05 செப்டம்பர் 2011

கணினியும் நீங்களும் - 112

(அன்பர்களே, இந்த 112 ஆம்  பகுதி மலேசிய நண்பன் 04.09.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது. ஏற்கனவே வெளிவந்த கணினியும் நீங்களும் - 95 லிருந்து 111 வரையிலான கேள்வி பதில்கள் ஒவ்வொன்றாகப் பதிப்புச் செய்ய முயற்சி செய்கின்றேன். மலேசிய நண்பன் Indo Word பரணி எழுத்துருவைப் பயன் படுத்துவதால், நம்முடைய எழுத்துகளை அங்கு இருந்து யூனிகோட்டிற்கு மாற்றப் பட வேண்டியுள்ளது. அதனால், சினனச் சின்னத் தாமதங்கள். மன்னித்துப் பொறுத்தளுங்கள்.)

04.09.2011


அம்மணி சுப்பிரமணியம் ammanee@ymail.com

கே: சார், நான் ஒரு மரத்தளவாட நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நான் கணினியில் சேமித்து வைத்து இருந்த கோப்புகளை எல்லாம் தெரியாமல் அழித்துவிட்டேன். Recycle Bin இல் இருந்தும் அழித்து விட்டேன். தயவு செய்து எப்படி திரும்பவும் மீட்பது என்று சொல்லவும். நல்ல பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.


ப: கணினியில் சேமித்து வைத்து இருந்த கோப்புகளை எல்லாம் தெரியாமல் அழித்துவிட்டேன் என்று சொல்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாமல் எப்படி அழிக்க முடியும். சொல்லுங்கள். உங்களுக்கு நன்றாகத் தெரியும் எந்த எந்தக் கோப்புகள் முக்கியமானவை என்று. அப்புறம் எப்படி தெரியாமல் அழிக்க முடியும். கணினி விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இனிமேல், கணினியில் இருந்து எந்தக் கோப்புகளை அழித்தாலும் அந்தக் கோப்புகள் உண்மையிலேயே தேவை இல்லை என்று உறுதி படுத்திய பிறகு அழியுங்கள். Recycle Bin எனும் ‘மீள்சுழல் தொட்டி’ யில் இருந்தும் அழித்து விட்டதாக வேறு சொல்கிறீர்கள்.

‘மீள்சுழல் தொட்டி’யில் உள்ளதை அழிக்கிறீர்கள் என்றால் மொத்தமாக உங்களுக்கு எதுவுமே தேவை இல்லை என்று தானே பொருள். ‘மீள்சுழல் தொட்டி’ யில் உள்ளதை அழிப்பது என்பது உங்களுக்குத் தெரிந்தே அழிப்பதாகும்.

நல்ல வேளை. என்னிடம் வந்து கேட்கிறீர்கள். இதையே நீங்கள் ஒரு கடைக்கு எடுத்துச் சென்று கோப்புகளை மீட்டுத் தரச் சொல்லி இருந்தால் குறைந்த பட்சம் அவர்கள் முந்நூறு நானூறு என்று கரந்து எடுத்து இருப்பார்கள்.

சில சமயங்களில் ஆயிரம் வெள்ளி கட்டி கோப்புகளை மீட்ட சம்பவங்களும் உள்ளன. நான் உங்களை ஏசவில்லை. ஒரு தகப்பன் ஒரு மகளுக்குச் சொல்லும் அறிவுரையாக இதை எடுத்துக் கொள்ளுங்கள். இனிமேல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

http://www.softpedia.com/get/System/Back-Up-and-Recovery/PC-Inspector-File-Recovery.shtml  எனும் முகவரிக்குச் சென்று தகவல் மீட்பு நிரலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

கணினியில் பதிப்பு செய்த பின்னர், அந்த நிரலி சொல்வதைப் போல செய்யுங்கள். உங்களின் அழிந்து போன கோப்புகள் மீண்டும் கிடைத்து விடும்.  இந்த நிரலியும் சரியாக வேலை செய்யவில்லை என்றால் http://www.filesonic.com/file/1696007991 எனும் இணையத் தளத்திற்குச் சென்று இந்த ஒரு பிரபலமான நிரலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். இது பணம் கட்டி பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிரலி. இருப்பினும் சோதனை முறையில் இலவசமாகக் கிடைக்கிறது.


கடவுள் சாமி goldsamymp@gmail.com
கே: அண்மையில் நான் ஒரு நோக்கியா கைத்தொலைப்பேசி வாங்கினேன். அந்தக்  கைத்தொலைப்பேசி எங்கே தயாரிக்கப் பட்டது என்று கடைக்காரரிடம் கேட்டேன். அதற்கு அவர் அமெரிக்காவில் தயாரிக்கப் பட்டது என்று சொன்னார். ஆனால், அது சீனாவில் தயாரிக்கப் பட்டது என்று என் நண்பர் சொல்கிறார். உண்மையில் அது எங்கே தயாரிக்கப் பட்டது என்று எப்படி கண்டுபிடிப்பது?
: தங்களுடைய பொருள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக சில கடைக்காரர்கள் பலவிதமான வர்ணனைகளைச் செய்வார்கள். அவர்களைக் குறை சொல்லக் கூடாது. அது அவர்களின் வாழ்வாதாரம்.

பயனீட்டாளர்களாகிய நாம் தான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். நோக்கியா கைப்பேசி எங்கே தயாரிக்கப் பட்டது என்பதைக் கண்டுபிடிக்க ஓர் எளிய முறை உள்ளது. கைப்பேசியில் *#06# என்று தட்டுங்கள். அப்போது 15 எண்கள் தெரியும்.

அதுதான் நோக்கியா கைப்பேசியின் IMEA எண்கள். அதாவது International Mobile Equipment Identity எண்கள். அதைத் தமிழில் அனைத்துலக அசைவுச் சாதன அடையாளம்என்று சொல்லலாம். இது அடியேன் உருவாக்கிய விரிவாக்கச் சொல். பிழையாக இருப்பின் மொழி அறிஞர்கள் திருத்திக் காட்டவும்.

அந்த 15 எண்களில் ஏழாவதாக வரும் எண்ணையும் எட்டாவதாக வரும் எண்ணையும் குறித்துக் கொளுங்கள். எடுத்துக்காட்டாக என்னுடைய நோக்கியா கைப்பேசியின் IMEA எண்கள் 359342033893341. இதில் ஏழாவதாக வரும் எண் 0. எட்டாவதாக வரும் எண் 3.

இந்த 03 எண்கள்தான் அந்தக் கைப்பேசி எந்த நாட்டில் தயாரிக்கப் பட்டது என்பதைக் காட்டிக் கொடுக்கும் ரகசிய எண்களாகும்.

அந்த எண்களில் 00 என்று வந்தால் அசல் நோக்கியா தொழில்சாலையில் தயாரிக்கப் பட்டது. மிக மிக நல்ல தரம்.

01 அல்லது 10 என்று வந்தால் பின்லாந்து நாட்டில் தயாரிக்கப் பட்டது. கைப்பேசி நல்ல தரமானது.

02 அல்லது 20 என்று வந்தால் எமிரேட்ஸ் நாடு. கைப்பேசியின் தரம் மோசமானது.

03 என்று வந்தால் கொரியா. கைப்பேசி நல்ல தரமானது.

04 என்று வந்தால் சீனா. நல்ல தரமான கைப்பேசி.

05 என்று வந்தால் பிரேசில் செய்யப் பட்ட கைப்பேசி சுமாரான தரம்.

08 அல்லது 80 என்று வந்தால் ஜெர்மனி. கைப்பேசி சுமாரான தரம்.

13 என்று வந்தால் அசர்பைஜான். கைப்பேசி மிக மோசமான தரம் வாய்ந்தது. மேலே சொன்னது நோக்கியா போன்களுக்கு மட்டுமே.

மற்ற வகையான சோனி எரிக்சன், மோட்டோரோலா, எல்ஜி, சம்சுங் போன்ற கைப்பேசிகளுக்கு http://www.numberingplans.com/ எனும் இணையத் தளம் உள்ளது.

அங்கு சென்று உங்களுடைய ஐ.எம்.இ.எ. எண்களைப் பதித்து சரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் துப்பறியும் வேலையைப் பற்றி எனக்கும் தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.


துரை பாலசுந்தரம் 16balan@gmail.com
கே: சார், சில சுப்பர் மார்க்கெட்டுகளில் நமக்கு பொருத்தமான உடைகளை மாற்றிப் பார்க்கும் அறைகளில் ரகசியக் காமிராக்கள் இருக்கும் என்று இணையத்தில் வதந்தி உலாவுகிறதே. உண்மையா?


ப:
சில பெரிய துணிக்கடைகளில், பேரங்காடிகளில் அந்த மாதிரியான ரகசியக் காமிராக்கள் இருக்கலாம் என்று நானும் கேள்வி பட்டிருக்கிறேன். அந்த ரகசிய காமிராக்களைக் கண்காணிக்க பெண் ஊழியர்களை மட்டுமே வேலைக்கு வைத்திருப்பார்கள்.

உடைகள் மாற்றும் போது எந்தவிதமான திருட்டு வேலைகளும் நடைபெறவில்லை என்றால் அந்தப் படங்களை உடனே அழித்து விடுவார்கள்.

விலை உயர்ந்த துணிமணிகளை விற்கும் சில பிரபலமான கடைகளில் அந்த வகையான கண்காணிப்புகள் உள்ளதாக அங்கு வேலை செய்பவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

மறுபடியும் சொல்கிறேன். ஒரு சில கடைகளில் தான்.  எல்லாக் கடைகளிலும் இல்லை. மிக மிக நாணயமான கடைகளும் உள்ளன.

பொதுவாக, மலேசியாவில் உள்ள இந்தியர்களின் கடைகளில் இந்தக் கண்காணிப்புகள் இல்லை. என்னதான் இருந்தாலும் பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக