23 June 2019

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 1

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்; அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பாஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர் கூறி இருக்கிறார்.

அவரின் பெயர் சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். 22.06.2019-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் அவர் அவ்வாறு பேசினார்.

இந்த நாட்டின் இரண்டாவது மொழியாக மாண்டரின் மொழி உருவாகி வருவதைக் காண பிடித்தம் இல்லை. மலேசியக் கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மலர் 01.07.2019

இப்போதைய தாய்மொழிக் கல்வி முறை பலருக்கும் பிடிக்கவில்லை. அந்தக் கல்வி முறைக்கு கல்வியமைச்சர் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சலாமியா கூறி இருக்கிறார்.

மலேசியாவில் தேசிய மாதிரிப் பள்ளிகளில் சீன மொழியும் தமிழ் மொழியும் தொடக்க நிலைப் பயிற்று மொழியாக உள்ளன, சலாமியாவின் பேச்சு தேச நிந்தனைக்கு உரிய பேச்சு. தன்மூப்பான பேச்சு. அடாவடித் தனமான பேச்சு. இனங்களுக்கு இடையே கசப்பு உணர்வுகளைத் தூண்டிவிடும் பேச்சு. இதனால் அவர் மீது பரவலான ஊடகத் தாக்குதல்கள் நடை பெற்று வருகின்றன.

அப்படி பேசியதற்காக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப் படலாம். ஆனாலும் வழக்குத் தொடரப் படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. 
மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தின் 152-ஆவது பதிவில் (Article 152 Federal Constitution) சீனத் தமிழ் மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அது சட்டப் படியான அங்கீகாரம்.

ஆகவே சீனத் தமிழ் மொழிகளைப் பயன்படுத்த முடியாது அல்லது பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. சட்டப்படி உரிமை இல்லை.

 
மாண்புமிகு மார்க் கோடிங்
அப்படிச் சொன்னால் அது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில் மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தை அவமதிப்பது போலாகும். அது ஓர் அரச நிந்தனையாகும்.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யாமல் தமிழ் மொழியின் உரிமையில் தலையிட முடியாது. அரசியலமைப்புச் சாசனத்தில் தமிழ் மொழிக்கு என்று தனி உரிமை உண்டு. மறுபடியும் சொல்கிறேன்.

சீனத் தமிழ் மொழிகளின் உரிமையைப் பற்றிப் பேசுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் 152-ஆவது பதிவில், தாய்மொழி உரிமை பற்றி நன்றாகவே தெளிவாகவே சொல்லப் பட்டு இருக்கிறது. பத்திரிகை ஆசிரியர் மெலான் அப்துல்லா
மலாயாவில் தமிழர்கள் குடியேறிய காலத்தில் இருந்தே தமிழ் மொழியும் அவர்களுடன் இணைந்து வந்து இங்கே குடியேறியது. மெல்ல மெல்ல வேர்விட்டுப் பரவத் தொடங்கியது. ஆல விருச்சகமாய் விழுதுகள் படர்ந்து வீர வசனங்கள் பேசியது.

கால வெள்ளத்தில் பற்பல ஒதுக்கல்கள்; பற்பல பதுக்கல்கள்; பற்பல புறம்போக்குச் செயல்பாடுகள். அவற்றில் எல்லாம் இருந்து தப்பித்துக் கரையேறி மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறது.

அதற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக அனுதினமும் போராட்டங்களைச் செய்தும் வருகிறது. அந்த மொழியைச் சார்ந்த இனத்தவரும் அதன் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இன்றுவரை போராடியும் வருகிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். அந்த வகையில் அவர்களுக்கு நாட்டின் வரலாறு நன்றி சொல்லக் கடமைப்பட்டு உள்ளது.

தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னாலே அது ஓர் அரச நிந்தனையாகும்.
சீனத் தமிழ்ப் பள்ளிகளை அழிக்க வேண்டும் என்று சொன்ன உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் ஆசிரியர் மெலான் அப்துல்லா மீது 1971-ஆம் ஆண்டு வழக்கு தொடரப் பட்டது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப் பட்டது. இது பலருக்கும் தெரியாத செய்தி.

(In the case *Melan bin Abdullah & Anor v. P.P. ([1971] 2 MLJ 280)*, Utusan Malaysia was found guilty of sedition for an editorial titled *Hapuskan Sekolah Beraliran Tamil atau China di-Negeri ini* (Abolish Tamil and Chinese medium schools in the country.)
1978-ஆம் ஆண்டு மார்க் கோடிங் (Mark Koding) என்கிற சபா நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னதற்காக மாட்டிக் கொண்டார். (11 October 1978). அப்போது உசேன் ஓன் பிரதமராக இருந்தார்.

(On October 11, 1978, the MP urged the government to close down Chinese and Tamil primary schools in the Parliament.)


நாடாளுமன்றத்தில் பேசும் போது அதன் உறுப்பினர்களுக்குச் சட்ட விலக்களிப்பு (immunity) உள்ளது. இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு நீதிமன்றத்திற்கு இழுக்கப் பட்டார். (Public Prosecutor v Mark Koding ([1983] 1 MLJ 111)); (s 4(1)(b) of the Sedition Act 1948 (Revised 1969); (Section 3(1)(f) in the Sedition Act 1948); கீழ் குற்றம் சாட்டப் பட்டார்.

(Under Article 63 (4), the immunity of parliamentarians are not applicable to matters related to the status and special privileges of Bahasa Malaysia and bumiputra as well as challenging the constitutional position of the Yang di-Pertuan Agong.)

1982-இல் மார்க் கோடிங் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. மார்க் கோடிங் ஈராண்டு நன்னடத்தை ஜாமீனில் தற்காலிக விடுதலை பெற்றார். இவர் 52-ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார்.
(Malaysian education system is based on the Razak Report which was incorporated into Section 3 of the Education Ordinance of 1957, allows the retention of Chinese and Tamil medium schools)

*Act 550, Education Act 1996* allows the existence of 'national-type' schools. The Chinese and Tamil medium schools are allowed to use their respective mother tongues as a mode of communication, provided that English and Bahasa Malaysia are compulsory subjects.

*The Sedition Act (1971)* does not allow anyone to propose the closure of Chinese or Tamil primary schools, just as one cannot question the special provision for Malays and natives in Sabah and Sarawak in Article 153.
ஆக இந்த நாட்டில் வாழும் தமிழர்களே தமிழ்ப் பள்ளிகள் வேண்டாம் என்று சொன்னாலும் அது நடக்காத காரியம். நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப் பட வேண்டும். அந்தச் சட்டத்தை மேலவை ஏற்க வேண்டும். இன்னும் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் இருக்கின்றன.

பாஸ் கட்சி பிரமுகர் சொன்னது போல இது ஒன்றும் டோடோல் கிண்டும் சமாசாரம் இல்லை. மலேசிய அரசியலமைப்பை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மலேசிய அரசியலமைப்பை அவமதிப்பது தேச நிந்தனையாகும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

1 comment:

  1. தமிழ் மற்றும் சீன மொழிப் பள்ளிகள்?

    ReplyDelete