05 ஆகஸ்ட் 2019

சந்திரமலர் ஆனந்தவடிவேல் - 1

 சரித்திரம் படைத்த நீலாம்பரி

பார்த்தால் சுடுவேன் என்று பயம் காட்டிய மோடி மஸ்தான்களை மடக்கிப் போட்டவர். கஞ்சா கடத்தல்காரர்களைக் கழிசடைகள் என்று கசக்கிப் போட்டவர். குண்டர் கும்பல்களின் முகத் திரைகளைக் கிழித்துப் போட்டவர். விபாசாரத் தரகர்களின் அரசியல் செல்வாக்குகளை அறுத்துப் போட்டவர்.

இப்போது வீட்டைச் சுற்றிலும் குண்டு மல்லிகைகளை நட்டு வைத்து அழகு பார்க்கின்றார். பேரப் பிள்ளைகளுடன் ஓடி ஆடிக் கண்ணாம்பூச்சி விளையாடுகின்றார். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைக் கூட்டி வந்து டியூசன் சொல்லித் தருகின்றார். 




அவர்தான் சந்திரமலர்  ஆனந்தவடிவேல். மலேசியா பார்த்து ரசித்த ஒரு சந்திரதோயம். மன்னிக்கவும் ஓர் அக்கினிக்குஞ்சு.

மலேசியப் போலீஸ் துறை வரலாற்றில் துணை ஆணையர்ப் பதவியை (Assistant Commissioner of Police) வகித்த முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி. மலேசியப் போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் (Police College, Kuala Kubu Bharu) முதல் பெண் இயக்குநர். இண்டர்போல் (Interpol) அனைத்துலகப் போலீஸ் படையில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய முதல் மலேசியப் பெண்மணி. ஐ. நா. சபையில் உயர்ப் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய முதல் மலேசியப் பெண்மணி.  

போலீஸ் துறையின் அனைத்துலக மாநாடுகளில் மலேசியாவைப் பிரதிநிதித்த முதல் பெண்மணி. பினாங்கு ரகசியக் காவல் துறையில் விபாசார ஒழிப்புப் பிரிவின் தலைவர் பதவியில் (Anti-Vice Branch, Penang) முதல் பெண்மணி. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.




சகோதரி சந்திரமலர் இந்தக் கட்டுரையைப் படிப்பார் என்று தெரியும். முதலில் வாழ்த்துகள்  சொல்லி விடுகிறோம். வாழ்த்துகள் சகோதரி.

சந்திரமலர் ஆனந்தவடிவேல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1941-ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் பிறந்த சில நாட்களிலேயே அவருடைய பெற்றோர் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்தனர். மலேசியக் குடியுரிமையையும் பெற்றனர். ஜொகூர் மாநிலத்தின் குளுவாங் நகரில் சந்திரமலர் தன் தொடக்கக் கல்வியைப் பெற்றார்.

ஐந்து பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் சந்திரமலர் நான்காவது பெண் பிள்ளை. சந்திரமலரின் தகப்பனார் இரயில்வே அலுவலர். சின்ன வயதில் சந்திரமலர் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கினார். சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராகச் சேர்ந்தார்.




அந்தக் காலக் கட்டத்தில் பெண் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும், அதாவது ‘பார்ம் பைவ்’ முடித்ததும் ஆசிரியர்த் தொழிலுக்குள் ஐக்கியமாகிப் போவதற்கு அப்போதைய அப்பா அம்மாக்கள் ரொம்பவும் ஆசைப் பட்டார்கள். சமூகப் பெருமையாகவும் நினைத்தார்கள். சொந்த பந்தங்களைச் சும்மா சொல்லக் கூடாது. சுதி குறையாமல் நன்றாகவே தாளம் வாசித்தார்கள்.

அந்த வரிசையில் தாத்தா பாட்டிகளை மறக்கவே கூடாது. ஆசிரியர் தொழில்தான் நல்லது. புருசனுக்கும் பிள்ளைகளுக்கும் வற்றாமல் வடித்துக் கொண்டே இருக்கலாம் இல்லையா. நாலும் தெரிந்த நல்லையன்கள் மாதிரி வக்காளத்து வாங்கினார்கள். தப்பாக நினைக்க வேண்டாம்.

அப்போது காதில் பட்டது. அப்படியே எழுதுகிறேன். ஆக கிழித்தக் கோட்டைத் தாண்ட முடியாமல் பாவம் பெண்பிள்ளைகளும் சுவாமியே சரணம் என்று கறுப்பு வேட்டி கட்டாத குறைதான். இது முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஊர்வலம் போன உண்மைகள். 




ஆசிரியர் தொழில் என்று சொல்லும் போது இருபது ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெண்கள் ஆதிக்கம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இப்போதைக்குச் சொல்லவே வேண்டாம். ஆசிரியர் தொழிலில் பெண்களின் ஆதிக்கம் இமயத்தில் ஏணி வைத்துச் சிகரம் பார்க்கிறது. ஒன்னும் சொல்கிற மாதிரி இல்லை.

எல்லாமே சுடிதார்கள், புடவைகள் மயம். ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் ஆண்களுக்குப் பலம் குறைந்து வருகிறதே என்கிற ஆதங்கம். வயிற்றெரிச்சல் என்று சிலர் சொல்வது காதில் விழுகிறது. ஊர்வம்பு வேண்டாங்க. நம்ப சந்திரமலர் கதைக்கு வருவோமே.

சந்திரமலருக்கு ஆசிரியர் தொழில் சரிபட்டு வரவில்லை. போலீஸ் துறைக்கு எழுதிப் போட்டார். 1960-ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஈப்போவில் இரண்டு ஆண்டு காலம் பயிற்சி. குறி சுடுதல், தற்காப்புக் கலைப் பயிற்சிகள், கமாண்டோ பயிற்சிகள் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

இவர் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார். ஜூடோ இவருக்குப் பிடித்த தற்காப்புக் கலை. ஆண்களால் எதைச் செய்ய முடியுமோ அதைப் பெண்களாலும் செய்ய முடியும் என்பது சந்திரமலர் அடிக்கடி சொல்லும் தத்துவ வாசகங்கள்.




பின்னர் பினாங்கு மாநில போலீஸ் துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணியில் சேர்க்கப் பட்டார். தற்காப்புக் கலையான ஜூடோவில் சந்திரமலர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். அதனால் அவருக்குப் போலீஸ் துறையில் சீருடை அணியாத உளவுத் துறையில் பதவி. பெரும்பாலான பணிகள் உளவுத் துறையைச் சார்ந்தவை.

ஒரு முறை பினாங்கில் நடந்த நிகழ்ச்சி. போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் எட்டு கிலோ மீட்டர் வரை விரட்டிச் சென்றார். சந்து பொந்துகளில் எல்லாம் கடத்தல்காரன் வேக வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றான். கடைசியாக ஒரு சாலையின் சந்திப்பில் வசமாக மாட்டிக் கொண்டான்.

அவனோடு மல்லுக்கட்டும் போது தலைக் கவசத் தொப்பியால் சந்திரமலர் தாக்கப் பட்டு காயம் அடைந்தார். அதற்குள் மற்ற போலீஸ்கார்களும் வந்து விட்டார்கள். அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டார்.




இருந்தாலும் பாருங்கள். அவருடைய உயிருக்கே ஆபத்து வந்தும் கூட அவனைத் துப்பாக்கியால் சுடாமல் நிராயுதபாணியாகப் பிடித்து இருக்கிறார். அவர் நினைத்து இருந்தால் அப்போதே அவனைச் சுட்டுக் கொன்று இருக்கலாம். அதுவும் ஓர் அதிகாரியை அடித்து இருக்கிறான் என்றால் சும்மாவா... அம்புட்டுதான்.

’மவனே’ என்று மற்ற அதிகாரிகளும் பிச்சு பேன் பார்த்து இருப்பார்கள். ஆனால் சந்திரமலர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தன்னை அடித்தவனைத் திருப்பி அடிக்க வேண்டாம் என்று சொன்ன அவரின் மனித உணர்வுகளை நினைத்துப் பாருங்கள்.
 

னாவசியமாக ஓர் உயிர் பலியாகக் கூடாது. அது மனித உயிராக இருக்கலாம். இல்லை ஒரு நாலுகால் ஜீவனின் உயிராகவும் இருக்கலாம் என்பதில் சந்திரமலர் உறுதியாக இருந்தார். இன்னமும் இருக்கின்றார். அந்த மாதிரி  பல கேடிகளை அவர் சுடாமலேயே பிடித்து இருக்கிறார். காவல் துறை ஆவணங்கள் சொல்கின்றன.



ஓர் ஆண்டிற்குப் பின்னர் அவர் பினாங்கு ரகசிய போலீஸ் துறையில் விபாசார ஒழிப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டார். அனுதினமும் ரகசியக் கும்பல்களுடன் மோதிக் கொள்வது. அவர்களுடன் துப்பாக்கிச் சண்டைப் போடுவது. இவை எல்லாம் வாடிக்கைச் சமாசாரங்கள்.

அவருடைய குழுவில் 13 பேர் இருந்தனர். எட்டு ஆண்கள். ஐந்து பெண்கள். ஒரு நாளைக்கு பத்துப் பதினைந்து விபசார விடுதிகள் அல்லது சூதாட்டக் கூடங்களில் அதிரடி நடவடிக்கைகள். எல்லாருமே ஹோண்டா மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவார்கள். சும்மா சொல்லக் கூடாது. மாதத்திற்கு எப்படியும் 200 அதிரடி வேட்டைகள் நடக்குமாம்.

சில சமயங்களில் அவர் ஒரு விலைமாதைப் போல உடை அணிந்து, மற்ற ’அந்த’ப் பெண்களைப் போல இயல்பாகவே நடித்து துப்பு துலக்கியதும் உண்டு.

சூதாடிகளுடன் ஒன்றுக்குள் ஒன்றாகிப் போவார். சரோசா தேவி மாதிரி சிரித்து சிணுங்கி ரகளைப் பண்ணிக் கொண்டு இருப்பாராம். அவருடைய அதிகாரிகள் சொல்கின்றார்கள். 




ஒரு கட்டத்தில் தங்களுடன் சூதாடிக் கொண்டு இருப்பவர் ஒரு போலீஸ் அதிகாரி என மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். அவ்வளவுதான். மேசைகள் குப்புறக் கவிழும். நாற்காலிகள் ஆகாசத்தில் பறக்கும். கலர் கலராய்ப் பணம் காற்றில் பறக்கும். சீட்டுக் கட்டுகள் சிதறிப் போகும். விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் எல்லோருக்கும் நாலே விநாடிகளில் நாலுகால் பாய்ச்சல் வந்துவிடும்.

அப்புறம் என்ன. அந்தச் சுனாமியில் மூக்குகள் உடையும். முட்டிகள் உடையும். உருப்படியாகப் பார்த்தால் எலும்பும் தோலும்தான் மிச்சமாக இருக்கும். தப்பித்துப் போவது என்பது எல்லாம் சும்மா பேச்சு. வெளியே சீருடை போடாமல் இருக்கும் மற்ற அதிகாரிகள் ’வாங்க மச்சான் வாங்க’ என்று சொல்லி கையில் வளையத்தோடு மரியாதை செய்வார்கள்.

சில சூதாடிகள் ஜன்னல் வழியாக எகிறிக் குதித்து 'Kelinga cha bor lai leow!' என்று சீன மொழியில் உரக்கக் கத்திக் கொண்டு ஓடுவார்களாம். 'இந்தியப் பெண் வந்து விட்டாள்’ என்று பொருள். பிடிபட்ட பின்னர் சிலர் தங்களை விட்டுவிடச் சொல்லிக் காசை நீட்டுவார்களாம். 




ஆனால் அன்பளிப்பு எனும் சொல்லுக்கே அங்கே அர்த்தம் இல்லை. அது சந்திரமலருக்குப் பிடிக்காத விஷயம். அரசாங்கத்திற்கு வேலை செய்கிறேன். அரசாங்கம் எனக்கு சம்பளம் கொடுக்கிறது. அது எனக்குப் போதும். காசை நீட்டினால் இன்னும் இரண்டு அறை கூடுதலாகக் கிடைக்கும் என்று சொல்கிறார் சந்திரமலர்.

ஒரு பெண்ணால் தண்டிக்கப் படுவதை எந்த ஓர் ஆணும் விரும்புவது இல்லை. ஆனால் ஓர் அதிகாரி ஊழல் இல்லாத சுத்தமான மனிதர் என்று தெரிந்ததும் குற்றவாளிகள் அவருக்கு மதிப்பையையும் மரியாதையையும் கொடுத்து புன்னகை செய்வார்கள் என்று சொல்கிறார் சந்திரமலர்.

போதைப் பொருளும் விபசாரமும் எப்போதுமே ஒன்றுவிட்ட சகலைபாடிகள். ஒன்றுக்குள் ஒன்று. ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. அதனால் விபாசார ஒழிப்பு நடவடிக்கைகளின் போது போதைப் பொருள் ஒழிப்பு அதிகாரிகளையும் சந்திரமலர் தன்னுடன் அழைத்துச் செல்வார்.

இளம்பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெண்கள் தங்கி இருக்கும் இடங்களில் போலீஸ் துறையினர் நுழைய முடியாது. ஆனால் போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் உள்ளே நுழையலாம். சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

அவ்வாறான நடவடிக்கைச் சமயங்களில் பெரும் அளவில் பணம் பறிமுதல் செய்யப் படும். பறிமுதல் செய்யப் படும் பணம் நேர்மையாகக் கையாளப் பட வேண்டும் என்றும் உறுதியாய் இருப்பார் சந்திரமலர். தன் அதிகாரிகளுக்கு அடிக்கடி எச்சரிக்கைகளையும் செய்து வருவார்.

(தொடரும்)

சான்றுகள்:

1. https://www.thestar.com.my/lifestyle/features/2010/03/07/a-legend-in-her-time/

2.https://tamizharmedia.com/2018/04/06/woman-of-steel-puan-chandramalar-a-remarkable-malaysia-tamil-lady-story/

3. https://www.worldofbuzz.com/4-amazing-women-malaysian-history-shouldnt-forgotten/


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
  
Mangala Gowri இவரைக் கண்டால் 'அந்த கெல்லிங் பெண் வந்து விட்டாள்' என்று சீன ரவுடிகள் ஓடுவார்களாம். சில வருடங்களுக்கு முன்பு சண்டே டைம்ஸில் இவரின் பேட்டியில் படித்த விஷயம்...
 
Muthukrishnan Ipoh உண்மைதாங்க... பினாங்கில் சீனர் குண்டர்களை விரட்டி விரட்டி... துவைத்து எடுத்து இருக்கிறார்... எஃகுப் பெண்மணி என்று பெயர் எடுத்தவர்...
 
Mangala Gowri Muthukrishnan Ipoh நமக்கெல்லாம் பெருமைதான் சார்

Mu Ta Neelavaanan Muthuvelu Mangala Gowri கெல்லிங் பெண் என்று சொல்லி இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்! "கெல்லிங் கூய்" என்று சொல்லி இருப்பார்கள் !
 
 
Muthukrishnan Ipoh 1994 as Assistant Director of Research and Planning in the Criminal Investigation Department of Bukit Aman with the rank of Assistant Commissioner of Police – the first non-Malay woman ever to attain this honour.
 
Vel Paandiyan Mangala Gowri உண்மை தான். பினாங்கில் சீனர் கும்பல்களின் ஆர்ப்பாட்டம். யாரும் எங்களைப் பிடிக்க முடியாது என்ற திமிர். ஒரு நாள் சீனர்க் கடையில் போதை மருந்து அளவுக்கு மீறி விற்பனையாகி கொண்டிருந்தது. சீனர்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார்கள்... எங்களை ஒன்னும் செய்ய முடியாது என்று...

செய்தி எட்டியது தகவல் நிலையத்துக்கு...

வந்தது வீரம் நம்ம இரும்பு பெண்மணிக்கு...

உடனே சாரியை எடுத்து தன் உடம்புக்கு மேலே சுற்றிக் கொண்டு போனார்கள்.. சாரியோட போனதும் சீனர்களுக்கு வர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. உடனே அந்தக் கும்பலில் இருந்து ஒருவன்.. LU sapa என்று கேட்டதும், உடனே சாரியைக் கழற்றி வீசி எறிந்து.. saya la. என்று சொல்லி... அத்தனைப் பேரும் கொஞ்ச நேரத்தில் பிடிபட்டனர். 
அப்பொழுது தான் சீனர் குண்டர் கும்பல்கள் அடங்கிப் போனார்கள். சாரியோட வந்த பெண்மணி சாதாரண பெண்மணி கிடையாது. அவர் ஒரு வீரப் பெண்மணி. பினாங்கில் அது Breaking News. இந்தப் பெண்மணியைக் கண்டால் அவன் அவன் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டானுங்க. தமிழச்சிக்கு ஒரு சபாஷ்... SALUTE
 
Muthukrishnan Ipoh சில சூதாடிகள் ஜன்னல் வழியாக எகிறிக் குதித்து 'Kelinga cha bor lai leow!' என்று சீன மொழியில் உரக்கக் கத்திக் கொண்டு ஓடுவார்களாம்...
 
Sri Kaali Karuppar Ubaasagar அண்ணா நீங்கள் இந்த அம்மாவைப் பற்றி சொன்னது உண்மை. இவருக்கு இன்னொரு பெயர் சந்திர மாலா என்று உண்டு தானே அண்ணா?
 
Muthukrishnan Ipoh உண்மை... சந்திர மாலா என பின்னர் நாட்களில் அழைத்து இருக்கிறார்கள்...
 
Sri Kaali Karuppar Ubaasagar Muthukrishnan Ipoh  மிக்க நன்றி அண்ணா🙏 அருவி போல் தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.      
  
Muthukrishnan Ipoh சில சமயங்களில் உணவகங்களுக்குக் குடும்பத்துடன் சந்திரமலர் போவார். அவர்கள் சாப்பிட்ட கட்டணத்தை யாராவது கட்டி விட்டுப் போய் இருப்பார்கள். யார் என்று கடை முதலாளியிடம் கேட்டால் அவரும் சொல்வது இல்லை. இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அவருடைய வாழ்க்கையில் நிறைய நடந்து வருகின்றன.
 
Don Samsa சிறப்பு தலைவரே.. அப்படியே முன்னால் ஈப்போ மாவட்ட காவல்துறை தலைவர் திரு,நடராஜன் அவர்களை பற்றி எழுதலாமே நீங்கள். நன்றி

Karunaharan Karuna நம் பெண்களின் சாதனை தொடரட்டும். வாழ்த்துக்கள் மா

 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக