16 ஜூலை 2019

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் - 4

தமிழர்கள் உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற முயற்சிகள் செய்ய வேண்டும். தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற தீவிரமாக முனைப்பு காட்ட வேண்டும். அது தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் நியதி.



தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான், அடுத்ததாகத் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்லக் காணாமல் போகும்.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாமே. அதே போல மொழியை அழித்து விட்டு; இனம் என்கிற ஓர் அடையாளத்தை அந்த இனம் தக்க வைத்துக் கொள்ள முடியாது. முடியவே முடியாது. ஆக மொழியை இழந்தவர்கள் என்றைக்கும் ஓர் இனமாக கருதப் படுவது இல்லை.




அந்த வகையில் மொழியும் இனமும் எப்போதுமே ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

இந்த நாட்டில் தமிழ் மொழி மேலே எழுந்து வர முடியாமல் அப்படியே தடுக்கப் படுவதற்கு பற்பல திட்டங்கள் உருவாக்கப் பட்டன. அந்தத் திட்டங்களை அப்போது யார் கொண்டு வந்தார்கள்; இப்போது யார் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். 



தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியைக் கட்டி காக்கும் மரபை மட்டும் விட்டுக் கொடுக்கவில்லை.  

மலேசியாவில் கடந்த 203 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. அந்தக் கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டாங்கள். 






இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த மலாயா தமிழ்ப் பள்ளிகள் 1900-ஆம் ஆண்டுகளில் சில இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டி வந்தது.

1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர் ஜே. டிரைவர். அப்போது மலாயாவில் பல்வேறு தாய் மொழிக் கல்வி முறை இருப்பதை அவர் விரும்பவில்லை.

தமிழர், சீனர் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன. அதனால் அவர்களுக்கு என்று தனியாகப் பள்ளிகள் தேவை இல்லை என்கிற ஒரு கருத்தை வெளியிட்டார். 




இந்தக் கட்டத்தில் சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக டிரேச்சர் (W.H. Treacher) என்பவர் இருந்தார். இவர் தான் 1893-ஆம் ஆண்டு கிள்ளானில் இருக்கும் ஆங்கிலோ சைனீஸ் பள்ளியைத் தோற்றுவித்தவர்.

இவரும் தடாலடியாக ஒரு கட்டளை போட்டார். மலாய்ப் பள்ளிகளுக்கான கல்விச் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். அதைத் தவிர்த்து மற்றபடி மற்ற இனங்களின் தாய் மொழிக் கல்விச் செலவுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று கண்டிப்பாகச் சொன்னார். தமிழரினம் தடுமாறிப் போனது.

இருந்தாலும் இந்தக் கட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்க ஒரு சட்டம் உதவிக்கு வந்தது. ஆங்கிலேயர்கள் உருக்கிய சட்டமே அவர்களுக்கு எதிராகத் திசை திரும்பியது. 



Sir Treacher

மலாயா ஆங்கிலேய அரசால் அமல்படுத்தப்பட்ட ஒரு சட்டம் இருந்தது. 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour ordinance). இந்தச் சட்டம் தான் தக்க தருணத்தில் தமிழ்ப் பள்ளிகளின் ஆபத்து அவசரத்திற்கு உதவி செய்தது. 1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தை இயற்றி இருந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம்.

இந்த 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டத்தின் வழி மலாயாவில் இருந்த ஒவ்வொரு தோட்ட நிர்வாகமும் கண்டிப்பாகத்  தமிழ்ப் பள்ளிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டு இருந்தன.

ஒரு தோட்டத்தில் 7 வயதில் இருந்து 14 வயது வரையிலான பிள்ளைகள் 10 பேர் இருந்தால் போதும்; ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும் என்கிற சட்டம். அதனால் ஆங்கிலேய ஆளுநர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 




அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டில் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.

தொழிலாளர் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

அந்தத் தொழிலாளர் சட்டம் உதவிக்கு வந்ததால் 1925-ஆம் ஆண்டு வரை மலாயா நாட்டுத் தோட்டங்களில் 235 தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

தோட்டப் புறங்களில் தோட்ட நிர்வாகங்களே தமிழ்ப் பள்ளிகளை நிறுவின. பட்டணங்களில் தனியார் நபர்கள்; பொது இயக்கங்கள் ஆகியோர் தமிழ்ப் பள்ளிகளை நிறுவினார்கள். 




காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தத் தொழிலாளர்  சட்டத்தில் மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

1930-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆய்நர் (Inspectorate of Tamil School) ஒருவர் நியமிக்கப் பட்டார். ஜி.ஆர். பில்வர்  என்பவர் பொறுப்பு வகித்தார்.

1937-ஆம் ஆண்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேய அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்பு செயற்குழு ஒன்றை நிறுவியது.

இந்தச் செயற் குழுவின் பரிந்துரையின் கீழ் வருடத்திற்கு ஒரு மாணவருக்கு ஆறு டாலராக இருந்த நிதி ஒதுக்கீடு எட்டு டாலராக உயர்த்தப் பட்டது. அத்துடன் 1938-ஆம் ஆண்டு வரை 535 தமிழ்ப் பள்ளிகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டன. பெரிய ஒரு முன்னேற்றம்.




இப்படி வேகமாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி இரண்டாம் உலக போரினால் தடைப் பட்டது.

1942-ஆம் ஆண்டு ஜப்பானியரின் ஆட்சிக் காலத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

இதனிடையே 1951-ஆம் ஆண்டில் ஓக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. பர்னஸ் என்பவரின் தலைமையில் மலாயாவில் கல்வி ஆய்வு செய்யப் பட்டது. (Report of the Committee on Malay Education, Federation of Malaya).

அதன்படி ஓர் அறிக்கை வெளியிடப் பட்டது. அதன் பெயர் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டது. இதனைச் சீனச் சமூகமும் இந்தியச் சமூகமும் கடுமையாக எதிர்த்தன.




பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியச் சமூகத்தின் சார்பில் ஒரு கல்விக்குழு அமைக்கப் பட்டது.

அந்தக் குழுவில் ம.இ. கா. தலைவர் தேவாசர்; சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார், ஆதி நாகப்பன், தவத்திரு சுவாமி சத்தியானந்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்தக் கல்வி குழுவினர் பார்ன்ஸ் கல்வி அறிக்கைக்கு எதிராக இந்திய சமூகத்தின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பெர்னஸ் அறிக்கையில் இருக்கும் சிக்கல்களைக் களைய அப்போதைய கல்வி அமைச்சர் ரசாக் தலமையில் மேலும் ஒரு கல்வி குழு நியமிக்கப்பட்டது. அதுவே இப்போது பலராலும் அறியப்படும் ரசாக் திட்டம்.

இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் அழைக்கலாம். மலாயா சுதந்திரம் அடைந்த போது கல்வி அமைச்சராக இருந்தவர் துன் அப்துல் ரசாக். இவர்தான் மலாயா கல்விக் கொள்கைத் தயாரிப்புக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர். அவருடைய பெயரே அந்தக் கல்வி அறிக்கைக்கு வைக்கப் பட்டது.

மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது. 




1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது.

சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி; 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது.

ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். பென் பூ அறிக்கையைச் சீனர்களும் இந்தியர்களும் ஆதரித்தார்கள். அங்கே இணக்கப் பிணக்குகள் தோன்றின. அதைச் சரி கட்டவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.




சுருக்கமாகச் சொன்னால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம்.

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட்டன.

இதர ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாக இருந்து வருகிறது.


எல்லா பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.

ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது. தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக