12 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு -10

இலங்கை என்பது இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த ஒரு சீதனம். மனித குலம் நிறைந்து நிம்மதியாக வாழ வேண்டிய ஓர் அற்புதமான பச்சை மண். ஆனால் இன்று அப்படி இல்லைங்க. இனவாதம் என்பது பேரினவாதமாக மாறி அந்தச் சொர்க்க பூமியைச் சுடுகாட்டுப் பூமியாக மாற்றிப் போட்டு விட்டது.
 

அந்தப் பூமியில் இன்றையக் காலக் கட்டத்தில் கண்ணுக்குத் தென்படுவது எல்லாமே புலிகள் தான். தொட்டாலும் புலிகள். விட்டாலும் புலிகள். அட எட்டிப் போனாலும் புலிகள்.

அரசாங்கத்தை எதிர்ப்பவர் ஒரு தமிழராக இருந்தால் அவர் ஒரு தமிழ்ப் புலி. அவரே ஒரு சிங்களராக இருந்தால் அவர் ஒரு சிங்களப்புலி. வெள்ளைக்காரராக இருந்தால் அவர் ஒரு வெள்ளைப்புலி. ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவராக இருந்தால் அவர் ஒரு நீக்ரோ புலி. அரசாங்கத்திற்குப் பிடித்த புலி மஞ்சள் புலி. கோடிக் கோடியாய் காசு கொடுக்கும் டிரகன் புலி.

அந்த மாதிரியான பாசிசக் கொள்கைகள்தான் அங்கே தலைவிரித்து ஆடுகின்றன. அவற்றை எதிர்த்த சிங்களர்களும் பலர் உள்ளனர். அதன் பாதிப்புகளினால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று வாழும் சிங்களப் பத்திரிகையாளர்களும் உள்ளனர். 



அவர்களில் பாஷ்னா அபிவர்தனே; பிரட்ரிகா ஜான்ஸ்; தாராக்கி சிவராம்; நமால் பிரேரா; பிரகீத் எக்னலிகொடா; லசாந்தா விக்ரமதுங்கா

Bashna Abivartne;
Fredrica Jones;
Taraki Sivaram;
Namal Perera;
Prageeth Ekneligoda;
Lasantha Wickrematunge

போன்றவர்களைச் சொல்லலாம். இவர்கள் சிங்களப் புலிகளின் எடுத்துக் காட்டுகள். அதனால் தான் அந்த நாட்டு அரசாங்கம் யாரைப் பார்த்தாலும் சந்தேகமாகப் பார்க்கிறது. சுற்றுப் பயணிகளைக்கூட ஒரு மாதிரியாகப் பார்த்து பயப்படுகிறது. தமிழ்ப்புலிகள் மீது இருந்த பயம் இன்னும் விட்டுப் போகவில்லை.

ஒரு மனிதன் அவனுடைய அன்பு, அறிவு, பண்பு எனும் மனிதப் பிறப்புக்கு உரிய தன்மைகளுடன் இலங்கையில் வாழ இயலவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் எழுதி இருந்தார். அது தமிழர்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட நீதி நியதி அல்ல; சிங்களர்களுக்கும் சேர்த்து தான். அடுத்து ஒரு முக்கியமான விசயம்.



இலங்கை இப்போது மெல்ல மெல்ல சீனாவின் முதலைப் பிடியில் சிக்கி வருகிறது. இன்னும் கொஞ்சம் நாட்களில் இலங்கை எனும் நாடு சீனாவிற்குச் சொந்தமான கைப்பாவை நாடாக மாறிப் போகலாம்.

இலங்கையின் அனைத்துக் கட்டுமானப் பணிகளுக்கும் சீனர்கள்தான் முதலாளிகள்; சீனர்கள் தான் தொழிலாளர்கள். இலங்கை ஆட்களை வேலைக்கு வைப்பது இல்லை. விரைவில் குட்டிச் சீனாவாக இலங்கை உருவெடுக்கும். அதற்கான அடித் தளத்தை சீனா இப்போதே சீரும் சிறப்புமாய் அமைத்து விட்டது.

தமிழ்ப்புலிகளின் போர் 2009-ஆம் ஆண்டு முடிந்து விட்டது. இருந்தாலும் தமிழர்கள் அவர்களின் உரிமைகளை இழந்து அனாதைகளாக ஆக்கப்பட்டது பற்றி இலங்கை அரசுக்கு கொஞ்சமும் கவலையும் இல்லை.

ஒன்று மட்டும் உண்மை. அடுத்த சில ஆண்டுகளுக்குள் அங்கே ஒரு பெரிய மௌனமான போர் நடக்கும். அதாவது பொருளாதாரப் போர். அதில் மனித உயிர் இழப்புகள் இருக்கா. ஆனால் இலங்கை எனும் நாடு சிங்களர்கள் கையில் இருந்து கைநழுவிப் போகும்.



ஒரு பக்கம் சீனாவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவும் நின்று கொண்டு  இலங்கையைக் கபளீகரம் செய்யப் பார்க்கின்றன.

அம்பாந்தோட்டை (Hambantota) விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், நுரைசோலை அனல் மின் நிலையம் (Norocholai Power Station), கொழும்பு துறைமுக விரிவாக்கம், இரயில் பாதை புனரமைப்பு வேலைகள் என எல்லா வேலைகளையும் சீனா செய்து முடித்து விட்டது.

இதிலும் ஒரு பெரிய வேடிக்கை. அம்பாந்தோட்டை துறைமுகம் 450 கோடி ரிங்கிட் செலவில்; சீனா கொடுத்த கடனில் கட்டப் பட்டது. ஆனால் என்ன நடந்தது தெரியுங்களா.

இலங்கைக் கடல் வழியாக ஒரு நாளைக்கு 165 கப்பல்கள் போகின்றன வருகின்றன. ஆனால் ஒரே ஒரு கப்பல் மட்டுமே புதிதாகக் கட்டப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குப் போகிறது. 2017-ஆம் ஆண்டில் 48 கப்பல்கள் தான் போய் இருக்கின்றன.  



ஆக வட்டிக் கடனைக் கட்ட முடியாமல் இலங்கை விழி பிதுங்கி நின்றது. அப்புறம் வேறு வழி இல்லாமல் அந்தத் துறைமுகத்தைச் சீனாவிடமே 99 ஆண்டுகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடடது.

சீனாவைக் காட்டி இந்தியாவிடமும்; இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் வளர்ச்சிப் பணிகள் என்று சொல்லி பணத்தை இலங்கை அரசு சுரண்டி வருகிறது.

புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக இலங்கை அரசு மார் தட்டிக் கொண்டாலும் அடுத்து அது எதிர்கொள்ளப் போகும் பெரும் பெரும் ஆபத்துகளை இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இந்தத் திட்டங்களுக்காக அரசுக்கு நெருக்கமான குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்ட கையூட்டுகள் மட்டும் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்று சொல்லப் படுகிறது. வரப் போகும் ஆபத்தை உணராமல் தலையை ஆட்டியவாறு இருக்கிறதை எல்லாம் தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். 



இதைப் பற்றி கேள்வி கேட்டால் கேட்டவர்கள் அரசாங்கத்தின் எதிரிகள். இதில் தமிழர், சிங்களர் என்கிற வித்தியாசம் இல்லை.

1990-ஆம் ஆண்டுகளில் முன்னாள் அதிபர் பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில்தான் இனவாத அடக்குமுறைகள் தலைதெறிக்க கட்டவிழ்த்து விடப் பட்டன. இப்போதைய அதிபர் ராஜபக்‌சாவின் காலத்தில் நிலைமை மிக மிக  மோசமாகி விட்டது.

சுருக்கமாகச் சொன்னால், நெருக்குதல் கொடுப்பவர்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்.

அந்த நாட்டில் உள்ள அனைத்தும் அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டது. அரசாங்கம் ராஜபக்சாவிற்குக் கட்டுப்பட்டது. அதுதான் அங்கே இன்றைய மக்களாட்சிக் கொள்கை. ஈழத் தமிழர்களின் வீர வரலாற்றில் இன்றைய இலங்கையின் அரசியலும் ஒரு பகுதியே. நினைவில் கொள்வோம். சரி. பிராபகரன் வரலாற்றிற்கு வருவோம்.



வவுனியா காடுகளில் தமிழ்ப்புலிகளின் பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. நிதிப் பற்றாக்குறையே மூல காரணம். பிரபாகரனின் கையில் இருந்த பணம் எல்லாம் தீர்ந்து விட்டது. அதே சமயத்தில் போராளிகள் கொண்டு வந்த பணமும் முடிந்து விட்டது.

இனிமேல் போய் எங்கேயும் உழைத்துச் சம்பாதிக்க முடியாது. அதற்கு எல்லாம் நேரமும் இல்லை. காலமும் இல்லை. வெளியே போய் சம்பாதிக்க இடமும் இல்லை. ஆனால் போராட்டம் தொடர வேண்டும் என்றால் கண்டிப்பாகப் பணம் தேவை. என்ன செய்வது.

போராளிகளில் ஒருவர் சொல்கிறார். சிவக்குமரன் அண்ணா செஞ்சது மாதிரி ஒரு சிங்கள வங்கிக்குப் போய் கொள்ளை அடிக்கலாம்.

அந்தக் கருத்திற்கு முதலில் எதிர்ப்பு. பிரபாகரன்கூட மறுப்புத் தெரிவித்தார். இருந்தாலும் அந்த நேரத்தில் வடக்கு இலங்கைத் தமிழ் மக்களின் வரிப் பணம் எல்லாம் கீழே தெற்குப் பகுதியில் இருக்கும் சிங்களருக்குச் செலவு செய்யப் பட்டு வருகிறது எனும் ஓர் அதிருப்தி பரவலாக இருந்தது.

அதனால் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு சிங்கள வங்கியைக் கொள்ளை அடிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அரசாங்கத்திற்குத் தான் நட்டம். மக்களுக்கு இல்லை என முடிவு எடுத்தார்கள். பிரபாகரனும் சரி என்று சொன்னார். 



அதன் பின்னர் பல வங்கிகள் தேர்ந்து எடுக்கப் பட்டன. கண்காணிக்கப் பட்டன. கடைசியில் யாழ்ப்பாணம் புத்தூரில் உள்ள ஒரு வங்கி தேர்வு செய்யப் பட்டது.

1976 மார்ச் 5-ஆம் தேதி வங்கிக்குள் நுழைந்தார்கள். 5 இலட்சம் ரொக்கப் பணம்; 2 இலட்சம் மதிப்பு நகைகள் கைவசம்.

பணம் பத்திரமாகப் பதுக்கி வைக்கப் படுகிறது. ஆனாலும் பிரபாகரனுக்கு அந்த நிகழ்ச்சி மனதை ரொம்பவுமே உறுத்தி விட்டது. என்னதான் அரசாங்கப் பணம்; அடுத்தவன் பணம் என்றாலும் கொள்ளை அடித்தது தப்பு இல்லையா. வேதனைப் பட்டார். அவரை மற்றவர்கள் சமாதானம் செய்தனர்.

எடுத்த பணத்தில் ஒரு பகுதியை முத்துமாரி அம்மன் கோயிலின் அன்ன தானத்துக்குக் கொடுத்து விடலாம் என முடிவு செய்தார்கள். அதே போல ஒரு பகுதி நிதியைக் கோயிலுக்கு வழங்கினார்கள். எஞ்சிய பணம் உடை உணவு ஆயுதங்களுக்குச் செலவு செய்யப் பட்டது. 

வங்கி கொள்ளைக்குப் பின்னர் சிங்கள அரசு உஷாரானது. கூடவே பயமும் வந்து சேர்ந்து கொண்டது. சிங்களத்திற்கு எதிராக ஒரு பெரிய புரட்சிப்படை உருவாகி வருகிறது என்பதையும் அந்தச் சிங்களம் நன்றாகவே உணரத் தொடங்கியது.



அது அப்படியே இருக்கட்டும். இந்தப் பக்கம் வவுனியா காடுகளில் பிரபாகரனின் பயிற்சி தொடர்கிறது. போராளிகளும் புதிது புதிதாதக் கற்றுக் கொள்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில் பிரபாகரன் வேறு ஒரு திட்டத்தையும் கொண்டு வந்தார். இப்படியே பயிற்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு இருந்தால் பேர் போட முடியாது. நமக்கு என தனியாக ஓர் இராணுவம் வேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என பிரபாகரன் முடிவு செய்தார்.

அந்த முடிவின்படி 1976 மே 5-ஆம் தேதி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாக்கப் பட்டது. ஈழப்புலிகள் என பெயர் வைக்கலாம் என்று தான் முதலில் நினைத்தார்கள். ஆனால் பிரபாகரனுக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை.

அதற்கும் காரணம் இருந்தது. ஈழம் என்றால் இலங்கையைக் குறிக்கும் சொல். ஆக ஈழப்புலிகள் என்றால் இலங்கை நாட்டின் புலிகள் என பொருள்படும். ஈழப்புலிகள் வேண்டாம். தமிழருக்காக ஒரு நாடு வேண்டும். அதன் பெயர் தமிழீழ நாடு.



தமிழீழ நாட்டின் விடுதலைக்காகப் போராடுவதால் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கம் என பெயர் வைப்போம் என்கிறார் பிரபாகரன். அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படித்தான் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கம் தோன்றியது.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கான சின்னத்தையும் கொடியையும் வடிவமைக்க பிரபாகரன் தமிழகம் வந்தார். ராஜபாளயத்தைச் சேர்ந்த ஓவியர் ஒருவரைச் சந்தித்தார்.

பிரபாகரனின் எண்ணத்திற்கு ஏற்றவாறு வடிவம் கொடுத்து சின்னத்தையும் கொடியையும் அந்த ஓவியர் அமைத்துக் கொடுதார். அந்த ஓவியர் முள்ளிவாய்க்கால் இனப்பேரழிவுற்குப் பின்னர் மரணம் அடைந்தார் என்பதும் மற்றொரு கால்ச்சுவடு.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாகி விட்டது. அது ஒன்றும் சும்மா பெயருக்காகவும் புகழுக்காகவும் உருவாகி விடவில்லை. அந்த இயக்கத்தில் பற்பல கட்டுப்பாடுகள் இருந்தன. குறிப்பாக மதுப் பழக்கம். அடுத்து மாதுப் பழக்கம்.

1971-ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள இனத்தவரிடையே கிளர்ச்சி. சொல்லி இருக்கிறேன். அந்தக் கிளர்ச்சிக்கு முன்னணி வகித்தது ஜே.வி.பி. கட்சி. அந்தக் கட்சியில் மது மாது பழக்கத்திற்கு அடிமையாகிப் போன பலர் இருந்தார்கள். செக்ஸ் விசயத்தில் ரொம்பவே பலகீனங்கள் இருந்தன. அவைதான்  கிளர்ச்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் பற்றியும் பிரபாகரன் தெரிந்து வைத்து இருந்தார்.

ஆகவே அப்படிப்பட்ட இழிநிலைகள் இங்கே தமிழர் படையில் ஏற்படுவதைப் பிரபாகரன் விரும்பவில்லை. அதைப் பற்றி விவாதிக்க ஓர் அரசியல் ஆய்வுக் குழு உருவாக்கப் பட்டது. அந்தக் குழுவில் 1. செல்லக்கிளி; 2. ஐயர்; 3. நாகராஜன்; 4. விக்னேஸ்வரன்;  5. பிரபாகரன் என ஐந்து பேர் இருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிரந்தர இராணுவத் தளபதி;  நிரந்தரத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என ஏகமனதான முடிவு செய்யப் பட்டது. இப்படித் தான் பிரபாகரன் தமிழீழ மக்களின் தலைவரானார். உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். 



பாலஸ்தீனம், லெபனான், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், குர்டிஸ்தான் போன்ற நாடுகளின் தலைமறைவு இயக்கங்களிடம் இருந்து இராணுவ ஆயுதத் தளவாடங்களைப் பெற்றார்.

சீனா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டும் இலங்கைக்கு ஆயுத உதவி, பண உதவி செய்யவில்லை என்றால் தமிழீழம் எப்போதோ உருவாகி இருக்கும். இத்தனை இலட்சம் தமிழர்கள் மறைந்து போய் இருக்க மாட்டார்கள். காற்று வெளியில் கலந்து போன அந்த வீரத் திலகங்களுக்கு வீர வணக்கங்கள்.

(தொடரும்)

சான்றுகள்
1.http://www.srilankaguardian.org/2014/02/ramblings-in-search-of-tigers-foot.html

2.https://www.straitstimes.com/asia/south-asia/inside-chinas-us1-billion-port-in-sri-lanka-where-ships-dont-want-to-stop

3.https://en.wikipedia.org/wiki/Affiliates_to_the_Liberation_Tigers_of_Tamil_Eelam#State_affiliations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக