29 மே 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 2

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் பொன்னாலை எனும் ஊர். யாழ்ப்பாணக் கடலேரிக் கரையில் காரை நகருக்கு அருகாமையில் அமைந்து உள்ளது. அங்கே தான் ஆல்பிரட் துரையப்பா என்பவர் சுட்டுக் கொல்லப் பட்டார். 


ஆல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணத்தின் நகர மேயராக இருந்தவர். இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர். தமிழ் இன உணர்வுகளைக் கசக்கி நசுக்கிப் பிழிந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழர்களை மட்டம் தட்டியே பேசி வந்தவர். இலங்கைத் தமிழர்கள் பொதுவாகவே அவரை ஒரு தமிழ்த் துரோகி என வர்ணித்தார்கள்.

1975-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி ஆல்பிரட் துரையப்பா தன் மகள் ஈசாவுடன் பொன்னாலையில் இருந்த வரத ராஜ பெருமாள் கோயிலுக்குப் போய் இருக்கிறார். அப்போது முகமூடி அணிந்த ஒருவர் ஆல்பிரட் துரையப்பாவைச் சுட்டுக் கொன்று விட்டார்.

ஆல்பிரட் துரையப்பாவின் அரசியல் எதிரியான செல்லையா குமார சூரியார் தான் அந்தக் கொலையைச் செய்து இருக்கலாம் என்று பலரும் நினைத்தார்கள். அரசாங்கமும் நினைத்தது. இருந்தாலும் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவராக இருந்த பிரபாகரன் மீது ஒரு குற்றப் பார்வை இருக்கவே செய்தது.


ஆல்பிரட் துரையப்பாவைச் சுட்டுக் கொன்றது யார் எவர் என்று தெரியாத நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து, 1978 ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலை இயக்கத்தினர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தாங்கள் தான் துரையப்பாவையும் மற்றும் பதினொரு பேரையும் கொன்றதாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர்.

அதுதான் விடுதலை இயக்கத்தினர் சிங்களருக்கு விதித்த முதல் மரண தண்டனை. 

துரையப்பாவைச் சுட்டுக் கொன்ற அதே சமயத்தில் புத்தூர் வங்கிக்குள் தனது தோழர்களுடன் நுழைந்த பிராபகரன், ஐந்து லட்சம் ரூபாய், இரண்டு லட்சம் ரூபாய் நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றார். அப்போது அது பெரிய காசு. சிங்களப் போலீசாருக்குப் பெரிய தலைவலிக் குடைச்சல்.

அந்த வகையில் புதிதாகத் தோன்றிய தமிழ்ப் புலிகளை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டத் தொடங்கினார்கள். 



1976 மே 5-ஆம் நாள். தமிழ்ப் புலிகள் இயக்கம் என்பது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமாக மாற்றம் கண்டது.

அவர்களின் நோக்கம்:

இலங்கை உளவுப் படையினரை அழிப்பது;

போலீஸ் வன்முறைகளை அடக்கி வைப்பது;

தமிழர்களுக்கு எதிரான இராணுவத்தினர் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதல் நடத்துவது;


இந்த மூன்று அம்சங்களும் புலிகளின் முன் எடுப்புகளாக முன் வைக்கப் பட்டன.

கொஞ்சம் பின்னோக்கி 1958-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சிகளையும் திரும்பிப் பார்க்க வேண்டி வருகிறது. அதற்கு முன் ஒரு விசயம். பிரபாகரனைத் தவிர்த்துவிட்டு, அவர் இல்லாமல் யாருமே தமிழீழ வரலாற்றை எழுதிவிட முடியாது. 



உலகத் தமிழர்களுக்குப் பிராபகரன் என்பவர் ஒரு ஹீரோ. அதே சமயத்தில் தமிழீழ மக்களுக்கு ஒரு தெய்வம். பிரபாகரனை முன் வைத்து தான் தமிழீழ வரலாற்றை எழுத முடியும். சரிங்களா. கொழும்பு கலவரத்திற்கு வருகிறேன்.

கொழும்பு நகரில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் கலவரம். 1958-ஆண்டு நிகழ்ச்சி. கலவரத்தின் போது பிரபாகரனின் சொந்த அத்தையின் வீட்டுக்குள் சிங்களர்கள் நுழைந்தார்கள்.

வீட்டின் குளியறையில் மறைந்து இருந்த பிரபாகரனின் அத்தையையும் அவருடைய கணவரையும் அடித்துச் சித்திரவதை செய்தார்கள். அப்புறம் பிரபாகரனின் மாமாவை எரித்தே கொன்றார்கள்.

தீக்காயங்கள்; வெட்டுக் காயங்களுடன் பிரபாகரனின் அத்தை உயிர் தப்பினார். அப்போது அங்கு இருந்த சில நல்ல மனிதர்களின் உதவியால் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தீக்காயங்கள் ஆறுவதற்கு ஓராண்டு காலம் பிடித்து இருக்கிறது.

அதன் பின்னர் பிரபாகரனின் அத்தை வல்வெட்டித்துறைக்கு வந்து சேர்ந்தார். கொழும்புவில் நடந்ததைச் சொல்லி முடிக்கும் போது பிரபாகரனின் சகோதரிகள் ஜெகதீஸ்வரி, வினோதினி இருவரும் காதைப் பொத்திக் கொண்டு கத்தி இருக்கிறார்கள்.

அதைக் கேட்டு என்ன செய்வது என்று புரியாமல் பிரபாகரன் கண்ணீர்விட்டு அழுதார். அப்போது பிரபாகரனுக்கு நான்கு வயது. அந்த நிகழ்ச்சி பிரபாகரனின் மனதில் மிக ஆழமாய்ப் பதிந்து விட்டது. அதன் பின்னர் பிரபாகரனின் அத்தை வல்வெட்டித் துறையிலேயே தங்கி விட்டார்.

1960-ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராக ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா பதவிக்கு வந்தார். தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் திறந்துவிட்டுத் தீவிரப் படுத்தினார். 



ஸ்ரீ மாவோவை உலகின் முதல் பெண் பிரதமர் என்று பெருமையாகச் சொல்லலாம். ஆனால் இந்தப் பெண்மணிதான் 1960-ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தூபம் ஏற்றியவர். தமிழ்மொழி நசித்தலுக்குத் தீப்பந்தங்கள் ஏற்றி  கொளுந்துவிட்டு எரியச் செய்தவர். அவர் செய்த பாவங்களுக்கு உடல் பருத்து பெருத்து நடக்க முடியாமல் செத்துப் போனது வேறு கதை.

அதற்குமுன் இலங்கைப் பிரதமர்களின் பட்டியல் வருகிறது. அதையும் தெரிந்து கொள்வோம்.

1. டொன் ஸ்டீபன் சேனாநாயக்கா - 1947

2. டட்லி சேனாநாயக்கா - 1952

3. சர் ஜோன் கொத்தலாவலை - 1953

4. பண்டாரநாயக்கா - 1956

5. விஜயானந்த தகநாயக்கா - 1959

6. டட்லி சேனாநாயக்கா - 1960

7. ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா - 1960

8. டட்லி சேனாநாயக்கா - 1965

9. ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா - 1970

10. ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா - 1977

11. ரணசிங்க பிரேமதாசா - 1978

12. டிங்கிரி பண்டா விஜயதுங்கா - 1989

13. ரணில் விக்கிரமசிங்க - 1993

14. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க - 1994

15. ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா - 1994

16. இரத்தினஸ்ரீ விக்கிரமநாயக்க - 2000

17. ரணில் விக்கிரமசிங்க - 2001

18. மகிந்த ராசபக்ச - 2004

19. இரத்தினஸ்ரீ விக்கிரமநாயக்க - 2005

20. திசாநாயக்க முதியன் சேலாகே ஜயரத்ன - 2010

21. ரணில் விக்கிரமசிங்க - 2015

22. ரணில் விக்கிரமசிங்க - 2016 (இன்று வரையில்)

1961 ஜனவரி 1-ஆம் திகதி தொடங்கி இலங்கை முழுவதும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக அமல் செய்யப் பட்டது. நீதிமன்றங்களில் சிங்கள மொழி பலவந்தமாகத் திணிக்கப் பட்டது. தமிழ் மொழி தவிர்க்கப் பட்டது.

தமிழ் ஆட்சி மொழியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள அரசாங்க அலுவலகங்களிலும் நீதிமன்றங்களிலும் தமிழ் மொழி இருக்கட்டும் என தமிழரசுக் கட்சி ஒரு கோரிக்கையை முன்வைத்தது .

ஆனாலும் பெரும்பான்மை சிங்களக் கட்சிகளால் நாடாளுமன்றத்தில் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. இலங்கைத் தமிழர்கள் கொதித்துப் போனார்கள். 



1961 பிப்ரவரி 20-ஆம் தேதி. தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த செல்வநாயகம் காந்திய அகிம்சைப் போராட்டத்தைத் தொடங்கினார். அந்தப் போராட்டம் இலங்கை முழுவதும் காட்டுத் தீ போல பரவியது.

ஐயா செல்வநாயகம் வைத்த இரு கோரிக்கைகள்

1. வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் அலுவலக மொழியாக இருக்க வேண்டும்

2. தமிழர் பகுதிகளில் இருக்கும் நீதி மன்றங்கள் தமிழில் இயங்க வேண்டும்

இந்த இரு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை முழுவதும் போராட்டங்களைத் தொடக்கினார்.

ஆனால் சிங்கள அரசு கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. 1961-ஆம் ஆண்டு திருகோணமலையில் நடந்த அகிம்சா போராட்டத்தை அடக்க சிங்களப் போலீசார் களம் இறங்கினார்கள். போராட்டம் தடியடிகள் மூலம் அடக்கப் பட்டது.

அந்த தடியடியில் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏகாம்பரம் கொல்லப் பட்டார். ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களும் திகைத்து மலைத்துப் போய் நின்றார்கள். அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சிங்கள அரசு வன்முறைகளை கட்டவிழுத்து விட்டது.

எல்லா தமிழ்த் தலைவர்களையும் கைது செய்தது. பலரைச் சிறையில் போட்டு அடைத்து வைத்து கொலையும் செய்தது. வானம் வெளிச்சமாகத் தான் இருந்தது. ஆனால் கீழே தமிழர்களின் பூமிதான் இருட்டாகத் தெரிந்தது.

தமிழர் ஏகாம்பரம் திருகோணமலையில் கொல்லப் பட்ட விசயம் இலங்கைத் தமிழர்களைப் பெரிதும் பாதித்தது. காந்திய அகிம்சை அழிக்கப்பட்டு விட்டது என்று பலரும் வேதனைப் பட்டார்கள். 

அதன் பின்னர் சிங்கள அரசு தன் கோரமான முகத்தை கொடூரமாகக் காட்டத் தொடங்கியது. இலங்கைத் தமிழர்களின் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் சிங்கள மயமாக்கப் பட்டது. 



தமிழ்க் கல்விப் பாடத் திட்டத்தில் சிங்கள மண்ணின் மைந்தர்களின் பெருமைகளுக்குப் பட்டம் கட்டிப் பறக்கவிடப் பட்டன. சட்டை சிலுவார் போடாமல் எலி ஓடத் தொடங்கியது. என்னையும் பாருங்கள் என் அழகையும் பாருங்கள் என்பதில் கோர வர்த்தனங்கள்.

புத்த மத மாண்புகளும் புத்தரின் சிந்தனைகளும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டன. அரச அலுவலங்கள் எல்லாவற்றிலும்  சிங்களவர்கள் புகுத்தப் பட்டனர். வேலை வேண்டும் எனில் சிங்களம் படிக்க வேண்டும் என நிலை உருவானது. இந்தப் பக்கம் நடக்கிறதே அதே ஜிங்கு ஜிக்கான் கூத்துதான்.

தமிழர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தன்மானத்தை இழக்க விரும்பவில்லை. கல்வி கற்ற தமிழர்கள் பலர் தங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள்.

பெரும்பாலோர்  மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கானா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்றார்கள்.

தமிழர்கள் உச்சகட்ட விரக்தியில் துடித்து நின்றனர். அந்தக் கட்டத்தில் தான் அடக்குமுறை என்பதை அடக்குமுறையால் அடக்க வேண்டும் எனும் கொள்கை முன்வைக்கப்பட்டது.

இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புலிப்படை என்கிற இயக்கத்தை உருவாக்கினார்கள். அதில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வி. நவரத்தினம் பெரும் பொறுப்பு வகித்தார்.

இருந்தாலும் அந்த புலிப்படை அமைப்பினால் தீவிரமாக இயங்க முடியவில்லை. சிம்க்கள அரசினால் நெருக்குதல்கள். அந்தப் படை தொடங்கிய கொஞ்ச காலத்திலயே நிறுத்தப்பட்டு விட்டது.



அதன் பின்னர் தமிழர்கள் மீதான தாக்குதல்களும் அடக்கு வன்முறைகளும் தெறிக்கத் தொடங்கின. சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் செய்து வந்த தமிழரசுக் கட்சி இலங்கை அரசுடன் இணைந்து தொடர்ந்து பயணித்தது. அங்கே பலவீனம் தலைதூக்கியது.

தமிழரசுக் கட்சி இலங்கை வட பகுதிகலில் ஒரு கூட்டு ஆட்சி முறையை முன்மொழிந்தது. இது தமிழ் இளைஞர்களிடம் பெரும் கோபத்தை உண்டுபண்ணியது.

ஆனாலும் சி.நவரத்தினம் எனும் தமிழ்த் தலைவரும் சுந்தரலிங்கம் எனும் தலைவரும் தனி ஈழம்தான் தமிழர்களுக்கான ஒரே தீர்வு எனும் கோரிக்கையை முன்வைத்தார்கள். அதாவது தமிழர்களுக்கு என தனி ஓர் ஈழம் எனும் கோரிக்கை. தனித்தமிழ் ஈழம் இங்கே இருந்து தான் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

(தொடரும்)

சான்றுகள்;

1. https://en.wikipedia.org/wiki/Origins_of_the_Sri_Lankan_civil_war

2. Spencer. J: Sri Lankan history and roots of conflict.

3. R. Cheran (April 2009) Roots of Sri Lankan conflict at The Real News

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக