22 நவம்பர் 2019

சொஸ்மா கைதிகளை விடுதலை செய்யுங்கள்

தமிழ் மலர் - 22.11.2019

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடபு இருப்பதாகக் கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 பேர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை என தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார். 


இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து தாம் பேசவிருப்பதாக ஜ.செ.க. துணைத் தலைவருமான அவர் கூறினார்.

நேற்று மலேசிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த 12 பேரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த பின் இந்த உறுதி மொழியை அவர் வழங்கினார்.

எழில் கொஞ்சும் கேமரன் மலை - 2

தமிழ் மலர் - 22.11.2019

சர் வில்லியம் கார்டன் கேமரன் (Sir William Cameron). இவர் பிறந்த ஆண்டு: 1883. மறைந்த தேதி: 20 நவம்பர் 1886. இவர் மறைந்த இடம் சிங்கப்பூர். இருப்பினும் இவர் அதிகமாகத் தொங்காட் அலி எனும் வலி நிவாரணியைச் சாப்பிட்டதால் இறந்து விட்டதாக நேற்றைய கட்டுரையில் சொல்லி இருந்தேன். 



இவருடைய வேறொரு வரலாற்றையும் படித்துப் பார்த்தேன். இவருக்கு மறதி நோய் ஏற்பட்டது உண்மை. ஆனால் அவர் இங்கிலாந்திற்குப் போய் அங்கே இறந்து விட்டதாக அதில் சொல்லப்பட்டு இருக்கிறது. சற்றே குழப்பம். எனினும் இவர் கேமரன் மலையை 1885-ஆம் ஆண்டில் கண்டுபிடித்து இருக்கிறார். அதுதான் முக்கியமான காலக் குறிப்பு.

வில்லியம் கேமரன் கண்டுபிடிப்பிற்கும் அவரின் இறப்பிற்கும் இருபத்தெட்டு ஆண்டுகள் இடைவெளி இருப்பதையும் கவனியுங்கள். அந்த வகையில் இவர் மலாயாவில் இறக்கவில்லை. இங்கிலாந்தில் இறந்து இருக்கிறார் என்பது உறுதியாகிறது. பிரச்சினை இல்லை.

கேமரன் மலை எனும் ஒரு பச்சை அதிசயத்தைக் கண்டுபிடித்து நமக்கு எல்லாம் கொடுத்து விட்டுச் சென்று இருக்கிறாரே. அது வரையில் அவருக்கு நன்றி சொல்வோம்.



உலக மக்கள் இவரை மறந்தாலும் மலேசிய மக்கள் மட்டும் இவரை என்றைக்கும் மறக்க மாட்டார்கள். ஏன் தெரியுங்களா.

கேமரன் மலை எனும் ஓர் அழகு ஓவியத்தை அவரின் அன்புச் சீதனமாய்க் கொடுத்துச் சென்ற ஓர் அழகிய மைந்தர்.

1886-ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தின் சுல்தானாகப் பதவி வகித்த சுல்தான் யூசோப் ஷரிபுடின் அவர்களே (Sultan Yusuf Sharifuddin Mudzaffar Shah) தன் வாழ்க்கைக் குறிப்புகளில் வில்லியம் கேமரனைப் பற்றி பதிவு செய்து இருக்கிறார்.

வில்லியம் கேமரன் ஓர் அற்புதமான கலா ரசிகர். ஓர் அழகான சகல கலா கள்வர். வில்லியம் கேமரனின் கலா ரசிப்புத் தன்மைக்கு பேராக் சுல்தானின் அந்த வார்த்தைகள் போதும். 


சர் வில்லியம் கார்டன் கேமரன்

ஆக அப்படிப்பட்ட ஒரு கலா ரசிகரை எப்படி நம்மால் மறக்க முடியும். ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்வார்கள். ஆனாலும் அறுபத்து ஐந்தாவது கலை என்கிற ஒரு கலை இருக்கிறது. அதுதான் கேமரன் மலை என்கிற அழகுக் கலை.

கேமரன் மலையில் வில்லியம் கேமரன் இப்படி சிருங்காரம் பாடி இருக்கலாம்.

என்ன விலை அழகே...
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்...
விலை உயிர் என்றாலும் தருவேன்...
இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன்...
ஒரு மொழி இல்லாமல் மௌனமாகிறேன்...

என்று கேமரன்மலைச் சிகரத்தில் காதல் கீதம் பாடி இருக்கலாம்.

என்ன இருந்தாலும் கேமரன்மலை பச்சை பசும் மகிமைகளை மனதாரப் போற்றிப் புகழ்ந்தவர். கேமரன்மலையின் கவின்மிகு கலா ஓவியங்களை அணு அணுவாய் ரசித்தவர். அதன் அழகு பிம்பங்களை நுனி முதல் அடி வரை நுகர்ந்து பார்த்தவர். நல்ல ஒரு கலா ரசிகர்.


1930-ஆம் ஆண்டுகளில் போ தேயிலை தோட்டம்

என்னைக் கேட்டால் கேமரன் மலை என்பது ஒரு மலைக்காடு அல்ல. அது பல்லாயிரம் பச்சை ஜீவன்கள் உயிர் வாழும் அழகிய மழைக்காடு. குறிப்பாக மலேசிய இந்தியர்களுக்குக் கிடைத்த மதிப்பில்லா சீதனக்காடு. ஒட்டு மொத்த மலேசியர்களுக்குக் கிடைத்த ஒரு முத்து. ரொம்பவும் புகழ்வதாக நினைக்க வேண்டாம்.  புகழாமல் இருக்கவும் முடியவில்லையே.

மலாயாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் பல நல்ல காரியங்களைச் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அதில் உலகமே திரும்பிப் பார்க்கிற மாதிரி கேமரன் மலையின் கலா அழகிற்கு மெருகேற்றி விட்டுப் போய் இருக்கிறார்கள். நன்றி சொல்வோம்.

ஆங்கிலேயர்கள் குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள். இங்கிலாந்து ஒரு குளிர்நாடு. கோடை காலங்களில் ஓய்வு எடுத்துப் பழக்கப் பட்டவர்கள். மலாயா ஒரு வெப்ப மண்டல நாடு. ஆக அவர்கள் ஓய்வு எடுக்க குளிரான மலைப் பகுதிகளில் தேவைப் பட்டன.

அந்த வகையில் 1788-இல் பினாங்கு மலையில் ஒர் இடம் கிடைத்தது. சர் பிரான்சிஸ் லைட் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே. 



அவர்தான் பினாங்கு மலையில் ஒரு குழுவுடன் முதன்முதலாக ஏறியவர். உச்சியில் ஒரு கொடிக் கம்பத்தை நட்டுவிட்டு வந்தவர். அப்புறம் வந்த ஆங்கிலேயர்கள் உச்சி மலைக்கு ஒரு கம்பிச் சடக்கைப் போட்டார்கள். அப்படியே உச்சியிக்குப் போய் குடிசைகளைப் போட்டுக் குளிர் காய்ந்தார்கள்.

அதன் பின்னர் தைப்பிங் மாக்ஸ்வல் ஓய்வுத்தளம் 1884-இல் உருவாக்கப் பட்டது.  அடுத்து பிரேசர் மலை. மலாயா ரப்பரின் தந்தை என்று பெருமையாக அழைக்கப்படும் எச். என். ரிட்லி அவர்களால் பிரேசர் மலையில் 1897-இல் ஓய்வுத் தளம் அமைக்கப் பட்டது.

இங்கே ஒரு சின்னச் செருகல். கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். பிரேசர் மலையைக் கண்டுபிடித்தது என்னவோ லூயி ஜேம்ஸ் பிரேசர் (Louis James Fraser) என்பவர்தான். அவருடைய பெயர்தான் வைக்கப்பட்டும் இருக்கிறது.

இருந்தாலும் எச்.என். ரிட்லிதான் அந்த மலைக்குப் பெருமை சேர்த்தவர். அதை நாம் மறந்துவிடக் கூடாது.

எச்.என். ரிட்லி மட்டும் இந்த நாட்டிற்கு வராமல் இருந்து இருந்தால் தமிழர்களும் இந்த நாட்டிற்கு பெரும் அள்வில் வந்து இருக்க முடியாது. தென்னிந்தியாவில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வர பிள்ளையார் சுழி போட்டவரும் இதே இந்த எச்.என். ரிட்லி தான்.  



மலேசியத் தமிழர்கள் போற்ற வேண்டிய மனிதர். எச்.என்.ரிட்லி ரப்பரின் மூலமாக மலேசியாவை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். சரி.

அடுத்து பிரேசர் மலை. இந்த மலையில் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடக்கிறது. இப்போதைக்கு ஒரு சின்னத் தகவல். 1951 அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி மலாயாவில் அவசரகாலம் நடைமுறையில் இருந்த போது நடந்த நிகழ்ச்சி.

அப்போது மலாயாவின் உயர் ஆணையராக இருந்த சர் ஹென்றி கர்னி. பிரேசர் மலைக்குப் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது மலாயாக் கம்யூனிஸ்டுகளால் சுடப் பட்டார்.

மலாயாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களில் மிக மிக மரியாதைக்கு உரியவர் ஒருவர் இருந்தார் என்றால் அவர்தான் இந்த சர் ஹென்றி கர்னி. அவருடைய பெயரில் மலேசியாவில் பல சாலைகள்; பல இடங்கள் உள்ளன.

அவருடைய கல்லறைகூட கோலாலம்பூர், ஜாலான் செராஸ் கிறிஸ்துவ மயானத்தில் தான் இருக்கிறது. ஓய்வு கிடைத்தால் போய்ப் பார்த்து மரியாதை செய்து விட்டு வாருங்கள். கேமரன் மலையின் வரலாறு என்று எழுதப் போய் எங்கு எங்கோ போய்விட்டேன்.



ஒரு காலக் கட்டத்தில் அதாவது 1930-களில் பினாங்கு கொடிமலை, பிரேசர் மலை, மேக்ஸ்வல் மலை போன்ற ஓய்வுத் தளங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகரித்தது.

அதனால் இடப் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் பிரேசர் மலைக்குப் பதிலாக வேறு ஒரு மலைப் பிரதேசத்தை ஆங்கிலேயர்கள் தேடிக் கொண்டு இருந்தார்கள்.

பிரேசர் மலை மலாயா வாழ் ஆங்கிலேயர்களுக்குத் தலையாய ஓய்வுத் தளமாக விளங்கியது. இருந்தாலும் அங்கே மனித மனங்களைப் பெரிதாக ஈர்க்கும் வகையில் அப்படி ஒன்றும் சிறப்பாக எதுவும் இல்லை.

கொஞ்சம் குளிர். கொஞ்சம் பங்களாக்கள். சுற்றிச் சுற்றி கொஞ்சம் பறவைகள். கொஞ்சம் குரங்குகள் கூட்டம். நாலைந்து சாப்பாட்டுக் கடைகள். நாலைந்து மதுபானக் கடைகள். சமயங்களில் புலிகளின் நடமாட்டமும் இருந்து இருக்கிறது.

ஆக பிரேசர் மலைக்கு மாற்று இடமாகத் தேடிக் கொண்டு இருந்தார்கள். அதில் சிக்கியது தான் கேமரன் மலை.

நாற்பது ஆண்டுகள் கழித்து சர் ஜார்ஜ் மேக்ஸ்வல் என்பவர் கேமரன் மலைப் பகுதிக்குச் சென்றார். இது 1925-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

இந்த ஜார்ஜ் மேக்ஸ்வல்தான் தைப்பிங் நகரில் மேக்ஸ்வல் மலையைக் கண்டுபிடித்தவர் ஆகும்.

கேமரன் மலையில் ஜார்ஜ் மேக்ஸ்வல் கண்ட இயற்கையின் அழகைப் பற்றி ஆங்கிலேய அரசு நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அந்தக் காலக் கட்டத்தில் பேராக் மாநிலத்தின் ஆங்கிலேய ஆளுநராக சர் ஹியூ லோ என்பவர் இருந்தார்.

கேமரன் மலையைப் பற்றி கேள்விப்பட்ட ஹியூ லோ, எதிர்காலத்தில் அது ஒரு சிறந்த ஓய்வுத் தளமாக அமையும் என்பதை யூகித்து விட்டார். ஆக அதை விரிவுபடுத்த ஆசைப் பட்டார்.

அதற்கு முன்னர் 1896-ஆம் ஆண்டில் ஒரு குறுகிய பாதை இருந்தது. தாப்பாவில் இருந்து தானா ராத்தாவிற்குப் போகும் பாதை. ரொம்பவும் குறுகலான பாதை. குதிரைகளையும் மாடுகளையும் பயன்படுத்தினார்கள். இந்தப் பாதையை 1902-ஆம் ஆண்டில் சற்றே பெரிதாக்கினார்கள். 1925-ஆம் ஆண்டில் இந்தப் பாதையைப் பயன்படுத்தித் தான் ஜார்ஜ் மேக்ஸ்வல் கேமரன் மலை உச்சிக்குப் போனார். நில ஆய்வுகள் செய்தார். பிரிஞ்சாங் பகுதியில் ஓய்வுச் சாவடி கட்டுவதற்கு ஐடியா கொடுத்ததும் இவர் தான்.

இப்போது தாப்பாவில் இருந்து பிரிஞ்சாங்கிற்கு 60 கி.மீ. தெரிந்த விசயம். 1960 – 1970-ஆம் ஆண்டுகளில் இவ்வளவு தூரத்திற்கும் ஆயிரம் வளைவுகளாவது இருக்கும். போய்ச் சேர்வதற்குள் மண்டை கிறுகிறுத்துப் போகும். ஆக இப்போது இதற்கே இப்படி அலட்டிக் கொள்கிறோமே 1930-களில் எருமை மாட்டு வண்டிகளில் பயணம் போய் இருக்கிறார்களே. என்ன சொல்லப் போகிறீர்கள். எத்தனை நாட்கள் பிடித்து இருக்கும். குறைந்தது ஒரு வாரமாவது பிடித்து இருக்கும். இல்லீங்களா. மகிழ்ச்சி அடையுங்கள்.

1926-ஆம் ஆண்டில் தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்கு ஒரு சாலையை அமைக்கத் திட்டம் வகுத்தார்கள்.

அப்போதே பத்து மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப் பட்டது. இப்போதைய கணக்குப்படி முன்னூறு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி நிற்கும். நான் சொல்வது 1920-ஆம் ஆண்டுகளில் நடந்த கதை.

தாப்பா  - கேமரன் மலை சாலையை அமைக்க ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போக்டென் பிரிஸ்பர்ன் கம்பெனி (Messrs. Fogden, Brisbane and Company) தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனத்திற்கு 250,000 டாலர்கள் முன்பணம் வழங்கப் பட்டது. 1928 ஜனவரி முதல் தேதி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின.

அது ஒரு சவால்மிக்க நிர்மாணிப்புப் பணி ஆகும். குதிரை அல்லது மாட்டு வண்டிகளில், தளவாடப் பொருட்கள் கேமரன் மலைக்குக் கொண்டு செல்லப் பட்டன. பின்னர் நீராவி இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.

ஒவ்வொரு நாளும் 500 லிருந்து 3000 பேர் வேலை செய்தனர். ஏறக்குறைய 375 பேர் மலேரியா காய்ச்சலினால் இறந்து போனார்கள். ஒரு சிலர் பூர்வீகப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு காட்டுக்குள் காணாமல் போயினர். முக்கால்வாசி பேர் நம்முடைய இந்திய மன்மத ராசாக்கள்.

எது எப்படியோ காட்டுக்குள் போன நம்ப ராசாக்கள் அங்கே ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இந்திய லாவண்யம் ’பளிச்’ சென்று தெரியும்.

அதற்கு அப்புறம் மூன்று ஆண்டுகளில் கேமரன் மலைக்குச் சாலை அமைக்கப்பட்டது. அடுத்து ரிங்லெட்டில் இருந்து தானா ராத்தாவிற்கு சாலை அமைத்தார்கள்.

அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் பிரிஞ்சாங் வரை சாலை அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களும் சீனர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சின்ன வீடுகளையும் பெரிய பெரிய பங்களாக்களையும் கட்டிக் கொண்டார்கள். தானா ராத்தா அந்த மாதிரியான இங்கிலாந்து ’ஸ்க்காட்டிஸ்’ பங்களாக்களை நிறைய பார்க்கலாம்.

1929-ஆம் ஆண்டில் போ தேயிலைத் தோட்டம் உருவானது. போ தேயிலைத் தோட்டத்தைப் பற்றி நாளைய கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

அதன் பின்னர் கேமரன் மலை படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. 2006-இல் சிம்பாங் பூலாய் பகுதியில் இருந்து கம்போங் ராஜாவிற்குப் போக ஒரு நவீன விரைவு சாலையையும் அமைத்து விட்டார்கள்.

(தொடரும்)

சான்றுகள்:


1. Yanne, Andrew; Heller, Gillis (2009). Signs of a Colonial Era. Hong Kong University Press. pp. 56–57.

2. www.cameronhighlandsinfo.com/history/

3. http://www.cameron-highland-destination.com/cameron-highlands-history.html

21 நவம்பர் 2019

இனிய தமிழ் மொழி என்றும் வாழும்


தமிழ்ப் பள்ளிகள் முதலிடம். 2019 தேர்ச்சி முடிவுகளைக் கவனியுங்கள்.
UPSR தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும்; குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும்;  அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம் வாழ்த்துகள்.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Saravana Gugen: இவ்வளவு பாடுபட்டு இடைநிலைப் பள்ளி செல்லும் நம் செல்வங்கள்... இனவாத கல்வி முறையால் மழுங்கடிக்கப் படுவது வேதனையான உண்மை.


Muthukrishnan Ipoh: புண்ணியமான பூமியை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்...

Kumaravel Muthu Goundan: சவால்களை எதிர்கொள்ளும் மனத் திண்மையை ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் இருந்தே கற்பித்தல் வேண்டும்... மாணவர்களுக்கு வரும் காலங்கள் இன்னும் சவால் மிகுந்ததாகவையாக இருக்கும். தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.


Ammini Ayavoo: பரிதாபமான வாழ்க்கைதான்... இன்னும் 5 ஆண்டுகள் இடைநிலைப் பள்ளியில்... பேர் பதிக்க வேண்டுமே... நிறத்தை வைத்து... கிண்டல் கேலி... ஆசிரியர்களின் பாராமுகம்... மொழி ஆளுமை குறைபாடுகள்... பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்க வேண்டுமே...


Poobalan Balan >>> Ammini Ayavoo: அக்கா, அந்தச் சோதனைகளை எத்தனையோ மாணவர்கள் தாண்டிச் சாதனைகளைப் படைத்து வருவதை உண்மையில் நாம் பாராட்டவே வேண்டும். இதுவும் கடந்து போகும்.


Ammini Ayavoo >>> Poobalan Balan: சவால்களைச் சமாளிக்க வேண்டுமே... பல மாணவர்கள் திசை திரும்புவது... இடைநிலைப் பள்ளியில் தான்...

Poobalan Balan >>> Ammini Ayavoo: கசப்பான உண்மைதான்.


Peter Johnson Durairaj: நம் செல்வங்கள் SMK-இல் கல்வியைத் தொடர்கையில் மேலும் சிறப்பான அடைவு நிலையினைப் பதிவு செய்ய வேண்டும்.


Muthukrishnan Ipoh: வாழ்த்துகள் ஐயா...


Alexander Annappan: வீர வசனம் பேசி நமது தமிழ் பள்ளிகளை மூட வேண்டும்



Varusai Omar: இது உங்கள் பார்வைக்கு: The PM for reasons best known to himself only, protecting a wanted criminal and extreme Islamic preacher ... wanted by India to face criminal charges for frauds and money laundering.



Pushpalata Ramasamy: சாவல்களைச் சமாளிக்கும் ஆற்றல் பெற்று நம் செல்வங்கள் வளர இறையருள் துணை நிற்க வேண்டுவோம்.


Sharma Muthusamy: வாழ்த்துவோம்... வாழ்க வளமுடன்...




எழில் கொஞ்சும் கேமரன் மலை - 1

இயற்கை அன்னைக்கு நெஞ்சிலே வஞ்சகம் இல்லை. ஈராயிரம் இறக்கைகள் கட்டினாலும் இல்லை என்று சொல்லும் மனசும் இல்லை. அள்ளி அள்ளி வாரி இறைக்க மட்டுமே தெரியும். இயற்கை அழகு என்பது சொல்லாமல் கொள்ளாமல் இறைவன் தந்த ஓர் அட்சயப் பாத்திரம். அர்ப்பணிப்பு வளாகத்தில் மணிமுத்துகளின் சீதனத் தடாகம்.


மலேசிய நாட்டிலே பார்க்கும் இடம் எல்லாம் இயற்கை அன்னை சிந்தாமல் சிதறாமல் சீர் சிறப்புகளை வாரி இறைத்துவிட்டுப் போய் இருக்கிறாள். அத்தனையும் பச்சைப் பசேல் சீதனக் கொலுசுகள். அந்த இயற்கை அன்னைக்கு முதல் மரியாதை.

அந்தச் சீதனப் பொற் கலசங்களில் ஓர் அழகியச் சீர்வரிசை தான் கேமரன் மலை. இயற்கை அன்னையின் படைப்புகளில் அவளையே பிரமிக்கச் செய்த பச்சை மாணிக்கத்தின் பச்சைப் பெரும் வாசல்.

பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல். ஒரே வார்த்தையில் சொன்னால் வந்தாரை வாழ வைக்கும் புண்ணியமான பச்சை மலை. அது ஒரு பச்சைப் பொக்கிஷம்.

1885-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது மலாயாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். 



மலாயாவின் தித்திவாங்சா மத்தியமலைத் தொடரை நிலஆய்வு செய்ய வேண்டும். மலையின் எல்லைகளை அங்குலம் தவறாமல் அளந்து பார்க்க வேண்டும். அது அவர்களின் ஒரு நீண்ட நாள் திட்டம்.

அந்தக் காலக் கட்டத்தில் தான் இந்தியாவின் இமயமலையிலும் நில ஆய்வுகள் செய்து கொண்டு இருந்தார்கள்.

கேமரன் மலையில் ஆய்வுகள் செய்வதற்காக வில்லியம் கார்டன் கேமரன் (Sir William Gordon Cameron) என்பவரை அனுப்பி வைத்தார்கள். அவருக்குத் துணையாக குலோப் ரியாவ் (Kulop Riau) என்பவர். இவர்களைப் பற்றிய விவரங்களைப் பின்னர் சொல்கிறேன்.

இந்தத் தித்திவாங்சா மத்தியமலைத் தொடர்தான் மலாயாத் தீபகற்பத்தை இரண்டாகப் பிரிக்கிறது. அந்தப் பக்கம் கிழக்குக் கரை. தென்சீனக் கடல் உரசிப் பார்க்கும் மணல் காட்டுத் தரைகள். இந்தப் பக்கம் மேற்குக் கரை. மலாக்கா நீரிணை ஐலசா பாடும் மலைக்காட்டுக் கரைகள்.

மத்திய மலைப் பகுதியின் பெரும்பாலான பகுதிகள் 1200 - 1800 மீட்டர் உயரத்தில் உள்ளன. குனோங் தகானில் இருந்து குனோங் லேடாங் வரை நூற்றுக் கணக்கான மலைகள்.

ஆக வில்லியம் கேமரனின் ஆய்வுக்குத் தடபுடலான ஏற்பாடுகள். மூட்டை மூட்டையாக உணவுப் பொருட்கள்; பெட்டி பெட்டியாக நில ஆய்வுப் பொருட்கள்; குவியல் குவியலாகக் கூடாரங்கள். இப்படி எக்கச்சக்கமான சாதனங்கள். தளவாடங்கள். சுமைகளைத் தூக்கிச் செல்ல முப்பது நாற்பது கூலியாட்கள்.

வழிகாட்டிகளாக இருபதுக்கும் மேற்பட்ட பூர்வீகக் குடிமக்கள். இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் பதினைந்து யானைகள். இருபது குதிரைகள். முப்பது கேவேறு கழுதைகள். டசன் கணக்கில் வேட்டை நாய்கள். கூடவே சாப்பாட்டுச் சாங்கிய சம்பிரதாயங்களுக்கு ஆடுகள் மாடுகள். இப்படி ஒரு பெரிய பட்டாளமே நில ஆய்வுக் களத்தில் இறங்கியது.

அவர்கள் முதலில் ஈப்போவில் கூடாரம் போட்டு இருக்கிறார்கள். இரு குழுக்களுக்காகப் பிரிக்கப் பட்டார்கள். ஒரு குழுவினர் சிம்மோர் - தானா ஈத்தாம் வழியாகத் தஞ்சோங் ரம்புத்தான் போய் இருக்கிறார்கள். மற்றும் ஒரு குழுவினர் ஈப்போவில் இருந்து தம்பூன் வழியாக போய் இருக்கிறார்கள்.  பின்னர் தஞ்சோங் ரம்புத்தானில் இருந்து மேற்கு மலைத் தொடரில் ஏறி இருக்கிறார்கள்.

தஞ்சோங் ரம்புத்தான் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அங்கே மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்ற ஒரு புனர்வாழ்வு மையம் உள்ளது. இப்போதும் இருக்கின்றது. தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

கேமரன் மலையில் ஏறுவதற்கு ஏன் தஞ்சோங் ரம்புத்தான் வழியாகப் போக வேண்டும். இப்படியும் சிலர் கேட்கலாம். நீங்கள் நினைக்கிற மாதிரி அப்போது தாப்பா பாதையும் இல்லை. சிம்பாங் பூலாய் பாதையும் இல்லை.

ஒரே ஒரு காட்டுப் பாதை மட்டுமே இருந்தது. அதுவும் ஒற்றையடிப் பாதை. ஏறினாலும் வழுக்கும். இறங்கினாலும் வழுக்கும். அப்படி ஒரு நெரிசலான பாதை. காட்டு யானைகள் கர்ஜனை செய்த பாதை.

ஏன் என்றால் அந்தப் பாதையைப் பெரும்பாலும் காட்டு யானைகள் பயன்படுத்தி வந்து இருக்கின்றன. இதில் விழுந்து எழுந்து நடப்பதற்கு நன்றாகவே காட்டு மரங்களின் இடக்கு முடக்கு வேர்கள். இருந்தாலும் ‘டிராபிக் ஜேம்’ இல்லாத பாதை. ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அது தான் தஞ்சோங் ரம்புத்தான் காட்டுப் பாதை. வேறு எந்தப் பாதையும் அப்போது இல்லை. 130 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

சில மாதங்கள் பயணம் செய்து இருக்கிறார்கள். இரண்டு மூன்று மாதங்கள் பிடித்து இருக்கலாம். போகும் வழியில் பற்பல நில ஆய்வுகள். பற்பல வரைபடப் பதிவுகள். சரி.

அப்படி ஏறிக் கொண்டு இருக்கும் போது ஒரு நாள் ஓர் அதிசயம். பச்சை மலைகளுக்கு நடுவில் ஒரு பெரிய பச்சை பிருந்தாவனம். பச்சை நீலப் போர்வையை விரித்துப் படர்ந்து விரிந்து படுத்துக் கிடப்பதைப் பார்த்து எல்லோரும் அதிசயித்துப் போனார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் இயற்கை அன்னை நடனம் ஆடி இருக்கிறாள். கண்கள் அசந்து போய் இருக்கலாம். சின்ன ஒரு கற்பனைச் செருகல்.

அதைப் பார்த்த வில்லியம் கேமரன், ‘இங்கேதான் உலகின் எட்டாவது அதிசயம் மறைந்து கிடக்கிறது’ என்று சொன்னாராம். எப்படிங்க. உண்மையிலேயே கேமரன் மலை ஓர் அதிசயம் தாங்க.

என்னைக் கேட்டால் கேமரன் மலை என்பது ஒரு பச்சை அழகு ஓவியம். கேமரன் மலையை மிஞ்சும் அளவிற்கு மலேசியாவில் வேறு எந்த மலையும் இல்லை. ஒன் மினிட் பிளீஸ்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த கேமரன் மலை வேறு. இப்போது நான் பார்க்கின்ற கேமரன் மலை வேறு. அது ஒரு சோகக் கதை. இப்போது இந்த நேரத்தில் வேண்டாமே.

அந்தக் காலக் கட்டத்தில் வில்லியம் கேமரன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இயற்கை அன்னை நடனம் ஆடிய பசும் புல்வெளி. பின்னே இருக்காதா... மனித வாடையைச் சுவாசிக்காத மலையாச்சே... அதனால் தான் பார்த்து மெய்மறந்து போய் இருக்கிறார்கள்.

வில்லியம் கேமரனின் இரு முக்கிய ஆய்வுப் பணிகள். முதலாவது ஆய்வு: கிந்தா ஆறு எங்கே உற்பத்தி ஆகிறது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவது ஆய்வு: பேராக் - பகாங் மாநிலங்களின் எல்லைகளைப் பிரிக்க வேண்டும். மாநிலங்களின் எல்லைகோடு வரைய வேண்டும்.

இந்த இரண்டும்தான் அவர்களின் முக்கியப் பணிகள். கடைசியில் கிந்தா ஆற்றின் நதிமூலத்தையும் கண்டுபிடித்தார்கள்.

தித்திவாங்சா மலைத் தொடரில் நூற்றுக்கணக்கான குட்டி குட்டி மலைகள். அவற்றில் ஒன்றுதான் குனோங் சாபாங். சின்ன அழகிய மலை. இந்த மலையில் தான் கிந்தா ஆற்றின் ஊற்றுக் கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

வீட்டில் குளிக்கப் பயன்படுத்துவோமே நீர்த்தொட்டி. அவ்வளவு பெரியது தான் அந்த ஊற்றுக் கிணறு. அங்கு இருந்துதான் கிந்தா ஆறு உற்பத்தியாகிறது.

பெரும்பாலும் ஒரு சின்ன ஊற்றுக் கிணற்றில் இருந்துதான் பெரிய பெரிய நதிகள் எல்லாம் உருவாகின்றன. பகாங் ஆறு உற்பத்தியாகும் இடத்தை நான் பார்த்து இருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் குனோங் தகான் மலையில் ஏறிய அனுபவம். ஏறி இறங்க ஒன்பது நாட்கள் பிடிக்கும். ஏறுவதற்கு ஐந்து நாட்கள். இறங்குவதற்கு நான்கு நாட்கள். அப்படி ஏறும் போது இந்த ஊற்று நீர் இடத்தைக் கடந்து தான் போக வேண்டும். மூன்றாவது நாள் இந்த இடத்தைப் பிடித்து விடலாம். இந்த நீர் ஊற்று குனோங் ராஜா எனும் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது.

அங்கே ஒரு பிருமாண்டமான பெரிய பாறை. முப்பது அடி உயரம். நாற்பது அடி அகலம். அந்தப் பாறையில் இருந்து நீர் கசிகிறது. கீழே ஒரு சிறிய குட்டை. இரண்டு அடி அகலத்தில் இருக்கும். அதில் தான் முதலில் பாறையின் கசிவு நீர் தேங்குகிறது. அப்புறம் தான் ஓடையாக கீழே வழிந்து ஓடுகிறது.

அந்த நீரைக் குடித்துப் பார்த்தால் அப்படித் தான் இருக்கும். சுத்தமான மினரல் நீர் (கனிம நீர்). எத்தனை ஆயிரம் வெள்ளி கொடுத்தாலும் அப்படிப்பட்ட அசல் சுத்தமான மினரல் நீர் கிடைக்கவே கிடைக்காதுங்க.

குனோங் தகான் உச்சிக்கு ஏறும் போது ஆளுக்கு நான்கு ஐந்து பாட்டில் நீர் பிடித்துக் கொள்வோம். அதன் பின்னர் மேலே மலை உச்சியில் நீர் கிடைக்காது. மழை நீரைப் பிலாஸ்டிக் போட்டு பிடித்துக் கொள்ள வேண்டும். அடடடா... கதையை எங்கேயோ கொண்டு போய் விட்டேன். பிரச்சினை இல்லை. குனோங் தகான் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

கிந்தா ஆறு ஈப்போ வழியாக வந்து, பின்னர் பேராக் ஆற்றுடன் கலக்கின்றது. மலேசியாவில் பெரிய ஆறுகளில் பேராக் ஆறு முக்கியமானது. நிறையவே வரலாறுச் சுவடுகளைத் தாங்கிய வண்ணம் ஓடுகிறது.

வில்லியம் கேமரன் நில ஆய்வுக் குறிப்புகள் எழுதும் போது 1800 மீட்டர் உயரத்தில் சுழிப்பு முனைகளைக் கொண்ட மலைகள் இருக்கின்றன. பல பகுதிகளில் மென்மையான மலைச் சரிவுகள் உள்ளன என்றும் எழுதி இருக்கிறார். இடத்தின் பெயரைச் சொல்லவில்லை.

இருந்தாலும் வில்லியம் கேமரன் முதன் முதலில் பார்த்தது ‘புளு வேலி’ பகுதி என்பதை நினைவு படுத்துகிறேன். இது நடந்தது 1885-ஆம் ஆண்டு.

இந்தக் கட்டத்தில் அதிக நாட்கள் மலைகளின் உச்சியிலேயே இருந்ததால் வில்லியம் கேமரனுக்கு ஒரு வகையான மறதி நோய் ஏற்பட்டு இருக்கிறது.  அவருக்கும் வயது ஆகிவிட்டது. இருந்தாலும் பூர்வீகக் குடிமக்கள் வழங்கிய ’தொங்காட் அலி’ வேர்களை அதிகமாகச் சாப்பிட்டு இருக்கிறார். அதுவும் ஒரு பிரச்சினை.

தொங்காட் அலி என்பது ஒரு வகையான வலி நிவாரணி. ஆண்மையைப் பெருக்கும். உடலுக்கு அதிகமாகச் சுறுசுறுப்பைக் கொடுக்கும். ஒரு செருகல்.

நாங்கள் மலை ஏறும் போது எங்களுடன் வந்த அஸ்லி வழிகாட்டி, தொங்காட் அலியைப் பிடுங்கிச் சாப்பிடச் சொல்லி இருக்கிறார்.

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் உடல் சூடாகிப் போகும். மூட்டு வலிகள் பறந்து போகும். இருந்தாலும் அளவுக்கு மிஞ்சி போகக் கூடாது. கல்லீரலைப் பாதிக்கும்.

ஆக வில்லியம் கேமரன், தொங்காட் அலியை அதிகமாகச் சாப்பிட்டு அதனால் பிரச்னைகள் ஏற்பட்டு இருக்கிறது. மலை உச்சியிலேயே அவருக்கு நினைவு இழந்து போனது. அவரைத் தூக்கி வந்து இருக்கிறார்கள்.

கீழே இறங்கி வந்த சில நாட்களிலேயே இறந்தும் போனார். அவர் இறந்த தேதி 2 மார்ச் 1913. அப்போது அவருக்கு வயது 85. அந்த வயதிலும் அப்பேர்ப்பட்ட தித்திவாங்சா மலையில் ஏறி சாதனை படைத்து இருக்கிறாரே. நிச்சயமாகப் பாராட்ட வேண்டும்.

ஆனால் வில்லியம் கேமரன் கண்டுபிடித்த கேமரன் மலைப் பிருந்தாவனத் தகவல்கள் ஆங்கிலேய அதிகாரிகளிடம் கிடைக்கவே இல்லை. அந்தத் தகவல்கள் ஈப்போ அல்லது கோலாகங்சாரில் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

இன்னும் ஒரு விஷயம். அவர் கண்டுபிடித்த அந்தப் பச்சைப் பள்ளத்தாக்கைப் பற்றி வரைபடத்திலும் அவர் சரியாகக் குறித்து வைக்கவும் இல்லை. ஒருக்கால் மறதி நோய் ஏற்பட்டதால் குறித்து வைக்க தவறி இருக்கலாம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று நமக்கும் தெரியவில்லை.

ஆனால் ஓர் அழகிய பச்சைப் பிருந்தாவனம் இருக்கிறது என்று உலகத்திற்கு முதன் முதலில் சொன்னவர் சர் வில்லியம் கேமரன் தான். அதனால் அவரை மலேசியர்கள் மறக்கவில்லை. அவருடைய பெயரையே அந்த மலைக்கு வைத்து இன்று வரை அழகு பார்க்கிறார்கள்.

அப்புறம் அதோடு கேமரன் மலையை ஆங்கிலேயர்களும் மறந்து விட்டார்கள். ரொம்ப நாட்களாகக் கேமரன் மலையைப் பற்றி எவருமே கண்டு கொள்ளவில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மலாயா நாட்டில் தலை போகிற வேலைகள். ஆட்டைப் பார்ப்பார்களா நாட்டைப் பார்ப்பார்களா. பாவம் அவர்கள்.

உள்நாட்டில் மலாயா மாநிலங்களை வளைத்துப் போட வேண்டும். கிடைத்ததைச் சுரண்டிக் கப்பல் கப்பலாய் ஏற்ற வேண்டும். லண்டனில் இருக்கும் முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். அதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். அப்புறம் எப்படி…

அதற்கே அவர்களுக்கு நேரம் இல்லை. அப்புறம் எப்படிங்க அவர்களுக்கு கேமரன் மலை நினைவுக்கு வந்து இருக்கும். சொல்லுங்கள்.

(தொடரும்)



20 நவம்பர் 2019

பக்காத்தான் தலைவர்களுக்கு பணிவான வேண்டுகோள்

தமிழ் மலர் - 20.11.2019

பக்காத்தான் தலைவர்களுக்குப் பணிவான வேண்டுகோள். உங்களுடைய தேனிலவு காலம் முடிந்து ரொம்ப நாளாகி விட்டது. கீழே இறங்கி வாருங்கள். கீழே இறங்கி வந்து மக்களைப் பாருங்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதைப் பிரதானமாக எடுத்துக் கொள்ளுங்கள். 



மூத்த தலைவர் பேசுவதற்கு எல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு தஞ்சாவூர் பொம்மைக்குச் சாயம் பூசும் காலம் எல்லாம் முடிந்து விட்டது. ஆட்சித் தலைமைப் பொறுப்பை மாற்றுங்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள்.

நாட்டிற்கு எது சரியானது என்பதில் முடிவு எடுக்க வேண்டிய ஓர் இக்கட்டான காலக் கட்டத்தில் பக்காத்தான் பயணிக்கின்றது. அந்த முடிவை உடனே எடுக்க வேண்டும். உடனடியாகச் செய்ய வேண்டும்.

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பாரிசான் கூட்டணிக்கு மக்கள் வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்தார்கள். பாரிசானை மீண்டும் கொண்டு வந்தார்கள். பாரிசானுக்கு மீட்சி தர வேண்டும் எனும் எண்ணத்தில் அவர்கள் அப்படிச் செய்தார்களா என்றால் அதுதான் இல்லை.

பக்காத்தான் மீது இருந்த விரக்தியைக் காட்டுவதற்காகத் தான் அப்படிச் செய்தார்கள். அவர்களின் அதிருப்தியையும் வெறுப்பையும் திசைத் திருப்பி பாரிசானிடம் ஆதரவாகக் காட்டி இருக்கிறார்கள். அவ்வளவுதான். இதில் ஒன்றும் பெரிய மோடி மஸ்தான் இரகசியம் இல்லை.



பாரிசானுக்கு வாக்கு அளித்தார்கள். ஏன் வாக்கு அளித்தார்கள்? விளக்கம் சொல்கிறேன்.

காலம் காலமாக பாரிசானின் கோட்டையாக விளங்கிய தஞ்சோங் பியாய் தொகுதியில் 2018-ஆம் ஆண்டு 14-ஆவது பொதுத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்தார்கள்.

அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த 18-ஆவது மாதத்தில் மறுபடியும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர நினைத்து இருக்க மாட்டார்கள். நிச்சயமாக. அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு மாற்றம் தேவை இல்லை. விரும்பி இருக்க மாட்டார்கள். ஆனால் காலத்தின் கட்டாயம் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டி இருக்கிறது. அப்படி ஒரு மாற்றத்திற்கு வழி வகுத்து இருக்கிறது.

(People didn't really vote for BN. People just want Harapan to know their disappointment.)

இந்த முடிவு பக்காத்தான் ஆட்சிக்கு ஒரு முடிவைச் சொல்கிறது; அல்லது ஒரு முடிவைக் காட்டுகிறது என்று நான் சொல்ல மாட்டேன். அது சரி அல்ல. ஆனாலும் பக்காத்தான் ஆட்சி அப்படிப்பட்ட ஒரு மோசமான தோல்வியில் இருந்து மீண்டும் எழுந்து நிற்குமா அல்லது அப்படியே சரிந்து போகுமா என்பது பக்காத்தான் கூட்டணியின் தலைமைத்துவத்தைப் பொறுத்த விசயமாகும். பக்காத்தான் தலைவர்கள் உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

பக்காத்தான் தலைவர்கள் இப்போதைக்கு ஒரே ஒரு நோக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதுவே இந்தப் பல்லின நாட்டின் நல்வாழ்வுக்கு அடிகோளும். தலைமைத்துவத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே அந்த நோக்கமாக இருக்க வேண்டும். வேறு வழி இல்லை.




பக்காத்தான் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகிறார்கள். அதற்கு நடந்து முடிந்த சில இடைத் தேர்தல்கள் சாட்சியாக அமைகின்றன. கடந்த நான்கு தேர்தல்களிலும் தோல்வி மேல் தோல்வி. பக்காத்தான் தலைவர்களே... ஆத்திரப் படாமல் அமைதியாய் அமர்ந்து உடனடியாக ஒரு முடிவை எடுங்கள்.

தஞ்சோங் பியாய் தொகுதி பாரிசானுக்கு ஒரு பெரிய அஸ்திவாரம். அசைக்க முடியாத கோட்டையாக விளங்கி இருக்கிறது.

2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சோங் பியாய் தொகுதியில் அப்போதைய ம.சீ.ச. தேசியத் தலைவர் ஓங் கா திங் போட்டியிட்டார். 23,615 வாக்குப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அதுதான் இதுவரையிலும் தஞ்சோங் பியாய் தொகுதியில் தேசிய முன்னணி பெற்ற மிக உச்சக் கட்டமான வெற்றி ஆகும்.

அடுத்து வந்த 2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ம.சீ.ச.வின் வீ ஜெக் செங் 12,371 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். பக்காத்தான் கூட்டணி மலேசிய அரசியலில் சற்று ஆழமாய்த் தடம் பதித்து வந்த காலக் கட்டம்.

அடுத்து வந்த 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தஞ்சோங் பியாய் தொகுதியில் பெரிய பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

ஆனால் 2018-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஒரு பெரிய பயங்கரமான மாற்றம். மகாதீர்  மறுபடியும் மலேசிய அரசியலுக்குள் கால் பதித்து விட்டார். பக்காத்தானுக்கு ஜொகூரில் மாபெரும் வெற்றி. ஜொகூரில் மட்டும் அல்ல. நாடளாவிய நிலையில் மலேசியா முழுமைக்கும் பக்காத்தான் அலை. அதன் விளைவாக நடுவண் ஆட்சியில் மாற்றம்.

அதே அந்தத் தாக்கம் தஞ்சோங் பியாய் தொகுதியையும் விட்டு வைக்கவில்லை. இப்போதைய இடைத் தேர்தலில் வெற்றிப் பெற்றாரே வீ ஜெக் செங், அவர் அந்தப் பொதுத் தேர்தலிலும் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். தோல்வி கண்டார்.  524 வாக்குகள் வித்தியாசம். 



வீ ஜெக் செங் ஏற்கனவே இரண்டு முறை அதே தஞ்சோங் பியாய் தொகுதியில் வெற்றி பெற்றவர். பொந்தியான் பகுதியில் ஒரு ஜாம்பவானாக ஊர்க்கோலம் போனவர். மக்களுக்கு நல்லபடியாக சேவைகள் செய்து இருக்கிறார். இவரை சீனர்களுக்குப் பிடிக்கும். இருந்தாலும் பாரிசான் மீது இருந்த ஆத்திரத்தினால் போன பொதுத் தேர்தலில் அவரைக் கழற்றிவிட்டு விட்டார்கள்.

ஆனால் சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் வீ ஜெக் செங், அபாரமான வெற்றி கண்டார். கடந்த பொதுத் தேர்தலில் இந்த மாண்புமிகு வீ ஜெக் செங் அவர்களைத் தோற்கடித்த அதே வாக்காளர்கள் தான் 18 மாதங்களுக்கு பின்னர் மறுபடியும் அவரைக் கொண்டு வந்து ஆலாபனை செய்து இருக்கிறார்கள். ஏன் எதனால்?

மக்களுக்கு பக்காத்தான் மீது ஏற்பட்ட வெறுப்பு, விரக்தி, அதிருப்தி. இது தஞ்சோங் பியாய் தொகுதியில் மட்டும் அல்ல. மலேசியா முழுமைக்கும் இப்போது வியாபித்து நிற்கிறது.

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் முடிவு என்பது பக்காத்தான் தலைவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி என்பதை மனதில் கொள்ளுங்கள். அதே சமயத்தில் தஞ்சாங் பியாய் இடைத்தேர்தல் மலேசிய வரலாறு காணாத தோல்வி கண்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். செம்மையான அடி என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைய அரசியல்வாதிகளில் சிலர் மலேசிய மக்களின் வியூகத் தன்மையை ரொம்பவும் தவறாகக் கணக்குப் போட்டு விட்டார்கள். குறிப்பாக மலேசிய இந்தியர்களைக் குறி வைத்துக் காய்களை நகர்த்தியது ரொம்பவும் தப்பு.

விடுதலைப் புலிகள் விவகாரம் என்று சொல்லி பழைய அதே சொஸ்மா சட்டத்தைக் கட்டு அவிழ்த்து விட்டு இருக்கிறார்கள். 12 மலேசிய இந்தியர்களைக் கைது செய்து காவலில் வைத்து இருக்கிறார்கள்.

அதுவே திருப்பித் தாக்குதலுக்கு வழி வகுத்து உள்ளது. ஆங்கிலத்தில்  Backfire என்று சொல்வார்கள். மலேசியர்கள் தங்களின் அதிருப்தியைத் தங்களின் வாக்குச் சீட்டுகள் மூலமாகக் காட்டி இருக்கிறார்கள்.

sஒல்ல மறந்து விட்டேன். அஸ்மின் அலி விவகாரம். அன்வாருக்கு எதிராக அஸ்மின் அலி பல தடவை முரண்பாடான கருத்துகள் சொல்லி இருக்கிறார். அவற்றை எல்லாம் மகாதீர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இருந்தாலும் அஸ்மினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதுவும் பக்காத்தான் கட்சியில் பதற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்து இனவாத அரசியலையும்; மதவாத அரசியலையும் மலேசியர்கள் விரும்பவில்லை என்பதையும் தஞ்சோங் பியாய் தேர்தல் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். 



தஞ்சாங் பியாய் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி அடைந்தது என்று சொல்வதைக் காட்டிலும் நம்பிக்கைக் கூட்டணியின் மீது வாக்காளர்கள் கொண்ட அதிருப்தியின் பிரதிபலிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த ஓராண்டு காலத்தில் பக்காத்தான் தலைவரின் பேச்சும் சரி; செயலும் சரி; நம்பிக்கையின் மீதான நம்பிக்கையில் ரொம்பவுமே அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக மலேசிய இந்திய, சீன இனத்தவரின் நம்பிக்கையில் சரிவு காணச் செய்து விட்டது.

பக்காத்தான் தலைவர் மீண்டும் மக்களின் நம்பிக்கையை மீட்டு எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது. அவருக்கு வழங்கப்ட்டு வந்த மரியாதை அவருடைய சாதனைகளுக்காக அல்ல. அவருடைய வயதின் காரணமாகத் தான். அதையும் நினைவில் கொள்வோம்.

ஜ.செ.க. தலைவர்கள் கடந்த ஓராண்டு காலமாகத் தங்களின் வெளிப்படையான கொள்கைகளைப் புறம் தள்ளிவிட்டு பக்காத்தான் தலைவரின் இனவெறி, பிளவு படுத்தும் நிகழ்ச்சி நிரல்களுடன் இணைந்து போனதே வேதனைக்குரிய விசயமாகும்.

ஒரு நல்லாட்சியின் மீது செல்லரிக்கும் செயல்களைத் திணித்து இருக்கக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.

பக்காத்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர்களின் அப்போதைய தேர்தல் அறிக்கைக்கு மதிப்புக் கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்கப்பட்டது. அதற்கு கிடைத்த பதில் என்ன தெரியுங்களா.

தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. அதனால் தான் நம்பத் தகாத வாக்குறுதிகள் அளித்தோம். இப்படிச் சொன்னவர் வேறு யாரும் அல்ல. அதே பக்காத்தான் தலைவர் தான்.

அன்வார் விஷயத்திற்கு வருகிறேன். நஜிப் அழகாக ஒரு நிகழ்ச்சிக்கு வடிவம் அமைத்துக் கொடுத்தார். என்ன நிகழ்ச்சி என்று விளம்பரம் தேவை இல்லை. அதனால் அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலைமை.

இந்தக் கட்டத்தில் தான் மகாதீர் இடைக்கால பிரதமராகப் பதவி வகிக்க வேண்டும் என்று மக்களிடம் சொல்லப் பட்டது. மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பேன் என்று மகாதீர் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் சொன்ன மாதிரி செய்வாரா. தெரியவில்லை. 



அன்வார் இப்ராஹிம் அவர்களிடம் தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பதில் உறுதியாக இல்லாமல் மகாதீர் தவிர்த்து தவிர்த்துச் செல்வது குழப்பத்தையே ஏற்படுத்தி வருகிறது.

இதில் இருந்து மகாதீர் இன்னும் தெளிவு பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அடுத்து மலாய் மேலாதிக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் முனைப்பு காட்டுகிறார். உண்மை தானே. இருந்தாலும் மலாய் அல்லாத மற்ற குடிமக்கள் இன்று வரையிலும் பொறுமை காட்டி வருகிறார்கள்.

முந்தைய பாரிசான் ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதை மக்கள் அறிவார்கள். பாரிசான் தலைவர்களில் சிலர் ஏராளமான ஊழல் குற்றச் சாட்டுகளையும் எதிர்நோக்கி உள்ளார்கள்.

இருந்தாலும் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மக்கள் அவர்களை ஆதரித்து இருக்கிறார்கள். ஆக மக்கள் எந்த அளவிற்கு நொந்து போய் இருப்பார்கள். வேண்டாம் என்று சொன்னவர்களையே வேண்டிச் சென்று இருக்கிறார்கள்.

விக்கிரமாதித்தன் கதைகளில் ஒரு குட்டிக்கதை வரும். அந்தக் கதையில், இருந்த பிசாசைவிட இருக்கிற பிசாசு மோசமானது என்று விக்கிரமாதித்தன் பட்டியிடம் சொல்வார். அது ஒரு கதையில் வரும் கதை. தப்பாக நினைக்க வேண்டாம். சும்மா ஒரு செருகல் தான்.

இப்போதைய பக்காத்தான் தலைவர் இருக்கிறாரே இவர் யாரையும் மதப்பதாகத் தெரியவில்லை. வேதனையிலும் வேதனையான வரப்பிரசாதம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அன்வார் இப்ராஹிம் மீதான வழக்கை, சட்டு புட்டு என்று நடத்தி அவரைச் சிறைக்கு அனுப்புவதில் மகாதீர் நன்றாகவே தீவிரம் காட்டினார்.

ஆனால் இப்போது பிரதமர் பதவியை அன்வாரிடம் வழங்குவதில் ரொம்பவுமே சுணக்கம் காட்டுகிறார். அன்றைக்கு அவரைச் சிறைக்கு அனுப்புவதில் இருந்த இருந்த வேகம் இப்போது மட்டும் எங்கே போனதாம்?

அன்வாரிடம் பிரதமர் பொறுப்பை வழங்கும் சடங்கு அடுத்தப் பொதுத் தேர்தல் வரை நீடிக்குமா?



மகாதீர் ஏற்கனவே பதவி விலகிச் செல்லும் தேதியை ஒப்புக் கொண்டு இருக்கிறார். இரண்டு வருசத்தில் போய் விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதன்படி அடுத்து வரும் 2020-ஆம் ஆண்டு மே மாதத்திற்குள், அன்வார் அவர்களிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைத்துச் செல்வதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

மகாதீரின் பெர்சத்து கட்சி ஒரு சின்ன கட்சி. 12 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே வைத்து இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அம்னோ 2.0-ஐ உருவாக்கி விடலாம் என்று நினைப்பது எல்லாம் சரிபட்டு வருமா. தெரியவில்லை.

பக்காத்தான் தலைவர்களே உங்களுடைய தேனிலவு காலம் முடிந்து ரொம்ப நாளாகி விட்டது. கீழே இறங்கி வாருங்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதைப் பிரதானமாக எடுத்துக் கொள்ளுங்கள். மூத்த தலைவர் பேசுவதற்கு எல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு தஞ்சாவூர் பொம்மைக்குச் சாயம் பூசும் காலம் முடிந்து விட்டது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

நாட்டிற்கு எது சரியானது என்பதில் முடிவு எடுக்க வேண்டிய ஓர் இக்கட்டான காலக் கட்டத்தில் பக்காத்தான் பயணிக்கின்றது. அந்த முடிவை உடனே எடுக்க வேண்டும். உடனே செய்ய வேண்டும்.

இதற்கு எல்லாம் ஒரே வழி. பிரதமர் பொறுப்பை அன்வார் அவர்களிடம் ஒப்படைப்பதே… அது ஒன்றுதான் பக்காத்தானைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் அடுத்த 15-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி நம்பிக்கையை இழந்து விடும்.

(முற்றும்)