02 செப்டம்பர் 2011

கணினியும் நீங்களும் - 94



(மலேசிய நண்பன் 03.04.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)


வி.எஸ்.வி.வெங்கடாசலம், பாரிட் புந்தார், பேராக்

கே: நம்முடைய கணினி எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்தப் படுகிறது என்று எப்படி கண்டுபிடிப்பது சார்? அது அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்துமா?

கேள்விக்கும் படத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது.
ப: பொதுவாகக் கணினியைப் பயன்படுத்தும் போது எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்பதை நாம் கண்டு கொள்வதே இல்லை. இதில் என்ன வந்து விடப் போகிறது என்றுதான் நினைக்கிறோம்.

என்னையும் சேர்த்து தான். ஓர் அசட்டையான அலட்சியப் போக்கு. அது தப்புங்க. மாதம் முடிந்து மின்சார ‘பில்’ வரும் போது தான் எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்கும். இல்லையா.

கணினியை நீண்ட நேரம் பயன்படுத்தாத போது அதை நிறுத்தி விட வேண்டும். முடிந்தால் கணினியை Hybernate எனும் ஆழ் உறக்கத்தில் வைப்பது ரொம்பவும் நல்லது.

ஆழ் உறக்கத்தில் இருக்கும் கணினியை நாம் எப்போது வேண்டுமானாலும் தட்டி எழுப்பி மறு இயக்கத்திற்கு கொண்டு வரலாம். அதனால் காசு மிச்சம். கணினியின் ஆயுசும் கெட்டி. ரொம்ப நாளைக்கு தாக்குப் பிடிக்கும். உண்மைதானே.

புதிதாக வீட்டுக்கு வரும் புது மனைவியிடம் ’ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் வேலை. மற்ற நேரத்தில் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்’ என்று சொல்லிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு இளமையாக இருப்பாள். அறுபது வயதிலும் அழகாகத் தான் இருப்பாள்.

அதை விட்டு விட்டு 24 மணி நேரமும் துணி துவைப்பது போல துவைத்து எடுத்தால், பாவம் அவள் தான் என்ன செய்வாள். முப்பது வயதில் கிழடு தட்டி நாற்பது வயதில் நாடி தளர்ந்து...  வேண்டாம். சொல்லவே மனசு கஷ்டமாக இருக்கிறது. ஆளை விடுங்க சாமி... என்று அவள் வீட்டை விட்டு ஓடாமல் இருந்தால் சரி. அதே நிலைமை தான் கணினிக்கும் வரும். புரிகிறதா.

ஒரு கணினியை 24 மணி நேரமும் நிற்காமல் பயன்படுத்தினால் அது ஒரு நாளைக்கு 3.50 ரிங்கிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்பதை மறக்க வேண்டாம். மடிக்கணினி 1.80 ரிங்கிட்  மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் பயன் படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படி என்றால் ஒரு வருடத்திற்கு 20 ரிங்கிட்  மின்சாரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரியா. http://co2saver.snap.com/ எனும் இடத்தில் ஒரு நிரலி இருக்கிறது. எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறீர்கள், எங்கே மின்சாரம் செலவாகிறது என்பதைக் காட்டிக் கொடுத்து விடும்.


இந்திரன் ஜோ ஜோ roy201158@yahoo.com
கே: நம்முடைய பிள்ளைகள் சில ஒழுக்கக் கேடான இணையத் தளங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்?

ப: ‘அதோ பாரு பாட்டி... பாட்டி கட்டுறா வேட்டி’ என்று பாட்டுப் பாடிய காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்போது சில பிள்ளைகள் இணையத்தில் சில நாட்டுப் பாட்டிகளின் ’பார்ட்டி’களைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.


வேதனையான் விஷயம். இணையம் மின்சாரம் போன்றது. தொட்டால் அதிர்ச்சி. அது நல்லதும் செய்யும். கெட்டதும் செய்யும்.

பதினாறு வயது வரை பிள்ளைகளுக்கு இணையத்தில் பாதுகாப்பான வழிமுறைகளைச் சொல்லித் தர வேண்டும். அது பெற்றோரின் கடமை. இணையத்தின் நன்மை தீமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

அப்படியும் அதை மீறி வயது வந்தவர்க்ளுக்கான படங்களை, வீடியோக்களைப் பார்க்கிறார்கள் என்றால் உடனடியாகத் தடுப்பு முறைகளில் இறங்குவது நல்லது. பதினாறு வயதிற்கும் மேற்பட்டு இருந்தால் அறிவுரை ஆலோசனைகளை மட்டுமே சொல்ல முடியும். அந்த வயது இருக்கிறதே அது விவரம் தெரியாத வயது.

ஆக, பிள்ளைகளை ரொம்பவும் கட்டுப்படுத்தினால் அவர்கள் அந்தத் தடைகளை உடைத்துக் கொண்டு போவார்கள். அதனால் ஆரோக்கியமான அறிவுரைகள் தான் சரியான மருந்து.

பிள்ளைகள் கணினியின் முன் உட்கார்ந்ததும் அப்போதே அவர்களுக்கு அருகில் போய் பெற்றோர்கள் உட்காருவதைச் சுத்தமாகத் தவிர்த்து விட வேண்டும். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நொச்சு நொச்சு என்று குறை சொல்வதையும் தவிர்க்க வேண்டும்.

அவர்கள் சுதந்திரமாக இணையத்தை எப்படி நல்ல வழிகளில் பயன் படுத்த முடியும் என்று அறிவுரை சொல்லுங்கள். அதோடு விலகிக் கொள்ளுங்கள்.

இருந்தாலும் அவர்கள் இணையத்தில் என்ன என்ன செய்கிறார்கள்; என்ன என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கத் தவற வேண்டாம். அதற்கான நிரலிகள் உள்ளன. இரு இலவச நிரலிகள் கிடைக்கும் முகவரிகளைக் கொடுக்கிறேன். பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

1. http://www1.k9webprotection.com/
2.http://kidlogger.net/


சீர்காழி ஜெயபாலன், ஸ்தாபாக், கோலாலம்பூர்
கே: என்னுடைய கணினி வழக்கத்திற்கு மாறாக வேலை செய்கிறது. மிகவும் மெதுவாக வேலை செய்கிறது. ஒரு புரோகிராமை ஆரம்பித்தால் ஒரு நிமிடம் சென்றுதான் திறக்கிறது. விரிவாக விளக்கம் கொடுத்து இருக்கிறேன். உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பதில் கிடைப்பது இல்லை. அப்புறம் ஏன் உங்கள் கைப்பேசி எண்களைப் பத்திரிகையில் போட வேண்டும். சரியான காரணம் என்ன?


ப:
அன்பு சீர்காழியாரே, நமக்கு எத்தனை வயிறு. ஒரு வயிறுதானே. நல்லபடியாக, நிம்மதியாகத் தானே இருக்கிறது. திடீரென்று கடா முடா சத்தம். பேய் மழைக் காற்று. இடி முழக்கம். சுனாமி அலைகள். நாகாசாக்கி குண்டுகள்.

அப்படி என்றால் என்ன அர்த்தம். இலவசமாகச் சாப்பாடு கிடைக்கிறதே என்று போட்டுத் திணித்தால் வயிறு சத்தம் போடாமல் வேறு என்னய்யா செய்யும்.

கணினியும் அந்த மாதிரிதான். கணினி வழக்கத்திற்கு மாறாக மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்றால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.
 
RAM எனும் தற்காலிக நினைவி திடீரென நிறைந்து போய் இருக்கலாம். அல்லது தற்காலிக நினைவியின் கொள் சக்தி குறைவாக இருக்கலாம். கண்ட கண்ட படங்கள், கண்ட கண்ட பாடல்கள் கணினியின் வன் தட்டைப் பிதுங்க பிதுங்க அடைத்துக் கொண்டு இருக்கலாம்.

உலகமே தன் கணினிக்குள் இருக்க வேண்டும் என்று சிலர் ஆசைப் படுவார்கள். ஆனால், அதற்காகக் கிடைக்கின்ற சில்மிச அல்வாக்கள், ஆரோக்கியமற்ற லட்டு ஜிலேபிகளைக் கணினிக்குள் போட்டு அடைத்து வைத்து அழகு பார்க்கக் கூடாது. தெருவில் கிடக்கிற குப்பைகளை வீட்டுக்கு கொண்டு வந்தால் எப்படி?

இதைத் தவிர்க்க WhatInStartup எனும் ஓர் இலவச நிரலி இருக்கிறது. http://www.nirsoft.net/utils/what_run_in_startup.html எனும் இடத்தில் கிடைக்கிறது. அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

என்ன என்ன நிரலிகள் உடன் தொடங்குகின்றன என்ற பட்டியல் வரும். தேவையற்றதை நீக்கி விடுங்கள். அதன் பின்னர் உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும்.

அல்லது http://www.filesonic.com/file/595166814/TuneUp.Utilities.2011.rar எனும் இடத்தில் TuneUp.Utilities.2011 நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மிக அருமையான நிரலி.

அடுத்து எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பதில் கிடைப்பது இல்லை என்று வருத்தப் படுகிறீர்கள். ஒன்று சொல்வேன். கோயிலில் பிரசாதம் கொடுக்கிறார்கள். அதைச் சந்தோஷமாக வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் போவோம் ஐயா. எல்லோரும் கையை நீட்டுகிறார்கள்.

கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். அதற்காக நதி மூலம் ரிஷி மூலத்தைப் பற்றி ஆராய்ச்சி பண்ணி ஆத்திரப் படுவதில் நியாயம் இருக்கிறதா. சொல்லுங்கள்.


தினேஷ் குமார் dhaneshkumar80@gmail.com
கே: என்னுடைய கணினியில் உள்ள சில ரகசியக் கோப்புகளை (Folder) மற்றவர்கள் பார்க்காமல் இருக்க மறைத்து வைக்க வேண்டும். அவற்றை எப்படி மறைப்பது?



ப:
நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பின் மீது சுழலி கொண்டு வலது சொடுக்கு செய்யுங்கள். ஆகக் கீழே Attributes எனும் பகுதி இருக்கும். அதில் Hidden என்பதைச் சொடுக்கி விடுங்கள். பின்னர் Apply என்பதைத் தட்டி விடுங்கள்.

அடுத்து Apply changes to this folder only  என்பதைச் சொடுக்கி விடுங்கள். அடுத்ததாக Ok. உங்கள் கோப்பு உடனே மறைந்து இருக்க வேண்டும். அப்படி மறையவில்லை என்றால் இப்படி செய்யுங்கள்.

Desktop >> My Computer >> Double Click >> Tools >> Folder Options >> View >> Do not show hidden files >> Ok என்று சொடுக்கி விடுங்கள். உங்கள் கோப்பு கண்டிப்பாக மறைந்து இருக்கும்.


ஜெயன் மோகன் ஜெயசீலன், செம்பிராங் ரிசோர்ட், லாபுவான்
கே: சத்யம் கணினி நிறுவனத்தில் என்னதான் நடந்தது? அந்த நிறுவனத்தை மூடி விட்டார்களா சார்?

ப:
பங்கு வர்த்தகத் துறையில் சத்யம் கணினி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பைக் கூட்டி விட செய்யப் பட்ட ஒரு ராஜதந்திர வேலை. 2009 ஆம் ஆண்டு ராமலிங்க ராஜு என்பவர் சத்யம் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.



அப்போது அந்த நிறுவனத்தில் உண்மையில் 40,000 பேர்தான் வேலை செய்து வந்தனர். ஆனால், 53,000 பேர் வேலை செய்ததாக வெளி உலகத்திற்கு அறிவித்து வந்தார்.

ஆக 13,000 ஆவி ஊழியர்களின் சம்பளப் பணத்தை ராமலிங்க ராஜு தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வந்தார். அதாவது ஒரு மாதத்திற்கு 20 கோடி ரூபாய். பல மாதங்களாக இந்தக் கரையான் அரிப்பு வேலை நடந்து இருக்கிறது.

கடைசியில் குட்டு உடைந்தது. ராமலிங்க ராஜு பிடிபட்டார். அதன் பின்னர் மகேந்திரா நிறுவனம், சத்யம் நிறுவனத்தின் பங்குகளில் பாதியைக் குறைந்த விலையில் வாங்கிக் கொண்டது.

பழைய சத்யம் இப்போது மகேந்திரா-சத்யம் என்று அழைக்கப் படுகின்றது. அதை விடுங்கள். 2ஜி அலைக் கற்றை ஊழலுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் சத்யம் ஊழல் ஒரு சின்ன ஜுஜுபி. நம் மலேசியா மொழியில் சின்ன கோப்பிக்கோ மிட்டாய்.

1 கருத்து: