30 ஆகஸ்ட் 2023

ஜீன் சின்னப்பா - 2

கார்த்திகேசுவின் அசல் பெயர் கார்த்திகேசு சிவபாக்கியம். கொலைக் குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர். மரணதண்டனை விதிக்கப்பட்டவர். கிட்டத்தட்ட தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர். இருப்பினும் அந்தத் தூக்குக் கயிறே அவரை மறுத்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் கதைதான் சின்னக்கிளி ஜீன் சின்னப்பாவின் வாழ்க்கையிலும் வந்து போகிறது.


1979-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. ஜீன் சின்னப்பாவும் கார்த்திகேசுவும் கோலாலம்பூருக்குப் போய் இருக்கிறார்கள். அங்கே நிரந்தமாகத் தங்குவதற்கு ஒரு வீட்டையும் பார்த்து இருக்கிறார்கள். அதன் பிறகு கிள்ளானில் இருக்கும் வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோலாலம்பூரில் குடியேறுவதாக ஒரு திட்டம். 

அதனால் அங்கே வீடு பார்க்கப் போய் இருக்கிறார்கள். ஆகக் கடைசியாக கோலாலம்பூர் அபாட் ஓட்டலில் உணவு அருந்தி இருக்கிறார்கள். பின்னர் கூட்டரசு நெடுஞ்சாலை வழியாக பயணித்து இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தியது வெள்ளை நிற பியாட் 125 ரகக் கார். 

சுபாங் விமான நிலயத்திற்குப் போக, பாதை பிரியும் முச்சந்திக்கு வரும் போது கார்த்திகேசு காரை நிறுத்தி இருக்கிறார். 


சிறுநீர் கழிக்கப் போவதாகக் காரில் இருந்து கார்த்திகேசு இறங்கி இருக்கிறார். அப்போது நேரம், நள்ளிரவை நெருங்கிக் கொண்டு இருந்தது. வாகனப் போக்குவரத்தும் குறைவு. மிக மிகத் தனிமையான இடம். அப்போதுதான் ஜீன் சின்னப்பா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

உடல் முழுமையும் ஆழமான 10 கத்திக் குத்துக் காயங்கள். கார் முழுக்க இரத்தக் கறை. போலீசார் வருவதற்கு முன்னதாகவே ஜீன் சின்னப்பா இறந்துவிட்டார். 

அதற்கு முன்னர் நடந்தவை. ஏறக்குறைய இரவு மணி 11.30 இருக்கும். அப்போது மலேசிய விமானச் சேவையைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் வேலை முடிந்து அந்த வழியாகப் போய் இருக்கிறார்கள். தன்னந்தனியாக இருட்டில் ஒரு கார் நிறுத்தி வைக்கப் பட்டு இருப்பதைக் கண்டனர். 

காருக்குப் பின்னால் ஒருவர் தலைக் குப்புறக் கீழே கிடந்தார். ஏதோ அசம்பாவிதம் நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்த அவர்கள் போலீசாருக்குத் தெரியப் படுத்தினார்கள்.


ஓர் அரை மணி நேரம் கழித்து போலீசார் வந்தனர். கீழே மயக்கமாகக் கிடப்பது கார்த்திகேசு என்று கண்டுபிடிக்கப் பட்டது. காருக்குள் ஜீன் சின்னப்பா கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடல் முழுமையும் ஆழமான 10 கத்திக் குத்துக் காயங்கள். கார் முழுக்க இரத்தக் கறை.

ஜீன் சின்னப்பாவின் தோள் பட்டையில் வழக்கமான கார் பாதுகாப்பு வார்ப்பட்டை. அவர் அணிந்து இருந்த நகைகள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன. அவரின் கைப்பையும் அங்கேதான் இருந்தது. பணம், மற்ற சில்லறை அழகுச் சாமான்கள் எல்லாம் கைப்பையின் உள்ளே அப்படியே பத்திரமாகத்தான் இருந்தன. எதுவும் திருடு போகவில்லை.

கார்த்திகேசு உடனடியாக பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அவருக்கு நினைவு திரும்பியதும் என்ன நடந்தது என்று கேட்டார்கள். தான் சிறுநீர் கழித்துக் கொண்டு இருக்கும் போது, தலைக்குப் பின்னால் பலமான அடி விழுந்தது. மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டதாகச் சொன்னார். மயக்கம் அடைவதற்கு முன்னால், மூன்று பேரைப் பார்த்ததாகவும் சொன்னார்.

ஜீன் சின்னப்பாவின் சவப் பரிசோதனையில் அவருடைய தொண்டை, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் ஆறு ஆழமான கத்திக் குத்துக் காயங்கள்; கைகளில் நான்கு கத்திக் குத்துக் காயங்கள். மொத்தம் பதினாறு கத்திக் குத்துகள். அதை ஒரு கொலை என்று போலீசார் அறிவித்தனர். 


தீவிர விசாரணை நடைபெற்றது. குற்றவாளியைப் போலீசார் கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ; அந்தக் கொலையாளி யார் எவர் என்று தெரிந்து கொள்வதில் தான் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். 

இறந்து போனவர் ஒரு சாதாரண பெண் அல்ல. நெகிரி செம்பிலான் அழகி. சிலாங்கூர் அழகி. மலேசிய அழகி. அத்துடன் மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு பிரபலம்.

ஒரு மாதம் ஆனது. மே 9-ஆம் தேதி. ஜீன் சின்னப்பாவின் மைத்துனர் கார்த்திகேசுவின் வீட்டுக் கதவைப் போலீசார் தட்டினர். ‘புதுசா செய்தி கிடைச்சுதா’ என்று கார்த்திகேசு கேட்டார். அவரிடம் கைவிலங்கைக் காட்டிய போலீசார், அவரைப் பார்த்து புன்னகை செய்தார்கள். கார்த்திகேசு கைது செய்யப்பட்டார். ஜீன் சின்னப்பாவைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றப் பத்திரிகை. 

அப்போது கார்த்திகேசுவிற்கு 37 வயது. இறந்து போன ஜீன் சின்னப்பாவிற்கு 31 வயது. செய்தி கேட்டு மலேசிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தப் பூனையா பால் குடித்தது. என்ன செய்வது. பால் குடிக்கிற பூனை கருவாட்டையும் தின்று இருக்கிறது. எப்படி தின்றது என்பதில் ஆளாளுக்கு ஒரு வியூகம். 


கொலை நடந்து ஓர் ஆண்டு முடிந்தது. 1980 ஜூன் 16-ஆம் தேதி. வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. குற்றவாளிக் கூண்டில் கார்த்திகேசு நிறுத்தப் பட்டார். 

அந்தக் காலக் கட்டத்தில் எல்லாக் கொலை வழக்குகளும் ஜூரி முறையில் நடைபெற்றன. அந்த வகையில் ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கிலும் ஜூரி முறைதான். கார்த்திகேசுவின் தலைவிதியை நிர்ணயிக்க ஏழு பேர் ஜூரிகளாக நியமிக்கப் பட்டனர். அனைத்து ஜூரிகளும் ஆண்கள். 

இங்கே ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வேண்டும். ஜூரிகள் அனைவரும் ஆண்களாக இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஓர் ஆணாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஓர் ஆண் சாதகத் தன்மை ஏற்படலாம். அப்படி ஒரு கருத்து அப்போது நிலவி வந்தது. 

ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஓர் ஆண். பாதிக்கப் பட்டவர் ஒரு பெண். ஜூரிகளின் தீர்ப்பு ஓர் ஆணுக்குச் சாதகமாக அமையலாம் எனும் ஓர் அச்சமும் நிலவியது. இருந்தாலும், தீர்ப்பு வேறு மாதிரியாக முடிந்து போனது.


அரசு தரப்பு சூழ்நிலைச் சான்றுகள் (Circumstancial Evidences) மூலமாக தன் வாதத்தை முன்வைத்தது. தன் அண்ணி ஜீன் சின்னப்பாவின் மீது கார்த்திகேசுவிற்கு அதீதமான விருப்பம் இருந்து இருக்கிறது. 

அந்த வகையில் ஜீன் சின்னப்பாவைத் தன் சொந்த உடைமைப் பொருளாக நினைத்து இருக்கிறார். பழகி இருக்கிறார். அவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டும் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு ஜீன் சின்னப்பாவின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக வளர்த்து எடுக்க சம்மதமும் தெரிவித்து இருக்கிறார். 

இந்தக் கட்டத்தில் ஜீன் சின்னப்பா, வேறு ஒருவருடன் தொடர்பு கொண்டு இருக்கிறார். இதைக் கார்த்திகேசு கண்டுபிடித்து விட்டார். தனக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதி; ஆத்திரம் அடைந்து இருக்கிறார். ஆனால், வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சரியான நேரத்திற்காகப் பொறுமையைக் கடைபிடித்து இருக்கிறார். 

ஆக, பொறாமையின் காரணமாகதான் ஜீன் சின்னப்பாவை; கார்த்திகேசு கொலை செய்து இருக்கிறார் என்று அரசு தரப்பு வழக்கு வாதங்களை முன் வைத்தது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சான்றுகள்; ஜீன் சின்னப்பாவின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிட்டவர் டாக்டர் நரதா வர்ணசூரியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். ஒரு சிங்களவர். திருமணமானவர். ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையார். 


ஜீன் சின்னப்பாவின் கணவர் சின்னப்பா உயிருடன் இருக்கும் போதே, 1978-ஆம் ஆண்டில், அவர்களின் இரகசியமான உறவுகள் தொடங்கி விட்டன என்று நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. 

டாக்டர் நரதா வர்ணசூரியா, ஜீன் சின்னப்பாவிற்கு எழுதிய 19 காதல் கடிதங்கள் சாட்சிப் பொருட்களாக, நீதிமன்றத்தில் காட்சி படுத்தப் பட்டன. அந்தக் கடிதங்களில் காணப்படும் அந்தரங்கமான விசயங்களைத் தவிர்த்து விடுகிறேன். 

அது நமக்குத் தேவை இல்லை. ஓர் ஆணும் பெண்ணும் ஆசைப்பட்டு ஏதாவது எழுதி இருப்பார்கள். பேசி இருப்பார்கள். அவற்றை எல்லாம் அம்பலப் படுத்துவது நாகரிகமன்று. 

தவிர, இந்தக் கட்டுரையைச் சம்பந்தப் பட்டவர்கள் யாராவது படிக்கலாம். அல்லது அந்தப் பிள்ளைகளிடமே போய்ச் சேரலாம். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. தணிந்து போன நெருப்பில் மறந்து போன நிகழ்விற்கு மறுபடியும் சூடம் காட்டுவது ஒரு பெரிய பாவச் செயல் ஆகும். 

ஜீன் சின்னப்பா அணிந்து இருந்த மேலாடையும் நீதிமன்றத்தில் காட்டப் பட்டது. முழுக்க முழுக்க இரத்தக் கறை படிந்த மஞ்சள் நிற ஆடை. ஆனால், கொலை செய்யப்படுவதற்குப் பயன்படுத்தப் பட்ட எந்த ஓர் ஆயுதமும் சாட்சியத்திற்கு வரவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு 50-க்கு 50 எனும் நிலையில் இருந்தது. 

அந்தச் சமயத்தில்தான் அரசு தரப்பு, திடீரென்று ஒரு துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது. ஜீன் சின்னப்பாவின் உறவினர் ஜெயதிலகா என்பவர்தான் அந்தத் துருப்புச் சீட்டு. 

கொலை நடந்த பத்தாவது நாள் அந்த உறவினர் கார்த்திகேசுவைப் போய்ப் பார்த்து இருக்கிறார். அப்போது கார்த்திகேசு அவரிடம் ‘நிலைமை மோசம் அடைந்தால், உள்ளே போகத் தயாராக இருக்கிறேன். உயிரோடு இருக்க அந்தப் பெட்டைக் கழுதைக்கு தகுதி இல்லை’ என்று சொல்லி இருக்கிறார். 

இந்தச் சொற்கள்தான் கார்த்திகேசுவின் தலையெழுத்தையே மாற்றிப் போட்டன. எதிர்தரப்பு எவ்வளவோ போராடிப் பார்த்தது. கார்த்திகேசு ஒரு நல்ல மனிதர். நாணயமானவர். மனோவியல் கல்வி கற்றவர் என்று சொல்லி பல சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஒன்றும் நடக்கவில்லை.

வழக்கு 38 நாட்கள் நடைபெற்றது. 58 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர். ஜூரிகள் ஒன்றுகூடி ஐந்து மணி நேரம் விவாதம் செய்தனர். கடைசியில் 5-க்கு 2 எனும் வாக்குப் பெரும்பான்மையில், கார்த்திகேசு குற்றவாளி என்று தீர்ப்பானது. சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

கார்த்திகேசுவின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. மிக அமைதியாக இருந்தார். பொதுவாகவே, மலேசிய ஜூரிகள் அவ்வளவு சுலபத்தில் யாருக்கும் தூக்குத் தண்டனையை வழங்க மாட்டார்கள். மலேசிய நீதிமன்ற வரலாறு சொல்கிறது. ஆனால், நடந்து விட்டது.

கார்த்திகேசு காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு இரண்டு வருடங்கள் சிறை வாழ்க்கை. தூக்குத் தண்டனைக்கு காத்து இருந்தார். கார்த்திகேசுவிற்கு ஆயுள் கெட்டி என்றுதான் சொல்ல வேண்டும். பத்து மாதங்களுக்குப் பிறகு வழக்கில் ஒரு பெரிய திருப்பம். 

அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்ன ஜெயதிலகா (Bandhulanda Jayathilake), தான் பொய்யாகச் சாட்சியம் சொன்னதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். 

மலேசியாவே கிடுகிடுத்துப் போனது. அது ஒரு பயங்கரமான திருப்பம். யாரும் எதிர்பார்க்காத திருப்பம். தவறுதலாகத் தெரியாமல் சொல்லி விட்டதாக ஜெயதிலகா சத்தியப் பிரமாணம் செய்தார். 

அப்புறம் என்ன. பொய்ச் சாட்சியம் சொன்னதற்காக, ஜெயதிலகாவிற்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை (Prison for Perjury). 1981 மே மாதம் 20-ஆம் தேதி, ஜெயதிலகா குற்றவாளியாக உள்ளே போனார். சுதந்திர மனிதனாகக் கார்த்திகேசு வெளியே வந்தார். ஜெயதிலகா சிறைக்குப் போய் இரண்டு ஆண்டுகளில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அவரும் இறந்து போனார்.

வெளியே வந்த கார்த்திகேசு திருமணம் செய்து கொண்டார். ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கினார். கிள்ளானில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கோலா சிலாங்கூரில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்துகேசு, ஜீன் சின்னப்பாவின் மூன்று பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்தார். மூவரும் இப்போது நல்ல நல்ல பதவிகளில் இருக்கின்றனர். மூத்த மகள் வழக்கறிஞராகச் சேவை செய்கிறார். அவர் ஒரு மருத்துவர் என தவறுதலாக நேற்று பதிவு செய்து விட்டேன். ஜீன் சின்னப்பாவின் மூத்த மகளுக்கு இப்போது வயது 50-ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

கிள்ளான் தெலுக் பூலாய் புறநகர்ப்பகுதியில் வாழ்ந்து வந்த கார்த்திகேசு தன்னுடைய 81-ஆவது வயதில், 27.08.2023-ஆம் தேதி, மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.  

ஜீன் சின்னப்பாவைப் பற்றி, ஆஸ்ட்ரோ ஒரு தொடர் ஆவணப் படத்தை 2008 டிசம்பர் 21-இல், ஒளிபரப்பு செய்தது. ஜீன் சின்னப்பாவின் சகோதரர் பிரியான் பிரேராவையும்; ஜீன் சின்னப்பாவின் மகளையும் பேட்டி எடுக்க ஆஸ்ட்ரோ, எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தது. அவர்கள் இருவரும் மறுத்து விட்டனர். அலெக்ஸ் ஜோசி என்பவர் ‘தி மெர்டர் ஆப் எ பியூட்டி குயின்’ (The Murder Of A Beauty Queen) எனும் ஒரு நூலையும் எழுதி இருக்கிறார். 

ஜீன் சின்னப்பாவைக் கொலை செய்தது யார் என்று இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை செய்தவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை அவரும் ஜீன் சின்னப்பா மாதிரி போய்ச் சேர்ந்து விட்டாரா. தெரியவில்லை.

இந்தக் கட்டுரையை ஒரு வரலாற்று ஆவணமாகப் பார்ப்போம். மறைந்து போன ஒரு பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையைக் கிண்டி, சீண்டிப் பார்ப்பதாக நினைக்க வேண்டாம். ஜீன் சின்னப்பா இறக்கும் போது அவருக்கு வயது 31. நமக்கும் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். நினைவில் கொள்வோம்.

பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் ஒரு பெண்மகளைக் கெடுத்துக் கலைத்துவிடும் என்று ஏற்கனவே சொன்னேன். அதை விதி என்று சொல்வதா இல்லை கர்மவினை என்று சொல்வதா. 

அது எந்த அளவுக்கு உண்மை. கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொள்ளுங்கள். அப்புறம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஜீன் சின்னப்பா; கார்த்திகேசு இருவரின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டிக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக