06 April 2020

கொரோனா வைரஸ்: உலகப் புகழ் ஷி செங்லி

தமிழ் மலர் - 06.04.2020

கொரோனா கோவிட் எனும் ஒரு புதிய வைரஸ் இருப்பதாக முதன் முதலில் உலகத்திற்குச் சொன்னவர் ஒரு பெண்மணி.

வைரஸ் துறையில் ஆழமான அறிவு கொண்டவர். உலகத்திலேயே கொரோனா வைரஸ் பற்றி அதிகப்படியான ஆய்வுகளையும் செய்தவர். வைரஸ் துறையில் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தவர்.


ஷி செங்லி (Shi Zhengli)

அவரின் அளப்பரிய சேவைகளுக்காக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பல விருதுகளை வழங்கி உள்ளன. அவரின் ஆய்வுப் பணிகளுக்குப் பல மில்லியன் டாலர் உதவித் தொகைகளையும் வழங்கி உள்ளன.

அவரின் கணிப்பு: ஒரு சில ஆண்டுகளில் ஒரு பயங்கரமான வைரஸ் நோய் உலகத்தையே ஆட்டிப் படைக்கலாம். பல மில்லியன் மக்கள் இறந்து போகலாம். அதனால் அந்த நோய்க்கான மூலகர்த்தாக்களை உடனடியாகத் தேடிப்பிடிக்க வேண்டும்.

அவை அடைக்கலம் கொடுக்கும் வைரஸ்களை அடையாளம் காண வேண்டும். அந்த வைரஸ்களுக்கு எதிராகத் தடுப்பூசிகள் அல்லது தடுப்பு மருந்துகள் உருவாக்க வேண்டும். இப்படித்தான் அவருடைய கணிப்பு இருந்தது. அதனால் தம் வாழ்க்கையின் பெரும் பகுதியை வைரஸ் ஆய்வுகளுக்காகத் தொலைத்து விட்டவர்.
அவருடைய பெயர் ஷி செங்லி (Shi Zhengli). இவரைச் சீனாவின் வௌவால் பெண்மணி என்று புகழாரம் செய்கிறார்கள். சீனாவின் மருத்துவ மகாராணி என்றும் பெருமை செய்கிறார்கள். இவருக்குச் சீனாவில் பெரிய மதிப்பு; பெரிய மரியாதை.

ஆனால் என்ன. அவரின் வைரஸ் ஆய்வுகளைச் சீனா அதிகாரிகள் எப்படியோ பெற்றுக் கொண்டனர். அந்த ஆய்வுகளில் பல்லாயிரம் வௌவால் இரகசியங்கள் இருந்தன. சீனாவின் பல நூறு குகை இரகசியங்கள் இருந்தன. எந்த எந்தக் குகையில் எந்த எந்த வௌவால்கள் வாழ்கின்றன எனும் இரகசியங்கள் இருந்தன.


அந்த வௌவால்களின் உடல் திரவ மாதிரிகள் இருந்தன.  அவரிடம் காட்டப்பட்டது ஒரு வற்புறுத்தலா அல்லது ஓர் ஏகாதிபத்திய நகர்வா. நமக்குத் தெரியாது. அதைப் பற்றி நாம் கருத்துச் சொல்லவும் முடியாது.

அந்த இரகசியத் தகவல்கள் எல்லாம் இப்போது வுஹான் வைரஸ் ஆய்வுக் கழகத்திற்கு (Wuhan Institute of Virology) சொந்தமாக உள்ளன.

பாவம் ஷி செங்லி. அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை. இருந்தாலும் அதெ அந்த வுஹான் வைரஸ் ஆய்வுக் கழகத்திலேயே தன் சேவைகளைத் தொடர்ந்தார். இன்றும் சேவை செய்து வருகிறார். பல பல்கலைக்கழகங்களில் அழைப்புப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

அவருடைய வைரஸ் கண்டுபிடிப்புகள் கைமாறிப் போனதும், உலக நாடுகள் அவருக்கு வழங்கி வந்த உதவித் தொகைகளை நிறுத்திக் கொண்டன. ஏன் என்று கேட்டால் நாசுக்கான பதில்கள் வருகின்றன. உலகத்திலேயே மிக மிகக் கொடிய வைரஸ்களுடன் ஷி செங்லி உறவாடிக் கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட கொடிய கிருமிகளுடன் ஆய்வு செய்பவருக்கு நிதியுதவி செய்வது மனுக்குலத் தார்மீகத்திற்குச் சரிபட்டு வராது எனும் நறுக் நறுக் பதில்கள். இது எப்படி இருக்கு என்று சொல்ல முடியவில்லை.

மேலும் கொஞ்ச தகவல்கள். ஷி செங்லி, சீனா நாட்டுக் குகைகளில் பல கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர். அங்கே மேலும் பல பயங்கரமான வைரஸ்கள் உள்ளன என்று எச்சரிக்கை செய்து இருக்கிறார். இன்றும் எச்சரிக்கை செய்து வருகிறார்.

இவர் சீனாவின் வௌவால் குகைகளில் 16 ஆண்டு காலம் வைரஸ் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்.
2019 டிசம்பர் 30-ஆம் தேதி வுஹான் வைரஸ் ஆய்வுக் கழகத்திற்கு இரு மர்ம நோயாளிகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு வருகின்றன. புதிய வகையான கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதுவரையிலும் அறியப் படாத வைரஸ் கிருமிகள்.

இரண்டு நோயாளிகளுக்கும் வித்தியாசமான நிமோனியா (ஜன்னி சளிக்காய்ச்சல்). இந்தச் சளிக்காய்ச்சலின் வைரஸ்கள் புதியவை. இதுவரை கண்டு அறியப்படாத வைரஸ்கள். ஆனாலும் அவை கொரொனா சார்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள்.

இந்த வைரஸ்களினால் வுஹான் மாநகருக்குப் பெரும் ஆபத்து. நோயாளிகளின் உடலில் இருந்து இரத்த மாதிரிகளை எடுக்கும் போது தப்பு எதுவும் செய்து விட்டார்களா என்று ஷி செங்லி கலக்கம் அடைந்து போனார்.


ஒரு கட்டத்தில் ஷி செங்லியும் அவருடைய குழுவினரும் புதிய தொற்று நோயின் அடையாளத்தையும் தோற்றத்தையும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் தான் அந்தப் புதிய மர்ம நோய் காட்டுத்தீ போல் பயங்கரமாய்ப் பரவத் தொடங்கியது.

அண்மைய காலங்களில் கொரோனா கோவிட் என்பது உலகை பாதிக்கும் மிக மோசமான தொற்றுநோய் ஆகும். தெரிந்த விசயம்.

ஆனாலும் ஒரு புதிய மோசமான தொற்று நோய் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன; வளரும் நாடுகளில் மனிதர்களும் விலங்குகளும் மிக நெருக்கமாய் உறவாடுகிறார்கள் என்று உலக விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே எச்சரிக்கை செய்து வந்து இருக்கிறார்கள்.

மக்களும் கேட்கவில்லை. மாக்களும் கேட்கவில்லை. மன்னிக்கவும். நாய்களையும், பூனைகளையும், முயல்களையும், முதலைகளையும், மலைப்  பாம்புகளையும் முத்தம் கொடுத்து கொஞ்சிக் குலவும் சில மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். பத்திரம்.

 

உலகில் புதுப்புது நோய்கள் தோன்றிக் கொண்டு இருக்கின்றன. அவை வளர்ப்புப் பிராணிகளின் மூலமாகவும் மனிதர்களிடம் தொற்றிக் கொள்கின்றன. எந்த நேரத்திலும் ஒரு புதிய வைரஸ் வந்து கதவைத் தட்டலாம் என்பது எவருக்கும் தெரியாது. ஆக வளர்ப்புப் பிராணிகளைக் கொஞ்சுவதைத் தவிர்ப்பதே சிறப்பு.

ஒரு மனிதரும் இன்னொரு மனிதரும் ஆறு அடி தள்ளி நிற்க வேண்டும் என்று ஆலோசனைகள் சொல்லும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆகவே வளர்ப்புப் பிராணிகளைக் கொஞ்சிக் குலாவுவதைத் தவிர்ப்பதே நல்லது. சரி.

ஆய்வாளர் ஷி செங்லியின் வைரஸ் பயணங்கள் 2004 ஆம் ஆண்டில், குவாங்சியின் (Guangxi) தலைநகரான நானிங்கிற்கு (Nanning) அருகில் உள்ள வௌவால் குகைகளில் தொடங்குகின்றன. ஷி செங்லி குழுவினர் வௌவால்களைத் தேடி காடு மேடுகளில் அலைந்தனர். சமயங்களில் கிராமவாசிகள் உதவிகள் செய்தனர். மனித வாடையை அதுவரை அறிந்திராத குகைகளுக்குள் படுத்து, ஊர்ந்து, தவழ்ந்து போய் இருக்கின்றனர்.

முதலில் 2003-ஆம் ஆண்டில் முப்பதுக்கும் மேற்பட்ட குகைகளை ஆராய்ந்தனர். இருந்தாலும் இருபது வெளவால் வகையை மட்டுமே பார்க்க முடிந்தது. பின்னர்தான் நுற்றுக் கணக்கான குகைகளில் ஆய்வு நடத்தினார்கள்.

21-ஆம் நூற்றாண்டின் முதல் பெரிய தொற்று நோய் சார்ஸ் (SARS) பரவல். அதன் மூத்த முதல் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக அந்தக் குகைப் பயணம் அமைந்தது.இதற்கு முன்னர் ஹாங்காங் மருத்துவ ஆய்வுக் குழுவினர் சார்ஸ் நோய் பற்றி சொல்லி இருக்கின்றனர். ஆசியா, ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட புனுகுப் பூனைகள், கீரிப்பிள்ளைகள் போன்ற பாலூட்டிகளிடம் இருந்து சார்ஸ் கொரோனா கிருமிகள் வந்து இருக்கலாம் எனும் எச்சரிக்கை.

கொரோனா கிருமிகள் பற்றி அப்போது எவருக்கும் எதுவும் தெரியாது. கிருமியின் மேல் பகுதியில் கூர்மையான புரதங்கள் உள்ளன என்பது மட்டும் தெரியும். ஆனால் அந்த கிருமிதான் கொரோனா கிருமி என்று உறுதியாகத் தெரியவில்லை.

இருந்தாலும் கொரோனா கிருமிகள் எனும் ஒரு வகை கிருமிகள் உள்ளன. அவை சாதாரண சளிக்காய்ச்சலை மட்டும் தோற்றுவித்து விட்டுப் போய் விடுகின்றன. இந்த உண்மை முன்பே தெரியும். ஆனால் கொரோனா கோவிட் பற்றி மட்டும் எதுவும் ஆழமாய்த் தெரியாமல் இருந்தது. அப்போது ஆழமாக ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பதே வெள்ளிடைமலை.2011-ஆம் ஆண்டு ஒரு ஹாலிவூட் திரைப்படம். அதன் பெயர் கண்டேஜியன் (Contagion). அந்தப் படத்தில் வௌவால் பெண்மணி ஷி செங்லியின் வௌவால் வைரஸ்கள் பற்றி ஒரு காட்சி வந்து போகிறது. ஐயையோ… இப்படி ஒரு கொடிய வைரஸ் இருக்கிறதா என்று மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

அதற்கு எல்லாம் காரணம் ஷி செங்லி என்கிற ஒரு சாமான்யப் பெண்மணி. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை வைரஸ் ஆராய்ச்சிகளுக்காக அர்ப்பணிப்பு செய்தவர். கொரோனா கோவிட் பிரபலம் அடைவதற்கு முன்னாலேயே அப்படி ஒரு வைரஸ் இருப்பதாக உலகத்திற்கு முதன்முதலில் சொன்னவர். அவரை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும்.

அந்த பிறகு கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள் துரிதம் அடைந்தன. இந்தப் பயங்கரமான தொற்று, உலக அளவில் மக்களைப் பாதிக்கலாம் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. அந்தத் திரைப் படமே விலங்கு வைரஸ்களைப் பற்றி பெரிய அளவில் ஆய்வு செய்வதற்கு முன்னோடியாகவும் விளங்கியது.

அந்தப் படத்தின் நம்பகத் தன்மைக்கு உலகின் 85 விழுக்காட்டு மருத்துவ அறிவியலாளர்கள் பச்சைக் கொடி காட்டினார்கள்.

கொண்டேஜியன் அருமையான ஆனால் பிரமிகத்தக்க பேரழிவுகள் ஏற்படலாம் என்பதைச் சுட்டிக்காடும் திரைப்படம் (Contagion is an exceptionally smart – and scary – disaster movie) என்று புகழாரம் செய்தார்கள். சரி. ஷி செங்லியின் வைரஸ் ஆய்வுகளுக்கு வருவோம்.

புனுகுப் பூனைகளுக்கு வைரஸ் எப்படி வந்தது என்பது பெரும் புதிராகவே இருந்தது. இதற்கு முன்பு நிகழ்ந்த இரு சம்பவங்களை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

1994-ஆம் ஆண்டில் ஹெந்திரா வைரஸ்கள் (Hendra virus) ஆஸ்திரேலியாவை ஒரு வழிபண்ணி விட்டன. குதிரைகளில் இருந்து மனிதர்களிடம் தாவிக் குதித்த வைரஸ்கள்.

அடுத்து மலேசியாவின் 1998-ஆம் ஆண்டு நிப்பா வைரஸ் (Nipah virus). இந்த வைரஸ் பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பாய்ந்தது. இந்த இரண்டு வைரஸ் நோய்களும் பழந்தின்னி வெளவால்களின் நோய்க் கிருமிகளால் ஏற்பட்டவை என்று கண்டு அறியப் பட்டது.

அந்த இரு நோய்களுக்கும், குதிரைகள் - பன்றிகள் இடைநிலைப் புரவலர்களாக இருந்து இருக்கின்றன.

ஷி செங்லி 1964-ஆம் ஆண்டு சீனா ஹீனான் மாநிலத்தில் பிறந்தவர். வயது 56. வுஹான் பல்கலைக்கழகத்தில் படித்தவர். வுஹான் வைரஸ் ஆய்வுக் கழகத்தில் (Wuhan Institute of Virology) இருந்து மாஸ்டர்ஸ் பட்டம். பின்னர் பிரான்ஸ் மொண்ட்பெலியர் பல்கலைக்கழகத்தில் (Montpellier University) இருந்து முனைவர் பட்டம்.

2005-ஆம் ஆண்டில், ஷி ஜெங்லி தலைமையிலான குழுவினர் சார்ஸ் வைரஸ் கிருமிகள் வெளவால்களில் இருந்து தோன்றியதைக் கண்டு அறிந்தனர். அவர்களின் ஆய்வு முடிவுகள் 200-ஆம் ஆண்டு ‘சைன்ஸ்’ (Science) ஆய்வு இதழிலும்; ஜர்னல் ஆப் ஜெனரல் வைராலஜியிலும் (Journal of General Virology) வெளியிடப்பட்டன.

2014-ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சிக்காக அவருக்கு அமெரிக்க அரசாங்கம் பல அரசாங்க மானியங்களை (US Government grants) வழங்கியது. மேலும்...

சீனாவின் தேசிய அடிப்படை ஆராய்ச்சி திட்டம் (National Basic Research program of China)

சீன அறிவியல் அகாடமி (Chinese Academy of Science)

சீனாவின் தேசிய இயற்கை அறிவியல் அறக்கட்டளை (National Natural Science Foundation of China)

சீன அறிவியல் அகாடமி முன்னுரிமை ஆராய்ச்சி (Strategic Priority Research Program of Chinese Academy of Sciences)

கணிசமான அளவிற்கு மானியங்கள் வழங்கப் பட்டன. வுஹான் வைரஸ் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றும் போது வட கரோலினா அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வைரஸ் ஆய்வுகள் செய்தார். அப்போது இவர் மீது குற்றச்சாட்டுகள். அதிக ஆபத்தான வைரஸ்களுடன் ஆய்வு செய்கிறார் எனும் குற்றச்சாட்டு. அத்துடன் அமெரிக்கா மான்யம் வழங்குவதை நிறுத்திக் கொண்டது.

இவருக்கு கிடைத்த வெளிநாட்டு விருதுகள்.

2016-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் செவலியர் விருது

2018-ஆம் ஆண்டு அமெரிக்கா இயற்கை அறிவியல் விருது

2019-ஆம் ஆண்டு அமெரிக்கா அகாடமி நுண்ணுயிரியல் விருது


மனுக்குல நலன்களுக்காக அர்ப்பணிப்பு செய்தவர்களின் பட்டியலில் ஷி ஜெங்லி என்பவர் தனித்து நிற்கிறார். காடு மலைகளில் அலைந்து திரிந்து, வைரஸ் கிருமிகளை ஆய்வுகள் செய்து இருக்கிறார். மனிதர்களுக்கு இன்றும் உதவி செய்து வருகிறார். அந்தப் பெண்மணி நீண்ட நாட்கள் வாழ வேண்டும். பிரார்த்திக்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.04.2020
1 comment: