11 ஜூன் 2020

மஜபாகித் மகாராணியார் சுகிதா

இந்தோனேசியாவை ஆட்சி செய்த பேரரசுகளில் ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு எனும் இருப் பேரரசுகளும் மிகவும் புகழ்ப் பெற்றவை. இவற்றுள் மஜபாகித் பேரரசு 1293–ஆம் ஆண்டில் இருந்து 1517-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தது. 

The mortuary deified portrait statue of Queen Suhita, the empress of Majapahit (reign 1429-1447 CE).
The statue discovered at Jebuk, Kalangbret, Tulungagung, East Java, Indonesia.
Colection of National Museum of Indonesia, Jakarta. Source: Wikipedia

மஜபாகித் பேரரசை 13 அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் இருவர் பெண்கள்.

1. மகாராணியார் திரிபுவனா விஜயதுங்காதேவி (Tribhuwana Wijayatunggadewi) - ஆட்சிக்காலம் (1328 – 1350)

2. மகாராணியார் சுகிதா (Suhita எனும் Soheeta) - ஆட்சிக்காலம் (1429 – 1447)


மகாராணியார் சுகிதா என்பவர் மஜபாகித் அரசர்களில் ஆறாவதாக வருகிறார். இவர் விக்ரமவரதனா (Wikramawardhana) மாமன்னரின் மகளாவார். விக்ரமவரதனா என்பவர் மஜபாகித் அரசர்களில் ஐந்தாவது அரசர்.

1404-ஆம் ஆண்டில் இருந்து 1406-ஆம் ஆண்டு வரை மஜபாகித்தில் ஓர் உள்நாட்டுப் போர் நடந்தது. அதன் பெயர் பாரிகிரேக் போர் (Paregreg war).  மஜபாகித்தை ஆட்சி செய்து கொண்டு இருந்த மாமன்னர் விக்ரமவரதனா அவர்களுக்கும் பெரு வீரபூமி (Bhre Wirabhumi) என்பவருக்கும் இடையே நடந்த போர். அதில் பெரு வீரபூமி காலமானார். 


காலமான பெருவீரபூமிக்கு ஒரு மகள் இருந்தார். அவருடைய பெயர் பெரு தாகா (Bhre Daha). இவரை மாமன்னர் விக்ரமவரதனா திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருந்தார். அவருடைய பெயர் குஷ்மாவர்த்தினி (Kusumawardhani). அதனால் மாமன்னர் விக்ரமவரதனாவுக்கு பெரு தாகா ஒரு வைப்பாட்டி எனும் தகுதியைப் பெற்றார். 

விக்ரமவரதனா - பெரு தாகா தம்பதியினருக்குப் பிறந்தவர் தான் மகாராணியார் சுகிதா. இவரின் அசல் பெயர் பிரபு ஸ்ரீ சுகிதா (Prabu Stri Suhita).

இந்தோனேசியர்கள் அழகுபடுத்திப் பார்க்கும் சுகிதா

இவருடைய தாயாரின் பெயர் சுரவர்த்தனி (Surawardhani). இவர் தன் கணவர் பெரு ஹியாங் பரமேஸ்வரா என்பவருடன் இணைந்து ஆட்சி செய்தார். கணவர் பெரு ஹியாங் பரமேஸ்வராவின் மற்றொரு பெயர் ரத்னபங்கஜா.

மகாராணியார் ஸ்ரீ சுகிதாவின் ஆட்சியை மறுமலர்ச்சியான ஆட்சி என்று வர்ணிக்கிறார்கள். நுசாந்தாரா வட்டார நிலப் பகுதிகளில் பல அபிவிருத்தி திட்டங்களைக் கொண்டு வந்தார்.

பல்வேறு வழிபாட்டுத் தலங்களை உருவாக்கினார். புகழ்பெற்ற லாவு எரிமலையின் சரிவுகளில் கோயில்களையும் கட்டி இருக்கிறார். இவர் ஆட்சி ஏற்ற போது மஜபாகித் பேரரசில் பெரும் குழப்பங்கள்.
The graceful Bidadari Majapahit, golden celestial
apsara in Majapahit style.
Source: Wikipedia

மஜபாகித் அரசிற்கு அருகாமையில் இருந்த பிலம்பாங்கான் அரசு (Blambangan) பெரும் தொல்லைகளைக் கொடுத்து வந்தது. அந்த அரசுடன் போர் செய்து வெற்றியும் பெற்றார். அத்துடன் உள்நாட்டில் அடிக்கடி ஏற்பட்டு வந்த குழப்பங்களையும் சமாளித்து ஆட்சி செய்தார்.

ஜாவாவில் ஒரு புராணக் கதை உள்ளது. அதன் பெயர் தாமார்வூலான் (Damarwulan). இப்போதுகூட வாயாங் கூலிட் எனும் பொம்மலாட்டக் கதையாக படைக்கப் படுகிறது. அந்தப் பொம்மலாட்டக் கதையில் பிரபு கென்யா (Prabu Kenya) எனும் கதாபாத்திரம் வருகிறது. அந்தக் கதாபாத்திரம் தான் மகாராணியார் சுகிதா.

A 1.79 kilogram, 21-karat Majapahit period gold image discovered in Agusan,
Philippines, copied Nganjuk bronze images of the early Majapahit period.
Source: Wikipedia

மகாராணியார் சுகிதா மஜபாகித் பேரரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக என்ன செய்தார் தெரியுங்களா? தன் தகப்பனாரைக் கொன்ற ராடன் காஜா (Raden Gajah) என்பவரைத் தேடிப் பிடித்து தூக்கிலிட்டது தான் அவர் செய்த முதல் வேலை. ராடன் காஜாவின் மற்றொரு பெயர் பர நரபதி (Bhra Narapati).

(During the reign of Suhita, the killer of Bhre Wirabhumi, Raden Gajah, was punished by death sentence in 1433)

கிழக்கு ஜாவாவில் தூலுங்காங் மாவட்டம் (Jebuk, Kalangbret) ஜெபுக் எனும் இடத்தில் ஒரு கற்சிலையை 2010-ஆம் ஆண்டில் கண்டு எடுத்தார்கள். அந்தக் கற்சிலை மகாரணியார் சுகிதாவைச் சித்தரிக்கும் கற்சிலையாகும்.
 
Golden image of a mounted rider, possibly the Hindu god Surya, within a stylised solar halo.
14th-century Majapahit art, National Museum Jakarta.
Source: Wikipedia

காதுகளில் பதக்கங்கள்; கழுத்து அட்டிகை; கை வளையல்கள்; கால் கொலுசுகள்; பல்வேறு இடுப்பு அட்டிகை ஆபரணங்களை அணிந்து இருக்கும் கற்சிலை. பாரம்பரிய அரச உடை அணியப்பட்டு இருந்தன. அவருடைய வலது கரத்தில் தாமரை மொட்டு.

இந்தச் சிலை இப்போது இந்தோனேசியா தேசிய அரும் காட்சியகத்தில் (National Museum of Indon) பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
இந்தோனேசியா பள்ளிப் பாடநூலில் சுகிதா
சீனாவில் உள்ள பெய்ஜிங் அருங்காட்சியகத்தில் மஜபாகித் பற்றிய வரலாற்றுச் சுவடுகள் உள்ளன. அதில் சுகிதாவின் பெயரை சுகிந்தா (Su-king-ta) என்று சொல்லப்பட்டு உள்ளன.

1437-ஆம் ஆண்டு சுகிதாவின் கணவர் ரத்னபங்கஜா காலமானார். கணவர் இறந்து பத்து வருடங்கள் கழித்து 1447-ஆம் ஆண்டு சுகிதாவும் காலமானார். இவர்களுக்கு ஜாவா சிங்கஜெயா (Singhajaya) எனும் இடத்தில் சமாதிகள் எழுப்பப்பட்டு உள்ளன.

சுகிதாவுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அவரின் ஒன்றுவிட்ட சகோதரனின் மகன் தியா கர்த்தவிஜயன் (Dyah Krtawijaya) என்பவரை மஜபாகித் அரசராக நியமித்துவிட்டு இறந்து போனார்.
 
இந்தோனேசியர்கள் அழகு பார்க்கும் சுகிதா
மகாரணியார் சுகிதா அவர்கள் மஜபாகித்தை ஆட்சி செய்யும் போது மலாக்காவில் பர்மேஸ்வராவின் மகன் மெகாட் இஸ்கந்தார் ஷா (Megat Iskandar Shah) ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.

இப்போதைய காலத்தில் தான் பெண்கள் பிரதமர்களாகவும் மகாராணிகளாகவும் ஆட்சி புரிகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. 600 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்கள் ஆட்சி பீடங்களில் அழகு செய்து இருக்கிறார்கள். போற்றுதலுக்கு உரிய செய்தி. பெருமைக்கு உரிய செய்தி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.06.2020

1. Cœdès, George (1968). Vella, Walter F. (ed.). The Indianized States of Southeast Asia. Translated by Brown Cowing, Sue. Honolulu: University of Hawaii Press. p. 241.

2. Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd ed.). Stanford University Press / Macmillans.

3. Jan Fontein, R. Soekmono, and Satyawati Suleiman. Ancient Indonesian Art of the Central and Eastern Javanese Periods, New York: Asia Society Inc., 1971, p. 146-147.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக