31 மார்ச் 2020

கொரோனா வைரஸ்: இத்தாலியில் 61 மருத்துவர்கள் பலி

கொரோனா எனும் பெயரைக் கேட்டதும் சப்த நாடிகள் அடங்கிப் போகின்றன. சப்த சாகரங்கள் முடங்கிப் போகின்றன. அதைப் பார்த்து சப்த நதிகளும் கலங்கிப் போகின்றன. 



எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்கிற அச்சம் உலகத்தையே வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா தீநுண்மி உலக மக்களை கொத்துக் கொத்தாய்க் கொன்று குவிக்கின்றது. அதன் கோரப் பிடியில் இருந்து எப்படித் தான் மீளப் போகிறோம். எப்படித் தான் உயிர் வாழப் போகிறோம். ஒரு வழி தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆளாளுக்கு ஒரு கணக்கு சொல்கிறார்கள். ஆளாளுக்கு ஓர் ஆலோசனை சொல்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு மருந்து சொல்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு மருத்துவம் பேசுகிறார்கள். எதைக் கேட்பது; எதை நம்புவது; எதை வேண்டாம் என்று சொல்வது; ஒன்னுமே புரியல உலகத்திலே... 




கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துப் போகின்றது. உலகின் 200 நாடுகள்; இரண்டு கப்பல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 2 பில்லியன் மக்கள் வீடுகளிலேயே முடங்கிப் போய்க் கிடக்கின்றார்கள். 



உலகம் முழுவதும் 776,105 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 37,126 பேர் இறப்பு. மீண்டு வந்தவர்கள் 164,628 பேர்.

அவர்களில் முன்னணிச் சேவையாளர்களாகப் பணிபுரிந்தவர்களில் மருத்துவர்கள்; செவிலியர்கள்; மருத்துவ உதவியாளர்கள்; அவசரச் சிகிச்சையாளர்கள் முதன்மை வகிக்கின்றார்கள்.

இவர்களில் நூற்றுக் கணக்கானோர் இறந்து விட்டார்கள். தங்களின் உயிர்களைப் பணயம் வைத்து சேவை செய்தவர்கள். அந்த அர்ப்பணிப்பு ஹீரோக்களை நினைத்தால் மனம் விம்முகிறது.




இன்று 2020 மார்ச் 30-ஆம் தேதி, மாலை இரவு 10.25 கணக்குப்படி உலகளவில் இறந்து போன மருத்துவர்களில் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. 61 மருத்துவர்கள் இறந்து விட்டார்கள். இவர்களில் 40 மருத்துவர்கள் லொம்பார்டியில் (Lombardy) பணி புரிந்தவர்கள்.

சீனாவில் 17 பேர்; பிலிப்பைன்ஸில் 9 பேர்; இங்கிலாந்தில் 3 பேர்; இந்தியாவில் ஒருவர்; இறந்து போன மருத்துவர்களின் பட்டியல் நீள்கிறது. இதில் ஸ்பெயின் நாட்டில் 30 மருத்துவர்கள் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.

(https://edition.cnn.com/world/live-news/coronavirus-outbreak-03-30-20-intl-hnk/h_d385acb67991afbdcf4c87aed856f0e6)

கொரோனா நோயினால் இத்தாலியில் மட்டும் 101,739 பேர் பாதிப்பு. 11,591 பேர் இறப்பு. குணமடைந்தவர்கள் 14,620.    

இத்தாலி ஏன் இப்படி ஒரு பேரழிவிற்குப் போனது? கொரோனாவினால் இத்தாலி ஏன் இவ்வளவு மோசமாக பாதிக்கப் பட்டது. இதற்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. 




ஒரு சிலர் அது குளிர்கால வெப்ப நிலை என்று சொல்கிறார்கள். அந்த நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சிலர் சொல்கிறார்கள்.

காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனாலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இத்தாலியில் தான் நடந்து உள்ளன. 11,591 பேர் இறந்து விட்டார்கள்.

கொசுக்கள் மூலமாகத் தான் மலேரியா காய்ச்சல் பரவுகிறது என்று
சொன்னவர் இங்கிலாந்து மருத்துவ மேதை ரொனால்டு ரோஸ். நோபல் பரிசு பெற்ற மருத்துவ முன்னோடி. அவர் ஒரு முறை சொன்னார்.

பூமியில் கடைசி கொசு இருக்கிற வரையில் மலேரியா காய்ச்சலை ஒழித்துக் கட்ட முடியாது என்றார். அதற்காக நாம் கொசுக்களை காடு மேடு எல்லாம் தேடி அலைய முடியாது. நடக்கிற காரியம் இல்லை.

கொசுக்களின் அடர்த்தியைக் குறைத்தாலே போதும். மலேரியா என்ன. சிக்கன் குனியா, மட்டன் குனியா நோய்களையே கட்டுப்படுத்தி விடலாம்.

கொரோனா பிரச்சினையிலும் இதே மாதிரி ஒரு யோசனை. உடல் அளவில் தனித்து இருக்க வேண்டும்; சமூக அளவில் விலகி இருக்க வேண்டும். இந்த இரண்டும் போதும். இவை இரண்டுமே இப்போதைக்கு மனுக்குலத்தின் உயிர்நாடிகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.03.2020



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக