28 ஜூன் 2017

அம்பிகா சீனிவாசன் 1

பாகம்: 1

மலேசிய மக்கள் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு மந்திரச் சொல். வான விதானத்தில் ஒளி விளக்காய்ச் சஞ்சரிக்கும் ஒரு மாயச் சொல். மகிமை வாய்ந்த அந்தச் சொல்லில் விவேகமான சிந்தனைகள். விநோதமான ஆளுமைகள். வித்தியாசமான அணுகுமுறைகள்.


சில சமயங்களில் அந்த விவேகமான சிந்தனைகளும் விநோதமான ஆளுமைகளும் வித்தியாசமான அணுகுமுறைகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கின்றன. ஆல விருச்சகங்களைப் போல ஆழமாய் விழுதுகள் விட்டு படர்ந்தும் போகின்றன.

அங்கே உலகப் பெண்களின் உரிமைப் போராட்ட உணர்வுகள் ஆழிப் பேரலைகளாய் ஆர்ப்பரிக்கின்றன. அப்படிப்பட்ட அந்த உணர்வுகளுக்குச் சொந்தக்காரார் தான் அம்பிகா சீனிவாசன். மலேசியா கண்டெடுத்த ஒரு மந்திரப் புன்னகை.

அண்மைய காலங்களில் அம்பிகா என்கிற சொல் சாமான்ய மக்களின் ஜீவ நாடிகளையும் உரசிப் பார்க்கின்றது. இனம் பார்க்காத சமயச் சகிப்புத் தன்மைகளை அலசியும் பார்க்கின்றது. அரசாசனம் பார்க்கும் அரசியல் புள்ளிகளுக்கும் சிம்மச் சொப்பனமாய் விளங்குகின்றது.

இதை எல்லாம் தாண்டிய நிலையில் அம்பிகா சீனிவாசன் மக்கள் மனங்களில் ஒரு மந்திரக் கண்ணாடியாக ஒளிர்கின்றார். மாயஜாலங்களைக் காட்டும் ஒரு தந்திரக் கண்ணாடியாக மிளிர்கின்றார். அங்கே பல்வேறான வியப்புகள். பல்வேறான பிரமிப்புகள்.

உலக நாடுகளில் சிறந்து விளங்கும் துணிச்சல்
மிக்க பெண்மணிகளுக்கான அமெரிக்க விருது.
அருகில் ஹில்லரி கிளிண்டன், மிச்சல் ஒபாமா
தமிழர்கள் மட்டும் அல்ல. அனைவரும் இவரைப் பற்றி தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

அவரைப் பற்றி எழுதுவதற்கு முன்னால் இரு கோணங்களில் அவரைப் பார்க்க வேண்டி இருக்கிறது. முதலாவது அம்பிகா என்ன நினைக்கிறார். ஏன் அப்படி நினைக்கிறார் என்பதைப் பற்றிய ஒரு பார்வை. அடுத்ததாக அவர் என்ன செய்யப் போகிறார். அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார். இப்படி இரு கூறுகள். இரு பார்வைகள்.

இந்தக் கட்டுரையை நீங்களும் நானும் மட்டும் படிக்கப் போவது இல்லை. டத்தோ அம்பிகாவும் படிக்கப் போகிறார். அவருக்குத் தமிழ் ஓரளவுக்குத் தெரியும். ஏன் என்றால் ’ஆனந்த விகடன்’ தாளிகையின் நிறுவனர் அமரர் ஸ்ரீநிவாசனின் பேத்தி தான் இந்த டத்தோ அம்பிகா. 




இவர் ஈழத்து வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று சிலர் சொல்லி வருகின்றனர். அது தவறு. அவருடைய தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

தந்தையார் டாக்டர் ஜி.ஸ்ரீநிவாசன். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர்.  1974-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறையை (Dr.G.Sreenevasan, founder Hospital Kuala Lumpur - Urology and Nephrology Dept) நிறுவியவர். அதன் தலைவராகவும் பதவி வகித்தவர்.

சரி. விசயத்திற்கு வருகிறேன். அம்பிகாவைப் பற்றி சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். 


பிரான்ஸ் நாட்டின் செவிலியர் விருது
நல்லது கெட்டது தெரிந்த நல்ல ஓர் அறிவாளி. அப்பழுக்கற்ற வெள்ளந்தித் தனம். வயது தாண்டுகிறது என்றாலும் முகத்தில் ஒரு ஜீவகரமான ஒளி. மொத்தத்தில் இலட்சுமி கடாட்சம் நன்றாகவே தெரிகின்றது.

ஓர் அற்புதமான பெண்மணி. ரொம்பவும் புகழ்ந்து விட்டதாக நினைக்க வேண்டாம். மனதில் பட்டதைச் சொல்கிறேன். அவருக்கு வயது 61.


அவரிடம் பழகிப் பார்த்தால் உண்மை தெரியும். அவரை ஓர் எதார்த்தமான அறிவு ஜீவி என்றும் சிலர் சொல்கிறார்கள். அவர் ஒரு கருத்தைச் சொல்கிறார் என்றால் அதற்குச் சரியான சான்றுகள் இருக்கவே செய்யும்.

அந்தச் சான்றுகளுக்குச் சரியான சாட்சிகளும் இருக்கும். சில சிக்கலான கருத்துகளுக்கு அரசு நீதிச் சட்டங்களை அடுக்கடுக்காய் அள்ளிப் போடுவார். சும்மா சொல்லக் கூடாது. மலேசியாவில் ஏறக்குறைய 30 ஆயிரம் வழக்கறிஞர்களுக்குத் தலைவராக இருந்தவர். சட்டக் கலையை நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார். (President of the Malaysian Bar Council from 2007 to 2009)

சில ஆண்டுகளுக்கு முன்பு கெடாவில் அவர் பேசியதை நினைவு கூர்கிறேன். 




“நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. எந்த ஓர் அரசியல் கட்சிக்காகவும் போராடவில்லை. மக்களுக்காகப் போராடுகிறோம். மக்களின் வாக்குகள் அர்த்தம் கொண்டதாக இருக்க வேண்டும். அதைத் தான் நாங்கள் விரும்புகிறோம். மக்களின் வாக்குகளின் மதிப்பை யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யவே நாங்கள் விரும்புகிறோம்.

யார் அதிகாரத்திற்கு வந்தாலும் சரி. வந்தவர்கள் நன்றாக இயங்கா விட்டால் ஐந்து ஆண்டுகளில் அவர்களை அகற்றும் ஓர் ஆற்றல் நமக்குத் தேவை. கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் முடிந்து விட்டன. உலகில் மிகவும் நீண்ட கால ஆட்சி இதுவாகும். நம் அரசியல்வாதிகள் நல்லபடியாகப் பொறுப்பேற்றுச் சேவைகள் செய்ய வேண்டிய ஒரு காலக் கட்டம் வந்து விட்டது.”

ஆக அம்பிகா என்ன சொல்ல வருகிறார் என்பது நன்றாகவே தெரிய வருகிறது. சுத்தமான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அவரின் கோரிக்கை. அதற்கானச் செயல்பாடுகளிலும் களம் இறங்கி காய்களை நகர்த்தி வருகிறார். அவருடைய கோரிக்கைகளில் அதுதான் முத்தாய்ப்பும் கூட. 




அதனால் அவரைத் தொடரும் அச்சுறுத்தல்களைக் கண்டு அவர் மனம் கலங்கவில்லை. கண்களைக் கசக்கவில்லை. ஒரு நாட்டிற்கு ஒரு தூய்மையான ஆளுமை தேவை என்று சொல்லி வருகின்றார்.

அம்பிகா பல முறை கைது செய்யப் பட்டு இருக்கிறார். காவலில் வைக்கப் பட்டு இருக்கிறார். சமயங்களில் அவருடைய உயிருக்கே விலையும் பேசப் பட்டு இருக்கிறது.

அவருடைய வீட்டிற்குள் எண்ணெய்க் குண்டுகள் வீசப் பட்டன. அவருக்குக் கொலை மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. அசிங்கமான மின்னஞ்சல்களும் வருகின்றன. (சான்று: http://www.themalaymailonline.com/malaysia/article/ambiga-death-threats-act-of-terrorism-sreenevasan - Datuk Ambiga Sreenevasan today described the death threats against her and other activists as "an act of terrorism")




வேறு ஓர் பெண்ணாக இருந்தால் ’ஆளை விடுங்கடா சாமி’ என்று மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வீடு பக்கம் போய்ச் சேர்ந்து இருப்பார். பழைய ஆளாய் மாறிப் போய் இருப்பார். சரி. அடுத்து ஒரு முக்கியமான விசயம்.

இந்தக் கட்டுரை எந்த ஓர் அரசியல் நோக்கப் பின்னணியிலும் எழுதப்படவில்லை. ஒரு சாமான்யச் சமூகப் போராட்டவாதி நடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்க்கிறோம். அந்தக் கோணத்தில் தான் எழுதப் படுகிறது.

ஆக அந்த வகையில் அந்தப் போராட்டவாதியின் உண்மையான காலச்சுவடுகளில் பல்வேறு சமூக அரசியல் நெளிவு சுழிவுகளும் இருக்கவே செய்யும். அவற்றை நாம் வரலாற்றுப் பதிவுகளாகப் பார்ப்போம். மற்ற எந்தக் கோணத்திலும் பார்க்க வேண்டாமே.




பெர்சே தன்னுடைய முதல் அரங்கேற்றத்தை மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் 2006 நவம்பர் 23-ஆம் திகதி நடத்தியது. அதில் டாக்டர் வான் அஸிஷா, சிவராசா ராசய்யா, லிம் குவான் எங், திரேசா கோக், எஸ்.அருட்செல்வன், சையட் ஷாரிர், மரியா சின், யாப் சுவீ செங் போன்றவர்கள் முக்கியத் தலைவர்களாக இருந்தார்கள்.

அடுத்து 2007 நவம்பர் 10-ஆம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பெர்சே 2.0 பேரணி. இதற்கு டத்தோ அம்பிகா தலைமை தாங்கினார். இந்தப் பேரணியில் அண்டிரூ சியூ, கா.ஆறுமுகம், பாருக் மூசா, மரியா சின், ஹாரிஸ் இப்ராஹிம், வோங் சின் ஹுவாட், ரிச்சர்ட் இயோ, சாயிட் காமாருடின் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

அந்தப் பேரணியில் வெண் தாடியுடன் வலம் வந்த மலாய் இலக்கியவாதி சமாட் சாயிட் அவர்களையும் நாம் மறந்துவிடக் கூடாது. 
(சான்று: http://www.thestar.com.my/news/nation/2013/09/17/a-samad-said/ - Samad Said has written 72 books Salina, Cinta Fansuri and Hujan Pagi are among his more notable novels.)



மலாய் இலக்கியவாதி சமாட் சாயிட்

அடுத்து பெர்சே 3.0 பேரணி. கடந்த 2012 ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்றது. இது ஒரு குந்தியிருப்பு போராட்டம். 250,000 பேர் கலந்து கொண்டனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனும் பிரதான நோக்கத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
(சான்று: https://www.youtube.com/watch?v=fV7GpnDiq74)

பெர்சே 2.0 பேரணியில் பல்லாயிரம் மக்களில் ஒருவராக அம்பிகா களம் இறக்கினார். அந்தக் களத்தில் இனம், சமயம், மொழி எதுவும் இல்லை. அப்போது இருந்து யார் இந்த அம்பிகா சீனிவாசன் என்று எல்லோரும் கேட்கத் தொடங்கினார்கள்.

அம்பிகா சீனிவாசன் எனும் சொல் அப்போது மலேசியா முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது முற்றிலும் உண்மை. 




ஒரு சாதாரண குடும்ப மாது அரசியல் மறுமலர்ச்சி சன்னிதானங்களில் எப்படி இந்த அளவுக்கு துடிப்புமிக்கத் துடுப்பு கோலாக மாறினார் என்று அனைவரும் வியந்து பார்த்தனர். இணையத்தின் ‘யூ டியூப்’ வழியாக 32 இலட்சம் பேர் அந்தப் பேரணியைப் பார்த்தனர்.
(சான்று: https://www.youtube.com/watch?v=vCetbFLceFI)

சும்மா ஒன்றும் இல்லை. 24 மணி நேரத்தில் நடந்த ஒரு பெரிய நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். அதை யார் இணையத்தில் பதிவேற்றம் செய்தார் என்பது இன்று வரை ஒரு பரம இரகசியமாகவே இருந்து வருகிறது.

உலகத்தின் எங்கோ ஒரு பகுதியில் என்னவோ நடந்து கொண்டு இருக்கிறது என்பதை மட்டும் உலக மக்கள் அப்போது உணர்ந்து கொண்டனர். அவ்வளவுதான்.

அந்தக் கட்டத்தில் எகிப்திலும், லிபியாவிலும் தலைக்கு மேல் வெள்ளம். சிரியாவிலும் பிரச்சினைகள் தொடங்கி விட்டன. ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். ஆக அப்போதைக்கு பெர்சே 2.0 பேரணி என்பது தயிர் சாதத்தில் ஒரு சின்ன ஊசி மிளகாய்தான். 




சரி. அந்த நிகழ்வுகளை நாம் ஒரு பொது நிலையில் இருந்து பார்க்க வேண்டும். அந்தப் பக்கம் பார்த்தால் நாட்டை நிர்வாகம் செய்யும் ஓர் அரசாங்கம். இந்தப் பக்கம் பார்த்தால் அந்த அரசாங்கத்தின் ஒரு சில பலகீனங்களைத் தூசு தட்டச் சொல்லும் பொதுமக்களின் பேரணி.

இவற்றில் எது வேண்டும். பொதுமக்களில் பலர் எதைத் தேர்வு செய்வது என்கிற ஓர் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப் பட்டனர். இருக்கலாமா இருக்க முடியுமா எனும் இரண்டும் கெட்டான் நிலை. ஒரு திரிசங்கு நிலை.

அரசாங்கம் நல்லா தானே போய்க் கொண்டு இருக்கிறது. அப்புறம் ஏன் இந்த ஆர்ப்பாட்டங்கள் என்று ஒரு சாரார் கேள்விகளை எழுப்பினார்கள். அது இல்லை. அங்கே சில பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்யத்தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் என்று ஒரு சாரார் குரல் கொடுத்தார்கள்.

பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாமே. ஆர்ப்பாட்டம் செய்துதான் ஆக வேண்டுமா. தேவை இல்லையே. இதற்கும் வேறு ஒரு பதில் வருகிறது. பெற்ற பிள்ளை நம்முடைய தொடையில் அசுத்தம் செய்து விட்டால் அதற்காக அந்தத்  தொடையை வெட்டி வீசிவிட முடியுமா. 




முடியாது. தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும். புரியும் என்று நினைக்கிறேன்.

பொதுவாகச் சொல்வது என்றால் கடந்து வந்த ஐம்பது ஆண்டு காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் போகும் எந்த ஓர் அமைப்பையும் நாம் ஏற்றுக் கொண்டது இல்லை. அது குடிமக்களின் தலையாய விசுவாச முறையாகவும் இருந்து வந்துள்ளது.

ஆயிரம் இருந்தாலும் அரசாங்கத்தை எதிர்க்கும் எந்த ஒரு கொள்கைப் பாட்டிலும் நமக்கு உடன்பாடு இருந்தது இல்லை. அப்படிப்பட்ட ஓர் எதிர்க் கொள்கைப்பாடு இதுவரையிலும் புறக்கணிக்கப் பட்டே வந்துள்ளது.

நல்ல ஓர் ஆளுமையைச் சிதைக்கப் பார்க்கும் எந்த ஓர் ஒழுங்கற்ற நடவடிக்கைக்கும் பொது மக்கள் உடன்பட்டுத் துணை போனதும் இல்லை. குறிப்பாக இந்திய வம்சாவளியினர் அரச நிந்தனைகளையும், அரசு சார் நிந்தனைகளையும் பெரும் பாவங்களாக நினைத்துப் பார்க்கின்றவர்கள்.

ஆக அப்படிப்பட்ட ஒரு நடைமுறையில் ஏன் ஒரு சவால்  நிலை ஏற்பட வேண்டும். ஒன்று மட்டும் உண்மை. இதை நாம் நேர்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஓர் அரசாங்கத்தின் தேய்மானங்களையும் அந்த அரசாங்கத்தின் ஆளுமைப் பலகீனங்களையும் சரி பார்க்கச் சொல்லும் நேர்த்தியான சம்பிரதாயங்களை நாம் என்றுமே நிராகரிக்க முடியாது. ஆக அந்தக் கொள்கைபாட்டில் தான் அம்பிகா வந்து நிற்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளில் ‘பெர்சே’ போன்ற பேரணிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று பொது ஊடகங்களின் வழியாக பொது மக்களுக்கு எச்சரிக்கைகள், விளம்பரங்கள் செய்யப் பட்டன. அறிவிப்புகளும் தொடர்ந்து வந்தன. இந்தக் கட்டத்தில் பொதுமக்களில் ஒரு பகுதியினர் அம்பிகாவின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.




அதுதான் அம்பிகா எனும் சொல்லின் பின்னால் வந்து நிற்கின்ற ஓர் உயிரோட்டம் என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றார்கள். இதில் ஒன்றும் ஒரு பெரிய மாய மந்திரம் இல்லை. பெரிய மர்ம ஜாலம் எதுவும் இல்லை.

இந்த இடத்தில் இனம், மொழி, சமயம் எல்லாமே கடந்து போய் விடுகின்றன. அங்கே ஒரு பெரிய தேசியமே உருவாகி விடுகின்றது.

அதன் பின்னர் டத்தோ அம்பிகாவின் வாழ்க்கையில் பற்பல அசம்பாவிதங்கள். பற்பல சில்லறை இடையூறுகள்: எதிர்பாரா நிகழ்வுகள். அம்பிகாவைச் சிறுமைப்படுத்தி சில பல குறுந் தகவல்கள்.
(சான்று: http://www.abc.net.au/news/2015-05-02/rights-activists-opposition-politicians-arrested-in-malaysia/6440154)

அவருக்கு எதிராக பற்பல பிரசாரங்கள். ஒரு கட்டத்தில் 'அம்பிகா ஒரு பயங்கரவாதி எனும் போர்வையில் ஓர் இந்துப் பெண்' என்றும் வகைப் படுத்தப்பட்டது.
(சான்று: https://www.amnestyusa.org/sites/default/files/uaa24016.pdf - Amnesty International)


இந்தப் பகுதியின் இரண்டாம் பகுதி நாள தொடரும் >>> 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக