தியாகா ராமா thiaga.rama@gmail.com
கே: தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி? தமிழ் யூனிகோடு நிரலி இலவசமாகக் கிடைக்கும் போது, அப்புறம் ஏன் 100 ரிங்கிட் கேட்கிறார்கள்?
ப: யூனிகோடு நிரலி இலவசமாகக் கிடைக்கிறது என்பது உண்மைதான். காசிற்கு விற்கிறார்கள் என்பது அவர்களுடைய பிரச்னை. அந்த நிரலியில் கொஞ்சம் மாற்றம் செய்து விற்கிறார்கள். அப்படி சம்பாதிக்கிற பணம் எத்தனை நாளைக்கு ஒட்டிக் கொண்டு வரப் போகிறது. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் எழுத மாட்டேன். போகட்டும் விடுங்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் இருக்கும் நியூ ஹாரிசான் எனும் நிறுவனம் இலவசமாக தமிழ் யூனிகோடு நிரலியை உலகத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறது. http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ததும், அதைக் கணினிக்குள் நிறுவல் செய்து கொள்ளுங்கள். install எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நிறுவல் என்பதே சரியான தமிழ்ச் சொல் ஆகும்.
நிறுவல் செய்யும் போது ஒரு கட்டத்தில் எந்த மொழி என்று கேட்கப்படும். அப்போது ’தமிழ்’ என்பதைத் தேர்வு செய்யுங்கள். தமிழ், அசாம், வங்காளம், குஜாராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய 11 இந்திய மொழிகளில், இந்த நிரலி வேலை செய்கிறது.
என்.எச்.எம் தமிழ் நிரலியை நிறுவல் செய்ததும், ஆகக் கீழே இருக்கும் பணிப் பட்டையில் ஒரு வெள்ளை நிற மணியின் சின்னம் தோன்றும். Task Bar என்பதைத்தான் பணிப் பட்டை என்று அழைக்கிறோம். அந்த வெள்ளை நிற மணியை வலது சொடுக்கு செய்யுங்கள். Settings என்று வரும்.
அதில் Tamil Phonetic என்பதை மட்டும் சொடுக்கி விட்டு மற்றவற்றை சும்மா விட்டு விடுங்கள். அதாவது Tamil 99, OldTypewriter, Bamini, Inscript ஆகிய மொழிப் பிரிவுகளுக்கு முன்னால் உள்ள () சின்னத்தை வேண்டாம் என்று எடுத்து விடுங்கள். Tamil Phonetic என்பதை மட்டும் தேர்வு செய்தால் போதும். அதை மட்டும் சொடுக்கு செய்யுங்கள்.
அடுத்து Start automatically when starting Windows என்பதையும் மறக்காமல் சொடுக்கி விடுங்கள். அவ்வளவுதான். Ok பொத்தானைத் தட்டி விட்டு வெளியேறுங்கள்.
கணினியின் இயக்கத்தை நிறுத்தி, மறுபடியும் தொடக்கம் செய்யுங்கள். அதாவது Restart செய்யுங்கள். அடுத்து Keyboard எனும் தட்டச்சுப் பலகையில் Alt எனும் பொத்தானை அழுத்திக் கொண்டே, 2 எனும் இலக்கப் பொத்தானையும் அழுத்துங்கள். வெள்ளி நிறத்தில் இருக்கும் மணியின் சின்னம் தங்க நிறத்திற்கு மாறும். அப்படி என்றால் தட்டச்சுப் பலகை தமிழுக்கு மாறி விட்டது என்று பொருள்.
அதே Alt 2 பொத்தான்களை மறுபடியும் அழுத்தினால், மணியின் சின்னம் வெள்ளி நிறத்திற்கு மாறும். அப்படி என்றால் ஆங்கிலத்திற்குப் மாறிவிட்டது என்று பொருள். தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் மறுபடியும் Alt எனும் பொத்தானை அழுத்திக் கொண்டே 2 எனும் பொத்தானையும் அழுத்துங்கள். தமிழுக்கு வந்துவிடும். இதுதான் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்யும் முறையாகும். தங்க நிறம் என்றால் தமிழ். வெள்ளி நிறம் என்றால் ஆங்கிலம். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
’ஸ்ரீ’ எனும் எழுத்தை எழுதுவதற்கு sri என்று தட்டச்சு செய்ய வேண்டும். அதைப் போல ’ஷ்’ எனும் எழுத்தை எழுதுவதற்கு sh என்று தட்டச்சு செய்ய வேண்டும். நிரலியைப் பதிவிறக்கம் செய்யும் போது, அதன் அருகில் Manual எனும் ஒரு வழிகாட்டி இருக்கும். அதையும் படித்துப் பார்த்து விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் பலர், வியாபார நோக்கில் பல வகையான தமிழ் எழுத்துருகளை உருவாக்கினார்கள். அவற்றுக்கு தங்களின் விருப்பமான பெயர்களை வைத்து அழகு பார்த்தார்கள். ஆயிரம், இரண்டாயிரம், பத்தாயிரம் என்றுகூட பணம் சம்பாதித்தார்கள். பணம் சம்பாதிப்பதே அவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. After Sales Service எனும் வணிக நெறியை அடியோடு முறித்துப் போட்டார்கள். உண்மை அதுதான்.
இப்போதும் மட்டும் என்னவாம். பழைய நிரலியில் ஒரு சில சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்கிறார்கள். அப்புறம் புதுசு என்று சாயம் பூசி, மொத்தமாக விற்று விடுகிறார்கள். கணினி உலகில் நடக்கும் சில பித்தலாட்டங்களை, வெளிச்சம் போட்டு பார்க்கும் போது வேதனையின் விரிசல்கள் தெரிகின்றன.
தமிழ் யூனிகோடு உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைப்பதற்கு காசு எதுவும் கொடுக்க வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன். http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் அந்த தமிழ் தட்டச்சு நிரலி இலவசமாகக் கிடைக்கிறது.
பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை வரலாம். அல்லது நிறுவல் செய்யும் போது பிரச்னைகள் வரலாம். புதியவர்கள் சிரமப்பபடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். பயப்பட வேண்டாம். பிரச்னை என்றால் 010-3913225 அல்லது 012-4347462 எனும் என்னுடைய கைத்தொலைப்பேசி எண்களுக்கு அழையுங்கள். உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்.
திருமதி. மாலா சின்கா malasinha@gmail.com
கே: ஆங்கிலத்தில் Mouse என்று அழைப்பதை நீங்கள் ’சுழலி’ என்று அழைக்கிறீர்கள். பாட நூல்களில் எலியன், சுட்டெலி என்று இருக்கிறது. எது சார் சரி. யார் சொல்வது சரி.
ப: நல்ல ஒரு கேள்வி. 1968 ஆம் ஆண்டு, Douglas Engelbart என்பவர் பலகையால் ஆன ஒரு சுழலியை உருவாக்கினார். அதற்கு ஒரு நீண்ட வால். சுண்டெலிக்கு இருக்குமே அந்த மாதிரியான ஒரு நீண்ட வெள்ளை நிற வால். ஒருநாள், ஆய்வுக் கூடத்தில் உதவியாளராக இருந்த ஒருவர், அதைப் பார்த்து ’இது என்ன சுண்டெலியின் வாலைப் போல இருக்கிறது’ என்று கேட்டு வைத்தார்.
அதுவரை சுழலிக்குப் பெயர் எதுவும் வைக்கப்படவில்லை. அடுத்து அடுத்து அவர்கள் பேசிக் கொள்ளும் போது ‘மவுஸ்’ எனும் சொல் அடிக்கடி வந்து விழுந்தது. காலப் போக்கில் அதுவே, நிலையான ஒரு சொல்லாகிப் போனது.
அப்புறம் அது ஒரு பெயராகவும் மாறிப் போனது. கடந்த 44 ஆண்டுகளாக ‘மவுஸ்’ என்றுதான் அழைக்கிறார்கள். அது வரலாறு. சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.
2000ஆம் ஆண்டுகளில்தான், தமிழர்கள் உலகளாவிய நிலையில் கணினியைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அதுவரை ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தினர். தமிழ்க் கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டாலும் தரமான சொற்களாக அமையவில்லை.
தடி எடுத்தான் தம்பிரான் என்று சொல்வார்களே, அந்த மாதிரி ஆளாளுக்கு ஒரு சொல்லை உருவாக்கிக் கொண்டார்கள். அந்த வகையில் வந்தவைதான் இந்தச் சுண்டெலி, சுட்டெலி, சுட்டி, எலியன், எலியான், இடுக்கி, சொடுக்கி என்கிற சொற்கள்.
2003 ஆம் ஆண்டு, விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியம் தமிழில் தன் சேவையைத் தொடங்கியது. 2009ஆம் ஆண்டில் விக்சனரி எனும் தனிக் கலைக்களஞ்சியப் பகுதியும் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது கணினிக் கலைச் சொற்களும் இணைக்கப்பட்டன.
அந்தக் கட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். ’மவுஸ்’ என்பதைச் சுற்றுகிறோம், சுழற்றுகிறோம். ஆக, சுண்டெலியின் முதல் எழுத்தான ‘சு’ எனும் எழுத்துடன், ஈற்று எழுத்தான ‘லி’ எனும் எழுத்தையும் சேர்த்தால் ‘சுலி’ என்று வருகிறது.
இதில், கணினியின் மவுஸைச் சுழற்றுவதால் ‘சுழல்’ எனும் வேர்ச் சொல் வருகிறது. அந்த வேர்ச் சொல்லில் உள்ள ‘ழ’ எனும் எழுத்தை மட்டும் எடுத்து, ‘சுலி’ எனும் எழுத்துகளுடன் சேர்த்தால், ‘சுழலி’ என்று வருகிறது.
ஆக, அதுவே எளிதான, எல்லாருக்கும் புரியும்படியான சொல்லாக இருக்கிறது என்று விக்கிப்பீடியா ஏற்றுக் கொண்டது. சொல்லை உருவாக்கிய எனக்குப் பெருமை வேண்டாம். உலகளாவிய நிலையில் போய்ச் சேர்ந்தால் அதுதான் உண்மையான பெருமையாக இருக்கும்.
எதிர்வரும் காலங்களில் சுழலி எனும் சொல் பாட நூல்களில் பயன்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.
சுழலிக்கு Mouse என்ற ஆங்கில சொல் வந்த வரலாறு என்று ஒரு வினா விடை நிகழ்ச்சியில் பார்த்தேன். Mouse Object Used for Selecting Events என்ற வாக்கியத்தின் முதல் எழுத்துக்களே MOUSE என்ற பெயர் வரக்காரணம் என்று. பதில் பொருத்தமானதாத்தான் இருக்கிறது. ஆனால் நமக்கு ஆதாரம் முக்கியமில்லையா?
பதிலளிநீக்குசிறிய தவறு நண்பரே!
பதிலளிநீக்குMoving Object Used for Selecting Events
அன்பு நண்பருக்கு,
நீக்குநீங்கள் சொல்லும் Moving Object Used for Selecting Events எனும் சொற்கள் கூகிள் தேடல் இயந்திரத்தில் இல்லவே இல்லை. உங்களுக்கு எங்கே இருந்து அந்தத் தகவல் கிடைத்தது. சான்றுகள் தேவை. விக்கிப்பீடியா ஆங்கிலத்திலும் அப்படி ஒரு வாக்கியம் இல்லை. இல்லாத ஒன்றை ஏன் இங்கே கொண்டு வர வேண்டும். சரி, நீங்கள் சொல்வது போல Moving Object Used for Selecting Events தான் சரி என்றால், அதை தமிழ்ப்படுத்திக் கொடுங்கள். உலக மக்கள் பயன்படுவார்கள். நானும் பயன்படுத்துகிறேன்.
வணக்கம் ஐயா. சொடுக்கிய பின் சுழலுவதால் ”சுழலி” மிகவும் பொறுந்தி வருகிறது ஐயா. சுண்டெலி, சுட்டெலி, எலியன், எலியான் என்ற சொற்கள் நேர் மொழிபெயர்ப்பு என்பதால் “சுழலி” என்ற சொல்லையே தூய தமிழ்ச் சொல்லாகக் கொள்வோம்.- குமரன் மாரிமுத்து
பதிலளிநீக்குthank u very much for nhm writer. but the same applicable for ubuntu ? if yes, pl reply how to install it ?
பதிலளிநீக்குஇலவச நிரலியில் 100 ரிங்கிட் கொடுத்து வாங்கும் நிரலியில் இருக்கும் வசதிகள் ஏதும் இல்லையே?! தமிழ் அகராதியை அதில் இணைத்துள்ளார்களே.. ஆங்கிலத்தில் இருக்கும் சொற்களைத் தேடும் வசதி இந்த நிரலியில் உள்ளது.. நீங்கள் எதை 100 ரிங்கிட் கொடுத்து வாங்கினீர்கள் சகோதரி?!
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி.
நல்ல விளக்கம் .நன்றி
பதிலளிநீக்குஅன்பான வாசகர்களே, தங்களின் கருத்துகளுக்கு மிகவும் நன்றி.
பதிலளிநீக்கு