16 April 2020

கொரோனா பரிசோதனைக் கருவி - வராது வந்த நாயகன்

தமிழ் மலர் - 13.04.2020

கொரோனா வைரஸ் நம் உடலில் இருக்கிறதா இல்லையா. இது ஒன் மில்லியன் டாலர் கேள்வி. மன்னிக்கவும். இப்போது எல்லாம் மில்லியன் எனும் சொல்லுக்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது. 1MDB பிரபலம் அடைந்த பின்னர் கிண்டர்கார்டன் படிக்கும் சின்னச் சின்ன வாண்டுகள்கூட மில்லியன் எனும் சொல்லை மதிப்பது இல்லை.

அதனால் பில்லியன் டாலர் கேள்வி என்று தாராளமாகச் சொல்லலாம். டிரில்லியன் டாலர் கேள்வி என்றும்கூட சொல்லலாம். தப்பு இல்லை. ரோசாப்பூ ரோசம்மா கோபித்துக் கொள்ள மாட்டார். சரி.

தமிழ் மலர் - 13.04.2020
கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது இவ்வளவு நாளும் கோரோனா கிருமியைத் தவிர மற்ற எவருக்கும் தெரியாத இரகசியமாக இருந்தது.

அந்தக் வைரஸ் வருவதும் தெரியாது. வந்து ஒட்டிக் கொள்வதும் தெரியாது. உயிரை வாங்குவதும் தெரியாது. நிலைமை அப்படித் தானே போய்க் கொண்டு இருக்கிறது.

இருந்தாலும் ஒருவரின் உடலில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டுப்பிடிக்க ஒரு கருவி இருக்கிறது. அந்தக் கருவியின் பெயர் ரேபிட் டெஸ்ட் கிட் (Rapid Testing Kit). தமிழில் துரித பரிசோதனைக் கருவி. அதைப் பற்றியது தான் இன்றைய கட்டுரை. இது ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை. அண்மைய காலங்களில் தான் இந்த மாதிரியான கிருமி கண்டுபிடிப்புக் கருவிகள் புழக்கத்திற்கு வந்தன. 50 ஆண்டுகள் இடைவெளியைத் தான் அண்மைய ஆண்டுகள் என்று சொல்கிறேன். நூற்றுக் கணக்கான பரிசோதனைக் கருவிகள்.

இந்த்த துரிதப் பரிசோதனை என்பது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே மலேரியா, டெங்கி, மஞசள் காமாலை பி போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் பல பயன்பாடுகள் உள்ளன.இன்சுலின் பரிசோதனை; இரத்தத் துடிப்பு பரிசோதனை; கல்லீரல் இயக்கப் பரிசோதனை; இரத்தச் சிவப்பு அணுக்கள் அனிசோகுரோமியா (Anisochromia) பரிசோதனை; பென்ஸ் ஜான்ஸ் புரதம் (Bence Jones protein) பரிசோதனை; பெந்தாகாஸ்டிரின் கேஸ்ட்ரிக் (Pentagastrin) பரிசோதனை. இப்படி நிறையவே பரிசோதனைகள். இவற்றைக் கொண்டு வீட்டில் இருந்தவாறே நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள முடியும்.

உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் இப்போது உலகத்தை உலக்கிக் கொண்டு இருப்பது கொரோனா வைரஸ். அதைக் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனைக் கருவிதான் ரேபிட் டெஸ்டிங் கிட் - Rapid Testing Kit எனும் துரித பரிசோதனைக் கருவி. இந்தக் கருவிகளை நாம் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று SARS CoV-2 துரிதப் பரிசோதனைக் கருவிகள். நோயால் பாதிக்கப்படும் போது நம் உடலில் உருவாகும் antibodies எனும் பிறபொருள் எதிரிகளை அடிப்படையாகக் கொண்டது.

மற்றொன்று கொரோனா வைரஸின் nucleic acid எனும் நியூக்ளிக் அமிலத்தை அடிப்படையாகக் கொண்டது.

துரிதப் பரிசோதனைக் கருவியின் பெயரைச் சொல்லி, பல உயிரியல் மருத்துவ நிறுவனங்கள் துரித பரிசோதனைக் கருவிகளைத் தயாரித்து இருக்கின்றன. அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலேயே விற்பனையும் செய்கின்றன. அவை எந்த அளவிற்கு நம்பகமாக அமைகின்றன என்பது எவருக்கும் தெரியாதுஅதனால் மலேசிய அரசாங்கம் அனுமதிக்காத எந்த ஒரு பரிசோதனைக் கருவியையும் வாங்க வேண்டாமே. அவதிப்பட வேண்டாமே. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்கள் இருக்கும் வரையில் மீன்களுக்குத் தான் ஆபத்து.

இன்றைய கொரோனா கதிகாலத்தில் எவரும் வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமிகளால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அந்த ஒருவரின் உடலில், கொரோனா வைரஸ் கிருமியின் மரபணுவில் உள்ள டி.என்.ஏ. (DNA); அல்லது ஆர்.என்.ஏ. (RNA); மூலக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை இந்த ரேபிட் டெஸ்ட் கிட் (Rapid Testing Kit) கருவியின் மூலமாகக் கண்டு அறிய முடியும்.

இப்போது இந்தக் கருவிக்கு உலகம் எங்கும் ரொம்பவுமே கிராக்கி. இதன் பயன்பாடு மருத்துவமனைகளுக்கு மட்டும் எனும் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. நிறையவே போலிகளும் சந்தையில் கலந்து விட்டன. சொல்லி இருக்கிறேன்.

விரைவில் பொதுமக்களுக்கும் எளிதில் கிடைக்கலாம். மலேசிய சுகாதார அமைச்சு போலிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சரி.

ஒரு வைரஸ் கிருமியின் மரபுத் தொகுதிக்கு ‘ஜெனோம்’ (genome) என்று பெயர். கொரோனா தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமிக்கு SARS-CoV-2 என்று பெயர். ஆக இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட SARS-CoV-2 வைரஸ் கிருமியின் ஜெனோம் மரபுத் தொகுதியையும்; ஏற்கனவே இருந்த சார்ஸ் (SARS); மெர்ஸ் வைரஸ் கிருமிகளின் மரபுத் தொகுதியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இரண்டிற்கும் 70 விழுக்காடு ஒற்றுமை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால் தான் இப்போது உலகத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் கிருமிக்கும் சார்ஸ் (SARS) எனும் பெயர் ஒட்டிக் கொண்டது. இப்போதைய இந்த கொரோனா வைரஸ் கிருமி முதன்முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டது. எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

இந்தப் புதிய கொரோனா வைரஸ் கிருமியின் மரபு அணுக்களை ஆராய்ச்சியாளர்கள் பிரித்துப் பகுத்துப் பார்த்தார்கள். அதன் பின்னர் அந்த மரபு அணுக்களைத் துரித மூலக்கூறு மரபியல் பரிசோதனை (rapid molecular genetic tests) மூலமாக வடிவம் அமைத்தார்கள். மரபியல் பரிசோதனை என்பது குரோமோசோம்கள் (chromosomes), மரபணுக்கள் (genes) அல்லது புரதங்களில் (proteins) ஏற்படும் மாற்றங்களை அடையாளம் காணும் ஒரு வகை மருத்துவச் சோதனையாகும்.

(Genetic testing is a type of medical test that identifies changes in chromosomes, genes, or proteins)

இந்தப் பரிசோதனை தான் இப்போதைக்கு உலகம் எங்கும் பரவலாகக் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

கொரோனா வைரஸைப் பொறுத்த வரையில் அதற்கான மரபியல் பரிசோதனையை, அதன் மரபணுவில் உள்ள ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். ஏன் தெரியுங்களா.எல்லா உயிர்களின் மரபணுக்களும் டி.என்.ஏ. (DNA); ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக் கூறுகளால் ஆனவை. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

மனிதனாக இருக்கலாம். மிருகமாக இருக்கலாம். காற்றில் பறக்கும் பட்டாம் பூச்சியாக இருக்கலாம். பரவி நிற்கும் பயிர் பச்சையாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம்.

ஓர் உயிர் என்றால் அதற்கு கண்டிப்பாக மரபணுக்கள் இருக்கும். இருக்க வேண்டும்.

மறுபடியும் சொல்கிறேன். அந்த மரபணுக்களில் டி.என்.ஏ. (DNA); ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக் கூறுகள் இருக்கும். ஆக, டி.என்.ஏ.; ஆர்.என்.ஏ. மூலக் கூறுகள் இல்லாமல் மரபணுக்கள் இல்லை. மரபணுக்கள் இல்லாமல் செல்கள் இல்லை. செல்கள் இல்லாமல் உயிர்கள் இல்லை. அந்த உயிர்கள் இல்லாமல் நாம் மனிதர்களும் இல்லை. சரிங்களா.ஆனாலும் கொரோனா வைரஸில் ஒரு பிடி இருக்கிறது. அதாவது ஒரு ’கேட்ச்’ இருக்கிறது. பெரும்பாலான வைரஸ் கிருமிகளின் மரபணுக்கள் ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக்கூற்றுகளால் மட்டுமே ஆனவை. கொஞ்சமாய் டி.என்.ஏ. இருக்கலாம்.

அந்த ஆர்.என்.ஏ. மரபணுத் தொகுதியில் தான் கொரோனாவின் இரகசியங்கள் அடங்கி இருக்கின்றன. கொரோனா வைரஸின் செயல்பாடுகள்; வடிவ அமைப்புகள்; தன்மைகள்; பண்புகள்; இயக்கங்கள் என எல்லாமே மூலக்கூறுகள் வடிவில் அதன் ஆர்.என்.ஏ.-வில் எழுதப்பட்டு இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொல்லலாம். இப்போது நம்மை ஆட்டிப் படைக்கிறதே இந்த SARS-CoV-2 ; இந்த வைரஸ் ஒருவரின் உடலுக்குள் சென்றதும் என்ன வகையான புரதங்களைத் தயாரிக்க வேண்டும்;

எப்படி தயாரிக்க வேண்டும்; மனித உடலின் மரபணுக்களை எப்படி உடைக்க வேண்டும் என்கிற வழிமுறைகள் எல்லாம் இந்த மரபணுக்களிடம் இருக்கும்.

 

அதாவது எழுதி வைத்தது போல இருக்கும். இந்த புரதங்கள் தான் கோரோனா கோவிட் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படுவதற்கு காரணமாகவும் இருக்கின்றன.

மறுபடியும் நினைவு படுத்துகிறேன். புரதங்கள். எந்த மரபணுவாக இருந்தாலும் இந்தப் புரதங்கள் தான் சக்தி கொடுக்கும் பொருட்கள். ஆக கொரோனா வைரஸ்கள் அவற்றின் இந்தப் புரதங்களை வைத்துக் கொண்டே மனித மரபணுக்களைச் சாகடித்து விடுகின்றன. அது தான் அந்தக் கொரோனாவின் தில்லாலங்கடித் தனம்.

ஒருவருக்குத் தொண்டை வலி அல்லது இருமல் அல்லது சளி அல்லது காய்ச்சல் வரலாம். உடல் சோர்ந்து போகலாம். அந்த மாதிரி அறிகுறிகள் வந்தால் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அவரின் மூக்கு; தொண்டைப் பகுதிகளில் இருக்கும் திரவத்தைப் பஞ்சு மூலம் எடுத்து ஸ்வாப் (Swab) பரிசோதனை செய்வார்கள்.

அவ்வாறு எடுக்கப்படும் திரவ மாதிரிகள் பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன் (Polymerase chain reaction) எனப்படும் பி.சி.ஆர். (PCR) பரிசோதனைக்கு அனுப்பப்படும்.இந்த பி.சி.ஆர். (PCR) பரிசோதனையின் மூலமாக கொரோனா வைரஸின் ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள் உள்ளனவா என்று பார்க்கப்படும்.

அடுத்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள் எத்தனை மில்லியன்களாகப் பெருகிப் போகின்றன என்றும் கணக்கு போட்டுப் பார்ப்பார்கள் அதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.

அப்படி எடுக்கப்படும் மூலக் கூறுகளின் எண்ணிக்கையில் ஆர்.என்.ஏ. இருந்தால் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரிந்து விடும். அப்புறம் என்ன. உடனே அட்மிட் செய்து விடுவார்கள்.

இதை வைத்துத் தான் ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்கிறார்கள். இந்த விசயத்தில் கொரோனா கிருமியின் ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள்தான் அந்தக் கிருமியையே காட்டிக் கொடுக்கின்றன.ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது என்றால் அந்தக் கொரோனா வைரஸில் உள்ள எதிர்ப்புத் திறனூட்டியை (Antigen) எதிர்க்க, அவரின் உடலில் எதிர்ப்புரதம் (Antibodies) உருவாகும்.

அதனை எதிர்க்க ஐ.ஜி.எம் (Immunoglobulin M (IgM); (Immunoglobulin G (IgG); ஐ.ஜி.ஜி. என்கிற இரு வகையான எதிர்ப் புரதங்கள் உருவாகும்.

இதில் ஐ.ஜி.எம். என்பது கொரோனா வைரஸ் நம் உடலில் நுழைந்ததும் அதனை எதிர்க்க உடலில் உருவாகும் முதல் எதிர்ப்புரதம் ஆகும்.

மற்றொன்று  ஐ.ஜி.ஜி. என்கிற எதிர்ப் புரதம். இரண்டுமே நம் உடலில் உருவாகும் எதிர்ப் புரதங்கள்.

இதில் ஐ.ஜி.ஜி. என்கிற எதிர்ப் புரதம் இருக்கிறதே இந்தப் புரதம் கொரோனா வைரஸ் நம் உடலில் இருந்து போன பிறகு உருவாகும் எதிர்ப் புரதம். அதாவது நோய் எதிர்ப்பு சக்தி.

இந்த ஐ.ஜி.ஜி. என்கிற எதிர்ப் புரதம் நம் உடலில் எப்போதும் இருக்கும். மீண்டும் கொரோனா வைரஸ் உடலில் புக முயற்சி செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஐ.ஜி.ஜி. எதிர்ப் புரதம் கொரோனா வைரஸ்களுடன் போராடி அவற்றைத் துரத்தி விடும்.

ஒருவரின் உடலில் கொரோனா வைரஸ் கிருமிகள் இருக்கின்றன என்பதை உறுதி செய்ய உலக சுகாதார நிறுவனம் ஒரு சில வரையறைகளை வகுத்து உள்ளது. அவை என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம்.

ஒருவரின் உடலில் கொரோனா இருக்கும். ஆனால் அதற்கான ஆர்.என்.ஏ. எண்ணிக்கை அவரின் உடலில் இருக்காது. இந்தப் பிரிவு நோயாளிகளை கொரோனா நெகடிவ் என்று முடிவு செய்கிறார்கள்.

இந்த துரித பரிசோதனைக் கருவியின் முடிவுகளைத் தாராளமாக நம்பலாம். ஆனால் பரிசோதனை முடிவுகள் கிடைக்கத் தான் தாமதம் ஆகும். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகும்.

இப்படித்தான் கொரோனா துரித பரிசோதனைக் கருவி (Rapid Testing Kit) செயல் படுகிறது. இப்போது கொரோனா தொற்றை உறுதி செய்வதற்கு இந்தக் கருவி பெரிய அளவில் உதவி செய்யும். நம்புவோம். எதிர்பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.04.2020
No comments:

Post a Comment