07 ஏப்ரல் 2020

1919 ஸ்பானிஷ் வைரஸ் - 2020 கொரோனா வைரஸ்

தமிழ் மலர் - 07.04.2020

மனிதர்கள் தங்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும் வரையில், கொரோனா வைரஸ்களின் கொடுங்கோல் ஆட்சிகள் தொடர்ந்து போகலாம். அதில் மௌன ராகங்கள் காம்போதி ராகங்களாய் மாறிப் போகலாம். பந்துவராளி வார்க்கும் ராகமாலிகையில் சண்முகப்ரியா சிதைந்து போகலாம். ஆனந்த பைரவிகள் பார்க்கும் அம்சவர்த்தனிகள் அடையாளம் தெரியாமலேயே ஆழ்ந்தும் போகலாம்.




1919 - 2020. இந்த இரண்டு ஆண்டுகளின் எண்களைப் பாருங்கள். 1919-ஆம் ஆண்டில் 19 - 19 எனும் எண்கள் வருகின்றன. 2020-ஆம் ஆண்டில் 20 - 20 எனும் எண்கள் வருகின்றன.

அந்த 1919 - 2020 இரண்டு ஆண்டுகளிலும்; அந்த இரண்டு எண்களிலும் ஏதோ ஒரு மர்மமான ஒற்றுமை இருப்பதை உங்களால் ஊனர முடிகிறதா. கொஞ்சம் ஆழமாக உற்றுப் பாருங்கள். சற்று அச்சமாகவும் இருக்கலாம்.

1919 - 2020 ஆண்டுகளின் முதல் 2 எண்களும்; அதே ஆண்டுகளின் இரண்டாவது 2 எண்களும் பொருந்தி வருவது சாதாரண விசயம் அல்ல. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே அப்படி ஓர் அசாதாரண ஒற்றுமை நிகழும். அது ஓர் அதிசயமான நிகழ்ச்சியும்கூட.

அந்த வகையில் இந்த 2020-ஆம் ஆண்டில் நாம் உயிருடன் இருப்பதும் ஒரு சிறப்பு தான். இந்த மாதிரியான நிகழ்வு மறுபடியும் 2121-ஆம் ஆண்டில் தான் வரும். இன்னும் 101 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்.




இப்போது இருப்பவர்களில் அப்போது வர்ப்போகும் அந்த 2121-ஆம் ஆண்டில் வெகு சிலரே உயிர் வாழும் வாய்ப்புகள் உள்ளன. ஏன் என்றால் 2121-ஆம் ஆண்டு வரை வாழ வேண்டும் என்றால், அதற்கு குறைந்த பட்சம் 100 வயதைத் தாண்டி இருக்க வேண்டும்.

இந்த 1919 - 2020 இரண்டு ஆண்டுகளிலும், உலகம் புதுமையான வைரஸ்களால் தாக்கப்பட்டு உள்ளன. அது மட்டும் அல்ல. மிகவும் கொடூரமாகவும் பாதிக்கப்பட்டு விட்டன. முந்தைய 1919-ஆம் ஆண்டின் கொடுமையில் இருந்து மீண்டு வருவதற்குள் உலகம் ரொம்பவுமே சிரமப்பட்டு போனது. 




1919-ஆம் ஆண்டில் (19-19) ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish flu). உலகத்தையே ஆட்டிப் படைத்தது. 50 மில்லியன் மக்களைக் கொன்று போட்டது. 500 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துப் போட்டது. அப்போதைய பிரிட்டிஷ் மலாயாவில் 34,644 பேரைக் கூறு போட்டது.

தமிழ்நாட்டில் இருந்து வந்து மலாயா இரப்பர் தோட்டங்களில் வேலை செய்த 6000 தமிழர்களையும் விட்டு வைக்கவில்லை. அதிகமான தமிழர்கள் பேராக், கெடா, பினாங்கு மாநிலங்களில் காலமானார்கள். நிபோங் திபால், ஈப்போ வட்டாரங்களில் அதிகமான இழப்புகள்.

பத்து காஜாவில் கெல்லிஸ் காசல். கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது ஒரு மர்ம மாளிகை. அதைக் கட்டிக் கொண்டு இருந்த தமிழர்களில் ஏறக்குறைய 100 பேர் ஸ்பானிஷ் நோய்க்குப் பலியானார்கள். மலாயா தமிழர்களின் வரலாற்றில் அது ஒரு சோகமான காலச் சுவடு.




இப்போது 2020 ஆம் ஆண்டில் (20-20) கொரோனா வைரஸ் என்கிற மற்றொரு புதிய வைரஸ். உலகத்தைச் சீர்குலைத்து வருகிறது.

மனித வரலாற்றில் மாபெரும் போர்கள். மதிப்புகள் சொல்ல முடியாத மனித இழப்புகள். அவை அனைத்தும் கோடுகள் போட்டுச் சொல்ல முடியாத கொடுமையான இழப்புகள்.

போர்களினால் ஏற்பட்ட இழப்புகளைவிட கொடிய நோய்களினால் ஏற்பட்ட இழப்புகள் தான் அதிகம்.

மகா மோசமான பல தொற்று நோய்கள் உலக மக்களை ஆட்டிப் படைத்து வதைத்து விட்டன. அவற்றில் ஒன்று தான் அந்த ஸ்பானிய காய்ச்சல்.




(ஸ்பானிஷ் காய்ச்சலால் மறைந்து போன மலாயாத் தமிழர்களின் வரலாற்றை நாளைய கட்டுரையில் பதிவு செய்கிறேன்.)

1919-ஆம் ஆண்டில் H1N1 எனும் வைரஸ் உலகத்தை ஆட்டிப் படைத்தது. ஸ்பானிஷ் காய்ச்சல் வைரஸின் பெயர் தான் H1N1 வைரஸ்.

இந்த வைரஸ் எங்கே இருந்து தன் பயணத்தைத் தொடக்கியது என்று யாருக்கும் இதுவரையிலும் தெரியவில்லை. இருந்தாலும் சீனாவில் இருந்து தோனிகளில் சிங்கப்பூருக்கு வந்த சீனர்கள், H1N1 வைரஸ் கிருமிகளைக் கொண்டு வந்து இருக்கலாம் என்பது ஒரு சந்தேகம். உறுதிப்படுத்த முடியவில்லை.




ஸ்பெயின் நாட்டு அரசக் குடும்பத்தை அதிகம் பாதித்ததால் அதற்கு ஸ்பானிஷ் காய்ச்சல் என்று பெயர் வைக்கப்பட்டது.

அதே போல இப்போது 2020 கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி, நடுங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. உலகத்தில் உள்ள எல்லோருமே பயந்து கொண்டுதான் போகிறார்கள். வருகிறார்கள். இதில் இத்தாலியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ரொம்பவும் பாதிப்புகள்.

உலகத்திலேயே தரம் வாய்ந்த மருத்துவர்கள் இத்தாலியில் தான் இருக்கிறார்கள். வைரஸ் பற்றி ஆய்வுகள் செய்து நோபல் பரிசு பெற்ற மருத்துவர்களும் அங்கே தான் கோலோச்சினார்கள்.

இருந்தாலும் இத்தாலி மக்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இன்று வரையிலும் போராடுகிறார்கள். முடியவில்லை. தவிக்கிறார்கள். 




அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஈரான், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் ரொம்பவுமே பாதிக்கப்பட்டு விட்டன. இதில் சீனாவைச் சேர்க்கவில்லை.

ஏன் என்றால் கொரோனாவிற்கு வெண்சாமரம் பூசியதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். அதனால் அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில் அங்கே மௌன ராகங்கள்.

இன்றைய அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை  ஏறக்குறைய 1,274,000. இருந்தாலும் உலக நாடுகள் 20 விழுக்காட்டிற்கும் குறைவான அளவில் தான் உண்மையைச் சொல்கின்றன என்பது பரவலான ஓர் அதங்கம். அதுவும் ஒரு பெரிய அதிர்ச்சியான தகவல் தான்.

ஆளாளுக்கு ஒரு கணக்குப் போடுகிறார்கள். நாட்டுக்கு நாடு ஒரு கணக்குச் சொல்கிறார்கள். இதில் வட கொரியாவின் கணக்கை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று தெரியாமல், உலகச் சுகாதார நிறுவனமே வழி தெரியாமல்  விழி பிதுங்கி நிற்கிறது. ஏன் தெரியுங்களா. 




வட கொரியாவில் யாருக்குமே கொரோனா வரவில்லையாம். அந்த நாட்டின் அதிபர் யூடியூப்பில் ரீல் விட்டுக் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே ஏவுகனைகளை விட்டு பக்கத்து நாடான தென் கொரியாவின் கண்களில் இரத்தக் கண்ணீரை வரவழைத்து விட்டார்.

இப்போது யூடியூப்பில் இன்பமே இலவசம் எனும் தொலையாத வார்த்தைகளால் தோரணம் கட்டுகிறார். நல்லா இருக்கட்டும்.

2020 ஏப்ரல் 4-ஆம் தேதி பி.பி.சி. வெளியிட்டுள்ள செய்தி.

வட கொரியா நாட்டில் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. அங்கே கடுமையான கட்டுப்பாடுகள்; நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு உள்ளன என்று அந்த நாடு சொல்கிறது. ஆனால் அது சாத்தியமே இல்லாத சத்தியங்கள் என்று தென் கொரியா சொல்கிறது.




வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மோசமான பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் ஒருவருக்குக்கூட பாதிப்பு இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. வட கொரியாவில் உள்ள எலிகள் எல்லாம் சட்டை சிலுவார் போடாமல் தான் ஓடும் என்று சொல்வதைப் போல இருக்கிறது.

வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது. ஏன் என்றால் அந்த நாட்டின் எல்லைகள் சீனா; தென் கொரியா நாடுகளுடன் ஒட்டிப் போகின்றன. அது மட்டும் அல்ல. வட கொரியாவிற்குச் சீனாவுடன் நெருக்கமான வர்த்தகம்; நெருக்கமான பொருளாதார உறவுகள் உள்ளன. இந்த நிலையில் வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று சொல்வதில் நியாயமே இல்லை.

இருந்தாலும் எதிர்மறையாகப் பார்க்காமல் நேர்மறையாகப் பார்க்கலாமே.  முக்கியமாகச் சில விசயங்களைக் கவனிக்க வேண்டும்.

வட கொரியா முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. அதை நாம் மறுக்க முடியாது. 2020 ஜனவரி மாத இறுதியில் வட கொரியா தன் எல்லைகளை மூடி விட்டது. இது உலகத்திற்குத் தெரிந்த விசயம்.




பின்னர் ஆயிரக் கணக்கான வெளிநாட்டினர்; குறிப்பாக சீன நாட்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டார்கள். அந்தச் சமயத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது.

இது பலருக்கும் தெரியாத ஒரு தகவல். வட கொரியாவில் நல்ல சுகாதார கட்டமைப்பு உள்ளது. நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதிகள் வழங்கும் திறன் அந்த நாட்டிற்கு உள்ளது.

வட கொரிய மருத்துவர்களால் அடிப்படை மருத்துவத்தை வழங்க முடியும். உண்மை. ஆனால் தீவிரமான நிலையைக் கையாள்வது என்பது அங்கே இயலாத காரியம். அவசர ஆபத்து வேளைகளில் போதுமான மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும். அதுவும் அதிக அளவில் தேவைப்படும். கிடைக்குமா?

வட கொரியாவில் தலைநகரம் பியோங் யாங். அங்கே சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. அந்த மாதிரி சில பெரிய நகரங்களிலும் வசதிகள் உள்ளன. ஆனால் கிராமப் புறங்களில் கிடைக்குமா? இது ஒன் மில்லியன் டாலர் கேள்வி. 




இன்னும் சில ஒதுக்குப் புறமான, கிராமப் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளில் தண்ணீர்; மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லையாம்.

கொரோனா பாதிப்பு இருப்பதை வட கொரியா ஒப்புக் கொண்டால், அது அந்த நாட்டிற்குப் பெரிய ஒரு கௌரவக் குறைச்சல். அதுவே பின்னர் அந்த நாட்டின் பலகீனமாகி விடும். தன்மானத்தை அடகு வைத்தது போல ஆகிவிடும்.

உண்மையை ஒப்புக் கொண்டால் வட கொரிய மக்களிடம் பதற்றத்தை உண்டாக்கலாம். அதனால் நிலையற்ற தன்மை ஏற்படலாம். அதனால் அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

ஆக வட கொரியாவின் ஆளுமைக்கு அங்கே இந்த மாதிரியான இக்கட்டான நிலைமை. கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்று அந்த நாடு நினைக்கிறது. அதனால் உண்மையான தகவல்கள் மறைக்கப் படலாம்.

இரும்புத் திரைக்குப் பின்னால் இருக்கும் வட கொரிய மக்களுக்கு பெரிய ஆபத்துகள் எதுவும் வரக் கூடாது என தென் கொரிய மக்கள் வேண்டிக் கொள்கிறார்கள். நாமும் வேண்டிக் கொள்வோம்.

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படி மீளப் போகிறோம்; எப்படி உயிர் வாழப் போகிறோம் என்று உலக மக்கள் கதிகலங்கி நிற்கிறார்கள்.

மனிதர்களைத் தவிர மற்றதை எல்லாம் சாப்பிடும் ஒரு சாப்பாட்டு முறையினால் பல்லாயிரம் உயிர்கள் பறி போய் விட்டன. அந்த முறை ஒரு பழக்கமாக இருக்கலாம். அல்லது பாரம்பரிய வழக்கமாக இருக்கலாம். அதனால் ஒட்டு மொத்த உலகத்திற்கே பாதிப்பு என்றால் அதில் இருந்து விடுபட வேண்டியது மிகவும் அவசியம். கொரோனா வைரஸ் கிருமிகள் எதிர்கால மனுக்குலத்திற்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்து இருக்கின்றன.

மனிதர்கள் தங்களின் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மாற்றங்கள் வரும் வரையில் கொரோனா போன்ற கொடும் வைரஸ்கள் கொடுங்கோல் ஆட்சிகள் செய்யும். அவற்றின் மௌன ராகங்கள் என்றைக்குமே காம்போதி ராகங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக