19 மே 2020

சிங்கப்பூர் ரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் - 1890

1859-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தாவரப் பூங்கா (Singapore Botanic Gardens) உருவாக்கப் பட்டது. 57 ஏக்கர் பரப்பளவு. தற்சமயம் தாங்லிங் (Tanglin) பகுதியில் உள்ளது. முன்பு காலத்தில் நிறையவே காட்டுப் புலிகள் கட்டிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாடிய இடம். 


அந்தத் தாவரப் பூங்காவில் உள்ள 15 ஏக்கர் காட்டை அப்படியே அசலாக விட்டு விட்டார்கள். இன்று அது ஒரு குட்டி அமேசான் பச்சைக்காடு.

இந்தப் பூங்காவிற்கு அருகில் 1840-ஆம் ஆண்டுகளில், ஒரு பெரிய ஜாதிக்காய் தோப்பு (nutmeg plantation) இருந்தது. லாரன்ஸ் நீவன் (Lawrence Niven) என்பவர் ஜாதிக்காய் அறுவடை செய்து வந்தார். ஒன் மினிட் பிளீஸ்.

அந்தக் காலத்தில் ஜாதிக்காய்க்கு இங்கிலாந்தில் ரொம்பவும் கிராக்கி. இங்கிலாந்தில் என்ன... இந்தியா பாரசீக நாடுகளிலும் தான். 
 

ஆண்மையைப் பெருக்கிவிடும் பாரம்பரிய ஆற்றல் ஜாதிக்காய்க்கு உண்டு. தெரியும் தானே. அதற்காக ரொம்பவும் சாப்பிட வேண்டாம். தலைசுற்றல் வந்து நாலு நாளைக்கு காது கேட்காது.

ஆக லாரன்ஸ் நீவன் அவர்களுக்குச் சிங்கப்பூர் தாவரப் பூங்காவில் மேற்பார்வையாளர் பதவி. அவரும் நன்றாக வேலை செய்து சிங்கப்பூரில் ஐந்தாறு சின்னச் சின்னப் பூங்காக்களை உருவாக்கி விட்டார். நல்ல பேரும் வாங்கி விட்டார்.

சிங்கப்பூர் தாவரப் பூங்காவில் தான் ரப்பர் கன்றுகள் முதன்முதலில் நடப் பட்டன. 1877 ஜூன் 11-ஆம் தேதி. அதில் இருந்து சிங்கப்பூரின் ரப்பர் வரலாறும் தொடங்குகிறது.

1885-ஆம் ஆண்டு சிங்கப்பூர் புக்கிட் தீமா காடுகளை அழித்து ரப்பர் மரங்களை நட்டு உலக மக்கள் புகழச் செய்தார்கள். செய்தவர்கள் தமிழர்கள். அந்தச் சமயத்தில் ரப்பர் தோட்டங்கள் உருவாகவில்லை.
 

சிங்கப்பூரில் முதல் ரப்பர் தோட்டம் 1886-ஆம் ஆண்டு புக்கிட் தீமாவில் உருவாக்கப் பட்டது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர் ரப்பரின் தந்தை என்று புகழப்படும் எச்.என். ரிட்லி (Henry Nicholas Ridley). அதன் பின்னர் சிங்கப்பூரில் அடுத்தடுத்து ரப்பர் தோட்டங்கள் உருவாகின.

ஆனாலும் முதன்முதலில் சிங்கப்பூர் தாவரப் பூங்காவில் தான் ரப்பர் கன்றுகள் பெரிதாக வளர்ந்தன. அங்கே தான் முதன்முதலில் பால்மரம் சீவினார்கள். இரட்டைக் கோடு எனும் டச்சு முறையையும் அங்கேதான் அமல் படுத்தினார்கள்.

அப்போது சுமத்திரா மேடான் பகுதியில் டச்சுக்காரர்கள் ரப்பர் பயிர் செய்தார்கள். நன்றாகவே கல்லா கட்டிக் கொண்டு இருந்தார்கள். அந்தக் கல்லா கட்டும் ஆசை, இந்தப் பக்கம் இருந்த சிங்கப்பூர் வெள்ளைக்காரர்களையும் துவைத்து துவம்சம் செய்து விட்டது. 
 

நீயானா நானா போட்டியில் நான்தான்டா ஜெயிச்சேன் என்று பக்காவாகப் படம் பிடித்து தண்டோரா போட்டார்கள். வெள்ளைக்காரர்கள் விளம்பரப் பிரியர்கள். தெரியும் தானே. அதிலும் ரப்பர் காட்டில் கோட் சூட் போட்டு சூப்பராகப் படம் பிடிப்பது என்றால் அவர்களுக்கு கொள்ளை ஆசை.

படத்தில் உள்ள தமிழ்ப் பெண்மணியை ஒரு காட்சிப் பொருளாகப் படம் காட்டி படம் எடுத்து இருக்கிறார்கள். மன்னிக்கவும். படம் காட்டுகிறார்கள்.

மலாயாவில் மட்டும் அல்ல. சிங்கப்பூரில் மட்டும் அல்ல. உலகம் முழுமைக்கும் தமிழர்கள் வியர்வை சிந்தி உழைத்து இருக்கிறார்கள். இரத்தம் சிந்தி சரித்திரம் படைத்து இருக்கிறார்கள். தமிழர்களின் உழைப்பை வையகமும் மறக்காது. வானகமும் மறக்காது.

1300-ஆம் ஆண்டுகளில் மீன்பிடிக் கிராமமாக இருந்த சிங்கப்பூரைச் சிறப்புமிக்க வணிகத் தளமாக மாற்றியவர்கள் நீல உத்தமனின் வாரிசுகள். 1900-ஆம் ஆண்டுகளில், அதே சிங்கப்பூரில் வான் முட்டும் காடுகளைத் திருத்திப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டியவர்கள் அந்த வாரிசுகளின் வாரிசுகள். தமிழர்கள்.

இந்தப் பதிவின் இணைய முகவரி:

https://ksmuthukrishnan.blogspot.com/2020/05/1890.html

புகைப்படத்தின் விவரங்கள்:

*1890 Bukit Timah Tamil Woman*

Source: National Archives of Singapore
Unedited Description: FIVE PEOPLE AMONG RUBBER TREES SINGAPORE
Covering Date: 1890 - 1923
Media - Image No: 20150000089 - 0008
Source Reference No: LC-USZ62-120357

தயாரிப்பு:
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
19.05.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக