08 ஜூன் 2020

சீனாவின் முத்துமாலை இந்தியாவிற்கு நச்சுமாலை

இந்தியர்களின் வாழ்வில் இந்தியப் பெருங்கடல் ஓர் அட்சயப் பாத்திரம். அள்ள அள்ளக் குறையாத அமுதப் பாத்திரம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்  அன்னதானம் செய்த அழகுப் பாத்திரம். மகாபாரதத்தின் பாண்டவர்களையே மிஞ்சிய அற்புதமான ஒரு நீர்க் கோத்திரம்.



ஆனால் அண்மைய காலங்களில் அவர்களுக்கே ஒரு நச்சுப் பேழையாகவும் மாறி வருகிறது. அந்த இந்தியப் பெருங்கடலில் அரசியல் சாணக்கியம் அழகாய்த் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

இந்தியப் பெருங்கடலில் ஒரு சின்னக் குட்டித்தீவு. பெயர் கச்சத்தீவு. இந்தியாவுக்குச் சொந்தமானது. ஆனால் சில பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்திரா காந்தியால் இலங்கைக்குத் தாரை வார்க்கப் பட்டது.

அந்தக் கச்சத்தீவில் இப்போது என்ன நடக்கிறது தெரியுமா. சீனா தன்னுடைய சூப்பர் ராட்சசக் கப்பல்களை எல்லாம் நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் அமெரிக்கா தடுமாறுகின்றது. இரண்டும் கெட்டான் நிலையில் இந்தப் பக்கம் இந்தியா தத்தளிக்கின்றது.




ஆக இந்தக் கச்சத் தீவில் இருந்துதான் சீனாவின் முத்துமாலைத் திட்டம் தொடங்குகிறது. அதற்கு முன்னால் ஒரு கொசுறுச் செய்தி.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், மன்னார்க்குடி பகுதிகளில் ஆயிரக் கணக்கான தமிழ்ப் பெண்கள் தாலி அறுத்தார்கள். யார் காரணம் தெரியுங்களா. ஸ்ரீ லங்கா எனும் இலங்கை தான் மூல காரணங்களில் மூதேவிக் காரணம். மன்னிக்கவும். சீதேவி மூதேவியான பிறகு அப்புறம் என்னங்க மதிப்பு மரியாதை.

ஆக கச்சத் தீவில் இருந்துதான் நதிமூலம் ரிஷிமூலம் எல்லாமே தொடங்குகின்றன. 




இலங்கைக்குச் சின்ன அண்ணன் சீனா துணை போனது. பெரிய அண்ணன் அமெரிக்கா தெரிந்தும் தெரியாதது மாதிரி கண்ணைக் கட்டிக் கொண்டது. அப்புறம் ஒரு பத்தினி விரதையின் ருத்ர தாண்டவம்.

மூடு மந்திரம் போடாமல் சொன்னால் ஒரு பத்ரகாளியின் கபட நாடகம். என் புருஷனைக் கொன்ற இனத்தையே எரித்துச் சாம்பலாக்கிக் காட்டுகிறேன் என்கிற அமாவாசை சபதம். அதில் இட்லி சாம்பாரை மறந்துவிட்ட புலிகேசியின் போர்க் கோலம்.

நல்லவேளை. இளங்கோவடிகள் இல்லை. இருந்து இருந்தால் நமக்கு இன்னும் ஒரு சிலப்பதிகாரம் கிடைத்து இருக்கும். அந்தக் காப்பியத்திற்கு ‘பஞ்சமா பாதகம்’ என்று பெயர் வைத்து இருக்கலாம். மறைந்து போன தமிழ்த் தலைவரை அழைத்து வாழ்த்துரையும் எழுதச் சொல்லி இருக்கலாம்.


சரி. முத்துமாலை திட்டத்திற்கு வருகிறேன். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக நாடுகள் இரு பெரும் குழுக்களாகப் பிரிந்து போயின. அமெரிக்கா தலைமையில் ஒரு குழு.

சோவியத் ரஷ்யாவின் தலைமையில் மற்றொரு குழு. கம்யூனிசத் தோழமை நாடுகள் இணைந்த ஒரு குழு. இந்த இரு அணிகளும் மறைமுகமான போரில் மஞ்சள் குளித்தன. அதைத்தான் பனிப்போர் (Cold War) என்று அழைத்தார்கள்.

பின்னர் 1980-களில் சோவியத் யூனியன் உடைந்து உதிர்ந்து போனது. பனிப்போருக்கும் மஞ்சள் காமாலை வந்து ஒரு தேக்க நிலையை அடைந்தது. பலருக்கும் தெரிந்த விசயம்.




அதன் பின்னர் அரசியல் உலகில் பெரிய பெரிய மாற்றங்கள். பொருளாதாரத்தில் சீனா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டது. இந்தக் கட்டத்தில் அமெரிக்காவின் வலிமை அப்படி ஒன்றும் பெரிதாகக் குறைந்து போய் விடவில்லை.

இருந்தாலும் அமெரிக்கச் சீன உறவில் என்ன நடக்கிறது என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

இதை எழுதிக் கொண்டு இருக்கும் போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு பெரிய அரசியல் போராட்டமே நடந்து கொண்டு இருக்கிறது. கொரோனா வந்ததில் இருந்து அதிபர் டிரம்ப சீனாவின் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து கொண்டு இருக்கிறார். இருந்தாலும் சீனா அமைதியாய் ’கொரோனா நவீனா… உன் குரல்வளையைப் பிடிக்கும்டா’ என்று வீணை வாசித்துக் கொண்டு இருக்கிறது. பார்ப்போமே.




சீனாவுக்கு இன்னும் ஒரு பக்கா பிளேன். தன் பக்கத்துப் பங்காளி நாடான இந்தியா முன்னேற்றம் அடைந்துவிடக் கூடாது என்பதில் சீனா மிக மிகக் கவனமாக இருக்கிறது.

சொக்கட்டான் காய்களைச் சொகுசாகவும் நகர்த்தி வருகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் சகுனிக்குச் சவால் விடும் மாஸ்டர் பிளேன். இதன் காரணமாக உருவானதே சீனாவின் இந்த முத்துமாலைத் திட்டம்.

சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தியா ஒரு வல்லரசாக ஆகிவிடக் கூடாது. அதுதான் சீனாவின் தலையாய நோக்கம். அதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த முத்துமாலைத் திட்டம்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்கெனவே போர்கள் நடந்து உள்ளன. இந்தியாவுக்குத் சிற்சில தோல்விகளும் ஏற்பட்டு உள்ளன. 




இந்தியா சீனா இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப் படக் கூடியவை தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் சில பிரச்சினைகள் அண்மைய காலத்து ஜென்மத்தில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள்.

அருணாசலப் பிரதேசம் தங்களுடையது என்கிறது சீனா. இல்லை இல்லை. எங்களுடைய பாரம்பரிய சொத்து என்கிறது இந்தியா. ஸ்ரீ விஜயப் பேரரசு எங்கள் பாட்டன் முப்பாட்டன் சொத்து என்று ஒரு சாரார் சொல்லவில்லையா. வெட்கமாக இருக்கிறது.

எப்படி ஐயா இது. கட்டின புருஷன் குத்துக் கல்லாக நிற்கும் போதே பக்கத்து வீட்டுக்காரன் வந்து அது எல்லாம் இல்லை இவள் என் பெண்ஜாதி என்றால் எப்படிங்க. சொல்லுங்கள். 




இந்தியாவின் வடக்கே காஷ்மீர். அதைச் சீனா ஏற்பதாக இல்லை. அதனால் காஷ்மீர் போராட்டத்தில் பாகிஸ்தானுக்குச் சீனா ஆதரவை வழங்கி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் அபகரித்துக் கொண்டது.

1948-ஆம் ஆண்டு நடந்தது. அப்படி அபகரித்துக் கொண்ட பகுதியை ’இந்தா எடுத்துக்கோ’ என்று கொஞ்ச நாட்களுக்கு முன்னதாகச் சீனாவுக்கே பாகிஸ்தான் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. 

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை தெரியும் தானே. கற்பனை செய்து கொள்ளுங்கள்.




இன்னொரு பக்கம் சீனாவுக்குப் பிடிக்காத திபெத்தின் ஆன்மிக, அரசியல் விவகாரம். தலைவர் டாலாய் லாமாவுக்கு இந்தியா இடம் கொடுத்தது சீனாவுக்கு மொக்கைத் தலைவலி. கோபத்தையும் தாபத்தையும் உண்டாக்கி சீறும் சிங்கமாக மாற்றி விட்டது. மெட்ராஸ் பாஷையில் சொன்னால் கடுப்பேத்தி விட்டது.

சீனாவின் முத்துமாலைத் திட்டம் உருவாவதற்கு அந்தக் கடுப்பும் ஒரு காரணம். சரி. இதைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவின் அண்டை நாடுகளாக இருப்பவை பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூத்தான், வங்காளதேசம், மியான்மார், இலங்கை, மாலைத் தீவுகள். இவற்றைத் தவிர கடல் பகுதிகள் என்று சொன்னால் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல், மாண்டேப் நீரிணை (Strait of Mandeb), மலாக்கா நீரிணை, பாக் நீரிணை. இன்னும் சில உள்ளன. 




இந்தக் கடல் பகுதிகளில் உள்ள வேறு சில நாடுகள் தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தைவான், ஜப்பான் ஆகியவை. இவையும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் கடல், நிலப் பகுதிகளில் சீனா தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்புகிறது. சட்டாம் பிள்ளையாகவும் மாறி வருகிறது.

ஆக தனக்கு எந்த எந்த நாடுகள் ஆதரவாக இருக்கின்றனவோ; எந்த எந்த நாடுகள் தன்னுடைய பொருளாதாரத்தை நம்பி இருக்கின்றனவோ; அந்த அந்த நாடுகளில் எல்லாம் சீனா தனது இராணுவ முகாம்களை அமைத்து வருகிறது.

நவீன ரோந்துக் கப்பல்களை அனுப்பி வருகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களைக் கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கிறது. தொழிலாளர்கள் எனும் போர்வையில் உளவாளிகளையும் நிறுத்தி வைக்கிறது.




வங்காளதேசத்தில் சிட்டகாங் (Chittagong) எனும் துறைமுகம் இருக்கிறது. சீனா தன்னுடைய கப்பல்களுக்காக அங்கே ஒரு பிருமாண்டமான  துறைமுகத்தையே கட்டிவிட்டது. மியான்மாரின் சித்வேய் (Sittwe) எனும் இடத்தில் நவீனமான ஒரு துறைமுகத்தையும் சீனா உருவாக்கி விட்டது.

பாகிஸ்தானின் குவதார் (Gwadar) என்ற இடத்தில் தனது கப்பல் படைக்காக ஒரு முகாமையே கட்டிவிட்டது. இலங்கை ஹம்பண்டோடாவில் (Hambantota) ஒரு மாபெரும் கப்பல் படை தளத்தையே உருவாக்கி இருக்கிறது. அந்தமான் தீவுகளிலும் சீனா நெருக்கி வருகிறது. இந்தியாவின் நான்கு மூலைகளிலும் நான்கு முட்டுக் கட்டைகள்.

இந்த நேரத்தில் இந்தியத் தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேட்கலாம். பாவம் அவர்கள். பெரிய அண்ணன் அமெரிக்கா உதவிக்கு வருவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. 




இருந்தாலும் சுவிஸ் வங்கியில் போட்டு இருக்கும் பணத்தை எப்படி எங்கே கொண்டு போவது என்பதைப் பற்றி யோசிப்பதிலும் சிலர் தீவிரமாக இருக்கிறார்கள். சுவிஸ் கணக்கு என்றால் சும்மாவா. தலைபோகிற விசயம் இல்லையா.

அந்த வகையில் இந்தியாவின் மீது உள்ள வெறுப்பின் காரணமாக பாகிஸ்தான் காலா காலத்திற்கும் சீனாவின் கைக்குள்தான் அடங்கி இருக்க வேண்டும். வாயைப் பொத்திக் கொண்டு தான் வாசிக்க வேண்டும்.

வங்காள தேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கே ஆட்சிகள் மாறி மாறி வருகின்றன. ஷேக் ஹசீனா (Sheikh Hasina Wazed) இந்திய ஆதரவாளர். ஆனால் ஏற்கனவே இருந்த பேகம் காலிதா ஜியா (Khaleda Zia) இருக்கிறாரே அவர் இந்திய எதிர்ப்பாளர். இவர் ரொம்ப நாள்களுக்கு முன்னாலேயே சீனாவின் ஆதரவாளராகி விட்டார். 




மியான்மாரில் இராணுவத்தின் ஆட்சி இருந்தது. இப்போது இல்லை. லேசாக ஜனநாயகத்தின் மழைத் தூறல்கள். கொஞ்சம் பரவாயில்லை.

சீனா, இந்தியா இரண்டு நாடுகளில் இருந்தும் மியான்மார் உதவிகளைப் பெற்றுக் கொள்கிறது. சீனாவின் ஆயுதங்களையும் பெரிதும் நம்ப வேண்டி இருக்கிறது. நல்ல ஒரு தலையாட்டி பொம்மை.

இதனால் இந்தியாவிற்கு மியான்மாருடன் இணங்கிப் போக வேண்டும் எனும் ஒரு கட்டாய நிலை. அதற்குள் மியான்மாரில் சீனா இரும்புப் பிடியைப் போட்டு விட்டது. தளர்த்த முடியவில்லை.

இலங்கைப் பொருத்த வரையில் சீனாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தாராளமான கடன் வசதிகள். இலங்கை கேட்கும் ஆயுத ஆபரணங்களுக்கு தங்க முலாம் பூசி கூடுதலாகவே சீனா கொடுத்தது. கொடுத்தும் வருகிறது. அப்புறம் தமிழர்களை அடியோடு கருவறுக்கப் பெரிதும் உதவியது. 




ஐக்கிய நாட்டுச் சபையில் இலங்கைக்குப் பிரச்னை என்றால் சீனா வக்காளத்து வாங்குகிறது. நன்றிக் கடனாக ஹம்பண்டோடா துறைமுகம் சீனாவுக்குப் பரிசாகக் கிடைத்தது.

இலங்கையைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமைகளும் சீனாவுக்குக் கிடைத்தன. தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கையைப் பார்த்து சீனா சலாம் போடுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளை எடுத்துக் கொண்டால், சீனா அங்கே ஏகப்பட்ட முதலீடுகளைச் செய்து உள்ளது. பல நாடுகளுக்கு பலவகையான மான்யங்களைக் கொடுக்கிறது. இந்தா எடுத்துக்கோ என்று அள்ளி இறைக்கிறது.

அரைக்காசு முக்கால் காசு வட்டிக் கடனில் உதவிகளைச் செய்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மிக முக்கியமான சக்தியாக இப்போது சீனா விளங்கி வருகிறது. தரணி போற்றும் தாதா என்று தன்னைத் துதிக்க வேண்டும் என்று சீனா கடை விரித்துக் கல்லா கட்டுவதாகத் தகவல்கள் கசிகின்றன.




இந்தியா, சீனா இரண்டு நாடுகளுக்குமே ஆப்பிரிக்க நாடுகளின் உதவிகள் மிக மிக அவசியம். அதற்கு ஏற்ற சூப்பரான திட்டம் சீனாவிடம் கைவசம் உள்ளது. அதுதான் இந்த முத்துமாலைத் திட்டம்.

அந்த மாதிரியானத் திட்டம் இந்தியாவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. உலக அளவில் எண்ணெய் வளங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனாவே முன்னுக்கு நின்று முதலீடுகளைச் செய்து வருகிறது. ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளையாகிவிட்டது.

இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு முன் என் கருத்தைச் சொல்லி விடுகிறேன். இந்தியாவுக்கு இப்போதைக்கு வல்லரசுக் கனவுகள் எதுவும் தேவை இல்லை. முக்கியமும் இல்லை. சீனா கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கு நல்ல ஒரு மாற்று மருந்தை உடனடியாக இந்தியா கண்டுபிடித்தாக வேண்டும்.


இந்தியாவை இப்படி சீனா சுற்றி வளைக்கிறதே இதனால் என்ன ஆபத்துகள் வரும் என்று இந்திய அரசியல்வாதிகள் சிந்திப்பதாகவும் இல்லை. அது தொடர்பாக இந்தியப் பொதுமக்களுக்கு உண்மையான தகவல்களும் போய்ச் சேர்வதாகவும் இல்லை. 



இந்தியா இப்போதே உடனடி மாற்று நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இராணுவ, பொருளாதார, போர்த் தந்திர நிபுணர்களைப் பொறுக்கி எடுத்து நல்ல ஆக்ககரமானத் திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

இல்லை என்றால் சீனா பின்னி வரும் முத்துமாலைத் திட்டம் இந்தியாவின் கழுத்தையே நெரிக்கும் ஒரு நச்சு மாலையாக மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

அண்டார்டிக்கா பிறந்த நாள்; அம்மா இறந்த நாள் என்பதை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு முதலில் முத்துமாலைத் திட்டத்தின் பின்னணியைக் கவனிக்க வேண்டும்.

இந்தியாவை வல்லரசாக ஆக்குவது எல்லாம் அடுத்த திட்டமாக இருக்கட்டும். வெள்ளம் தலைக்கு மேலே போய்க் கொண்டு இருக்கிறது. அணையைப் போட வேண்டும். அணைக் கொத்தியின் வாலைப் பிடித்து அழகு பார்க்கிற நேரம் இல்லை இது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.06.2020


சான்றுகள்:

1. C. Raja Mohan (28 November 2012). Sino-Indian Rivalry in the Indo-Pacific. Brookings Institution Press, 2012. ISBN 978-0870033063.

2. David H. Shinn. "Military and Security Relations: China, Africa and the rest of the world." In: Robert I. Rotberg. "China into Africa: Aid, trade and influence".

3. Joseph, Josy. "Delhi entangled in the Dragon's String of Pearls" Archived 10 October 2013 at the Wayback Machine, DNA, New Delhi, 11 May 2009.

4. Kostecka, Daniel. "Hambantota, Chittagong, and the Maldives – Unlikely Pearls for the Chinese Navy" Archived 10 April 2016 at the Wayback Machine, China Brief, 19 November 2010.

5. "India, US need to partner to balance China in Indian Ocean" Archived 1 June 2013 at the Wayback Machine, The Economic Times, Washington, 2 September 2010.

6. Samaranayake, Nilanthi. 2011. "Are Sri Lanka's Relations with China Deepening? An Analysis of Economic, Military, and Diplomatic Data" Archived 4 April 2019 at the Wayback Machine, Asian Security 7 (2): 119-146.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக