12 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 1

தமிழ் மலர் - 10.05.2019

இந்தியாவின் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவர் சந்திரகுப்தர். அவருக்கு முதலமைச்சராக இருந்தவர் சாணக்கியர். அரசியல் இலக்கியமான அர்த்த சாத்திரத்தைப் அர்த்தத்துடன் எழுதிச் சென்றவர். இந்தியாவின் மாக்கியவெல்லி என்று புகழப் படுகிறவர். இவருக்குச் சரி சமமாக இந்தியாவில் வாழ்ந்தவர்கள் இரண்டு பேரைச் சொல்லலாம். 

 


ஒருவர் அக்பரின் பேரன் ஔரங்கசிப். இன்னொருவர் இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திராகாந்தி. இவர்கள் இருவருமே இந்தியாவின் சரித்திரத்தையே திருப்பிப் போட்டவர்கள்.

இந்தப் பக்கம் பார்த்தால் இப்போது மலேசியாவின் பிரதமராக இருக்கும் டாக்டர் மகாதீர் அண்மைய காலச் சாணக்கியர். இந்த மனிதரால்தான் மலேசிய மண்ணுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.


சரி. இந்தக் கட்டுரைத் தொடரில் மொகலாய மன்னர் ஒளரங்கசீப் பற்றி பார்ப்போம். அவர் நல்லவரா கெட்டவரா வல்லவரா வாய்மையான மனிதரா என்பதை அலசிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

வரலாறு என்ன சொல்கிறது என்பதை வரலாற்றுப் பார்வையில் பார்க்கப் போகிறோம். சில நெழிவு சுழிவுகள் இருக்கும். பெரிது படுத்தாமல் வரலாற்றுப் பார்வையில் தெரிந்து கொள்வோம்.

இந்திய வரலாற்று ஆசிரியர்கள் ஒளரங்கசீப் என்பவரை இரு வகைகளில் பார்க்கிறார்கள். 




ஒரு சில ஆசிரியர்கள் இப்படிப் பார்க்கிறார்கள். ஒளரங்கசீப் என்பவர் பொல்லாதவர். கெட்டவர். இரக்கக் குணமே இல்லாதவர். வரி மேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைத்தவர். இந்தியாவில் இருந்த இந்துக் கோயில்கள் பலவற்றை இடித்துத் தள்ளியவர். வயதான தன் தந்தையைச் சிறையில் போட்டுக் கொடுமைப் படுத்தியவர் என்று சொல்கிறார்கள். அது மட்டும் அல்ல.

மொகலாய சாம்ராஜ்யம் அவரால் தான் அழிந்து போனது. இது எந்த அளவுக்கு உண்மை. அதை ஆராய்ந்து பார்க்கிறது நம்முடைய இந்தக் கட்டுரைத் தொடர்.

ஒரு தீர்ப்பைச் சொல்வதற்கு முன்னால் இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும். ஒருவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் மீது குரோதக் கருத்துகளை வலுக் கட்டாயமாகத் திணிக்கக் கூடாது. 




ஒளரங்கசீப் என்பவர் ஒரு தீவிரச் சமயவாதி. இல்லை என்று சொல்லவில்லை. இந்துக்களுக்கு எதிராகச் செயல்பட்டார் என்பது உண்மைதான். ஆனால் அவர் ஏன் அப்படி மாறினார்.  அதையும் பார்க்க வேண்டும் இல்லையா. ஔரங்கசிப் என்பவரைச் சுருக்கமாக இப்படி நான்கே வரிகளில் சொல்லலாம்.

அவர் மிகப் பெரிய ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. மிக எளிமையானவர். தன்னுடைய மதத்தின் மீது தீராதப் பற்று கொண்டவர். பிற மதங்களின் கலாச்சாரங்களை மதிக்கத் தெரிந்தவர். முன்பு காலத்தில் இந்துக்களிடையே உடன்கட்டை ஏறுதல் எனும் ஒரு சமூகக் கொடுமை இருந்தது. அதற்கு எதிராக களம் இறங்கிய முதல் சமூகச் சீர்திருத்தவாதி.

ஔரங்கசிப் என்கிற மனிதர் மட்டும் இல்லை என்றால் வெள்ளைத் தாஜ்மகால், கறுப்புத் தாஜ்மகால் என்று இரண்டு தாஜ்மகால்கள் கிடைத்து இருக்கும். ஆகா ஓகோ என்று இன்றைய வரைக்கும் மார் தட்டிக் பெருமை அடித்துக் கொள்ளலாம். 




ஆனால் அந்தக் காலத்திலேயே இந்தியா நொடித்துப் போய் இருக்கும். இந்திய மக்கள் நொந்து நூல் நூலாகிப் போய் இருப்பார்கள். இது என் கணிப்புகள்.

ஒளரங்கசிப் தன் தந்தை ஷா ஜகானையே சிறை வைத்தவர் என்றுதான் வரலாறு சொல்லி வருகிறது. ஆனால் ஒளரங்கசீப்பின் உண்மையான முகமே வேறு! தனக்கு என்று ஒரு தனிச் சித்தாந்தத்தை வகுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தவர். மனுக்குல அடிப்படையில் அவர் ஒரு நல்ல நேர்மையாளர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இளம் வயதில் தந்தை ஷா ஜகானால் பற்பல காரணங்களினால் புறக்கணிக்கப் பட்டவர். அவையே பின்னாளில் தந்தை மகனுக்கு இடையே பெரிய பெரிய பிளவுகளை ஏற்படுத்தி விட்டன.

தன்னுடைய சொந்தச் சகோதரர்களையே கொன்றவர். வென்றவர். அப்படியே டில்லி அரியணையைக் கைப்பற்றியவர். மாபெரும் சக்ரவர்த்தியான ஒளரங்கசிப்பின் வாழ்க்கையில் மலைக்க வைக்கும் திருப்பங்கள். 




இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு ஒளரங்கசிப் மீது இருக்கும் தப்பான எண்ணங்கள் கண்டிப்பாக மாறிப் போகும். இந்தக் கட்டுரைத் தொடர் பத்து பகுதிகளாக வெளிவருகிறது. நல்ல ஒரு வரலாற்று ஆவணம். படியுங்கள். பத்திரப் படுத்தி வையுங்கள்.

தந்தை ஷா ஜகானுக்கு எதிராக ஔரங்கசிப் படை எடுத்து வந்தார். அதற்கும் காரணம் இருக்கிறது. ஷா ஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜிற்கு ஒரு தாஜ்மகாலைக் கட்டினார். அது வெள்ளை நிறம். தனக்கு என்று இன்னொரு கறுப்பு தாஜ் மகால் கட்ட வேண்டும் என்பது ஷா ஜகானின் திடீர் ஆசை.

ஆக திட்டம் போட்டு செயல்பட ஆரம்பித்தார். கட்டட வேலைகளும் ஆரம்பமாகி விட்டன. ஏற்கனவே கஜானா காலியாகி விட்டது. மக்களிடம் வரிப் பணம் வசூலித்து அவர்களை இரத்தக் கண்ணீர் வடிக்கவும் செய்து விட்டார். 




இதில் இன்னும் ஒரு கறுப்பு தாஜ் மகால் கட்டினால் நாட்டின் நிலைமை என்ன ஆகும். கறுப்பு தாஜ் மகால் கட்டப் படுவதைத் தடுத்து நிறுத்தி அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொள்வதே ஔரங்கசிப்பின் திட்டம் ஆகும். 

ஆக்ரா கோட்டை. மொகலாயர்களின் அசைக்க முடியாத ஓர் அரண். கோட்டைக்கு உள்ளே நிறைய கிணறுகள் இருந்தன. எல்லாம் வற்றாத கிணறுகள். இருந்தாலும் எந்தக் கிணற்று நீரையும் நல்லபடியாகக் குடிக்க முடியாது. சுவை எதுவும் இல்லை. சாதாரண மக்கள் வேண்டுமானால் குடிக்கலாம். ஆனால் மாபெரும் பேரரசரால் முடியுமா? முடியாது.

ஆக்ரா கோட்டைக்கு அருகிலேயே யமுனை நதி ஓடுகிறது. அழகான அற்புதமான நதி. ஆக்ரா கோட்டைக்கு உள்ளேயே யமுனை நீர் செல்லும்படியாக ஷா ஜகான் வசதிகளைச் செய்து கொடுத்து இருந்தார்.

அந்த ஒரு வசதிதான் ஒளரங்கசிப்பிற்கும் நல்ல ஒரு வசதியாகவும் அமைந்து விட்டது. அதுவுமே தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்னைகளில் முதல் கட்டம்.

அந்த யமுனை நீரை வைத்துக் கொண்டு ஔரங்கசிப், எப்படி தன் தந்தை ஷா ஜகானைச் சிறை வைத்தார். தொடர்ந்து படியுங்கள்.

கோட்டைக்குள் செல்லும் குடிநீர் இணைப்புகள் எல்லாவற்றையும் துண்டித்து விட்டால் ஷா ஜகான் சரண் அடைந்து விடுவார் இல்லையா. வெகு தொலைவில் இருந்து படை எடுத்து வந்து ஆக்ரா கோட்டையைச் சுற்றி வளைத்தாகி விட்டது. ஆனால் உள்ளே நுழைய முடியவில்லை.  



பெரிய பெரிய பாதுகாப்பான மதில் சுவர்கள். உள்ளே கோட்டைக்குள் பேரரசர் ஷா ஜகான் இருக்கிறார். வயதான மனிதர். அந்தச் சமயத்தில் அவருடைய உடல்நிலை வேறு சரி இல்லை.

அதனால் என்ன என்று கேட்க வேண்டாம். உள்ளே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். எந்த நேரத்திலும் எதிர்த் தாக்குதல் நடத்த தயாராக இருந்தார்கள்.

ஆக்ரா கோட்டைச் சுவரைக் குண்டுகளால் தாக்கி உள்ளே நுழைவது எல்லாம் நடக்காத காரியம். மாதக் கணக்கில் தாக்கினாலும் கோட்டையைத் தகர்க்க முடியாது. அப்படி பலம் வாய்ந்த கோட்டை. எப்படி இருந்தாலும் ஆக்ரா கோட்டையை ஔரங்கசிப் கைப்பற்றியே ஆக வேண்டும்.

எப்படி என்று யோசித்துப் பார்த்தார். அப்போதுதான் குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் எண்ணம் ஒளரங்கசிப்பிற்கு வந்தது.

கடைசியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் பட்டது. மூன்று நாட்கள் ஆயின. கோட்டைக்குள் உள்ளே இருந்த பேரரசர் ஷா ஜகானுக்கு ஒன்றும் முடியவில்லை. ரொம்பவும் கஷ்டமாகிப் போனது.

'பெற்ற அப்பனை இப்படியா கொடுமை செய்வது. தண்ணீர் இல்லாமல் தவிக்க விட்டு இருக்கிறாய். ஒரு மகன் செய்கிற காரியமா.’ வெளியே படைகளுடன் முற்றுகை போட்டு இருக்கும் தன் மகன் ஒளரங்கசிப்பிற்கு இப்படி ஒரு கடிதத்தை ஷா ஜகான் அனுப்பினார்.

'இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை. உங்களுடைய இந்த நிலைக்கு நீங்களே தான் காரணம்' என்று பதில் கடிதத்தை அனுப்பினார் ஒளரங்கசீப்.

இதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாது என்று உணர்ந்த ஷாஜகான் தன் தளபதி பாசில்கானைத் தூது அனுப்பினார்.

பாசில்கான் நல்ல ஒரு தளபதி. நம்பிக்கையானவர். நாணயமானவர். செத்துப் போ என்று ஷா ஜகான் சொன்னால் செத்தே போய் விடுவார். அந்த மாதிரியான மனிதர்.

'பேரரசர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்' என்று ஒளரங்கசிப்பிடம் வந்து பாசில்கான் கூறினார். ஒளரங்கசிப் எதிர்பார்த்த செய்திதான்.

'என் தந்தையின் மேல் நான் வைத்து இருக்கும் அன்பு பாசம் வாஞ்சை என்பதை எல்லாம் வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது. நான் அவரைச் சந்திக்க ஆசைப் படுகிறேன்.

ஆனால், அவர் சில விசயங்களை எனக்காகச் செய்தாக வேண்டும். முதலாவதாக எனனுடைய படை வீரர்கள் கோட்டைக்குள் நுழைவதற்கு அனுமதி தர வேண்டும். அதற்குப் பின்னர்தான் நான் அவரைச் சந்திக்கக் கோட்டைக்குள் வருவேன். என்னால் அவருக்கு எந்த ஒரு தீங்கும் வராது. இது உண்மை. இதைப் போய் உங்கள் பேரரசரிடம் சொல்லுங்கள்' என்று ஒளரங்கசிப் பதில் சொன்னார்.

ஒளரங்கசிப்பின் பதிலைக் கேட்ட ஷா ஜகான் திருப்தி அடைந்தார். ஆக்ரா கோட்டையின் கதவுகளைத் திறந்து விட்டார். இது நடந்தது 1658 ஜூன் 8-ஆம் தேதி.

ஒளரங்கசிப்பின் மூத்த மகன் சுல்தான் முகமது. அவர்தான் முதன்முதலாகக் கோட்டைக்குள் நுழைந்தார். தன் தாத்தா ஷா ஜகானிடம் சகல மரியாதையுடன் நடந்து கொண்டார். சரி.

அதுவரையில் எல்லாமே நல்லபடியாகத் தான் நடந்தது. பிரச்சினை எதுவும் இல்லை. அப்பா மகனுக்கும் இடையே இருந்த புகைச்சல் லேசாக அடங்கிப் போனது. இரண்டு நாட்கள் கழித்து ஷா ஜகானின் செல்ல மகள் ஜஹனாராவிடம் இருந்து ஒளரங்கசிப்பிற்கு ஒரு கடிதம் வந்தது.

'மொகலாயப் பேரரசின் பெரும் பகுதியை நீயே எடுத்துக் கொள். நீயே ஆட்சி செய். மொகலாயப் பேரரசின் மன்னராக முடி சூட்டிக் கொள். நம் தந்தைக்கு எந்தவித மறுப்பும் இல்லை.

ஆனால், உன் சகோதரர்களுக்குச் சேர வேண்டிய கொஞ்ச நிலங்களை மட்டும் அவர்களுக்கே கொடுத்துவிடு. இது சம்பந்தமாகத் அப்பா உன்னிடம் நேரடியாகப் பேச விரும்புகிறார். அதுதான் நீ அவருக்குச் செய்யப் போகும் மரியாதை.' இது ஜஹனாராவின் கடிதம்.

ஒளரங்கசிப் தன் சகோதரியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தார். கண்டிப்பாகச் சந்திக்க வருவதாகச் சொல்லி பதிலும் அனுப்பினார்.

ஆக்ரா கோட்டைக்குள் ஒரு பேரணியாகச் சென்று தந்தையாரைச் சந்திக்கலாம் என்று படைகளுடன் கிளம்பினார். அந்த நேரம் பார்த்து ஒளரங்கசிப்பின் இளைய சகோதரி ரோஷனாரா அங்கே வந்தார். ரோஷனாராவின் மீது ஒளரங்கசிப்பிற்குத் தனிப் பிரியம். அவருடைய சொல்லைத் தட்டுவதே இல்லை.

ஜஹனாரா தனக்கு எழுதிய கடிதத்தைக் காண்பித்தார் ஒளரங்கசீப்.

அதற்கு ரோஷனாரா 'எனக்கு எல்லாம் தெரியும். இது சம்பந்தமாக உன்னை எச்சரித்து விட்டுப் போகத்தான் நான் இங்கே வந்தேன். தந்தை உன்னைக் காண பாசத்துடன் காத்து இருக்கிறார் என்று தானே நினைக்கிறாய்? அதுதான் தப்பு.

'நீ தப்புக் கணக்குப் போட்டு விட்டாய். உன்னை கோட்டைக்குள் அழைத்து, பேசுவது போல பேசி நடித்து, அப்படியே உன்னைக் கொலை செய்வதுதான் அவர்களுடைய திட்டம். உனக்கு அந்தக் கடிதத்தை அனுப்பியது ஜஹனரா. உன் மீது கொஞ்சம் கூடப் பாசம் இல்லாதவள். அவளுடைய வார்த்தைகளை நீ எப்படி நம்பினாய்?' ரோஷனாரா தன் பங்கிற்குச் சொல்லி விட்டாள். அப்புறம் என்ன.

ஒளரங்கசீப் மனம் கொதித்துப் போனது. உடனடியாகத் தன் தளபதியை அழைத்தார். ’ஷா ஜகானை இப்போதே கைது செய்யுங்கள். அவர் இனிமேல் யாருடனும் பேசக் கூடாது. என்னுடைய அனுமதி இல்லாமல், யாரும் அவரைப் பார்க்கக் கூடாது.

ஆனால், ஒரு பேரரசருக்கு உரிய மரியாதை எந்தவிதத்திலும் குறையக் கூடாது. அவர் இருக்கின்ற இடத்திலேயே சுதந்திரமாக அப்படியே இருக்கட்டும். வேண்டும் என்றால் அவருடைய முதல் மகள் ஜஹானாராவை தன்னுடன் வைத்துக் கொள்ளட்டும். அதற்கு தடை இல்லை.'

ஒளரங்கசிப்பின் கட்டளை செயல் படுத்தப் பட்டது. மொகலாய சாம்ரஜ்யத்தின் வரலாறும் திருத்தப் பட்டது. ஒளரங்கசீப்பிற்கு, ஷா ஜகான் என்ன என்ன கொடுமைகளைச் செய்தார். ஏன் பெற்ற அப்பனின் மீதே அவ்வளவு கோபம் வந்தது. பெரிய பெரிய அதிர்ச்சியான செய்திகள் வருகின்றன. அவற்றை நாளைய கட்டுரையில் பார்ப்போம். படிக்கத் தவற வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக