10 ஜூன் 2014

இந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள்

மலேசியா தினக்குரல் நாளிதழில் 13.07.2012 பிரசுரிக்கப்பட்ட கட்டுரை

இந்திய மகாராஜாக்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், மாபெரும் காலச் சுவடுகளை விட்டுச் சென்று இருக்கிறனர். பொழுது போகவில்லையே என்று புலிகளை வேட்டையாடிக் குவித்தவர்கள் இருக்கிறார்கள். வலிமை குறைந்த ராஜாக்களை வாழைப் பூவாய் வறுத்து எடுத்தவர்கள் இருக்கிறார்கள். 


அரிய பெரிய கோயில்களைக் கட்ட வேண்டும் என்பதற்காக ஆயிரக் கணக்கான அப்பாவிகளை அடிமைகளாக ஆக்கியவர்கள் இருக்கிறார்கள். கஜானா காலி ஆகிறதோ இல்லையோ அந்தபுரங்கள் நிறைந்து வழிய வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜாக்களும் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துச் சென்ற அந்தபுரங்கள் இன்று வரை சிந்து பைரவிகள் பாடுகின்றன. 

\
இதில் புலிகளை வேட்டையாடி, தங்களின் வேட்கையைத் தணித்துக் கொண்ட ராஜாக்கள் ஒரு ரகம். எந்த ஒரு மகாராஜா அதிகமான புலிகளைச் சுட்டார். எந்த வகையான புலிகளைச் சுட்டார் எனும் வக்கரமான போட்டிகளுக்கு வஞ்சகம் இல்லாத அரங்கேற்றங்கள்.


ஒரு மகாராஜா ஒரு வேட்டையில் மூன்று புலிகளைச் சுட்டார் என்றால், அந்தச் செய்தி அடுத்த மகாராஜாவிற்குப் போகும். அந்த மகாராஜா நான்கு புலிகளைச் சுடுவார். அப்புறம் இன்னொரு மகாராஜா ஆறு புலிகளைச் சுடுவார். வேறொரு மகாராஜா ஏழு புலிகளைச் சுடுவார். தங்களின் பராக்கிரமத்தை அதன்வழி பறைசாற்றிக் காட்டினார்கள். அவற்றில் ஆரோக்கியமற்ற அசிங்கத் தனங்கள் தெரிந்தன.


’தாவி வரும் கடல் அலைகளை எண்ணி விடலாம். அதில் தவழ்ந்து போகும் மீன்களை எண்ணி விடலாம். கரையில் வந்து மோதும் மணல்களைக்கூட எண்ணி விடலாம். ஆனால், இந்தியக் காடுகளில் காணாமல் போன புலிகளை மட்டும் எண்ணவே முடியாது என்று’  ஓர் இந்திய எழுத்தாளர் மனம் உடைந்து போய் சொன்னார். நினைவிற்கு வருகிறது.


புலிகளைச் சுடுவதற்கான வெடி மருந்து சீனாவில் இருந்து ஒற்றர்கள் மூலம் கிடைத்தது. பாரசீகத்தில் இருந்தும் கிடைத்தும் இருக்கிறது. துப்பாக்கிகளைச் சொந்தமாகச் செய்து கொண்டார்கள். அனைத்தும் நாட்டுத் துப்பாக்கிகள். ஒரு விஷயம்! அகில இந்தியாவிலும் இருந்த மகா ராஜாக்களைப் பற்றிதான் பொதுவாகச் சொல்கிறேன். எந்த ஒரு மகாராஜாவையும் சிறுமை படுத்தும் எண்ணம் நமக்கு இல்லை.


சங்க கால தமிழ் இலக்கியத்தில் புலியை முறத்தால் விரட்டி அடித்த கதை இருக்கிறது. காதல் தலைவன் புலியின் பல்லைப் பிடுங்கி வந்து தாலி கட்டியதாகவும் கதை இருக்கிறது. விடுதலை வீரர் திப்பு சுல்தான், தனிமனிதனாய் நின்று புலியுடன் போராடி வெற்றிப் பெற்ற வீரக் கதையும் இருக்கிறது. 


சாலுக்கிய மன்னர்களான சக்திவர்மன், விமலாதித்தன், சோழ மன்னர்களான மதுராந்தகன், குலோத்துங்கன் போன்றவர்களும் புலிகளை எதிர்த்துப் போராடி உள்ளதாக வரலாறு சொல்கிறது. ஆனால், தமிழ் நாட்டு மன்னர்களும் சரி; அங்கே இருந்த சமஸ்தான அதிபதிகளும் சரி; பொழுது போக வில்லையே என்பதற்காகப் புலிகளைக் கொன்று போக்கரித்தனம் பண்ணியதாகச் சரித்திரமே இல்லை. அது மட்டும் உண்மை.


வீரத்தை வெளிப் படுத்தவும், விரதத்தைக் கைவிடவும் எங்கோ ஒன்று இரண்டு நடந்து இருக்கலாம். அதற்காகக் கணக்கு வழக்கு இல்லாமல் புலிகளைக் கொன்று குவித்தார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சேர சோழ பாண்டிய மன்னர்களுக்குப் பின்னால் வந்த கதையைச் சொல்கிறேன். முல்லைக்குத் தேர் கொடுத்த மண்ணில் மனிதநேயங்கள் வாழ்ந்தன. இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.


இப்படியே பல காலமாக மகாராஜாக்கள் புலிகள் சுடுவதில் சாதனை படைத்து வந்தனர். பதப்படுத்தப் பட்ட புலிகளை அரண்மனைச் சாசனங்களில் தொங்க விட்டு அழகு பார்த்தனர். கஜானா நிறைய வேண்டும், அந்தபுரம் வழிய வேண்டும் என்று சிலர் புலிகளின் மேல் அமர்ந்து யாகமும் செய்ததாக வரலாறு சொல்கிறது.


தங்களுடைய எதிரிகள் தங்களைப் பார்த்து பயப்பட வேண்டும்; அந்தபுரத்து ராணிகள் ஆசை ஆசையாய்ப் புகழ வேண்டும்; அவர்களுக்கு இடையே போட்டி பொறாமை, இத்யாதி இத்யாதிகள் வரவேண்டும் என்பதற்காகவே, அந்த மாதிரியான வீர சாகசங்களை மகாராஜாக்கள் செய்தனர் என்றும் சொல்லப் படுகிறது.


ஆங்கிலேயர்கள் முதன்முதலில் இந்தியாவிற்குள் வந்த போது, வலது காலை எடுத்து வைக்கவில்லை. இடது காலைத்தான் வைத்தனர். அதற்கு முன்னதாகவே, அங்கு இருந்த மகாராஜாக்களுக்கு சுடும் ஆயுதங்கள் கிடைத்து விட்டன.


டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் கையை வீசிக் கொண்டு சும்மா ஒன்றும் வரவில்லை. துள்ளும் ரம்பைகளைத் தூக்கி வராவிட்டாலும் துப்பாக்கி ரவைகளை அள்ளிக் கொண்டு வந்தனர். வான்கோழிகளையும் வாளி வாளியாக வெண்ணெய்ப் பதார்த்தங்களையும் கொண்டு வந்தனர். குளிக்கவும் மினுக்கவும் நல்ல நல்ல வாசனைப் பொருட்களைக் கொண்டு வந்தனர்.


துப்பாக்கிகள் வருவதற்கு முன்னரே மகாராஜாக்கள் யானைகள் மீது ஏறி வேட்டையாடினர். கண்ணியில் அல்லது கம்பி வலையில் சிக்கிய புலிகளை ஈட்டிகளால் குத்திக் கொன்றனர். அதைத் தூக்கி வந்து அரண்மனையில் பரப்பிப் போட்டு சர்க்கஸ் வேடிக்கை காட்டினர். 


புலியைச் சுடுவதும், கொல்வதும், தோலை உரிப்பதும் வீரத்திற்கு விவேகம் என்று நினைத்து இருக்கலாம். நிறைவான கல்வித்தரம் நிறையாத காலத்தில் குறைவான சிந்தனைகள் நிறையாமல் போய் விட்டன. உண்மைதானே!


சில சமயங்களில், போர் வீரர்கள் மட்டும் புலி வேட்டைக்குப் போவார்கள். ராஜா போகமாட்டார். புலி கிடைப்பதும் கிடைக்காததும் நேரம் காலத்தைப் பொருத்தது. புலி கிடைத்தால், முடிந்த வரை அதைக் கொல்ல மாட்டார்கள். அப்படியே ஒரு கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்து விடுவார்கள். 


குடிக்க மட்டும் தண்ணீர் கொடுப்பார்கள். சாப்பாடு எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் கழித்து, சகல பரிவாரங்களுடன் ராஜா காட்டிற்குப் போவார். கூண்டைத் திறந்து விடுவார்கள். பாவம் அந்தப் புலி. செத்தேன் பிழைத்தேன் என்று தட்டுத் தடுமாறி வெளியே வந்து ஓட்டம் எடுக்கும். அவ்வளவுதான். 


உடனே ராஜா தன்னுடைய துப்பாக்கியை எடுத்து, நொண்டிப் புலியைச் சுட்டு வீழ்த்துவார். போர் வீரர்கள் கைதட்டி மேளம் தட்டி ஆலாபனை செய்வார்கள். செய்தி எட்டு திக்கும் பரவும். அரண்மனை வட்டாரத்தில் ஒரே கொண்டாட்டம். அந்தபுரத்தில் ஒரே கோலாகலம்.



அந்தக் காலத்தில், ஒரே ஒரு ராஜாவுக்கு ஒன்பது ராணிகள் இருந்தார்கள் என்று சொல்வார்கள். பற்றாக் குறைக்கு நூற்றுக் கணக்கில் அந்தபுர வைப்பாட்டிகள் வேறு. அவை எல்லாம் உண்மைகள்தான். இன்னும் சொல்லப் போனால், அந்தக் காலத்து ராஜாக்களுக்கு ஆயிரம் மனைவிகள் வரை இருந்து இருக்கிறார்கள். எதற்காக அத்தனை மனைவிகள் என்பதை அவர்களிடம்தான் போய்க் கேட்க வேண்டும்.


காஷ்மீர் ராஜா ஹரி சிங். அவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு 365 மனைவிகள். அதாவது மனைவிகள் மட்டும்தான் 365 பேர். மற்றபடி அந்தபுரத்துச் சின்னஞ் சிறுசுகளைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். அத்தனை பேரையும் ஒரே ஒருவர் எப்படி சமாளித்தார் என்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அத்தனை மனைவிகளின் முகங்களையாவது ஞாபகம் வைத்து இருக்க முடியுமா என்பது தான் பிரச்சினை. அதை நினைத்து எனக்கு மண்டை குழம்பிப் போனதுதான் மிச்சம்.


மொகலாய மன்னர் ஜகாங்கீரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு அதிகாரப் பூர்வமாகப் பதினெட்டு மனைவிகள். சிறை பிடித்த அழகிகள் ஒரு 150 பேர். இவர்கள் ’செக்கண்ட் கிலாஸ்’ மனைவிகள். இதைத் தவிர, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், கொண்டு வரப்பட்ட உள்நாட்டுப் பெண்களாக ஒரு 200 பேர்.

எல்லாப் பெண்களையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியுமா. முடியாது. அதனால், இன்றைக்கு ஒரு பத்து பேர் என்றால் நாளைக்கு ஒரு பத்து பேர். இப்படியே ஒவ்வொரு நாளும் ஒரு பத்து பேரைப் பார்ப்பது ஒரு வழக்கமாகிப் போனது. இன்னும் இரு தகவல்.

எப்படி பேர் போட்டார்கள்

அவருடைய அந்தபுரத்தில் இருந்த எல்லாப் பெண்களையும், பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு, ஒரு பெண்ணுக்கு ஐந்தே ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அத்தனைப் பேரையும் சும்மா பார்த்துவிட்டு வரவே 25 மணி நேரம் பிடிக்குமாம். அதாவது ஒரு நாள் பிடிக்கும். சும்மா பார்த்துவிட்டு வருவதற்குத் தான் அந்தக் கணக்கு. சரிங்களா.

இருக்கின்ற ஒன்றை வைத்துக் கொண்டு, அதனிடம் பேர் போடுவதற்கே சிலர் அவதிப் படுகிறார்கள். என்னையும் சேர்த்துதான். இதில் டஜன் கணக்கில் மனைவிகளா? எப்படி அந்த ராஜாக்கள் அத்தனை சந்திரமுகிகளிடம் பேர் போட்டார்கள். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பொறாமையாகவும் இருக்கிறது. பிரச்சினையை விடுங்கள். எப்படியோ வாழ்ந்து இருக்கிறார்கள். வாழ்ந்தும் போய் விட்டார்கள்.

நம்ப கதைக்கு வருவோம். அப்புறம் சில நாட்கள் கழித்து, புலியைப் பிடித்து கூண்டுக்குள் அடைத்த உண்மையான போர் வீரர்கள், திடீரென்று காணாமல் போய் விடுவார்கள். களையெடுப்பு என்று சொல்வார்களே. அதுதான் இது.

புலி வேட்டையில் புதிய சகாப்தம்

ராஜாவின் இரகசியம் தெரிந்தவர்கள் ஆயிற்றே. ஆக, ராஜாவின் ரகசியங்கள் காக்கப் படுவதில் ராஜதந்திர முறைகள் கையாளப்படும். இருந்தாலும் பாருங்கள். விசுவாசமான ஊழியர்களில், மகாராஜாவைப் பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் மூலமாக இரகசியம் வெளியே கசிந்தன.

ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைபற்றிய பின்னர், இந்தப் புலி வேட்டை வேறு வடிவத்தில் பரிமாணம் எடுத்தது. அதற்கு முன்னரே டச்சுக்காரர்களும் போர்த்துகீசியர்களும் வந்து குசலம் விசாரித்துப் போய் விட்டனர்.

புலி வேட்டையில் மகாராஜாக்களுடன் ஆங்கிலேயர்களும் சேர்ந்து கொண்டார்கள். அது ஒரு புதிய சகாப்தம். புலிகளைக் கொன்று அவற்றின் தோல்களை உயர்த்திக் காட்டிய அந்த மகாராஜாக்களின் நீண்ட பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்திராகாந்தி என்கிற இரும்புப் பெண்மணி

அப்புறம் என்ன. இந்திராகாந்தி எனும் ஓர் இரும்புப் பெண்மணி வந்தார். புலிகளின் பற்களைப் பிடுங்கிய மகாராஜாக்களின் கடைவாய்ப் பற்களை' எல்லாம் பிடுங்கி எடுத்தார். மகாராஜாக்கள் ஊர்வலம் போன நிலத்தை எல்லாம் பிடுங்கி, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்தார். முரண்டு பண்ணிய ஜாமின்தாரர்களைச் சிறையில் தூக்கிப் போட்டார்.

காட்டில் வாழ்ந்த புலிகளுக்கு சாப விமோசனம் கிடைத்தது. மான்களுக்கும் மயில்களுக்கும் சரணாலயங்கள் கிடைத்தன. வாயில்லா ஜீவன்களுக்கு வேதங்கள் வாசித்த அந்த இந்திரா காந்தி என்கிற அந்த மயிலையும் சுட்டுக் கொன்று விட்டார்கள். இது அண்மைய வரலாறு.

அழிந்து வரும் புலியினம்

பொழுது போக்கிற்காகப் புலிகளை வேட்டையாடியது அந்தக் காலம். இப்போது அதை நினைத்துப் பார்த்தாலே பாவமாகத் தெரிகிறது. உலகில் புலியினம் அழிந்து வருகிறது. ஜாவா புலி, பாலி புலி, காஸ்பியன் புலி, இவை முற்றாக அழிந்து விட்டன. டாஸ்மேனியா புலியும் சென்ற நூற்றாண்டில் தான் அழிந்து போனது. சீனப் புலியும் அழிந்து வருகிறது.

எஞ்சி இருப்பவை சுமத்திரா, சைபேரிய, இந்திய, மலாயாப் புலிகள். இவற்றின் எண்ணிக்கை இப்போதைக்கு 6000-க்கும் குறைந்து விட்டதாக ஐ.நா. புள்ளி விவரங்கள் சொல்கின்றன. எவ்வளவோ கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. இருந்தாலும் புலியை மருந்து மாத்திரைகளுக்காகக் கொன்று குவிப்பது மட்டும் நின்றபாடு இல்லை.

மனித ஜென்மங்கள் மாறவே இல்லை

இப்படியே போனால், பூமியில் உள்ள எல்லா வாயில்லா ஜீவன்களையும் மனிதர்கள் அழித்து விடுவார்கள். நரமாமிசங்களைத் தின்னும் காட்டிமிராண்டிகள்கூட முள்கரண்டியால் சாப்பிடும் நாகரிகத்திற்கு வந்து விட்டார்கள். இருந்தாலும் புலிகளைக் கொல்லும் மனித ஜென்மங்கள் மட்டும் இன்னும் மாறவே இல்லை. திருந்தவும் இல்லை.

இந்தியாவில் பழங்காலத்தில் கட்டப்பட்ட பல நூறு அரண்மனைகள் இன்னும் அழியாமல் அப்படியே இருக்கின்றன. அந்த அரண்மனைகளில் இருக்கும் பல நூறு புலிகளின் தலைகள் இன்னும் கதைகள் பேசுகின்றன. 

நளினங்கள் காட்டிய அந்தபுரச் சந்திரமுகிகளிடம் மகாராஜாக்கள் எப்படி பேர் போட்டார்கள் என்பதைப் பற்றியும், கதைக் கதையாய்ப் பேசுகின்றன. அந்தப் புலிகள் பாடும் சிந்துபைரவிகள் என் காதுகளில் விழுகின்றன. உங்களுக்குக் கேட்கிறதா?

# Please click your  Reactions.

1 கருத்து: