15 டிசம்பர் 2011

சாகாவரம் பெற்ற துன் சம்பந்தன்


மேல்விவரங்களுக்கு: http://ta.wikipedia.org/wiki/வீ._தி._சம்பந்தன்

மலேசிய அரசியலில் கோடீஸ்வரராக வந்தவர். அரசியலை விட்டுப் போகும் போது ஏழையாகி, ஒரு வேட்டி ஜிப்பாவுடன் கண்ணீர்க் கடலில் மூழ்கிப் போனவர். தன்னுடைய பணம், பொருள், செல்வம், கோடிக்கணக்கான குடும்பச் சொத்துகள் அனைத்தையும் மலேசிய இந்திய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்த ஒரு பெரிய சகாப்தம்.  மலேசியத் தமிழர்களாகிய நாங்கள் அவரை சாகும்வரை  மறக்க மாட்டோம்.

மலேசியாவின் காமராசர்
உலகத் தமிழர்களால் போற்றப் படும் ஒரு சகாப்தம்.
சாகாவரம் பெற்ற ஒரு சாம்ராஜயம்.

துன் வீராசாமி திருஞான சம்பந்தன் அவர்கள், மலேசிய இந்திய காங்கிரசின் 5-ஆவது தலைவர். மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில் மூத்த அமைச்சர் பதவிகளை அலங்கரித்தவர். மலேசிய இந்தியச் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர்.

இந்தியாவின் ’பாரத ரத்னா’ விருதிற்கு இணையான மலேசியாவின் ஆக உயரிய ’துன்’ விருதைப் பெற்ற முதல் தமிழர். சுத்தமான கைகளுடன் வந்தவர், சுத்தமான கைகளுடன் மறைந்தும் போனார்.

அரசியலில் கோடீஸ்வரராக நுழைந்து ஏழையாகி மறைந்து போனவர். தன்னுடைய பணம், பொருள், செல்வம், குடும்பச் சொத்துகள் அனைத்தையும் மலேசிய இந்திய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்த மாமனிதர். மலேசியாவின் காமராசர் என்று மலேசியத் தமிழர்களால் புகழப் படுகிறார்.

காலத்தால் அழிக்க முடியாத அரிய பெரிய காரியங்களைச் செய்து முடித்து, மலேசிய இந்தியர்களின் நெஞ்சங்களில் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் மாபெரும் மனிதர்.

மலாயா சுதந்திரம் அடைவதற்கு இந்திய மக்களின் பிரதிநிதியாக லண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த மலேசியத் தலைவர்களில் துன் சம்பந்தனும் ஒருவர்.

பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் வீராசாமி - செங்கம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது புதல்வராக துன் வீ.தி.சம்பந்தன் பிறந்தார். துன் சம்பந்தனின் தந்தையார் வீராசாமி, 1896-இல் மலாயா வந்தார். குறுகிய காலத்தில் சில ரப்பர் தோட்டங்களுக்கு உரிமையாளர் ஆனார். வீராசாமியின் உடன் பிறப்புகள்: வி.மீனாட்சி சுந்தரம், வி.கிருஷ்ணன், வி.சரஸ்வதி.

கோலாகங்சாரில் உள்ள கிளிபர்ட் பள்ளியில் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர் இந்தியாவில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் இளநிலை பட்டம் பெற்றார். நாடு திரும்பியதும் தன் குடும்பத்தின் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார்.

இளம் வயதில் தலைவர் பதவி இளவயதில் பள்ளியிலும் பல்கலைக்கழகத்திலும் பயிலும் காலத்தில் சமூக நடவடிக்கைகளில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபாடு காட்டி வந்தார்.

துன் சம்பந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்திய தேசிய இயக்கத்தின் கொளகைகளினால் கவரப் பட்டார்.

பிரித்தானியர்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களிலும் துன் சம்பந்தன் கலந்து கொண்டார். அந்த வகையில் ஒரு போராட்டத்தின் போது காயமும் அடைந்து இருக்கிறார். சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு போன்றோரின் அரசியல் கொளகைகள் அவருக்குப் பிடித்துப் போயின.

அதனால், இந்திய தேசிய காங்கிரஸின் இளைஞர் அணியில் இணைந்து தீவிரமாகச் செயல் பட்டார். அப்பொழுது தான் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட்டின் நட்பு கிடைத்தது.

விஜய லட்சுமி பண்டிட் மலாயா வருகை

1942 ஆம் ஆண்டு அவருடைய தந்தையார் மலாயாவில் இறந்த பொழுது துன் சம்பந்தனால் திரும்பி வர முடியவில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலக் கட்டம் அது. 1946-இல் தான் அவரால் திரும்பி மலாயா வர முடிந்தது.

தாயகம் திரும்பியதும் குடும்பத்தாரின் ரப்பர் தோட்ட நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார். பின்னர், 1954-இல் சுங்கை சிப்புட்டில் மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியை நிறுவினார். அப்பள்ளியைத் திறந்து வைக்க விஜய லட்சுமி பண்டிட்டைக் கேட்டுக் கொண்டார்.

அவரும் மலாயாவுக்கு வருகை புரிந்து மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியைத் திறந்து வைத்தார். மலாயாவில் பல இடங்களில் எழுச்சியுரைகள் ஆற்றிச் சென்றார்.

அவருடைய தலைமைத் துவத்தை வெளிப் படுத்தும் வகையில் தனது 36-ஆவது வயதில் மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் பதவியை ஏற்றார். ம.இ.கா உருவாக்கப் பட்டு ஒன்பது ஆண்டுகளில் துன் சம்பந்தன் தலைவரானார். அப்பொழுது 35 கிளைகள் மட்டுமே ம.இ.காவில் இருந்தன. அவர் 18 ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்து விலகும் போது ம.இ.காவில் 300 கிளைகள் இருந்தன.

அரசியல் வாழ்க்கை

1955-இல் துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்திய காங்கிரசைக் (MIC) கூட்டணி கட்சியில் (Parti Perikatan) இணைத்தார். அம்னோ (UMNO), மலேசிய சீன காங்கிரஸ் (MCA) மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியே இந்த கட்சியாகும். மலாயா சுதந்திரம் அடைவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன், மத்திய கூட்டரசுப் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

மலாயாவின் முதல் பொதுத் தேர்தல் 1955 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது.மலாயாவில் முதலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் துன் வீ.தி.சம்பந்தன் பேராக் மாநிலத்தில், கிந்தா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தொழிலாளர் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பம்

பின்னர் அவர் சுகாதார அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 1959-இல் எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் தபால் அமைச்சராக பதவி வகித்தார். அவர் இறுதியாக ஏற்ற பதவி தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகும். அவருடைய ஆட்சி காலத்தில் மக்களுக்குப் பல வகையில் நன்மை பயத்துள்ளார்.

மலேசிய வரலாற்றில் முக்கிய நாளாக அமைவது சுதந்திர தினமாகும் (31 ஆகஸ்டு 1957). மலேசிய சுதந்திரம் அடைய மூன்று முக்கிய தலைவர்கள் சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களின் பிரதிநிதியாக துன் சம்பந்தன் கையொப்பம் இட்டார்.

சுவையான நிகழ்ச்சி

மலாயா கூட்டரசு சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்ற பின்னர் துன் சம்பந்தன் வேட்டி ஜிப்பாவுடன் சட்டமன்றக் கூட்டங்களுக்குச் சென்று வந்தார். தொழிலாளர் அமைச்சராகப் பதவிக்கு வந்தும் வேட்டி ஜிப்பா அணிவதை விட்டுக் கொடுக்கவில்லை. இது பிரித்தானிய அரச அதிகாரிகளுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

1957 ஆம் ஆண்டு மலாயா விடுதலைக்கான இறுதி பேச்சுவார்த்தைகள் லண்டனில் நடைபெற்றன. அப்போது துன் சம்பந்தன் வேட்டி ஜிப்பா அணிந்து கொண்டு தான் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். இது அங்குள்ள பிரித்தானிய உயர் அதிகாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

வேட்டி ஜிப்பா கலாசாரம்

அதைக் கண்ட பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஒரு முடிவு எடுத்தார். துன் சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். துன் சம்பந்தனிடம் அமைதியாகச் சொல்லிப் பார்த்தார்.

துன் சம்பந்தன் கேட்பதாக இல்லை. அது மட்டும் இல்லை. லண்டனில் நடக்கும் போது துன் சம்பந்தனால் வேகமாக நடக்க முடியவில்லை. ஒரு நாள் லண்டனில் உள்ள பிக்காடிலியில் இருக்கும் ஆண்களுக்கான அணிகலன் கடைக்கு (Simpson’s men’s store in Piccadilly) அழைத்துச் சென்றார்.

முதலில் மறுத்த துன் சம்பந்தன் வேறு வழி இல்லாமல் புது உடைகளுக்கு சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் துன் சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரம் ஒரு முடிவிற்கு வந்தது.

அமைச்சர் பதவிகள்

    1955 - 1957: தொழிலாளர் அமைச்சர்
    1957 - 1959: சுகாதார அமைச்சர்
    1959 - 1969: பொதுப்பணி, அஞ்சல், தந்தித்துறை அமைச்சர்
    1972 - 1974: ஒற்றுமைத் துறை அமைச்சர்


பத்திரிகை உலகில்

துன் சம்பந்தன் 1960 களில் மலைநாடு தமிழ்த் தினசரியையும் ‘மலாயன் டைம்ஸ்’ ஆங்கில தினசரியையும் நடத்தினார். பத்திரிகை நடத்தியதால் குடும்பச் சொத்தில் பெரும் பகுதியை இழக்க நேரிட்டது. மலாயாவில் உள்ள இந்திய சமூகத்தினரைப் பற்றிய செய்திகளையும் ம.இ.கா பற்றிய செய்திகளையும் ஆங்கிலப் பத்திரிகைகளில் அதிகமாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்பது துன் சம்பந்தனின் விருப்பம்.

அந்த ஆர்வத்தில் பெரிய அளவில் ‘மலாயன் டைம்ஸ்’ தினசரியை நடத்தினார். பத்திரிகை நட்டத்தில் போய்க் கொண்டிருந்தாலும் ஆங்கிலப் பத்திரிகையை நடத்த வேண்டும் எனும் ஒரு பிடிவாதத்தில் துன் சம்பந்தன் தனது குடுமபச் செல்வத்தையே இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

தோட்டத் துண்டாடல்

1955 – 1965 ஆம் ஆண்டுகளில் ம.இ.கா. ஒரு பெரும் சவாலை எதிர்நோக்கியது. மேலை நாட்டு நிறுவனங்கள் ரப்பர் தோட்டங்களை விற்று விட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட உள்நாட்டு முதலாளிகள் அந்தத் தோட்டங்களை வாங்கித் துண்டாடத் தொடங்கினர்.

அதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வாழ்க்கையில் தடுமாறிப் போய் வீதியில் நின்றனர். உடனடியாக அரசாங்கம் தலையிட்டு தோட்டங்கள் துண்டாடப் படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இருப்பினும் துண்டாடல் தொடர்ந்து வந்தது. இந்தக் கட்டத்தில் ம.இ.கா.வும் களம் இறங்கியது.

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்

துன் சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் சென்று, தோட்டத் தொழிலாளர்களும் முதலாளிகள் ஆகலாம் என்று பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்தார். அந்தப் பத்துப் பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் National Land Finance Cooperative Society (NLFCS) எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம். இச்சங்கம் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 14-இல் தொடங்கப் பட்டது.

பின்னர், துன் சம்பந்தன் அந்த வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்தத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தான் 1970 ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது.

85,000 தொழிலாளர்களுக்கு வேலை

1979 ஆம் ஆண்டில் துன் சம்பந்தன் இறக்கும் போது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்திற்கு 18 ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அவற்றின் மொத்தப் பரப்பளவு 120 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். அவற்றில் 85,000 தொழிலாளர்கள் வேலை செய்தனர்.

துன் சம்பந்தனின் மறைவிற்குப் பின், 1980ஆம் ஆண்டில் இருந்து 1985 ஆம் ஆண்டு வரை தோ புவான் உமாசுந்தரி சம்பந்தன் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

துன் விருது

குறிப்பாக பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவில் ஒற்றுமையை உருவாக்க அவர் பெரிதும் பங்கு வகித்துள்ளார். தொடர்ந்து அவர் பிஜியில் உள்ள இந்தியர்களையும் பூர்வக் குடியினரையும் ஒருமைப்படுத்த பெரும் பங்காற்றியுள்ளார்.

துன் சம்பந்தன் 1966-இல் டான்ஸ்ரீ விருதும் மறு ஆண்டில் மலேசியாவின் மிக உயரிய விருதான ‘துன்’ விருதும் பேரரசரால் வழங்கிக் கௌரவிக்கப் பட்டார். மலாயா பல்கலைக்கழகம் 1971-இல் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தது.

1973-இல் வயதான காரணத்தால் அவர் மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகிய முக்கிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தமிழ் நேசன் நாளிதழின் அஞ்சலி

1979-ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி துன் சம்பந்தன் அவர்கள், தன்னுடைய 60ஆவது வயதில் இதய நோய் காரணமாக இறைவனடி சேர்ந்தார். அரசாங்க மரியாதையுடன் அவரின் இறுதிச் சடங்கு அவர் பிறந்த ஊரான சுங்கை சிப்புட்டில் நிகழ்ந்தது.

இந்திய சமுதாயத்திற்கு துன் சம்பந்தன் ஆற்றி இருக்கும் தொண்டு மகத்தானது. துன் சம்பந்தன் மறைந்த மறுநாள் தமிழ் நேசன் நாளிதழ் நீண்ட தலையங்கம் எழுதியது.

அதில் இடம்பெற்ற பகுதி:

“ இந்திய வம்சாவளியினர் ஏழைகளாக இருக்கலாம். ஆனால், கோழைகளாக வாழக் கூடாது என்பது அவர் வழங்கிய தாரக மந்திரம். துன் சம்பந்தனின் அரசியல் எதிரிகள் கூட அவரின் நேர்மைக்குத் தலை வணங்கினர். துன் சம்பந்தன் மறைவு பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டில் பாடுபட்டு உழைத்து பல இன்னல்களுக்கு உள்ளாகி வாழ்க்கை ஒளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. இந்த இழப்பு அனைவருக்குமே ஏற்கத் தயங்குகிற ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நாட்டின் சுதந்திரத்திற்கான பிரகடனத்தில் கையொப்பமிட்ட ஒரு வீர புருஷரை இழந்து விட்டோம். ”

துன் சம்பந்தன் சாலை

அவருடைய அரும் சேவையை நினைவு கொள்வதற்காக கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் (Brickfields) சாலைக்கு ‘துன் சம்பந்தன் சாலை’ என்று இவருடைய பெயர் சூட்டப்பட்டது.

அதே போல ஈப்போவின் பழைய நகரில் துன் சம்பந்தன் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளின் பெயர்களும் அவரின் பெயரில் இயங்கி வருகின்றன.

கோலாலம்பூர், துன் சம்பந்தன் சாலையில் உள்ள அதி விரைவு ரயில் சேவை மையத்திற்கு LRT Tun Sambanthan என்றும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.

4 கருத்துகள்: