தமிழ் மலர் - 14.04.2020
ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், இடி அமின், ஹிடாக்கி தோஜோ, பால்பாட் போன்ற பிம்பங்கள் சட்டென்று நம் நினைவிற்கு வருகின்றன. அதற்கு ஒரே ஒரு காரணம். அவர்களின் இரத்தவெறி பிடித்த குரூரக் கோரத் தாண்டவங்கள் தான்.
அவர்களின் மறக்க முடியாத கொடூரங்கள்; மறைக்க முடியாத படுகொலைகள்; உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறந்தும் போகாது. மக்களின் பெயரில், மதத்தின் பெயரில், இனத்தின் பெயரில் பல்லாயிரம் படுகொலைகளைச் செய்தவர்கள். பாவிகள் என்று சொல்லவில்லை. வரலாறு முடிவு செய்யட்டும்.
ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், இடி அமின், ஹிடாக்கி தோஜோ, பால்பாட் போன்ற பிம்பங்கள் சட்டென்று நம் நினைவிற்கு வருகின்றன. அதற்கு ஒரே ஒரு காரணம். அவர்களின் இரத்தவெறி பிடித்த குரூரக் கோரத் தாண்டவங்கள் தான்.
சூரியன் அஸ்தமிக்காத வெள்ளைக்கார நாடு பிரிட்டன்;
லத்தீன் அமெரிக்காவைச் சாட்டையில் சரிகட்டிய நாடு ஸ்பெயின்;
இந்தோசீனாவின் இடுப்பை உடைத்து அங்கோர் வாட்டில் தொங்கப் போட்ட நாடு பிரான்ஸ்;
முறுக்கு மீசை முசோலினியின் பாசிச அலைகளில் ஆப்பிரிக்க அடிமைத்தனம்;
நாஜி என்கிற அவலமான அசைவத்தின் பிதா மகனாய் ஹிட்லர்;
ஐஸ்பெட்டியில் மனிதத் தலைகளை அழகு பார்த்த நரபலி நாயகன் இடி அமீன்;
கம்போடிய மக்களில் காலவாசிப் பேரைக் காணாமல் செய்த பால்பாட்;
இப்படிப்பட்ட இவர்களை எல்லாம் எதிர்த்துச் சரிகட்டி... வயல் கட்டி... கலப்பை கட்டி... மாடு கட்டி... ஏர் உழுத அமெரிக்காவிற்கு இப்போதைக்கு ஒரே ஒரு குடைச்சல்... ஒரே ஒரு தலைவலி... வட கொரியாதான்.
உலக நாட்டாமை அமெரிக்காவிற்கே தண்ணீர் காட்டும் ஒரு நாடு இருக்கிறது என்றால் அது வட கொரியாவாகத் தான் இருக்க முடியும். ஒரு புரட்சிகரமான நாடு. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட நாடு. இராணுவத்தை வைத்துக் கொண்டு இரும்புத் திரை போடும் நாடு.
அதன் தலைவர் அதிபர் கிம் ஜாங் உன். இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிரடிச் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். கடந்த சில ஆண்டுகளாக இவர் நடத்தி வரும் அணு ஆயுதச் சோதனைகளைக் கண்டு ஒட்டு மொத்த உலக நாடுகளுமே கண்களைக் கசக்குகின்றன.
அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வேண்டும் எனப் பல வல்லரசு நாடுகள் தலையால் அடித்துக் கொள்கின்றன. இருந்தாலும் கிம் ஜாங் உன் கண்டு கொள்வதாக இல்லை.
ஏலேலே தில்லாலங்கடித் தலைவர்களில் நம்பர் ஓன் தலைவர் என்று சொல்லலாம். ஆனாலும் என்னை மிதித்தால் உன்னை மிதிப்பேன் என்கிற ஒரு தனிப்பட்டபோக்கு. சரி.
அவருடைய நாடு, அவருடைய மக்கள் என்று அவர் போக்கில் அவர் பாட்டிற்கு வட கொரியாவை ஆட்சி செய்து கொண்டு வருகிறார். மக்களாட்சி நாடோ, சோசலிச நாடோ, சர்வாதிகார நாடோ பிரச்சினை இல்லை.
பல கோடி மக்களைக் கவனித்துக் கொள்கிறாரே. பெரிய விசயம். ஆனான வல்லரசு நாடுகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு வட கொரியாவைத் தன் பிடியில் இறுக்கிப் பிடித்து ஆட்சி செய்கிறாரே. பாராட்டுவோம்.
ஒழுக்கம் பழகுவது மனிதம்; ஒழுக்கம் நிறைவது புனிதம் என்று சொல்வார்கள். ஆனால் கொரோனா கிருமி தாண்டவம் ஆடத் தொடங்கியதும் போதும், மனிதம் கரைந்து போகின்றது. புனிதம் மறைந்து போகின்றது. உலகத்தின் ஒழுங்கு ஒழுக்க நியதிகள் எல்லாம் உடைந்து உலர்ந்து போகின்றன.
அவர்களில் ஒரு ரகத்தினர் வாயால் வடை சுடும் தலைவர்கள். இவர்களின் மத்தியில் ஓர் அகாசிய சூரர் வருகிறார். அவர் தான் கிம் ஜோங் உன். வட கொரியாவின் அதிபர்.
இப்போது உலகத்தையே வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா பிரச்சினையில் இவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவி விட்டது. ஆனாலும் சில நாடுகள் மட்டும் கொரோனா கொடூரத்தில் இருந்து தப்பி உள்ளன. ஆச்சரியம் தான்.
ஏமன் (Yemen);
கிரிபட்டி (Kiribati);
கொமொரோஸ் (Comoros);
லெசோதோ (Lesotho);
மார்ஷல் தீவுகள் (Marshall Islands):
மைக்ரோனேஷியா (Micronesia);
வட கொரியா (North Korea);
பலாவ் (Palau),
சாலமன் தீவுகள் (Solomon Islands),
சமோவா (Samoa),
தஜிகிஸ்தான் (Tajikstan),
டோங்கா (Donga);
துர்க்மெனிஸ்தான் (Turkmenistan);
துவாலு (Tualu); நவ்ரு (Nauru);
வனுது (Vanuatu)
ஆகிய நாடுகள் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பியவை. இந்த விவரங்கள் நேற்று வரை (13.04.2020) நமக்குக் கிடைத்தவை. மாற்றங்கள் ஏற்படலாம்.
அதற்கும் காரணங்கள் உள்ளன.
1. அந்த நாடுகளில் முறையான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத சூழல்நிலைகள் இருக்கலாம்.
2. சமூகச் சூழல் காரணங்களால் கொரோனா தகவல்களை வெளியிட முடியாமல் இருக்கலாம்.
3. பரவலைத் தடுக்கும் முயற்சியில் கடுமையான தனிமைப் படுத்தலை அமல் படுத்தி இருக்கலாம். சரி. வட கொரியா விசயத்திற்கு வருவோம்.
ஒருவரின் வலிமையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரின் எதிரியின் பலத்தை முதலில் மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
கண்டிப்பாகப் பலம் வாய்ந்த இராணுவப் படை இருக்க வேண்டும். அதை வைத்துக் கொண்டு தான் அதிபர் கிம் ஜாங் உன் இல்லாத கில்லாடி வேலைகளை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்.
இராணுவத்தை வைத்துக் கொண்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். சொல்ல முடியாது. இரும்புத் திரைக்குப் பின்னால் நல்லதும் நடக்கலாம். கெட்டதும் நடக்கலாம்.
வடகொரியாவில் எவருக்கும் கொரோனா நோய் வரவில்லை என்று அந்த நாட்டு அரசாங்கம் சொல்கிறது. மிகப் பெரிய ஆச்சரியம் மிகப்பெரிய அதிசயம். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். வரலாம் வராமலும் இருக்கலாம்.
உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. பாதிக்கப் பட்டவர்கள், மீண்டு வந்தவர்கள், மோசமான நிலையில் தவித்துக் கொண்டு இருப்பவர்கள்; இறந்தவர்கள் என்று உலக நாடுகள் எல்லாம் பட்டியல் போட்டுக் கலங்கி நிற்கின்றன.
இதில் ’நாங்கள் தான் கொரோனா இல்லாத சுதந்திரமான நாடு. எங்களிடம் கொரோனா வைரஸ் வாலாட்ட முடியாது’ என அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறது வடகொரியா.
வட கொரியா - சீன எல்லை 1,450 கி.மீ நீளம் கொண்டது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான வட கொரிய மக்கள் எல்லையைக் கடந்து சீனாவிற்குள் வேலைக்குச் செல்கின்றனர். எல்லையின் இருபுறமும் கணிசமான அளவுக்கு கடத்தல் வேலைகளும் நடைபெறுகின்றன.
வட கொரியாவிற்கு எதிராக நிறையவே போர்க் கொடிகள். ’வட கொரியா சொல்வது எல்லாம் பொய். அந்த நாட்டின் அதிபர் கிம் என்றைக்குத் தான் உண்மை பேசி இருக்கிறார். அண்டப் புளுகர். ஆகாசப் புளுகர்’ என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் வரிந்து கட்டி மல்லுக்கு நிற்கின்றன எது உண்மை? தெரியவில்லை.
’வியாபாரம், சுற்றுலா, போக்குவரத்து என எல்லாவற்றையும் தடை செய்து விட்டோம். எங்கள் நாட்டு மக்களுக்கு கண்டிப்பான கட்டளைகள் போட்டு விட்டோம். இப்படித்தான் நாங்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து வருகிறோம்’ என்கிறது அந்தப் பத்திரிகை. உண்மையாகவும் இருக்கலாம்.
ஆனால் அதை அமெரிக்கா நக்கலாய்ச் சிரித்து நையாண்டியாய்ப் பார்க்கிறது. வெற்று ஜம்பம் காட்டுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக வடகொரிய இராணுவம் எந்தவிதமான இராணுவப் பயிற்சிகளிலும் ஈடுபடவில்லை.
கடந்த ஒரு மாதமாக சாலைகளில் வடகொரிய கவச வாகனங்களைக் காணவில்லை.
தென்கொரியாவின் தலையாய நாளிதழ்கள் சோசுன் இல்போ (Chosun Ilbo); டோங் ஆ இல்போ (Dong-a Ilbo). சியோல் நகரத்தில் இருந்து வெளியாகின்றன.
இவை அண்மையில் வெளியிட்ட செய்திகள் அதிர்ச்சியைத் தருகின்றன. கொரோனா நோயினால் 200 வடகொரிய இராணுவ வீரர்கள் இறந்து விட்டனர். 4000 இராணுவ வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் வடகொரியா தடுமாறுகிறது என்கிற செய்திகள்.
வடகொரியாவின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் நல்ல சுகாதார வசதிகளுடன் வாழவில்லை என்றும் மேற்கத்திய நாடுகள் சொல்கின்றன. உலகச் சுகாதார நிறுவனமும் உறுதிப் படுத்துகிறது.
இந்த நிலையில் கொரோனா நோய் வடகொரியாவைத் தாக்கினால் அந்த நாடு நிச்சயமாகப் பெரிய விலை பேச வேண்டி இருக்கும். பெரும் இழப்பையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நிலையில் கடந்த மார்ச் 20-ஆம் தேதி இரண்டு ஏவுகணைகளைப் பாய்ச்சி பல நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்து உள்ளது வடகொரியா.
இருந்தாலும் சில தரப்பினர் வடகொரியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். 2014-ஆம் ஆண்டில் எபோலா நோய் வந்த போது வடகொரியா தன் எல்லைகளை இழுத்து மூடியது. கடல் பயணங்களை ரத்து செய்தது. சிலருக்கு நினைவு இருக்கலாம்.
அதைப் போலவே இப்போதும் எல்லைகளை மூடி இருக்கலாம். கொரோனாவில் இருந்து தப்பி இருக்கலாம். சொல்ல முடியாது.
இன்னும் ஒரு முக்கியமான விசயம். வட கொரியாவில் ஏறக்குறைய 50 ஆண்டு காலமாக ஏகாதிபத்திய ஆட்சி. பொதுமக்கள் நாட்டைவிட்டு வெளியே போக முடியாது. அங்கே இணையச் சேவை இல்லை. சினிமா இல்லை. தொலைகாட்சி வசதிகள் இல்லை. அதனால்தான் அந்த நாட்டின் இரகசியங்கள் வெளியே தெரிவதும் இல்லை.
அமெரிக்காவும் சரி; அதன் அடிவருடி ஊடகங்களும் சரி; வடகொரியாவிற்கு எதிராக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பிரசாரம் செய்து வருகின்றன. அது அவற்றின் பிரேக்கிங் நியூஸ் கலாசாரம். நக்கலான பொழுது போக்கு.
என்றைக்கு அந்தப் பிரசாரங்கள் நிறுத்தப் படுகின்றனவோ அன்றைக்குத் தான் வடகொரிய அதிபரின் ஏவுகணைச் சில்மிசத்திற்கும் வனவாசம். அன்றைக்குத் தான் வட கொரியாவிற்குப் பூவாசம்!
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.04.2020
பேஸ்புக் பதிவுகள்
16 April 2020
Sathya Raman: இந்த வட கொரிய அதிபர் தனது சக நாடான தென்கொரியாவையே கண்ணில் சுண்ணாம்பு வைத்து சுடுபவர் ஆயிற்றே? சில ஆண்டுகளுக்கு முன்பு இவரும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சிங்கப்பூரில் சந்தித்த போது வட கொரிய அதிபரின் நடவடிக்கைகள்... அவர் உண்ணும் உணவில் இருந்து... காலைக் கடன்கள் வரை மிகவும் இரகசியமாகவே வைக்கப் பட்டதாம்...
அவர் சம்பந்தபட்ட கழிவுகளைக்கூட சிங்கப்பூரில் கலக்க விடாத அளவிற்கு மிக ரகசியமாய், பாதுகாப்பாய் எடுத்து சென்றதாகச் சொல்லப் பட்டது. இந்த வைரஸ் தொற்றை அவர் எப்படி எதிர்கொள்கிறார்... உங்களின் அடுத்தப் பதிவை ஆவலோடு எதிர்பார்கிறேன் சார்.
Muthukrishnan Ipoh: மேலும் ஒரு வேதனையான தகவல். ஹனோய் நகரில் நடந்த அமெரிக்க - வட கொரியா உச்ச மாநாடு தோல்வி அடைந்தது.
அந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த வட கொரியாவின் சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் (Kim Hyok Chol) மற்றும் வெளியுறவு அமைச்சின் 4 அதிகாரிகளுக்கும் 2019 மார்ச் மாதத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
மாநாடு தோல்வி அடைந்ததால் கிம் ஜோங் உன் (Kim Jong Un) கோபம் அடைந்தார். இது தென் கொரியாவின் குற்றச்சாட்டு. இந்தத் தகவல் இன்னும் உறுதிபடுத்தப் படவில்லை.
சான்று: https://www.cnbc.com/.../kim-jong-un-reportedly-executes...
Sathya Raman >>> Muthukrishnan Ipoh: மனித மாமிசம் தின்றதாகச் சொல்லப்படும் உகண்டாவின் முன்னாள் அதிபர் இடி ஆமினைவிட கொடுங்கோலன் போல் இருக்கே இந்த வட கொரிய அதிபர்?
Don Samsa: வணக்கம் தலைவரே, வெள்ளை குண்டுப் பன்னி கிம் நிச்சயம் இந்த வேலையை செய்திருப்பான். கிம் ஒரு சரியான கிறுக்கன். அமெரிக்கா அதிபர் டிராம்ப் இருமுறை கிம் அவனிடம் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தார் கிம்மிடம்.
டிராம்பின் பப்பு வேகவில்லை அத்தோடு அமெரிக்கா தன் வாயை பொத்திக் கொண்டு இருக்கிறது... இப்போது அணு ஆயுத விடயத்தில். கிம் மட்டும் ஒரு டம்மி பீசாக இருந்திருந்தால் எப்பவோ அமெரிக்கா வட கொரியாவை விழுங்கி இருக்கும்... ஈராக்கை விழுங்கியது போல்...
Muthukrishnan Ipoh >>> Sathya Raman: அதிகாரத்தில் நிலைத்துப் பேர் போட வேண்டும் என்றால் சில அதிரடியான சில அநியாயமான காரியங்களை அரசியல்வாதிகள் செய்வார்கள்... இந்தச் செய்தி இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை...
Muthukrishnan Ipoh >>> Don Samsa: உண்மை தான் ஐயா.... அதிபர் டிரம்ப் சற்று இடக்கு முடக்கான மனிதர் தான்...
Don Samsa தலைவரே, அமெரிக்காவுக்கு சரியான அதிபர் புஷ் மட்டுமே.
சிமா. இளங்கோ: பொறுக்கி எடுத்த புறம்போக்குத் அதிபர்கள்! நிழலுக்கே கர்ப்பம் தரும் நன்கொடையாளர்கள்!!! இவர்கள் மனிதம் அல்ல! வேறு பேரு!!!--
Muthukrishnan Ipoh: மனித வரலாற்றில் தலைவர்கள் சிலர் மிகக் கொடூரமான மனிதர்களாய் வாழ்ந்து இருக்கிறார்கள் ஐயா... மனுக்குலம் அவர்களை மன்னிக்காது...
Don Samsa: வட கொரியா ஒரு மர்மமான தேசம். இதுநாள் வரையிலும் ஒரு செய்தி கூட வெளியே வரவில்லை கொரோனா தொற்று நோய் பற்றி அந்த நாட்டில் இருந்து... அணு ஆயுதமே அந்த நாட்டின் மிகப் பெரிய பலம். அது மட்டும் இல்லாமல் செய்து விட்டால் போதும்...
அமெரிக்கா எந்த நேரத்திலும் வட கொரியாவை ஈராக் போல் ஆக்கிவிடும். யூதர்களின் இலுமனாட்டி கழுகு பார்வை வட கொரியாவில் மட்டும் வேக மறுக்கிறது.
இது மட்டும் அல்ல. அங்கே வாட்சாப், முகநூல், கைபேசிகள் கூட பொது மக்கள் உபயோகப்படுத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் மலேசியராக இருந்தால், ஜோர்டான் நாட்டு எல்லை வழியாக கூட இஸ்ரேலிய நாட்டிற்கு சென்று வந்து விடலாம். ஆனால் வட கொரியாவிற்குத் திருட்டுத் தனமாக நுழைவது என்பது நரகத்திற்கு செல்வதற்குச் சமமாகும்.
Sathya Raman >>> Don Samsa: உங்களின் பதிவு முற்றிலும் உண்மைதான் சார். சில தென் கொரிய திரைப் படங்களிலோ அல்லது சீரியல்களிலோ வட கொரியாவில் இருந்து தப்பித்து வருவதற்கு அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் கந்தலாகி, கஞ்சி காய்ச்சி எடுக்கப் படுவார்கள்.
அத்துனை கொடூரமாக துன்பத்தை அனுபவிப்பதைப் போல் காட்சிகள் தத்துரூபமாக இருக்கும். தென் கொரிய படங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. அவர்களது தொலைநோக்கு பார்வையும், கதை களமும் படத்திற்குப் படம் வித்தியாசம் காட்டும்.
தென் கொரிய படக் கம்பெனிகள் வட கொரியவைப் பற்றி கதை பண்ணுவதற்கே கதி கலங்கியே ஆகணும். ஒரு தனிமனித அதிபரின் கொடுங்கோல் ஆட்சியில் அங்குள்ள மக்களை நினைத்தால் நெஞ்சு பொறுக்க வில்லைதான்.😥
Don Samsa: நவீன காலத்தில் இப்படியொரு அரக்கன்.. என்ன செய்ய சார்.. ஆனால் வட கொரியா மற்ற வல்லரசு நாடுகள் போலவே காட்சி அளிக்கும் எப்போதும். அங்கரிக்கப் படாத வல்லரசு வட கொரியா..
Jainthee Karuppayah: Omg...
Sai Ra: Sir tayavu seitu todarchiyai poodunggal. Aarvak koolaru toongga mudiyavillai. Ennattai Solla valakkam poolavee tanggalin eluttu miga Swarassiam. Paaraaddukkal. (தயவு செய்து தொடர்ச்சியைப் போடுங்கள். ஆர்வக் கோளாறு தூங்க முடியவில்லை. வழக்கம் போலவே தங்களின் எழுத்து மிக சுவராசியம். பாராட்டுக்கள்.)
Sri Kaali Karuppar Ubaasagar: ஆஹா... அருமை பிரமாதம் அண்ணா🙏🏼🌹
Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
Tanigajalam Kuppusamy: அகாசிய சூரர், அசகாய சூரர் - இவற்றில் எது சரிங்க தலைவரே!
Muthukrishnan Ipoh: அகாசியம் என்று தமிழில் சொல் இருப்பதாகத் தெரியவில்லை... ஆனால் அகசியம் எனும் சொல் இருக்கிறது. ஹாஸ்யம் அல்லது வேடிக்கை என்று பொருள். அகசியக்கூத்து; அகசியகாரன் எனும் பெயர்ச்சொற்களும் உள்ளன.
அசகாயம் என்றால் சாகசம். அசகாயச் சூரர் எனும் சொல் இருக்கிறது சார்.
அசாத்தியமான மனிதர். மெட்ராஸ் பாஷையில் ஒசத்தியான மனிதர். அல்லது சூப்பர் பிகர். 😃😃
கட்டுரையில் தவறாக உள்ளது... மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறீர்கள்... சமயங்களில் பூனையும் புல்லைத் தின்னும் சார்.... சும்மா ஒரு ஜோக் சார்... 😃😃
Tanigajalam Kuppusamy: கட்டுரையில் அகாசிய சூரர் என்றிருந்தது. அதுதான் ஐயம் தலைவரே!
Muthukrishnan Ipoh: திருத்தி விட்டேன் ஐயா...
Tanigajalam Kuppusamy: மன்னித்துக் கொள்ளுங்கள். முத்துக்கிருஷ்ணனின் படைப்பில் பிழை வந்துவிடக் கூடாதென்ற பேராசைதான்.
Muthukrishnan Ipoh: அகம் மகிழ்ந்து போகிறேன்... நன்றி... நன்றி... நன்றிங்க தணிகா...
Tanigajalam Kuppusamy: 🙏🌺
Sai Ra >>> Muthukrishnan Ipoh: Nakkiiraro.... 😂 (நக்கீரரோ...)
Jainthee Karuppayah: பயங்கர ஆட்சி...
இதில் ஒரு முக்கியமான விடயம். அமெரிக்கா மூக்கை நுழைத்த நாடுகள் எதிலுமே அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை சீர்குலைந்திருப்பதை காணலாம். ஆனால் வடகொரியா எந்தவொரு உள்நாட்டின் விவகாரங்களிலும் தலையிட்டதில்லை. அமெரிக்கா வடகொரியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்கு அந்நாடு அணுவாயுத தயாரிப்பில் ஈடுபடுவதை காரணம் காட்டுகின்றது. ஆனால் அமெரிக்கா மட்டும் அணுவாயுதம் வைத்திருக்கலாமாம். வடகொரியாவை பொறுத்தவரை "நான் அணுவாயுதம் வைத்திருக்க கூடாதென்றால் நீயும் வைத்திருக்க கூடாது" என்பதே
பதிலளிநீக்குவடகொரியாவை பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள் எல்லாமே வடகொரிய எதிர்ப்பின் பாற்பட்ட அமெரிக்க சார்பு ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை மேற்கோள் காட்டப்பட்ட தகவல்களையே நாம் கேள்விப்படுகின்றோம்.