29 மார்ச் 2020

கொரோனா மருந்தைப் பரிசோதிக்க மலேசியா தேர்வு

கொரோனா கோவிட் -19 நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் (Remdesivir) எனும் மருந்து பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அந்த மருந்தின் செயல் திறன் குறித்துச் சோதனைகளை நடத்தும் நாடுகளில் ஒன்றாக மலேசியாவும் தேர்வு செய்யபட்டு உள்ளது. 



ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்வதற்கான உலகளாவிய மையங்களில் ஒன்றாக மலேசியா தேர்வு செய்யப் படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization) இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. பெருமைக்குரிய செய்தி.

பொதுவாகவே உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கைக்கு உரிய நாடுகளைத் தான் தேர்வு செய்யும். மலேசியாவின் சுகாதாரக் கட்டமைப்பில் மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Institute for Medical Research) உலகத் தரம் வாய்ந்தது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எம்.ஆர்) 1900-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், அதாவது பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேய ஏகாதிபத்தியங்கள் புதிய ஆராய்ச்சிக் கழகங்களை உருவாக்குவதற்கு காலனித்துவ நாடுகளைத் தேர்வு செய்தன.

அப்போது உருவானது தான் மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.


COVID-19 நோய்த் தொற்றுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க, ஐந்து வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன என்று மலேசியச் சுகாதார அமைச்சு அறிவித்து உள்ளது.


அந்த ஐந்து வகையான மருந்துகள்:

1. குளோரோ குயின் (Chloroquine),

2. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine),

3. பாவிபிராவிர் (Favipravir),

4. ரெம்டெசிவிர் (Remdesivir)

5. கலெத்ரா (Kaletra)
எனப்படும் லோபினாவிர் (Lopinavir),  ரிடோனாவிர் (Ritonavir) மருந்துகளின் கலவை.

இந்த மருந்துகள் ஏற்கனவே மற்ற மற்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இப்போது COVID-19-க்கு பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.




கொரோனா COVID-19 வைரஸுக்கு எதிராக ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்ய உலகில் பல நாடுகள் தேர்வு செய்யப் படுகின்றன.
மலேசியாவின் தரம் வாய்ந்த மருத்துவக் கட்டமைப்பு முதன்மைப் படுத்தப் பட்டது. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்து உள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் சில நாட்களுக்கு முன்பு இருந்தே ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்து வருகின்றன.

ரெம்டெசிவிர் என்பது ஒரு வைரஸ் தடுப்பு மருந்து. எபோலா (Ebola) வைரஸ் நோய் மற்றும் மார்பர்க் (Marburg) வைரஸ் தொற்று நோய்களைத் தடுத்து நிறுத்தும் மருந்தாக உருவாக்கப் பட்டது. 




அமெரிக்காவைச் சேர்ந்த கிலியாட் (Gilead Sciences) எனும் நிறுவனம் இந்த மருந்தை உருவாக்கியது.

1. சுவாச ஒத்திசைவு வைரஸ் (respiratory syncytial virus);

2. ஜூனின் வைரஸ் (Junin virus);

3. லாசா காய்ச்சல் வைரஸ் (Lassa fever virus);

4. நிபா வைரஸ் (Nipah virus);

5. ஹெந்திரா வைரஸ் (Hendra virus)

6. மெர்ஸ் (MERS); சார்ஸ் (SARS)


இந்த ரெம்டெசிவிர் மருந்து மேலே காணும் வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றலைக் காண்பித்து உள்ளது. அதனால் இப்போது கோவிட் 19-க்கு பயன்படுத்திப் பார்க்கிறார்கள்.





அமெரிக்கா வாஷிங்டனில் கொரோனா கோவிட் நோயாளிக்கு இந்த ரெம்டெசிவிர் மருந்தைச் செலுத்திப் பார்த்தார்கள். நம்பிக்கை அளிக்கும் முடிவு.

இப்போது சீனாவும் பெரிய அளவில் அந்த மருந்தைப் பரிசோதிக்கத் தொடங்கி விட்டது. ரெம்டெசிவிர் மருந்திற்கு GS-5734 எனும் அனைத்துலக ஆய்வுக் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. 




பல வகையான வைரஸ்களுக்கு எதிராக ரெம்டெசிவிர் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஆய்வகச் சோதனைகள் தெரிவிக்கின்றன.

2013 – 2016ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தாக்கிய போது இந்த ரெம்டெசிவிர் மருந்து பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த ரெம்டெசிவிர் தடுப்பு மருந்தைப் பற்றிய முழுக் கட்டுரையை விரைவில் பதிவு செய்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.03.2020

 

1 கருத்து: