15 ஜூலை 2016

தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1

தினத்தந்தி - மலேசியா – 18.03.2016

வெள்ளைக்காரர்கள் என்றைக்கு தமிழ்நாட்டில் காலடிகள் எடுத்து வைத்தார்களோ அன்றைக்குப் பிடித்தது தமிழர்களுக்கு ஏழரை நாட்டுக் கஷ்ட காலம்.  தமிழ் நாட்டிலும் சரி... மலேசியாவிலும் சரி... இலங்கையிலும் சரி... சகட்டு மேனிக்குச் சனி பகவானின் அஷ்டமக் கோலங்கள். ஏழு தலைமுறைகளுக்கும் அட்டகாசமான சனீஸ்வர மந்திரங்கள். 


அந்த மந்திரங்களில் தமிழ்மொழியும் பேஷாராகிப் போனது. போயி பாருங்க அண்ணாத்தே… இன்னாம சைட்டு கட்டி உடுரானுங்கோ.... தோடா ராசா கணக்கா இங்கிலீஸ்ல எழுதுறானுங்கோ… பேட் வேர்ட்ஸ் கூட உட்டுக்கிறானுங்கோ...  பேஜாருங்க… எனக்கும் மெர்சலா ஆச்சுங்கோ…

புரியுதுங்களா... புரியாவிட்டால் பரவாயில்லை. சென்னையில் இரண்டு வாரம் தங்கிவிட்டு வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும். சரி. தமிழர்களின் கதைக்கு வருவோம்.


தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்க்கை நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. இடையில் வெள்ளைக்கார நாரதர்கள் வந்தார்கள். நேருவிற்கு ரோஜாப்பூ குத்தி நன்றாகவே அழகு பார்த்தார்கள். 



அழகு அழகாய் ஆடிப் பாடினார்கள். அட்டகாசமாய் அமர்க்களம் செய்தார்கள். ஆனால் பாவம் தமிழ்நாட்டுத் தமிழர்கள். பாவப்பட்ட ஜென்மங்களாகிப் போனார்கள். இப்போது பரிதவிக்கிறார்கள்.

இருந்ததும் சரி இல்லை. இருப்பதும் சரி இல்லை. என்னை ஏசினாலும் பரவாயில்லை. சரி. நம்ப கதைக்கு வருவோம்.

சென்னையில் கிழக்கிந்தியக் கம்பெனி

1639-ஆம் ஆண்டில் சென்னையில் கிழக்கிந்தியக் கம்பெனியை ஆங்கிலேயர்கள் நிறுவினார்கள். அதன் பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் பற்பல மாற்றங்கள். பற்பல திருப்பங்கள். அந்த மாற்றங்களில் புதிய ஒரு சகாப்தம். அந்தத் திருப்பங்களில் புதிய ஒரு பரிமாணம்.

ஆங்கிலேயர்கள் வலதுகாலை எடுத்து வைக்கவும் இல்லை. இடது காலை எடுத்து வைக்கவும் இல்லை. இரண்டு காலையும் சேர்த்து வைத்து தமிழ்மண்ணில் குதித்து இருக்கிறார்கள். அப்படித்தான் தமிழ் நாட்டில் இப்போதும்கூட நையாண்டியாகப் பேசிக் கொள்வார்கள்.

ஆங்கிலேயர்கள் கால் பதிக்கும் போது தமிழ் நாட்டில் மூலைக்கு மூலை சிற்றரசர்கள், ஜமீன்தாரர்கள், பாளையக்காரர்கள், நவாப்புகள், மேட்டுக்குடி பஞ்சாயத்துகள். இவர்களுக்குள் எக்கச் சக்கமான கருத்து வேறுபாடுகள். சண்டைச் சச்சரவுகள். ஆக அவர்களின் பலகீனங்களை ஆங்கிலேயர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் எனும் பழமொழியை மனப்பாடம் செய்து கொண்டு வந்து இருக்கிறார்கள்.

எங்கே அடித்தால் எப்படி வலிக்கும்


ஆங்கிலேயர்களிடம் எப்போதுமே ஒரு தாரக மந்திரம் இருந்தது. அதன் பெயர் என்ன தெரியுமா. பிரித்துவிடு வரித்துவிடு (Divide and Rule). உலகம் முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட நல்ல ஒரு வாசகம். எங்கே அடித்தால் எப்படி வலிக்கும் என்பதற்கு இலக்கணம் எழுதியவர்களே சாட்சாத்… ஆங்கிலேயர்கள் தான். 




அர்த்த சாத்திரத்தை எழுதிய சாணக்கியர் இருக்கிறாரே அவரே தோற்றுப் போவார்... போங்கள். ஒருக்கால் அந்தச் சாத்திரத்தை ஆங்கிலேயர்கள் நன்றாகவே படித்துக் கரைத்துக் குடித்து இருக்கலாம். சொல்ல முடியாது.

நவீன காலத்துச் சாணக்கியவாதி மாக்கியவெல்லி. அவரின் கருத்துகளில் நையாண்டி, கேலி, பரிகாசம், கிண்டல், ஏளனம் என்று எல்லாமே இருக்கும். சாகசமான மாக்கியவெல்லிசம் என்று சொல்லலாம். அதைச் சார்க்கஸம் (Sarcasm) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அந்தச் சாகசத்தின் மொத்தச் சாகுபடியாக ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இருக்கிறதை எல்லாம் அடித்துப் பிடித்தார்கள். பிழிந்து எடுத்தார்கள். இப்போது இருக்கும் தலைவர்களில் சிலர் மிச்சம் மீதியை உறிஞ்சி உறிஞ்சி எடுத்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பெயர்கள் வேண்டாமே!

அந்தக் காலத்து தமிழ்ச் சிற்றரசர்கள் தொட்டதற்கு எல்லாம் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று சொன்னேன். உண்மைதான். அந்த வகையில் தமிழர்களின் பலகீனத்தை ஆங்கிலேயர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு காய்களை நன்றாகவே நகர்த்தினார்கள். தமிழர்களின் எதார்த்த வெள்ளந்தித் தனத்தின் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள். 




முதலில் தமிழ்நாடு விழுந்தது. அடுத்து தென் இந்திய மாநிலங்கள் விழுந்தன. அப்புறம் ஒட்டு மொத்த இந்தியத் துணைக் கண்டமே சரிந்து விழுந்து அதோகதியானது. அப்புறம் என்ன அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்கள் பலரின் முகவரிகளும் தொலைந்து போயின.

மெட்ராஸ் நிலப்பகுதி மெட்ராஸ் மாநிலம் ஆனது

அனந்த பத்மநாபன் நாடார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், வாண்டாயத் தேவன், மாவீரன் அழகு முத்துக்கோன், மருதநாயகம், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலாடி, பெரிய காலாடி, தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றவர்களைத் தெரியுமா. இவர்கள் தான் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டனர். இருந்தாலும் இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டனர். தப்பு. தூக்கிலிடப் பட்டனர்.

இவர்களில் மருது பாண்டியரின் மகன் துரைசாமி என்பவர் நம் பினாங்கிற்கு நாடு கடத்தப் பட்டார். அந்திம காலத்தில் அனாதையாக அரிச்சுவடி இல்லாமல் மறைந்தும்  போனார்.

சரி. விஷயத்திற்கு வருவோம். 1947-ஆம் ஆண்டில் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. மெட்ராஸ் நிலப்பகுதி (The Madras Province) என்பது மெட்ராஸ் மாநிலம் ஆனது. இருந்தாலும் 1948-ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்து வந்தது. புதுக்கோட்டை சமஸ்தானம் தான் இந்தியாவுடன் இணைந்த கடைசி சமஸ்தானம் ஆகும்.




தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை முன்பு மெட்ராஸ் மாநிலத்தில் இருந்தன.

மொழிவாரியாக மாநிலங்கள்

இருந்தாலும், 1953-இல் மெட்ராஸ் மாநிலத்தின் வட பகுதிகள் தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆந்திர மாநிலமாகப் பிரித்துக் கொடுக்கப் பட்டது. தமிழ் பேசும் தென் பகுதிகள் மெட்ராஸ் மாநிலத்தில் சேர்க்கப் பட்டது.

1956-இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த வகையில் மெட்ராஸ் மாநிலமும் பிரிக்கப்பட்டது. மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இங்கு இருந்துதான் பிரச்சினைகள் தொடங்கின. அவை என்ன என்று பார்ப்போம். அதுதான் நம்முடைய இந்தக் கட்டுரையின் நோக்கமும் ஆகும். சரி.

நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டன. அப்படிப் பிரிக்கப்படும் போது பெரிதும் பாதிக்கப் பட்டது தமிழ்நாடு தான். இதை யாராலும் மறுக்க முடியாது. மறுத்துப் பேசவும் முடியாது. மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலங்கள் யாருக்கு அதிகம் உரிமையாக உள்ளன. அதை வைத்துத்தான் சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று முதலில் முடிவு செய்தார்கள்.




அதன்படி கேரள எல்லையை ஒட்டி இருக்கும் தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப் பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவைப் பிரிக்கும் போது நடந்தது என்ன தெரியுமா? அந்தச் சமயத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் கணிசமான எண்ணிகையில் இருந்தனர்.

ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருந்தனர். இருந்தாலும், சட்ட விதிகள் கால நேரத்திற்கு ஏற்றவாறு தலைகீழாய் மாறிப் போயின. அந்தப் பகுதிகள் ஆந்திராவுக்குக் கொடுக்கப் பட்டன.

இந்தச் சமயத்தில் படாஸ்கர் கமிஷன் எனும் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம்’ என்று சொல்லி எல்லாப் பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது. முதலில் சொன்னது என்ன. நிலங்கள் யாரிடம் அதிகமாக உள்ளன என்பதைப் பார்க்க வேண்டும். அது நடுவண் அரசு போட்ட கட்டளை.

ஆனால், பிரிக்கும் போது கதையே வேறு மாதிரியாகப் போனது. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம் என்று சொல்லி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நிலத்தை எல்லாம் அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.

தமிழகத்துக்கு திருத்தணி வள்ளிமலை திருவாலங்காடு

மங்கலங்கிழார், ம.பொ. சிவஞானம் போன்றோர் மட்டுமே படாஸ்கர் கமிஷனின் முடிவை எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்கள். ராஜாஜியும் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இருந்தாலும் தமிழத்தின் அப்போதைய திராவிடக் கழக அரசியல்வாதிகள் இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை.

இதில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் உண்மையிலும் உண்மை. தமிழகத்துக்குத் திருத்தணி, வள்ளிமலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே கிடைத்தன.




1960-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி... புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. எல்லையில் இருந்து எங்கேயோ இருக்கிற சேலம், செங்கல்பட்டு மாவட்டங்கள். அந்த மாவட்டங்களில் இருந்தும் 525 சதுர கிலோமீட்டர் பகுதி ஆந்திராவுக்கு வழங்கப் பட்டது. இதில் ஆரணியாறு அணைக்கட்டும் ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது.

ஆக, அப்படி நடந்த கொடுக்கல் வாங்கலில் திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி பறிபோனது. நந்தி மலையும் பறிபோனது. நந்தி மலை மட்டும் தமிழ்நாட்டுடன் இருந்து இருந்தால் இப்போது தலைவிரித்து ஆடுகிறதே பாலாற்றுப் பிரச்சினை. அந்தப் பிரச்சினை வந்து இருக்கவே இருக்காது.

சென்னை நகரமும் தங்களுக்கு வேண்டும் என்று முதலில் ஆந்திரா கேட்டது. முடியாது என்று தமிழர்கள் மறுத்து விட்டார்கள். அதன் காரணமாகப் பல நிலப் பகுதிகளைத் தமிழர்கள் இழக்க வேண்டி வந்தது.

திருப்பதியைக் கொடுக்கிறோம்… அதற்குப் பதிலாக எங்களுக்குச் சென்னையைக் கொடுங்கள் என்று ஆந்திரா பிடிவாதம் பிடித்தது. தமிழர்கள் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர்.

திருப்பதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சென்னையை நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று சென்னை நகரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். இல்லை என்றால் சென்னை நகரமும் கனவு நகரமாக மாறிப் போய் இருக்கும். அப்போதைய தலைவர்கள் உருப்படியாகச் செய்த ஒரு காரியம். நல்லதா கெட்டதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள்

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று இங்கே எவரையும் நாம் பிரித்துப் பேசவில்லை. எல்லோருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அண்ணன் தம்பி உறவுகள். எவரையும் உயர்வு தாழ்வுடன் நாம் பார்க்கவும் இல்லை. 




மலாயாவுக்கு இங்கே வந்தவர்கள் கூட ஒரே கப்பலில் வந்தவர்கள் தான். ஒரே படுக்கையில் படுத்துப் புரண்டவர்கள் தானே. மாமன் மச்சான் என்று சொல்லி ரஜுலா கப்பலில் துருப்புச் சீட்டு விளையாடியவர்கள் தானே. 

ஆக, தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத் தான் வரலாற்று ரீதியில் பார்க்கிறோம். மற்றபடி தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை.  பிரித்துப் பேசவும் இல்லை. சரிங்களா.

தமிழ்நாட்டைப் பிரிக்கும் போது ஆளாளுக்குப் பெரிய பெரிய தொடைச் சப்பைகளாக வேண்டும் என்று அடித்துப் பிடித்துக் கொண்டார்கள். பிய்த்துக் கொண்டும் போனார்கள் என்றுதான் சொல்ல வருகிறேன்.

மற்றபடி இது ஒரு வரலாற்று ஆவணம். இந்திய வரலாற்றைப் படிப்பதற்கு மட்டும் பத்து ஆண்டுகள் பிடித்தன என்பதைச் சொல்லிக் கொண்டு கட்டுரையைத் தொடர்கிறேன்.

சென்னை விவகாரத்தில் தமிழ்நாட்டு கட்சிகள் சில பல அரசியல் போராட்டங்களை நடத்தின. பரவாயில்லை. ஆனால் கர்நாடகா விஷயத்தில் உஹூம்... தூங்கி விட்டார்கள். செம தூக்கம் போங்கள். திருடு போனதுகூட தெரியாமல் தூங்கி இருக்கிறார்கள். அப்பேர்ப் பட்ட தூக்கம். 

வயிறு எல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று நான் சொல்லவில்லை. இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். என்ன சொல்லி எங்கே அடித்து என்ன பயன். சொல்லுங்கள்.

தமிழர்களுக்கும் கூர்க் மக்களுக்கும்

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்பது தெரியுமா. குடகு மலையில் உற்பத்தியாகிறது. குடகு மலை எங்கே இருக்கிறது தெரியுமா. முன்பு தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது கர்நாடகாவில் இருக்கிறது. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. வயிற்றுப் பிள்ளையைத் தத்து கொடுத்துவிட்டு அது நடந்து போகிற அழகைப் பார்த்து ஒப்பாரி வைப்பது போல இருக்கிறது. கட்டுரை தொடரும்.

02 ஜூலை 2016

கேமரன் மலை தெரியாத ரகசியங்கள்

மலேசிய நாட்டில் இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் சீதனமாகச் சீர் சிறப்புகளை வாரி இறைத்துவிட்டுப் போய் இருக்கிறாள். 



கேமரன் மலை, பிரேசர் மலை, பினாங்கு கொடி மலை, ஈப்போ கல்லுமலை, மலாக்கா செட்டித் தெரு, தைப்பிங் தாமரைத் தடாகம், பங்கோர் தீவு, புலாவ் தியோமான், கோலா கங்சாரில் இருக்கும் மலேசியாவின் முதல் ரப்பர் மரம்;

பத்து காஜாவில் இருக்கும் மலேசியாவின் கடைசி ஈயக் கப்பல்; 1940-களில், மலாயாவை ஒருநாள் ஆட்சி செய்த பத்து ஆராங் இந்தியர்கள்; ஈப்போ கோனாலி சாலையில் இருக்கும் வீரப் பெண்மணி சிபில் கார்த்திகேசுவின் கல்லறை. இப்படி நிறைய இருக்கின்றன. அடுக்கிக் கொண்டே போகலாம்.





இவை எல்லாம் நம் நாட்டின் வரலாற்றுச் சின்னங்கள் இல்லை; சீதனங்கள். அந்த அழகுகளைப் பார்த்து ரசிக்க நம்மில் பலருக்கு நேரம் இருக்காது. மற்ற நாடுகளுக்குப் போவது என்றால் வரிசை பிடித்து நிற்பார்கள். தவறாகச் சொல்லவில்லை. வேதனைப்பட வேண்டாம்.

வெளிநாடுகளுக்குப் போங்கள். போய்ப் பாருங்கள். கட்டிச் சோறு புளிச் சாதம் கட்டிக் கொண்டு போங்கள். வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால்,  அதே சமயத்தில் உங்கள் நாட்டின் அழகையும் பார்த்து ரசியுங்கள். 





இது உங்கள் நாடு. இது நீங்கள் பிறந்த பூமி. உங்களுக்குச் சொந்தமான மண்ணின் அழகை முதலில் ஆராதனை செய்யுங்கள். மனதிற்குள் சின்ன ஆதங்கம். கொட்டி விடுகிறேன். ஏசினால் ஏசிவிட்டுப் போங்கள்.

ஒரு செருகல். பக்கத்து வீட்டுப் பெண்பிள்ளை, நன்றாகப் பாடுகிறாள். அற்புதமாகப் பரத நாட்டியம் ஆடுகிறாள். நிறைய பரிசுகளை வாங்கி இருக்கிறாள். அவளைப் போய்ப் பார்க்கலாம் என்றால் சிலருக்கு நேரம் இருக்காது. இன்னும் சிலருக்கு, இரண்டு வார்த்தைகள் பாராட்டிச் சொல்லக்கூட மனசும் இருக்காது. மனசும் வராது.

மிஸ்டர் மைனர் மோகம்

ஆனால், பக்கத்து நாட்டில் இருந்து சில மினுக்கிகள் வந்து இருக்கிறார்கள். தளுக்கு மேனியைக் குலுக்கிக் காட்டுகிறார்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சிலருக்கு நடுஜாமத்திலேயே மிஸ்டர் மைனர் மோகம் வந்துவிடும். 




அப்புறம் இரவுகள் இம்சையாகிப் போகும். விடிய விடிய காற்றின் காலுக்கு கொலுசு கட்டுவார்கள். எஸ். எம். எஸ் அனுப்பி அனுப்பியே ரொம்பவும் சந்தோஷப் படுவார்கள்.

இவை எல்லாம் பார்த்துப் பழகிப் போன சில பழைய சமாசாரங்கள். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

1885-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது மலாயாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்களுக்கு தித்திவாங்சா மத்தியமலைத் தொடரை நிலஆய்வு செய்ய வேண்டும். மலையின் எல்லைகளை வரைய வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். அதற்காக சர் வில்லியம் கேமரன் என்பவரை அனுப்பி வைத்தார்கள்.

அவருக்குத் துணையாக குலோப் ரியாவ் (Kulop Riau) என்பவர். இந்தத் தித்திவாங்சா மத்தியமலைத் தொடர்தான் மலாயாத் தீபகற்பத்தை இரண்டாகப் பிரிக்கிறது.  மத்திய மலைப் பகுதியின் பெரும்பாலான பகுதிகள் 1200 - 1800 மீட்டர் உயரத்தில் உள்ளன. ஆக சர் வில்லியம் கேமரனின் ஆய்வுக்கு தடபுடலான ஏற்பாடுகள்.

பதினைந்து யானைகள். இருபது குதிரைகள். சுமைகளைத் தூக்கிச் செல்ல முப்பது நாற்பது கூலியாட்கள். வழிகாட்டிகளாக இருபதுக்கும் மேற்பட்ட பூர்வீகக் குடிமக்கள். இப்படி ஒரு பெரிய பட்டாளமே நில ஆய்வுக் களத்தில் இறங்கியது. 





அவர்கள் தஞ்சோங் ரம்புத்தான் சிறுநகர் வழியாகத்தான் மலையில் ஏறி இருக்கிறார்கள். தஞ்சோங் ரம்புத்தான் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்ற ஓர் இடமாக இப்போது இருக்கின்றது.

தஞ்சோங் ரம்புத்தான் காட்டுப் பாதை

கேமரன் மலையில் ஏறுவதற்கு ஏன் தஞ்சோங் ரம்புத்தான் வழியாகப் போக வேண்டும். சிலர் கேட்கலாம். நீங்கள் நினைக்கிற மாதிரி அப்போது தாப்பா பாதையும் இல்லை. சிம்பாங் பூலாய் பாதையும் இல்லை. ஒரே ஒரு காட்டுப் பாதை மட்டுமே இருந்தது. அதுவும் ஒற்றையடிப் பாதை.

அதுதான் தஞ்சோங் ரம்புத்தான் காட்டுப் பாதை. வேறு எந்தப் பாதையும் இல்லை. 130 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

பல மாதங்களுக்குப் பிறகு மலைகளுக்கு நடுவில் ஒரு பெரிய பச்சை பிருந்தாவனம் படர்ந்து விரிந்து கிடப்பதைப் பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள். ‘இங்கேதான் உலகின் எட்டாவது அதிசயம் மறைந்து கிடக்கிறது’ என்று வில்லியம் கேமரன் சொன்னாராம்.

அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இயற்கை அன்னை நடனம் ஆடிச் சென்ற பசும் புல்வெளி. பின்னே இருக்காதா... அதைப் பார்த்து மெய்மறந்து போய் இருக்கிறார்கள்.




அவர்களின் இரு முக்கிய ஆய்வுப் பணிகள். முதலாவது கிந்தா ஆறு எங்கே உற்பத்தி ஆகிறது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவது… பேராக் - பகாங் மாநிலங்களின் எல்லைகளைப் பிரிக்க வேண்டும். இந்த இரண்டும்தான் அவர்களின் முக்கியப் பணிகள். கடைசியில் கிந்தா ஆற்றின் நதிமூலத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். சர் வில்லியம் கேமரன்

குனோங் சாபாங் எனும் மலையில்தான் கிந்தா ஆற்றின் ஊற்றுக் கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் குளிக்கப் பயன்படுத்துவோமே நீர்த்தொட்டி. அவ்வளவு பெரியதுதான் அந்த ஊற்றுக் கிணறு. அங்கு இருந்துதான் கிந்தா ஆறு உற்பத்தியாகி ஈப்போ வழியாக வந்து பிறகு பேராக் ஆற்றுடன் கலக்கின்றது.

நில ஆய்வுக் குறிப்புகளை எழுதும் போது 1800 மீட்டர் உயரத்தில் சுழிப்பு முனைகளைக் கொண்ட மலைகள் இருக்கின்றன. பல பகுதிகளில் மென்மையான மலைச் சரிவுகள் உள்ளன என்றும் சர் வில்லியம் கேமரன் எழுதி இருக்கிறார். ஆனால் அவர்கள் பார்த்தது ‘புளு வேலி’ பகுதி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது நடந்தது 1885-ஆம் ஆண்டு.

இந்தக் கட்டத்தில் அதிக நாட்கள் மலைகளின் உச்சியிலேயே இருந்ததால் சர் வில்லியம் கேமரனுக்கு ஒரு வகையான மறதி நோய் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கும் வயது ஆகிவிட்டது. இருந்தாலும் பூர்வீகக் குடிமக்கள் வழங்கிய ’தொங்காட் அலி’ வேர்களை அதிகமாகச் சாப்பிட்டு இருக்கிறார்.

தொங்காட் அலி என்பது ஒரு வகையான வலி நிவாரணி. ஆண்மையைப் பெருக்கும். உடலுக்கு அதிகமாகச் சுறுசுறுப்பைக் கொடுக்கும். 2005-ஆம் ஆண்டு குனோங் தகான் மலையில் ஏறி இருக்கிறேன். ஏறி இறங்க ஒன்பது நாட்கள் பிடிக்கும். எங்களுடன் வந்த வழிகாட்டி, தொங்காட் அலியைப் பிடுங்கிச் சாப்பிடச் சொல்லி இருக்கிறார்.

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் உடல் சூடாகிப் போகும். மூட்டு வலிகள் பறந்து போகும். இருந்தாலும் அளவுக்கு மிஞ்சி போகக் கூடாது. கல்லீரலைப் பாதிக்கும்.

அழகிய பச்சைப் பிருந்தாவனம்

ஆக தொங்காட் அலியைச் சாப்பிட்டு அதனால் பிரச்னைகள் ஏற்பட சர் வில்லியம் கேமரனுக்கு மலை உச்சியிலேயே நினைவு இழந்து போனது. கீழே இறங்கி வந்த சில நாட்களிலேயே இறந்தும் போனார்.

ஆனால் அவர் கண்டுபிடித்த பிருந்தாவனத் தகவல்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வந்து கிடைக்கவே இல்லை. இன்னும் ஒரு விஷயம். அவர் கண்டுபிடித்த அந்தப் பச்சைப் பள்ளத்தாக்கைப் பற்றி வரைபடத்தில் அவரும் சரியாகக் குறித்து வைக்கவும் தவறிவிட்டார்.

ஆனால் ஓர் அழகிய பச்சைப் பிருந்தாவனம் இருக்கிறது என்று உலகத்திற்கு முதன் முதலில் சொன்னவர் சர் வில்லியம் கேமரன் தான். அதனால் அவரை மலேசியர்கள் மறக்கவில்லை. அவருடைய பெயரையே அந்த மலைக்கு வைத்து இன்று வரை அழகு பார்க்கிறார்கள். சரி. விஷயத்திற்கு வருவோம்.

அதோடு கேமரன் மலையை ஆங்கிலேயர்கள் மறந்துவிட்டார்கள். பாவம் அவர்கள். உள்நாட்டில் மலாயா மாநிலங்களை வளைத்துப் போட வேண்டும். கிடைத்ததைச் சுரண்டிக் கப்பல் ஏற்ற வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.

அதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. அப்புறம் எப்படி அவர்களுக்கு கேமரன் மலை நினைவுக்கு வந்து இருக்கும். சொல்லுங்கள்…

சர் பிரான்சிஸ் லைட்


ஆங்கிலேயர்கள் குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள். கோடை காலங்களில் ஓய்வு எடுத்துப் பழக்கப் பட்டவர்கள். ஆக வெப்ப மண்டலத்தில் இருந்த மலாயாவில் அவர்கள் ஓய்வு எடுக்க குளிரான மலைப் பகுதிகளில் தேவைப் பட்டன.

அந்த வகையில் 1788-இல் பினாங்கு மலையில் ஒர் இடம் கிடைத்தது. சர் பிரான்சிஸ் லைட் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே. அவர்தான் பினாங்கு மலையில் ஒரு குழுவுடன் முதன்முதலாக ஏறியவர். உச்சியில் ஒரு கொடிக் கம்பத்தை நட்டுவிட்டு வந்தவர். அப்புறம் வந்த ஆங்கிலேயர்கள் உச்சி மலைக்கு ஒரு கம்பிச் சடக்கைப் போட்டார்கள். உச்சியில் போய் குடிசைகளைப் போட்டுக் குளிர் காய்ந்தார்கள்.

அதன் பின்னர் தைப்பிங் மாக்ஸ்வல் ஓய்வுத்தளம் 1884-இல் உருவாக்கப் பட்டது.  அடுத்து பிரேசர் மலை. மலாயா ரப்பரின் தந்தை என்று பெருமையாக அழைக்கப்படும் எச். என். ரிட்லி அவர்களால் பிரேசர் மலையில் 1897-இல் ஓய்வுத் தளம் அமைக்கப் பட்டது.

இங்கே ஒரு சின்னச் செருகல். கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். பிரேசர் மலையைக் கண்டுபிடித்தது என்னவோ லூயி ஜேம்ஸ் பிரேசர் (Louis James Fraser) என்பவர்தான். அவருடைய பெயர்தான் வைக்கப்பட்டும் இருக்கிறது. இருந்தாலும் எச்.என். ரிட்லிதான் அந்த மலைக்குப் பெருமை சேர்த்தவர். அதை நாம் மறந்துவிடக் கூடாது.

பிரேசர் மலை வரலாறு

அவர் மட்டும் இந்த நாட்டிற்கு வராமல் இருந்து இருந்தால் தமிழர்களும் இந்த நாட்டிற்கு வந்து இருக்க முடியாது. தென்னிந்தியாவில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வர பிள்ளையார் சுழி போட்டவரும் அதே அந்த எச்.என். ரிட்லி தான்.  மலேசியத் தமிழர்கள் போற்ற வேண்டிய மனிதர். எச்.என்.ரிட்லி ரப்பரின் மூலமாக மலேசியாவை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.


பிரேசர் மலையில் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடக்கிறது. இப்போதைக்கு ஒரு சின்னத் தகவல். 1951 அக்டோபர் மாதம் 6ஆம் தேதி மலாயாவில் அவசரகாலம் நடைமுறையில் இருந்த போது நடந்த நிகழ்ச்சி. அப்போது மலாயாவின் உயர் ஆணையராக இருந்த சர் ஹென்றி கர்னி, பிரேசர் மலைக்குப் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது மலாயாக் கம்யூனிஸ்டுகளால் சுடப் பட்டார்.

மலாயாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களில் மிக மிக மரியாதைக்கு உரியவர் யார் என்றால் அவர்தான் இந்த சர் ஹென்றி கர்னி. அவருடைய பெயரில் மலேசியாவில் பல சாலைகள் பல இடங்கள் உள்ளன.

அவருடைய கல்லறைகூட கோலாலம்பூர், ஜாலான் செராஸ் கிறிஸ்துவ மயானத்தில் இருக்கிறது. ஓய்வு கிடைத்தால் போய்ப் பார்த்து மரியாதை செய்து விட்டு வாருங்கள். கேமரன் மலையின் தெரியாத ரகசியங்கள் என்று எழுதப் போய் எங்கு எங்கோ போய்விட்டேன்.

பினாங்கு கொடிமலை

ஆக இந்தப் பினாங்கு கொடிமலை, பிரேசர் மலை, மேக்ஸ்வல் மலை போன்ற ஓய்வுத் தளங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அதனால் இடப் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் பிரேசர் மலைக்குப் பதிலாக வேறு ஒரு மலைப் பிரதேசத்தை ஆங்கிலேயர்கள் தேடிக் கொண்டு இருந்தனர்.

பிரதான ஓய்வுத் தளமாக இருந்த பிரேசர் மலையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதே அதற்கு மூல காரணம் ஆகும். தவிர மனித மனங்களைப் பெரிதாக ஈர்க்கும் வகையில் பிரேசர் மலையில் சிறப்பாக எதுவும் அமையவில்லை.

நாற்பது ஆண்டுகள் கழித்து சர் ஜார்ஜ் மேக்ஸ்வல் என்பவர் கேமரன் மலைப் பகுதிக்குச் சென்றார். இந்த ஜார்ஜ் மேக்ஸ்வல்தான் தைப்பிங் நகரில் மேக்ஸ்வல் மலையைக் கண்டுபிடித்தவர் ஆகும்.

கேமரன் மலையில் அவர் கண்ட இயற்கையின் அழகைப் பற்றி ஆங்கிலேய அரசு நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அந்தக் காலக் கட்டத்தில் பேராக் மாநிலத்தின் ஆங்கிலேய ஆளுநராக சர் ஹியூ லோ என்பவர் இருந்தார். கேமரன் மலையைப் பற்றி கேள்விப்பட்ட அவர் அதை விரிவுபடுத்த ஆசைப் பட்டார்.

1926-ஆம் ஆண்டில் தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்கு ஒரு சாலையை அமைக்க திட்டம் வகுத்தார்கள். அதற்கு அப்போதே பத்து மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப் பட்டது. இப்போதைய கணக்குப்படி முன்னூறு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி நிற்கும். நான் சொல்வது 1920-ஆம் ஆண்டுகளில் நடந்த கதை.

இந்திய மன்மத ராசாக்கள்

போக்டென் பிரிஸ்பர்ன் கம்பெனி (Messrs. Fogden, Brisbane and Company) எனும் நிறுவனத்திற்கு 250,000 டாலர்கள் முன்பணம் வழங்கப் பட்டது. 1928 ஜனவரி முதல் தேதி சாலை அமைப்புப் பணிகள் தொடங்கின.

அது ஒரு சவால்மிக்க நிர்மாணிப்புப் பணி ஆகும். குதிரை அல்லது மாட்டு வண்டிகளில், தளவாடப் பொருட்கள் கேமரன் மலைக்குக் கொண்டு செல்லப் பட்டன. பின்னர் நீராவி இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.

ஒவ்வொரு நாளும் 500 லிருந்து 3000 பேர் வேலை செய்தனர். ஏறக்குறைய 375 பேர் மலேரியா காய்ச்சலினால் இறந்து போனார்கள். ஒரு சிலர் பூர்வீகப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு காட்டுக்குள் காணாமல் போயினர். முக்கால்வாசி பேர் நம்முடைய இந்திய மன்மத ராசாக்கள்.

எது எப்படியோ காட்டுக்குள் போன நம் ராசாக்கள் அங்கே ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். அதுவரை பாராட்டுவோம். அவர்களின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இந்திய லாவண்யம் ’பளிச்’ சென்று தெரியும்.

அதற்கு அப்புறம் மூன்று ஆண்டுகளில் கேமரன் மலைக்குச் சாலை அமைக்கப்பட்டது. அடுத்து ரிங்லெட்டில் இருந்து தானா ராத்தாவிற்கு சாலை அமைத்தார்கள். அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் பிரிஞ்சாங் வரை சாலை அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களும் சீனர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு கேமரன் மலையில் வீடுகள் பங்களாக்களைக் கட்டிக் கொண்டார்கள்.

1929-இல் போ தேயிலைத் தோட்டம் உருவானது. அப்புறம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. 2006-இல் சிம்பாங் பூலாய் பகுதியில் இருந்து கம்போங் ராஜாவிற்குப் போக ஒரு நவீன விரைவு சாலையையும் அமைத்து விட்டார்கள்.

கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்

உலகின் எட்டாவது அதிசயமாக இருந்த கேமரன் மலையை இப்போது எந்த இடத்தில் வைப்பது என்றுதான் தெரியவில்லை. விவசாயம் என்கிற பேரில் காடுகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டார்கள்.

அழகு அழகான பறவைகளை எல்லாம் விரட்டித் துரத்தி விட்டார்கள். துள்ளி விளையாடிய புள்ளிமான்கள், சருகுமான்களை எல்லாம் ‘அட்ரஸ்’ இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். ஆடு மாடுகளைப் போல சுற்றித் திரிந்த புலிகளை எல்லாம் வறுத்து எடுத்து ட்டார்கள். அடுத்து மனிதர்கள்தான் பாக்கி.

கேமரன் மலை இந்தியர்கள் ’கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்’ எனும் இயக்கத்தைத் தொடங்கி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாகச் செய்தும் வருகிறார்கள். பாராட்டுவோம்.

பகாங் மாநில அரசும் இயற்கைப் பாதுகாப்புகளுக்காக நிறைய மான்யங்களை ஒதுக்கி இருக்கிறது. வெள்ளம் வந்து வீட்டு வாசல் கதவைத் தட்டிய பிறகு இனிமேல் காடுகளை அழிக்கக் கூடாது என்று தடாலடியான சட்டத்தையும் கொண்டு வந்து இருக்கிறது. பாராட்டுகள்!

இயற்கையைப் பாதுகாப்பதில் இந்தியர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர் என்று ’கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்’ இயக்கத்தின் முன்னோடியான சிம்மாதிரி கூறுகிறார்.

கேமரன்மலையைப் பாதுகாக்கச் சொல்லி இவரும் பத்திரிகைகளுக்கு நிறைய செய்திகளை அனுப்பி வருகின்றார். விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றார். அந்த வகையில் சிம்மாதிரி, வேலு போன்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்வோம்.

அடுத்து… நினைவு திரும்பாமல் இறந்து போன சர் வில்லியம் கேமரனின் நினைவாக அவர் கண்டுபிடித்த அந்த மலைக்கு கேமரன் மலை என்று அவருடைய பெயரையே வைப்பார்கள் என்று அவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

கேமரன் மலையில் வெள்ளம்

அதே சமயத்தில் தான் கண்டுபிடித்தக் காடுகள் இந்த மாதிரி அழிக்கப்படும். அந்தக் காடுகளில் திடீர் வெள்ளம் வரும். சிம்மாதிரி என்கிற ஒரு தமிழர் வருவார். பக்கம் பக்கமாய் எழுதுவார் என்று சர் வில்லியம் கேமரனும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். பாவம் சர் வில்லியம் கேமரன். அதே சமயத்தில் அவர் நினைவாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சிம்மாதிரிக்கு மறுபடியும் நன்றிகள்.

யானை மீது ஏறிப் போய் கஷ்டப்பட்டு கேமரன் மலையைக் கண்டுபிடித்த அவரை நினைத்துப் பார்க்கையில் ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. கடைசியாக ஒன்று. மனதில் படுகிறது. சொல்கிறேன்.

நம்ப நாட்டு அழகை நாம்தான் முதலில் ரசிக்க வேண்டும். அப்புறம் தானே மற்றவர்களும் வருவார்கள் பார்ப்பார்கள் ரசிப்பார்கள். கேமரன் மலையில் வெள்ளம் வந்தது உண்மைதான்.

எங்கே தான் பிரச்சினை இல்லை. சொல்லுங்கள். அதற்காக கேமரன்மலையை ஒதுக்கி வைத்துவிட முடியுமா. அரிசி வேகவில்லை என்பதற்காக சோற்றுப் பானையைத் தூக்கி வீசிவிட முடியுமா. சொல்லுங்கள்.

மறுபடியும் சொல்கிறேன். போர்னியோ காடுகளில் எலியை பிடிக்கப் போகிறீர்களோ இல்லை பாப்புவா நியூகினி காடுகளில் புலியை பிடிக்கப் போகிறீர்களோ. பிரச்சினை இல்லை. வீட்டில் அழகான கிளியை வைத்துக் கொண்டு வெளியே மரத்திற்கு மரம் தாவும் ஜீவன்களைத் தேடிப் போவது எல்லாம் நன்றாக இல்லை!

நம்ப வீட்டுக் கிளியை முதலில் ரசிப்போம். முதலில் அதைத் தூக்கி வைத்து துதி பாடுவோம்! அப்புறம் மாற்றான் வீட்டு மல்லிகைக்கு மணம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வோம்.

27 ஜூன் 2016

தமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள்

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு...
நெய் மணக்கும் கத்திரிக்கா...
நேத்து வெச்ச மீன்கொழம்பு என்னை இழுக்குதய்யா... 





பட்டி தொட்டிகளைப் பித்தம் கலங்கச் செய்த பாடல். முள்ளும் மலரும் படத்தில் ஒலித்தது. பாடலைக் கேட்கும் போது எல்லாம் மனசுக்குள் கத்திரிக்காய் மணந்தது. மீன்குழம்பு வாசித்தது. படாபட் ஜெயலட்சுமியும் ஒரு மாதிரியாகக் கண் சிமிட்டினார்.

ஆனால் இப்போது அந்தப் படாபட் இல்லை. 1979-இல் காதல் தோல்வி. கண்கலங்கி உதிரிப் பூவாய் உதிர்ந்து போனார். தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு மீளாத் தூக்கத்தில் ஐக்கியமாகி விட்டார். அவள் ஒரு தொடர்கதையில் நடித்த படாபட் ஜெயலெட்சுமியின் வாழ்க்கையும் ஒரு தொடர்கதையாகிப் போனது.




அதே ஆண்டில் பதினேழு வயது ஷோபா. அற்புதமான ஒரு நடிகை. பசி, மூடுபனி, அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். அவரைப் போன்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து இருந்தார். இன்றைய வரைக்கும் யாராலும் மறக்க முடியாதவர். பசி படத்தில் சிறப்பாக நடித்தார். தேசிய விருது கிடைத்தது.

ஷோபாவின் மரண மர்ம முடிச்சுகள்

இயக்குனர் பாலுமகேந்திராவைத் திருமணம் செய்த இரண்டே ஆண்டுகளில் மலர்ந்தும் மலராத மலராகிப் போனார். ஏன் என்று கேட்க வேண்டாம். புருசன்காரன் பாலுமகேந்திராவைத் தான் கேட்க வேண்டும். 




இன்று வரை ஷோபாவின் மரண மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத ரகசியங்கள். புகழின் உச்சியில் இருந்த போதே தூக்குக் கயிற்றில் தன் உயிரை விலைபேசிக் கொண்டார். சுத்த அபத்தம்.

முள்ளும் மலரும் ரஜினிக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த படம். அந்தப் படத்தில் ரஜினிக்குத் தங்கையாக ஷோபாவும் மனைவியாக ஜெயலட்சுமியும் நடித்து இருந்தனர். 


இதில் ஜெயலட்சுமி 1979-ஆம் ஆண்டும் ஷோபா 1980-ஆம் ஆண்டும் தற்கொலை செய்து கொண்டனர். இதில் வேடிக்கை என்ன தெரியுமா. இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது. அது தான் ரொம்பவும் வேதனையான விஷயம்.



சினிமா என்று வந்தாலே கதாநாயகிகள் வெறும் ஒரு கவர்ச்சிப் பொருளாகத் தான் பார்க்கப் படுகிறார்கள். அது தமிழ்ப் படமாக இருந்தாலும் சரி இல்லை தெலுங்குப் படமாக இருந்தாலும் சரி இல்லை கன்னடப் படமாக இருந்தாலும் சரி.

அரச மரத்தையும் ஆல மரத்தையும் சுற்றிச் சுற்றி வருவது. அப்புறம் ஓடிப் பிடித்துக் கண்ணாமூச்சி விளையாடுவது. அப்புறம் ஐந்தே நிமிசத்தில் ஹீரோவைக் கட்டிப்பிடித்துக் காதலிப்பது. அதற்கும் மட்டுமே பயன்பட்டு வந்தனர்.

ஐந்து நிமிசத்தில் காதல் வருமா… தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்களேன்... எதற்கும் முதலில் ஒரு பெரிய டின்னாகப் பார்த்து முதுகில் கட்டிக் கொள்வது நல்லது.

பணம் புகழ் செல்வாக்கு அதிகாரம் இருந்தும்

தமிழ்த் திரையுலகைப் பொருத்த வரையில் ஒரு  நடிகனுக்கு  வயது 80ஐ கூட தாண்டி இருக்கலாம். நோ புரோபளம்… காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்ளலாம். டூயட் பாடலாம். ஹீரோயினை ஒரு கையில் தூக்கிக் கொண்டு ஒன்றரை மைல் ஒலிம்பிக் ஓடலாம். 




முகத்தில் ஒரு சொட்டுக் கிழடு தெரியாது. என்றைக்கும் அவர் ஹீரோ. என்றைக்கும் சினிமாவில் அவருக்கு வயசு பத்து. இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒன்பது. புரியும் என்று நினைக்கிறேன்.

ஆனால் கதாநாயகிகள் அப்படி அல்ல. ஐந்து அல்லது ஆறு வருடங்கள் தாக்குப் பிடிப்பதே குதிரை கொம்பு. பிறகு வேறு வழி இல்லாமல் அமெரிக்க மாப்பிள்ளையுடன் ஐலசா. அப்புறம் சீரியல் தொடர்கள். அல்லது ரியாலிட்டி ஷோ நடுவர்கள். இப்படித்தான் இன்னமும் காலத்தைக் கழிக்கின்றனர். இனிமேலும் அப்படித்தான் நடக்கப் போகிறது.




இதில் தயவுசெய்து நயனைச் சேர்க்க வேண்டாம். நாலும் தெரிந்த நல்ல மகள். இருந்தாலும் பேர் போட்டு இருக்கலாம். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து இருப்பார்கள். இனிமேல் நோ சான்ஸ்… டூ லேட்...  சரி விடுங்கள். ஊர்வம்பு நமக்கு வேண்டாங்க…

அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் மனைவி கேட்பதாக இல்லை. மனைவி சொல்வதைக் கணவன் கேட்பதாக இல்லை. இதில் மாமனார் மாமியாரின் சமகால அர்ச்சனைகள். சின்ன வயதைப் பெரிதாகப் பாதித்தச் சொல்லாடல்கள். செத்தும் போனார் அந்த நடிகர். சுத்தப் பைத்தியக்காரத்தனம். 




நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை தமிழ்ச் சினிமாவையே மீளாச் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வாழ வேண்டிய வயது. புகழின் உச்சியில் உலா வந்த நேரம். பணம் புகழ் செல்வாக்கு அதிகாரம் எல்லாமே இருந்தன. இருந்தும் என்ன பயன்.

நல்ல ஒரு பொன்னான வாழ்வு… மண்ணாகிப் போனதே. மிக மிக அற்பத் தனமான செயலினால் வாழ்வின் இலட்சியங்கள் அடிமட்டமாகிப் போனதே… கலகலப்பாக வாழ்ந்தவர்கள் இப்படி எல்லாம் துயரமான முடிவுகளை எடுப்பது அதிர்ச்சி கலந்த வியப்பைத் தரலாம். என்னைக் கேட்டால் முட்டாள்தனம்.

சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் பிரச்சினை

தமிழ்ச் சினிமாவும் நடிகர் நடிகைகளின் தற்கொலைகளும் இணைபிரியாத் தோழர்களாக மாறி விட்டன. அந்த அளவிற்கு நிலைமை மிக மோசமாகி விட்டது. 


ஆக, அந்த வகையில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகர் நடிகைகளில் சிலரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

சித்தி சீரியலில் நடித்த சாருகேஷ், 2004ஆம் ஆண்டு ஓட்டும் இரயிலுக்கு முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். 2006-இல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்.

அள்ளித்தந்த வானம், பாய்ஸ் போன்ற படங்களில் நடித்த முரளி மோகன் வாய்ப்புகள் குறைவானதால் 2014-இல் தற்கொலை செய்து கொண்டார். அரசி சீரியல் தொடரை இயக்கிய பாலாஜி யாதவ் மன இறுக்கம் அதிகமாகித் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்த் திரை உலகில் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது 1974 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. அந்த ஆண்டில் விஜயஶ்ரீ எனும் நடிகையின் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ஒரு தற்கொலையா என்பதில்கூட இன்னும் மர்மம் நீடிக்கிறது.

அடுத்து சில்க் சுமிதா. இவருடைய ஆரம்ப கால வாழ்க்கையில் ஏழ்மையும் வறுமையும் அகோரமாக நர்த்தனம் ஆடி இருக்கின்றன. வினு சக்கரவர்த்தியின் மூலமாக அறிமுகமானார்.

நேத்து ராத்திரி யம்மா

 
1980-களில் கவர்ச்சி என்ற வார்த்தைக்கு தன் கண்ணிலேயே பாடம் எடுத்தவர். தன்னுடைய வசீகரப் பார்வையால் வாலிபர்கள் முதல் வயோதிகர் வரை சகட்டு மேனிக்குக் கட்டிப் போட்டவர். தன் கண்களாலேயே தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டி இழுக்க ஆரம்பித்தார். கொடிகட்டிப் பறந்தார்.

இவரின் போஸ்ட்டரைப் பார்த்தே தியேட்டருக்கு வருபவர்கள் பலர். ஐட்டம் டான்சைத் தமிழுக்கு அறிமுகப் படுத்திய பெருமை இவரையே சாரும். மூன்றாம் பிறை படத்தில் இவர் பாடிய பொன்மேனி உருகுதே பாடலையும், சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற நேத்து ராத்திரி யம்மா பாடலையும் மறக்க முடியுமா.

அவருடைய கவர்ச்சியே கடைசியில் அவருக்கு ஆபாத்தாகிப் போனது. தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை என்ற முடிவை தேடிக் கொண்டார். 1996-ஆம் ஆண்டு தூக்கு மாட்டி இறந்து போனார். இன்று வரை இவரின் தற்கொலைக்கு யார் காரணம் என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை.

இருந்தாலும் காதல் தோல்வி, தொழில் பிரச்சினை, கடன் தொல்லை, மதுப்பழக்கம் ஆகியவை மரணத்திற்கு மூல காரணங்களாக கூறப் படுகின்றன. உண்மை என்ன என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

இவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தியில் டர்ட்டி பிச்சர் (Dirty Picture) என்ற படம் வெளிவந்தது. இதில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கூட கிடைத்தது.

அடுத்து இந்தி நடிகை ஜியாகான். இவருடைய மரணத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியில் தயாரான 'கஜினி' படத்தில் நயன்தாரா வேடத்தில் இவர் நடித்தார். அதனால் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானவராக அறியப் பட்டார்.

ஜியாகானுக்கு 25 வயது. அமிதாப் பச்சனுடன் ‘நிஷப்த்’ படத்தில் நடித்தார். சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். அக்ஷய் குமாருடன் நடித்த ஹவுஸ்புல் படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. முன்னணி நடிகை நிலைக்கு உயர்ந்து பேர் போட்டுக் கொண்டு இருந்தார்.

அந்தக் கட்டத்தில் அவர் தூக்கில் பிணமாகத் தொங்கியது சினிமா உலகையே உலுக்கிப் போட்டது. தற்கொலைதானா என இன்று வரையிலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

ரசிகர்களின் காமப் பார்வை

போகிற இடம் எல்லாம் ரசிகர்களின் ஆரவார வரவேற்பு. அப்புறம் பணம், புகழ், அழகு. இப்படி உச்சத்தில் இருந்த நடிகைகள் ஏன் செத்துப் போகும் முடிவை எடுக்கின்றனர். புரியாத புதிராகவே இருக்கிறது.

வாழ்க்கையில் மனச்சிதைவுகள் ஏற்படலாம் விரக்திகள் ஏற்படலாம் மன இறுக்கம் ஏற்படலாம் அதனால் அவர்கள் சாகத் துணிகின்றனர் என்று மனநல வல்லுநர்கள் கருத்துச் சொல்கின்றனர். எது எப்படியோ போன உயிர் போனது தானே. திருப்பிக் கிடைக்குமா.

பெரும்பாலான நடிகைகளின் தற்கொலைக்கு முக்கியமாக அமைவது ரசிகர்களின் காமப் பார்வை தான். அப்படி நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமான கருத்து. நடிகை என்றாலே ஒரு விலைமாது எனும் ஒரு தனிப்பட்ட கருத்து வந்துவிடுகிறது.

அது மட்டும் அல்ல. இயக்குநர்கள் நடிகைகளை பொதுவாகவே லூசு பெண்களாகத் தான் சித்தரிக்கிறார்கள். சில நடிகைகள் காதல் வார்த்தைகளில் ஏமாற்றம் அடைவது, காதலித்தவனால் கை விடப்படுவது... பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

சிம்ரனின் தங்கையான மோனல். இவர் நடிகர் விஜய்யின் 'பத்ரி' படத்திலும் குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே எனும் படத்திலும் நடித்துப் புகழ்பெற்றவர். இவரும் காதல் வலையில் சிக்கினார். 


நடன இயக்குநர் பிரசன்னா சுஜித்துடன் காதல். அப்புறம் அவர்களுக்குள் பிரச்சனைகள். 2002-ஆம் ஆண்டு சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 21.

என்ன பைத்தியகாரத்தனம். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்ரன் ‘எந்த ஒரு முடிவுக்கும் தற்கொலை தீர்வாகாது’ என்று கண்ணீருடன் கூறினார்.


மோனல் இறந்த அதே ஆண்டு கடல் பூக்கள், தவசி படங்களில் நாயகியாக நடித்த பிரதியுஷா (வயது 23) தற்கொலை செய்து கொண்டார். காதலர் சித்தார்த் ரெட்டியுடன் காரில் அமர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த பிரதியுஷா காரிலேயே இறந்து போனார்.

பால்கனியில் இருந்து குதித்துத் தற்கொலை

ஆனால் பிரதியுஷாவின் காதலர் அந்தத் தற்கொலை முயற்சியில் இருந்து பிழைத்துக் கொண்டார். காதலனுக்கு ஆயுசு கெட்டி. இருந்தாலும் காதலன் மீது கொலைக் குற்றம் சாட்டப் பட்டது. இன்னும் தீர்ந்தபாடு இல்லை. பிரதியுஷாவின் தற்கொலையைத் தழுவி ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ என்றொரு திரைப்படம் ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் பின்னர் வெளிவந்தது.

மோனலுடன் பார்வை ஒன்றே போதுமே படத்தில் நடித்த குணாலும் (வயது 31) காதல் தோல்வி காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம் போன்ற படங்களில் குணால் நடித்து இருக்கிறார். குணால், மோனல் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதே போல கோழி கூவுது படத்தின் மூலம் புகழ்பெற்ற விஜி எனும் நடிகை 2௦௦௦-ஆம் ஆண்டு, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கும் காதல் தோல்விதான் காரணம்.

தமிழில் ‘நிலாப் பெண்ணே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி (வயது 19). தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வந்த திவ்யபாரதி 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி தனது மும்பை வீட்டின் பால்கனியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தள்ளி விடப்பட்டாரா என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

அடுத்து நடிகை ஷோபனா (வயது 31). நடிகர் வடிவேலுவுடன் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்த காமெடி நடிகை. 2004-ஆம் ஆண்டு தன்னுடைய கோட்டூர்புரம் வீட்டில் தூக்கு மாட்டி இறந்து போனார். உடல்நலப் பிரச்சினைகளே ஷோபனாவின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

அடுத்து இந்தி நடிகை பர்வீன் பாபி. இவர் 2005-ஆம் ஆண்டில் தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வாரத்திற்ப்கு பிறகு அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப் பட்டது.

சரி. ஹாலிவுட் திரைப்பட உலகைத்தையும் மறந்துவிட வேண்டாம். ஒரு காலத்தில் தன் கடைக்கண் பார்வையால் சொக்க வைத்து பலரின் கனவுக் கன்னியாய்த் திகழ்ந்தவர் மர்லின் மன்றோ. 


ஒரு பெண்ணின் அழகான உடல் மூடி மறைப்பதற்கு அல்ல… மற்றவர்கள் பார்த்து ரசிக்கவே... என வெளிப்படையாய்ச் சொன்னவர். மர்லின் மன்றோவின் மரண மர்மம் இன்னும் நீடிக்கிறது.

அவ்வை ஷண்முகி ராபின் வில்லியம்ஸ்

பிரபல நடிகர் ராபின் வில்லியம்ஸ். இரு ஆண்டுகளுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டார். அவ்வை ஷண்முகியின் ஆங்கில மூலத் திரைப்படமான ‘மிஸஸ் டவுட்பயர்’ படத்தில் நடித்துப் புகழ் பெற்றவர். ஆஸ்கார் பரிசுகளை வென்றவர். 


அவருடைய முடிவு சோகமானது. பலரை மகிழ்வித்த அந்தக் கலைஞன் கடைசியில் மன உளைச்சலால் பாதிக்கப் பட்டது கொடுமையின் உச்சம்.

இறைவன் கொடுத்த உயிரை அழிப்பதற்கு அந்த இறைவனுக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதைக்கூட அவர் நேரம் காலம் பார்த்துத் தான் செய்கிறார். மற்றபடி சட்டத்திற்கு முன் நீதியரசரும் சத்தம் போட்டுத் தான் உயிர்த் தண்டனையையும் வாங்கிக் கொடுக்கிறார். 


ஆக அந்த உயிருக்குச் சொந்தமான அந்த மனிதருக்குக்கூட அந்த உரிமை இல்லை. என்னைக் கேட்டால் தற்கொலை என்பது சுத்தமான கோழைத்தனம்!

25 ஜூன் 2016

நடிகை நிஷாவின் உண்மைக் கதை

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா நாகப்பட்டினத்தில் இருக்கிறது. வரலாறு படைக்கும் அந்தப் புண்ணிய பூமியில் இன்னொரு மனித வரலாறும் அரங்கேற்றம் காண்கிறது. 


மனநோய் முற்றிய அனாதைகள், நாதியற்ற முதியோர்கள், கைகால் விளங்காதவர்கள், ஊனமுற்றவர்கள், தீர்க்க முடியாத நோய் கண்டவர்களின் புகலிடமாகவும் நாகூர் தர்கா மாறி வருகிறது. அண்மைய காலங்களில் அதுவும் ஒரு வழக்கத்தில் ஒரு பழக்கமாகவும் பரிணாமம் கண்டு வருகிறது. 


முடியாத நிலையில் இருக்கும் அந்த ஜீவன்களுக்கு, நாகூர் தர்காவின் தர்மகர்த்தாக்களும் நிறைய உதவிகள் செய்கிறார்கள். செய்தும் வருகிறார்கள். அந்தப் பிரச்சினை அப்படியே இருக்கட்டும். அங்கே நடந்த வேறு ஒரு கதையைக் கொண்டு வருகிறேன். நெஞ்சைப் பிழிந்து எடுக்கும் கதை. படித்த பிறகு உங்கள் மனசும் கனத்துப் போகும்.

தமிழ்ச் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்

கமலஹாசனுடன் டிக்…டிக்….டிக் (1981) படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபலமான நடிகை; ரஜினிகாந்தின் 100ஆவது படமான ஸ்ரீராகவேந்திரர் (1985) படத்தில் கதாநாயகியாக நடித்தவர்; பாலசந்தரின் கல்யாண அகதிகள் (1986); ஐயர் தி கிரேட் (1990); இளமை இதோ இதோ; முயலுக்கு மூணு கால் (1980); மானாமதுரை மல்லி; எனக்காகக் காத்திரு போன்ற பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். ஒரு காலத்தில் தமிழ்ச் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். 



அப்படி புகழ் வெளிச்சத்தில் நனைந்த ஒரு கதாநாயகி, நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்கச் சாகக் கிடந்தார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. அப்படி அனாதையாகக் கிடந்தவர் பிரபல நடிகை நிஷா என்கிற நூர் நிஷா. அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. தவிர அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதுதான் சரி. ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்து இருக்கிறார். இளமை இதோ இதோ என்று ஆடிப் பாடிய அவரின் இளமையை எய்ட்ஸ் நோய் உருக்குலைத்துச் சீரழித்து விட்டது.

நிஷா கேட்க ஆள் இல்லாமல் சாகக் கிடந்தது எங்கே தெரியுமா. அவர் பிறந்து வளர்ந்த அதே நாகூரில்தான். அது ஓர் அதிர்ச்சியான செய்தி. ஆனால் அதைவிட இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா.

அவருடைய அப்பா, அத்தை, பெரியப்பா என ஒரு பெரிய உறவுப் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வந்து இருக்கிறது. அதாவது அவர் சாகக் கிடக்கும் போது அவருடைய சொந்த பந்தங்கள் அவரை அனாதையாக விட்டுவிட்டு அதே நாகூரில் தான் வாழ்ந்து இருக்கிறார்கள்.

காய்ந்த கருவாடாகக் கட்டிலில் கிடந்த பிரபல நடிகை

இதைவிட வேறு என்ன அதிர்ச்சியான செய்தி வேண்டும்... சொல்லுங்கள். பின்னர் ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவைச் சென்னை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.

செய்தி அறிந்த பத்திரிகையாளர்கள் அவரைப் போய் பார்த்து இருக்கிறார்கள். காய்ந்த கருவாடாகக் கட்டிலில் கிடந்து இருக்கிறார். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என்று பத்திரிகையாளர்கள் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

நடிகை நிஷா அவர்களைப் பார்த்ததும் “சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாத்துங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும் சார்’ என்று கதறி அழுது இருக்கிறார். சினிமா ஒளி வெள்ளத்தில் குளித்த ஒரு ஜீவன், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சி இருக்கிறதே. நம்பவே முடியவில்லை.

அந்தப் பத்திரிகைகளின் செய்திகளையும் இணையங்களின் தகவல்களையும் நானும் இங்கே சான்றுகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு நடிகை எப்படி வாழக் கூடாது என்பதற்கு இந்த இளம் நடிகை நிஷாவை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். நடிகர் விவேக் ஒரு வசனம் பேசுவார். எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்... என்கிற வசனம். எந்தப் படம் என்று தெரியவில்லை. ஆனால் அந்த வசனம் இப்போதைக்கு நிஷா என்கிற அந்தச் சினிமா நடிகைக்கும் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது. நிஷா இப்போது இல்லை. அவர் இறந்து விட்டார். இறந்து சில ஆண்டுகள் ஆகின்றன.

மருத்துவமனையில் எலும்பும் தோலுமாய்க் கிடந்த நிஷாவின் பேச்சில் ஒரு நடிகைக்கு உரிய நளினம் கொஞ்சமும் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தையும் கொட்டிக் குழைத்துப் பேசி இருக்கிறார்.

அம்மா அப்பாவுக்குச் சின்ன சண்டை

”எனக்குச் சொந்த ஊர் இந்த நாகூர்தான். என் அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவருடைய முதல் மனைவிக்குப் பிறந்த பெண்தான் நான். என் அம்மாவின் பெயர் பேபி. நான் குழந்தையாக இருந்த போது, என் அம்மா அப்பாவுக்குச் சின்ன சண்டை. அதனாலே என் அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்துட்டாங்க. அப்புறம் என் அம்மா என்னை வளர்த்து சினிமாவில் நடிக்க வச்சாங்க. நானும் பல படங்களில் ஹீரோயினா நடிச்சேன்.

நடிகர் கமலோடு ‘டிக்…டிக்….டிக்’ படம்... ரஜினி சாரோட ‘ஸ்ரீராகவேந்திரர்’ படம்... பாலசந்தர் சாரோட ‘கல்யாண அகதிகள்’ படம். இன்னும் விசு சார் படம், சந்திரசேகர் சார் படங்களில் எல்லாம் நடித்து இருக்கிறேன்’’ என்று தொடர்ந்தார்.

அம்மா இறந்த பிறகு அந்தத் துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் இளைச்சுப் போயிட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்சு இருந்த பணம் எல்லாம் கரைஞ்சு போயிடுச்சு. நிறைய பேர் சான்ஸ் தரேன் சான்ஸ் தரேன்னு சொல்லி நல்லா ஏமாத்திட்டாங்க. சென்னையில் உறவுன்னு சொல்லிக் கொள்ள எனக்கு இப்ப ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருக்கிற எனக்கு உதவி செய்யவும் ஒரு ஆள்கூட இல்லை.

நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒரு தடவை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா... பேசாம... டி.வி.யில் போய் நடிக்க வேண்டியது தானே... அப்படினு சொல்லி என்னை வெறும் கையோட திருப்பி அனுப்பி வச்சிட்டார். ஒரு பைசா கூட கொடுக்கலை சார்...’ குலுங்கிக் குலுங்கி அழுதார்.

நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னமோ தெரியலை” என்று சொல்லிக் கண்ணீர்க் கடலில் மிதந்தார்.

பெற்ற தகப்பனின் கண்ணுக்கு முன்னாலே

‘உங்கள் அப்பா, மற்ற சொந்தக்காரர்கள் ஏன் உங்களை ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக் கொண்ட அவர்கள் இப்போது என்னைக் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். பெற்ற தகப்பனின் கண்ணுக்கு முன்னாலே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடக்கிற நிலைமை என்னைத் தவிர வேறு யாருக்கும் வரக் கூடாது சார்... என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.

அதன் பிறகு ”சார் தப்பா நினைக்காதீங்க. என் கையில் சுத்தமாக காசே இல்லை சார்... ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும் போல ஆசையாக இருக்கு சார்... ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன் சார்... ப்ளீஸ்... என்று கெஞ்சி இருக்கிறார். இலட்சம் இலட்சமாகச் சம்பாதித்த ஒரு பெண், ஒரு புரோட்டா ரொட்டிக்காகக் கெஞ்சி இருக்கிற நிலைமையைப் பாருங்கள். அழுகை வருகிறது.

நடிகை நிஷாவிடம் பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டு இருந்த போது நர்ஸ் ஒருவர் வந்து இருக்கிறார். அவர்களைத் தனியாக அழைத்தார். ‘‘அந்த அம்மாவுக்கு எச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்தில் உள்ள எய்ட்ஸ் நோயாளி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கணும். முடிந்தால் நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்... என்று நர்ஸ் உதவி கேட்டு இருக்கிறார்.

அதன் பிறகு நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைப் பத்திரிகையாளர்கள் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். அதற்கு அவர் ‘நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் காதல் பண்ணித் தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். அதனால் என் பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டி அடிச்சிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. ‘கொஞ்ச நாள் பொறுத்துக்கச் சொன்னேன். நான் சொன்னதைக் கேட்காமல் குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராத்திரியோட ராத்திரியா சென்னைக்கு ஓடிப் போயிட்டா.

மகள் நிஷாவை கண்ணில் காட்டவில்லை

அதன் பிறகு பேபியைத் தேடி அலைஞ்சு கடைசியில் கோடம்பாக்கத்தில் கண்டுபிடிச்சேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. ஜலீல்னு ஒருத்தரை அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச் சொன்னாள். மகள் நிஷாவை என் கண்ணில் காட்டாமலே மறைச்சிட்டாள். பேபிக்கு பல பேரோட தவறான தொடர்பு இருந்து இருக்கிறது. எனக்குத் தெரிஞ்ச பிறகு நான் ஒதுங்கிட்டேன். அப்புறம் நிஷாவை சினிமாவில் நடிக்க வைச்சு இருக்கா. பணம் வர ஆரம்பிச்சு இருக்கு... என்று தொடர்ந்தார்.

ஒரு நாள் பேபி என்னைப் பார்த்து ‘‘உனக்கு ஊரில் பல பொம்பிளைங்க சகவாசம் இருக்கு. இனிமே இங்கே வராதேன்னு சொல்லி என்னை விரட்டி அடிச்சிட்டா... என்றார்.

மீண்டும் தொடர்ந்த அவர் ‘‘பேபி இறந்தபோது எனக்கு யாரும் தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே ஒரு தடவை போய் இருக்கிறார். அப்போது ‘எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் நீங்க பெரியப்பா எதுக்குன்னு சொல்லி அவரை நிஷா விரட்டி இருக்கா. இப்ப நோய் வந்து சொந்தம் கொண்டாட வந்தா அவளை யாருங்க ஏத்துக்குவாங்க. நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிங்க காப்பாத்த முடியும்?’’ என்றார் அப்துல் ஜப்பார்.

நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீத் சென்னையில் இருந்தார். அவரையும் பத்திரிகையாளர்கள் விடவில்லை. சந்தித்து இருக்கிறார்கள். அவர் இப்படி சொல்லி இருக்கிறார். ‘‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக் என்பவரும் நிஷாவை ஆண்டு அனுபவிச்சிட்டாங்க... அப்புறம் இங்கே நாகூர்ல கொண்டாந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாதுங்க’’ என்றார்.

நாகூர் ஜமாத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீன், ‘‘ஒரு நடிகை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நிஷாவின் அம்மா இறந்த போது உறவுக்காரர்கள் வரவில்லை

‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்து இருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர், ’அந்தப் பொண்ணும் அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தார்கள். அப்போது உதவிகள் செய்தோம்.

நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு உதவப் போய் இப்போது எங்களுக்குத் தான் கெட்ட பெயர். உடல்நிலை சரியில்லாத நிஷா அவருடைய நகை ஒன்றை அடகு வைத்து இருக்கிறார். அந்தப் பணத்தில்தான் நிஷாவை நாகூரில் இருக்கும் அவளோட அப்பாகிட்ட கொண்டு போய் விட்டுவரச் சொன்னோம்.

நாகூரில் உள்ள நிஷாவின் அப்பாவும் சொந்தக்காரர்களும் அவரை ஏற்க மறுத்து விட்டார்கள். அதனால் நிஷாவே தன்னை நாகூர் தர்காவில் விடச்சொல்லி இருக்கிறார். அதனால் தான் நாகூர் தர்காவில் விட்டு விட்டு வந்தோம்.

நிஷா பல்லாவரத்தில் இருந்த போது அவருடைய எதிர் வீட்டில் மகியம்மா என்பவர் ஒருவர் இருந்து இருக்கிறார். அவரிடம்தான் மீதி நகைகளை நிஷா கொடுத்து விட்டுச் சென்று இருக்கிறார்...’ என்று முகமது அலி சொன்னார்.

மகியம்மாவையும் பத்திரிகையாளர்கள் விடவில்லை. மகியம்மா சொன்ன பதில்கள். ‘என்னிடம் மொத்தம் மூணு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்து வைத்து இருந்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டேன். அப்புறம் இருபத்து நான்கு புடைவைகளைக் கொடுத்தார். அதில் இருபது புடைவைகளை ஒரு புடைவை நூறு ரூபாய்க்கு விற்று, கிடைத்த காசை அவரிடமே கொடுத்து விட்டேன். மீதம் இருப்பது நான்கு புடைவைகள்தான்’’ என்றார்.

அநியாயமாக பெண்ணின் மீது பழியைப் போடக் கூடாது

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு நிஷா கொண்டு போகப்பட்டு இருக்கிறார். பின்னர்  சென்னை தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பின்னர் சில நாட்களில் நிஷா இறந்து விட்டதாகவும் தகவல் வருகிறது.

ஐயர் தி கிரேட் எனும் தமிழ்ப் படத்தைத் தயாரித்தவரான ஆர். மோகன் என்பவர், நடிகை நிஷாவை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் எனும் ஒரு குற்றச்சாட்டும் உலவுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. என்னைப் பொருத்த வரையில், ஆதாரம் இல்லாமல் அநியாயமாக ஒரு பெண்ணின் மீது பழியைப் போடக் கூடாது. அது பெரிய பாவம். அப்படியே இருந்தாலும் கூட, முடிந்த வரையில் அதை மறைக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் அழகு.

நடிகை நிஷா 2007இல் இறந்து விட்டதாக, இன்னும் ஒரு செய்தி கசிகிறது. இறந்து போனது நிஷாவாக இருந்தால், பிறகு ஏன் இப்போது ஏழு வருடங்கள் கழித்து, செய்திகள் வர வேண்டும். இந்தச் செய்தி, அதாவது இப்போது நீங்கள் படிக்கிற இந்தச் செய்தி, 2013ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே தெரிய வந்து இருக்கிறது.

கடைசி கட்டத்தில், இரண்டு வருட காலமாக எயிட்ஸ் நோயினால் பாதிக்கப் பட்டு இருக்கிறார். நோய் முற்றியதும், எல்லோரும் கைகழுவி நழுவி விட்டார்கள்.

பெற்ற அப்பனே கண்டு கொள்ளவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு மகள் என்னதான் தப்பு செய்து இருந்தாலும், உலகத்தையே எதிர்த்து அந்த மகளுக்காகப் போராட வேண்டும். அதுதான் ஒரு சுத்தமான அப்பனுக்கு அழகு. தன் விந்திற்குப் பிறந்த மகள் என்கிற உயிர் உணர்ச்சி கொஞ்சமாவது அந்த அப்பனுக்கு இருந்து இருக்க வேண்டும் இல்லையா. கடைசியில் அந்தப் பெண், தன்னந் தனியாகப் போராடி அனாதையாகவே செத்துப் போய் இருக்கிறாள். அப்போது அவளுக்கு வயது 42. வேதனையாக இருக்கிறது.

நெஞ்சைக் கிழிக்கும் நிதர்சனமான நெருடல்

நூர் நிஷா (Noor Nisha) என்ற அந்த நடிகை சந்தர்ப்பச் சூழ்நிலையினால், ஏமாற்றப்பட்டு இருக்கலாம். அவள் மீதும் தப்பு இருக்கிறது. ஒரு தகப்பன் என்கிற பார்வையில் அதைப் பார்க்க வேண்டும். நிஷா வயதில் நமக்கும் மகள்கள் இருக்கிறார்கள்.

காலம் என்பது ஒரு மோசமான வாத்தியார். முட்டிப் போட வைக்கும். தோப்புக் கரணம் போட வைக்கும். கொட்டுப் போட்டு தலையை வீங்க வைக்கும். ஒரு குறைந்த பட்ச ஒழுக்கத்தை மட்டுமே அது சொல்லிக் கொடுக்கும். அவ்வளவுதான். மற்றதை மனிதனாக வாழ்ந்து அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக என் மனதில் பட்டது. நிஷா என்கிற நடிகை இறந்து விட்டார் என்பது முக்கியம் அல்ல. ஆனால், ஒரு பெண் ஓவியத்தின் பலகீனங்களை, ஆண்வர்க்கத்தின் பலகீனங்கள் பயன்படுத்திக் கொண்டன என்பதுதான் நெஞ்சைக் கிழிக்கும் ஒரு நிதர்சனமான நெருடல்.

திறன்பேசி மின்கலப் பராமரிப்பு

# புதிய திறன்பேசி வாங்கியதும் அல்லது புதிய மின்கலம் வாங்கியதும் முதலில் 8 மணி நேரம் மின்னூட்டம் செய்வது மிக மிக அவசியம். ஒரு மணி அல்லது 2 மணி நேரத்தில் ’Battery Full’ என காட்டினாலும் மின்னேற்றம் (Charge) செய்வதை நிறுத்தாதீர்கள். 8 மணி நேரம் முடிந்த பின்பே மின்னேற்றம் செய்வதை நிறுத்துங்கள்.


# எப்போது திறன்பேசி "Battery Low " என காட்டுகிறதோ அப்போதுதான் மின்னூட்டம் செய்ய வேண்டும். சற்றுக் குறைந்ததும் உடனே மின்னூட்டம் செய்யக் கூடாது.

# திறன்பேசியின் மின்கலம் mAh (Milliamp Hours) 1000 க்கும் அதிகமான திறன் உடைய மின்கலமா என சோதித்துb பார்த்து வாங்குங்கள். ஏனெனில் ஆடியோ, வீடியோ, இணைய வசதி உள்ள திறன்பேசிகளுக்கு mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய மின்கலம் தேவை.



# இரவு நேரங்களில் திறன்பேசியை மின்னேற்றத்தில் இணைத்துவிட்டு காலையில் கழற்றும் வழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் இப்படி மின்னூட்டம் செய்வதால் உங்களுடைய மின்கலம் விரைவில் பருத்துப் பெருத்து... பின்னர் பயன்படாமலேயே போகும்.

# புளூடூத் (Bluetooth) வசதி, வை-பை (wifi) வசதி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் அத்து வைப்பதே சிறந்தது. எப்போதும் திறந்தே வைத்து இருந்தால் மின்கலத்தின் தயாரிப்பு நிலை ஆற்றல் குறைந்து கொண்டே போகும்.



# அழைப்பு ஒலிக்கு (Ringtone) ஒரமுழு பாட்டையும் வைக்காமல் Cut Songs அல்லது Split Songs எனும் குறுகிய பாடல்களையே அழைப்பு ஒலியாக வைத்தால்... மின்கலத்தின் திறன் அதிகமாகச் செலவழிக்கப் படுவது தவிர்க்கப்படும்.

# திறன்பேசியில் எப்போதும் பாடல்களைப் பாட விடாதீர்கள்.

# திறன்பேசியின் திரை வெளிச்சத்தைக் குறைத்து வையுங்கள். அனைத்து திறன்பேசிகளிலும் (Power Saver Mode) இருக்கும். அதை முடுக்கி (Activate) விடுங்கள் இதனால் உங்களது மின்கலம் நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிக்கும்.

# திறன்பேசியின் முகப்பில் அதிக பிக்ஸ்ல்கள் (Pixels) கொண்ட படங்கள் வேண்டாமே. இதனால் மின்கலத்தின் ஆற்றல் விரைவில் தீர்ந்து விடும்.