தமிழ் மலர் - 03.08.2018
தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் அந்தத் தமிழனுக்குச் சொந்தமாக ஒரு நாடும் இல்லை.
அதுவே தமிழர்களுக்கு வரலாறு எழுதிக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். தமிழ் நாடு இருக்கிறதே என்று கை நீட்டிக் காட்டலாம். ஏன் காட்ட வேண்டும்? எதற்குக் காட்ட வேண்டும்?
அப்போது அந்தக் காலத்தில் உலகத்தின் கால்வாசியைத் தமிழர்கள் கட்டி ஆண்டார்கள். உண்மை தான். இல்லை என்று சொல்லவில்லை. அதைப் பற்றி அந்தர்ப்புரங்களில் கதை கதையாகப் பேசினார்கள்.
வந்தாரை வாழ வைக்கும் வம்சம் என்று சொல்லி வாய் வலிக்கப் புகழ்மாலை சூட்டினார்கள். கைகள் கழன்று விழும் அளவிற்கு வண்டி வண்டியாய்க் கவிதைகள் எழுதிக் குவித்தார்கள்.
பாடியவர்களுக்கும் சரி; புகழ்ந்தவர்களுக்கும் சரி; குடம் குடமாய்ப் பரிசுகளைக் கொட்டிக் கொடுத்தார்கள். அது எல்லாம் அப்போதைய கதைகள். ஆறிப் போன பழைய கஞ்சிக் கதைகள். இப்போது எல்லாம் அப்படிப் பாடினால் சோற்றுக்கு சுண்ணாம்பு கிடைக்காது.
அதே அந்தத் தமிழ் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி நிற்கிறார்கள். பல நாடுகளில் தமிழை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழை மறந்து கொண்டு வருகிறார்கள்.
தமிழ் மறக்கப்படும் நாடுகளில் ஒன்றுதான் பிஜி தீவு. பசிபிக் மாக்கடலில் பல்லவி பாடும் ஒரு பச்சைத் தீவு. அந்தத் தீவில் வாழ்ந்த தமிழர்களின் கதை இருக்கிறதே அது காலத்தால் அழிக்க முடியாத ஒரு கண்ணீர்க் கதை.
காலனித்துவ ஆட்சியில் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட தமிழர்கள் கசக்கிப் பிழியப் பட்டார்கள். அதையும் தாண்டிய நிலையில் பிஜி நாட்டுத் தமிழர்கள் துவைத்துக் காயப் போடப் பட்டார்கள்.
மலாயா தமிழர்களின் நிலை பரவாயில்லை. ஒப்பந்தம் முடிந்ததும் ஐலசா பாடிக் கொண்டே ரசுலா கப்பலில் ஏறி இந்தியாவிற்கே போக முடிந்தது.
அந்த வாயில்லப் பூச்சிகளின் வாரிசுகள் தான் இப்போது அங்கே தங்களின் தாய்மொழிக்கு உயிர்ப் பிச்சை கேட்டுப் போராடிக் கொண்டு வருகிறார்கள்.
அவர்களைப் பற்றிய வரலாறு வருகிறது. படியுங்கள். அவர்களின் சோக வரலாற்றை அசைப் போட்டுப் பாருங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.
மலாயா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, நியூ கலிடோனியா, குயானா, சூரினாம் போன்ற நாடுகளுக்கு ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்களால் தமிழர்கள் அங்கே கொண்டு செல்லப் பட்டார்கள்.
அதைப் போலவே பிஜி தீவிற்கும் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு செல்லப் பட்டார்கள். அவை எல்லாம் தொலைதூர நாடுகள். கண் காணா தேசங்கள்.
அப்படிக் கொண்டு செல்லப் பட்டவர்களுக்குத் தமிழகத்திற்குத் திரும்பி வர முடியாத ஒரு நிலையும் ஏற்பட்டது. ஏன் என்றால் சில நாடுகளில் கப்பல் பயணங்கள் இல்லை. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஏறிச் செல்லும் கப்பல்களாக இருந்தன. வெள்ளைக் கறுப்புத் தோல்களின் இனவெறி இதிகாசங்கள் கப்பலோடு பயணித்துக் கொண்டு இருந்த காலக் கட்டம்.
சும்மா ஒன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதாயம் இல்லாமல் ஆங்கிலேயர்கள் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்கள். அது உலகம் அறிந்த மகா பெரிய ஆங்கிலேயத் தத்துவம்.
கொண்டு போகிற இடத்திற்குக் கொண்டு போனார்கள். அங்கே தமிழர்களின் இரத்தம் பார்த்த வியர்வைத் திவளைகளை நன்றாகவே உறிஞ்சினார்கள். மன்னிக்கவும் சப்பி எடுத்தார்கள் எடுத்தார்கள் என்று சொன்னால் தான் எனக்கு நிம்மதி. ஆக எடுத்து முடிஞ்சதும் வெறும் எலும்புக்கூட்டு உயிர்ச் சக்கைகளை மட்டும் கப்பலில் ஏற்றி ’பை பை’ காட்டி அனுப்பி வைத்தார்கள்.
ஆனால் பிஜி தீவு தமிழர்களுக்குத் தமிழகத்திற்குத் திரும்பி வரவே முடியாத நிலை. தொலை தூரத்தில் இருந்ததால் தமிழ் மக்களோடு அறவே தொடர்புகள் இல்லாமல் போயின. பிஜி நாட்டு மொழியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை. அதனால் தமிழில் அதிகம் பேச வாய்ப்பு இல்லாமல் போனது.
தவிர தங்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைப் போதிக்க தமிழ் நாட்டில் இருந்து ஆசிரியர்களைப் பிஜி நாட்டிற்கு அழைத்து வரவும் முடியாத நிலை. அதனால் தான் பிஜி தீவு தமிழர்களுக்குத் தமிழை முறையாகப் படிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் கிழக்குத் திசையில் தென் பசிபிக் பெருங்கடலில் பிஜி தீவு இருக்கிறது. பிஜி தீவு என்று சொல்வதைவிட பிஜி தீவுகள் என்று சொல்வதே சரியாகும். இருந்தாலும் பிஜி தீவு என்று சொல்லிப் பழக்கமாகி விட்டது. பிஜி தீவைச் சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட குட்டிக் குட்டித் தீவுகள் சிதறிக் கிடக்கின்றன.
அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து தான் பிஜி தீவுகள் என்று அழைக்கிறார்கள். எல்லா தீவுகளின் ஒட்டுமொத்தப் பரப்பளவு 7055 சதுர மைல்கள். பிஜி தீவின் தலைநகரம் சுவா. 1970-ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. சரி. பழைய வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.
1874-ஆம் ஆண்டு பிஜித் தீவு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிஜித் தீவில் நிறைய கரும்புத் தோட்டங்கள். அந்தக் கரும்புத் தோட்டங்களுக்குத் தமிழகத்தில் இருந்து கங்காணி முறையில் ஆள் பிடித்துக் கொண்டு வந்தார்கள். தொடக்கக் காலத்தில் தமிழர்களின் இறக்குமதி குறைவாகத் தான் இருந்தது.
பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. 1879-ஆம் ஆண்டில் இருந்து 1916-ஆம் ஆண்டுக்கும் இடையில் 65,800 இந்தியத் தொழிலாளர்கள் பிஜி தீவிற்குக் கொண்டு வரப் பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் ஆகும்.
பிஜியில் தென் இந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கத்தை அமைத்தவர் ஸ்ரீ சாது குப்புசாமி. இவர் சென்னையில் இருந்து பிஜி சென்றவர். அவர் எழுதிய நாட்குறிப்புகளில் இருந்து சில அரிய தகவல்கள் கிடைத்தன. அவர் எழுதியதை நீங்களும் படித்துப் பாருங்கள்.
“ஐந்து வருட ஒப்பந்தத்தில் சி.எஸ்.ஆர் கம்பெனி வேலைக்கு நான் வந்த போது ஆண்களும் பெண்களுமாய் பல நூறு பேர் வந்து இருந்தார்கள். அந்தச் சமயத்தில் சி.எஸ்.ஆர் கம்பெனியில் கொலம்பர்கள் இருந்தார்கள். கொலம்பர்கள் என்றால் அதிகாரிகள். பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொலம்பர்கள் சொல்வதே அப்போதைக்கு சட்டம். மீறிப் பேசக் கூடாது. மீறிப் பேசவும் முடியாது. அவர் சொன்னால் மறுபேச்சு பேசாமல் செய்ய வேண்டும். மறுபேச்சு இல்லை”
கொலம்பர்களுக்குக் கீழ் இருந்து வேலை செய்யும் அதிகாரிகளைச் சர்தார் என்பார்கள். கொலம்பர்கள் வாயால் சொல்லும் வார்த்தைகளைச் சர்தார்கள் கையால் செய்து காட்ட வேண்டும். வேலையாட்கள் ஒவ்வொரு நாளும் இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று பற்பல திட்டங்களை வகுத்து வைத்து இருந்தார்கள். கொலம்பர்கள் சர்தார்களுக்கு கட்டளை போடுவார்கள். சர்தார்கள் வேலையாட்களிடம் எருமை மாட்டு வேலைகளை வாங்குவார்கள்.
சொன்ன மாதிரி வேலை செய்து முடிக்காதவர்களுக்கு அவ்வளவுதான். அந்த ஆளைப் பிடித்து கீழே தள்ளுவார்கள். தள்ளிய கையோடு அது ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி; அந்த ஆளின் மார்பு மேல் ஏறி கைகளால் குத்துவார்கள். உதைப்பார்கள். சம்பளக் கூலியைக் குறைப்பார்கள். வாயால் சொல்லத் தகாத அசிங்கமான வார்த்தைகளால் ஆண்களையும் பெண்களையும் திட்டித் தீர்ப்பார்கள்.
அது மட்டும் அல்ல. சில சமயங்களில் ஒழுங்காக வேலை செய்து முடிக்காதவர்களைப் பற்றி மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் போய்ச் சொல்லுவார்கள். உடனே அந்த வேலையாள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று எழுத்துப் பூர்வமான ஒரு சம்மன் வரும். பின்னர் அபராதம் விதிக்கப்படும். பிஜி தமிழர்கள் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்.
பிஜி தீவில் இருந்த கரும்புத் தோட்டங்களில் தமிழர்கள் செய்து வந்த வேலைகளின் பட்டியல்:
1. ஏர் உழுதல்
2. கரும்பு நடுதல்
3. புல்வெட்டுதல்
4. குழி வெட்டுதல்
5. கரும்பு வெட்டுதல்
6. கரும்புக்கு உப்பு எரு போடுதல்.
கரும்பு வயல்களில் வேலை செய்யும் போது தமிழர்கள் பெரும் பெரும் கொடுமைகளை எல்லாம் அனுபவித்து இருக்கிறார்கள். சர்தார்மார்களும் ஆங்கிலேயக் கொலம்பர்களும் தமிழர்களை மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் பதிலுக்குத் திருப்பி அடித்த தமிழர்களும் இருந்தார்கள்.
அப்படிப் பட்டவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்துக் கொண்டு போய் தண்டனை வாங்கிக் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பி வைப்பார்கள். குறைந்த படசம் மூன்று மாதச் சிறைத் தண்டனை. சிறையில் இருந்து வந்த பின்னர் கடுமையான வேலைகளைக் கொடுப்பார்கள். அப்படி சிறைக்குப் போனவர்களில் சிலர் மர்மமான முறையில் இறந்தும் போய் இருக்கிறார்கள்.
இதே கூத்து தான் இங்கே நம்ப இடத்திலும் நடக்கிறது. லாக்காபில் அடைக்கப் பட்டவர்களில் பலர் லாக்காபிலேயே இறந்து போன கதைகள் தான். கேட்டுப் புளித்துப் போன கதைகள். இந்த லாக்காப் ராமாயணத்தை அப்போதே அந்தக் காலத்திலேயெ ஆங்கிலேயர்கள் பசிபிக் பெருங்கடலிலேயே அரங்கேற்றம் செய்து விட்டார்கள்.
1917-ஆம் கொத்தடிமைக் குத்தகைச் சட்டம் ஒழிக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பிஜி தீவில் குடியேறுவதற்கு வாய்ப்பு வசதிகள் கிடைத்தன. அதன் பின்னர் தான் பிஜி தீவு தமிழர்களின் தொழிலாளர்களின் இரண்டாம் கட்டப் போராட்டம் தொடங்கியது.
பிஜித்தீவில் இருந்த அத்தனைக் கரும்புத் தோட்டங்களையும் சி.எஸ்.ஆர் என்கிற ஓர் ஆஸ்திரேலியா கம்பெனி வாங்கிக் கொண்டது. ஒவ்வொரு தமிழர் விவசாயிக்கும் பத்து ஏக்கர் நிலம் பத்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப் பட்டது. அதில் அவர் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளலாம்.
கொடுக்கப்பட்ட இடத்தில் ஒன்பது ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்ய வேண்டும். ஓர் ஏக்கர் நிலத்தில் சொந்தமாகப் பயிர் செய்து கொள்ளலாம். கரும்பு முற்றிய பிறகு அதனை வெட்டி வண்டியில் ஏற்றி அனுப்ப வேண்டும். அந்தக் கரும்புகளைக் கம்பெனியார் சர்க்கரை ஆலைக்குக் கொண்டு செல்வார்கள். கம்பெனியார் என்ன விலை சொல்கிறாரோ அந்த விலையில் தான் விவசாயிக்கு ஊதியம் கிடைக்கும்.
வெளி நாடுகளுக்குக் கப்பல்கள் மூலமாக ஏற்றுமதி செய்வார்கள். ஒரு டன் சர்க்கரையின் விலையில் 30% விவசாயிக்குச் சேரும். 70 விழுக்காடு சர்க்கரை கம்பெனிக்குச் சேரும்.
அப்போது தமிழர்களிடம் ஒரு பேச்சு வழக்கு இருந்தது. சி.எஸ்.ஆர். கம்பெனி ஆறு மாசம் கரும்பை அரைச்சுப் பிழியுது. ஆண்டு முழுசா தமிழங்கள அரைச்சுப் பிழியுறானுங்க என்பதே அந்தச் சொல் வழக்கு. சரி. நாளைய கட்டுரையில் பிஜி தமிழர்கள் நடத்திய லங்காதகனம் எனும் போராட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.
சான்றுகள்:
1. Raghuram, Parvati; Sahoo, Ajaya Kumar; Maharaj, Brij; Sangha, Dave (16 September 2008). "Tracing an Indian Diaspora: Contexts, Memories, Representations". SAGE Publications India.
2. Sivasupramaniam, V. "History of the Tamil Diaspora". International Conferences on Skanda-Murukan.
3. Navaneetham Pillay The most famous South African Tamil of our times". DailyMirror. 2013-08-31.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 12 லட்சம் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின் சுமார் 5 லட்சம் தமிழர்கள் ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தாய்நாடு திரும்பினார்கள். மிகுதி கிட்டத்தட்ட 7 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கை பெருந்தோட்ட பகுதிகளில் பெரும்பான்மையாகவும் ஏனைய பகுதிகளிலும் வாழ்கிறார்கள். ஏன் அவர்களை பற்றி ஒரு சிறு குறிப்பு கூட உங்கள் பதிவில் இல்லை?
பதிலளிநீக்குபிஜி நாட்டுத் தமிழர்களைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை... இலங்ககைத் தமிழர்கள் பற்றி இருபது முப்பது கட்டுரைகள் உள்ளன... படித்துப் பாருங்கள்...
பதிலளிநீக்குஉங்கள் கட்டுரை பிஜி தீவில் நம் தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி மிகத் தெளிவாக புரிந்து கொண்டேன்.
நீக்குஇப்போது விஜய் டிவியில் ஒரு சினிமா தயாரிக்க அதன் மொத்த செலவில் பாதியை பிஜி நிர்வாகம் தந்துவிடுவதாக நிறைய தமிழ் படங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
அந்தவகையில் பிஜித் தீவில் நமது தமிழர்கள் தமிழ் சொந்தங்கள் முன்னொரு காலத்தில் பட்ட கஷ்ட நஷ்டங்களை முன்னிறுத்தி சில காட்சிகளில் ஆவது அதை காட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சினிமா எடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.
அதற்கான தயாரிப்பாளரை தமிழகத்திலோ அல்லது பிஜித் தீவிலே தேடவேண்டிய முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறேன் நன்றி வணக்கம்