18 மே 2018

மலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம்

மலேசிய இந்திய இனம் மலேசிய மண்ணில் சிந்தியது வியர்வை அல்ல. அது அந்த இனத்தின் இரத்தம்.
 



கித்தா தோப்புகளில் வடிந்தது பால் அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.



தார் சடக்கில் வடிந்தது மழைநீர் அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.
 



கம்பிச் சடக்கில் வடிந்தது கண்ணீர் அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.



சயாம் பாதையில் வடிந்தது அழுகை அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.


வன்மங்களின் தாக்குதலில் ஆற்றாமையின் காயங்கள் நனைந்து போகின்றன. நினைத்துப் பார்க்கின்றேன். வெம்புகின்றேன்.
 

மலேசிய இந்தியர்கள் ஒரு சொர்க்க பூமியில் நரகச் சுமையைச் சுமந்து கொண்டு வாழ்ந்தார்கள். கடந்த அறுபது ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த சன்மானங்களின் பட்டியல்;

நம்பிக்கைத் துரோகங்கள்;

ஏமாற்றங்கள்;

நயவஞ்சகங்கள்;

பசப்பு வார்த்தைகள்;

பச்சோந்தித் தனங்கள்;

சதித் திட்டங்கள்;

மோசடிகள்:

அநியாயங்கள்;

அக்கிரமங்கள்:

அந்த அவலங்களின் தலைவாசலாகக் கழுத்தை அறுக்கும் பொருளாதாரச் சுமைகள். ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கழுத்தை நெறிக்கும் வரிச் சுமைகள்.
 

இந்தியர்களின் நிலையோ அதையும் தாண்டிப் போனது. நிரந்தப் போராட்டக் களமாய்த் தொடர்ந்தது. தெருச் சண்டைகளில் போய் முடிந்தது. அத்தனையும் நெஞ்சைக் கீறிக் செந்நீர் கொட்டும் கொடூரமான அவலங்கள்.

கள்ளக் குடியேறிகளுக்கும் பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளுக்கும் நீலநிற அடையாள அட்டைகள். கைநாட்டுப் போடத் தெரியாத கழிசடைகளுக்கு எல்லாம் நாட்டுரிமைப் பத்திரங்கள்.

காட்டை வெட்டி மேட்டை வெட்டி; கல்லை உடைத்து கற்பாறைகளைக் கரைத்து; மலையைப் பிளந்து குகைகளைக் குடைந்து; இந்த நாட்டை பசும்பொன் பூமியாக மாற்றியது என் இந்திய இனம். 
 

அந்த இனத்திற்கு கிடைத்த வாழ்நாள்ச் சாதனை என்ன தெரியுங்களா. ஒரு சிவப்பு அட்டை. என்னே சதிராட்டங்கள். என்னே அறிவிலிச் சூத்திரங்கள்.

செந்நீரையும் வியர்வை முத்துகளையும் இந்த மலேசிய மண்ணுக்கு அப்படியே உரமாக்கிச் சென்றவர்கள் என் இந்திய இனத்தவர்கள்.

இன்னும் எத்தனையோ தியாகங்களை என் இனத்தவர் வடித்துக் கொட்டிச் சென்று இருக்கிறார்கள். ஆனால் அப்போதைய அரசு அவர்களை நோக்கிக் கக்கியது எல்லாம் நஞ்சு கலந்த பசப்பு மொழிகள். அதிலே கிண்டல், நக்கல், நையாண்டி, இனத் துவேசம், மதத் துவேசம். அடிவருடி அரசியல்வாதிகள் சிலரும் பலரும் கண்டு கொள்ளவே இல்லை.
 

சுத்தமான விசுவாசத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத என் இனப் பாமர மக்களின் இதயங்களைக் கூறு போட்டது அந்தக் கடந்த கால அரசு தானே.

இன மதப் பாகுபாட்டின் சர்வாதிகாரத்தில் அதிநவீனமாக என் இனத்தை ஒதுக்கி வைத்தது அந்தக் கடந்த கால அரசு தானே.

புதிய ஆட்சி வந்தால் இந்த நாடு மோசமாகிப் போகும் என்று சொன்னது அந்தக் கடந்த கால அரசு தானே. அந்த அம்புலிமாமா கதை எல்லாம் இனி வேண்டாங்க.

இனி நாம் தரப் போகின்ற மாற்றம் தான் நம் எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் அழியாச் சீதனம். அதுவே மலேசிய இந்தியர்களின் வரலாற்றுப் பொக்கிஷம்.


தெளிந்த நீரோடை போல ஓட்டுச் சாவடிக்குச் சென்றோம். நம் எதிர்கால நல்வாழ்விற்கு வேண்டினோம். நாளை நமதே என்று வாக்களித்தோம்.

நம் தலையில் நாமே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்ட அவலத்தை அன்றோடு அப்படியே தலைமுழுகி விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

வசதிகள் மாறுகிறது
வாய்ப்புகள் மாறுகிறது
பதவிகள் மாறுகிறது
ஆட்சிகள் மாறுகிறது

மாற்றம் ஒன்றே மாறாதது

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை; உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை; சிலருக்குப் புரிவதும் இல்லை; சொன்னாலும் உரைப்பதும் இல்லை. பலருக்குப் புரிவதும் இல்லை;

மலேசிய இந்தியர்களின் உடனடித் தேவை பணம் காசு இல்லைங்க. பட்டம் பதவி இல்லைங்க. மாட மாளிகை இல்லைங்க. ஆடம்பர அலங்காரங்களும் இல்லைங்க. சமுதாயத்தின் ஒற்றுமை தாங்க இப்போதைய அவசியத் தேவை.

மலேசிய இந்தியச் சமுதாயத்தின் தலைவர்களே, வேற்றுமைகளை மறந்து ஒன்று படுங்கள். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நேர்மையாகச் சேவை செய்யுங்கள். புண்ணியத்தைச் சேருங்கள். இதுவே ஒரு சமுதாயத்தின் பொதுநல அறிவிப்பு.
 

மலேசிய இந்தியர்களே, மாலை மரியாதைப் போட்டு ஆயிரம் டத்தோ ஆயிரம் டான்ஸ்ரீ போட்டு அப்படியே கூழைப் கும்பிடு போட்டு எவரையும் ரொம்பவும் தூக்கி வைத்து ஆட வேண்டாமே. அரசியல்வாதிகள் பொதுமக்களின் சேவகர்கள். அதை நினவில் கொள்வோம். போதும்.

ஒரு சீனர் அல்லது ஒரு மலாய்க்காரர் ஓர் அரசியல்வாதியிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பாருங்கள். கவனியுங்கள். அவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக அரசியல்வாதியைக் கன்னத்தில் அறைகின்ற கலாசாரம் வேண்டாமே. ஏற்கனவே ஒரு கன்னம் வீங்கி விட்டது. அதைத் தடவித் தடவி ஒத்தடம் கொடுத்து மண்ணையும் கவ்வியாச்சு.

62 ஆண்டுகள் அடிமைப்பட்டு வாழ்ந்து நொந்து போனது போதுங்க. இனி வரும் காலங்களில் இந்த பக்காத்தான் ஆட்சிக்காக மலேசியத் தமிழர்கள் ஒன்றுப்பட வேண்டும். நம் இந்தியச் சமுதாய எதிர்கால நலனுக்காக நம் வேற்றுமைகளை மறக்க வேண்டும்.

நமக்கு என ஒரு பிரதிநிதித்தை உருவாக்க வேண்டும். போட்டியும் பொறாமையும் இல்லாமல் நம் உரிமைகளுக்காகப் போராட வேண்டும். நல்ல அரசியல் சேவர்களை உருவாக்க வேண்டும்.
 

ஒவ்வோர் ஆட்சிக் காலத்திலும் நாம் எத்தனை எத்தனையோ இழந்தது விட்டோம். கணக்கில் அடங்கா. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய் மீட்டு எடுப்போம். நம் பிள்ளைகளுக்கு வயிறார சோறு போடுவோம். மடி நிறைய கல்வியைக் கொடுப்போம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பட்டதாரியை உருவாக்குவோம். அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைப்போம். இதை ஒரு சத்திய வாக்காக ஏற்றுக் கொள்வோம்.

இன்னும் ஒரு விசயம். இது யாரையும் எவரையும் பழி வாங்கும் நோக்கத்தில் நடந்த தேர்தல் அல்ல. சட்டமும், நீதியும், ஒழுங்கும், மரியாதையும் தவறிப் போய் சாக்காட்டில் தத்தளித்து மூழ்கிக் கொண்டு இருந்த போது, அவற்றைக் காப்பாற்றவே வந்த தேர்தல். அப்படிச் சொல்கிறார் துன் மகாதீர்.

இன்று தோல்வி கண்ட அதே அந்தப் பாரிசான் கட்சித் தலைமையில் 22 ஆண்டுகள் மலேசியாவை ஆட்சி செய்த அதே பிரதமர் சொல்கிறார் என்றால் அதில் நிச்சயம் ஓர் உண்மைச் சத்தியம் தொக்கி நிற்கிறது.

அண்மைய காலங்களில் அவருக்கு காலம் தாழ்ந்த சில கனவுகள். எதிர்காலத்தில் மலேசியா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனும் கனவுகள். அந்தக் கனவுகள் தன் வாழ்நாளிலேயே நனவுகளாக மாற வேண்டும் என நினைத்தார். கங்கணம் கட்டினார். அந்தக் கனவுகளின் நனவுகள் தான் இன்றைய மாபெரும் வெற்றி.

இந்த முறை மற்றும் ஒரு மிக முக்கியமான திருப்பம். இளம் சமூகத்தினர் 11% ஓட்டுப் போட வந்ததைத் தான் சொல்கிறேன். மொத்த வாக்குப் பதிவுகளில் பதினொரு விழுக்காடு 26 வயதிற்கும் குறைந்தவர்களின் வாக்கு.

ஒட்டு மொத்தமாக மலேசியர் எவருக்கும் பட்டவர்த்தனமான ஊழல் அரசை பிடிக்கவில்லை. அது தான் உண்மை. நாட்டிலே தலை விரித்தாடும் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள். அப்படி இருக்கும் போது மக்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த பணத்தை நாடோடிக் கொள்ளையர்கள் சூதாடுவதை இளைஞர்கள் விரும்பவில்லை. எதிர்த்தார்கள்.

அவர்களின் எதிர்காலம் சூன்யமாகிக் கொண்டு போவதை நன்றாகவே உணர்ந்து விட்டார்கள். அதை மாற்ற வேண்டும் என்று  நினைத்தார்கள். மாற்றியும் காட்டினார்கள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது. தெரியும் தானே. இங்கே சாது என்றால் பொதுமக்கள். காடு என்றால் ஊழல் பெருச்சாளிகள். ஒரு செருகல்.

இந்த உலகில் எந்த ஓர் அரசியல்வாதியும் ஒரு காமராசராக ஆக முடியாது. ஒரு கக்கனாகவும் ஆக முடியாது. கருவாட்டிற்கும் பூனைக்கும் கலப்புத் திருமணம் செய்து வைத்தாலும் அரசியல்வாதிக்கும் அகிம்சைக்கும் திருட்டுத் திருமணம் கூட செய்து வைக்க முடியாது. நோ சான்ஸ்.

அப்பேர்ப்பட்ட ஆபிரகாம் லிங்கனே தன் கடைசி நாட்களில் லஞ்சம் கொடுத்ததாக அரசல் புரசல். விடுங்கள். நம்ப கதைக்கு வருவோம்.

இந்த முறை மக்கள் விழித்துக் கொண்டார்கள். வெகுண்டு எழுந்தார்கள். மாற்றம் செய்தார்கள். ஆக அந்த வகையில் இந்தத் தேர்தல் வெற்றி என்பது மலேசிய மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு. அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

மலேசியத் தமிழர்கள் தங்கள் எதிர்ப்புகளை ஏற்கனவே பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சூசகமாகக் காட்டி வந்தார்கள். அசைக்க முடியாத தலைமைத்துவம் கண்டுகொள்ளவில்லை. அதனால் என்ன ஆனது.

தங்களின் இந்தியத் தலைவரையே தோல்வி அடையச் செய்தார்கள். இது உண்மை அல்ல என்று சொல்ல முடியாது. நான் சொல்லவில்லை. அது மக்களின் வெளிப்பாடு. தப்பு என்றால் மாண்புமிகு குலசேகரனைப் போய்க் கேளுங்கள். நன்றாகவே பதில் கிடைக்கும்.

மலேசியத் தமிழர்களுக்கு அவர்களின் உரிமை அவர்களுக்கு வேண்டும் என்று சொல்லி இண்ட்ராப் இயக்கத்தைத் தோற்றுவித்தார்கள். அப்படியே இந்த நாட்டையும் ஒரு கலக்கு கலக்கினார்கள். இத்தனை நடந்தும் மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி தன் சுயநலப் போக்கைக் கொஞ்சம்கூட மாற்றி அமைக்கவில்லை. 2013-தேர்தலில் சற்றே ஒரு லேசான மாற்றத்தை மக்கள்  ஏற்படுத்திக் காட்டினார்கள். அதில் சீனர்களின் பங்கு பெரும் பங்கு.

இருந்தாலும் 2013 தேர்தலில் பற்பல தில்லுமுல்லுகள். இந்தத் தேர்தலில் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் படையாகத் திரண்டனர். சத்தியமாகச் சொல்கிறேன். மலேசிய இந்திய இளைஞர்களைக் குண்டல் கும்பல்களின் வாரிசுகள் என்று அரசியல்வாதிகள் சிலர் புகழாரம் செய்தது உண்டு.

ஆனால் என்ன நடந்தது என்ன தெரியுமா. குண்டர்கள் கும்பல்கள் தாத்தாக்கள் அடியாட்கள் என்று எதுவுமே இல்லாமல் போனது தான் பெரிய விசயம். எல்லா இளைஞர்களும் ஒரே அணியில் ஒரே எண்ணத்தில் ஒரே நோக்கத்தில் ஒரே கொள்கையில் ஐக்கியமாகிப் போனார்கள். பக்காத்தான் வேட்பாளர்களைக் காப்பாற்றினார்கள்.

நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்.
கொள்கை வெல்வதே நான் கொண்ட இலட்சியம்.
இமய மலை ஆகாமல் எனது உயிர் போகாது.

15 மே 2018

வான் அசிசா வான் இஸ்மாயில்

ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்த ஒருவர் நாலு சுவர்களுக்குள் அடைத்து வைக்கப்பட்ட போது நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பார்க்கிற பட்டி தொட்டி எல்லாம் அவரைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. 
 

காய்கறி விற்கிற இடத்திலும் பேச்சு. நோய் நொடிக்கு மருந்து வாங்கப் போகிற இடத்திலும் பேச்சு. கோயிலுக்குப் போனால் அங்கேயும் பேச்சு. அட சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனாலும் அங்கேயும் சூப்பரன பேச்சுகள்.

இருந்தாலும் பாருங்கள். என் புருசனுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்று சொல்லி மார்தட்டி வீர முழக்கம் செய்தார் ஒரு பெண். அந்தப் பெண் தான் வான் அசிசா வான் இஸ்மாயில்.

இப்போது இந்த நாட்டின் துணைப் பிரதமர். அதாவது ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்தவரின் மனைவி அதே நாட்டின் துணைப் பிரதமர். ஓர் அதிசயம் ஆனால் உண்மை. 
 

இந்த உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு மலேசிய மக்கள் இந்த நாட்டின் வரலாற்றை மாற்றி அமைத்து விட்டார்கள். புது வரலாறு. புது யுகம். புதுத் தெம்புடன் மலேசிய மக்கள் பீடு நடை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்போது கணவனுக்காகப் போராடிய கண்ணகியின் கால் சிலம்புகள். இப்போது மலேசியர்களுக்காகப் போராடும் உரிமைகளின் வெள்ளிக் கொலுசுகள். சிதறிய சிலம்புகளையும் கொட்டிய கொலுசுகளையும்  வாரி அணைக்கும் ஒரு வனிதையின் சீற்றங்கள் வருகின்றன.
 

அசிசா எனும் பெயரில் அர்த்தமுள்ள உரிமையின் வடுக்கள் தெரிகின்றன. பெர்சே விழிப்புணர்வுகளின் ஈரம் காயாத சுவடுகள் தெரிகின்றன. வீர வசனங்களைப் பேசும் வரலாற்றுச் சான்றுகளும் தெரிகின்றன.

ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது கலாசாரப் பின்னணி. அது வாழையடி வாழையாக வளர்ந்துவிட்ட ஒரு வழிமுறை.

அவளை ஒரு காட்சிப் பொருளாகக் காட்டுவதும் அப்புறம் அதே அந்தக் காட்சிப் பொருளை உடல் பசிக்குத் தீனியாக மாற்றிக் கொள்வதும் மூத்த வர்க்கத்தின் முன்னணிச் சாகசங்களாக இருக்கலாம். இருந்தும் வரலாம். 
 

ஒன்று மட்டும் சொல்வேன். ஒரு பெண்ணை அவள் விருப்பப்படியே வாழ விடுவதே சிறப்பு. ஓர் ஆண் தன் அதிகாரத்தை ஒரு பெண்ணின் மீது திணிக்கலாம். அதே போல ஒரு பெண் தன் கணவனின் மீது தன் ஆதிக்க வலிமையைக் காட்டலாம்.

இந்த மாதிரியான கட்டத்தில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதே சிறப்பு. விடுங்கள். எல்லார் வீட்டிலும் வாசல்படிகள் இருக்கின்றன. கதவுகளும் இருக்கின்றன. தாழ்ப்பாள்களும் இருக்கின்றன.

நவீனப் பெண்ணிய சிந்தனைக்குச் சம்பளம் கொடுக்க வேண்டாம். சிவப்புக் கலரில் கம்பளமும் விரிக்க வேண்டாம். மெலிதாக ஒரு வாழ்த்துச் சொன்னாலே போதும்.

அப்படி நான் சொல்லவில்லை. மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நல்ல ஓர் அரசியல்வாதி சொல்கிறார். அந்த இடத்தில் நம்முடைய காவியத் தலைவி கண்ணகியும் இவரைத் தாண்டி வருகிறார் என்று நினைக்கிறேன். சொன்னால் தப்பு இல்லையே.

இவரை ஒரு முறை டத்தோ அம்பிகாவின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். ஒரு சில நிமிடங்களில் அவருடைய போராட்ட உணர்வுகள் வெளிப்படையாகத் தெரிய வந்தன. ஒரு நிமிடத்தையும் ஒரு யுகமாகப் பார்க்கின்றவர்.
 

ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்தவரின் மனைவி என்கின்ற பிகு இல்லை. மலேசியாவில் புகழ்பெற்ற கண் மருத்துவர்களில் ஒருவர் எனும் பந்தா கொஞ்சம்கூட இல்லை. மிக நேர்த்தியான அணுகுமுறை.

நான் இவரிடம் ரசித்தது அவருடைய மிக எளிமையான நடைமுறை வாழ்க்கை முறையாகும். அனைவரையும் அனுசரித்து அணைத்துப் போகும் அழகான தாய்மை முறை. அவரிடம் எதேச்சையாகக் காணப்படும் பக்குவமான பரிந்துரைகள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

அதையும் தாண்டி அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. கொஞ்ச நேரப் பேச்சில் மனதை மட்டும் கவரவில்லை. மனித உரிமைகளையும் கிள்ளிவிட்டு சென்று விட்டார் வான் அசீசா. அவருடைய நல்ல எண்ணஙகள் போதும். வாழ்த்துவோம்.

டத்தோ ஸ்ரீ, டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் 1952 டிசம்பர் 3-ஆம் தேதி, சிங்கப்பூர் கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையில் பிறந்தவர். அப்போது மலேசியாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இருந்தது. தந்தையாரின் பெயர் வான் இஸ்மாயில் வான் மொகமட். தாயாரின் பெயர் மரியா காமிஸ்.

வான் அசிசா இப்போதைக்கு மலேசியாவில் ஒரு பிரபலமான அரசியல்வாதி. 1990-களில் மலேசியாவின் துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் துணைவியார். இப்போது மலேசியாவின் துணைப் பிரதமர்.

மலேசியாவில் மக்கள் நீதிக் கட்சி எனும் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி அதன் தலைவராகப் பதவி வகித்தவர் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிய இரண்டாவது பெண்மணி. முதன் முதலாக அரசியல் கட்சியை உருவாக்கிய  பெண்மணி ஓர் இந்தியப் பெண்மணியாகும். யார் என்று நினைக்கிறீர்கள். விடையைப் பிறகு சொல்கிறேன்.

மலேசிய நாடாளுமன்ற மக்களவையில், மார்ச் 2008 லிருந்து 31 ஜூலை 2008 வரை எதிர்க்கட்சிகளின் தலைவராகச் சேவையாற்றியவர். தன்னுடைய கணவரின் அரசியல் வாழ்க்கையைச் சரி செய்வதற்காகத் தன் பகுதிநேர  மருத்துவத் தொழிலையும் தள்ளி வைத்தார்.
 

26 ஆகஸ்ட் 2008-இல் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றி பெற்றார்.

வான் அசிசா வான் இஸ்மாயில், கெடா, அலோர் ஸ்டார் நகரில் இருக்கும் செயிண்ட் நிக்கலஸ் கான்வெண்ட் பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர், நெகிரி செம்பிலான், சிரம்பான் நகரில் இருக்கும் துங்கு குருசியா கல்லூரியில் மேல்படிப்பைத் தொடர்ந்தார்.

அதன் பின்னர் 1973-ஆம் ஆண்டு அயர்லாந்து, டப்ளின் நகரில் இருக்கும் அரச அறுவை மருத்துவக் கல்லூரியில் (Royal College of Surgeons) மருத்துவப் படிப்பை மேற்கொண்டு மகப்பேறியல், பெண் நோயியல் துறைகளில் கல்வியைத் தொடர்ந்தார்.

அதே துறைகளில் சிறப்புத் தேர்வு பெற்றதால், கல்லூரியின் மெக்நாத்தன் ஜான்ஸ் (MacNoughton-Jones) தங்கப் பதக்கத்தையும் வென்றார். இருப்பினும் இவர் கண் மருத்துவத் துறையில்தான் நிபுணத்துவப் பட்டத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய வான் அசிசா, கோலாலம்பூர் பொது மருத்துவமனை, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைகளில் 14 ஆண்டுகள் மருத்துவராகச் சேவைகள் செய்தார். 1993-இல் இவருடைய கணவர் மலேசியாவின் துணைப் பிரதமர் ஆனதும் வான் அசிசா தன் மருத்துவத் தொழிலை ராஜிநாமா செய்தார்.

கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் பணி புரியும் போது அன்வார் இப்ராஹிமின் நட்பு கிடைத்தது. 1979-ஆம் ஆண்டு முதன்முறையாக கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அந்தச் சந்திப்பே அவர்களைக் குடும்ப வாழ்க்கையிலும் இணைத்தது. 28 பிப்ரவரி 1980-இல் அவர்களுடைய திருமணம் நடந்தது.

அப்போது அன்வார் இப்ராஹிம், அபிம் என்று அழைக்கப்படும் மலேசிய இஸ்லாமிய இளைஞர் அணியின் தலைவராக இருந்தார். வான் அசிசா வான் இஸ்மாயிலின் பெற்றோர்கள் இவர்களின் திருமணத்தை முதலில் ஏற்கவில்லை. இருப்பினும் முதல் குழந்தை பிறந்த பின்னர் பெற்றோர்களின் குடும்ப உறவுகள் சுமுக நிலைக்குத் திரும்பியது.

வான் அசிசா வான் இஸ்மாயிலின் மூதாதையர்கள் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப் படுகிறது. அதை வான் அசிசா வான் இஸ்மாயிலும் மறுக்கவில்லை. இவருடைய தந்தையார் டத்தோ வான் இஸ்மாயில் வான் மொகமட், சீன வம்சாவளியைச் சேர்ந்த டத்தின் மரியா காமிஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

வான் இஸ்மாயில் வான் மொகமட் தேசிய பாதுகாப்பு மன்றத்தில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இவர் பினாங்கு, செபராங் பிறை, சுங்கை பாக்காப் பகுதியைச் சேர்ந்தவர். இருந்தாலும் இவருடைய பூர்வீகம் கிளாந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸ் பகுதியைச் சார்ந்ததாகும்.

ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் வான் அசிசா வான் இஸ்மாயில் இரண்டாவது பிள்ளை. இவருடைய தம்பி பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார். இவருடைய தங்கை பெர்னாமா செய்தி நிறுவனத்தில் தலைமைச் செய்தியாளராகப் பணிபுரிகின்றார். இன்னொரு தங்கை வழக்குரைஞராகப் பணியாற்றுகின்றார்.

அன்வார் இப்ராஹிம் 20 செப்டம்பர் 1998-இல் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டதும், வான் அசிசா அரசியல் களத்தில் இறங்கினார். அதுவரை அவர் நல்ல ஒரு குடும்பப் பெண்ணாக, நல்ல ஒரு மருத்துவராகவே வாழ்ந்து வந்தார். தான் உண்டு தன் வேலை உண்டு. தன் குடும்பம் உண்டு என்று மற்ற எல்லாப் பெண்களையும் போலவே ஓர் எளிமையான சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

பொதுவாகவே, அவர் எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொண்டவர். பெரும் புள்ளியின் துணைவியார் என்று என்றைக்குமே அடையாளப் படுத்திக் கொண்டது இல்லை.

கணவர் கைது செய்யப்பட்டதும் (Reformasi movement) எனும் சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவித்தார். பெரும்பாலான மலேசியர்கள் அவருக்கு ஆதரவு அளித்ததற்கு அவருடைய எளிமைத்தனமும் ஒரு காரணமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

மாற்றுவோம் மாற்றிக் காட்டுவோம் என்பதே அந்த இயக்கத்தின் தாரக மந்திரமாகவும் இருந்தது.

பின்னர், 4 ஏப்ரல் 1999-இல் மக்கள் நீதிக் கட்சியைத் (Parti Keadilan Rakyat) தோற்றுவித்தார். அந்தக் கட்சிக்குத் தலைவரும் ஆனார். 3 ஆகஸ்ட் 2003-இல், மலேசியாவின் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றான மலேசிய மக்கள் கட்சியை, தன்னுடைய மக்கள் நீதிக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

இந்தக் காலக் கட்டத்தில் அவருடைய கணவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

1999 மலேசியப் பொதுத் தேர்தலில் வான் அசிசா, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 9077 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அத்தொகுதியில் வான் அசிசாவை பாரிசான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ இப்ராஹிம் சாட் என்பவர் எதிர்த்துப் போட்டியிட்டார்.

2004 பொதுத் தேர்தலிலும் அத்தொகுதியில் நின்று அவர் வெற்றி பெற்றார். மூன்றாவது முறையாக 2008 பொதுத் தேர்தலிலும், அதே தொகுதியில் வான் அசிசா வெற்றி வாகை சூடினார்.

31 ஜூலை 2008-இல் தன் நாடாளுமன்றப் பதவியை ராஜிநாமா செய்து தன் கணவரின் அரசியல் வாழ்க்கைக்கு வழிவிட்டார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.

பின்னர் அந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அன்வார் இப்ராஹிம் கெஅடிலான் கூட்டணியின் சார்பில் நின்று வெற்றி அடைந்தார் என்பது வரலாறு.

சரி. மலேசியாவில் முதன் முதலாக அரசியல் கட்சியை உருவாக்கிய  பெண்மணி ஓர் இந்தியப் பெண்மணி. அவர் யார் என்று  ஒரு கேள்வி கேட்டு இருந்தேன்.

அதற்கான பதில். அவர்தான் மலேசிய இந்தியர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன். தன்னலமற்றச் சேவைகளை இனம் காணாமல் வழங்கி வருபவர். மலேசிய மனங்களில் சிறந்த பெண்மணியாக அடையாளம் காண்பவர். அவரைப் பற்றி பின்னர் ஒரு கட்டுரையில் எழுதுகிறேன்.

”பெண்ணை  ஒரு கூண்டுக்குள் போட்டு அடைத்து அடிமைத்தனம் செய்வதைத் தயவுசெய்து நிறுத்துங்கள்.”

இப்படிச் சொல்பவர் வான் அசிசா. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி என்று புன்னகையும் செய்கிறார்.

அங்கே துணிச்சல்மிக்க பெண்மையின் நவரசங்கள் தெரிகின்றன. உதிரத்தையும் உடலையும் உரமாகத் தானம் செய்யும் உணர்வுகளும் தெரிகின்றன. தொடாதே, தொட்டால் விடாதே என்று உள்ளதைச் சொல்லும் உரிமைக் குரல்களும் கேட்கின்றன.

அதையும் தாண்டி உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிறது ஒரு மருத்துவ ஓவியம். அதுவே அந்த ஓவியத்தின் தாரக மந்திரம்.

வான் அசிசா வான் இஸ்மாயில். என்னைக் கவர்ந்த ஜீவனே… மறக்க முடியாத ஓர் இதிகாசம்!!

12 மே 2018

மலேசிய இந்தியர்களின் மாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாதது. இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. பூ காயாகிறது. காய் கனியாகிறது. கனி செடியாகிறது. செடி மரமாகிறது.

ஒரு குழந்தை பெண் ஆகிறாள். ஒரு பெண் தாய் ஆகிறாள். ஒரு தாய் பாட்டி ஆகிறாள். இளமை தேய்கிறது. முதுமை சாய்கிறது. அந்த முதுமை அப்படியே நலிந்து போய் மக்கி மண்ணாகிப் போகின்றது.


அந்த இடத்தில் புல்லும் பூக்கிறது. பூண்டும் பூக்கிறது. மறுபடியும் அங்கே ஒரு மாற்றம் மலர்கின்றது. இதைத் தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்கிறோம்.

மலேசியவாழ் இந்தியர்கள் ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்தார்கள்.

கடைசியில் தங்களின் இன உரிமைப் போராட்டத்தில் களம் இறங்க வேண்டிய ஓர் இறுக்கமான ஓர் இக்கட்டான சூழல். அவர்களின் எதிர்காலச் சந்ததியினருக்காக ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டிய ஓர் அர்ப்பணிப்பு நிலை. ஒரு விழிப்புணர்வு நிலை.



ஆக மாற்றம் என்பதே நேற்று வரை மலேசிய இந்தியர்களின் ஒரு மாற்றுச் சிந்தனை இலக்காகவே இருந்தது. ஒரு நல்ல ஒரு மாற்றம் வர வேண்டும் என்று நம்பிக்கை வைத்தார்கள். மாற்றியும் காட்டி விட்டார்கள். மாற்றி அமைத்த மலேசிய மக்களுக்கு நன்றிகள் ஆயிரம்.

அவர்களின் கோப தாபங்கள்; அவர்களின் இனப் பின்புலங்கள்; அவர்களின் சமூகக் கோட்பாடுகள்; அவர்களின் தனிமனித உணர்வுகள்; இவற்றை எல்லாம் ஒதுக்கித் வைத்தார்கள்.

அரசியல்வாதிகள் அவ்வப்போது ஆங்காங்கே அள்ளித் தெளித்த அற்ப காசுக்கு விலைபோன வீரமற்ற விளம்பரக் கூஜா தூக்கிகளை நினைத்துப் பார்த்தார்கள்.


ஆண்மை இழந்த ஒரு சில சமூகத் தலைவர்களையும் நினைத்துப் பார்த்தார்கள். உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு அப்பாவிப் பொது மக்களிடம் காட்டிய அநியாயங்களை அப்படியே மறைத்து அரசியல்வாதிகளுக்கு ஆலாபனை செய்த அந்த அடிவருடிகளை நினைத்துப் பார்த்தார்கள்.

வேசிகள் எப்படி தம் உடல்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்களோ அதே போல் இந்தக் அடிவருடிகளும் பணம் சம்பாதித்தார்கள்.

அரசியல்வாதிகளின் அநியாயத்தை தட்டிக் கேட்க, பொதுமக்கள் அனைவரும் வீதியில் இறங்கினார்கள். செருப்பால் அடிக்காத குறை. எச்சில் உமிழ்ந்தது போல் ஆட்சியை மாற்றி அமைத்தார்கள்.



 22 ஆண்டுகள் ஆட்சி செய்த துன் மகாதீர் மட்டும் தப்பு செய்யவில்லையா என்று பலரும் கேட்டார்கள். எவர் தான் தவறு செய்யவில்லை. சொல்லுங்கள்.

தலையே போய்க் கொண்டு இருந்தது. இதில் அப்படி என்னங்க முழங்கால் போகிறது முண்டம் போகிறது என்கிற பேச்சு. அணை உடைந்து வெள்ளம் வீட்டு வாசல் வரை வந்து கதவைத் தட்டிப் பார்க்கின்றது. சும்மா இருக்கலாமா.

அந்தச் சமயத்தில் மழை ஏன் வந்தது எப்படி வந்தது என்று எல்லாம் ஆராய்ச்சி பண்ணலாமா. கடந்து போனதைப் பற்றி பேசுவதில் அர்த்தமும் இல்லை. இப்படி கேட்டுக் கொண்டே இருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை. நிலைமை மேலும் மோசமாகிப் போகும் என்று முடிவு செய்தார்கள்.



 ஒன்று மட்டும் உண்மை. நஜீப் பிரதமராய் இருந்த காலக் கட்டத்தில் எக்கச் சக்கமான கொள்ளைக்காரர்கள். மலிந்து போய் கிடந்தார்கள். தடுக்கி விழுகிற இடத்தில் எல்லாம் திருட்டு மாங்காய்கள்.

மகாதீர் கொள்ளை அடித்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நாட்டை நன்றாகப் பார்த்துக் கொண்டார். நஜீப் மாதிரி இப்படி ஒரு மோசமான நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்லவில்லை. விலைவாசியை ஏற்றி வைத்துச் சங்கை அறுக்கவில்லை.

இப்படியே விட்டால் இந்த நாடு விரைவில் திவாலாகி விடும். 100% உண்மை. காசு பணம் உள்ளவர்களுக்கே பிரச்சினை என்றால் பாவம் ஏழை எளியவர்கள் என்னங்க செய்வார்கள் என்று சொல்லி ஒட்டு மொத்த மலேசியர்களும் விழித்துக் கொண்டார்கள்.



மகாதீர் என்பவர் தன் தவற்றை உணர்ந்து விட்டார். தான் கண்ணை மூடுவதற்குள் இந்த நாட்டை மீட்டு எடுக்க வேண்டும் என்பதே அவரின் அப்போதைய தீர்க்கமான நோக்கம். அவரின் இந்த 93 வயதிலும் களம் இறங்கி உள்ளார் என்பதே ஒரு பெரிய விசயம். அவருக்கு உதவியாக மலேசிய மக்கள் ஆதரவு கரம் நீட்டினார்கள். வெற்றியும் பெற்றார்கள்.

அன்பான வாசகர்களே உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். உங்கள் வீட்டில் அப்பா அம்மா, தாத்தா பாட்டி மற்ற எல்லோரிடமும் இப்போது நம் நாடு இருக்கும் உண்மையான நிலைமையை விவரமாக எடுத்துச் சொல்லுங்கள்.

இந்த நாட்டின் இப்போதைய அரசியல் நிலவரம் பற்றி சரியாகத் தெரியாமல் அந்தப் பெரியவர்கள் எஞ்சிய காலத்தை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். உண்மை நிலையை எடுத்துச் சொல்லுங்கள்.



ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். மகாதீர் அரசியல் அனுபவம் இல்லாதவர் அல்ல. அவரின் பொறுப்பு ஏற்று இருக்கும் தலைமைத்துவத்திற்குத் துணிந்து தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

அவர் வந்தால் மட்டும் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று பெரும்பாலான சீனர்களும், மலாய்க்காரர்களும் அன்றும் இன்றும் திண்ணமாக திடமாக நம்பினார்கள்.

அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து அவருடன் அணிவகுத்துச் செல்ல தயாராகி விட்டார்கள். அவர்களைப் போல நாமும் மகாதீர் மீது நம்பிக்கை வைப்போம். செயல் படுவோம். அவருக்கு ஆதரவாக இருப்போம்.



நம் இந்திய இளையோர்களிடம் காணப்படும் நடைமுறை விழிப்புணர்வு நம் பெரியவர்களிடம் மிதமாகவே குறைந்து காணப் படுகிறது. சஞ்சிக்கூலிகளாய் வந்த காலத்தில் இருந்தே தாய்க் கட்சிக்குதான் ஆதரவு என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் இப்போது நாடு இருக்கும் சூழலில் ஒரே ஒரு மாற்றத்தைச் செய்து காட்ட வேண்டும். அதுதான் நம்முடைய இப்போதைய பணிவான வேண்டுகோள். செய்து காட்டிவிட்டோம். ஆனால் தொடர வேண்டும்.

உயர் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் பொது மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தைக் கொள்ளை அடித்து மாட மாளிகைகள் கட்டி நாட்டையே சீரழித்து விட்டார்கள். இந்த விசயம் அந்தப் பெரியவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. பட்டும் படாமல் இருக்கிறார்கள். ஆகவே உண்மையான நிலவரம் அவர்களுக்குத் தெரிய வேண்டும்.



 இனிமேலும் மகாதீரின் பழைய குற்றங்களைப் பார்த்து ஒன்றும் நடக்கப் போவது இல்லை. அவரை விட்டால் தலைமை தாங்க இப்பொதைக்கு வேறும் யாரும் இல்லை. இப்போதைக்கு மகாதீர் மட்டுமே சரியான நேரத்தில் சரியான தலைவர். இவரைத் தவிர வேறு யாரும் இப்போதைய நடைமுறை தலைமைத்துவத்தை வழிநடத்த முடியாது.

அன்வார் அவர்கள் சிறையில் இருக்கிறார். தலைமை ஏற்க முடியாது. வான் அசிசா அவர்களால் முடியும். ஆனால் இப்பேர்ப்ப்ட்ட களேபரத்தில் அவர் துணிய வேண்டும். முடியுமா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி.

அனேகமாக அன்வார் அவர்களுக்கு நாளை அரசு மன்னிப்பு கிடைக்கலாம்.

மகாதீர் அவர்கள் இப்போதைய அரசியல் நிலையை நன்றாகத் தெரிந்து கொண்ட பின்னர் தான் திரும்பவும் அரசியலுக்கு வருகிறார். ஆக மீண்டும் தவறு செய்ய மாட்டார் என்று நம்புவோம்.



முதலில் நாம் பிறந்த இந்தப் பச்சை மண்ணிற்காக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் என்று பேதத்தை இப்போதைக்கு நினைத்துப் பார்க்க வேண்டாம். நம்முடைய இலக்கு என்பது ஒரு மாற்றம். அதை மட்டுமே கூர்ந்து அணுகிப் பயணிப்போம்.

ஒரு தடவை அல்ல ஆயிரம் தடவை யோசித்துப் பாருங்கள். நம் எதிர்காலத்திற்கும் நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் நாம் மாறித் தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

இப்போதைய காலக் கட்டத்தில் நாம் சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம்கூட சேமிக்க முடியவில்லை. வேலை இடத்தில் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. நிம்மதியாக தூங்க முடியவில்லை. நாளைக்கு என்ன நடக்கப் போகிறதோ எனும் ஓராயிரம் கவலைகள்.

நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு கணிசமான தொகை ஜி.எஸ்.டி. வரிக்கே போய்ச் சேர்கிறது. பொருட்களின் விலை அன்றாடம் ஏறிக் கொண்டே போகிறது.

எதைத் தொட்டாலும் பதை பதைக்கும் விலை. என்னதான் செய்வது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் விழிப் பிதுங்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

குடும்பத்திற்கு ஓர் ஆபத்து என்றால் என்ன செய்வது என்று தெரியாமல் வெம்பி வெதும்பி வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒன்று மட்டும் உண்மை. ஒரு சில உயர்மட்டப் பேர்வழிகள் பொது மக்களைத் தவிக்க விட்டு விட்டு அந்தப் பொது மக்களின் பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். அநியாயம்.

அந்தப் பேர்வழிகளில் ஒருவர் தன் மனைவியின் அழகு சாதனங்களுக்கும்; அவரின் குடும்பத்தார் பயன்படுத்தும் விலையுயர்ந்த பொருட்களுக்கும்; மனைவியின் ஆடம்பரச் செலவுகளுக்கும் பொது மக்களின் பணத்தை விரயம் செய்து வந்தார்.

வியர்வையும் இரத்தமும் சிந்திய ஏழை மக்களின் வரிப்பணத்தில் இப்படியும் ஓர் ஆடம்பர வாழ்க்கையா. சொல்லுங்கள்.

நம்முடைய ஒவ்வொரு நாளின் அடிப்படை தேவைகளுக்கு நாம் இப்போது சம்பாதிக்கும் பணம் சத்தியமாகப் பற்றவில்லை. என்ன செய்வது. பட்டப் பகலிலேயே கொள்ளை அடிக்கும் கூட்டம் இருக்கும் வரையில் ஏழைகள் பரம ஏழைகளாகி வருகிறார்கள். இதுதான் சத்தியமான உண்மை.

ஆக ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். துன் மாகாதீர் தலைமை பீடத்தில் மட்டுமே நம் அனைவருக்கும் பாவ விமோசனம். அது ஒன்று தான் நம் எதிர்காலத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும்.

நம் இந்தியச் சமுதாயத்திற்கு ஒரு மாற்றம் வேண்டும்; கண்டிப்பாக ஒரு மாற்றம் வரவேண்டும். இந்த நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

அதற்கு எப்படியும் குறைந்தது இன்னும் ஒரு பத்துப் பதினைந்து வருடங்களாவது பிடிக்கும். அந்தப் புனரமைப்பு பணி அப்படி ஒன்றும் எளிதான காரியம் அல்ல. நிர்வாகக் கட்டுக் கோப்பு மிக மிக அவசியம்.

வெளிநாட்டில் இருந்து வந்த வங்காளதேசிகளைப் பாருங்கள். இந்தோனேசியர்களைப் பாருங்கள். இந்த நாட்டிற்குக் கள்ளத் தனமாக வந்த ஆயிரக் கணக்கான பலர் இப்போது நீல நிற அடையாள அட்டைகளில் ஊர்க்கோலம் போகிறார்கள். ஞாயிற்றுக் கிழமையில் கோலாலம்பூர் வங்காளத் தேசிகளின் தலைநகரமாக மாறி விடுகிறது. போய்ப் பாருங்கள். தெரியும்.

இந்த வங்காளதேசிகள் நம் இனப் பெண்களிடமே அழகு காட்டி பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறார்கள். இன்னும் தொடர்கிறது. புத்தி கெட்ட நம் பெண்களும் பல்லைக் காட்டிக் கொண்டு போகின்றார்கள். எதைக் கழற்றி அடிப்பது என்று தெரியவில்லை.

அது மட்டும் இல்லீங்க. அப்படி ஒண்ட வந்த பிடாரிகளுக்கு எல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்து ஓட்டுப் போட வசதியும் செய்து கொடுத்தார்களே. என்னங்க அநியாயம். என்னே கொடுமை.

ஆனால் இந்த நாட்டிலே பிறந்து இந்த நாட்டிற்கே தங்களின் உயிரையும் உடலையும் அர்ப்பணித்த இந்தியர்கள் பலருக்கு அடையாள அட்டை கொடுக்க வக்கு இல்லை. வெட்கம்.

நம்மவர்கள் பலர் இன்னும் சிவப்பு அட்டையில்தான் அழுது அழுது அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கும் சூடு சொரணை உண்டு. மலேசிய இந்தியர்கள் சோற்றில் உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறார்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

நமக்கு கிடைத்த இந்த ஐந்தாண்டு கால வாய்ப்பை தவறவிட்டால் இன்னும் ஒரு வாய்ப்பு நமக்கு இனி நமக்கு கிடைக்கப் போவது இல்லை. ஆகவே மகாதீரின் பக்காத்தான் ஆட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்களும் நானும் போய் விடுவோம். நாம் போன பிறகு நம் பிள்ளைகள் அழுது அழுது நம்மைச் சபிக்க வேண்டுமா. சொல்லுங்கள்.

என் இந்திய இனம் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். என் சந்ததியினர் எதிர்காலத்தில் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டும். அதுதான் என்னுடைய நெஞ்சார்ந்த விருப்பம். இப்போதே ஒரு முடிவு செய்யுங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது

இந்த மண்ணின் எதிர்காலம்  சென்ற 9-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்வார்கள். மலேசிய இந்தியர்கள் பலரும் தீர யோசித்து தீர்க்கமாக முடிவு செய்து விட்டார்கள்.

மக்களின் தீர்ப்பு தான் இந்த நாட்டின் தலையெழுத்தையே முடிவு செய்தது. நல்ல ஒரு முடிவை எடுத்து விட்டார்கள்.

மலேசிய இந்தியர்கள் எடுத்த முடிவு அவர்களின் எதிர்காலத்தை மட்டும் அல்ல; அவர்ளின் பிள்ளைகளின் எதிர்காலத்தை மட்டும் அல்ல, அவர்களின் பேரப் பிள்ளைகளின் எதிர்காலத்தை மட்டும் அல்ல; அவர்களின் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலத்தை மட்டும் அல்ல; இந்த நாட்டின் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்காலத்தையே மாற்றிப் போட்ட ஒரு முடிவாக அமைந்து போனது. மலேசிய இந்தியர்கள் எடுத்த முடிவை வாழ்த்துகிறோம்.