08 ஜூன் 2020

தெலுக் இந்தான் இரயில் கவிழ்ந்த கதை

1894-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி. மலாயா வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சி. பேராக், தெலுக் இந்தானில் ஒரு யானை ஓர் இரயிலைக் கவிழ்த்த நிகழ்ச்சி. 126 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. மனதை உலுக்கி எடுக்கும் நிகழ்ச்சி.
 


பந்தம் பாசம்; சொந்தம் சுகம்; உறவு துரவு என்பது எல்லாம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல. வாயில்லா ஜீவன்களுக்கும் உள்ளன. அந்த வகையில் அமைதியான மௌன ராகத்தில் ஆழ்ந்து போன ஒரு ஜீவனின் கதை வருகிறது. அதுவே வாய் இருந்தும் பேச முடியாத ஓர் அழகிய ஆத்மாவின் கதை.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் தன் கன்றுக் குட்டியை ஓர் இரயில் மோதித் தள்ளியது. அந்தக் குட்டி இறந்து போனது. தாய் யானை அந்த இரயிலைப் பழி வாங்க நினைத்தது. அந்த இரயிலுக்காகக் காத்து நின்றது. இரயிலும் வந்தது. 




தன் உயிரைப் பணயம் வைத்து அந்த இரயிலை எதிர்த்து நின்றது. 80 கி.மீ. வேகத்தில் வந்த இரயில் யானை மீது மோதியது. இரயில் கவிழ்ந்தது. யானையின் உயிரும் போனது. இன்றும் தெலுக் இந்தானில் மக்கள் அதைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள்.

சம்பவம் நடந்த தினத்தில் இரயில் தாப்பாவில் இருந்து தெலுக் இந்தானுக்குப் போய்க் கொண்டு இருக்கிறது. ரொம்பவும் வேகம் என்று சொல்ல முடியாது. மத்திம வேகம். 80 கி.மீ. வேகம்.

நடுக்காட்டில் நட்ட நடுப் பாதை. இரயில் ஓட்டுநரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பலமுறை சத்தமாக ஹார்ன் அடித்துப் பார்த்தார். யானை நகர மறுத்து விட்டது. வேறு வழி இல்லை. வந்த வேகத்தில் இரயில் யானையுடன் மோதியது.


அந்த மோதலில் இரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இரயிலில் பெரும்பாலும் ஆங்கிலேயப் பெரும் புள்ளிகள்; மேலும் சில சீன வர்த்தப் புள்ளிகள். கிந்தா பள்ளத் தாக்கில் ஈயச் சுரங்கங்களைப் பார்த்து விட்டு, கோலாலம்பூருக்குத் திரும்பிக் கொண்டு இருந்தவர்கள்.

அந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்கள். மருத்துவமனையில் மரணம் அடைந்தார்கள். பயணிகள் சிலரும் காயம் அடைந்தார்கள்.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். இறந்து போனவர்கள் தமிழர்கள். ஆக மலாயாவில் நடந்த இரண்டாவது இரயில் விபத்தில் இறந்து போனவர்கள் தமிழர்கள். இந்த நிகழ்ச்சி நடந்தது 1894. அப்போதே தமிழர்கள் இரயிலில் நீராவி இயந்திரங்களைப் பராமரித்து இருக்கிறார்கள்.

அப்போது இருந்த இரயில் வண்டிகள் நீராவி இயந்திரங்கள் மூலமாக இயங்கி இருக்கின்றன. நிலக்கரி அல்லது கட்டைகளைப் போட்டு எரிய வைத்து நீராவியை உண்டாக்கி இரயிலை ஓட வைத்து இருக்கிறார்கள். 




இந்த நீராவிப் பெட்டிகள் இரயில் முன்பகுதியில் இருக்கும். அதில் வேலை செய்த தமிழர்களைக் கட்டைகள் நசுக்கி அவர்கள் இறந்து இருக்கிறார்கள். அப்போதே தமிழர்கள் இந்த நாட்டிற்காக உயிரைப் பணயம் வைத்து இருக்கிறார்கள்.

தமிழர்கள் இறந்தது போல யானையும் அங்கேயே இறந்து விட்டது. மலாயாவின் முதல் இரயில் விபத்து 1888-ஆம் ஆண்டு ஜுலை மாதம் தெலுக் இந்தான் சுங்கை கெராவாய் நிறுத்தத்தில் நடைபெற்றது. (The first train crash in Malaya which occurred in July 1888 at Sungai Kerawai Halt.)

தெலுக் இந்தான் - தாப்பா நகரங்களை இணைக்கும் இரயில் பாதை 1893-ஆம் ஆண்டு போடப் பட்டது. அந்தப் பாதையில் பேரிரைச்சலுடன் இரயில்கள் அடிக்கடி ஊர்க்கோலம் போவது வழக்கம். 




காலம் காலமாகக் காட்டுக்குள் வாழ்ந்து வந்த காட்டு ஜீவன்களுக்கு அந்த இரைச்சல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். சொல்ல முடியாது.

பல காட்டு விலங்குகள் இரயிலில் அடிபட்டு இறந்து போய் இருக்கின்றன. யானைகள்; காட்டுப் பன்றிகள்; சிலேடாங் எருமைகள்; மான்கள்; மலைப்பாம்புகள்.

இதில் மனிதர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தற்கொலைப் பட்டியலில் சேர்க்க முடியாத அப்பாவித் தற்கொலைகளும் இருந்தன.

இன்னும் ஒரு விசயம். முன்பு காலத்தில் தெலுக் இந்தான் பகுதியில் நிறையவே யானைகள். சுற்றித் திரிந்து சொக்கட்டான் விளையாடி இருக்கின்றன. புலிகள் கண்ணாமூச்சி விளையாடி இருக்கின்றன. கரடிகள் கதகளி ஆடி இருக்கின்றன. காட்டுப் பன்றிகள் பிரேக் டான்ஸ் ஆடி இருக்கின்றன. கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள். காசா பணமா.




தாப்பா தெலுக் இந்தான் இரயில் பாதை போடும் போது 22 புலிகளைச் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி என்றால் புலிகள் ரொம்ப நாட்களாகவே வாழ்ந்து இருக்கின்றன. ஆளாளுக்கு டசன் கணக்கில் பேரன் பேத்திகள் எடுத்து இருக்கின்றன. அப்படித்தான் தெரிகிறது.

ஒரு கொசுறுச் செய்தி. தெலுக் இந்தான் இரயில் நிலையத்திற்கே புலிகள் வந்து ’பை பை’ சொல்லிவிட்டுப் போய் இருக்கின்றனவாம்.

ஒரு தடவை ஒரு புலி இரயில் நிலையத்தின் டிக்கெட் விற்கும் அறைக்குள் தன் இரு குட்டிகளுடன் நுழைந்து விட்டது. அப்புறம் என்ன. இரயில் நிலையத்தில் இருந்த சிலோனீஸ் அதிகாரி பக்கத்தில் இருந்த தென்னை மரத்தில் ஏறி சர்க்கஸ் காட்டி இருக்கிறார். 




Members of Tita, Teluk Intan Municipal Council and
Taman Melur Residents’ Association at the
Sungai Kerawai Elephant Memorial in Teluk Intan

புலி அவரைப் பார்த்துக் கொண்டே சாகவாசமாய் இளைப்பாறி விட்டுப் போனதாம். சரி. நம்ப யானை கதைக்கு வருவோம்.

வீரத்துடன் இரயிலை எதிர்த்து நின்று வீரம் பேசிய அந்த யானைக்கு ஒரு நினைவுச் சின்னம் (Memorial Signage) அமைக்க ஆங்கிலேய அரசாங்கம் நினைத்தது. அந்த வகையில் சிமெண்டினால் செய்யப்பட்ட ஓர் அறிவிப்புத் தூணை எழுப்பியது.

அந்தத் தூணில் THERE IS BURIED HERE A WILD ELEPHANT WHO IN DEFENSE OF HIS HERD CHARGED AND DERAILED A TRAIN ON THE 17th DAY OF OF SEPT. 1894 என்று எழுதப்பட்டு இருக்கிறது.



The skull of the elephant at the Perak Museum in Taiping

யானை இறந்த பின்னர் அதன் கதை அதோடு முடியவில்லை. அதன் உடல் கூறு போடப் பட்டது. தெளிவாகச் சொன்னால் அதன் உடலின் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு நினைவுப் பொருட்களாக வடிவம் கண்டன.

126 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஓர் அசிங்கத் தனமான ருத்ர கூற்றுத் தாண்டவம் என்றுகூட சொல்லலாம். பாவம் அந்த யானை.

செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள். ஆனால் இங்கே செத்தும் அழுது இருக்கிறது ஒரு யானை.

அதன் தலைப்பாகம் தைப்பிங் அருங்காட்சியகத்திற்குப் (Taiping Museum) பார்சல் செய்யப்பட்டது. எலும்புப் பாகங்கள் மலாயன் இரயில்வே (KTMB Railways) நிறுவனத்திற்குப் ’பொங்குஸ்’ செய்யப்பட்டன. இரயில்வே காட்சியகத்தில் சில பல ஆண்டுகளுக்கு ஆராதனைகள் செய்யப் பட்டன. 




இப்போது நிலவரம் எப்படி என்று தெரியவில்லை. பலரும் மறந்து போய் இருக்கலாம். மாமாமங்கங்கள் பல மறைந்து விட்டன. நினைவுச் சின்னம் இருக்கும் இடத்தில், இப்போது பழைய இரயில் சடக்கு எதுவும் இல்லை. பழைய இரயில் கட்டைகளும் இல்லை.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் மலாயாவுக்கு வந்தார்கள். மலாயாவில் இருந்த பெருவாரியான இரயில் கம்பிகளை எல்லாம் பெயர்த்து எடுத்தார்கள். தெரிந்த விசயம். இரயில் கம்பிகளை எல்லாம் அப்படியே சயாம் மரண இரயில் பாதை கட்டுவதற்குக் கொண்டு போனார்கள்.

அந்த வகையில் யானை அடிபட்ட இடத்தில் இருந்த இரயில் கம்பிகளையும் பிடுங்கி எடுத்தார்கள். சயாம் காஞ்சானாபுரிக்கு அனுப்பி வைத்தார்கள். The Malaya Campaign எனும் நூலில் இதைப்பற்றி எழுதப்பட்டு உள்ளது.

During WW2, the Japanese forces removed the raiway line and sent it to Kanchanaburi, Thailand to build the Railway line on the Bridge over the River Kwai.




யானை அடிபட்ட இடத்தில் இப்போது ஒரு தாமான் இருக்கிறது. அதன் பெயர் தாமான் மெலோர் (Lorong 14, Taman Melor, Teluk Intan). அறிவிப்புத் தூண்  மட்டும் குத்துக்கல் மாதிரி நிற்கிறது.

சமயங்களில் காடு மண்டிப் போகும். நல்ல மனம் படைத்த கல்லூரி மாணவர்கள் வந்து சுத்தம் செய்துவிட்டுப் போகிறார்கள்.

நினைவுச் சின்னத்தை இப்போதும் பார்க்கலாம். தெலுக் இந்தான் போய் "Kubur gajah dilanggar keretapi" என்று கேட்டால் பலருக்கும் தெரியும். வழி சொல்வார்கள். இதைப் பற்றி ஒரு காணொலி யூடியூப்பில் உள்ளது.

மனிதர்களுக்கு வருத்தங்களும் வேதனைகளும் வருவது போல வாயில்லா ஜீவன்களுக்கும் வேதனைகளும் சோதனைகளும் வரவே செய்யும். மனிதர்கள் வாய்விட்டுப் பேசினால் அவை மறைந்து போகும்.

வாயில்லா ஜீவன்கள் அப்படி அல்ல. வாய் இருந்தும் பேச முடியாமல் நலிந்து நசிந்து போகும். கடைசியில் கசிந்து கரைந்தும் போகும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.06.2020




சான்றுகள்:

1. https://www.treehugger.com/natural-sciences/story-elephant-who-stood-train.html

2. https://www.youtube.com/watch?v=4zIc_Gu9u1c

3. https://imgur.com/e6M6O4X

3 கருத்துகள்:

  1. பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்.
    மலேயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது நடந்த சம்பவங்கள் அறிய ஆவல். அதைப் பற்றிய தங்களது கட்டுரைகள் இருந்தால் பகிரவும். நன்றி

    பதிலளிநீக்கு
  2. கருத்துகளுக்கு மிக்க நன்றி... ஏற்கனவே சில முறை எழுதி இருக்கிறேன் ஐயா... மீண்டும் எழுத முயற்சி செய்வோம்...

    பதிலளிநீக்கு