04 மார்ச் 2019

உலகின் மிகச்சிறிய குழந்தை

ஏறக்குறைய கால் கிலோ அளவில் எடை. அதாவது 268 கிராம். அப்படி பிறந்த ஒரு குழந்தை உயிர் பிழைத்தது ஓர் உலக அதிசயம். உலகின் மிகச்சிறிய குழந்தை. ஆண் குழந்தை. ஜப்பானில் பிறந்த குழந்தை.


Tokyo's Keio University Hospital மருத்துவமனையில் 2018 ஆகஸ்ட் மாதம் அவசர பிரிவில் சிசேரியன் மூலம் பிறந்த அந்தக் குழந்தை மிக மிகச் சிறியதாக இருந்தது.

கைக்குள் ஒரு பிடியில் அடங்கிவிடும். அந்த அளவுக்குத் தான் குழந்தை இருந்தது. உலக அதிசயம் அல்லவா. அதனால் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்கள்.


பிறந்தது முதல் கடந்த 2019 பிப்ரவரி மாதம் வரை அந்தக் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தது. 24 வார கருவாக இருந்த போது பிரசவிக்கப் பட்டது.

இப்போது ஐந்து மாதங்களுக்கு பின்னர் மருத்துவனையில் இருந்து சிகிச்சை மூலம் தேறி விட்டது. தற்போது அந்தக் குழந்தை 3.2 கிலோ எடையுடன் உள்ளது. உணவும் ஊட்டப் படுகிறது.


முன்பு 274 கிராம் அளவில் ஜெர்மனியில் பிறந்த குழந்தை ஒன்றுதான் மிகச் சிறியதாக இருந்தது. அதன் பின்னர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெர்மனியில் மேலும் ஒரு  பெண் குழந்தை. 252 கிராம் எடையுடன் பிறந்து உயிர் பிழைத்தது.


பொதுவாக ஒரு கிலோ எடைக்கு கீழ் பிறக்கும் குழந்தைகளில் 90% உயிர் பிழைத்துவிடும். ஆனால் 300 கிராமுக்கும் கீழ் பிறக்கும் குழந்தைகளில் 50% மட்டுமே உயிர் பிழைக்கின்றன. எடையைக் கவனியுங்கள். 300 கிராம். கால் கிலோ. நம் கைக்குள் அடக்கி விடலாம்.


இந்த மாதிரி மிகவும் சின்னதாகப் பிறக்கும் குழந்தைகளைப் பொருத்த வரை பெண் குழந்தைகள் தப்பித்துக் கொள்கின்றன. ஆனால் ஆண் குழந்தைகள் பிழைக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதற்கு மருத்துவ நிபுணர்களால் சரியான விளக்கம் கூற முடியவில்லை. 


ஆண் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி மெதுவாக இருக்கும். பலம் குறைவு. நோய்களை எதிர்க்கும் ஆற்றலும் குறைவு. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளுக்குச் சக்தி குறைவு. பெண் குழந்தைகளுக்கு சற்று அதிகமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக