22 மே 2019

நஜீப் காப்பாற்றப்பட்டு இருக்கலாம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று; 
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று. 

மனித மனத்தின் இயல்புகளைச் சொல்லிக் காட்டும் கவியரசரின் அழகிய பாடல்.


வாழ்வோம் என்று மனிதன் நினைக்கிறான். ஆனால் இறைவன் வேறு மாதிரியாக எழுதிச் செல்கின்றான். எல்லோரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற உண்மை தானே.

குரங்கு இருக்கிறதே அது மரத்துக்கு மரம் தாவும் போது முதல் மரத்தின் கிளையை விட்டு விட்டுத்தான் அடுத்த மரத்தின் கிளையைப் பற்றிக் கொள்ளும். மனிதன் அப்படி அல்ல. அடுத்த மரத்தின் கிளையைப் பற்றிக் கொண்ட பின்னர் தான் முதல் மரத்தின் கிளையை விடுகின்றான்.

அடுத்த மரத்தின் கிளையைப் பிடித்த பின்னர் முதல் மரத்தின் கிளையை விட்டுவிட வேண்டும். ஆனால் பலரும் அதைச் செய்வது இல்லை. அங்கேதான் மனிதன் வந்து நிற்கிறான். அந்த வகையில் தான் முன்னாள் பிரதமர் சரிந்து போன சரிதமும் வந்து நிற்கிறது.


நமக்கும் நஜீப் சாருக்கும் எந்தவிதமான வருத்தமும் இல்லை. எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

ஆனால் வியர்வை சிந்தி உழைத்த பொது மக்களின் பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கை; மானவாரியான படாடோபம். ஆர்ப்பாட்டமான வெளிப்பகட்டு. மனித மனங்களை இறுகச் செய்த வீண் பகட்டு.

அதனால் தான் வருத்தம். எனக்கு மட்டும் அல்ல. மலேசியாவில் பலருக்கும் வருத்தம். அவரிடம் கைநீட்டி இலட்சக் கணக்கிலும் கோடிக் கணக்கிலும் காசு வாங்கியவர்களுக்கு அவர் மீது அனுதாபத்தின் பாச அலைகள் இருக்கலாம். நன்றி மறக்காத நெஞ்சங்கள்.

தென் அமெரிக்காவில் குவாயானா எனும் நாடு. அங்கே ஓர் ஒதுக்குப் புறமான காட்டுப் பகுதி. மக்களின் கோயில் (Peoples Temple) எனும் வழிபாட்டுத் தளம். ஜிம் ஜான்ஸ் (Jim Jones) என்பவர் தலைவராக இருந்தார்.

தவறான சமய போதனைகள் நடந்தன. அதனால் அந்தத் தளத்தை மூடி விடுமாறு குவாயானா அரசாங்கம் கட்டளை போட்டது. அந்தக் கட்டளையை ஏற்றுக் கொள்ள முடியாத தலைவர் ஜிம் ஜான்ஸ், கோயில் வளாகத்தில் இருந்த ஆயிரக் கணக்கான பக்தர்களையும் ஒன்று கூட்டினார்.

அவர்களுக்கு நஞ்சு கலந்த பானத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். அந்தப் பானத்திற்கு ’கூல் ஏயிட்’ (Kool-Aid) என்று பெயர். குளிர்க் கஞ்சி என்று நாம் அழைப்போமே.

தலைவர் சாகச் சொன்னாலும் தட்டாமல் கேட்கும் ஜிம் ஜான்ஸ் பக்தர்கள் நஞ்சுக் கஞ்சியைக் குடித்தார்கள். நூற்றுக் கணக்கில் இறந்து போனார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 909. அவர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் பால் மனம் மாறாத பச்சைக் குழந்தைகள்.

1978-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி நடந்தது. உலகத்தையே உலுக்கிப் போட்ட நிகழ்ச்சி.


ஒரு குழுவின் தலைவரின் பேச்சை மிஞ்சிப் போக முடியாமல்; அவரின் வாக்கைத் தெய்வ வாக்காக நினைத்து உயிரை விடும் ஒரு முட்டாள் தனத்திற்குப் பெயர் தான் ஜான்ஸ்டவுன் சிண்ட்ரோம்.

தமிழில் ஜான்ஸ்டவுன் இணைப்போக்கு அல்லது ஜான்ஸ்டவுன் ஒத்திசைவு என்று அழைக்கலாம். அது ஒரு பைத்தியக்காரத் தனமான பின்பற்றல்.

ஆக அதே மாதிரியான ஒத்திசைவு தான் மலேசியாவிலும் காலம் காலமாக நடந்து வந்து இருக்கிறது. பாரிசான் தலைவர் என்ன சொல்கிறாரோ அதுவே தெய்வ வாக்கு. தலைவரின் வார்த்தைகளை மீறிப் போகாத பொது மக்கள்.

அப்படித்தான் அண்மையில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் சொல்லி இருக்கிறார். அவர் கொடுத்த பேட்டியின் தகவல்களைச் சான்றாகக் கொண்டுதான் எழுதுகிறேன்.

அப்படிப் பார்த்தால் நஜீப்பின் உண்மையான கலவைப் புனைவு தான் என்ன? கலவைப் புனைவு என்பதை ஆங்கிலத்தில் கொன்கோசன் (concoction) என்று சொல்வார்கள்.

அவருடைய கட்சியான அம்னோவுக்கு உள்ளேயே ஓர் உலகத்தை உருவாக்கி; அதை ஓர் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றி; அதை வழிநடத்திச் செல்வதே அம்னோ தலைவர்களின் தாரக மந்திரம். அதையே தான் நஜீப் அவர்களும் செய்தார்.

தன் இனத்தைச் சார்ந்தவர்களுக்குத் தனி முதன்மை கலந்த மேலாதிக்கம் (Malay supremacy) வழங்குவது; அந்த ஆதிக்கத்தைச் சுற்றிலும் தாழ்த்த முடியாத அரண்களை எழுப்பிப் பாதுகாப்பது. இந்த இரண்டும் தான் மிக மிக முக்கியமானவை.

மற்றவர்கள் என்று சொல்லப்படும் சீனர்களும் இந்தியர்களும் வந்தேறிகள் எனும் பெண்டாத்தான்கள். இந்த மற்றவர்களில் கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த சபா சரவாக் பூர்வீகக் குடிமக்களும் அடங்குவார்கள்.

கெதுவானான் எனும் மேலாதிக்கமே வலியுறுத்தப்பட்டு வந்தது. தீபகற்ப மலேசியாவில் மலாய்க்காரர்கள் நீண்ட காலமாக குடி அமர்ந்து வந்துள்ளனர்.

பெரும்பாலோர் இந்தோனேசியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள். இதை யாராலும் மறுக்க முடியாது. மலேசியாவில் பல மாநிலங்களில் சுல்தானகங்களை உருவாக்கியவர்கள். அதனால் அவர்களுக்குத் தனிச் சலுகைகள் வழங்கப் பட்டன.


தொடர்ந்து வழங்கப் படுகின்றன. அது மலாய்க்காரர்களின் தனி உரிமை; சிறப்புச் சலுகை. சீனர்களும் இந்தியர்களும் தலையிட முடியாது. சம்பந்தப்படவும் இல்லை.

ஆனால் ஆட்சி செய்த பாரிசான் அரசாங்கத்தில் மெரிட்டோகிரசி எனும் தகுதி முறையமைப்பு காலாவதியாகிப் போனது தான் வேதனையான விசயம்.

பக்கத்தில் இருக்கும் சிங்கப்பூரைப் பாருங்கள். அங்கே சீனர்கள் தான் பெரும்பான்மையோர். ஆனால் ஒரு மலாய்ப் பெண்மணியை அதிபராக்கி அழகு பார்க்கிறார்களே. என்ன சொல்லப் போகிறீர்கள்.

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சொல்லி இருக்கிறார். அதாவது இந்த நாட்டில் மலாய்க்காரர் தான் பிரதமராக அல்லது துணைப் பிரதமராக முடியும்; முக்கிய அமைச்சின் அமைச்சராக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் இப்போது துன் மகாதீர் அவர்களின் தலைமைத்துவத்தில் லிம் குவான் எங் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது ஓர் துணிச்சலான அணுகுமுறை தானே.

பாரிசான் அரசாங்கம் தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோஸ்மா; தேசிய பாதுகாப்பு மன்றம்; பொய்யான செய்திகள் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தது. பலரைப் பிடித்து சிறையில் போட்டது. தெரிந்த விசயம்.

அம்னோ தலைவர்கள் பலர் நஜீப்பை புகழோ புகழோ என்று புகழ்ந்து விட்டார்கள். இறைவனால் நஜீப் அனுப்பப்பட்டு உள்ளார் என்று அம்னோ தலைவர்கள் பலர் புகழாரம் செய்து வந்தார்கள்.

அந்த வகையில் நஜீப்பிற்குத் தவறான செய்திகள் போய்க் கொண்டு இருந்தன. அதன் வழி அதிகாரம் தன் கையில் இருப்பதாக நஜீப் அவர்களும் கடைசி நேரம் வரை நம்பி வந்தார். அவர்களை நம்பி நஜீப் தவறாகக் கணக்குப் போட்டு விட்டார்.

உண்மையைச் சொல்லி; உண்மையான நிலவரத்தைச் சொல்லி நஜீப்பைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அம்னோ தலைவர்கள் தவறி விட்டார்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது எனும் தயக்கத்தில் அவரைப் புகழ் பாடியே அவரைக் கெடுத்து விட்டார்கள்.

2015-ஆம் ஆண்டு அம்னோ மாநாட்டில் பாரிசான் இன்னும் 1000 ஆண்டுகளுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யும் என்று நஜீப் குரல் உயர்த்திச் சொன்னார்.


ஆனால் என்ன நடந்தது பாருங்கள். சொல்லி இரண்டு ஆண்டுகள் முடியவில்லை. அதற்குள் எதிர்பாரத சுனாமி வந்து அனைத்து எதிர்பார்ப்புகளையும் அடித்துச் சென்று விட்டது.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று;
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக