10 செப்டம்பர் 2019

பாஸ் கட்சி பிரசாரத்தின் விளைவுகள்

மதங்கள் ஒருவரை ஒருவர்
புறக்கணிக்கக் கற்பிக்கவில்லை

வெறுக்கவும் கற்பிக்கவில்லை

பல்லின மக்களின் நல்லிணக்கத்தில் மெல்லினம் பேசிய நாடு. இன சமயப் புரிந்துணர்வுகளில் வல்லினம் பேசிய நாடு.

பல்லின ஒற்றுமையில் இடையினம் பேசிய நாடு. உலக ஐக்கியத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்து வரும் நாடு. பன்னெடும் காலமாகப் பார் புகழும் அழகிய நாடு. நம் மலேசிய நாடு. ஒரு புண்ணியமான நாடு. கை கூப்புகிறோம்.




அந்த ஐக்கியத்திற்கும் அந்த ஒற்றுமைக்கும் அந்த நல்லிணக்கத்திற்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலேசியர்கள் அனைவரின் ஒருமித்தக் கடமை. ஒருமித்தப் பொறுப்பு.

அண்மைய காலமாக ஓர் ஆரோக்கியமற்ற பிரசாரம். முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரசாரம். உண்மையிலேயே அது ஓர் ஆரோக்கியமற்ற பிரசாரம்.

இனத்தையும் சமயத்தையும் முன் வைத்து பொருட்களைப் புறக்கணிப்புச் செய்வது என்பது நல்ல செயல் அல்ல. அது ஒரு சரியான நிலைப்பாடும் அல்ல. 




முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிப்பது என்பது தவறான பிரசாரம். தவிர்க்க வேண்டிய பிரசாரம்.

அந்த மாதிரியான பிரசாரம் பல இன சமூக அமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தலாம். பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

அந்தப் பிரசாரத்தைப் பிரதமர் துன் மகாதீர் கண்டித்து இருக்கிறார்; நிதியமைச்சர் லிம் குவான் எங் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். துணைப் பிரதமர் வான் அசீஸா அவர்கள் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். பற்பல அமைப்புகளும் பல்வகையான வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றன.



தமிழ் மலர் - 10.09.2019

எனினும் பாஸ் கட்சி பின்வாங்கவில்லை. அதனை ஆதரித்துச் செயல்பட்டு வருகிறது. வருத்தம் அளிக்கும் செயல்பாடு.

இந்த ஆண்டு தேசிய தினத்தைக் கொண்டாடும் போது பலரிடம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மனச் சோர்வுகள் இருக்கவே செய்தன. அதற்குக் காரணம் அரசியல் பின்னணி கொண்ட குழுக்களால் தூண்டப்பட்ட பதற்றங்கள் தான்.

இனத்திற்கும் சமயத்திற்கும் சவால் விடுக்கப் படுகின்றன எனும் கருத்தை ஊக்குவிக்க அந்தக் குழுக்களால் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அதனால் ஏற்பட்ட பின்னடைவுகள்.




இருப்பினும் அரசியல் அதிகாரத்தின் இனச் சமன்பாடு மாறவில்லை. அந்த அதிகாரத்தின் நங்கூரத்திலும் மாற்றம் இல்லை. அனைவரும் அறிந்த விசயம். அதில் மாற்றுக் கருத்துகள் எவருக்கும் இல்லை.

இப்போதைய புதிய அரசாங்கத்தினர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. இருப்பினும் ஒரு வகையான அச்சத்துடன் தான் இன்னமும் பயணிக்கின்றனர். அனைத்து  மலேசியர்களுக்கும் பாதுகாவலராக இருக்கிறோம் என்பதை உறுதி படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர்.

எதிர்க் கட்சியில் இருப்பது எளிதான விசயம். ஆனால் மலேசியாவைப் போன்ற ஒரு பன்முக அரசாங்கத்தில் ஆளும் கட்சியாய்ப் பேர் போடுவது என்பது எளிதான விசயம் அல்ல. ரொம்பவும் கஷ்டம். இதை இன்றைய அமைச்சர்கள் இப்போது காலம் தாழ்ந்து உணரத் தொடங்கி உள்ளார்கள். மகிழ்ச்சி.




இருந்தாலும் அப்படி ஒன்றும் தலை போகிற நிலைமை ஏற்பட்டு விடவில்லை. மலேசியா ஒரு நடுத்தர வர்க்க நாடு.

பெரும்பாலான மக்கள் நடுநிலையானவர்கள். அதே சமயத்தில் அறிவார்ந்தவர்கள். விவேகமானவர்கள். என்னையும் உங்களையும் எல்லோரையும் சேர்த்துத் தான். சரி.

மக்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கான வசதிகள் குறையும் போது; அதாவது பண வசதிகள் குறையும் போது மக்களின் பொறுமையும் குறையத் தொடங்குகிறது. அங்கே ஒருவித பதற்றம்; ஒருவித நெருடல். சன்னமாய்த் துளிர் விடுகிறது.

அந்த மாதிரியான சமயங்களில் தான் அவர்களின் உணர்வுகளில் பலவிதமான சுரண்டல்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்த எளிதாகி விடுகிறது. இங்கே இருந்து தான் பாமர மக்களிடம் சில அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டுகளும் தொடங்குகின்றன. 



தமிழ் மலர் - 10.09.2019

உளவியல் அணுகுமுறைகளைச் சாமானிய மக்களிடம் இலகுவாகக் கொண்டு போய்ச் சேர்க்கவும் முடிகிறது. ஆங்கிலத்தில் ‘சைக்கலோஜிக்கல் அப்ரோஜ்’ என்று சொல்வார்கள்.

அந்த அணுகுமுறைகள் சமூக ஊடகங்களில் வழியாகவும் பெரிதாகி விடுகின்றன. அதனால் தான் நமக்கே தெரியாதவர்களிடம் இருந்து வரும் தவறான செய்திகளை நம்பி விடுகிறோம். தவறான கருத்துகளினால் ஈர்க்கப் படுக்கிறோம்.

அந்த அணுகுமுறைகளில் ஒன்றுதான் பாஸ் கட்சியின் அண்மைய பிரசாரம். முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரசாரம். 




ஒரு பிரசாரத்தைத் தொடங்கும் முன்னர் அந்தப் பிரசாரம் ஏற்படுத்தப் போகும் பின்விளைவுகளை நன்கு பரிசீலக்க வேண்டும். நன்மைகள் அதிகமா அல்லது தீமைகள் அதிகமா என்பதையும் கண்டு அறிய வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு பிரசாரத்தைத் தொடங்கிவிடக் கூடாது.

வணிகம் தொடர்பான பிரசாரத்தைத் தொடங்குபவர்கள் உலக வாணிகம் எப்படி செயல் படுகிறது என்பதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மலேசியப் பொருளாதாரம் அந்நிய நேரடி முதலீட்டைச் சார்ந்து உள்ளது. தவிர கணினி மென்பொருள் சார்ந்த தொழில்நுட்பத் துறையையும் சார்ந்து உள்ளது. 



Deputy Prime Minister Datuk Seri Dr Wan Azizah Wan Ismail
has called upon Malaysians to support the campaign to buy Malaysian products


நம் நாடு  உலகின் பல நாடுகளின் தொழில்நுட்பத் துறையை சார்ந்து உள்ளது. அதில் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், கொரியா, தைவான் போன்ற நாடுகளின் தயாரிப்புகளும் உள்ளடங்கும்.

உலகில் பல நாடுகள் ஹலால் பொருட்களைத் தயாரிக்கின்றன. அந்த வகையில் முஸ்லீம் நாடுகள் தயாரித்த பொருட்களை மட்டும் வாங்குங்கள் எனும் பிரசாரம் தொடருமானால் உள்நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களின் வியாபாரம் பாதிக்கப் படலாம்.

அவர்கள் தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைமையும் ஏற்படலாம். அதனால் தொழிலாளர்கள் பலர்  பணிநீக்கம் செய்யப் படலாம். இவற்றை எல்லாம் பாஸ் கட்சி கவனத்தில் கொண்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக அமைகின்றது.



PAS secretary-general Datuk Takiyuddin Hassan
defending the “buy Muslim products first”


மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முகமட் கவுஸ் நசுருதீன். அவரும் அந்நிய நேரடி முதலீட்டைத் தான் முதன்மைப் படுத்துகின்றார். பாஸ் கட்சி முன்னெடுக்கும் பிரசாரம் மிகவும் குறுகிய பார்வையில் அமைந்து உள்ளது என்கிறார்.

பாஸ் கட்சியின் இந்தப் பிரசாரம் அரசியல் பின்புலத்தைக் கொண்டது என்பதை நன்றாகவே உணர முடிகின்றது. பல்லினக் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாட்டிற்கு இப்படிப்பட்ட பிரசாரம் தேவை இல்லை என்பதே நம் கருத்து.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு பன்முகச் சமுதாயத்தில் பிரிவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

மதங்கள் ஒருவரை ஒருவர் புறக்கணிக்கக் கற்பிக்கவில்லை. அல்லது வெறுக்கவும் கற்பிக்கவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்துப் பழகுவதையே ஆதரிக்கின்றன.




ஒரே வார்த்தையில் சொன்னால்... முஸ்லீம் அல்லாதவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற அழைப்பு எந்த ஒரு தரப்பினருக்கும் பயன் அளிக்காது. தோல்வியில் தான் போய் முடியும்.

பாஸ் கட்சி முன்னெடுத்து இருக்கும் பூமிபுத்ரா அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கம் என்பது எந்தச் சூழ்நிலையையும் செம்மைப் படுத்த உதவாது. மாறாக மற்றவர்களின் கோபத்திற்குத் தான் உள்ளாகும்.

தீய எண்ணங்கள் கொண்டவர்களின் மூலமாக இந்த நாடும் இந்த நாட்டு மக்களும்  தோற்கடிக்கப் படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்படக் கூடாது.

இன்னும் ஒரு விசயம். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முஸ்லீம் அல்லாதவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கமாறு அழைப்பு விடுத்து உள்ளன.

அந்த வகையில் பார்த்தால் வெளிநாட்டு தயாரிப்புகளில் குறிப்பாக கைத் தொலைபேசிகளைப் புறக்கணிக்க வேண்டி வரும். மடிக் கணினிகளைப் புறக்கணிக்க வேண்டி வரும். தொலைக்காட்சிப் பெட்டிகளைப் புறக்கணிக்க வேண்டி வரும். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது பல விமானச் சேவைகளையும் புறக்கணிக்க வேண்டி வரும். 




இவற்றை எல்லாம் பாஸ் கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும். நினைவில் கொள்வார்களா?

நாட்டில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு நாம் முயற்சி செய்கிறோம். முயற்சிகள் பல செய்து வருகிறோம். அரசியல் லாபத்திற்காக பல்லினச் சமுதாயத்திற்குள் பிரிவினை ஏற்படுத்துவது நல்ல ஆரோக்கியமான செயலாக அமையாது. தீமையான விளைவுகளையே கொண்டு வரும்.

நாட்டின் நல்லிணத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஆரோக்கியமற்ற அந்தப் பிரசாரத்தைப் பாஸ் கட்சி கைவிட வேண்டும். அதுவே நம்முடைய எதிர்பார்ப்பு. அதுவே மலேசிய இந்தியர்களின் சார்பில் நம்முடைய தாழ்மையான வேண்டுகோள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக