07 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் புலிக்கு ஆபத்து

உலகிலேயே முதல் முறையாக மனிதரிடம் இருந்து விலங்கிற்குக் கொரோனா தொற்று பரவி உள்ளது. நியூயார்க் நகரின் பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவில் (Bronx Zoo) நான்கு வயதான பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தச் செய்தி உலகத்தையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 



அந்தப் பெண் புலியின் பெயர் நாடியா (Nadia). இது மலாயா புலி (Malayan tiger) எனும் புலி இனத்தைச் சேர்ந்தது. அதன் சகோதரிப் புலி அசூல் (Azul); மற்றும் இரண்டு Amur புலிகள்; மூன்று ஆப்பிரிக்கச் சிங்கங்கள்; ஆகியவற்றுக்கும் கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வனவிலங்கு பூங்காவில் வேலை செய்த ஊழியர் ஒருவரிடம் இருந்து அந்த விலங்குகளுக்குக் கொரோனா தொற்றி இருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. (Public health officials believe that the large cats caught Covid-19, the disease caused by the coronavirus, from a zoo employee.) இதற்கு முன்னர் ஹாங்காங்கில் சில வளர்ப்பு நாய்களிடம் கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

கடந்த 2020 மார்ச் மாதப் பிற்பகுதியில் அந்த விலங்குகள் இருமலால் (dry cough) பாதிக்கப் பட்டன. அவை உடல் மெலிந்து காணப் பட்டன; சரியான உணவு சாப்பிடுவது இல்லை என்று வன விலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.




இந்த விலங்குகள் இப்போது தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இந்த விலங்குகள், கொரோனாவில் இருந்து மீட்சி பெற்று குணம் அடையும் வாய்ப்புகள் அதிகமாய் உள்ளன. வேண்டிக் கொள்வோம்.

பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்கா, அமெரிக்காவிலேயே மிகப் பெரிய பூங்காக்களில் ஒன்றாகும். 6000 விலங்குகள் உள்ளன. இங்கு உள்ள விலங்குகளைத் தனிமைப்படுத்த முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

உலகிலேயே இதுதான் முதன் முறை; விலங்குகளுக்கு மனிதனிடம் இருந்து கொரோனா தொற்றிக் கொள்வது. என்னே அமெரிக்காவிற்கு வரும் சோதனைகள்!

(The tiger, a 4-year old Malayan tiger named Nadia, appeared visibly sick by March 27.)

சான்று: https://www.nytimes.com/2020/04/06/nyregion/bronx-zoo-tiger-coronavirus.html

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.02.2020



1 கருத்து: