17 டிசம்பர் 2019

ரியூனியன் தமிழர்கள் - 1

தமிழர்கள் வாழாத இடமும் இல்லை. வாழத் தெரியாமல் வாழ்கின்ற இடமும் இல்லை. ஆர்க்டிக் வட துருவத்தில் இக்ளு பனிக்கட்டிகளில் வாழ்கிறார்கள். அட்லாண்டிக் தென்துருவத்தில் ரோஸ் பனிக்கட்டிகளில் வாழ்கிறார்கள். அமேசான் காட்டுத் தலைவெட்டிக் கும்பல்களுடன் வாழ்கிறார்கள். அனாகொண்டா பாம்புகளுடன் கட்டிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் தமிழர்களும் இருக்கவே செய்கிறார்கள். 



உலகின் எந்த ஓர் இடத்திற்குச் சென்றாலும் அங்கே ஒரு தமிழர் கண்டிப்பாக இருக்கவே செய்வார். பாரதியாரைப் பற்றியும் பாரதிதாசனைப் பற்றியும் மணிக்கணக்கில் நாட்கணக்கில் பெருமைகள் பேசுவார். ஆனாலும் தமிழர்கள் என்று சொல்லிப் பெருமை கொள்ளும் அளவிற்கு அவர்களுக்குத் தனி ஒரு நாடு இல்லை.

இருப்பதைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இல்லாததைப் பற்றி வீரவசனம் பேசுவதே தமிழர்களின் தனிக்குணம். சுட்டுப் போட்டாலும் அவர்களை விட்டுப் போகாத பிறவிக் குணம். மன்னிக்கவும்.




தமிழர்கள் அவர்கள் வாழும் இடங்களில் தமிழ் மொழி பேசுகின்றார்களா; தமிழ் கலாசாரத்தோடு வாழ்கின்றார்களா; தமிழ்க் கலாசாரத்தைப் பின்பற்ற அவர்களுக்கு வசதிகள் இருக்கின்றனவா; அதுவே இப்போதைக்கு ஒரு பெரிய கேள்வி.

ஆனாலும் நம்மில் பலரும் அறியாத ஓர் அழகிய தீவில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். அதுதான் இன்றைய தகவல். கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியில் மொரிசியஸ் தீவிற்கு அருகே ரியூனியன் என்கிற தீவு இருக்கிறது. 




இங்கே தான் தமிழர்கள் இலட்சக் கணக்கில் இன்றைய வரைக்கும் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களைப் பற்றித் தான் இந்தக் கட்டுரைத் தொடரில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ரியூனியன் தீவு ஆப்பிரிக்கா கண்டத்திற்குக் கிழக்கே இந்தியப் பெருங்கடலில் உள்ளது. அருகில் மொரிசியஸ் தீவு.

ரியூனியன் தீவின் மொத்தப் பரப்பளவு 2500 சதுர கி.மீ. ஏறக்குறைய எட்டரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். அவர்களில் தமிழர்கள் 2 இலட்சம் பேர். 




1797-ஆம் ஆண்டில் இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகை 56,800. வருடத்தைக் கவனியுங்கள். அவர்களில் வெள்ளைக்காரர்கள் 10,400 பேர்; அடிமைகள் 44,800 பேர். அப்போது அங்கே இருந்த தமிழர்கள் அனைவருமே அடிமைகள். பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு போகப் பட்டவர்கள். 1848-ஆம் ஆண்டு வரை தமிழர்கள் அங்கே அடிமைகளாகவே வாழ்ந்தார்கள்.

1850-ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகை 1,10,891 பேர். 18-ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழர்கள் இந்தத் தீவில் குடியேறி வருகிறார்கள்.

2010-ஆம் ஆண்டு கணக்குப்படி ரீயூனியனின் மொத்த மக்கள் தொகை ஐந்தரை இலட்சம். இதில் இரண்டு லட்சம் பேர் தமிழர்கள். இந்தத் தீவு இன்றைய வரைக்கும் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 




180 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு அருகில் இருக்கும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நாட்டு காலனித்துவத்தின் கீழ் இருந்தது. அப்போது இந்த ரியூனியன் தீவில் இருந்த கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய பாண்டிச்சேரி தமிழர்கள் பலர் அழைத்து செல்லப் பட்டார்கள்.

அந்தத் தோட்டங்களில் அவர்கள் மிக மோசமாக அடிமைகளைப் போல நடத்தப் பட்டார்கள். பின்னர் காலத்தில் அவர்களுக்குப் பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை கிடைத்தது. மனிதத் தன்மையுடன் பார்க்கப் பட்டார்கள். மெல்ல மெல்ல அவர்களின் வாழ்வியல் நிலையும் உயர்ந்தது. இப்போது நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பெருமைப் படுவோம்.




ரியூனியன் தீவில் வாழும் தமிழ் மக்கள்; பிரெஞ்சு - தமிழ்க் கலாசாரக் கலவையுடன் வாழ்ந்து வருகிறார்கள். அண்மைய காலங்களில் தமிழர்களின் மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இருந்தாலும் தங்களால் இயன்ற வரை தமிழ் கலாசாரத்தைக் காப்பாற்றுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறார்கள்.

ரியூனியன் தீவு மடகாஸ்கர் தீவிற்கு வடக்கே 480 கி.மீ. தொலைவிலும் மொரிஷீயஸ் தீவிற்குத் தென் மேற்கே 200 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மொரிஷீயஸை விடக் கொஞ்சம் பெரியது. அதன் தலைநகரம் செயிண்ட் டெனிஸ். 




மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மாக்கடலில் ஒரு பெரிய எரிமலை வெடித்தது. அந்த எரிமலை கக்கிய குழம்பால் உருவானதுதான் இந்தத் தீவு. பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை மலைகள்; பச்சை ஆறுகள்; அருவிகள்; குளங்கள்; குட்டைகள்; இனம் மொழி தெரியாத தாவர இனங்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்தத் தீவு சொர்க்கத்தில் இருந்து கிள்ளிக் கொண்டு வரப்பட்ட ஓர் அழகுச் சொப்பனம்.

ரியூனியன் தீவு பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த ஓர் உறுப்பு நாடாக இயங்கி வருகிறது. அதாவது பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலோருக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை உள்ளது. பிரான்ஸ் நாட்டுத் தேர்தல்களில் வாக்கு அளிக்கிறார்கள்.




மாசில்லா மண்வளமும் தூசில்லா மழைவளமும் கொண்ட அழகிய தீவு. அதிகக் குளிரும் இல்லை. அதிக வெப்பமும் இல்லை. மிதமான தட்ப வெப்ப நிலை. சுற்றிலும் நீல நிறக் கடல். தீவிச் சுற்றிலும் மலைகள். பச்சைக் காடுகள். எப்போதுமே மூலிகைத் தாவரங்களின் மணம். ஆங்காங்கே தாதுப் பொருட்கள் கலந்த நீர் ஊற்றுகள்.

அந்தத் தீவை இயற்கை அன்னை அமைத்துக் கொடுத்த மூலிகைப் பூங்கா என்றும் தாராலமாகச் சொல்லலாம். அவ்வளவு மூலிகைப் பொருட்கள் மலிந்து கிடக்கின்றன. அதனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மூலிகை வைத்தியத்திற்கு இந்தத் தீவைத் தேடிச் செல்கிறார்கள்.

இந்தத் தீவு 1520-ஆம் ஆண்டு போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பிறகு ஆங்கிலேயர்களிடமும் பிரெஞ்சுக்காரர்களிடமும் மாறி மாறி வந்தது. ஆகக் கடைசியாக 1816-ஆம் ஆண்டில் இருந்து பிரெஞ்சுக்காரர்களிடம் நிரந்தரமாகவே வந்துவிட்டது. 




ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித் தமிழர்கள் இந்திய மாக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று இருக்கிறார்கள். அப்போது இந்தத் தீவைப் பார்த்து இருக்கலாம். தங்கி இருக்கலாம். இளைப்பாறி இருக்கலாம்.

ஆனாலும் தமிழர்களோ மற்ற மற்ற இந்தியர்களோ 17-ஆம் நூற்றாண்டு வரை இந்தத் தீவில் நிரந்தரமாகக் குடியேறவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்கார முதலாளிகள் இந்தத் தீவிற்கு வந்தார்கள். 




இந்தத் தீவைப் புனரமைக்க வேலையாட்கள் தேவைப் பட்டனர். ஆப்பிரிக்காவின் காப்பிரி இன மக்களையும் மடகாஸ்கர் தீவின் பழங்குடி மக்களையும் அடிமைகளாக கொண்டு வந்தார்கள். கரும்பு, சோளத் தோட்டங்களை உருவாக்கி அவற்றில் அவர்களைப் பணி செய்ய வைத்தார்கள்.

சர்க்கரை ஆலைகளைக் கட்டி அங்கேயும் வேலை வாங்கினார்கள். 1848-ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் அடிமை முறை ஒழிக்கப் பட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டி வந்தது. எதிர்பாராத இந்தத் தாக்கத்தினால் தீவின் பொருளாதார முதுகெலும்பே ஒடிந்து போனது. 

கரும்பு உற்பத்தியைப் பெருக்கிச் சர்க்கரை விற்பனையில் லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்த வெள்ளை முதலாளிகளை அடிமை ஒழிப்புச் சட்டம் திக்குமுக்காடச் செய்தது. அதனால் இந்தியாவின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற நகரங்களில் இருந்து தமிழர்களை ரியூனியன் தீவிற்கு ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் சென்றார்கள். 




ஆனால் 1828-ஆம் ஆண்டில் சிலர் இந்தியாவில் இருக்கும் கோவா பகுதியில் இருந்தும் அடிமைகளாக போய் இருக்கின்றனர். அதே ஆண்டில் ஆந்திராவில் இருந்தும் 15 பேர் போய் இருக்கின்றனர். இவர்கள் தான் ரியூனியனுக்குப் போன முதல் ஆந்திராக்காரர்கள்.

ஆக அந்த வகையில் பார்த்தால் 1848-ஆம் ஆண்டிற்கு முன்னர் அங்கு இருந்த இந்தியர்களின் எண்ணிக்கையே மொத்தம் 4200 பேர் தான். இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி; அவர்கள் அனைவரையும் தமிழர்கள் என்றே அழைத்தனர்.

அதற்குக் காரணம் இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தமிழ் ஒப்பந்தக் கூலியாட்களே எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தனர். அவர்களே கரும்புத் தோட்டங்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் அதிகமாக வேலை செய்தனர். முதலாளிகளின் வீடுகளில் சமையல்; எடுபிடி வேலைகளைச் செய்து வந்தனர். 




இது 1848-ஆம் ஆண்டிற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. எல்லா இடங்களிலும் தமிழர்களே இருந்ததால் புதிதாகப் போன இந்தியர்களையும் தமிழர்கள் என்றே அழைத்தார்கள். இப்படித்தான் ரியூனியன் தீவில் தமிழர்களின் வரலாறு தொடங்குகிறது. ரியூனியன் தமிழர்கள் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

 (தொடரும்)

 (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்:

 
1. Tabuteau, Jacques (1987). Histoire de la justice dans les Mascareignes (in French). Paris: Océan éditions. p. 13. ISBN 2-907064-00-2.

2. Beesoon, Sanjay; Funkhouser, Ellen; Kotea, Navaratnam; Spielman, Andrew; Robich, Rebecca M. "Chikungunya Fever, Mauritius, 2006". 14 (2): 337–338.

3. Bollée, Annegret (2015). "French on the Island of Bourbon (Réunion)". Journal of Language Contact. 8 (1): 91. doi:10.1163/19552629-00801005.

4. Réunion - The severe island - Official French website (in English)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக