17 ஏப்ரல் 2019

ஆசாத் இராணுவப் பள்ளியில் டான்ஸ்ரீ சோமா - 2

இந்தியத் தேசிய இராணுவம் என்பது இந்தியாவின் விடுதலைப் படை. இரண்டம் உலகப் போரின் போது இந்தியாவில் ஆங்கிலேய  அரசினை எதிர்த்துப் போரிட உருவாக்கப்பட்ட ஒரு படை. 


ஜப்பானியர்களின் உதவியுடன் இந்தியாவின் காலனித்துவ அரசை எதிர்த்துப் போரிட்டது. தொடக்கக் காலத்தில் ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்ட ஆங்கிலேய இந்திய இராணுவத்தின் இந்தியப் போர்க்கைதிகள் அதில் இடம் பெற்று இருந்தனர்.

பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவில் இருந்த சென்ற தன்னார்வலப் படைவீரர்களும் அதில் இடம் பெற்றனர். சரி. கட்டுரைக்கு வருவோம்.

தஞ்சோங் ரம்புத்தான் இராணுவப் பயிற்சி முகாம். அங்கே தங்கி இருந்தவர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு கிடைக்கும். அந்த ஓய்வு நாளில் மட்டும் அவர்களுக்குப் பிடித்தமான பொழுது போக்குகளில் ஈடுபடலாம். 



ஒரு சிலருக்குத் திரைப்படம் பார்ப்பது ஒரு பொழுது போக்கு. தொலைக்காட்சிச் சேவை பயன்பாட்டில் இல்லாத காலக்கட்டம். நினைவில் கொள்வோம்.

அப்போது ஈப்போவில் ஓடியன், லீடோ, கத்தே, ரூபி, கேப்பிட்டல், சன் போன்ற திரையரங்குகள் புகழ்பெற்றவை. அந்தத் திரையரங்குகளில் ஓடியன் தியேட்டரில் மாதத்திற்கு நான்கு முறை தமிழ்ப் படங்கள் காட்டப்படும்.  பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓடியன் திரையரங்கில் படம் பார்க்க தஞ்சோங் ரம்புத்தானில் இருந்து 200 பேர் போவார்கள். 20 கி.மீ. நடந்தே போக வேண்டும். நடந்தே வர வேண்டும்.

அப்போது ஜப்பானியர் காலம். பேருந்து வசதி குறைவு. சீருந்துகளும் குறைவு. எல்லாம் காலுந்து தான். இராணுவப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள். காலையில் போகும் அவர்கள் மாலையில் முகாமிற்குத் திரும்பி வந்து விடுவார்கள். நல்ல சுகமான அனுபவமாக இருந்து இருக்க வேண்டும்.



சோமசுந்தரத்திடம் அப்போது இருந்த இந்தி, ஆங்கில மொழி அறிவு அவருக்குப் பெரிதும் துணையாக இருந்து இருக்கின்றது. சமயங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி அதிகாரிகளின் இந்தி மொழிக் கட்டளைகள் சரியாகப் புரியாமல் போகும்.

அந்தச் சமயங்களில் சோமசுந்தரம் அழைக்கப் படுவார். ஆங்கிலத்தில் அல்லது தமிழில் விளக்கம் சொல்ல கேட்டுக் கொள்ளப் படுவார். அவரும் தனக்குத் தெரிந்த ஆங்கில இந்தி மொழிகளில் விளக்கம் கொடுப்பார்.

மூன்று மாத காலப் பயிற்சிகள் முடிந்தன. ஒருநாள் சோமசுந்தரம் உயர் இராணுவ அதிகாரியின் அலுவலகத்திற்கு (Adjutant’s Office) அழைக்கப் பட்டார். அதற்கு முன்னர் தஞ்சோங் ரம்புத்தானில் பயிற்சியில் இருந்த போது சிங்கப்பூர் ஆசாத் இராணுவப் பள்ளியில் சேர்வதற்கான தேர்வு நடைபெற்றது.

 

இந்தத் தேர்வு இராணுவ அதிகாரிகளுக்கான (NCO - Non Commissioned Officer) தேர்வாகும். தேர்வில் தேர்ச்சி பெற்றால் சிங்கப்பூரில் இருந்த ஆசாத் இராணுவப் பள்ளியில் உயர் பதவிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். ஏறக்குறைய 2000 பேர் தேர்வில் கலந்து கொண்டார்கள்.

அவர்களுக்குத் தஞ்சோங் ரம்புத்தான் பயிற்சி முகாமிலேயே அறிமுகப் பயிற்சிகள் வழங்கப் பட்டன. அந்தச் சிறப்புப் பயிற்சியில் சோமசுந்தரமும் கலந்து கொண்டார். தேர்வு வந்தது. சோமசுந்தரம் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். அந்த 2000 ஜவான்களில் 50 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.

பின்னர் சிங்கப்பூர் ஆசாத் இராணுவப் பள்ளியில் இருந்து இந்திய தேசிய இராணுவ அதிகாரிகள் தஞ்சோங் ரம்புத்தான் பயிற்சி முகாமிற்கு வந்தனர். உயர் பதவிகளுக்கான பயிற்சியில் தேர்வு பெற்றவர்களிடம் நேர்காணல் நடத்தினார்கள். 



ஒரு வாரம் கழித்து தஞ்சோங் ரம்புத்தான் தலைமை அதிகாரி (Company Commander) சோமசுந்தரத்தை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்தார். தேர்வில் தேர்ச்சி பெற்றதாக வாழ்த்தினார்.

உடனடியாக பெட்டிப் படுக்கைகளை எடுத்துக் கொண்டு மறுநாளே சிங்கப்பூருக்குக் கிளம்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

சிங்கப்பூர் உயர் பதவிகளுக்கான தேர்வில் 12 பேர் தேர்வு செய்யப் பட்டனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு குழுக்களில் (Platoons) உள்ளவர்கள். அப்படித் தேர்வு செய்யப் பட்டவர்களில் சோமசுந்தரமும் ஒருவர்.

தேர்வு பெற்ற பன்னிருவரும் மேலும் சில அதிகாரிகளும் ஒரு லாரி வண்டியில் ஈப்போ இரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.



சிங்கப்பூர்ப் பயணம் ஒரு நீண்ட நேரப் பயணம். செல்லும் வழியில் நிறைய பேருடன் மனம்விட்டுப் பழகும் வாய்ப்பு. அந்த வகையில் அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அந்த நண்பர்களில் ஒருவர் பெருமாள். இவர் பின் நாட்களில் தமிழகத்தில் பிரபலமான அரசியல்வாதியாகத் திகழ்ந்தவர்.

சிங்கப்பூர்ப் பயணம் அவருக்கு ஒரு புதுமையான இரயில் பயணம். ஒரு புது மாதிரியான அனுபவம். மறுநாள் சிங்கப்பூர் வந்து அடைந்தனர்.

அவர்களுக்காக ஓர் இராணுவ வண்டி இரயில் நிலையத்தில் காத்து நின்றது. சிங்கப்பூர் கில்ஸ்தீட் சாலையில் (Gilstead Road) இருந்த ஆசாத் பள்ளிக்கு (Azad School) அவர்கள் கொண்டு செல்லப் பட்டார்கள்.

ஆசாத் பள்ளி வளாகத்தில் இரு பெரிய பங்களாக்களும் இதர சில கட்டடங்களும் இருந்தன. பள்ளி வளாகத்திற்கு எதிரில் ஒரு குன்று. அதில் ஒரு பங்களா இருந்தது.


ஆசாத் பள்ளியின் தலைமை அதிகாரி லெப்டினெண்ட் கர்னல் உஜகார் சிங்(Lt. Col. Ujagar Singh) என்பவர் அந்தப் பங்களாவில் வசித்து வந்தார். அதுவே அதிகாரியின் அலுவலகமும் கூட.

ஆசாத் பள்ளியின் மேலாளராக கேப்டன் தெஸ்பாண்டி (Captain Despande) என்பவர் இருந்தார். பள்ளி வளாகத்தில் பல அதிகாரிகளின் குடியிருப்புகள் இருந்தன.

அந்த வளாகத்திற்குள் 80 லிருந்து 100 பேர் கொண்ட பாலசேனா (Balak Sena)  படைப் பிரிவும் இருந்தது. அதற்குக் கர்னல் ராணா (Col. Rana) என்பவர் தலைவராக இருந்தார்.

பள்ளியில் இருந்த இரு பெரிய பங்களாக்களில் ஒவ்வொரு பங்களாவிலும் 100 பேர் தங்கலாம். ஒரு பங்களா டெல்லிப் பிரிவுப் படையைச் சேர்ந்த சிப்பாய்களுக்கும்; இன்னொரு பங்களா பகதூர் பிரிவுப் படையைச் சிப்பாய்களுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் சோமசுந்தரம் டெல்லிப் பிரிவுப் படையின் பங்களாவில் தங்க வைக்கப் பட்டார். நடுத்தர அதிகாரிகளுக்கான (Non Commissioned Officer Training) பயிற்சி அவருக்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் காடுகளில் தொடர்ந்து ஒன்பது மாதங்கள் பயிற்சி. இங்கே தஞ்சோங் ரம்புத்தான் பயிற்சிகளைக் காட்டிலும் மேலும் கடுமையான பயிற்சிகள்.

நடைப் பயிற்சி; ஓட்டப் பயிற்சி; துப்பாக்கிகளை ஏந்திச் சுடும் பயிற்சி; இராணுவ வியூகப் பயிற்சி (Military Strategy) போன்ற பயிற்சிகள் வழங்கப் பட்டன. சிங்கப்பூர் பயிற்சிகளுக்கு கேப்டன் உபாத்தியாயா (Captain Upadhyaya) என்பவர் பொறுப்பு வகித்தார்.



பகல் நேரத்தில் மட்டும் அல்ல. இரவு நேரங்களிலும் பயிற்சிகள் நடத்தப் பட்டன. சிங்கப்பூரின் பெரும்பாலான காட்டுப் பகுதிகளில் பயிற்சிகள் நடைபெற்றன. சில நேரங்களில் செராப்போங் (Serapong) காடுகளில் தனியாக இருந்து காவல் செய்ய வேண்டி இருக்கும்.

ஒரு முறை ஓர் இரவு சோமசுந்தரம் மட்டும் தனியாகக் காட்டில் காவல் பணியில் இருந்தார். அப்போது புக்கிட் தீமா மலையோரத்தில் அழுகிய நிலையில் ஒரு ஜப்பானிய இராணுவ வீரரின் சடலம்.

அதை மிதித்ததும் சோமசுந்தரம் தடுமாறிப் போனார். அவர் வாழ்க்கையில் அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி என்று நினைவு கூர்கிறார்.

அடுத்து அனைத்துலகத் தேர்வு. அதில் டெல்லி கம்பெனியைச் சேர்ந்த 200 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் சோமசுந்தரம் அதிக மதிப்பு எண்கள் பெற்று முதல் மாணவராகத் தேர்வு பெற்றார்.

இந்தியத் தேசிய இராணுவத்தில் டெல்லிப் பிரிவு (Delhi Group); பகதூர் பிரிவு (Bahadur Group) என இரு பிரிவுகள். இதில் டெல்லிப் பிரிவில் சோமசுந்தரம் சிறந்த மாணவராகத் தேர்வு செய்யப் பட்டார். 



பகதூர் பிரிவில் இந்தியா தமிழ்நாடு கடலூரைச் சேர்ந்த எஸ். இரத்தினவேலு (Rathnavelu) என்பவர் தேர்வு செய்யப் பட்டார். இருவருக்கும் பத்து வயது வேறுபாடு. இருந்தாலும் நெருங்கிய நண்பர்களாகப் பயணித்தார்கள்.

ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் இருவரும் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசுவார்கள். இந்திய விடுதலை வீரர்களைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இவ்வாறான கலந்துரையாடல்களினால் இருவரின் நட்பும் இறுக்கம் பெற்றது.

இரத்தினவேலு வயதில் மூத்தவர் என்பவர் என்பதால் அவரின் ஆலோசனைகளைச் சோமசுந்தரம் ஏற்றுக் கொள்வார். கருத்துப் பரிமாற்றங்களில் சிற்சில சமயங்களில் முரண்பாடுகள் ஏற்படலாம்.

ஆனால் இரத்தினவேலுவைத் தன் மூத்த சகோதரனாகவே நினைத்துப் பழகி வந்தார். மதிப்புமிகு எஸ். இரத்தினவேல் அண்மையில் தமிழகத்தில் காலமானார்.

ஒன்பது மாதக் கடும் பயிற்சிகளுக்குப் பின்னர் உயர் அதிகாரிகளுக்கான நேர்முகத் தேர்வு. பகதூர் – டில்லிப் பிரிவுகளில் 12 பேர் தேர்வு செய்யப் பட்டனர். எட்டு வாரங்களுக்கு பத்து பகாட் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் (Batu Pahar Officers Training School) சிறப்புப் பயிற்சி அளிக்கப் பட்டது.

பயிற்சி முடிந்ததும் சிங்கப்பூர் தலைமையகத்திற்கு மீண்டும் அனுப்பப் பட்டனர். ஓர் அதிகாரிகள் குழுவினர் அவர்களை நேர்காணல் செய்தனர்.

இறுதியில் இரத்தினவேலுவும் பகத் சிங் (Bhagat Singh) என்பவரும் தெரிவு செய்யப் பட்டனர். வயது குறைவு எனும் காரணத்தினால் சோமசுந்தரம் தேர்வு செய்யப்படவில்லை.

இருப்பினும் பயிற்சி முடிவின் அணிவகுப்பில் (Passing Out Parade) தலைமை தாங்கிச் செல்ல சோமசுந்தரம் தேர்வு செய்யப் பட்டார். இந்த அணிவகுப்பில் நேதாஜி வருவதாக இருந்தது. அந்தப் பயிற்சியின் போது கொடியும் கத்தியும் வழங்கப்படும். நேதாஜியே வழங்கிச் சிறப்பிக்கும் நிகழ்வு.

அதற்கு என்று தனிப்பட்ட சிறப்புப் பயிற்சி. உடலை வருத்திக் கொள்ளும் பயிற்சி. உரக்கக் குரல் எழுப்பிக் கட்டளைகள் சொல்ல வேண்டும். அதனால் அவருடைய குரல்வளை பாதிக்கப் பட்டது. 



அப்போது இந்தியத் தேசிய இராணுவத்தின் பயிற்றுநராக மாரிமுத்து என்பவர் இருந்தார். அவர்தான் கருப்பு மிளகைத் தூளாக்கிச் சோமசுந்தரத்திடம் சாப்பிடச் சொல்லிக் கொடுத்தார். தொண்டைவலி குறையவில்லை. இருப்பினும் பயிற்சியில் தொடர்ந்து கலந்து கொண்டார்.

பயிற்றுநர் மாரிமுத்து சிரம்பான் பகுதியில் இருந்து வந்தவர். இந்தியத் தேசிய இராணுவத்தின் நேரு பிரிகேட் (Nehru Birigade) அணியில் ‘பி’ கம்பெனி பிரிவைச் சேர்ந்தவர். பர்மா மாண்டலேயில் போக்குப்பா குன்றுப் பகுதியில் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போர் புரிந்தவர்.

பர்மாவில் பெகு எனும் இடத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தினரால் பிடிபட்டார். போர்க் கைதியாக இந்தியாவிற்குக் கொண்டு செல்லப் பட்டார். புதுடில்லி செங்கோட்டை விசாரணையில் மாரிமுத்துவிற்கு எதிராக அரச நிந்தனை வழக்கு தொடரப் பட்டது.

விசாரனைக்குப் பின்னர் 1946-ஆம் ஆண்டு மலாயா திரும்பினார். கிள்ளானில் ஒரு புது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். இந்து சமய பிரசாரங்களில் ஈடுபட்டார்.

பயிற்சி முடிந்து நடைபெறவிருந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் துரதிர்ஷ்டவசமாக நேதாஜியால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. இந்திய பர்மா எல்லையில் இம்பால் கோகிமா போர் முனைகளில் அவருக்கு முக்கிய வேலைகள். அதனால் அவர் வரவில்லை.

தன்னுடைய ஆற்றலை நேதாஜியின் முன் வெளிப்படுத்த சோமசுந்தரம் மிகுந்த ஆர்வமாக இருந்தார். ஆனால் சோமசுந்தரத்திற்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைப் பற்றி இன்றும் கூட நினைத்துப் பார்த்து ஆதங்கப்படுவது உண்டு.

அடுத்து இந்தியத் தேசிய இராணுவத்தின் இரகசியச் சேவைப் பிரிவில் சேர்வதற்கான பயிற்சிகள். நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவிற்கு ஊடுருவல் செய்வதற்கான பயிற்சிகள்.

என்ன யோசிக்கிறீர்கள். டான்ஸ்ரீ சோமா அவர்களா? ஐ.என்.ஏ. இரகசியச் சேவைப் பிரிவில் பயிற்சிகளா? நீர்மூழ்கிக் கப்பலா? உண்மை தான். ஆனால் என்ன செய்வது. அவருடைய வயது தான் எப்போதுமே அவருக்குத் தடையாக இருந்து இருக்கிறது.

இருபதைத் தாண்டாத வயது. அதனால் பெரிய பொறுப்புகள் அவரிடம் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்திய இராணுவ இரகசியச் சேவைப் பிரிவில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வயது தான் முக்கிய காரணம்.

இருந்தாலும் இந்தியத் தேசிய இராணுவம் அவரைக் கைவிடவில்லை. சோமசுந்தரம் ஆங்கிலம் இந்தி மொழிகளில் வல்லமை பெற்றவர்.

அதனால் இராணுவத்தின் பயிற்சிப் பாடத் திட்டங்களில் அவருக்குப் பயிற்றுநர் பொறுப்புகள் வழங்கப் பட்டன. அவரின் ஆங்கில மொழி, இந்தி மொழித் திறமை அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கின.

பயிற்சி பெற்ற அதிகாரிகள் வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். சிலர் போர் முனைக்குச் சென்றனர். சோமசுந்தரம் நிரந்தர ஆசாத் முகாம் பயிற்றுநராகப் பணியில் அமர்த்தப் பட்டார்.

ஆசாத் பயிற்சி முகாமிற்கு வரும் புதிய சிப்பாய்களுக்கு பயிற்சி அளித்தார். இந்தப் பணி அவருக்கு மன ஆறுதலையும் மனமகிழ்ச்சியையும் வழங்கியது. அவ்வப்போது ஓய்வும் கிடைத்தது.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தெலுக் இந்தானில் இருந்த அவருடைய குடும்பத்தாரைப் போய்ப் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

இன்னும் ஒரு தகவல். தஞ்சோங் ரம்புத்தான் முகாமில் யார் யார் சோமசுந்தரத்திற்குப் பயிற்சி அளித்தார்களோ அவர்களே ஒரு கட்டத்தில் சிங்கப்பூர் ஆசாத் முகாமிற்கு வந்தார்கள். சோமசுந்தரத்திடம் கூடுதல் பயிற்சிகளையும் பெற்றார்கள். ஓடமும் ஒருநாள் கப்பலில் ஏறும். கப்பலும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

டான்ஸ்ரீ சோமசுந்தரம் பயிற்சி கொடுத்த பலர் சயாம் பர்மா எல்லையில் இருக்கும் இம்பால், கோகிமா, மணிப்பூர், மத்திய பர்மா போர்முனைகளுக்குச் சென்றார்கள். பல நூறு பேர் அங்கே மறைந்தும் போனார்கள். அவர்களுக்கு வீர மரியாதை செய்வோம்.

இந்திய தேசிய இராணுவத்தினர் பர்மா சயாம் காடுகளில் வெள்ளையர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளைத் தூக்கினார்கள். பாம்புக்கடி, பூரான்கடி, மலேரியாக் கொசுக் கடிகளில் இருந்து தப்பித்து வந்தார்கள். பசி பட்டினியால் உருக்குலைந்து போனார்கள்.

உடல் வேதனையின் உச்சிக்கே போய் வந்தார்கள். அவை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத சோக வரலாறுகள்.

அதில் சோமசுந்தரம் என்கிற ஓர் அறிவார்ந்த மனிதரையும் சேர்க்க வேண்டும். கடுமையான இராணுவப் பயிற்சிகள் அவருக்கு நல்ல ஒழுங்கு முறைகளைக் கற்றுத் தந்து இருக்கின்றன. நான் பார்த்துப் பழகிய மனிதர்களில் டான்ஸ்ரீ சோமாசுந்தரம் ஒரு நல்ல நியாயமான மனிதர். வாழ்த்துகிறோம்.

(முற்றும்)

சான்றுகள்

1. Toye, Hugh (1959), The Springing Tiger: A Study of the Indian National Army and of Netaji, Allied Publishers, ISBN 978-81-8424-392-5

2. Sareen, Tilak Raj (2004), Indian National Army, Gyan Publishing House, ISBN 81-212-0833-5

3. Sengupta, Nilanjana (2012), A Gentleman's Word: The Legacy of Subhas Chandra Bose in Southeast Asia, ISEAS Publishing, ISBN 978-981-4379-75-5

4. Marston, Daniel (2014), The Indian Army and End of the Raj, Cambridge University Press, ISBN 978-0-521-89975-8

5. Lebra, Joyce C. (2008), Women Against the Raj: The Rani of Jhansi Regiment, Institute of South-East Asian Studies, ISBN 978-981-230-808-5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக