07 செப்டம்பர் 2023

ஜெங்கிஸ்கான் - 1

தமிழ் மலர் - 07.09.2023

உலக வரலாற்றில் அதிகமாக நினைத்துப் பார்க்கப்படும் தலைவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒருவர் மகா அலெக்சாண்டர். இன்னும் ஒருவர் ஜெங்கிஸ்கான் (Genghis Khan). இவர்களுக்கு இடையில் அசோகர் வரலாம். சந்திரகுப்தர் வரலாம். ஜூலியஸ் சீசர் வரலாம். பாபர் வரலாம். நெப்போலியன் எனும் மாவீரனின் பெயரும் வரலாம். இன்னும் பலர் இருக்கின்றார்கள். பட்டியல் நீளும்.

ஆனால் இங்கே ஒரே ஒரு விசயம். அலெக்சாண்டரை நினைத்துப் பார்ப்பதைப் போல ஜெங்கிஸ்கானை வரலாறு நினைப்பது இல்லை. பெரிதாகப் போற்றுவதும் இல்லை. அதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தான் இருக்கிறது.


அலெக்சாண்டரை மாபெரும் பேரரசர் என்று வரலாறு போற்றுகிறது. அதே சமயத்தில் ஜெங்கிஸ்கானை மாபெரும் கொலைகாரத் தலைவன் என்று சொல்கிறது. ஆமாம். ஜெங்கிஸ்கானின் கொலைவெறி ஆட்டத்தில் ஏறக்குறைய முப்பது நாற்பது மில்லியன் பேர் படுகொலை செய்யப் பட்டனர். இலட்சம் இல்லீங்க. மில்லியன்கள். உலக மக்கள் தொகை 11 விழுக்காடு குறைக்கப் பட்டதாகப் புள்ளி விவரங்கள் வேறு சொல்கின்றன. 

http://www.history.com/news/history-lists/10-things-you-may-not-know-about-genghis-khan

ஜெங்கிஸ்கானைக் குறை சொல்ல மனசு வரவில்லை. வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட ஓர் அஞ்சா நெஞ்சனாகவே எனக்குப் படுகிறது. ஆனால் பற்பல இலட்சம் அப்பாவி மக்களைக் கொன்று போட்டது தான் மனசைப் பெரிசாக வருடிச் செல்கிறது. ரொம்பவுமே வருத்துகிறது. மற்றபடி அவரை ஒதுக்கி வைக்க முடியவில்லை.


கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். அப்புறம் நீங்களே ஒரு முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் துணையாசிரியர் மதன் இப்படி சொல்கிறார். நெப்போலியனின் அகராதியில் 'முடியாதது' என்கிற வார்த்தையே கிடையாது என்பார்கள். ஆனால் ஜெங்கிஸ்கானின் அகராதியில் 'இரக்கம்' என்கிற வார்த்தை கிடையவே கிடையாது என்று சொல்கிறார்.

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படை எடுத்தார். போரஸ் என்கிற இந்திய மன்னனை வெற்றி கொண்டார். அவரை அலெக்சாண்டர் நடத்திய விதம் இருக்கிறதே அதை இன்று வரை வரலாறு புகழ்ந்து பேசுகிறது. 

அலெக்சாண்டர் அவரைப் பெருந்தன்மையோடு நடத்தினார். இது நமக்கு தெரிந்த விசயம். சிறைப் பிடித்த பிறகும் போரஸ் மன்னன் ஒரு மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தப் பட்டார்.


போரில் தோற்ற போரஸ் மன்னன் தன்னை ஒரு மன்னனுக்கு உரிய தகுதியுடன் நடத்த வேண்டும் என்று அலெக்சாண்டரிடம் கூறிய போது அலெக்சாண்டர் அவனுடைய வீரத்தைப் பாராட்டி அவனைத் தன் நண்பனாகவே இணைத்துக் கொண்டார்.

அந்த மாதிரி மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கானின் கையில் போரஸ் சிக்கி இருந்தால் என்னவாகி இருக்கும் சொல்லுங்கள். கதை வேறு மாதிரியாக மாறிப் போய் இருக்கும். வறுத்து எடுக்கப் பட்டு இருப்பார். 

ஆகவேதான் வரலாறு அலெக்சாண்டரை மாபெரும் வீரனாகப் புகழ்கின்றது. செங்கிஸ்கானைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கின்றது. அது ஒரு வகையில் உண்மையாகவும் தெரிகின்றது.

ஒரு காலக் கட்டத்தில் ஜெங்கிஸ்கானின் பெயரைக் கேட்டாலே இந்த உலகமே குலை நடுங்கிப் போனது. ஜெங்கிஸ்கான் பல இலட்சம் உயிர்களைக் கொன்று குவித்தவன். உலகத்தின் 16 விழுக்காட்டு நிலப் பரப்பைக் கட்டி ஆண்ட ஒரு ஜெங்கிஸ்கானை அவன் இவன் என்று சொன்னதற்காக மன்னித்து விடுங்கள். 


இந்த உலகில் பற்பல மாபெரும் சாம்ராஜ்யங்கள் மனுக்குல வரலாற்றையே மாற்றிப் போட்டு இருக்கின்றன. அந்த வரலாற்றுக்கு நினைவு தெரிந்த வரையில் உலகின் முதல் மாபெரும் பேரரசு எகிப்திய பேரரசாகும். கி.மு. 1850-களில் தொடங்கியது. கடைசியாக வந்தது பிரிட்டிஷ் பேரரசு. இவை எல்லாமே வரலாற்றையே திருப்பிப் போட்ட பேரரசுகள்.

இந்தப் பேரரசுகளில் பெரிதும் மறக்கப்பட்ட பேரரசு ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் மங்கோலியப் பேரரசு (Mongol Empire). ஆனால் ஒன்று. இதுவரை அமைந்த பேரரசுகளில் பிரிட்டிஷ் பேரரசிற்கு அடுத்து இந்த உலகில் மிக அதிக நிலப்பரப்பைக் கொண்ட பேரரசுவும் இந்த மங்கோலியப் பேரரசு தான். 

மங்கோலியப் பேரரசின் உச்சக் கட்டத்தில் அது 24,000,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆண்டது. அதாவது இந்த உலகின் நிலப்பரப்பில் 16 விழுக்காடு ஆகும். நம்ப மலேசியாவைப் போல 200 மலேசியா நிலத்தை மங்கோலியர்கள் ஆண்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரமிப்பாக இருக்கிறது இல்லையா. 


இந்தப் பக்கம் பார்த்தால் பிரிட்டிஷார் ஆட்சி செய்தது 33,000,000 சதுர கிலோ மீட்டர். அதாவது உலக நிலப்பரப்பில் 22 விழுக்காடு. இங்கே ஒரு முக்கியமான தகவல். 

ஜெங்கிஸ்கான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தலைவர். துப்பாக்கி பீரங்கிகள் இல்லாமலேயே நாடுகளைப் பிடித்தவர். வெறும் கத்தி, ஈட்டி, வீச்சு அரிவாள்களை மட்டுமே பயன்படுத்தினார். துணைக்கு வந்தவை மங்கோலியக் குதிரைகள். 

நவீன ஆயுதங்களைக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் பிரிட்டிஷார். இவர்கள் ஆட்சி செய்த உலகம் புதிய உலகம். மங்கோலியர்கள் ஆட்சி செய்த உலகம் பழைய உலகம். ஆயிரம் ஆண்டு கால வேறுபாடு.

1219-ஆம் ஆண்டு பாரசீகத்தின் குவாரேஸ்மிட் (Khwarazmian Empire) நாட்டின் மீது ஜெங்கிஸ்கான் படை எடுத்தார். பாரசீகம் என்றால் இன்றைய ஈரான் நாடு. 


ஜெங்கிஸ்கானின் 50,000 வீரர்கள் ஒட்டு மொத்தமாகக் கொன்ற மக்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா. 12 இலட்சம் பேர். அதாவது ஈரான் சமவெளியில் வாழ்ந்த மக்களில் முக்கால் பங்கு. 

இப்படி எங்கு படை எடுத்தாலும் பேரழிவுகள். மங்கோலியர்கள் ஆட்சி செய்த காலம் 270 ஆண்டுகள். அவ்வளவு காலத்தில் அவர்கள் கொன்று குவித்த மக்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 6 கோடி. எண்ணிக்கையைப் பாருங்கள். 6 கோடி. 

இவை எல்லாம் ஒரு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை. அதை முதலில் நினைவில் வைத்துக் கொள்வோம்.


ஜெங்கிஸ்கான் அப்படி ஒரு வெறி கொண்ட காட்டுமிராண்டித் தலைவனாகவே பார்க்கப் பட்டார். ஒரு செருகல். ஜெங்கிஸ்கானின் வழி வந்த மொகலாயர்களே தங்களைச் ஜெங்கிஸ்கானின் வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்ள விரும்பவில்லையே. ஏன். 

தங்களைத் துருக்கியத் தலைவனான தைமூரின் (Timur; Tamerlane) வழித் தோன்றல்கள் என்று தானே கூறிக் கொண்டார்கள். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். பாபர், அக்பர், ஷாஜகான், அவுரங்கசிப் எல்லாம் இந்த ஜெங்கிஸ்கானின் வழி வந்தவர்கள் தானே. அதை யாராவது மறுக்க முடியுமா. 

ஜெங்கிஸ்கான் மங்கோலியாவை ஆட்சி செய்த காலக் கட்டம் முழுவதுமே வன்முறைத் தீயின் சுவாலைகள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தன. அதுதான் வரலாற்று உண்மை. ஆனந்த விகடன் மதன் அவர்களும் அப்படித் தான் சொல்கிறார்.


ஜெங்கிஸ்கான் அந்த மாதிரி கொடூரமாகிப் போனதற்கு சிறுவயதில் அவர் வளர்க்கப்பட்ட முறைதான் காரணம். வேறு ஒன்றும் இல்லை. 

உலக மகா அறிஞர்களில் ஒருவர் அரிஸ்டாட்டில். அந்த மகா அறிஞரிடம் படித்தவர்தான் மகா அலெக்ஸாண்டர். ஆக அவரிடம் படித்த மனிதர் எப்படி வாழ்ந்தார். மனம் கல்லாகிப் போன ஜெங்கிஸ்கான் எப்படி வாழ்ந்தார். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதை முதலில் நினைவு படுத்துகிறேன். சரிங்களா. ஜெங்கிஸ்கானின் கதைக்கு வருவோம்.

கி.பி 1162-ஆம் ஆண்டு பிறந்தவர் ஜெங்கிஸ்கான். அவர் பிறந்த காலக் கட்டத்தில் மங்கோலியர்கள் ஒற்றுமை இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் மங்கோலிய வீரர்கள் போர் முறைகளில் பிரசித்தி பெற்றவர்கள். அவர்கள் ஒன்றுபட்டால் அப்புறம் அவர்களை அசைக்கவே முடியாது. 

இதை எல்லாம் அறிந்த ஜெங்கிஸ்கானின் தந்தையார் தனது சொந்த பந்தங்களை எல்லாம் ஒன்றாக இணைக்க முயற்சி செய்தார். ஜெங்கிஸ்கானின் தந்தையார் பெயர் ஏசுகி (Yesugei). தாயாரின் பெயர் கோலூன் (Hoelun). ஒரு கட்டத்தில் ஜெங்கிஸ்கானுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. 


அப்போது ஜெங்கிஸ்கானுக்கு வயது ஒன்பது. ஜெங்கிஸ்கானின் உண்மையான பெயர் தெமுஜின் (Temujin). பொதுவாகவே மங்கோலியர்கள் சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இருந்தாலும் பன்னிரண்டு வயது வரை மாமனார் வீட்டில் தங்கி சேவகம் செய்ய வேண்டும். 

பன்னிரண்டு வயது ஆன பிறகுதான் திருமணம் நடக்கும். ஆக அவரைக் கொண்டு போய் மாமனார் வீட்டில் விட்டு விட்டு திரும்பி வருகிறார் ஜெங்கிஸ்கானின் தந்தையார். 


வரும் வழியில் ஒரு தார்த்தார் நாடோடி கும்பலைச் சந்திக்கின்றார். தார்த்தார்கள் எப்போதுமே மங்கோலியர்களின் பரம எதிரிகள். இருந்தாலும் அவருடன் சமரசம் பேச அழைத்தனர். அவர்களை நம்பிப் போன ஜெங்கிஸ்கானின் தந்தையார் ஏசுகிக்கு அன்பின் அடையாளமாக உணவு கொடுக்கப் பட்டது. 

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் இறந்து போனார். உணவில் விசம் கலந்து இருந்ததே அதற்குக் காரணம். இதை அறிந்த ஜெங்கிஸ்கான் அவசரம் அவசரமாக வீடு திரும்பினார். தன் தந்தையாரின் நாடோடிக் குழுத் தலைவர் பதவியைத் தனக்குக் தரும்படி செங்கிஸ்கான் கேட்டார். 

ஒன்பது வயதில் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள். அதோடு அவருடைய குடும்பத்தாரையும் புறக்கணித்து விட்டனர். அப்புறம் ஜெங்கிஸ்கானின் குடும்பமே அங்கு இருந்து விரட்டி அடிக்கப் பட்டது.


ஜெங்கிஸ்கான் பருவம் அடைந்ததும் அவர் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா. தன் பெயரை மாற்றிக் கொண்டதுதான். தெமுஜின் எனும் பெயரை ஜெங்கிஸ்கான் (Genghis Khan) என்று மாற்றிக் கொண்டார். 

'ஜெங்கிஸ்கான்' என்றால், மங்கோலிய மொழியில் 'முழுமையான போர்வீரன்' என்று பொருள். தன்னுடைய 16-ஆவது வயதில் தன் தந்தையார்; முன்பு ஏற்பாடு செய்த அதே பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணின் பெயர் போர்த்தே (Borte).

அதன் பின்னர் சிறுவன் ஜெங்கிஸ்கான் எதிரிகளிடம் சிக்கிச் சித்ரவதை செய்யப் பட்டான். அதே சிறுவன் வாலிப வயதை அடைகிறான். ஒரு கட்டத்தில், படைகளைத் திரட்டிக் கொண்டு தன் தந்தையின் எதிரிகளோடு மோதுகிறான். அவனுக்கு மிகவும் விசுவாசமான எழுபது வீரர்கள் சிறை பிடிக்கப் படுகின்றனர். 


இனிமேல்தான் ஜெங்கிஸ்கானின் சீற்றங்கள் கொப்பளிக்கப் போகின்றன. நாளைய கட்டுரையில் மீண்டும் சந்திப்போம்.

சான்றுகள்:

1. Atwood, Christopher P. (2004). Encyclopedia of Mongolia and the Mongol Empire. New York: Facts on File. ISBN 978-0-8160-4671-3.

2. May, Timothy (2012). The Mongol Conquests in World History. London: Reaktion Books. ISBN 978-1-86189-971-2.

3. Barthold, Vasily (1992) [1900]. Bosworth, Clifford E. (ed.). Turkestan Down To The Mongol Invasion (Third ed.). Munshiram Manoharlal. ISBN 978-81-215-0544-4.

4. Porter, Jonathan (2016). Imperial China, 1350–1900. Lanham: Rowman & Littlefield. ISBN 978-1-4422-2293-9.

5. Ratchnevsky, Paul (1991). Genghis Khan: His Life and Legacy. Translated by Thomas Haining. Oxford: Blackwell Publishing. ISBN 978-06-31-16785-3.

6. Biran, Michal (2012). Genghis Khan. Makers of the Muslim World. London: Oneworld Publications. ISBN 978-1-78074-204-5. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக