16 ஜூலை 2019

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் - 5

1950-ஆம் ஆண்டுகளில் மலாயாவின் மனித வளத்தை நிறைவு செய்யக் கூடிய வகையில் ஒரு தேசியப் பாடத் திட்டம் அமைய வேண்டும் என்று மலாயா ஆங்கிலேய ஆட்சி விரும்பியது. 



அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம், சமூக முன்னேற்றம் போன்றவற்றின் மேம்பாட்டிற்கு உந்து சக்தியாக அந்தத் தேசியப் பாடத் திட்டம் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

தேசியப் பாடத் திட்டம் இப்படித்தான் அமைய வேண்டும் என்று 1950-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report) வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என்று பரிந்துரை செய்யபட்டது. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

அந்த வகையில் மலாயாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தேசியப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என்று முன்மொழியப் பட்டது. தேசியப் பள்ளிகள் மூலமாகத் தான் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்க்க முடியும் என்பது எழுதப்பட்ட சாசனமாக முன்நிலை படுத்தப்பட்டது. 




அதாவது சீன, தமிழ்மொழிப் பள்ளிகளை அகற்றிவிட்டு ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைப் போதனா மொழியாகக் கொண்ட தேசியப் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் எனும் இறுதி நோக்கத்தை பார்ன்ஸ் அறிக்கை பரிந்துரைத்தது.



பார்ன்ஸ் அறிக்கையின் பரிந்துரைகளில் முக்கியமாக எட்டு குறிப்புகள் உள்ளன.

1. மக்களின் ஒற்றுமைக்குத் தொடக்கநிலைப் பள்ளிகள் அடித்தளமாக அமைய வேண்டும்.

2. இந்த நாட்டில் தேசியப் பள்ளிகள் மட்டுமே இயங்க வேண்டும்.

3. மலாய் மொழி - தலையாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

4. ஆங்கில மொழி - இரண்டாவது பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

5. பள்ளிக்குப் போகும் வயது 6 லிருந்து 12 வயது வரையில் இருக்க வேண்டும்.

6. தொடக்க நிலைப்பள்ளி மாணவர்கள் ஆங்கில உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும்

7. இலவசமாகக் கல்வி வழங்கப்பட வேண்டும்

8. பள்ளிச் செலவுகளின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.




பார்ன்ஸ் அறிக்கையை மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். சீனர்களும் தமிழர்களும் ஆதரிக்கவில்லை. தங்களின் தாய்மொழிகளுக்குப் பாதகம் ஏற்படலாம் என்று தயங்கினார்கள்.

பார்ன்ஸ் அறிக்கைக்கு எதிராகச் சீனர்கள் பென் பூ அறிக்கையை (Fenn-Wu Report) தயாரித்தார்கள். சீன மொழியில் பாண்டியத்தியம் பெற்ற இருவர் பென் பூ அறிக்கையைத் தயாரிக்க நியமிக்கப் பட்டார்கள்.

1. டாக்டர் பென் (Dr W.P. Fenn). சீனா நாட்டின் அரசாங்க அதிகாரி.

2. டாக்டர் பூ தே யாவ் (Dr Wu Teh Yau). ஐ.நா. சபையின் கல்வி அதிகாரி.




பென் பூ அறிக்கையைத் தயாரித்த இந்த இரு கல்விமான்களின் பரிந்துரைகள்:

1. நாட்டின் கல்விக் கொள்கையில் சீன மொழி மூன்றாவது மொழியாக இயங்க வேண்டும்.

2. தேசிய மாதிரி சீனப் பள்ளிகள் தொடர்ந்து இயங்க வேண்டும்.

3. சீனப் பள்ளிகளின் கல்வி முறை மலாயா நாட்டைச் சார்ந்ததாக அமைய வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளையும் சம பங்காளிகளாகக் கொண்ட உண்மையான தேசியப் பள்ளியை அமைக்க பென் பூ அறிக்கை பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை அம்னோ ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த வகையில் அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.




இன்னும் ஒரு விசயம். இந்தப் பென் பூ அறிக்கை என்பது மலாயாவில் அப்போது வாழ்ந்த சீனர் சமூகம் தயாரித்த அறிக்கை ஆகும். இந்த அறிக்கை தயாரிக்கப்படும் போது சீனர்கள் தன்னிச்சையாகச் செயல் பட்டார்கள்.

அப்போது மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களின் கருத்துகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் வழங்கவில்லை. சீனர்களின் இனம்; சீனர்கள் மொழி என்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்கள்.

பென் பூ அறிக்கையைச் சற்று ஆழமாகக் கவனித்தீர்கள் என்றால் சீன மொழி தான் பிரதானமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழியைப் பற்றி எதுவும் சொல்லப் படவில்லை.

இந்தக் கட்டத்தில் தான் இந்தியத் தலைவர்களும் களம் இறங்கினார்கள். இருந்தாலும் அவர்கள் பென் பூ அறிக்கையைப் பற்றி பேசவில்லை. மாறாக பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதில் தரும் வகையில் தான் அறிக்கை தயாரித்தார்கள். 




அந்த வகையில் இந்தியச் சமூகத்தின் சார்பில் 1951-ஆம் ஆண்டு ஒரு கல்விக்குழு உருவாக்கப் பட்டது. அதற்கு 1951-மலாயா இந்தியர்களின் கல்விப் பரிந்துரை என்று பெயர்.

அந்தக் குழுவில் அப்போதைய ம.இ. கா. தலைவர் தேவாசர் (1951-1955); சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார், (டான் ஸ்ரீ) ஆதி நாகப்பன், தவத்திரு சுவாமி சத்யானந்தா (1950-இல் சுத்த சமாஜம் சேவை அமைப்பை தோற்றுவித்தவர்) ஆகியோர் இடம் பெற்று இருந்தார்கள்.

பார்ன்ஸ் கல்வி அறிக்கையில் இந்திய சமூகத்தினருக்குப் பாதகமாக இருந்த பரிந்துரைகளுக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவித்தார்கள். 




இந்தக் கட்டத்தில் எழுந்து நின்றார் ஒரு சீனக் கல்வியாளர் அவருடைய பெயர் லிம் லியான் கியோக் (Lim Lian Geok). மலேசியாவைச் சேர்ந்தவர். சமூக நீதிக்காவும் இனங்களின் ஒற்றுமைக்காகவும் போராடிய மனிதர்.

சீன மொழிக்குப் போராடினாலும்; அதே பார்வையில் தமிழ் மொழிக்காகவும் போராடி இருக்கிறார். இவர் ஒரு சீனர். இருந்தாலும் சீன மொழியுடன் தமிழ் மொழியின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து இருக்கிறார்.

சீன, தமிழ் மொழிப் பள்ளிகளை அரசாங்கம் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர் இந்த லிம் லியான் கியோக்.

அவர் நடத்திய அந்தப் போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது முக்கியம் இல்லை. ஆனால் போராட்டம் எனும் ஒன்றை அவர் நடத்தி இருக்கிறாரே என்பதுதான் முக்கியம். 




சீன, தமிழ் மொழிகள் மலேசியாவில் அதிகாரப் பூர்வமான மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று லிம் லியான் கியோக் உண்ணாவிரதம் இருந்தார். அதனால் 1961-ஆம் ஆண்டு அவருடைய ஆசிரியர் தொழில் பறிக்கப் பட்டது. அடுத்து அவருடைய மலேசியக் குடியுரிமையும் பறிக்கப் பட்டது.

லிம் லியான் கியோக் எனும் மனிதர் அவர் வாழ்ந்த நாட்டிலேயே நாடற்றவராக இறந்தும் போனார் என்பதுதான் வேதனையான விசயம்.

லிம் லியான் கியோக் இறந்து 34 ஆண்டுகள் ஆகி விட்டன. சென்ற 2011-ஆம் ஆண்டில் மலேசியாவில் உள்ள சீனர்களும், தமிழர்களும் ஒன்று கூடினார்கள். அவருக்கு 'இறப்பிற்குப் பின் குடியுரிமை' வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்கள். அது தொடர்பாக மலேசியப் பேரரசரிடம் பணிவான மகஜர்களையும் வழங்கினார்கள்.

சரி. இந்த லிம் லியான் கியோக் என்பவர் யார்? சுருக்கமாகச் சொல்கிறேன்.




லிம் லியான் கியோக் 1901 ஆகஸ்டு மாதம் 19-ஆம் தேதி சீனாவில் இருக்கும் பூஜியான் மாநிலத்தில் பிறந்தவர். ஏழ்மையான் குடும்பம். சொந்த முயற்சியால் சீனாவிலேயே கல்வி கற்றார். வரலாற்றுத் துறையில் பட்டம் வாங்கியவர். அவர் படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளராகவும் பணிபுரிந்தவர்.

1927-ஆம் ஆண்டில் ஜாவாவிற்குச் சென்றார். அங்கே ஆசிரியர் தொழில். பின்னர் 1935-ஆம் ஆண்டில் மலாயாவிற்கு வந்தார். கோலாலம்பூர் கன்பூசியஸ் பள்ளியில் ஆசிரியர் தொழில்.

மலாயா நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற போது கல்விச் சட்டங்கள் சீரமைப்பு செய்யப் பட்டன. அந்தச் சீரமைப்புகளில் சில பகுதிகள் சீன, தமிழ் மொழிகளுக்கு பின்னடைவுகளாக இருந்தன.

அதனால் கோலாலம்பூர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து தாய்மொழிக் கல்விக்கான உரிமைகளைப் பற்றி பேசத் தொடங்கினார் இந்த லிம் லியான் கியோக்.




பின்னர் 1955-ஆம் ஆண்டில் சீன, இந்திய இனங்களின் உரிமைகள் குறித்து பிரதமர் துங்குவுடன் ஒரு பேச்சு வார்த்தை நடந்தது. அந்தப் பேச்சு வார்த்தையின் பெயர் ‘மலாக்கா பேச்சு’.

அந்த நிகழ்ச்சியில்  மலேசியச் சீனர் அமைப்புகளுக்கு லிம் லியான் கியோக்  தலைமை தாங்கினார்.

பிறகு 1956-ஆம் ஆண்டில் ரசாக் அறிக்கை வெளிவந்த போதும்; 1961-ஆம் ஆண்டில் ரஹ்மான் அறிக்கை அமல் படுத்தப்பட்ட போதும்; தாய் மொழிகளின் கல்விக்கு நேர்ந்த பின்னடைவுகளைச் சரி செய்யச் சொல்லி வலியுறுத்தி வந்தார்.

1950-ஆம் ஆண்டுகளில் சீனப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் (United Chinese Schools Teachers’ Association) தலைவராக இருந்தார். 1951-ஆம் அண்டு பார்ன்ஸ் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சீன தமிழ்ப்பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. அதனை எதிர்த்து இவர் உண்ணாவிரதம் இருந்தார்.

1961-ஆம் ஆண்டில் அவருடைய ஆசிரியர்ப் பணி உரிமம் பறிக்கப் பட்டது. அது வரையிலும் அவர் ஆசிரியர் தொழில் செய்து வந்தார். பின்னர் ஒரு வாரம் கழித்து குடியுரிமையும் பறிக்கப் பட்டது.

இத்தனைக்கும் மலாயா நாட்டில் சீன இனம் மற்ற இனங்களோடு இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என விரும்பியவர். தன்னுடைய எதிர்ப்புகளைக் கூட சாத்வீகமான முறையில் முன் வைத்தவர்.

அவருடைய ஆசிரியர் தொழில் பறிக்கப் பட்டதும், அவருக்கு உதவிகள் செய்ய பலர் முன்வந்தனர். ஆனாலும் அவர் கோலாலம்பூரில் இருந்த ஒரு சீனர் தனியார்ப் பள்ளியில் ஆசிரியர் வேலை செய்தார். மிக எளிமையாக வாழ்ந்தார். 




1985-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி இதயம் பாதிக்கப் பட்டு இறந்து போனார். அவர் இறக்கும் வரை நாடற்றவராக வாழ்ந்தார். அப்போது அவருக்கு வயது 85.

மலேசியாவில் இதுவரை நடந்த இறுதி ஊர்வலங்களில் லிம் லியான் கியோக்கிற்குத் தான் ஆகப் பெரிய ஊர்வலம் நடைபெற்றது.

மலேசியச் சீனர்களின் ஆத்மா (The Soul of Malaysian Chinese) என்று சீனப்பள்ளி ஆசிரியர்கள் புகழாரம் செய்கின்றார்கள்.

அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட குடியுரிமை மீண்டும் அன்னாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஓர் இயக்கத்தை சீனர் சங்கங்கள் தொடங்கின. மலேசியாவில் உள்ள சீனர் சங்கங்கள் அந்த இயக்கத்திற்கு இன்றும் ஆதரவுகள் அளிக்கின்றன.

அதற்கு எதிராக பெர்க்காசா போர்க் கொடி உயர்த்தியது. ’லிம் லியான் கியோக்கிற்கு நீதி’ எனும் இயக்கம் தேச நிந்தனையானது என்று பெர்க்காசா கூறி வருகிறது.

அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்தும் உள்ளது. அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களின் குடியுரிமையைப் பறித்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளது.

ஒரு சில மனிதர்களின் போராட்டங்களினால் தாய் மொழிப் பள்ளிகள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கின்றன. இப்போதைக்கு ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கு அந்த மனிதர்களைப் பற்றி தெரிந்து இருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

(முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக