன்னிப்பெண்களைக் கடத்திக் கொண்டு போன கதை. படியுங்கள்.
 

ஆழமான பசிபிக் மாக்கடலில் பிஜி தீவுக்கு அருகில் கப்பல் போய்க் கொண்டு இருக்கிறது. அந்தக் கப்பலில் வேலை செய்தவர்களில் ஒரு கும்பல். அந்தக் கும்பல் புரட்சி என்று சொல்லி கலகம் செய்து கப்பலைக் கைப்பற்றியது.

கப்பல் தலைவனையும் அந்தத் தலைவனின் எடுபிடிகளையும் பிடித்து ஒரு படகில் ஏற்றி 'செத்தாலும் சரி… பிழைத்தாலும் சரி. போய்த் தொலையுங்கள்' என்று அனாதையாக விரட்டி அடித்தது.
 

கப்பலைக் கைப்பற்றிய புரட்சிக் கும்பல் நேராக ஒரு தீவிற்குப் போனது. அங்கே இருந்த பூர்வீகக் கன்னிப் பெண்களை வளைத்துப் பிடிக்கிறது. அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு ஒரு கண்காணா தீவிற்குக் கடத்திக் கொண்டும் போகிறது.

அவர்கள் போனது மனித வாடையே இல்லாத மாசில்லாக் கன்னித்தீவு. அதிலே இந்தச் சின்னச் சின்னப் பெண்கள் ஓரங்கட்டப் படுகிறார்கள்.

கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகள்

புரட்சிக் கும்பலில் பலர் பல ஆண்டுகள் பெண்களைப் பார்க்காமல் கருகிப் போன சருகுகள். சொர்க்கத்தின் வாசல்படிகள் திறந்துவிடப் படுவதாக கும்பலின் தலைவன் சொல்கிறான். ஆளாளுக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்து எடுக்கிறார்கள். கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறார்கள். அப்புறம் ஏறி வந்த கப்பலை அப்படியே சுவடு தெரியாமல் எரித்தும் விடுகிறார்கள். ஒரு சகாப்தம் உருவாகி விட்டது.
 

மறுபடியும் சொல்கிறேன். கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகளின் கதை. நினைவு படுத்துவதில் தப்பு இல்லை. அந்தக் கதையில் இதையும் போட்டுச் சமாளித்துக் கொள்ளுங்கள். பரிதாபத்திற்குரிய சில புத்திசாலிகளின் அரிச்சுவடியில் அவதரித்த ஒரு வரலாற்றுக் கதை.

இதில் ஒரு முக்கிய விசயம். அதிலும் ஓர் அதி சுவராசியமான விசயம் இருக்கிறது. கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஆண்கள் எல்லோரும் ஆங்கிலேயர்கள். சிலர் கிரிமினல் குற்றவாளிகள். இங்கிலாந்தின் லண்டன் சிறைகளில் கொலை, கொள்ளை, கடத்தல் குற்றங்களுக்காகத் கம்பி எண்ணியவர்கள். அவர்களின் வயது 20 லிருந்து 50 வரையில் இருக்கும்.
 

கப்பல் பயணத்திற்காக அவர்களின் சிறைத் தணடனை பேரம் பேசப் பட்டது. ’நீங்கள் ஒழுங்காக நடந்து கொண்டால் உங்களுடைய தண்டனைகள் ரத்துச் செய்யப்படும்’ என்று சொல்லித் தான் அனுப்பப் பட்டார்கள். ஆனால் நடந்த கதையே வேறு. முதலுக்கே போசமாகிப் போனது. படியுங்கள்.

பதின்ம வயது சுதேசிப் பெண்கள்

கடத்தப்பட்ட பெண்கள் எல்லோரும் தாகித்தி (Tahiti) தீவில் வாழ்ந்த பாலினேசிய சுதேசிப் பெண்கள். அனைவரும் பதின்ம வயது பெண்கள். 13 லிருந்து 18 வயது வரை.

கடத்தல் கும்பலின் அந்தக் குடியேற்றம்தான் உலக வரலாற்றில் பிட்காய்னர்கள் (Pitcairners) எனும் ஒரு புதிய சந்ததியையே உருவாக்கிக் கொடுத்தது. வெகு நாட்களுக்கு அந்தப் புதிய சகாப்தத்தைப் பற்றி வெளி உலகத்தில் யாருக்கும் தெரியாமலேயே இருந்தது.
 

கடத்தல் நிகழ்ச்சிக்குப் பின்னர் அங்கே அந்தத் தீவில் பல வெட்டுக்குத்துகள். பல கொலைகள். அதன் பிறகுதான் அங்கே ஒரு புதிய சமுதாயம் தோன்றியது. கப்பல் புரட்சியில் தோன்றிய ஒரு சமுதாயம்.

புரட்சி என்ற சொல் இன்றைய காலத்தில் ஓர் இறுக்கத்தைக் கொடுக்கிறது. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அந்த வாசகம் பல இடங்களில் புரையோடிக் கிடப்பதையும் பார்க்க முடிகிறது.

எல்லாவற்றுக்கும் மணி கட்டும் தாதா புரட்சி

பிரெஞ்சுப் புரட்சி, கலாசாரப் புரட்சி (Cultural Revolution) எனும் சீனக் கலாசாரப் புரட்சி, போல்ஸ்விக் புரட்சி (Bolshevik Revolution) எனும் ரஷ்ய அக்டோபர் புரட்சி, அதிபர் மார்க்கோசிற்கு எதிரான புரட்சி, வங்காளப் புரட்சி, வெற்றிப் புரட்சி (Glorious Revolution) எனும் ஆங்கிலேயப் புரட்சி; அண்மையில் நடந்த புத்த பிக்குகளின் பர்மியப் புரட்சி, பெனாசிர் புட்டோ மறைவதற்கு முன்னால் பாகிஸ்தானில் நடந்த இராணுவப் புரட்சி என்று ஏகப்பட்ட புரட்சித் தழும்புகள்.
 

புரட்சி என்ற சொல்லுக்கு பூசை புனர்ஸ்காரம் செய்தவர்கள் கிரேக்கர்கள். அந்த வகையில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்கள் மூத்த முன்னோடிகள். இந்தப் புரட்சிகள் எல்லாவற்றுக்குமே மணி கட்டும் தாதா புரட்சியைப் பற்றியது தான் நம்முடைய இந்தக் கட்டுரை.

மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்று ஜமாய்க்கா. 1700 ஆம் ஆண்டுகளில் கறுப்பர்கள் நிறைய பேர் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்தனர். முதலாளிகள் எல்லாம் வெள்ளைக்காரர்கள். இந்த அடிமைகளுக்குச் சாப்பாடு போடுவது என்பது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது.

கடுமையான உடல் உழைப்பு. அதனால், அவர்கள் ரொம்பவும் சாப்பிட்டார்கள். இந்தச் சாப்பாட்டுத் தகராற்றில் பல அடிமைகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். பதிலுக்கு முதலாளிகளில் பலரும் செத்துப் போய் இருக்கிறார்கள். 
 

அடிமைகளுக்கு எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் கட்டுபடி ஆகவில்லை. கொடுக்கக் கொடுக்க இறங்கிக் கொண்டே இருந்தது. எல்லாரும் சாப்பாட்டு ராமன்களாக இருக்கிறார்களே என்று பயந்து போய் மாற்றுவழி தேடினார்கள்.

ஈரமான ஈரப்பலாக்காய் உபதேசம்

ஒரு சின்னச் செருகல். மாடு மாதிரி ஒருவன் உழைக்க வேண்டும். தசைகளைப் பிழிந்து... வியர்வையைக் கடலாக மாற்ற வேண்டும். இரத்தம் ஆவியாக மாற வேண்டும். எலும்புகளின் சுண்ணாம்பு எரிந்து போக வேண்டும். உடல் ஊன்கள் செல்லரித்துப் போக வேண்டும். ஆனால் சாப்பாடு மட்டும் கொஞ்சம் கூடுதலாகக் கேட்கக் கூடாதாம். என்னங்க இது. ரொம்ப அநியாயம் இல்ல.
 

பணமா கேட்டார்கள். சாப்பாடு தானே கேட்டார்கள். கொடுத்தால் என்னவாம். குறைஞ்சா போவுது. கொத்தடிமை எனும் சஞ்சிக் கூலிகளாக மலாயாவுக்கு வந்த நம்முடைய தாத்தா பாட்டிகளும் இப்படித் தானே கஷ்டப் பட்டு இருக்க வேண்டும். நினைக்கையில் மனம் வலிக்கிறது.

நம்ப கதைக்கு வருவோம். அந்தச் சமயத்தில் ஜேம்ஸ் குக் எனும் கடலோடி இருந்தார். இவர் உலகம் சுற்றி வந்த முதல் கடலோடி. கடல் பயணங்களின் முன்னோடி. பசிபிக் தீவுகளில் ஈரப் பலாக்காய் (Bread Fruit) இருப்பதாகச் சொன்னார். அந்தக் காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்று பரிந்துரை செய்தார். 
 

இந்த ஈரப் பலாக்காய் நம் மலேசியாவிலும் இருக்கிறது. மலேசிய மொழியில் சுக்குன் என்று அழைக்கிறார்கள். தெரியும்தானே. துண்டு துண்டுகளாக வெட்டி கோதுமை மாவில் போட்டு பலகாரம் செய்வார்கள். இதன் அறிவியல் பெயர் Artocarpus Communis.

இந்த ஈரப் பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், வில்லியம் பிளை (William Bligh) என்பவரைப் பசிபிக் கடலுக்கு அனுப்பியது.

நவரச நாடகத்தின் சூப்பர் ஸ்டார்

இந்த ஆய்வுப் பயணத்திற்கு பவுண்டி (Bounty) எனும் பாய்மரக் கப்பல் பிரத்தியேகமாகக் கட்டப் பட்டது. 215 டன் எடை கொண்ட கப்பல். 1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கப்பல் பயணமானது.

பசிபிக் மாக்கடலில் இருக்கும் தாகித்தி (Tahiti) தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழுவிற்கு வில்லியம் பிளை என்பவர் தலைமை வகித்தார்.
 

துணைத் தளபதியாக பிளெட்சர் கிரிஸ்டியன் என்பவர் இருந்தார். இந்தப் பிளெட்சர் கிரிஸ்டியன்தான் நடுக்கடலில் நடந்த நவரச நாடகத்திற்கு நல்ல ஒரு சூப்பர் ஸ்டார். சின்னச் சின்னக் கன்னியர்களைக் கடத்திக் கொண்டு போனதற்கும் காரணம். பக்கா கில்லாடி. அவரை மன்மத ராசா என்று சொல்லாம். அப்புறம் கதை ‘சப்’ என்று போய் விடும்.

இருந்தாலும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அண்மைய காலத்து மன்மத ராசா பட்டியலில் இவருக்கு தாராளமாக முதலிடம் கொடுக்கலாம். ’நான் அவனில்லை’ படத்தில் வரும் மன்மத ராசா இருக்கிறாரே, அவர் எல்லாம் இந்த ராசாவிடம் பிச்சை எடுக்க வேண்டும். பிளெட்சர் கிரிஸ்டியன் பக்கா கில்லாடி இல்லீங்க பலே மன்மதக் கில்லாடி.
 

இந்தக் கப்பல் கலகத்தைப் பற்றி இரண்டு திரைப் படங்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒன்று மியூட்டனி ஆன் தி பவுண்டி (Mutiny on the Bounty). 1962-இல் தயாரிக்கப் பட்டது. டிரெவர் ஹாவர்ட் நடித்து இருந்தார். இவர்தான் 1982-இல் வெளியான காந்தி படத்திலும் நடித்து இருந்தார். அதையும் இங்கே நினைவுப் படுத்தி விடுகிறேன்.

கிராமத்துக்காரன் மிட்டாய் கடையை முறைத்துப் பார்த்த கதை

கடல் பயணம் 306 நாட்கள் பிடித்தது. இங்கிலாந்தில் புறப்பட்டு தென் அமெரிக்கா வந்தனர். அப்படியே மேற்குத் திசையில் பசிபிக் மாக்கடல் வழியாகப் போகத் திட்டம். இருந்தாலும் புயல் காற்று பலமாக வீசியதால் பயணத்தைத் திசை திருப்பினர்.

தென் ஆப்ரிக்கா வந்து நன்னம்பிக்கை முனை வழியாகத் திரும்பி... அப்படியே இந்து மாக்கடலுக்குள் சென்றனர். பின்னர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வழியாகத் தாகித்தி தீவை அடைந்தனர்.

பயணம் செய்த தூரம் 27,086 மைல்கள். ஒரு நாளைக்கு 108 மைல்கள். பயணம் செய்த வழியில் அவர்கள் பார்த்த தீவுகளில் ஏறக்குறைய 50 நாட்கள் தங்கி இளைப்பாறி ஓய்வு எடுத்துக் கொண்டு வந்து இருக்கின்றனர்.
 

தாகித்தி தீவுக்குச் சற்றுத் தொலைவில் கப்பல் நங்கூரமிட்டது. கிராமத்துக்காரன் மிட்டாய் கடையை முறைத்துப் பார்த்த கதை தெரியும் தானே. அந்த மாதிரி உள்ளூர் சுதேசிகள் சின்னச் சின்னப் படகுகளில் வந்து கப்பலைச் சூழ்ந்து கொண்டனர்.

கடலில் வந்தவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு

அப்புறம் பவுண்டி கப்பலில் வந்தவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு. கேப்டன் ஜேம்ஸ் குக்கைப் பற்றி சுதேசி மக்கள் கேட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே, ஜேம்ஸ் குக் அந்தத் தீவிற்கு வந்து இருக்கிறார். இருந்தாலும் அவர் இறந்துவிட்ட செய்தி அவர்களுக்குத் தெரியவில்லை.

தெரிந்து இருக்க நியாயமும் இல்லை. பேஸ்புக், வாட்ஸப், டிவிட்டர், கணினி, கைப்பேசி எதுவுமே இல்லாத காலம். அதையும் மறந்து விடாதீர்கள். இருந்து இருந்தால்... வேண்டாங்க. அதைப் பற்றி பேச வேண்டாம். வசை பாட ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

அதற்கு முன்... சில ஆண்டுகளுக்கு முன்னால் கேப்டன் ஜேம்ஸ் குக், ஹவாய் தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடியின மக்களால் கொல்லப் பட்டார். அந்தச் செய்தி பாதுகாப்பு கருதி மறைக்கப் பட்டது என்பது வேறு விசயம். அதன் பின்னர், பூர்வீகக் குடியினர் அதாவது தாகித்தி மக்கள் கப்பலுக்கு வருவதும் போவதுமாக இருந்து இருக்கின்றனர்.

பரிசுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் சந்தோசமாய் இருந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை.

'நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்க... போங்க... வாங்க... பழகுங்க... உருளுங்க... புரளுங்க... ஆனா... தயவு செஞ்சு… தயவு செஞ்சு பெண்களின் பக்கம் மட்டும் தலை வச்சு படுத்துடாதீங்க பிளீஸ். அப்புறம் கொலையில்தான் போய் முடியும்...' என்று அவர்களுக்குப் படித்துப் படித்துச் சொன்னார்கள். கேட்டார்களா. எல்லோரும் கேட்டார்கள். பதிவுசாகப் பழகினார்கள். பெண்களைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போனார்கள்.

ஆனால் ஒரு மனமத ராசா மட்டும் கேட்கவில்லை. அந்த ராசாவுக்கு 18 வயசு. அங்கே இருந்த 16 வயசு கடைக்கண் கன்னிப் பெண்ணைத் தன் கம்பீரப் பார்வையால் வளைத்துப் போட்டது. இருவரும் நெருக்கமானார்கள். 

ஆக... நம்ப மன்மத ராசா அவளைப் பார்த்து இளிக்க... இரண்டு காந்தப் புலன்களும் ஒன்றை ஒன்று இழுக்க...  கண்ணும் கண்ணும் கலக்க... அவளும் கிட்ட வர... ராசாவும் நெருங்கிப் போக... அவளுடைய கையைப் பிடிக்க... தடவிக் கொடுக்க... பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள... அவளும் கொஞ்சலாய் சிணுங்க... அதைப் பெண்ணின் சொந்தக்காரன் பார்க்க... விசயத்தைப் போய் வெளியே சொல்ல... அப்புறம் என்ன...

மிச்சத்தை நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம். (தொடரும்)

17 மே 2016

இசைப்பிரியா - 2


[பாகம்: 2]


இசைப்பிரியா எனும் ஒரு மௌனராகத்தின் கதை தொடர்கிறது. நேற்றைய கட்டுரையில் உள்ள தகவல்களைச் சற்றே மீள்பார்வை செய்வோம். இசைப்பிரியாவிற்குச் சிறுவயதில் இருந்தே அமைதியான குணம். 

ஆனால் கொஞ்சம் பயந்த சுபாவம். ஆடல் பாடல்களில் கூடுதலான ஆர்வம். வயதுக்கு மீறிய தயாள குணம். துன்பப் படுபவர்களைக் கண்டால் ஓடிச் சென்று உதவிகள் செய்யும் இரக்கச் சிந்தனை. 




இசைப்பிரியா 1981 மே மாதம் 2-ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவு மானிப்பாயில் பிறந்தவர். குடும்பத்தில் நான்காவது மகள். சோபனா என்று பெயர். ஐந்து ஆண்டுகள் மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் தொடக்கக் கல்வி. பின்னர் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேல்படிப்பு.

ஈழத்து மக்களுக்கு நடந்த அநீதிகள்

அவருடைய இதயத்தில் லேசான சின்ன தூவரம். ஆனால், பெரிய பிரச்சினை வராது என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கின்றனர். போர்ச் சூழ்நிலை காரணமாக, 1996-இல் இடம் பெயர்ந்து மல்லாவி மத்தியக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். கல்லூரிப் படிப்பிற்கு பாதிலேயே முற்றுப்புள்ளி. 

1995-ஆம் ஆண்டு மூன்றாம் கட்டப் போர். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் வன்னியை நோக்கி ஓடினார்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று. 



வன்னி என்பது இலங்கையின் வட பகுதியில் இருக்கும் ஒரு பெரிய நிலப்பரப்பு. தமிழர்களின் பாரம்பரிய தாயக மண். அதன் பரப்பளவு 7,650 சதுரக் கிலோ மீட்டர். மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கியது. அதில் ஆறு நாடாளுமன்ற இடங்கள் உள்ளன.
 

ஈழத்து மக்களுக்கு நடந்து வரும் அநீதிகளைக் கண்டு, அவர்களுக்காகப் போராட வேண்டும் என்கிற ஓர் உந்துதல், இசைப்பிரியாவிற்கும் ஏற்பட்டது. அந்தத் தாக்கத்தில் 1998-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார்.




பலவீனமான இதயம் இருந்ததால் அவரைப் புலிகளின் போர்ப் படையில் சேர்க்கவில்லை. ஊடகத் துறையில் இணைத்துக் கொண்டனர். ஈழப் போராட்டத்தில் தன்னை ஓர் உன்னதமான ஊடகப் போராளியாக்கிக் கொண்டார்.

ஈழத்துப் பெண்மையில் ஒட்டிக் கொண்ட நளினம்

ஈழத்து அழகி என்று சொல்கிற வகையில் ஈழத்துப் பெண்களின் அழகும் பெண்மையும் ஒட்டிக் கொண்டு நளினம் பேசின. மென்மையும் இரக்கமும் குளிர்ந்த பார்வையும் மேலும் அழகு சேர்த்தன. தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் செய்திகளை வாசித்து வந்தார். நல்ல அழுத்தமான குரல். 




தமிழீழ விடுதலை அமைப்பின் ஊடகத் துறையை நிதர்சனப் பிரிவு என்று அழைப்பார்கள். அதில் ஒன்று ஒளிவீச்சு தொகுப்பு. மலேசியத் தொலைக்காட்சியில் வசந்தம் நிகழ்ச்சி ஒளியேறுகிறதே, அந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி தான். ஆனால், நாட்டுச் சூழ்நிலைகளில் வேறுபட்டது. அந்த நிகழ்ச்சியை இசைப்பிரியாதான் தமிழீழத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இசைப்பிரியா என்கிற பெயரைச் சொன்னதும் ‘துயிலறைக் காவியம்’ எனும் நிகழ்ச்சி நினைவிற்கும் வருகிறது. இசைப்பிரியா குரல் கொடுத்து ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி. மிக இயல்பான எதார்த்தமான நிகழ்ச்சி. மாவீரர்களைப் பற்றியது. ஈழக் கனவுக்காகப் போராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பதிவாகவும் இடம் பெற்று வந்தது.

வீரச்சாவு அடைந்த ஒருவரைப் பற்றி அவருடைய பெற்றோர், நண்பர்கள், சக போராளிகள், தளபதிகள், தலைவர் என அனைவரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வார்கள். 



ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் இசைப்பிரியாவின் குரல் தனித் தன்மையுடன் ஒலிக்கும். இசைப்பிரியாற்குப் பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்த நிகழ்ச்சி என்றுகூட சொல்லலாம்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் அவர் பல அரிய சேவைகளைச் செய்து இருக்கிறார். வெறும் குரல் கொடுப்பது மட்டும் இல்லை. அதையும் தாண்டிய நிலையில், காட்சிகளைத் தேடிப் பெறுவது, கேமராக்களை கையாள்வது என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து இருக்கிறார். அவருடைய வேலைகள் அறிவுபூர்வமாகவும் துல்லிதமாகவும் சுத்தமாகவும் இருந்தன.

‘சாலை வழியே’ நேர்காணல் நிகழ்ச்சி

இவரிடம் நல்ல நடனத் திறமையும் இருந்து இருக்கிறது. கலைஞர்களைச் சந்தித்து ‘சாலை வழியே’ என்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியையும் படைத்து இருக்கிறார். அவர் ‘இராஜகுமாரியின் கனவு’ என்ற ஒரு குறும்படத்தையும் தயாரித்து ஈழத்து மக்களுக்கு வழங்கி இருக்கிறார். 





இசைப்பிரியா, பெரும்பாலான ஈழத்துப் பெண்களின் முகபாவத்தைக் கொண்டவர். ஆகவே, அவருடைய நடிப்புக்களிலும் அந்த ஈழத்துத் தன்மைகள் நன்றாகவே தெரிந்தன. அந்த வகையில் இசைப்பிரியா நடித்த படங்களில் ‘ஈரத்தி’ என்ற முழுநீளப் படமும் ‘வேலி’ என்ற குறும்படமும் மிகவும் புகழ் பெற்றவையாகும்.

ஈரத்தி படத்தில் இசைப்பிரியா முழுக்க முழுக்க ஓர் ஈழத்துச் சாமான்ய பெண்ணாகவே வலம் வருகிறார். ஈழத்துப் பெண்களுக்கு இருக்கிற இயல்பான குணங்களை மிக எதார்த்தமாகப் பிரதிபலிப்புச் செய்கிறார். அந்தப் படத்தில் ஒரு பெண் போராளி இவருடைய சகோதரியாக வருகிறார். அவருடன் நடைபெறும் உரையாடல்கள் என்றென்றும் மனதை விட்டு நீங்காதவை. 





அந்தப் படத்தை இயக்கியது, திரைக்கதை எழுதியது, படப்பிடிப்புச் செய்தது, படத் தொகுப்பு செய்தது எல்லாமே பெண் போராளிகள்தான். அதோடு இசைப்பிரியா போன்றவர்களின் நடிப்பும் அந்தப் படத்திற்கு வலிமை சேர்த்தன. அதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இருந்தாலும், அந்தப் படத்தைத் தயாரித்த, அந்தப் பெண் போராளிகள் இப்போது உயிருடன் இருப்பார்களா என்பது தெரியவில்லை. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இருந்தாலும், அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பது மனதுக்குள் தடுமாறும் ஒரு பெரிய வேண்டுதல்.





இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படமே ஈழத்து மக்களை அதிகமாகப் பாதித்த படம் ஆகும். அந்தப் படத்தில் லட்சுமி என்கிற பாத்திரம் வருகிறது. அந்தப் பாத்திரம் கொண்டு வருகிற பிரக்ஞையும் கதையும் ஈழத்தின் நிகழ்காலத் துயரத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

லட்சுமியாக இசைப்பிரியா நடித்து இருந்தார். அந்தப் படத்தை நானும் பார்த்து இருக்கிறேன். இருபது நிமிட நேர குறும்படம். சின்ன வயது இசைப்பிரியா சிறப்பாகவே நடித்து இருக்கிறார்.

http://www.youtube.com/watch?v=cQoUygI49qo

எனும் முகவரியில் நீங்களும் போய்ப் பார்க்கலாம். அல்லது யூடியூப்பில் ’வேலி இசைப்பிரியா’ என்று தட்டச்சு செய்யுங்கள். படத்தைப் பார்த்த பிறகு, இப்படி ஒரு நல்ல சிறந்த நடிகையை இழந்து விட்டோமே என்று என் மனம் நீண்ட நேரம் கனத்துப் போனது.

தாய்மடி உறவும் தகப்பன்வழி பாசமும்

வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில், இசைப்பிரியா சரண் அடைந்த நிகழ்ச்சி இருக்கிறதே, அதைப் பார்ப்பவர்களின் மனங்கள் நிச்சயமாகப் பதைபதைக்கும். நானும் பார்த்தேன். http://www.youtube.com/watch?v=kjgX9FxR20g எனும் இணைய முகவரியில் இருக்கிறது. அவர் அசிங்கப் படுத்தப் படுவதைப் படத்தில் காட்டவில்லை. ஆனால், அவருடைய நிர்வாண கோலம் ஒரு கட்டத்தில் காட்டப் படுகிறது. 





அந்த வீடியோ படங்கள் கிடைத்த போது, தமிழகத் தொலைக்காட்சிகள், கொச்சையாகத் திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டி இருக்கின்றன. பூவினும் மென்மையான ஒரு பெண்மையின் காட்சிகளைக் கண்களுக்கு விருந்து அளிக்கும் காட்சிகளாக ஆக்குவது பெரிய பாவம் இல்லையா. அவளை நேசிக்கின்ற எந்த ஒரு தாய்மடி உறவும் தகப்பன்வழி பாசமும் விரும்பவே விரும்பாது. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் அல்ல. உயிருடன் சிறப்பாக நன்றாக வாழ்ந்து, நம் தமிழ் சமூகத்துக்காக உயிர் நீத்த ஒரு தமிழ்ப் பெண். நம் குடும்பத்தில் வாழ்ந்த ஒருத்தியாக மறைந்து போனாள்.





ஆடை இல்லாத பெண்களுடைய படங்களை அல்லது காட்சிகளை அப்படியே செய்திப் படமாகப் போடுவதை எல்லா ஊடகங்களும் தவிர்க்க வேண்டும். இசைப்பிரியாவை மட்டும் நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்த பெண்களுக்கும் சேர்த்துச் சொல்றேன்.

கொடுமையிலும் கொடுமையான வன்முறைக் கொடுமைகள்

இருந்தாலும், இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நடந்து இருக்கிறதே என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே நம்முடைய வேண்டுதல். நம்முடைய இலக்கு. அதனால்தான் அந்தப் படக் காட்சிகள் எங்கே இருக்கின்றன எனும் இடங்களைச் சொல்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் மனநிலையைப் பொருத்தது. 





அவரைக் கைது செய்து கொண்டு போகும் போது நன்றாகத் தான் கொண்டு போய் இருக்கிறார்கள். இலங்கை ராணுவம் மனித நேயத்துடன் நடந்து கொண்டதாகக் காட்டப் படுகிறது. ஆனால், அதன் பிறகு அவருடைய உயிரற்ற உடல் காட்டப் படுகிறது. அவரை இராணுவம் மிகவும் கொடுமையாகச் சித்திரவதை செய்து இருக்கிறது. அவரை மட்டும் அல்ல. கூட இருந்த மற்ற பெண்கள் மீதும் வன்முறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கொடுமையிலும் கொடுமையான பாலியல் கொடுமைகள்.

ஒரு தாயாக அவர் கருவுற்று இருந்த நேரம். ஒரு குழந்தையைச் சுமந்து நின்ற நேரம். அந்தச் சமயத்தில்தான் அவர் இப்படி வன்முறையால் சிதைத்து அநியாயமாகக் கொல்லப் பட்டு இருக்கிறார். இசைப்பிரியாவுடன் அவருடைய வயிற்றில் இருந்த குழந்தையையும் சேர்த்து அந்தப் பாவிகள் கொன்று இருக்கிறார்கள்.

இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படம்

2009ம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி, சிங்கள இராணுவத்திடம் இசைப்பிரியா சரண் அடைந்தார். அப்போதைய புகைப்படங்களைப் பாருங்கள். அந்தப் படங்கள் இணையத்தில் கிடைக்கும். அதன் முகவரி: http://www.tamilkingdom.org/2014/05/blog-post_73.html. இசைப்பிரியாவின் மேலாடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு படம் உள்ளது.  இன்னொரு படத்தில், மழை தண்ணீர் தேங்கி நிற்கும் இடம். நீண்ட நேரம் உடுப்பு இல்லாமல் நிர்வாணமாக உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்.





பல்லாயிரம் ஈழத்துப் பெண்களுக்கு நடந்த கொடுமை இசைப்பிரியாவுக்கும் நடத்து இருக்கிறது.

அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மறுபடியும் வரவேண்டி இருக்கிறது. அவரின் மற்றொரு நிகழ்ச்சி ‘துயிலறைக் காவியம்’. போராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவாக இடம் பெற்று வந்தது. அந்த நிகழ்ச்சியில் இசைப்பிரியாவின் குரல் தனித்துவமாக ஒலித்தது. அவருக்குப் பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது.

 
‘இராஜகுமாரியின் கனவு’

சாலைகளில் நடந்து போகும் ஆண்கள், சந்திச் சதுக்கங்களில் கூடி நிற்கும் பெண்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள். இவர்களைச் சந்தித்து ‘சாலை வழியே’ என்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியையும் படைத்து வந்தார். கணி தொழில்நுட்பத்தில் ஓரளவுக்குத் தேர்ச்சி பெற்ற இவர், ‘இராஜகுமாரியின் கனவு’ என்ற ஒரு குறும்படத்தைச் சொந்தமாகவே தயாரித்து இருக்கிறார். அதில் கணினி வரைகலை நவீனங்கள் சேர்க்கப் பட்டன. தவிர, ‘ஈரத்தி’ என்ற முழுநீளப் படத்திலும் ‘வேலி’ என்ற ஒரு குறும் படத்திலும் நடித்து இருக்கிறார். 




இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படமே ஈழத்து மக்களை அதிகமாகப் பாதித்த படம். லட்சுமி என்கிற பாத்திரம் கொண்டு வருகிற பிரக்ஞையும் கதையும் ஈழத்தின் நிகழ்காலத் துயரத்தை கண்முன் காட்டுகின்றன. ஈழ மக்களின் செல்வாக்கு, புகழ்ப் பெறுமதிகளைப் பெற்ற ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக இசைப்பிரியா பவனி வந்தவர்.

இசைப்பிரியா இறப்பின் பின்னணியில் இருந்தவர்கள்

அதற்கு காரணம் இருக்கிறது. இசைப்பிரியாவின் முகம், குரல், நடிப்பு போன்றவை தனித்து நின்றன. ஆக, அவரை உலகத் தமிழ் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்து இருந்தார்கள். இருந்தாலும் இசைப்பிரியாவைக் கைது செய்த போது சிங்கள ராணுவத்தில் பலருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. 



ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இசைப்பிரியா நல்ல ஓர் இலட்சணமான அழகான பெண் என்று மட்டும் அந்த வெறியர்களுக்கு அப்போது தெரிந்து இருக்கிறது. அதற்கு வேறு காரணமும் இருந்தது.

அடுத்து, இசைப்பிரியாவைச் சுட்டுக் கொல்வதற்குப் பின்னணியாக இருந்தவர்கள் யார் தெரியுமா. சொன்னால் நம்ப மாட்டீர்கள். நம் தமிழர்கள்தான். அவர்கள் தான் கருணாவின் ஆட்கள். இதைப் பற்றிய தகவல்களை நாளைய கட்டுரையில் பார்ப்போம். (தொடரும்)  





ஈழத் தொலைக்காட்சியிலே – உன்
இனிமுகம் பார்த்து வந்தோம்..!

தேன் சிந்ததும் நின் குரலால் – நீ
தேவதையும் ஆகி நின்றாய்..!

தாய் மண்ணின் துயர் துடைக்க – நீ
துப்பாக்கியினை ஏந்தி வந்தாய்..!

தாய் நாடே போற்றுகின்ற – நீ
தவத் தாயும் ஆகி விட்டாய்..!


இக்கட்டுரையின் இதர பகுதிகள்

இசைப்பிரியா- 1


இசைப்பிரியா - 1


[பாகம்: 1]


சத்தியம் செத்துச் செதுக்கிய சமாதியில், ஒரு பெண்மை மௌனராகம் பாடுகின்றது. அங்கே அழகின் ஆராதனைகள் சமைந்து போய் சிலிர்க்கின்றன. அந்தச் சிலிர்ப்புகளில், கிழிந்து போன மனித உணர்வுகளின் முகாரி ராகங்களும் சன்னமாய்க் கேட்கின்றன.

அதையும் தாண்டிய நிலையில், அங்கே ஆழ்கடலைக் கடந்து போகும் மரண ஓலங்கள். எண்திசைகளைத் தாண்டிச் சிதறும் கண்ணீர்க் கதறல்கள். யாழிய காடுகளை நடுங்க வைக்கும் வன்முறை ஓலங்கள்.


ராகம் தாளம் சுருதி சந்தம் எதுவுமே தேவை இல்லாமல், நச்சென்று பதிந்து போகும் அவலங்களின் ஆர்ப்பரிப்புகள். அதைப் பார்த்து நெஞ்சம் வலிக்கின்றது. உடலும் கொதிக்கின்றது.

அந்த அலங்கோலத்தில், இசைப்பிரியா என்கிற ஒரு ஜீவனை நினைத்துப் பார்க்கின்றேன். அந்த நினைப்பில், மனதில் தேங்கி நிற்பதை எல்லாம் கொட்டித் தீர்க்கின்றேன். சிங்களச் சகடைகளால் நாசம் செய்யப் பட்ட ஒரு பெண்மையின் சரிதை வருகிறது. படியுங்கள்.

அவளுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். அவளுடன் பயணித்த ஆயிரம் ஆயிரம் ஆன்மாக்களும் ஒன்று சேரட்டும். வேண்டிக் கொள்வோம்.

எதிர்காலச் சொப்பனங்களைச் சுமந்து கடையினமாகிப் போனவள்

உலகத் தமிழர்கள் பறிகொடுத்த அந்தப் பெண்ணின் பெயர் இசைப்பிரியா. அழுது புரண்டாலும் இனி அவள் திரும்பி வர மாட்டாள். சொர்க்கத்தின் வரப்பு வாசல்களைத் தாண்டி மீளவும் மாட்டாள். அவளைப் பற்றிய சின்னச் சுருக்கம்.


இசைப்பிரியா என்கிற அந்தப் பெண்ண், விடுதலைப் புலிகளின் வியூகங்களை, தொலைக்காட்சியில் செய்திகளாய் வாசித்துக் காட்டியவர். ஈழத் தமிழர்களின் உரிமைகளை, கவிதைகளாய் வார்த்துக் காட்டியவர். புலம்பெயர் மக்களின் போர்க் கொடுமைகளை வரைந்து காட்டியவர்.

தமிழர்களின் துயரங்களைத் துகில் உரித்துக் காட்டிய அந்தச் சின்னப் பெண்ணை, ஒரு காவடிச் சிந்து என்றுகூட சொல்லலாம். என்ன செய்வது. எதிர்காலச் சொப்பனங்களைச் சுமந்து கொண்டே கடையினமாகிப் போனது அந்த ஊடகச் சிந்து.

நிர்வாணமாய் நிற்க நேர்ந்த அவமானம்

தமிழீழ இனவழிப்புக்கு ஓர் ஆதாரமாக இசைப்பிரியாவின் காணொளி இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி, இசைப்பிரியா உயிருடன் நடமாடும் காட்சிகளை ஒளிபரப்பு செய்து உள்ளது. மனதைக் கனக்கச் செய்யும் காட்சிகள். அந்தக் காணொளியை யூடியூப்பில் உள்ளது.
https://www.youtube.com/watch?v=kjgX9FxR20g எனும் இணைய முகவரியில் போய்ப் பார்க்கலாம்.


சேறு நிரம்பிய ஒரு வயல் வெளி. அதில் வீழ்ந்து கிடக்கிறார் இசைப்பிரியா. அவரைப் பத்துப் பன்னிரண்டு சிங்கள இராணுவத்தினர் வளைத்துப் பிடிக்கின்றனர். அவரைப் பிரபாகரனின் மகள் என்றுதான் முதலில் அந்த வெறியர்கள் நினைத்தார்கள்.

போர்த்திக் கொள்ள ஒரு வெள்ளைத் துண்டைக் கொடுக்கிறார்கள். குடிக்கக் கொஞ்சம் தண்ணீரையும் கொடுக்கிறார்கள். மனித நேயத்துடன் ஆசுவாசப் படுத்துகிறார்கள். இசைப்பிரியா தப்பிக்க முயற்சி செய்யவில்லை. செய்தாலும் நடக்காது.

இசைப்பிரியாவின் குரலில் சொல்ல முடியாத சோகம்

''பிரபாகரனின் மகள்'' என்று ஓர் இராணுவ வீரன் சொல்கிறான். ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா. வெறும் மூன்றே மூன்று வார்த்தைகள்தான். அதைச் சொல்லும் போது இசைப்பிரியாவின் குரலில் சொல்ல முடியாத சோகம். பார்ப்பவரின் மனதை கவ்விக் கொள்கின்றன.


ஒரு மாபெரும் வீரப் போராட்டம் சரிந்து போவதையும்... எதிரிகளின் முன்னே நிர்வாணமாய் நிற்க வேண்டிய அவமானத்தையும்... கூட்டு வன்முறைக் குழுவிடம் சிக்கிக் கொண்ட ஓர் அச்சத்தையும்... துடிக்கும் உயிரின் கடைசி நேர பரிதவிப்பையும்... அந்தக் குரலில் உணர முடிகின்றது. அங்கே இசைப்பிரியாவின் குரல் மட்டும் கேட்கவில்லை. பின்னணியில் குண்டுச் சத்தங்களும் இடைவிடாமல் கேட்கின்றன.

அசிங்கமான ஈரத்தில் நனைந்து மறைந்த அழகு ஜீவன்

கால்களை மடக்கிச் சகதிக்குள் அவள் உட்கார்ந்து இருக்கும் அந்த அனாதையக் கோலம்; மேலாடை இல்லாத அவளைத் தொட்டு, சிங்களச் சாக்கடைகள் தூக்கும் அந்த அதீதக் கோலம்; அச்சத்தாலும் வெட்கத்தாலும் அவள் துவண்டு துடிக்கும் அந்தப் பாவமான கோலம்; அவளை இழுத்துச் செல்லும் போது, அவளுடைய கால்கள் பின்னிப் பின்னித் தடுமாறும் கோலம்; அதையும் தாண்டி, ”ஐயோ..அது நானில்லை..!” எனும் உயிரைப் பிழியும் அந்த அவல ஓலம்… வேண்டாங்க. மனசு ரொம்பவும் வலிக்கிறது.


தான் ஓர் ஊடகவியலாளர் என்று இசைப்பிரியா சொல்லிப் பார்த்தார். எடுபடவில்லை. அப்புறம் நடந்தது வேறு கதை. முதலை வாயில் தப்பித்து சிங்கத்தின் வாயில் மாட்டிக் கொண்ட கதையாகிப் போனது. கடைசியில் காமக் கிறுக்கன்களின் அசிங்கமான ஈரத்தில் நனைந்து மறைந்தும் போனார்.

அவர் பிரபாகரனின் மகள் அல்ல என்று தெரிந்த பின்னர், சிதைத்துச் சீரழிக்கப் பட்டார். யாழ் மண்ணில் ஒரு வரலாற்றுக் கொடுமை அங்கே அரங்கேற்றம் கண்டது. மண்ணுடன் மண்ணாகிப் போன ஓர் அழகு ஜீவனின் கதையும் தொடர்கிறது. மனித நேயம் வற்றிப் போன ஒரு கதை. படியுங்கள்.

 இசைப்பிரியாவின் மரணத்தில் வலியின் உக்கிரம்

தமிழீழ விடுதலையில், ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் குழந்தைகளும் ஆயிரக் கணக்கில் அநியாயமாகச் சாகடிக்கப் பட்டார்கள். அந்த இழப்புகளினால் இதயம் வலிக்கிறது. துடிக்கிறது. ஆனால், இந்த இசைப்பிரியாவின் மரணத்தில், வலியின் உக்கிரம் தாங்க முடியவில்லை. இதயம் வெடித்தே போய் விடும் போல இருக்கிறது.


அவளின் இறப்பு ஒன்றும் புதிதாக நடந்த நிகழ்ச்சி அல்ல. ஆண்டுகள் பல கழிந்து விட்டன. இருந்தாலும், அரைகுறையாகப் போர்த்தப்பட்ட வெள்ளைத் துணியுடன், அரை நிர்வாண கோலத்தில் அவளைப் பார்க்கும் போது மனம் நொறுங்கிப் போகிறது. ஒரு மகளாகத் தான் அவளைப் பார்க்கிறேன்.

அவளுடைய இறப்பை அன்று பார்த்த போது, கண்களில் இருந்த எல்லாக் கண்ணீரும் வற்றிப் போனது. ஆனால், இப்போது மறுபடியும் பார்க்கையில் இருக்கிற கொஞ்ச நஞ்சமும் அருவியாய் வழிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

 இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா

புலிகளின் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ஒளிபரப்பு, மாலை ஏழு முதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே நீடிக்கும். இதில் இசைப்பிரியா ஒவ்வொரு நாளும்  செய்திகளை வாசித்தார். நல்ல கணீர் குரல். மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு. தெளிவான வழங்குமுறை.


இசைப்பிரியாவின் (Isai Priya) இயற்பெயர் சோபனா. 1981 மே மாதம் 2-ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவு மானிப்பாயில் பிறந்தவர். தகப்பனாரின் பெயர் தர்மராஜா. தாயாரின் பெயர் வேதரஞ்சினி.

குடும்பத்தில் நான்காவது மகளாகப் பிறந்தவர். சிறு வயதில் இவரது இதயத்தில் ஒரு துளை உண்டு என மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. இருந்தாலும் இவருக்கு உடனடியாக எந்தச் சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். ஐந்தாம் வகுப்பு வரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றார்.

சோபனாவின் குடும்பத்தினர் வன்னியில் தஞ்சம்

சிறுவயதில் இருந்தே அமைதியான குணம். ஆனால் பயந்த சுபாவம். ஆடல் பாடல்களில் அதிக ஆர்வம். வயதுக்கும் மீறிய இரக்க குணம். யாராவது துன்பப் படுவதைப் பார்த்தால் ஓடோடிப் போய், உதவிகளைச் செய்து விட்டு வருவார்.

1995-ஆம் ஆண்டு. மூன்றாம் கட்டப் போர். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட காலக் கட்டம். உயிரைக் காக்க ஊர்களையும் உடைமைகளையும் அப்படியே போட்டுவிட்டு, கையில் கிடைத்ததோடு விழுந்து எழுந்து வன்னியை நோக்கி மக்கள் ஓடினார்கள்.

அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று. ஒருவழியாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னியில் தஞ்சம் அடைந்தனர். வன்னிய மண்ணும் இவர்களை அழகாய் ஏற்றுக் கொண்டது.

இசைப்பிரியாவின் தோழி கீதைப்பிரியா

வேம்படி மகளிர் கல்லூரியில் மேல்படிப்புக்குச் சென்றார். 1996-இல் இடம் மாறி மல்லாவி மத்தியக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர், குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்த வேண்டி வந்தது. அப்படியே ஈழப் போராட்டத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். ஈழத்து அழகி என்று சொல்கிற வகையில் ஈழத்துப் பெண்களின் அழகும் நன்றாகவே ஒட்டிக் கொண்டது.

மென்மையும் இரக்கமும் குளிர்ந்த இலட்சியமும் கொண்டவர். இந்தக் கட்டத்தில் ஈழத்து மக்களுக்கு நடந்து வரும் அநீதிகளைக் கண்டு, போராட வேண்டும் என்கிற ஓர் உந்துதலும் இவருக்கு ஏற்பட்டது.

புலிகளின் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், தொலைக் காட்சியிலும் செய்திகளைத் தொகுத்து வாசித்தார். இவருக்கு கீதைப்பிரியா என்று ஒரு தோழி இருந்தார். செய்திகளைத் தொகுப்பதற்கு இவரும் உதவிகள் செய்து இருக்கிறார்.

கீதைப்பிரியா என்பவர் ஒரு அகதியின் டைரி எனும் புதினத்தை எழுதியவர். இன மொழி பற்றாளர். தெளிவான மாற்றுச் சிந்தனைகளைக் கொண்டவர். அமைதியாகப் பயணிக்கின்றார். வெளிச்சத்தை விரும்பாத பெண்ணியவாதி.

இசைப்பிரியாவிற்கு பயந்த சுபாவம்

இசைப்பிரியாவைப் பற்றி அவர் சொல்கிறார். ’இசைப்பிரியா கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர். அவருக்கு மென்மையான இதயம். லேசான நெஞ்சுவலியும் இருந்தது. அதனால் அவரைப் போர்ப் படையில் சேர்க்கவில்லை. ஊடகத் துறையில் சேர்த்துக் கொண்டனர்.

ஊடகவியலாளர்கள் என்கிற முறையில் இருவருக்கும் இசைப்பிரியாவிற்கும் 2006-ஆம் ஆண்டில் முதல் சந்திப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு அந்தத் தோழமை நீடித்து இருக்கிறது.

ஈழப் போரின் கடைசி வாரத்தில் தான் இசைப்பிரியாவைச் சந்தித்து இருக்கிறார். அதன் பிறகு அவர்கள் சந்திக்கவில்லை. அவருடைய இறப்புச் செய்திதான் கடைசியாகக் காற்றோடு கலந்து வந்தது.

இசைப்பிரியாவிற்காக ஒவ்வொரு நாளும் அழுகிறேன். நினைத்தாலே ஆழ்மனத்தில் அதீத வேதனைகள் ஆர்ப்பரிக்கின்றன. அப்படிச் சொல்லும் கீதைப்பிரியாவின் குரலும் தழுதழுக்கிறது.

களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா

எல்லாச் சாமான்யப் பெண்களுக்கும் வருகின்ற ஆதங்கம் தான். அதிலும் சில காலம் ஒன்றாய்ப் பழகிவிட்ட நெஞ்சத்தின் நெருடல்கள் அவரிடம் உரசிச் செல்கின்றன. இசைப்பிரியா ஓர் ஊடகவியலாளர் என்பதை மட்டும் நாம் இங்கே மறுபடியும் நினைவு படுத்திக் கொள்வோம்.

நான்காம் கட்ட ஈழப் போரின் முடிவில், இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரிடம் சரண் அடைய வேண்டிய நிலை. பின்னர் 2010-ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகின. தமிழகத்தின் தொலைக்காட்சி நிறுவனங்களைச் சும்மா சொல்லக் கூடாது.

 போர்க் களத்தில் ஒரு பூ

களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா என்கிற பழமொழி தெரியும் தானே. தொலைக்காட்சி நிறுவனங்கள் அப்படியே திருப்பித் திருப்பி போட்டு ஒளிபரப்பு செய்தன. ஒரு தமிழ்ப் பெண்ணை ரொம்பவுமே அசிங்கப் படுத்தி விட்டன. அப்படித் தான் எனக்குப் படுகிறது.

இசைப்பிரியாவின் வாழ்க்கை என்பது நெஞ்சை உருக்கும் கதை. ‘போர்க் களத்தில் ஒரு பூ’ எனும் பெயரில் ஒரு தமிழ்த் திரைப் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது..  ‘யுத்த பூமியல்லி ஒந்து ஹுவு’ என்று தெலுங்கு மொழியிலும் தயாரிக்கப்பட்டு உள்ளது.  தவிர கன்னட மொழியிலும் தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி

அவருடைய ஊடகச் சேவைக்கு மறுபடியும் வருவோம். 1998-இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா ஊடகத் துறையான நிதர்சனப் பிரிவில் சேர்ந்தார். காணொளி வெளியீடான ஒளிவீச்சுத் தொகுப்பு நிகழ்ச்சியை இசைப்பிரியாவே அறிமுகம் செய்து வந்தார்.

அவர் ஓர் இளம் அறிவிப்பாளர். வீடியோ சித்திரங்கள், போர்க்களச் செய்திகள், போர் வெற்றிகள், இலட்சியக் கருத்துக்கள் போன்றவை அவருக்கு அன்றைய காலத்து ஒளிவீச்சுகளாக அமைந்தன. இசைப்பிரியாவின் பணி அதோடு மட்டும் நின்று விடவில்லை. அவர் ஊர் ஊராகச் சென்றார். அந்த ஊர்களில் போடப்படும் தெருக் கூத்துகளிலும் மேடை நாடகங்களிலும் அவருடைய பதிவுகளைத் தடம் பதித்தார்.

விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவு வளர்ச்சி பெற்றது. பின்னர் அது தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாகப் பரிணமித்தது. அந்தக் கட்டத்தில் தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராகவும் இசைப்பிரியா பணியாற்றினார். ஈழப் போராட்டத்தில் இணைந்த பின்னர், தன்னை ஓர் உன்னதமான ஊடகப் போராளியாகவே மாற்றிக் கொண்டார். ஆனால், ஆயுதங்களை மட்டும் பிடிக்கவில்லை.

இசைப்பிரியா ஒலியாகி ஒளியாகி இசையாகி காற்றாகிப் போனாய்
கனலும் நெருப்பைக் கட்டிக் கொண்ட அழகுச் சீதனமாய்
பறந்தும் போனாய்

இசைப்பிரியா என்கிற ஓர் அழகான வீணை நொறுங்கி விட்டது. இனிமேல் உலகமே ஒன்று சேர்ந்தாலும், அதன் தாளச் சுருதித் தந்திகளை ஒட்டிப் பார்க்க முடியாது. ஆறாத காயங்களின் அழியாத வடுக்களாக அவர் சிணுங்குகிறார். தமிழர்களின் நெஞ்சங்கள் அழுகின்றன. அவரைப் பற்றிய மேல் விவரங்களை அடுத்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். (தொடரும்)


இக்கட்டுரையின் இதர பகுதிகள்

இசைப்பிரியா- 1