14 June 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 11

மனிதர்கள் அனைவரையும் வரலாறு படைக்கின்றது. ஆனால் அந்த வரலாற்றில் ஒரு சிலர் தான் வரலாறு படைக்கின்றார்கள். படைத்துச் சாதனையும் செய்கின்றார்கள். அப்படிப் பட்ட அபூர்வமான மனிதப் பிறவிகளில் ஒருவர் தான் பிரபாகரன் வேலுப்பிள்ளை. அந்தப் பாவனையில் பிரபாகரன் யுகம் எனும் ஒரு புது யுகம் விரைவில் தோன்றும். வாய்ப்புகள் உள்ளன.

யுகம் என்பது இந்துக்களின் காலக் கணிப்பு முறை. காலத்தை அளக்கும் அலகுகளில் கிருத யுகம்; திரேதா யுகம்; துவாபர யுகம்; கலியுகம் என நான்கு யுகங்கள். அந்த யுகங்களில் பிரபாகர யுகத்தைச் சேர்க்கவில்லை. அந்த யுகங்கள் வேறு. இந்த யுகம் வேறு. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாமே. யுகங்கள் தோன்றும். மறையும். அவை காலக் கணிப்பு முறைகள்.

பிரபாகரன் யுகம் என்பது தனி ஒரு காலச்சுவடு. அப்படி ஒரு தனி யுகம் தோன்றலாம். இது ஒரு கணிப்பு.

 

இன்னும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்குத் தமிழினத்தை அந்தப் பிரபாகர யுகம் தூக்கிச் சென்று நிறுத்தி வைத்துச் சிகரம் பார்க்கலாம். அதை அப்போதுதான் அப்போதைய தமிழினம் உணர்ந்து பார்க்கலாம். 

இன்றைய நிலையில் பார்த்தால் தமிழன் யார் என்பதை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரபாகரன். வேறு யாரும் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு நாட்டின் வரலாற்றை மட்டும் அல்ல. உலகின் பல பகுதிகளின் வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது ஈழப் போராட்டம். அந்தப் போராட்டத்தின் நாயகன் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

உலகத் தமிழினத்தின் எண்ணம்; அந்த இனத்தின் சொல்; அந்த இனத்தின் செயல் அனைத்தும் மாற்றம் அடைவதற்குத் தூண்டுகோலாக அமைந்தவர் பிரபாகரன்.
உலகத் தமிழர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டியவர். சோம்பிச் சுருங்கிக் கிடந்த ஓர் இனத்தைத் தட்டி எழுப்பியவர். அதோடு அதை நிறுத்திவிட முடியாது.

புலம் பெயர்ந்து சென்ற இடங்களில் மறைந்து மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து பேச வைத்தவர் இதே இந்தப் பிரபாகரன் தான். இவரை மறக்க முடியுமா. சொல்லுங்கள்.

பாலஸ்தீனம், லெபனான், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், குர்டிஸ்தான் போன்ற நாடுகளின் தலைமறைவு இயக்கங்களிடம் இருந்து இராணுவ ஆயுதத் தளவாடங்களைப் பிரபாகரன் பெற்றார் என்று சென்ற கட்டுரையில் சொல்லி இருந்தேன்.
சீனா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டும் இலங்கைக்கு ஆயுத உதவி, பண உதவி செய்யவில்லை என்றால் தமிழீழம் எப்போதோ உருவாகி இருக்கும். இலட்சக் கணக்கான தமிழர்கள் மறைந்து போய் இருக்க மாட்டார்கள் என்றும் சொல்லி இருந்தேன். அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

உலகின் இதர போராளிக் குழுக்களுடன் தமிழ் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புகள் இருந்தன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அல் காயிடா போன்ற இதர கும்பல்களுடனும் தமிழ் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புகள் இல்லவே இல்லை.

பர்மா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளின் தலைமறைவு இயக்கங்களுடன் தமிழ் விடுதலைப் புலிகளின் இரகசியப் பரிமாற்றங்கள் இருந்தன. உண்மை. ஆனால் அதைத் தப்பு தப்பாகச் சொல்லி அமெரிக்காவும் அதன் பிஸ்தா பிஸ்கட்டுகளும் பட்டயம் கட்டின. உலகப் பயங்கரவாதப் பட்டியலில் புலிகளைச் சேர்த்தும் வைத்தன. 
இந்தியாவும் பாகிஸ்தானும் அதே நீலாம்பரி ராகத்தைத் தான் வாசித்தன. அவர்கள் பாடினால் ஆனந்த பைரவிகள். புலிகள் பாடினால் காம்போதிகள். என்னங்க இது. அர்த்தம் இல்லாத ராக மாளிகைகள்.

ரஷ்யாவுக்கு எதிராக தலிபான்களை வளர்த்து விட்டதே அமெரிக்கா. அது தெரியுமா உங்களுக்கு. ஆளை விடுங்கோ சாமி என்று ரஷ்யா ஓடியதும் ஆப்கானிஸ்தானில் மஞ்சள் குளிக்கலாம் என்று ஆசைப் பட்டது அமெரிக்கா. இந்தப் பக்கம் பாகிஸ்தானை உசுப்பி விட்டதும் அமெரிக்கா தான்.

ஏன் என்றால் ரஷ்யாவும் இந்தியாவும் காலா காலத்துக் கூட்டாளிகள். அது அமெரிக்காவுக்குக் காலா காலத்துக்கும் பிடிக்காது. வேட்டு வைத்து வேடிக்கை பார்ப்பதில் அமெரிக்கா ஓர் அசத்தல் மன்மதக் குஞ்சு.

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுவது என்பது ஆயக் கலையில் அமெரிக்கா உருவாக்கிய அறுபத்து நான்காவது ஆயம்மா கலை. விடுங்க. வயிற்றெரிச்சலை இப்படியாவது கொட்டித் தீர்த்துக் கொள்கிறேன். சரி. நம்ப கதைக்கு வருவோம். 
இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை நல்லபடியாக நடத்தி இருந்தால் தமிழர்கள் ஏங்க துப்பாக்கியைத் தூக்க வேண்டும். சிங்களங்கள் ஏங்க சட்டையைக் காணோம் சிலுவாரைக் காணோம் என்று ஓட வேண்டும். புனிதமான புத்தரைக் கும்பிடுபவர்களுக்குப் புத்தி சரியாக இருந்து இருக்க வேண்டுமே. மன்னிக்கவும்.

இப்ப மட்டும் என்னவாம். சகோதர முஸ்லீம்கள் அங்கே பழி வாங்கப்பட வில்லையா. என்ன செய்வது. சிங்களப் புத்தி சிங்களாத் தான் போகுமாம்.

1970-ஆம் ஆண்டுகளில் தென் லெபனான் நாட்டில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் இணைந்து தமிழீழப் புலிகள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். அதைக் காரணம் காட்டி தமிழீழப் புலிகளைச் சிவப்புப் பட்டியலில் சேர்த்தார்கள். அதில் இருந்து புலிகளுக்கு ஆயுதப் பரிமாற்றத்தில் இடைஞ்சல்கள் ஏற்பட்டன. சரி.
வவுனியா காடுகளில் விடுதலைப் புலிகளின் முதல் பயிற்சி முகாம் அமைக்கப் பட்டது என்று சொன்னேன். அதைப் பற்றி மேலும் சில தகவல்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட அந்த அமைப்பில் பின்வரும் செயல்கள் தடைசெய்யப் பட்டன

1. மது அருந்தல்
2. புகைப்பிடித்தல்
3. பெண்களுடன் தொடர்பு
4. இயக்க இரகசியங்களை வெளிவிடுதல்.

இவை அனைத்தும் தடை செய்யப்பட்ட குற்றங்கள்.

அமைப்பில் சேரும் ஒருவர் சேர்ந்ததும் அவருடைய குடும்பத்துடன் உள்ள உறவை முறித்துக் கொள்ள வேண்டும். அதை விட முக்கியமானது. அமைப்பை விட்டு வெளியேறுபவர் புதிய இயக்கத்தைத் தோற்றுவிக்கக் கூடாது. 
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளையும் வரையறை செய்தார்கள். அதாவது

1. காட்டிக் கொடுக்கும் தமிழர்களை அகற்றுதல்
2. மத்திய அரசின் நிர்வாகத்தை முடக்குதல்
3. இலங்கைத் தமிழர்ப் பகுதிகளில் உள்ள இராணுவத்தை அகற்றுதல்

மறைந்து இருந்து தாக்கிவிட்டு ஓடி மறையும் கொரில்லா தாக்குதல் படையாக இருந்து படிப்படியாக ஓர் இராணுவமாக உருவாக வேண்டும். அதற்கு திட்டமிடல்கள் அவசியம் என முடிவு செய்தார்கள்.

இதற்கிடையில் தியாகி சிவக்குமரனைக் காட்டிக் கொடுத்தது நடராஜன் எனும் தமிழர்தான் எனத் தெரிய வருகிறது.

காட்டிக் கொடுப்பது குற்றம். அதுவும் தன் சொந்த இனத்தையே காட்டிக் கொடுப்பது மிகப் பெரியக் குற்றம். துரோகிகள் வாழத் தகுதியற்றவர்கள். அதுவே அவர்களின் தலையாய வெறுப்பு. 
பிரபாகரனின் கட்டளைக்கு இணங்க நடராஜன் அவரின் வீட்டிலேயே சுட்டுக் கொல்லப் பட்டார். அப்போதுதான் சிங்கள அரசு உச்சக் கட்டப் பயத்தை உணர்கின்றது. ஆழமான புலனாய்வுத் தகவல்களைத் திரட்டும் ஓர் அமைப்பு தங்களுக்கு எதிராக உருவாகி விட்டதை உணரத் தொடங்கியது.

இந்தச் சமயத்தில் உருவான ஈரோஸ் இயக்கம் எனும் தமிழர் இயக்கம் சற்று பிரபலம் அடைந்து வந்தது. அதன் தலைவர் இரத்தினசபாபதி. அப்போது அவர் லண்டனில் இருந்தார்.

அந்த ஈரோஸ் இயக்கம் விடுதலைப் புலிகள் அமைப்பைப் போலவே வவுனியா காடுகளில் ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இந்த இயக்கமும் சற்று பிரபலமாகி வந்தது. அதற்குக் காரணம் அதன் தோற்றுநரான இரத்தினசபாபதி. இவருக்குப் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு நெருக்கமான தொடர்புகள் இருந்தன.

அப்போதைய பாலஸ்தீனத்தின் லண்டன் தூதுவராக சைய்ட் முகம்மது என்பவர் இருந்தார். இவர் இரத்தினசபாபதியின் நெருங்கிய நண்பர். 
அந்த வகையில் ஈரோஸ் அமைப்பில் இருந்த சிலர் லெபனானுக்கு ஈரோஸ் அமைப்பின் மூலமாக நவீன போர்ப் பயிற்சிகளைப் பெற்றார்கள்.

அவர்களின் ஒருவர் அருளர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா பயிற்சி முகாமுக்குச் சென்று மாறுபட்ட பயிற்சிகளை வழங்கினார். அதோடு விடுதலைப்புலிகளில் சிலரை லெபனான் நாட்டுக்கும் அழைத்துச் சென்றார். பயிற்சி வழங்கினார்.

இந்தக் கட்டத்தில் உமா மகேஷ்வரன் என்னும் இளைஞர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.

பிரபாகரனை விட உமா மகேஷ்வரன் பத்து வயது மூத்தவர். நன்றாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழிகள் பேசத் தெரிந்தவர், அதனால் அவருக்குச் சற்று உயர்வான இடத்தைப் பிரபாகரன் வழங்கினார்.

இந்தச் சமயத்தில் யாழ்ப்பாணத்தின் குரலாக ஒலித்த அண்டன் பாலசிங்கத்தின் தொடர்பும் புலிகளுக்கு கிடைக்கிறது. அண்டன் பாலசிங்கம் ஒரு பத்திரிக்கையாளர். விடுதலைப் போரில் இறுதி வரை பணியாற்றியவர்,

யாழ்ப்பாணத்து மேயர் அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்ட காலக் கட்டத்திற்கு வருகிறோம். அல்பிரட் துரையப்பா கொலைக்குப் பின்னர் பிரபாகரனைப் போலீசார் வலைபோட்டுத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு நாள் யாழ்ப்பாணத்துப் போலீஸ் அதிகாரி பாஸ்தியம் பிள்ளைக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. மன்னார் காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் இருப்பதாகவும் அந்த குழுவில் பிரபாகரனும் மற்றும் அவருடைய நண்பர்கள் உமா மகேஸ்வரன், செல்லக்கிளி ஆகியோர் இருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது. 
இந்தப் பாஸ்தியம் பிள்ளை தான் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கீழறுப்பு வேலைகள் செய்து வந்தவர்.

இந்தச் சமயத்தில்
கனகரத்தினம் எனும் அரசியல்வாதியும் சிங்களர் பக்கம் சாய்ந்து விட்டார். இவரை எப்படியோ அவர்கள் விலைக்கு வாங்கி விட்டார்கள். இவர் யாழ்ப்பாணத்தில் பொத்து எனும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமிழர்கள் தான் ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்கள்.

இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்றாலும் சிங்களவர்களின் ஆசை வார்த்தைகளால் தடம் மாறிப் போனார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். சிங்களவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்.

இவருக்கு துரோகி எனும் முத்திரை குத்தப் பட்டது. இவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்கள். திட்டம் தீட்டப் படுகிறது.

உமா மகேஸ்வரன் கொழும்புக்குச் செல்கிறார். அங்கே கனகரத்தினத்தின் நடவடிக்கைகளை இரு வாரங்களுக்குக் கவனிக்கிறார்.

உமா மகேஸ்வரன் முழுமையாகத் தகவல்களைத் திரட்டியம் பிரபாகரனுக்கு அறிவிக்கிறார். பிரபாகரனும் கொழும்புக்குப் போகிறார்.

1978 ஜனவரி 26-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் இரயில் ஏறி மறுநாள் கொழும்புக் கோட்டையை வந்து அடைகிறார். இரயில் நிலையத்தில் உமா மகேஸ்வரன் பிரபாகரனுக்காகக் காத்து நிற்கிறார். பின்னர் கொழும்பு நகரில் உள்ள கொள்ளுப்பிட்டியா எனும் இடத்திற்கு இருவரும் செல்கிறார்கள். அங்கே தான் கனகரத்தினத்தின் வீடு இருந்தது.

காலை 9 மணிக்கு கனகரத்தினம் வெளியே வருவார் என்பது அவர்களின் கணிப்பு.. அதே போல கனகரத்தினமும் வெளியே வந்து காரை நோக்கி நடக்கிறார். அவருக்காக காத்திருந்த பிரபாகரன் சட்டென கனகரத்தினத்தை நோக்கி ஓடி சுடுகிறார்.

மூன்று குண்டுகள் கனகரத்தினத்தின் உடலைத் துளைக்கின்றன. கனகரத்தினம் தரையோடு சாய்கிறார். பிரபாகரன் ஒரு பக்கமாகத் தப்பிக்கிறார். உமாமகேஸ்வரன் வேறு ஒரு பக்கமாகத் தப்பிக்கிறார். அவர்களால் தப்பிக்க முடிந்ததா. நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

No comments:

Post a Comment