30 மே 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 3

இலங்கைச் சிங்களர்களின் தமிழ் மொழி  எதிர்ப்புத் தனமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதைப் பார்த்த தமிழர்கள் தங்களின் மொழி உரிமை மறுக்கப் படுவதை நன்றாகவே உணர்ந்து வந்தார்கள். இந்தக் கட்டத்தில் தமிழர்களும் ஒரு முடிவிற்கு வர வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்ட

இனி எதிர்வரும் காலங்களில் கல்வியால் மட்டுமே  முன்னேற்றம் காண முடியும்; தமிழர்கள் தங்களின் கல்விப் பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும்; கல்வியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தார்கள்.

அதுவே பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையின் தாரக மந்திரம். தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் கல்வியின் பக்கம் சன்னம் சன்னமாய் ஈர்த்து வந்தார். அந்த வகையில் அவருடைய பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டினார்கள். அந்தப் பாவனையில் ஒரு நல்ல நிலைக்கும் வந்தார்கள்.

பிரபாகரனின் அண்ணன் மனோகரன். கால ஓட்டத்தில் இவரும் ஓர் அரசு வேலையில் அமர்ந்தார். மற்ற இரு சகோதரிகளும் நன்றாகப் படித்தார்கள். நல்ல வரன்கள் கிடைத்தன. திருமணமாகிப் புக்ககம் புகுந்தார்கள்.

ஆனாலும் கடைக்குட்டி பிரபாகரனின் மீது தான் தந்தையாருக்கு ரொம்பவும் கவலை. பிரபாகரனின் புரட்சிகரமான சிந்தனை; தீவிரமான போராட்டப் போக்கு; அவருக்குச் சரியாகப் படவில்லை. பிரபாகரனை எப்படியாவது சிலோன் சிவில் சேவையில்  சேர்த்துவிட வேண்டும் என்பது தந்தையாரின் நெடுங் கணக்கு.


ஆனால் பிரபாகரனுக்கு அப்படி இல்லையே. எல்லாமே எதிர்மறையான சிந்தனைகள் தானே. எல்லாமே சோசலிசச் சிந்தனைகள் தானே. எல்லாமே கொரிலா போராளிகளின் சிந்தனைகள் தானே.

சிலோன் சிவில் சேவைக்குப் பதிலாக அந்தச் சிலோனையே எதிர்க்க வேண்டும்; தமிழீழச் சிவில் சேவை என்று மாற்ற வேண்டும் என்கிற வேறுபட்ட சிந்தனையில் தானே பிரபாகரன் பித்துப் பிடித்துக் காய்களை நகர்த்திக் கொண்டு இருந்தார்.

சிலோன் சிவில் சேவை என்பது இலங்கையின் பொது நிர்வாகச் சேவையாகும். 1833-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அப்போது இலங்கை பொதுச் சேவை (Ceylon Civil Service-CCS) என்று பெயர்.

1963-ஆம் ஆண்டு இலங்கை பொதுச் சேவை என (Ceylon Administrative Service-CAS) வேறு வடிவத்தில் அறிமுகமானது. 1972-ஆம் ஆண்டு இலங்கை ஒரு குடியரசு நாடாகப் பிரகடனம் செய்யப் பட்டது. அந்தச் சேவைக்கு இலங்கை நிர்வாக சேவை என (Sri Lanka Administrative Service-SLAS) பெயர் மாற்றம் கண்டது. அந்தச் சேவையே தற்சமயம் அந்த நாட்டில் முதன்மையான சிவில் சேவையாகும். சரி.


காலப் போக்கில் வல்வெட்டித் துறையிலும் சிங்கள இராணுவம் வெறித் தனமாய் தலைவிரித்துத் தாண்டவம் ஆடத் தொடங்கியது. வயது வரைமுறை பார்க்காமல் பெண்களிடம் வன்முறைகள்; போகிற வருகிற இளைஞர்களைத் தாக்கிக் காயப் படுத்துதல்; கண்ணுக்குத் தெரியும் இந்துக் கோவில்களை உடைத்து எறிதல்; இப்படி நிறையவே கண்மூடித்தனமான வன்மைகள். பிரபாகரனின் கிராமத்திலேயே சில துயரமான சம்பவங்களும் நடந்தன.

மட்டக்களப்பில் தான் பிரபாகரன் தன் தொடக்கக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர் ஆலடி சிவகுரு பள்ளியில் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் ஊரிக்காட்டு சிதம்பரம் கல்லூரில் 10 வகுப்பு வரை மேல்படிப்பு. அதற்கு மேல் ஒரு பெரிய முற்றுப்புள்ளி.

பள்ளிப் படிப்பில் பிரபாகரன் சற்றே மந்தம். அவருடைய எண்ணம் சிந்தனைகள் எல்லாமே அரசியல். இங்கேதான் புரட்சி எண்ணங்களில் புதுப் புனல்கள் அலைமோதுகின்றனவே... அப்புறம் எப்படி படிப்பில் பச்சைக் கலரைப் பார்க்க முடியும். 


அரசியலுக்கு அடுத்து அரசியலைச் சார்ந்த போராட்டங்கள். அதைப் பார்த்து தந்தையார் ரொம்பவுமே மனம் வெதும்பிப் போனார். இவனை இப்படியே விட்டால் சரிபட்டு வர மாட்டான் என்று சொல்லி மாலை வகுப்பிற்கு ஏற்பாடு செய்தார். மாலை 6 முதல் இரவு 9 வரை வகுப்பு. அங்கேயாவது பையன் கொஞ்சம் புத்தி தெளிவு பெறுவான் என்று நினைத்தார்.

ஆனால் நடந்ததே வேறு. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமாம். அந்த மாதிரி தான். பையன் திருந்துவான் என்று மாலை வகுப்பிற்குக் கொண்டு போனால் பையன் சோசலிசக் கிணற்றுக்குள் விழுந்து அங்கேயே நீச்சல் அடித்துக் கொண்டு இருந்தான். முதலுக்கே மோசமாகிப் போனது. கதையைக் கேளுங்கள்.

மாலை வகுப்பின் ஆசிரியர் ஓர் இளைஞர். வயது 24. பெயர் வேணுகோபால் சாஸ்திரி. புரட்சிப் போராட்டங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். தனித்த தமிழீழம் தான் இலங்கைத் தமிழர்களுக்கு விடியலைத் தரும் விடிவெள்ளி எனும் கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

அப்புறம் என்ன. பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி பிரபாகரனுக்கு உலக புரட்சிகள் பற்றி ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொடுத்தார். தமிழர்களுக்கு என்று தனி ஒரு நாடுதான் நிரந்தத் தீர்வு என அடிமேல் அடி. நன்றாகவே மூளைச் சலவை. அப்போது பிரபாகரனுக்கு வயது 14.

அந்தச் சின்ன வயதிலேயே பிரபாகரனுக்குள் சோசலிசச் சித்தாந்தங்கள் சிறகடிக்கத் தொடங்கின. கீதா உபதேசங்களுக்குப் பதிலாக சோசலிச உபநியாசங்கள். மாலை வகுப்பு வாத்தியார் மூலமாகச் சிங்களத்திற்கு ஏழரை நாட்டுச்சனி பிடித்துக் கொண்டது என்று நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். 


அப்படி நான் சொல்ல மாட்டேன். சிங்களப் பேரினவாதத்தின் கதவுகளை ஏழரை நாட்டு மணி லொட்டு லொட்டு என்று தட்டியது என்று தான் சொல்வேன். இது கொஞ்சம் நல்லா இருக்கு இல்லீங்களா. சரி. விட்டால் கிளாப்பா சாவிட் மெசினைக் கொண்டு வந்து அறுத்து எடுத்து விடுவான் என்று சொல்வது காதில் விழுகிறது. நம்ப கதைக்கு வருவோம்.

அது மட்டும் அல்ல. இந்தியப் போராளிகள் சிவாஜி; திப்பு சுல்தான்; நேதாஜி; பகத் சிங்; திருப்பூர் குமரன்; கட்ட பொம்மு போன்றவர்களைப் பற்றியும் மாலை வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்.

உலகப் போராளிகள்:

நெப்போலியன் (1769–1821);

மெக்சிகோ எமிலியானோ (Emiliano Zapata 1879–1919);

சைமன் போலிவார் (Simon Bolivar 1783–1830);

செகுவாரா (1928–1967);

லெனின் (1870–1924);

ரோசா லக்சம்பர்க் (Rosa Luxemburg);

பீடல் காஸ்ட்ரோ (1926–2016);

நெல்சன் மண்டேலா (1918–2013);

ஹோசி மின் (1890–1969);

போன்றவர்களைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தார். அந்தப் போராட்ட உணர்வுகளே பின்னர் காலத்தில் பிரபாகரனிடம் நிலைத்துப் போய் பைரவி ராகங்களைப் பாட ஆரம்பித்தன.



அந்தப் பக்கம் பார்த்தால் பிரபாகரனின் தந்தையார் அப்பழுக்கற்ற அகிம்சாவாதி. நேருவையும் காந்தியையும் ரொம்பவே நேசித்தவர். ஆனால் பிரபாகரனுக்கு அப்படி இல்லை. நேரு, காந்தி இருவர் மீதும் நாட்டம் அறவே இல்லை. சுட்டுப் போட்டாலும் வரவே இல்லை.

மாறாக இந்தியச் சுதந்திரத்திற்குப் போராடியவர்கள்: தீரன் சின்னாமலை; வீரமங்கை வேலு நாச்சியார்; மருது பாண்டியர்; புலித்தேவன்; கட்ட பொம்மு; வஞ்சிநாதன்; கப்பலோட்டிய தமிழர்; சுப்பிரமணிய சிவா; நேதாஜி; பகத் சிங். இவர்கள் மட்டுமே பிரபாகரனின் மனதில் ஆழமாய்ப் பதிந்து போனார்கள்.

நேதாஜி என்கிற ஒரு சொல் பிரபாகரனை மிகவும் பாதித்து விட்டது. அன்றில் இருந்து நேதாஜியை விரும்பிப் படிக்க ஆரம்பித்தார். இந்தியாவில் இருந்து வந்த பத்திரிக்கைகளில் வெளிவந்த நேதாஜியின் படங்களையும் கதைகளையும் எல்லாம் வெட்டி எடுத்து வைத்துக் கொண்டார்

நேதாஜி என்றால் வீரம். வீரம் என்றால் நேதாஜி. அந்தச் சொல்தான் பிரபாகரனின் உயிர்மூச்சு. நேதாஜியைப் போலவே இலங்கை அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

நேதாஜியை தலைவராக ஏற்றுக் கொண்டார் என்று சொல்வதை விட அவரை மானசீகமான குருவாக ஏற்றுக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.


போராடுவதற்கு முன் முதலில் மனத்தையும் உடலையும் பக்குவப் படுத்தி நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் இலங்கை இராணுவத்தை எதிர்க்க வேண்டும் என உறுதி கொண்டார்.

இலங்கை இராணுவத்தை எதிர்க்கலாம். எல்லாம் சரி. கத்தி கம்புகளால் இராணுவத்தை எதிர்க்க முடியுமா. முடியாதே. நிச்சயமாக ஆயுதம் கொண்டுதானே எதிர்க்க வேண்டும். ஆனால் ஆயுதங்களுகு எங்கே போவதாம். அப்போது பிரபாகரனுக்கு 14 வயது. யாரைத் தேடிப் போய் உதவி கேட்பதாம்?

பிரபாகரனுக்கு அப்போதைக்கு நல்ல ஒரு துப்பாக்கி தேவை.ப் பட்டது எப்படியாவது வாங்கி விட வேண்டும் எனும் எண்ணத்தில் வேணுகோபால் ஆசிரியரிடமே போய் ஐடியா கேட்டார். இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்.

“எனக்கு ஒரு துப்பாக்கி வேணும் சார். வாங்கித் தருவீங்களா சார்” என்கிறார் பிரபாகரன். ஆசிரியர் நிலைகுத்திப் போனார். அங்கே கொஞ்ச நேரம் அமைதி. அதன் பின்னர் துவக்கு துப்பாக்கி எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’

முதலில் போய் கம்புச்சண்டை பழகிக் கொள் என்று பிரபாகரனிடம் சொல்லி அனுப்புகிறார். பிரபாகரனுக்குப் பெரிய ஏமாற்றம். ஆசிரியரே இப்படிச் சொல்லி விட்டாரே என நினைத்து வருந்தினார். ஆனாலும் துப்பாகி மீது இருந்த வெறி மட்டும் அடங்கவில்லை

தன்னைப் போல ஆயுதப் போராட்டம் மீது துடிப்பு கொண்ட ஏழெட்டுப் பேரைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார். சிங்களவனைத் தாக்க வேண்டும் என்றால் நாம் பயிற்சிகள் எடுக்க வேண்டும். அதற்கு நமக்கு கண்டிப்பாக ஒரு துப்பாக்கி வேண்டும் என்கிறார் பிரபாகரன்.


அதற்கு பணம் வேண்டும். என்ன செய்வதாம். சரி கையில் கிடைக்கிற காசை எல்லாம் சேமித்து வைப்போம். சிறுக சிறுகச் சேர்த்து ஒரு துப்பாக்கியை வாங்கி விட வேண்டும் என பிரபாகரனும் நண்பர்களும் முடிவு எடுக்கிறார்கள்.

ஒரு செருகல். இந்தக் கட்டுரைத் தொடர் பிரபாகரன் வேலுப்பிள்ளை 2011 எனும் நூலின் தகவல்களையும் சான்றுகளையும் முன் வைத்து தயாரிக்கப் படுகிறது. அவர்களின் அனுமதியுடன் தகவல்கள் தொகுக்கப் படுகின்றன.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள். அப்போது பிரபாகரனுக்கு வயது 14. அந்தச் சின்ன வயதிலேயே அப்பேர்ப்பட்ட போராட்ட வெறி. அந்த உணர்வு தானே உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

பிரபாகரன் சேமித்து வைத்து இருந்தது 110 ரூபாய். துப்பாக்கியின் விலை 150 ரூபாய். காசு பற்றாமல் எப்படி துப்பாக்கியை வாங்கி இருப்பார். அங்கே தான் பிரபாகரன் வந்து நிற்கிறார். மனதைத் தொடும் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக